இஸ்லாம்தளம்

செப்ரெம்பர்16, 2009

பெருநாள் தர்மமும் – அதன் நோக்கமும்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24
பித்ரு ஸகாத் நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது சாதாரண) தர்மமேயாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.

பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பாளர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ, பைஹகீ.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ”இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்” என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர், இப்னு உமர் (ரலி) நூல்கள்-பைஹகீ, தாரகுத்னீ.

பெருநாள் தர்மம் எப்போது வழங்க வேண்டும்…?

பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படுமுன்பே வழங்கிவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர், இப்னு உமர் (ரலி) நூல்கள்-புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ.

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிப்பாளர், இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி.

பெருநாள் தர்மத்தின் அளவு எவ்வளவு…?

முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு ‘ஸாவு’ என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். அறிவிப்பாளர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு பித்ருத் தர்மம் வழங்குவோம் அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது. அறிவிப்பாளர், அபூஸயீத் (ரலி) நூல்- புகாரி.

அனஸ் (ரலி) என்ற நபித்தோழரிடம் ஒருவர் ஸாவு (அளவைப்) பற்றிக் கேட்டபோது இந்த அளவையே கூறினார்கள், கேள்வி கேட்டவர் நீங்கள் அபூ ஹனீஃபா எனும் பெரியாருக்கு மாற்றமாகச் சொல்கிறீர்களே, என்று கேட்டார் இதைக்கேட்ட அனஸ் (ரலி) அவர்கள் கடும் கோபம் கொண்டு பல நபித்தோழர்களிடம் இருந்த ‘ஸாவு’ என்னும் அளவைக் கொண்டுவரச் செய்து அதை மக்களிடம் காட்டி ‘இதில்தான் நாங்கள் அளந்து பெருநாள் தர்மம் செய்வோம்’ என்று கூறினார்கள் அவர்கள் காட்டிய ஸாவு என்பது அவர்கள் கூறிய அளவைக் கொண்டதாகவே இருந்தது. நூல்கள்- தாரகுத்னீ, பைஹகீ.

(இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு ‘ஸாவு’ என்பதன் அளவாகும்)

நபி(ஸல்) காலத்தில் கோதுமை – பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைதான் உணவாக கொடுக்க வேண்டும்.

நபி(ஸல்) காலத்தில் அவர்களின் உணவுப் பொருள்கள் எதுவோ அதுவே பெருநாள் தர்மமாக வழங்கப்பட்டது நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள அபூ ஸயீத் (ரலி) அவர்களின் செய்தியிலிருந்து இதை விளங்கலாம்.

இன்றைக்கு நமது உணவு முறையில் அரிசியே பெரும்பங்கு வகிப்பதால் நாம் அரிசியை ஒரு ஸாவு தர்மமாக வழங்கலாம். இதர உணவுப் பொருள்களுக்கும் இதுதான் பொருந்தும்.

உணவுப் பொருளாக இல்லாமல் பணமாக கொடுக்கலாமா.. என்றால் அவ்வாறு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றேத் தோன்றுகிறது.

‘அன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்’ என்பது நபிமொழி. வெறும் அரிசியைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவைப் பூர்த்தியாகி விட்டது என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் அரிசி சோறு சாப்பிட வேண்டுமானால் அதற்கு ‘குழம்பு’ உடனிருக்க வேண்டும். அப்போதுதான் உணவு என்ற அந்தத் தேவைப் பூர்த்தியாகும்.

அரிசியைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு ஏழை குழம்பிற்கு தேவையுள்ளவராக இருக்கிறார் என்றால் அவருக்கு பெருநாள் தர்மத்தை பணமாக கொடுத்து அவரது ‘குழம்புத் தேவை’யை பூர்த்தியாக்கலாம்.

எல்லோரும் அரிசியை தர்மமாக வழங்கும் போது அன்றைய தினம் ஏழைகள் வீட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடில்லாமலிருக்கும். அன்றைக்கு துணைத் தேவையே அதிகரித்து நிற்கும் என்பதால் பணமாக கொடுப்பது ஹதீஸூக்கு மாற்றமானதல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம்.

அலட்சியமின்றி அனைவரும் பெருநாள் தர்மத்ததை செய்பவர்களாக ஆக வேண்டும்.

ரமளான் சட்டங்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

புனித மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்ப

அல்லாஹ் கூறுகிறான்…

விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184)

ரமளான் மாதம் எத்தகையதென்றால்அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாடகளின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை, குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே. (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்- அல்குர்ஆன் 2:185)

நோன்பு கால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியுடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது, அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள், நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொணடிருந்ததை அல்லாஹ் நன்கறிவான், அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக்கொள்ளுங்கள், இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள், இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள், இவையே அல்லாஹ் விதித்த வரும்புகளாகும், அந்த வரம்புகளை (த் தாண்ட) முற்படாதீர்கள், இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 2:187)

பிறை பார்த்து நோன்பு…

நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

தகவலறிந்து நோன்பு…

மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘நான் பிறையைப் பார்த்தேன்’ என்று கூறினேன், நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள், (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள், உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள், பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ரிப்யீ இப்னு கிராஷ் நூல்கள்- அபூதாவூத், அஹ்மத்.

நோன்பு வைக்கும் எண்ணம் வேண்டும்…

ஃபஜ்ருக்கு முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா.

ஸஹ்ர் செய்வதில் பரகத் உண்டு…

நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹ்ரில் பரகத் உண்டு, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா.

வேண்டுமென்றே நோன்பு திறப்பதைத் தாமதித்தல் கூடாது…

என் அடியார்களில் எனக்கு மிகவம் விருப்பமானவர் (சூரியன் மறைந்தவுடன்) விரைந்து நோன்பு துறப்பவர்களாவர், என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- திர்மிதீ, அஹ்மத்.

இரவு முன்னோக்கி பகல் பின் சென்று சூரியன் மறைந்தால் நோன்பாளி நோன்பு துறப்பார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும் வரை மக்கள் நன்மையைச் செய்தவர்களாகிறார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பிரயாணத்தில், மற்றும் கர்ப்பிணி, தாய்மார்களின் நோன்பு…

அல்லாஹ்வின் தூதரே! பிரயாணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது, அப்போது நோன்பு நோற்பது குற்றமாகுமா? என்று நான் கேட்ட போது ”இது அல்லாஹ் வழங்கிய சலுகை இதை யார் பயன் படுத்திக் கொள்கிறாரோ அது நல்லது, யார் நோற்க விரும்புகிறாரோ, அவர் மீது குற்றமில்லை” என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஹம்ஸா இப்னு அம்ரு அல் அஸ்லமீ (ரலி) நூல்கள்- முஸ்லிம், நஸயீ.

(நான்கு ரக்ஆத் தொழுகைகளில்) பாதியைக் குறைத்துக் கொள்ளவும், நோன்பை தள்ளி வைக்கவும் அல்லாஹ் பிரயாணிகளுக்கு சலுகை வழங்கியுள்ளான், கர்ப்பிணி, பால் கொடுக்கும் தாய், ஆகியோரும் நோன்பிலிருந்து விலக்களித்துள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்கள்- அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

சக்தி பெற்றவருக்கே நோன்பு…

யார் சக்தி பெறுகிறார்களோ அவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் போது இந்த வசனம் மாற்றப் படவில்லை, நோன்பு நோற்க சக்தியற்ற முதியவர்கள் விஷயத்தில் இந்தச் சட்டம் இன்னும் உள்ளது, என்றார்கள் அதாவது அவர்கள் ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிப்பார்கள், என்றார்கள். அறிவிப்பாளர், அதாவு, நூல்- புகாரி.

நோன்பாளி மறந்து விட்டால்…

நோன்பாளி மறந்து விட்டு உண்ணவோ, பருகவோ செய்தால் (நினைவு வந்ததும்) தன் நோன்பை தொடரட்டும், அவரை அல்லாஹ்தான் உண்ணவும், பருகவும் செய்திருக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.

நோன்பாளி என்று கூறி விட வேண்டும்…

உங்களில் ஒருவர் நோன்பு வைத்திருக்கும் போது தீய பேச்சுக்கள் பேசலாகாது, வீண் சண்டைகளில் ஈடுபடலாகாது, எவரேனும் அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு அழைத்தால், நான் நோன்பாளி என்று கூறிவிட வேண்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பொய் சொல்லலாகாது…

(நோன்பு வைத்திருக்கும் போது) பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.

தண்ணீர் தூய்மைப் படுத்தும்…

உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும், அது கிடைக்கா விட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும், ஏனெனில் தண்ணீர் தூய்மைப் படுத்தக் கூடியதாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸல்மான் இப்னு ஆமிர் (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்.

உணவிற்கே முதலிடம்…

இரவு உணவு வைக்கப்பட்டால், மஃக்ரிப் தொழுவதற்கு முன் சாப்பாட்டிற்கு முதலிடம் கொடுங்கள், உணவு உட்கொள்வதைத் தாமதிக்க வேண்டாம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்- புகாரி.

இமாம் தொழுகையைத் துவங்கி குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பதை செவியுற்றாலும் இப்னு உமர் (ரலி) சாப்பாட்டை முடித்து விட்டே தொழுகையில் கலந்து கொள்வார்கள். நூல்- புகாரி.

விடுபட்ட நோன்புகள்…

ரமளானில் சில நோன்புகள் (மாதவிடாய் போன்ற காரணங்களால்) எனக்கு விடுபட்டு (களாவாகி) விடும், (11 மாதங்கள் கழித்து) ஷாஃபானில் தவிர அதை என்னால் நோற்க இயலாது, நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளே இதன் காரணம். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத். திர்மிதீ, இப்னுமாஜா.

நோன்பாளி தன் மனைவியிடத்தில்…

நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுபவர்களாகவும், கட்டி அணைப்பவர்களாகவும் இருந்தனர், எனினும் நபி (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி (ஸல்) அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்- அபூதாவூத்.

(இளைஞர்- இள மனைவி இருவருமே சுலபத்தில் உணர்ச்சி வசப்பட்டு இறை வரம்பை மீறி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப் படுகிறது)

நோன்பாளி தன் மனைவியுடன் கூடிவிட்டால்…?

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் நாசமாகி விட்டேன்’ என்றார்,

”என்ன நாசமாகி விட்டீர்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,

‘ரமளானில் (பகல் பொழுதில்) என் மனைவியுடன் சேர்ந்து விட்டேன்’ என்றார்,

”ஒரு அடிமையை விடுதலை செய்யும் அளவிற்கு உம்மிடம் செல்வம் இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இல்லை’ என்றார்,

”தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இல்லை’ என்றார்,

அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு இயலுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இயலாது’ என்றார்,

பின்பு நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் (அமைதியாக) உடகார்ந்திருந்தார்கள் பதினைந்து ஸாவு கொள்ளவுள்ள பாத்திரத்தில் பேரீத்தம் பழம் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது,

(அதை அவரிடம் வழங்கி) ”இதை தர்மம் செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அதற்கு அவர் ‘என்னை விட ஏழைக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்..? இந்த மதீனா முழுவதும் எங்களை விட ஏழைகள் எவருமில்லை..’ என்று அவர் கூறியதும், தனது கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள், பின்பு ”இதைக் கொண்டு சென்று உமது குடும்பத்தினருக்கு வழங்குவீராக” என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகார், முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா.

”அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்குப் பதிலாக ஒரு நோன்பு நோற்று விடுவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று மேலதிக விளக்கமாக இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா…?

நபி (ஸல்) அவர்கள் உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்புக் கடமையானவர்களாக ரமளான் நோன்பை நோற்பார்கள். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னைகள், ஆயிஷா (ரலி) உம்மு ஸல்மா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

லைலத்துல் கத்ர் இரவு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ரமழான் மாதத்தில் மகத்துவமிக்க ஓர் இரவு உள்ளது. அந்த ஒரு இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறப்பானதாக அமைந்துள்ளது.

இந்தத் திருக்குர்ஆனை மகத்துவ மிக்க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத் தெரியுமா அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும். (அல்குர்ஆன் 97:1-3)

இந்த மகத்துவமிக்க இரவு இதுதான் என்று வரையறுத்து குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதீஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

லைலத்துல் கத்ர் இரவை ரமழானின் கடைசி பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் எபது நபி (ஸல்)மொழி. அறிவிப்பவர் ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவருடன் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதை கடைசி பத்து நாட்களில் தேடுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) முஸ்லிம், அஹ்மத்

குறிப்பிட்ட இரவு லைலத்துல் கத்ர் இரவு என்று சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் கடைசிப் பத்து நாட்களில் ஏதேனும் ஒரு இரவாக இருக்கும் சாத்தியம் உள்ளது என்று இந்த ஹதீஸ்கள் கூறுவதால் இந்தப் பத்து நாட்களும் முயற்சிப்பதே சிறப்பானதாகும்.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ பிரத்தியேகமான வணக்கமோ ஹதீஸ்களில் காணப்படவில்லை. ஆயினும் கடைசி பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை நபி (ஸல்)யவர்கள் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் சுப்ஹு தொழுதுவிட்டு தமது இஃதிகாப் இருக்குமிடம் சென்றுவிடுவார்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா

ரமழானில் கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருக்க அவர்கள் நாடியபோது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது. இது முந்தைய ஹதீஸின் தொடராகும்.

பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதற்காக ஒரு கூடாரம் அமைத்துக்கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. ஆயினும் இது பொதுவான் அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை இந்த ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகின்றது.

உடனே ஸைனப் (ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அது அமைக்கப்படது. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் மற்றும் சிலரும் அவ்வாறு உத்தரவிட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டது.  நபி (ஸல்) அவர்கள் பஜ்ரு தொழுதுவிட்டு பார்த்தபோது பல கூடாரங்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா” என்று கேட்டுவிட்டு தமது கூடாரத்தை பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது. ரமழான் மாதம் இஃதிகாப் இருப்பதை விட்டுவிட்டு ஷவ்வாலின் கடசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்தார்கள். இதுவும் இந்த ஹதீஸின் தொடராகும்.

இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா என்ற கேள்வியும் நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகிறது.

நபி (ஸல்)  அவர்கள் இஃதிகாப் இருக்கும்போது மனிதனின் அவசியத் தேவைக்காக (மலஜலம் கழித்தல்) தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்)  அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்துக்கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்)  அவர்கள் இஃதிகாப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். அறிவிப்பவர்: சபிய்யா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

மனைவி பள்ளிக்கு வந்து இஃதிகாப் இருக்கும் கணவருடன் பேசலாம் என்பதை இதிலிருந்து அறியலாம். அவர்களின் பள்ளிவாசலுக்குள் புகுந்து செல்லும் விதமாக பள்ளியை ஒட்டி அமைந்திருந்தது. பள்ளியை விட்டு வெளியே சென்று வீட்டில் விட்டு வந்தார்கள் என்று அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது.

இஃதிகாப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும், ஜனாசாவில் பங்கெடுக்காமலிருப்பதும், மனைவியைத் தீண்டாமலும், அணைக்காமலிருப்பதும், அவசியத்தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபி (ஸல்)வழியாகும். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல் அபூதாவூத்

இவற்றையெல்லாம் பேணி இஃதிகாப் இருக்கவேண்டும்.

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நோன்பின் அவசியம்

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)

நோன்பின் நோக்கம்

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ

நோன்பின் சிறப்பு

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ‘நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறு மணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ

சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ

காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது

அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா

நோன்பு நோற்க கடமைபட்டவர்கள்,
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்

எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (அல்குர்ஆன் 2:185)

பயணம் மேற்கொண்டதும் அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார்.

பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுடன் கப்பலில் ஏறினேன். அவர்கள் புறப்படலானார்கள். பிறகு காலை உணவைக் கொண்டு வரச் செய்து ‘அருகில் வாரும்’ என்றார்கள். அபோது நான் நீங்கள் ஊருக்குள்ளே தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களின் சுன்னத்தை (வழிமுறையை) நீர் புறக்கணிக்க போகிறீரா என்று திருப்பிக் கேட்டார்கள் என உபைத் பின் ஜப்ர் என்பார் அறிவிக்கிறார்கள். நூல்கள்:அஹமது, அபூதாவூத்

மக்கா  மாநகரம்  வெற்றிக்  கொள்ளப்பட்ட  ஆண்டு  ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம்  என்ற டத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு ருந்தனர்.  பின்னர்  நபி صلى الله عليه وسلم அவர்கள்  ஒரு  கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர் அதனைப்  பருகினார். தன்    பின் மக்களில்  சிலர்   நோன்போடு ருப்பதாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு  நபி صلى الله عليه وسلمவர்கள்  “அத்தகையோர்  பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர். (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், திர்மிதீ)

“இதன் பிறகு நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் பிரயாணத்தில் நோன்பு நோற்றிருக்கிறோம்” என்று அபூஸயீத் அல் குத்ரீُ அறிவிக்கும் ஹதீஸ் நூல்கள்: முஸ்லிம், அஹமது, அபூதாவூத்

மக்கா வெற்றிக்கு பின்னர் மேற்கொண்ட பிரயாணத்தில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நோன்பு நோற்றதாக அபூஸயீத் அல் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ குறிப்பிடுவதால் பிரயாணத்தில் நோன்பு வைக்கத் தடையில்லை என்பதையும் பிரயாணத்திற்குரிய சலுகையே இது என்பதையும் அறியலாம்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள்

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்

கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் சலுகையளித்தனர். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், நஸயீ, அஹமது, இப்னுமாஜ்ஜா

சலுகை என்பது ரமளானில் விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நோயாளிகள், முதியவர்கள்

நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும் நோன்பை விட்டுவிட சலுகை வழங்கப்பட்டுள்ளர். முதியவர்களும் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளனர். நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறும்போது, இது மாற்றப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி

நோன்பின் நேரம்

சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும்.

ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (2:187)

ஸஹர் உணவு

நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள், ஏனெனில் ஸஹர் உணவில் நிச்சயமாக பரகத் உள்ளது என்பது நபிமொழி. அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பிறகு (சுப்ஹு) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறினார்கள். (ஸஹர் முடித்து சுப்ஹு வரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதீ

(ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓத பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது.)

ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்

மக்கள்  உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் மக்களுக்கு இது பற்றி அறிவிப்புச் செய்து விழிக்கச் செய்வது நபி வழியாகும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் பிலால் رَضِيَ اللَّهُ عَنْهُ, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தும் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ரு நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கான அழைப்பாகும்.

பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!. ஆயிஷா வழியாகவும், இப்னு உமர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

பாங்கு மூலம் மக்களை விழித்தெழச் செய்யும் இந்த சுன்னத் இன்று நடமுறையில் இல்லை. முஸ்லிம்கள் இந்த சுன்னத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

விடி ஸஹர்

விடி ஷஹர் என்ற பெயரில் சிலர் உறங்கிவிட்டு சுப்ஹு நேரம் வந்ததும் விழித்ததும் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு நோன்பு நோற்கிறார்கள். இது நோன்பாகாது. இந்தப் பழக்கம் தவறானதாகும். ஏனெனில் பஜ்ரு நேரம் வந்து விட்டால் எதையுமே சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் கட்டளை உள்ளது. எனவே தாமதமாக விழிப்பவர்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் நோன்பைத் தொடர வேண்டும்.

பசி முன்னிற்கும்போது

உங்களில் ஒருவர் உணவில் இருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டாலும் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்கு விரையவேண்டாம். என்பது நபிமொழி அறிவிப்பவர்: இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

மலஜலத்தை அடக்கிய நிலையிலும் உணவு முன்னே இருக்கும்போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்

மறதியாக உண்பதும், பருகுவதும்

ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான். நபிமொழி அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா

வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்

வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு ஈடாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

ஒரு மனிதர் صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார். என்ன அழிந்து விட்டீர்? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம் கேட்டார்கள். “ரமலானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று அவர் கூறினார். ஒரு அடிமையை விடுதலை செய்ய இயலுமா? என்று அவரிடம்  நபி صلى الله عليه وسلم கேட்டார்கள். அவர் ‘இயலாது’ என்றார். அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று கேட்டார்கள். அவர் இயலாது என்றார். அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கும் இயலாது என்றார்.

பின்னர் அவர் (அங்கேயே) அமர்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் பேரிச்சம் பழம் நிரம்பிய சாக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை அவரிடம் வழங்கி ‘இதை தர்மம் செய்வீராக’ என்றனர். அதற்கவர் “எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவுக்குள் எங்களைவிட ஏழைகள் எவருமில்லையே” என்றார். அதை கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரித்தார்கள். நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா  நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா

குளிப்பு கடமையானவர் நோன்பு நோற்பது

நபி صلى الله عليه وسلم அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டு குளிக்காமலே நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காக குளிப்பார்கள்; என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.

நபி صلى الله عليه وسلم அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹூ நேரத்தை அடைவார்கள். ரமழானில் நோன்பு நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ, உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நோன்பாளி குளிக்கலாம், பல் துலக்கலாம்

நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அமீர் பின் ரபிஆ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

இரத்தம் குத்தி எடுத்தல்

ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி صلى الله عليه وسلم அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதை அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: தாரகுத்னீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னாளி  நூல்கள்: புகாரி

மருத்துவ போன்ற காரனங்களுக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நோன்பு துறத்தல்

நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும்வரை மக்கள் நன்மையைச் செய்பவர்களாகிறார்கள் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும்போது பேரித்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும்! ஏனெனில் தண்ணீர் தூய்மைப்படுத்தக் கூடியதாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னத் அஹ்மத்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

நோன்பாளி செய்யக் கூடாதவை
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல்  பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி”  என்று  கூறி விடவும். நபி (ஸல்)  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.  (அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு  நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்  கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்  பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.  நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்  வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ  செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான்.  நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர்  உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

நோன்பு திறக்கின்ற போது துஆ

Filed under: ISLAM — islamthalam @ 12.24