இஸ்லாம்தளம்

அன்பின் நண்பன்

வேலைப்பளு காரணமாக, வெறும் இணைப்புகளை மட்டும் கொடுத்து விட்டு, வேறு எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது.

குரான் மொழி பெயர்ப்பில், சிறந்தவை எனவும், ஆதாரப்பூர்வமானது என அங்கீகாரம் பெறப்பட்டதுமான மொழி பெயர்ப்புகளைத் தான் நான் கொடுத்துள்ளேன்.

அவர்களில் ஒருவரின் வரலாறு மிகவும் சுவையானது.

அவர் – பிக்தால். வில்லியம் மர்மட்யூக் பிக்தால்.

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் குரானை இவர் தான் செய்தார். அர்த்தங்களைத் தான் தன்னால் மொழி பெயர்க்க முடிந்தது, அதை ஓதும் பொழுது எழும் கண்ணீர் வரவழைக்கும் இனிமையை தன்னால் மொழி பெயர்க்க முடியவில்லை என்று கூறும் இவர் – பிறப்பால் ஆங்கிலேயர். மொழி பெயர்ப்பை எகிப்தில் உள்ள ஆங்கிலம் அறிந்த இமாம் ஒருவர் மூலமாக வார்த்தைக்கு வார்த்தை சரி பார்க்கப்பட்டு, வாதம் செய்யப்பட்டு, பின்னர் தான் வெளியிடப்பட்டது.

இவரின் வரலாறு சுவையானது என்று நான் சொன்னது இதனால் அல்ல. அது – பிறப்பால் கிறித்துவரான இவருக்கு முதலில் பணி வழங்கியது கிறித்துவ தேவலாயங்கள் – என்ன அது தெரியுமா?

குரானை விமர்சனம் செய்ய வேண்டும். அது தான் அவருடைய பணி. விமர்சனம் செய்வதற்காக அவர் குரானை வாசிக்க நேர்ந்தது. விமர்சிப்பதற்காக வாசித்தவர், பின்னர் அதன் வழியாகச் சொல்லப்பட்ட உண்மைகளை உணர்ந்து, இப்படிப்பட்ட குரானையா நான் விமர்சனம் செய்கிறேன் என கேள்விகளை எழுப்பி, மனம் மாறி இஸ்லாத்தைத் தழுவியவர். பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்தின் பணியில் செலவிட்டார். இன்றும், அவருடைய மொழி பெயர்ப்பே, ஆங்கிலத்தின் அதிகார பூர்வ வடிவமாக அனைத்து இஸ்லாமியர்களாலும் ஏற்கப்பட்டுள்ளது.

உண்மையான விமர்சகர்களாக இருந்தால், நியாயம் புரியும். ஆனால், இங்கு வலைத்தளத்தில் எழுதுபவர்களின் நேர்மையை கிலோ எத்தனை என்று விலை பேசி விடலாம். இவர்கள் தான் கிளம்பி விட்டார்கள் விமர்சிப்பதற்கு.

மத விசாரணையில் ஈடுபடுபவர்கள், முதலில் தங்கள் மதத்தைப் பற்றிய முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். ஆன்மீகத்தில் அடிப்படை பரிச்சியம் இருக்க வேண்டும். உண்மையான தேடுதலுடன் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்.

ஆனால், நம் நண்பர்கள், அரசியல் காரணமாக, குரான் விமர்சனத்தில் இறங்குகிறார்கள். அதிலும், நேர்மை கிடையாது. எப்படியாவது, மக்களின் கண்களில் மண்ணைத் தூவி, உண்மைகளை மறைத்து அவப்பெயர் உண்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறார்கள். காரணம் – அடக்குமுறை மிகுந்த சமூக அமைப்பிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமானால், அது தங்களின் பிறப்பால் தங்களை அவமதிக்கும் மதத்தை விட்டு வெளியேறுவது தான்.

பலர் அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி, புத்தத்திற்கு செல்கிறார்கள். இஸ்லாத்திற்கு வருகிறார்கள். கிறித்துவத்திற்கும் செல்கிறார்கள். இப்பொழுது, புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு அங்கம் என்றே சொல்லத் தலைப்பட்டுவிட்டனர். இது தான் காலத்தின் கட்டாயம் என்பது. எந்த மதத்தை, இந்த மண்ணை விட்டு, அழித்து ஒழித்தார்களோ, அதே மதத்தை இப்பொழுது தங்களின் சகோதர மதமாக அங்கீகாரம் தர தலைப்படுகின்றனர்.

ஆனால், இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் – அதனுடைய துல்லியமான வேறுபாடுகளால், தங்களின் சகோதர மதமாக கூற முடியாது என்பதை உணர்ந்து தான், துர்ப்பிரச்சாரம் செய்து, மக்களை தடுத்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த எதிர்மறை அணுகும் முறை நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்பதை அறியவில்லை அவர்கள். அது, கலவரங்களிலும், மத வெறுப்பிலும் தான் கொண்டு போய் நிறுத்துகிறது.

இந்த பிரச்சாரத்தின் உச்ச கட்டம் – மத தலைவர்களை இழிவு செய்வது. முகமது நபிகளை – ஒரு மனிதர் என்ற அளவிற்கேனும் மதிக்கத் தவறிய இந்த மனிதர்களை மனிதர்கள் என்று அழைப்பதும் கூட தவறு. சகமனிதனை மனிதன் என்று அழைக்க மறுக்கும் இவர்கள், எப்படி, விமர்சனத்தில் இறங்குகிறார்கள்? எந்த நியாயத்தின் அடிப்படையில் இறங்குகிறார்கள் என்று புரியவில்லை. எந்த ஒரு விமர்சகனுக்கும் அடிப்படையில் தேவை – கருத்து வேறுபாடுகளை மீறிய, மனித மதிப்பீடுகள். அவ்வாறு உள்ளவர்களாலேயே, உண்மையான விமர்சனத்தில் இறங்க முடியும். அந்த தகுதி, வலைப்பதிவர்களில் தங்களை விமர்சகர்களாகக் காட்டிக் கொள்ள முயலும் எவருக்கும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான், இன்று அவர்களின் எழுத்துகளை எவரும் வாசிப்பதில்லை. திண்ணையில் முயன்று பார்த்தார்கள். இப்பொழுது, வலைப்பதிவுகளில். தாங்களே எழுதி, தாங்களே வாசித்து, தாங்களே சிலாகித்து, முகவரியற்ற அநாமதேயங்களால், பின்னூட்டமிட்டு, போலியான பிரமிப்பை எழுப்ப முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு வலைத்தளத்தில் வரவேற்பில்லை என்பதை பல வலைப்பதிவாளர்கள் ஆக்ரோஷமாக அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்தே தெரிகிறது.

இப்பொழுது புதிதாக சங்கதிகளை ஆரம்பிக்கிறார்கள் – அம்பேத்கர் ஒரு இந்துத்வா வாதி என்று. ஒரு அப்பட்டமான பொய்யை, கொஞ்சம் கூட கை கூசாமல் எழுதும் இவர்கள் சமூகத்தால் சிறிது சிறிதாக ஒதுக்கப்படுவர். அம்பேத்கரின் பல புத்தகங்களை வாசித்தவன் என்ற முறையில் தான் இவர்களின் நேர்மையின்மையை அறிய முடிகிறது.

அடுத்த கட்ட பிரச்சாரமாக, இந்து மதத்தில் சாதி பிரச்சினைகளே கிடையாது என்று ஒரே போடாக போடுகிறார்கள். அநாமதேய பின்னூட்டங்கள் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இதிலேயே அவர்களுடைய நேர்மை பல்லிளித்து விட்டது.

ஒரு விமர்சகனுக்கு உள்ள நேர்மை, முதலில் உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டும். பிறகு, ஒரு மதத்தினர் ஆதாரப்பூர்வமான நூல் என்று கூறும் பிரதிகளை வைத்துக் கொண்டு வாசிக்க வேண்டும். தாங்களேவே உருவாக்கிக் கொண்ட நூல்களை வைத்துக் கொண்டு, வாதாட வரக்கூடாது. இன்று, இணையத்தளங்களில் எழுதப்படும் விஷயங்களை வைத்துக் கொண்டு, வாதாடுகிறார்கள். இணையத் தளங்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. எவர் வேண்டுமானாலும், எவர் பெயரிலும், எதன் பெயரிலும் எழுதத் தொடங்கலாம். தங்கள் கருத்துகளை இது தான் இந்த மதம் என்று போதிக்கலாம். இத்தகைய கருத்துகளை வைத்துக் கொண்டு வாதாடுவது, என்பது தூங்குவதாக நடிப்பவனிடம் விழிப்பை ஏற்படுத்தும் வெட்டி வேலையாகத் தான் முடியும்.

அவர்களுக்குத் தங்கள் விருப்பம் போல அவதூறுகளை அள்ளி இறைக்கலாம். அது அவர்களின் தனிமனித சுதந்திரம். ஆனால், அந்த சுதந்திரத்தை அமல் செய்வதிலும் விதிகள் இருக்கின்றன. பிற மனிதர்களை, மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவற்றவர்கள் கூட, விமர்சனத்தில் இறங்கிவிடுகின்றனர். இவர்கள் தான் தங்கள் மதத்தில் தாழ்த்தப்பட்டு அடக்கி வைக்கப்படும் மனிதர்களை மனிதர்களாக நியாயமாக நடத்துவோம் என்று சூளுரைக்கின்றனர். என்ன ஒரு வெத்து வாதம்? இவர்களை பின் எப்படி மற்றவர்கள் நம்புவார்கள்? இந்தப் புரிதல் இல்லாமலே, சீர்திருத்த வந்தவர்கள் அறியவில்லை, சீர்திருத்தம் முதலில் உள்ளிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை.

ஒருவர், மிக சவடாலாக, நபி பெருமானார் அவர்களை அவன் இவன் (இறைவன் மன்னிப்பானாக) என்று எழுதுவதில் என்ன தப்பு என்று கேள்வி எழுப்புகிறார்!!! இஸ்லாத்தின் முதல் வாக்கியமான இறைவன் ஒருவனே அன்றி வேறல்ல என்ற தத்துவத்தைக் கூட புரிந்து கொள்ளாமலே, இஸ்லாத்தை அறிந்து விட்டதாக இறங்கி விட்டார்கள். தமிழ் மொழியில், ஏகத்தைக் குறிக்கும் விதமாக அவன் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் என்று சொன்னால் கூட, அது மரியாதைப்பண்மை ஆகி விடும் என்பதால், காலப்போக்கில், இந்த ‘அவர்’ உள்ளே பலர் புகுந்து விடக்கூடும் என்பதால், எந்த வித கருத்து மயக்குதலுக்கும் இடமின்றி, தெளிவாக ஒருவனைக் குறிப்பிடுவதற்காக மொழி இலக்கணப்படி, அவன் என்ற சொல் ஒருமையைக் குறிப்பதற்காக, பயன்படுத்தப்படுகிறது.

மொழி அறிவும் கிடையாது, தத்துவ புரிதலும் கிடையாது, மத புரிதலும் கிடையாது ஆனாலும், நான் விமர்சிப்பேன் என்று அடம்பிடிப்பவர்களைப் பார்க்கும் பொழுது, இத்தகைய அநியாய மனிதர்களால், அவர்கள் சார்ந்த மதமே இறுதியில் இழிவு அடைகிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

குரானை நிறுவதற்கு, விஞ்ஞான ஆயத்தங்கள் கூட தேவையில்லை.
குரானின் வசனங்களில் ஒன்று, பிற மதத்தைத் தூற்றாதே – பின் அவர்கள் உங்களைத் தூற்றுவார்கள் என்பது. இது இன்று நிரூபணமாகி வருகிறது. பாருங்கள் அவர்கள் முன் நிறுத்திய வேதங்களைப் போட்டு, நார் நாராக கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் சொல்வது, இத்தகைய நேர்மையற்ற மனிதர்களின் தளங்களில், அநாவசியமாகப் பின்னூட்டமிட்டு, நேரத்தை வீணடிப்பதோ, அல்லது அவர்கள் தளங்களின் சுட்டி கொடுத்து, விளம்பரம் செய்வதோ தேவையற்றது. எல்லோரும் ஒதுக்கியவர்களை எதற்காக தேடிப்பிடித்து வாசிக்கிறீர்கள்? மறுப்பு வெளியிட வேண்டுமென்றால், கருத்துகளை மட்டும் குறிப்பிட்டு, நமது தளங்களிலே மறுப்பு சொல்லிக் கொண்டால் போதுமானது என்றே நினைக்கிறேன்.

சரிதானே?

(பின்னர், இதையே ஒரு தனிப்பதிவாகவும் போட்டு விடுகிறேன்.)

Posted by நண்பன் | Mon Mar 05, 09:27:00 PM
——————————

அன்பின் நண்பன்,

விரிவான விளக்கத்திற்கு நன்றி! அருமையானக் கருத்துக்கள் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நீங்கள் எழுதிய அறிஞர் பிக்தால் அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த சம்பவம் பல நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. அதில் உடனடியாக நினைவுக்கு வருவது, நபித்தோழர் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த நிகழ்ச்சியாகும்.

நபி (ஸல்) அவர்களை ஒழித்தே தீருவேன் என்று வைராக்கியம் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், இஸ்லாத்தில் இணைந்த தமது தமக்கையை உண்டா இல்லையா பார்த்து விடுகிறேன் என்று தங்கையைக் கண்டிக்கக் கிளம்பினார். ஆனால் நடந்தது வேறு, அங்கு திருக்குர்ஆன் ஓதுதல் உமரின் செவிகளில் பாய்ந்து அவரின் சிந்தனையைத் திசை திருப்புகிறது. ”ஆஹா இது மனிதனின் வார்த்தையே அல்ல” என்று வியப்புடன் முழுமையாக இஸ்லாத்தில் சரணடைகிறார்.

இப்படி பாமரர்களும், அறிஞர்கள், விஞ்ஞானிகளும் இஸ்லாமெனும் படுகுழியில் விழுந்தவர்கள் ஏராளம்!

ஒரு நபிச்செய்தி நினைவுக்கு வருகிறது.

‘தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். அவனது நெருப்பு குளிர்ந்த நீராகும். அவனது தண்ணீர் சுட்டெரிக்கும் நெருப்பாகும். உங்களில் எவரும் இதைக் கண்டால் அவர் நெருப்பாக உள்ளதில் தலையை நுழைத்து அதிலிருந்து அருந்தட்டும். ஏனெனில் அது குளிர்ந்த நீராகும்’ (நபிமொழியின் கருத்து)

இஸ்லாம் ஒரு படுகுழியென்றால் அந்தப் படுகுழியில் விழுந்தவர்கள் தப்பித்துக் கொண்டனர். விழாதவர்களையும் படுகுழியில் விழுந்திட இறைவன் அருள் புரியட்டும்.

நிற்க,

வலைப்பதிவில் இஸ்லாம் பற்றி விமர்சிப்பவர்களிடம் நேர்மை இல்லை என்ற உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். இஸ்லாத்தை விமர்சிக்கும் வலைப்பதிவர்களிடம் உண்மைகளை ஒப்புக் கொள்ளும் நேர்மை இருந்ததில்லை! இது என் அனுபவத்தில் உணர்ந்தது. இஸ்லாத்தின் ஆதாரா நூல்களில் இருப்பதை, இல்லை என்று அவர்கள் மறுத்ததை, எடுத்துக்காட்டி, பொது இடத்தில் பொய்யர்களென விமர்சித்ததை மறுக்க முடியாமல் – அதற்கு எதிர்ப்பு வைக்க முடியாமல் போனாலும், அதை ஒப்புக் கொள்ளும் மனித நேர்மை கூட இவர்களிடம் இல்லை.

சில நேரங்களில் ஆச்சரியமும், அதிர்வும் அடைந்திருக்கிறேன். வரலாற்றை திரித்தும், நெளித்தும் இவர்களால் எப்படி எழுத முடிகிறது?

”எவனொருவன் என் மீது வேண்டுமென்றே பொய் சொல்கிறானோ அவன் தங்குமிடத்தை நரகத்திலாக்கிக் கொள்ளட்டும்” என்ற நபிமொழியின் எச்சரிக்கை இவர்களுக்கு இல்லை. அதனால் இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருப்பதாகவும் எப்படி வேண்டுமானாலும் இஸ்லாத்தின் மீது அவதூறுகளை இவர்கள் எழுதலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவன். இவன் என்று எழுதி, அப்படி எழுதி விட்டால் அவரை விட இவர்கள் உயர்ந்தவர்களென்ற – அதாவது முஹம்மதை இறைத்தூதராக நம்புவர்கள் அவரை மதிக்கட்டும் எனக்கு அவரை மதிக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்ற – ஆணவத்தை இது பிரதிபலிக்கிறது என்றாலும், உலகின் கணிசமான மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் தலைவாராக ஏற்றுப் பின்பற்றத்தக்க மனிதர் என்ற கருத்திலாவது சிறிது கண்ணியத்துடன் எழுதும் பண்பாடு தெரியாதவர்கள். நீங்கள் சொன்னது போல் இவர்கள் சவுடால் பேர்வழிகள்.

//நான் சொல்வது, இத்தகைய நேர்மையற்ற மனிதர்களின் தளங்களில், அநாவசியமாகப் பின்னூட்டமிட்டு, நேரத்தை வீணடிப்பதோ, அல்லது அவர்கள் தளங்களின் சுட்டி கொடுத்து, விளம்பரம் செய்வதோ தேவையற்றது. எல்லோரும் ஒதுக்கியவர்களை எதற்காக தேடிப்பிடித்து வாசிக்கிறீர்கள்? மறுப்பு வெளியிட வேண்டுமென்றால், கருத்துகளை மட்டும் குறிப்பிட்டு, நமது தளங்களிலே மறுப்பு சொல்லிக் கொண்டால் போதுமானது என்றே நினைக்கிறேன்.

சரிதானே?// – நண்பன்

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்.

பொதுவாக கருத்துக்குக் கருத்து என்று சொல்வதில் இயன்றவரை கவனம் செலுத்துவேன். கருத்து சொன்னவருக்கு மறுப்பு வெளியிட்டாலும், கருத்து சொன்னவரைக் குறிப்பிட்டு எழுத நேர்ந்தாலும் தனிமனித தாக்குதலை தவிர்த்தே எழுதியிருக்கிறேன்.

தேடிப் பிடித்து வாசிக்கும் அளவிற்கு இணைய நேரம் எனக்குக் கிடைப்பதில்லை. வந்த சுட்டியைப் படித்தால் இருப்பதை இல்லையென ஒரு நாலாந்தர நடையில் வழக்கமான அவதூறு. சிராஜுதீன் அவர்கள் மறுமொழியில் குறிப்பிட்ட திருக்குர்ஆன் எட்டு ஆங்கில மொழி பெயர்ப்புகளில் ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பை வாசித்த சிந்தனையாளர்கள் ஆங்கிலம், தமிழ் இரு மொழி பெயர்ப்புகளும் ஏன் வித்தியாசப்படுகிறது என்ற நேர்மையான விமர்சனத்தை வைத்திருக்க வேண்டும் அப்படிச் செய்யவில்லை.

திருக்குர்ஆன், தமிழ் பெயர்ப்பு அத்தனையிலும் 002:187 வசனத்தின் சம்பந்தப்பட்ட வார்த்தைக்கு ”ஆடை” என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேதகு நண்பர்கள் அந்த வசனத்தில் ”ஆடை” என்கிற வார்த்தையே இல்லை என்று அடித்துச் சொல்வதோடு, ”ஆடை” என்பது ஒரு புரட்டு என்றும் புரட்டுவது யாரென அறியாமலேயே தமது மேதா விலாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். திருக்குர்ஆன் மூல மொழியிலிருந்து ”ஆடை” என்று சரியாக தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்த இஸ்லாமிய அறிஞர்களையும் தரக்குறைவாகக் குறிப்பிட்டு தனது மன நிலையை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

சுட்டி கொடுத்து இவர்களை அடையாளம் காட்டுவது அவசியமெனக் கருதினேன். பிற தளத்தலிருந்து வெறும் நகலெடுத்து ஒட்டிக்கொண்டு திரியும் இவர்கள் கூற்றில் உண்மையாளார்களாக இருந்தால் எங்கே? ”ஆடை” என்று அந்த வசனத்தில் சொல்லப்படவில்லை என்பதை நிரூபிக்கட்டும் செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: