இஸ்லாம்தளம்

ஏப்ரல்3, 2009

முஸ்லிம் தெளிவாக அறிய வேண்டிடவை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

கல்வியின் மூலம் முஸ்லிம் அறிந்துகொள்ள வேண்டியவைகளில் முதலாவது அல்லாஹ்வின் வேதம் குர்அன் ஆகும். அதை ஒதும் முறைகளையும் மற்றும் அதன் விளக்கங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு (நபிமொழி) ஹதீஸ் பற்றிய கல்வி, வரலாறுகள், நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களைப் பற்றிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளவேண்டும். இன்னும் வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல் ஆகியவைகளை சரியாக நிறைவேற்றும் அளவிற்கு மார்க்க சட்டங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட விஷயம் மார்க்கக்கல்வி அல்லாத வேறு கல்வியையும் கற்றுக்கொள்ளும் முஸ்லிமுக்குரியதாகும். மார்க்கக் கல்வியை மட்டும் கற்றுக் கொள்பவராக இருந்தால் முஸ்லிமுக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் நுட்பமாக கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அரபிமொழியை திரம்பட கற்பதும் அவசியமாகும்.

குறிப்பிட்ட ஒரு துறையில் அழ்ந்த அறிவு பெற்றிருப்பார்

இதன் பிறகு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் ஒரு குறிப்பிட்ட துறையில் தனது கவனத்தைச் செலுத்தி அதில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருப்பது தனது கடமை என்ற இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அதை எதிர்கொள்வார். அது மார்க்கக் கல்விகளின் ஒரு துறையானாலும் சரி, அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல், பொறியியல், வானவியல், மருத்துவம், தொழில், வியாபாரம் போன்ற உலகவியல் கல்வியின் ஒரு துறையாயினும் சரி. அதில் முழுமையான தேர்ச்சியைப் பெற்று ஆழ்ந்து அறிந்திருப்பது கடமையாகும். வாய்ப்பு கிடைத்தால் அத்துறை குறித்து பல்வேறு மொழிகளில் எழுதப்படும் அனைத்து நூல்களையும் ஆய்வு செய்யவேண்டும். அத்துறையில் தொடர்ச்சியான இடைவிடாத ஆய்வின் மூலம் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் விஷயங்களை அறிந்து தனது அறிவை விசாலபடுத்திக் கொள்ளவேண்டும்.

நற்சிந்தனையுடைய முஸ்லிம் தற்காலத்திய கல்வி ஞானத்தில் மிக உறுதியான, வெற்றிகரமான உயர்வை அடைய வேண்டும். அதன்மூலம் மக்களிடையே மதிப்பையும் மரியாதையையும் கெªரவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். அது அவருக்கு மிக உயரிய சிறப்பையும் கண்ணியத்தையும் அளிக்கும். கல்வியில் இஸ்லாம் பரவச்செய்துள்ள உயிரோட்டமான நடைமுறையைப் பின்தொடர்ந்து தனது இலட்சியம், முயற்சி மற்றும் மனத்தூய்மையை பிரதிபலித்துக் காட்டும்போது அவரது அந்தஸ்து மென்மேலும் உயர்வடைகிறது.

எனெனில், இஸ்லாம் கல்வியை கடமையாக ஆக்கியிருக்கிறது. அக்கடமையை நிறைவேற்றுவது அல்லாஹ்வின் நெருக்கத்தை எற்படுத்தித் தருகிறது. முஸ்லிம் தனது கல்வியை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்கான காரணியாக அமைத்துக் கொள்கிறார். நமது முன்னோர்களான அறிஞர்கள் தமது நூலின் முன்னுரையில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கருத்தை மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள். தங்களது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு அறிந்த கல்வியின் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையே அக்கல்வியின் இலட்சியமாகக் கொண்டிருந்தார்கள்.

தனது சிந்தனையை விரிவுபடுத்துவார்
விழிப்புணர்வுடைய முஸ்லிம் தனக்கு அவசியமானதை மட்டுமே அறிந்தவராக இருக்கக்கூடாது. மாறாக, அறிவு மற்றும் சிந்தனையின் கதவுகளை அகலத் திறந்துவைத்திருக்க வேண்டும். கலாச்சாரம், பண்பாடுகள், இலக்கியம் மற்றும் பயனுள்ள கலைகள், பலதரப்பட்ட  கல்வி ஞானங்களை உள்ளடக்கிய நூல்களையும் படிக்கவேண்டும். குறிப்பாக, தான் சார்ந்திருக்கும் துறை சம்பந்தமான விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் பலதரப்புகளிலிருந்தும் மனதுக்கு உற்சாகமளித்து ஞானத்தை விரிவுபடுத்தும் விஷயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்; சிந்தனைத்திறனும் அதிகரிக்கும்.

பிறமொழியை ஆழ்ந்து அறிவார்
சில சந்தர்ப்பங்களில் அந்நிய மொழிகளின் தேவை ஏற்படுவதால் அதற்கென்று உள்ள முக்கியத்துவத்தை மறந்துவிடக்கூடாது. தற்காலிக இஸ்லாமிய வாழ்வின் தேவைகளை நன்கு விளங்கிய முஸ்லிமுக்கு கல்வி ரீதியாக மற்றொரு மொழியை அறிந்துகொள்வது மிக அவசியமாகும். மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமுக்கு பரிசுத்த மார்க்கத்தின் வழிகாட்டுதல்களில் பிறமொழிகளை அறிந்துகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் என்பதும் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள், பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே அந்நிய மொழிகளைக் கற்றுக்கொள்ள தனது தோழர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள். முஸ்லிம்கள் அகிலத்தார் அனைவரையும் நேர்வழியின்பால் அழைக்க வேண்டுமென்ற அல்லாஹ்வின் ஆணையை செயல்படுத்துவதில் பிறமொழிகளைக் கற்பது உதவியாக அமையும். இதன் முன்மாதிரியை வரலாற்றில் காண்கிறோம்.

ஜைத் இப்னு ஸப்பித் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “”ஜைதே! நீர் யூதர்களின் மொழியை கற்றுக் கொள்ளும்!. அல்லாஹ்வின் மீதாணையாக யூதர்கள் எனக்காக கடிதம் எழுதுவதை நான் நம்பமாட்டேன்” என்றார்கள். நான் பதினைந்து நாட்களில் அதைக் கற்று மிகவும் தேர்ச்சி பெற்றுவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு எதேனும் கடிதம் எழுத வேண்டியதிருந்தால் அதை நான் எழுதுவேன். நபி (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் கடிதம் எழுதினால் நான் படித்துக் காட்டுவேன்.” (ஸுனனுத் திர்மிதி)

இதனால்தான் இப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் அரபி மொழியைத் தவிர பிறமொழிகளையும் அறிந்திருந்தார்கள். இத்தனை மொழிகளை கற்றுக்கொள்வது மார்க்க விஷயத்தில் கவனம் செலுத்துவதில் இருந்து அவர்களைத் தடுக்கவில்லை. அவர்களிடம் நூறு அடிமைகள் இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் மற்றொரு மொழியையும் அறிந்திருந்தனர். இப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் அடிமைகள் ஒவ்வொருவரிடமும் அவரது தாய்மொழியில் உரையாடுவார்கள். “”நீ அவர்களது உலக காரியங்களைக் கவனித்தால் இவர் ஒரு வினாடியும் அல்லாஹ்வை நினைக்கமாட்டார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் அவர்களது மறுமை சம்பந்தமான செயல்களைக் கண்டால் இவர் ஒரு வினாடியும் உலகை விரும்பாதவர் என்ற எண்ணம் தோன்றும்” என ஹாகிம் (ரஹ்) அவர்கள் இந்த சம்பவத்தை தனது நூலில் குறிப்பிடுகிறார்கள்.

தற்கால முஸ்லிம், தான் வாழும் சூழலுக்கேற்ப வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் சில அந்நிய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான தேவை தற்காலத்தில் முந்திய காலத்தைவிட அதிகம் உள்ளது. தனது சமுதாயம், கலாச்சாரம், சம்பந்தபட்ட ஏற்றதாழ்வு குறித்து பிறமொழி புத்தகங்களை படித்து ஆராய்ச்சி செய்யவேண்டும். அதன் மூலமே அவர் இந்த சமுதாயத்தை தீங்கிலிருந்து பாதுகாக்கும் கோட்டையாகவும் அதற்கு நன்மை பயக்கும் பேச்சாளராகவும் இருப்பார்.

இ – அவரது அன்மா
உண்மை முஸ்லிம் தனது ஆன்மாவுக்கும் பொறுப்பாளி என்பதை மறந்துவிடக்கூடாது. அவர் உடல், அறிவை கொண்டு மட்டும் படைக்கப்படவில்லை. மாறாக, தன்னிடமுள்ள உள்ளம், உயிர், ஆன்மாவையும் அறிந்திருப்பார். ஆன்மாவை பரிசுத்தப்படுத்த வேண்டுமென்ற ஆசைதான் வணக்க வழிபாட்டிற்கு தூண்டுகோலாகவும் அல்லாஹ்வின் அருளை அடைய வழிகாட்டியாகவும் அவனது வேதனையிலிருந்து தப்பிக்க கேடயமாகவும் அமைகின்றன.

வணக்கங்களால் ஆன்மாவை பிரகாசிக்கச் செய்வார்
முஸ்லிம் தனது ஆன்மாவை கவனிக்க வேண்டும். இரவு பகலின் பல பகுதிகளில் வணங்குவதன் மூலமும் இறைதியானத்தின் மூலமும் ஆன்மாவை பிரகாசிக்கச் செய்யவேண்டும். ஷைத்தானின் சூழ்ச்சிகளையும், அழிவை உண்டாக்கும் அவனது ஊசலாட்டங்களையும் பயந்து அது குறித்து எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தனது பலவீனமான சந்தர்ப்பங்களின் எதேனும் ஒரு வினாடியில் ஷைத்தானின் தீண்டல்கள் ஏற்பட்டு, நினைவுகள் தடுமாறினால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும்.

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ அவர்களுள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள். அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்துவிடுகிறார்கள். (அல்குர்அன் 7:201)

இது குறித்து நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் “”உங்களது ஈமானை புதுப்பித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியபோது தோழர்கள், “”அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எவ்வாறு எங்களது ஈமானை புதுப்பித்துக் கொள்வது?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “”லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை (கூறுவதை) அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

முஸ்லிம் தனது ஆன்மாவை பலப்படுத்துவதற்கும், சீர்படுத்துவதற்கும் பல வணக்க வழிபாடுகளை மேற்கொள்வார். திருமறையை நிதானமாக சிந்தித்து இறையச்சத்துடன் ஒதுவார். உள ஒர்மையுடன், பணிவுடன் அல்லாஹ்வை திக்ருசெய்வார். அதுபோல் நிபந்தனைகளைப் பேணி உள்ளச்சத்துடன் தொழுகைகளை நிறைவேற்றுவார். இதுபோன்ற ஏனைய ஆன்ம பயிற்சிகளையும் மேற்கொள்வார். இதன்மூலம் வணக்க வழிபாடுகள் பிறவிக் குணங்களாகவும் பிரிக்க முடியாத இயற்கை பண்புகளாகவும் இவரிடம் வேரூன்றிக் கொள்ளும். எந்நேரமும் தனிமையிலும் கூட்டத்திலும் அல்லாஹ்வை நினைத்த வராகவும் அல்லாஹ்வை அஞ்சியவராகவும் காட்சியளிப்பார்.

ஈமானின் சபைகளையும் சான்றோர்களையும் நெருங்கியிருப்பார்

முஸ்லிம், தனது உன்னத இலட்சியத்தை அடைந்து கொள்வதற்காக உண்மையாகவே நலம்நாடும் நற்குணமுடைய நண்பர்களை துணையாகக் கொள்வதுடன் அல்லாஹ்வைப் பற்றி பேசப்படும் உயிரோட்டமுள்ள ஈமானின் சபைகளுக்கு செல்வதையும் அதிகரித்திட வேண்டும். அந்த சபைகளில் சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித வாழ்வை சீர்படுத்துவதில் இஸ்லாமின் மகத்தான பங்கு குறித்து விவாதிக்கப்பட வேண்டும். வானம், பூமியின் எந்தவொரு சக்தியாலும் பலவீனப்படுத்திட முடியாத, அடக்கி ஆளும் வல்லமை பெற்ற அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனையால் சபையோர்களின் இதயங்கள் நிறைந்திட வேண்டும். அதில் மனிதனையும் இப்பிரபஞ்சத்தையும் அல்லாஹ் படைத்ததிலுள்ள நுட்பங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற சபைகளால் ஆன்மா தூய்மையடைகிறது. உள்ளம் பிரகாசிக்கிறது. மனதிற்குள் ஈமான் எனும் இறை விசுவாசத்தின் புத்துணர்ச்சி உடுருவுகிறது. இதனால்தான் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) என்ற நபித்தோழர் எவரையேனும் சந்தித்தால் “”வாருங்கள்! சிறிது நேரம் நம்மைப்படைத்த இரட்சகனை விசுவாசம் கொள்வோம். (இமானிய விஷயங்களைப் பற்றி உரையாடுவோம்)” என்று கூறுவார்கள். இந்த செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியபோது “”ரவாஹாவின் மகனுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்! நிச்சயமாக அவர் மலக்குகள் சூழ்ந்து கொள்ளும் சபைகளை நேசிக்கிறார்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

கலஃபா உமர் (ரழி) அவர்கள் சில நேரங்களில் அரசு அலுவல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஒரிரண்டு நபர்களின் கரங்களைப் பற்றியவர்களாக “”எழுந்து வாருங்கள்! ஈமானை அதிகப்படுத்திக் கொள்வோம்” என்று கூறுவார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்.

உமர் (ரழி) அவர்கள் இறையச்சத்திலும் வணக்க வழிபாட்டிலும் உயர்ந்தவர்களாக திகழ்ந்திருந்தும் தனது உள்ளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்ததின் காரணமாகத்தான் தனது வாழ்க்கையின் அத்தியாவசிய வேலைகளிலிருந்து வெளியேறி ஆன்மாவையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்த நேரத்தை ஒதுக்கிக் கொண்டார்கள்.

அவ்வாறே முஅது இப்னு ஜபல் (ரழி) அவர்கள் தங்களது தோழர்களிடம் “”நம்முடன் அமருங்கள்! ஈமான் (பற்றிய) விஷயங்களை உரையாடிக் கொள்வோம்” என்று கூறுவார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

நிச்சயமாக முஸ்லிம் தனது இறையச்சம் பற்றியும் மனத்தூய்மை பற்றியும் விசாரிக்கப்படுவார். எனவே அவர் கீழ்த்தரமான செயல்களி லிருந்து தன்னை எல்லா நிலையிலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆத்மாவின் மீதும் அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்; அதன் நன்மை, தீமைகளை அதற்கு அறிவித்தவன் மீதும் சத்தியமாக, எவன் (பாவங்களை விட்டும்) தன்னை பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டான். எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். (அல்குர்அன் 91:7-10)

முஸ்லிம் தனது இறையச்சத்தையும் நற்பண்புகளையும் ஈமானையும் அதிகப்படுத்தும் சிறந்த நண்பர்களையும் சபைகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். மனித ஷைத்தான்களின் தீய நட்பையும் இதயம் கடினமாகி ஆத்மாவுக்கு அநீதி இழைக்கப்படும் பாவங்கள் நிறைந்த சபைகளையும் புறக்கணித்து விடவேண்டும்.

(நபியே) எவர்கள் தங்கள் இறைவனின் பொருத்தத்தை நாடி, அவனையே காலையிலும் மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் நீரும் (உம் கஷ்டங்களை சகித்துப்) பொறுத்திருப்பீராக! இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நீர் விரும்பி, அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உம் கண்களைத் திருப்பிவிடாதீர்! அன்றி, எவன் தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக அவனுடைய இருதயத்தை நம்மைத் தியானிப்பதி லிருந்து நாம் திருப்பிவிட்டோமோ அவனுக்கும் நீர் வழிப்படாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்ததாகும். (அல்குர்அன் 18:28)

ஹதீஸில் கூறப்பட்ட துஆக்களை அதிகமாக ஒதி வருவார்
அல்லாஹ்வுடன் தனது இதயத்தை இணைத்து தனது ஆத்மாவைப் பலப்படுத்திக்கொள்ள விரும்பும் முஸ்லிம், ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களை (பிரார்த்தனைகளை) அதிகமதிகம் ஒதிக்கொள்ளவேண்டும். வீட்டிலிருந்து வெளியேறும்போது, உள்ளே நுழையும்போது, பிரயாணியை வழியனுப்பி வைக்கும்போது, அவரை வரவேற்கும்போது, புத்தாடையை அணியும்போது, படுக்கைக்கு செல்லும்போது, தூக்கத்திலிருந்து விழிக்கும்போது என ஒவ்வொரு செயலுக்கும் நபி (ஸல்) அவர்கள் துஆக்களை கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

இந்த துஆக்களின் மூலமாக நபி (ஸல்) அவர்கள் தனது உள்ளத்தில் “அல்லாஹ் நடுநிலையை உதிக்கச் செய்து, வழிதவறுவதிலிருந்து பாதுகாத்து, தனக்கு நன்மையை தரவேண்டும்’ எனப் பிரார்த்தித்து எல்லா நிலையிலும் அல்லாஹ்வையே முன்னோக்கியவர்களாக இருந்தார்கள். இது குறித்த விரிவான விளக்கங்கள் ஸஹீஹான ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு இந்த துஆக்களை கற்றுக்கொடுத்து அவைகளுக்குரிய நேரங்களில் ஒதி வருமாறு எவினார்கள்.

இறையச்சமுள்ள முஸ்லிம் நபி (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் பின்பற்றும் வகையில் இவ்வாறான துஆக்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். இயன்றளவு அதனை ஒதிவர வேண்டும். அதன்மூலம் இதயம் பரிசுத்தமடைகிறது. ஆன்மா தெளிவடைகிறது. அல்லாஹ்வுடன் எல்லா நிலைகளிலும் இதயம் ஆணைந்து கொள்கிறது.

இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைக் கொண்டுதான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார்கள். ஆகவே அவர்களது இதயங்கள் தூய்மையாகவும் மாசு மருவற்றதாகவும் இருந்தன. அதில் அசுத்தங்களோ, அழுக்குகளோ, கசடுகளோ இருக்கவில்லை. மனிதகுலத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதில் மகத்தான இஸ்லாமின் அற்புத ஆற்றல் அந்த நபித்தோழர்கள் மூலம் வெளிப்பட்டது.

கடந்த காலங்களைவிட தற்காலத்தில் உண்மை முஸ்லிம்கள் இதுபோன்ற ஆன்ம பயிற்சியில் இடுபடுவது மிக அவசியம். அப்போது தான் அவர்கள் தங்களது அழைப்புப் பணியில் ஈடுபடும்போது அவர்களை எதிர்கொள்ளும் பெரும் பொறுப்புகளையும் கடமைகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும்.

1 பின்னூட்டம் »

  1. i have read the message it s use ful hint to learn more about islam , Allah bless you.

    பின்னூட்டம் by nagoor bin yasin — ஏப்ரல்3, 2009 @ 12.24


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: