26 கேள்வி : நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு வைக்க வேண்டாம் (வெள்ளி மட்டும்) யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள் என்று கூறியதாக ஹதீஸ் உள்ளதே. அப்படியிருக்க உங்கள் கேள்வி பதில் பகுதியில் திங்கள் வியாளன் தினங்கள் நபி (ஸல்) நோன்பு நோற்ற பல ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன. தயவு செய்து விளக்கவும். (முகம்மது நஸான் – சிரிலங்கா, யாகூ மெயில் மூலமாக)
உங்கள் கேள்வியில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத் தக்கதாகும்.
1. ஒரு நாள் நோன்பு நோற்க வேண்டாம் (வெள்ளிக் கிழமை) என்று ஹதீஸ் உள்ளதே? ஆனால் நபி (ஸல்) அவர்கள் திங்கள் – வியாழன் போன்ற நாட்களில் ஒரு நாள் நோன்பு வைத்துள்ளார்களே? என்பது முதல் விஷயம்.
தெளிவான ஹதீஸை தவறுதலாக நீங்கள் விளங்கி இருக்கிறீர்கள். இது தொடர்பாக வரும் ஹதீஸைப் பாருங்கள்.
இறை இல்லம் கஃபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்த ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் நான், ‘வெள்ளிக் கிழமை (ஒரு நாள் மட்டும்) நோன்பு நோற்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு ‘ஆம், இந்த இல்லத்தின் அதிபதி மீது ஆணையாக!’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபர் (ரலி), நூற்கள்: புகாரி 1984, முஸ்லிம் 2101, இப்னுமாஜா 1724)
வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்க வேண்டாம் என்பது இதன் பொருள்.
மற்றொரு ஹதீஸ் இன்னும் தெளிவைத் தருகிறது,
‘உங்களில் ஒருவர் வெள்ளிக் கிழமைக்கு முன்பு ஒருநாள் அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்க வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1985, முஸ்லிம் 2102, அபூதாவூது 2414, திர்மிதி 674, இப்னுமாஜா 1723)
வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்க இந்த ஹதீஸ்களில் தடை உள்ளது, ஆனால் வெள்ளிக்கிழமை தவிர்ந்த மற்ற நாட்களில் ஒரு நாள் தனித்து நோன்பு இருக்க தடை இல்லை. குறிப்பாக திங்கள், வியாழன் தினங்களில் தனித்து நோன்பு இருக்கலாம். இந்த ஹதீஸ் அந்த நோன்புகளை தடுக்காது. வெள்ளிக்கிழமை நோன்பு வைப்பதாக இருந்தால் அதற்கு முன்பு ஒருநாள் அல்லது அதற்கு பின்பு ஒரு நாளை சேர்த்து நோன்பு இருக்க வேண்டும். மேலும் ஒருவர் வழமையாக நோற்கும் நோன்பு வெள்ளிக்கிழமையில் தனித்து அமைந்து விட்டால் கூட அன்று அவர் நோன்பு நோற்பதில் தவறில்லை என்பதை அடுத்து வரும் ஹதீஸ் மேலும் விளக்குகிறது.
‘இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்து விட்டால் தவிர’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் 2103)
இந்த ஹதீஸ் வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்கக் கூடாது என்பதையும் யாரெல்லாம் அவ்வாறு நோன்பு வைக்கலாம் என்பதையும் தெளிவாக கூறுகிறது.
‘ஒரு நாள் நோன்பு நோற்க வேண்டாம்’ என்ற வாசகம் எல்லா நாட்களையும் உள்ளடக்கக் கூடியது என்பதையும், ‘வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் நோன்பு நோற்காதீர்கள்’ என்ற வாசகம் வெள்ளிக்கிழமையை மட்டும் குறிக்கும் என்பதையும் விளங்கிக் கொள்வது அவசியம். இங்கே ‘வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் நோன்பு நோற்காதீர்கள்’ என்ற வாசகமே மேற்கண்ட ஹதீஸில் இடம் பெற்றுள்ளதை கவனியுங்கள்.
2. வெள்ளிக்கிழமை நோன்பு நோற்காது இருப்பது யூதர்களுக்கு மாறுசெய்வதாகும் என்று ஹதீஸ் இருக்கிறதே, என்பதும் உங்கள் கேள்வியில் உள்ள அடுத்த விஷயம்.
வெள்ளிக்கிழமைக்கும் யூதர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. ஆனால் மேலே நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்காது இருப்பதற்கான காரணம் சொல்லப்பட்டிருப்பதை விளங்க முடிகிறது.
வெள்ளிக்கிழமை என்பது வார நாட்களில் ஒரு விஷேசமான நாள் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அதற்காக அந்த நாளில் மட்டும் இரவுத் தொழுகையை தொழுவது, அந்த நாளில் மட்டும் நோன்பு நோற்பது என்பது இயல்பாகவே மனிதர்கள் செய்ய நினைக்கும் விஷயங்கள் தான். இன்றும் கூட அந்த வழக்கம் பலரிடம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கத்தை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பது முதல் காரணம்.
மகிழ்ச்சிக்குரிய நாளான பெருநாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்க தடை செய்தார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அதுபோல ஹஜ்ஜின் மிகமுக்கிய கிரியையான அரஃபாத்தில் தங்கி இருத்தலின் போதும் அங்கே நிகழ்;த்தப்படும் குத்பா உரையை செவிமடுக்கும் ஜாஹிகள் நோன்பு நோற்க வலியுறுத்தப்படவில்லை. அதே தினத்தில் அரபாவில் தங்கியிராத மற்றவர்கள் நோன்பு நோற்க கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள். அதுபோல சூரியன் உதிக்கும் நாட்களிலெல்லாம் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை என்ற சிறப்பைப் பெற்ற இந்த நாளில் தனித்து ஒரு நாள் மட்டும் நோன்பிருக்க நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பது இரண்டாவது காரணம்.
முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை என்பது வாராந்திர பெருநாள் போன்றதாகும், அதனாலேயே அந்த நாளில் நோன்பு நோற்க தடுக்கப்பட்டுள்ளது என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
‘நிச்சயமாக வெள்ளிக்கிழமை உங்களுக்கு பெருநாளாகும். ஆகவே அதற்கு முன்போ அல்லது பின்போ நோன்பு நோற்றாலே தவிர, அதில் நோன்பு நோற்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் அல் அஸரி (ரலி), நூல்: அல்பஸ்ஸார்)
ஒரு நாள் நோன்பு என்பது வெள்ளிக்கிழமைக்கு மட்டும் குறிப்பாக சொல்லப்பட்ட ஒன்று, அது பொதுவானது அல்ல. யூதர்களுக்கு மாறு செய்வதற்காக அந்த நோன்பை வைக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக எந்த குறிப்பும் இல்லை.
மறுமொழியொன்றை இடுங்கள்