இஸ்லாம்தளம்

1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்

மக்கத்துக் காஃபிர்களா..? பக்கத்துக் காஃபிர்களா..?

இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிப்பவர்கள் திருக்குர்ஆன் 2:191 வசனத்தில் ”அவர்களைக் கொல்லுங்கள்” என்ற வாசகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, ”முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும்” கொன்று விடும்படி திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது என்று தவறானப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த அவதூறுப் பிரச்சாரம் இந்தியாவிலும் உலக அளவிலும் அரங்கேற்றப்படுகின்கிறது. முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளின் பால் கவரப்பட்டு விடக்கூடாது, இஸ்லாத்தை விஷமென வெறுக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு இத்தகையப் பிரச்சாரம் நடத்தப்படுகின்றது. இதை நாம் மிகையாகச் சொல்லவில்லை. உள்ளதை உள்ளபடி விளங்க வேண்டும் என்ற திறந்த, பரந்த மனப்பான்மை இவர்களிடம் இல்லை. சிந்திக்கும் திறனும் இவர்களிடத்தில் இல்லையென்பதை இவர்களின் போலியான வாதங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் எந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இத்தகைய வாதத்தை வைக்கிறார்களோ, அதற்கு முன்னர் கூறப்பட்டது என்ன? தொடர்ந்து வரும் வசனங்களில் சொல்லப்படுவது என்ன? என்பதையும் சற்று நிதானத்துடன் கவனித்தால் தமது வாதங்களிலுள்ள அபத்தங்களை உணர்ந்து கெண்டிருப்பார்பார்கள்.

”இவர்கள்” என்று நாம் குறிப்பிட்டது, இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்த அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்களை மட்டுமே அடையாளப்படுத்தும், முஸ்லிமல்லாத அனைவரையும் சுட்டிக் காட்டவில்லை என்பதை புரிபவர்கள் புரிந்து கொள்ளட்டும். அதுபோல், இவர்கள், அவர்கள். அவன், இவன். அது, இது. அவை, இவை. போன்ற சொற்களை பிரயோகிக்கும்போது தனியாகப் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே எது பற்றியாவது, எவரைப் பற்றியாவது பேசியிருந்தால் மீண்டும் அதைக் குறிப்பிடுவதற்காகவே இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படும்.

”இன்று காலை 9 மணிக்கு வருவதாக முஹம்மதும், முஹைதீனும் நேற்று சொல்லிச் சென்றார்கள், இன்னும் ‘அவர்கள்’ வரவில்லையே என்று சொன்னால் ‘அவர்கள்’ என்ற வாசகம் யாரைக் குறிக்கும் என்பதை விளங்க என்ன சிரமம் இருக்கிறது. அவர்கள் என்றால் யார்? எத்தனை பேர்கள்? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும். ஆனாலும் இந்த இடத்தில் இது பற்றி எதையும் விளங்காதவர்கள் ”அவர்கள்” என்றால் மொத்த ஊரிலுள்ளவர்களையும் குறிக்கும் என்பதுதான் அசட்டுத்தனம்.

திருக்குர்ஆன் 2:191வது வசனத்தை விமர்சிப்பவர்களிடம் நியாயமான பார்வையிருந்தால் ”அவர்களைக் கொல்லுங்கள்” என்று சொல்வதில் இந்த ”அவர்கள்” என்பவர்கள் யார்? என்பதை முன், பின் வசனங்களிலிருந்து விளங்கியிருப்பார்கள். நேர்மையில்லாதவர்களிடம் நியாயமான பார்வையை எதிர்பார்க்க முடியாது. எனினும் இவர்களின் நேர்மையற்ற விமர்சனம் இங்கு அடையாளம் காட்டப்படுகிறது.

இனி விஷயத்துக்கு வருவோம்.

2:190.உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள், ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் – அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும். இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு – ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேற்காணும் ஐந்து வசனங்களும் போர் பற்றியே பேசுகிறது. இவ்வசனங்கள், போர் தொடர்பாக மதீனாவில் அருளப்பட்ட முதல் வசனங்களாகும். போர் பற்றிய வரம்புகள் இங்கு விளக்கமாகச் சொல்லப்படுகின்றது. போர் செய்ய நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

முதலில் திருக்குர்ஆன் 2:190 இறை வசனம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.

2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

9:13. அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?

உங்களுடன் போருக்கு வருபவர்களுடன், நீங்களும் போர் செய்யுங்கள் என்று 2:190, 9:13 ஆகிய வசனங்கள் கூறுகிறது. வம்புச் சண்டைக்கு, அதாவது வலியப் போருக்குச் செல்லும்படி இஸ்லாம் சொல்லவில்லை. நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே முஸ்லிம் அரசாங்கம் போர் செய்ய வேண்டும். (இது பற்றிய விளக்கம் வரும் பகுதிகளில்)

இஸ்லாத்தின் ஆரம்பகாலப் பிரச்சாரத்தை மக்காவில் துவக்கியபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குறைந்த அளவிலான முஸ்லிம்களும், மக்கா குரைஷிகளால் – மக்கத்துக் காஃபிர்களால் மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களை கொடூரமாகக் கொலை செய்தும் வந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் திட்டமும் குரைஷிகளால் தீட்டப்பட்டது. இந்தக் கொடுமைகளிலிருந்து மீள, இறைத்தூதரும் – முஸ்லிம்களும், தமது உடமைகளையெல்லாம் இழந்து சொந்த ஊரையும் துறந்து வெளியேறினார்கள். வெளியேற இயலாத – வழி தெரியாத பலவீனமான முஸ்லிம்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். இவர்களின் மீதும் குரைஷிகளின் அடக்கு முறை மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது.

மக்காவைத் துறந்து சென்ற முஸ்லிம்களுக்கு மதீனா அடைக்கலம் தந்து ஆதரித்தது. இறைவன் காட்டிய வழியில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் மதீனாவில் ஒரு அரசு உருவாகியது. இந்த நேரத்தில் மக்காவில் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருந்த ”மக்கத்துக் காஃபிர்கள்” முஸ்லிம்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தேத் தீருவோம் என்ற மூர்க்கத்தனத்தில் செயல்பட்டு, முஸ்லிம்களின் மீது வலிய போருக்கு வந்தார்கள். அதனால் மதீனாவில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்ட முஸ்லிம்களுக்கு ”உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்” என்று இறைவனின் போர் பற்றிய முதல் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. கட்டளையிடும் அதே நேரத்தில் போரில் வரம்புகளை மீறி விடக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது. (புரிந்து கொள்ள இந்த வரலாற்றுப் பின்னணி உதவியாக இருக்கும் என்பதால் சிறு விளக்கம்.)

2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள், ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

190லிருந்து 194வரையுள்ள, போர் பற்றி அறிவிக்கும் வசனங்களில், 191வது வசனத்தை மட்டும் உருவியெடுத்துக் கொண்டு விமர்சிப்பது இவர்களின் நோக்கம் என்னவென்பதை வெள்ளிடை மலையாக விளக்கி விடுகிறது. இந்த வசனத்தில் (போர்க் களத்தில்) சந்திக்கும் போது ”அவர்களைக் கொல்லுங்கள்” என்றே சொல்லப்பட்டுள்ளது. போர்க் களமென்று இங்கு சொல்லவில்லையே? என்ற கேள்வியெழுந்தாலும், ”உங்களை எதிர்த்து போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்” என்ற 190வது வசனத்தின் தொடர்ச்சியாகவே 191வது வசனமும் அமைந்திருக்கிறது.

இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்து வைக்கும் (191வது) வசனத்திற்கு முந்தைய வசனத்தில் ”உங்களுடன் போரிட வருபவர்களை எதிர்த்து போரிடுங்கள்” என்று கூறிவிட்டு, அடுத்த 191வது வசனத்தில் முஸ்லிம்களுடன் போருக்கு வருபவர்களேயே ”அவர்கள்” என்று சுட்டுகிறது. ‘அவர்கள்’ என்றால் உங்களுடன் போர் செய்ய வருபவர்கள் என்பது எவருக்கும் விளங்கும். அதாவது முஸ்லிம்களை அழித்தொழிக்க படை திரட்டிக் கொண்டு வரும் எதிரிகளோடு போரிட்டு ”அவர்களைக் கொல்லுங்கள்” என்றே இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும்,191வது வசனத்தின் தொடர் வாசகங்கள் இவர்களின் தவறான வாதத்தை தகர்த்தெறிகிறது. ”அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு, நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்” என்று கூறுகிறது, மக்காவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது ”மக்கத்துக் காஃபிர்களா?” அல்லது ”பக்கத்துக் காஃபிர்களா?” (சிந்திக்கவும்)

1.”அவர்களை”க் கொல்லுங்கள்” 2.”அவர்கள்” உங்களை ஊரை விட்டு வெளியேற்றியவாறு” என 191வது வசனத்தில் இரண்டு முறை அவர்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டும் மக்கத்துக் காஃபிர்களைத்தான் குறிப்பிடுகின்றது என்பதை விளங்கலாம்.

9:13. ”தமது, உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவங்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?”

ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதற்காக முஸ்லிம்களை ஊரை விட்டு வெளியேற்றிய மக்கத்துக் காஃபிர்களே, முஸ்லிம்களுக்கெதிராக போரிடவும் வந்தார்கள். ”அவர்களுடன்” போர் செய்ய வேண்டாமா? என, 9:13வது வசனத்தில் சொல்லப்படுகிறது. 2:190,191 ஆகிய இரு வசனங்களுக்கு, 9:13வது வசனம் விளக்கமாக அமைந்துள்ளது.

மேலும், முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்களைக் கொல்லுங்கள் என்பதும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் கொல்லச் சொல்வதாக பொருள் கொள்வது தவறான புரிதல்.

(விளக்கங்கள் தொடரும்)

அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: