1) இறையச்சத்தைக் கொண்டு உபதேசித்தல்: ஒரு முஸ்லிம் உம்ராவுக்கோ ஹஜ்ஜிற்கோ பயணம் மேற்கொள்ளும்போது தமது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் தக்வாவைப் பற்றி வஸிய்யத் செய்ய வேண்டும். தக்வா என்றால் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுப்பதாகும். மேலும் கடன் சம்பந்தமான கொடுக்கல் – வாங்கல்களை எழுதி வைத்து அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
(2) தவ்பாவில் ஈடுபடுதல்: ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் தங்களின் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடும் வகையில் கலப்பற்ற தவ்பா செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசிகளே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பால் தவ்பா செய்து மீளுங்கள்! அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்! (24:31). தவ்பா என்பது, பாவங்களிலிருந்து விலகி அதை விட்டுவிடுவதும் நடந்துவிட்டதை நினைத்து வருந்துவதும் இனி அதைச் செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுப்பதுமாகும். மக்களிடம் பொருள், உடல், மானம் மரியாதை தொடர்பான ஏதேனும் அக்கிரமங்கள் ஏற்பட்டிருந்தால் பயணம் மேற்கொள்ளும் முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் அவற்றைப் பரிகாரங்கள் மூலமாகவோ, மன்னிப்பு மூலமாகவோ தீர்த்துக்கொள்ள வேண்டும்.
(3) ஹலாலான பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுத்தல்: ஹஜ், உம்ராவில் ஆகும் செலவுகளுக்குரிய பொருளாதாரம்: ஹலாலானதுதானா? என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில், ‘அல்லாஹ் நல்லவன், நல்லதைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை’| என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).
(4) மனத்தூய்மை: ஹஜ், உம்ரா செய்பவர்கள் அல்லாஹ்வின் திருமுகத்திற்காகவும் மறுமைக்காகவும் புனித இடங்களில் சொல்லாலும் செயலாலும் மேற்கொள்கின்ற அமல்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற வேண்டும் என்கிற கலப்பற்ற எண்ணத்துடனும் செயல்பட வேண்டும். அத்துடன் இந்த உலகாதாயத்திற்காகவோ, முகஸ்துதிக்காகவோ, புகழுக்காகவோ, பெருமைக்காகவோ இவற்றை மேற்கொள்வது என்ற நிலையை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் அமல்களைப் பாழாக்கும் காரணங்களாகும். அல்லாஹ் கூறுகிறான்: ‘யார் இவ்வுலக வாழ்க்கையையோ, அதன் அலங்காரத்தையோ நாடுகின்றாரோ அவர்களுக்கு இவ்வுலகிலேயே அவற்றைக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் எந்தக் குறைவும் ஏற்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவுமில்லை. உலகில் அவர்கள் செய்தவை அழிந்துவிட்டன. அவர்கள் செய்துகொண்டிருந்தவை அசத்தியமாகும். (11:15,16). மேலும் நான் அனைத்துக் கூட்டாளிகளைவிட்டும் தேவையற்றவன். யாரேனும் ஓர் அமலைச் செய்யும்போது என்னுடன் வேறெவரையும் கூட்டாக்கினால் நான் அவனையும் அவனது அக்காரியத்தையும் விட்டுவிடுவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
(5) சிறந்த நண்பனைத் தேர்ந்தெடுத்தல்: ஹஜ், உம்ரா செய்பவர்கள், தங்களின் பயணத்தோழர்களாக தக்வாவுடையவர்கள், மார்க்க ஞானம் உடையவர்கள், கட்டுப்பாடுள்ளவர்கள் போன்றவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விவரமில்லாதவர்களையும் பாவமிழைப்பவர்களையும் தவிர்க்க வேண்டும்.
(6) ஹஜ் – உம்ராவின் சட்டங்களைக் கற்றல்: ஹஜ், உம்ராவில் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி கற்றுக்கொள்வதுடன் அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பயணமாகும்போது பயண துஆக்களை ஓதிக்கொள்ள வேண்டும்.
(7) திக்ர், இஸ்திக்ஃபார்களை அதிகமாக்கிக்கொள்ளல்: பயணத்தின்போது திக்ர், இஸ்திக்ஃபார், பணிவுடன்கூடிய துஆ, குர்ஆன் ஓதல், அதன் அர்த்தங்களைப் பற்றி சிந்தித்தல் ஆகியவற்றை அதிகமாக்குவதுடன் ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றவும் வேண்டும். ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறுதல், பொய், கோள், புறம், பரிகாசம் போன்றவற்றிலிருந்து நாவைப் பேணவும் வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்