இஸ்லாம்தளம்

பிப்ரவரி28, 2009

நேர்ச்சை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நேர்ச்சை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. அவை மார்க்கம் அனுமதித்த வகையில் இருக்க வேண்டும். மார்க்கம் அனுமதிக்காத வழிகளில் நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறை வேற்றத் தேவையில்லை.

இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிவான். (அல்குர்ஆன்: 2:270)

மர்யமே அவற்றை உண்டு ஆற்று நீரைப் பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் பர்க்க நேரிட்டால் மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கிறேன்; ஆதலால் இன்று எந்த மனிதருடனும் பேச மாட்டேன்’ என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 19:26)

இம்ரானின் மனைவி ‘என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ள குழந்தையை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று கூறினார். (அல்குர்ஆன்: 3:35)

‘நல்லவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்’ (அல்குர்ஆன்: 76:7) என அல்லாஹ் கூறுகிறான்.

நேர்ச்சையானது விதியில் எழுதப்படாத எந்த ஒன்றையும் மனிதனிடம் கொண்டு வந்து விடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்சை அவனைக் கொண்டு செல்கிறது. நேர்ச்சை செய்வதன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கி விடுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வுக்கு வழிபடும் காரியத்தில் ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை அவர் நிறைவேற்றி) அவனுக்கு அவர் வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியத்தில் ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு அவர் மாறு செய்ய வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் புகாரி, திர்மிதீ நஸயீ

மேற்கண்ட குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் நேர்ச்சை செய்யலாம் என அறிவிக்கின்றன. எனினும் ஒரு ஹதீஸில் நேர்சை ஒருவனது விதியில் எதையும் மாற்றிவிடாது. நேர்சை கஞ்சனிடமிருந்து அவனது பொருள் செலவு செய்வதற்கும் காரணமாகி விடுகிறது என்றும் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

குர்ஆன் ஓதுவது நல்ல வணக்கம்தான். அதற்காக நேச்சை செய்வதும் ஆகுமானதுதான். ஆனால் அவர்தான் குர்ஆன் ஓதவேண்டுமே தவிர சிலரை அழைத்து கூலிக்கு குர்ஆன் ஓதுவது மார்க்கம் அனுமதிக்காத செயல் ஆகும். நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் இவ்வாறு செய்ததாக எந்த ஒரு ஆதாரத்தையும் நாம் ஹதீஸ்களில் காண முடியாது.

அபூபக்கர்(ரலி)யின் அறிவு கூர்மை!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி(ஸல்) அவர்களால் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து நபர்களில் முதல் நபர் அபூபக்கர் (ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொல்லிக்கொண்டிருந்த ஆரம்ப கால கட்டத்தில் பலரும் தயங்கும்போது தைரியமாக இஸ்லாத்தை ஏற்று தன்னுடைய செல்வங்களையெல்லாம் அதை செலவழித்தவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். இதை இந்த ஹதீஸின் மூலம் நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களை அல்லாஹ்வின் நேசராக்கி வைக்கிறார்கள்.

நம்மிடம் எவருடைய  எந்த  உதவியும்  அதற்குரிய  பிரதி  அளிக்கப் பெறாமலில்லை. அபூபக்கர் (ரலி) அவர்களின் உதவியைத் தவிர. ஏனெனில் நிச்சயமாக அவர்களின் ஓர் உதவி நம்மீது இருக்கிறது. அதற்குரிய பிரதியை மறுமை நாளின்போது அல்லாஹ் அவர்களுக்கு நல்குவான். அன்றி எவருடைய பொருளும் எனக்கு அவ்வளவு பலன் தரவில்லை. அபூபக்கர்(ரலி) அவர்களுடைய பொருள் பலன் அளித்ததைப்போல, மேலும் நான் இஸ்லாத்தை தழுவுமாறு எடுத்துரைத்த பொழுது எல்லோரும் தயங்கவே செய்தனர். அபூபக்கர்(ரலி) அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்ததைத் தவிர நிச்சயமாக அவர் தயங்கவில்லை. ஒருவேளை நான் எனக்கு ஓர் ஆருயிர்த் தோழரைத் தேர்ந்தெடுப்பதானால் அபூபக்கர்(ரலி) அவர்களையே தேர்ந்தெடுப்பேன்.

அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களின் தோழர் அல்லாஹ்வின் நேசராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதீ

ஒருவேளை நான் என் இறைவனைத்தவிர வேரொருவரைத் தோழராகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அபூபக்கர்(ரலி) அவர்களை தேர்ந்தெடுத்திருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதாவூத்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நபி(ஸல்) அவர்களுக்கு உடல் நலக்குறை அதிகப்பட்ட பொழுது மக்களுக்கு இமாமாக நின்று தொழவைத்த அல்லாஹ்வின் நேசரான அபூபக்கர்(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குபின் ஏற்பட்ட கடுமையான சோதனையின்போது……

நபி(ஸல்) அவர்கள் இறந்த நேரத்தில் அபூபக்கர்(ரலி) அவர்கள் ஸூன்ஹில் (மதினாவை அடுத்துள்ள சிற்றூர்) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சிலரும், இறக்கவில்லை என்று மீதப் பேர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறக்கவில்லை என்று சொன்ன கூட்டத்திற்கு உமர்(ரலி) அவர்கள் தலைமை தாங்கினார்கள். அல்லாஹ்வின் மீது ஆனையாக நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை, அன்றி அல்லாஹ் அவர்களை (மயக்கம் தெளிந்தபின்) நிச்சயமாக எழச்செய்வான். நபி(ஸல்) அவர்களை இறந்து போனார்கள் என்று சொன்னவர்களை கை, கால்களை வெட்டுவேன் என்று கூறினார்கள். உமர் ரலியல்லாஹ் அவர்களின் கோபம் தான் நபித் தோழார்களுக்கு நன்கு தெரியுமே. நபி(ஸல்) அவர்களும் மனிதரே; அவர்களுக்கும் மரணம் உண்டு என்பதை அறிந்த சில நபித் தோழர்களும் உமர்(ரலி)க்கு பயந்து கொண்டு பேசாமல் இருந்து விட்டார்கள். அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டு உடன் வந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிய பின் அவர்களை முத்தமிட்டு, என் தாய், தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தாங்கள் உயிரோடிருந்த போதிலும் மணமுள்ளவர்களாகவே இருந்தீர்கள். இறந்த பின்னரும் மணமுள்ளவர்களாகவே இருக்கிறீர்கள். எவன் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக அல்லாஹ் உங்களை இரு முறை இறப்பை நுகருமாறு ஒரு போதும் செய்யமாட்டான் என்று கூறிவிட்டு வெளியே வந்து கூடி இருந்த மக்கள் மத்தியில்:

ஆணையிட்டு கூறுவோரை! அமரும்’ என்று கூறினார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் பேசத்துவங்கியதும் உமர்(ரலி) அவர்கள் அமர்ந்துவிட்டனர். பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்த பின் அறிந்து கொள்ளுங்கள்! எவர் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்கி வந்தார்களோ (அவர்கள் அறிந்து கொள்ளட்டும்) நிச்சயமக முஹம்மது(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். அன்றி எவர் அல்லாஹ்வை வணங்கி வந்தார்களோ (அவர்கள் அறிந்து கொள்ளட்டும்) அல்லாஹ் உயிருடன் இருக்கிறான். அவன் இறக்கவே மாட்டான். என்று கூறி:

إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَّيِّتُونَ நிச்சயமாக நீரும் இறந்துவிடக் கூடியவரே! நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தாம் (39:30) என்ற அல்குர்ஆனின் வசனததையும்

وَمَا مُحَمَّدٌ إِلاَّ رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىَ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللّهَ شَيْئًا وَسَيَجْزِي اللّهُ الشَّاكِرِينَ முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி (வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால், நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (3:144)

பின்னர் மக்கள் வாயடைத்தவர்களாக தேம்பித் தேம்பி அழுதனர். நபி(ஸல்) அவர்கள் மனிதர்தான் – அவர்களும் மரணிப்பவர்களே என்பதை விளக்கும் பல குர்ஆன் வசனங்கள் (பார்க்க 40:77, 43:41) இருந்தாலும் 39:30 வசனத்தை குறிப்பிட்டு விட்டு 3:144 வசனத்தையும் குறிப்பிடுகிறார்கள். காரணம் அன்று சிலர் தங்களின் பழைய மார்க்கத்திற்கு போய்விடலாம் என்று இருந்தார்கள். அந்த எண்ணத்திற்கு 3: 144 வசனத்தின் மூலம் சாவு மணி அடித்தார்கள். நபி(ஸல்) அவர்களை எங்கே அடக்கம் செய்வது என்ற சர்ச்சை எழுந்த போதும் தலமைத் தனத்தை ஏற்றுக் கொள்வதிலும் ஏற்பட்ட பிரச்னையில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் முடிவெடுத்து குழப்பங்களைத் தவிர்த்தவர்கள். அவர்கள் ஆட்சி காலமும் மிக சிறப்பாக இருந்ததை வரலாறு இன்றும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறது.

தொழுகையின் சிறப்பும் அதனை விட்டவரின் நிலையும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9

உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ள வில்லையோ அவனுக்கு  அத்தொழுகை பிரகாசமாகவோ,  ஈடேற்றமாகவோ  இருக்காது.  (மாறாக) அவன் மறுமை  நாளில் காரூன், ஃபிர்அவ்ன்,  ஹாமான்,  உபைபின் கஃப்  ஆகியோருடன்  இருப்பான்  என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு அம்ருஇப்னுஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்

(மறுமை நாளில்) சுவர்க்க வாசிகள் சுவர்க்கத்தில் இருந்துக்கொண்டு நரகவாசிகளைப் பார்த்து “உங்களை நரகத்தில் புகுத்தியது எது?” என்று கேட்ப்பார்கள். அதற்கவர்கள் “நாங்கள் தொழாதவர்களாகவே இருந்தோம்.”என்று பதில் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:42

சிறந்த அமல்:
அமல்களில் சிறந்தது எது என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பவர்: உம்முஃபர்வா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புக்கள்:
“(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார்.” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாரா இப்னு ருவைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் நஸயீ

கூட்டுத் தொழுகையின் சிறப்பு:
ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி

தொழுகையை விட்டவனின் நிலை:
நமக்கும் அவர்களுக்குமிடையே (நிராகரிப்பவர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும்.யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காபிராகிவிட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, அஹ்மது

பாங்கோசை கேட்டு பள்ளிக்கு வராதவனின் நிலை:
என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராதவர்களைத் தீயிட்டுப் பொசுக்க நான் எண்ணுகிறேன் என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி

நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது சாட்சி கூறுவதாக இருக்கிறது. அல்குர்ஆன்17:78

இரண்டு தொழுகைகள் முனாபிக்கீன்கள் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாத்தும் இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபிصلى الله عليه وسلم அவர்கள் நவின்றனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள் “ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கிய பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் ‘நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்  உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும்’ என உளருகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து  எழுந்து  அல்லாஹ்வை  நினைவு  கூர்ந்தால்,  முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு  படுக்கையிலிருந்து  எழுந்து உளு செய்தபின்,  இரண்டாவது  முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:புகாரி,  முஸ்லிம், முஅத்தா,  நஸயீ,  அபூதாவூத்

வேண்டாம் வரதட்சணை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)

ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் வ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.

வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.

தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.

பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.

இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான  பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இல்லற  வாழ்கையில்  இருவரும்  மகிழ்சி  அடையும்  போது  இருவருக்கும்  சமமான  பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.

ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் – இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.

யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.

மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.

திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தமது வீட்டில் தமது உறவினர்களுடன் வழக்கம் போலவே இருந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது தாய், தந்தை, உற்றார், உறவினர், ஊர் அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர். பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருத முடியாது. பெண்களில் இந்த தியாகத்துக்காக ஆண்கள் பெண்களுக்குக் கொடுப்பது தான் நியாயமானது.

பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.

இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள்.

இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாகப் பொவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும்  கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு மறுஜென்மம் எடுக்கிறாள். செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு  வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது.

ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!

கழுவிக்குளிப்பாட்டி சீராட்டி அழகு பார்க்கிறாள்! ஒவ்வொரு பருவத்திலும் குழைந்தைக்காக தன்னையே அர்ப்பணித்து விடுகிறாள்! இதற்காகவும் ஆண்கள் தான் கொடுக்கவேண்டும். இப்படிச் சிந்த்தித்துப் பார்த்தால் இன்னும் பல காரணங்களைக் காணலாம். இதன் காரணமாகத் தான் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணக்கொடையை மனமுவந்து வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

மணக் கொடை என்பது நூறோ இருநூறோ வழங்கி ஏமாற்றுவது அல்ல! நமது  சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கலாம். ஒரு  குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மண முடிக்க வேண்டிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களிடமே கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரவேண்டும். கொடுக்காமல் இருந்தது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு  குற்றங்களைச் சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.

வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த  மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்! வல்ல  இறைவன் இதற்கு அருள் புரியட்டும்!

அநீதியாளர்களின் ஆட்சியில்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நீங்கள் சற்று ஆழ்ந்து நோக்கினால் உங்கள் வாழ்க்கையின் கேடுகளுக்கு அறியாமையைத் தவிர மற்றொரு காரணமும் புலப்படும். ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ மனிதன் என்ற பெயரல்ல என்பதைப் புரிந்து கொள்ளச் சொற்ப அறிவு போதுமானது. எல்லா மக்களும் மனித குலத்தின் அங்கங்களே. மக்கள் அனைவருக்கும் வாழும் உரிமை உள்ளது. தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அனைவரும் உரிமையுடையவர்களே! அனைவரும் அமைதி, நீதி, மரியாதை, கண்ணியம் ஆகியவற்றிற்கு உரியவர்களே! மனிதனின் சுபிட்சத்திற்குப் பொருள் மக்கள் அனைவரின் சுபிட்சமாகும். ஒரு குடும்பத்தினுடைய அல்லது ஒரு சமூகத்தினுடைய சுபிட்ச நிலை மட்டும் அல்ல. ஏனெனில் சிலர் இன்புறப் பலர் துன்புற்றால் மனிதன் சுபிட்சத்தை அடைந்துள்ளான் என்று கூற இயலாது; மனித வாழ்வின் வளம் என்பதன் பொருள் மக்கள் அனைவரின் வாழ்க்கை வளமே ஆகும். ஒரு சாராருடைய அல்லது ஒரு சமூகத்துடைய வளமாக இருக்க முடியாது. ஒருவர் வாழ்ந்து பத்து பேர் வீழ்ந்தால் நலிவடைந்தால் அதை மனித இனத்தின் செழிப்பு என்று கூறிவிட முடியாது. இந்த தெளிவான கருத்தை நீங்கள் சரியானதென்று ஏற்றுக் கொண்டால், மனித இனம் தனது சுபிட்சத்தையும், நலன்களையும் எவ்வழியில் எய்த முடியும் எனச் சிந்தியுங்கள். மனித வாழ்வு சுபிட்சம் அடைவதற்கு ஒரே வழி, யார் எல்லா மக்களையும் ஒரே மாதிரியாகக் கருதுகிறாரோ அவரே மனித வாழ்வின் சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதே என் கருத்தாகும். யார் சுய நலத்தை கருதவில்லையோ யார் அதிகாரம் செலுத்துவதில் அறியாமையால் தவறிழைக்க மாட்டாரோ, யார் ஆசை மேலீட்டினால் அதிகார உரிமையைத் தகாத முறையில் பயன்படுத்த மாட்டாரோ, யார் ஒருவருக்கு பகைவனாகவும் மற்றவருக்கு நண்பராகவும், ஒருவரிடம் பரிவாகவும் மற்றவரிடம் பாரபட்சமாகவும், ஒருவருக்கு செவி சாய்க்காமலும் மற்றவருக்கு வசப்பட்டும் நடக்க மாட்டாரோ அவருடைய ஆணைகளுக்குட்பட்டால் தான் அந்த சுபிட்சம் கிடைக்கும். நீதியை நிலை நாட்ட இதுவே வழியாகும். இவ்வாறு மட்டுமே எல்லா மக்களுக்கும் எல்லா சமூகங்களுக்கும் எல்லா வகையினருக்கும் நியாயமான அவர்களுடைய உரிமைகள் கிடைக்கும். இவ்வுலகில் இத்தகைய நீதி வழுவாத நடுநிலை தவறாத, சுய நலமற்ற மனித பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவர் யாராக இருக்க முடியும்? அனேகமாய் உங்களில் எவரும் அத்தகைய ஒருவர் நம்மிடையே இருப்பதாக பதிலளிக்க துணியமாட்டார். இத்தகைய எல்லா அம்சங்களும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானவை. மற்றவர் யாரும் இம்மகிமை கொண்டவரல்ல. மனிதன் எவ்வளவுதான் விசாலமான உள்ளத்தைக் கொண்டவனாயினும் சுயநலம் அற்றவனாயினும் அவனுக்கென்று சில விருப்பு வெறுப்பு உள்ளவனாகவே இருக்கின்றான். மனிதனுக்கு சிலரிடம் பற்று அதிகமாகவும் சிலரிடம் குறைந்தும் இருக்கம் , சிலரிடம் அவனுக்கு அன்பிருக்கும் சிலரிடம் இருக்காது. இக்குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட மனிதர் எவரும் இருக்க முடியாது. எங்கே இறை மேலாதிக்கத்திற்கு பதிலாக மனிதர்களின் ஆதிக்கம் ஏற்றுக் கொள்ளப் படுகின்றதோ அங்கே ஏதாவது ஒரு வகையில் அநியாயமும் கொடுமையும் நிச்சயம் காணப்படுகின்றன. இந்தப் புரோகிதரர்களையும் குருமார்களையும் அரசர்களையும் முதலாளிகளையும் கவனியுங்கள். இச்சாரார் அனைவரும் பொது மக்களைவிடத் தங்களை உயர்ந்தவர்களாகத் தாங்களாகவே கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் சக்தியாலும் செல்வாக்கினாலும் இவர்கள் உண்டாக்கி யிருக்கும் உரிமைகளை சாதாரண மக்களுக்கு அளிப்பதில்லை. இவர்கள் கண்ணியமானவர்கள் பிறர் இழிவானவர்கள். இவர்கள் உயர்ந்தவர்கள் பிறர் தாழ்ந்தவர்கள். இவர்களின் மன இச்சைகளுக்காக மகிழ்ச்சிக்காக மக்களுடைய உயிர், உடமை, மானம், மரியாதை ஒவ்வொன்றும் பலியிடப்படுகின்றது. இந்த நியதிகளையெல்லாம் ஒரு நீதியாளனால் வகுக்கப்பட்டிருக்க முடியுமா? இவற்றில் அவர்களின் தன்னலமும் ஒருதலைப்பட்சமும் தென்படவில்லையா? தங்களுடை வலிமையினால் பிற சமூகங்களை அடிமைபடுத்தியுள்ள இந்த சர்வாதிகார சமூகங்களைப் பாருங்கள். இவர்களின் எந்த சட்டத்தில் எந்த நியதியில் இவர்களின் சுயநலம் கலக்காமல் உள்ளது? ஒவ்வொரு வகையிலும் தங்களை பிறரைக் காட்டிலும் உயர்த்தியே வைத்துக் கொள்கிறார்கள். தங்களுடைய தேவைகளுக்காக பிறருடைய நலன்களைப் பலியிடுவதைத் தங்களுடைய உரிமை என்றே கருதுகிறார்கள். இவர்கள் மற்ற மனிதர்களைப் போல் சாதாரண மனிதர்கள் என்பதை உலகம் அறிகிறது. ஆனால் இவர்களோ தங்களைக் தெய்வங்களாகக் காட்டிக் கொள்கிரார்கள். மக்களும் இவர்களை தங்களுடைய வாழ்வும் சாவும் இவர்கள் கையில் இருப்பது போலவும் கருதி இவர்கள் முன்னிலையில் கைகட்டி, சிரம் தாழ்த்தி, அஞ்சி அடங்கி நடக்கிறார்கள். இவர்கள் மக்களின் பணத்தை பல வகையிலும் பறிக்கிரார்கள். இதைத் தங்களுடைய நலன்களுக்காக கணக்கின்றி வாரி இறைக்கிறார்கள். இது நீதி யாகுமா? நியாயமாகுமா? யாருடைய பார்வையில் எல்லா மக்களின் உரிமைகளும் நலன்களும் ஒரே மாதிரியாக உள்ளனவோ அத்தகைய நீதியாளனால் நிர்ணயிக்கப்பட்டதாக இருக்க முடியுமா? உலகில் எங்கெல்லாம் மனித சட்டத்தை இயற்றியுள்ளானோ, அங்கெல்லாம் அநீதி நிச்சயமாக நடந்துள்ளது என்பதை உங்கள் மனதில் பதிய வைக்க விரும்புகிறேன். சில மனிதர்களுக்கு அவர்களுடைய நியாயமான உரிமைகளைக் காட்டிலும் மிக அதிகமான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில மனிதர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் மனித பலவீனமே. அவன் ஒரு விஷயத்தில் தீர்வு காணத் தொடங்கும் போதெல்லாம் அவனுடைய உள்ளத்திலும் சிந்தனையிலும் அவனுடைய சுய, குடும்ப, குலம் அல்லது சமூக நலன்களின் எண்ணம் நிலைத்த வண்ணமே இருக்கின்றது. சொந்தக்காரர்களிடம் உள்ள பரிவு பிறர் உரிமைகளிலும் நலன்களிலும் ஏற்படுவதில்லை. மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மனிதர்களிடையே பிறப்பு, குலம், சமூகத்தின் அடிப்படையில் வேறுபாடு செய்யாமல் பண்பு, செயல், தகுதி அடிப்படையில் மட்டும் வேறுபாடு செய்யும் இறைவனின் சட்டத்தை நாம் ஏற்றுக் கொள்வதே இந்த அநியாயத்திற்கான பரிகாரமாகும்.

Older Posts »