இஸ்லாம்தளம்

செப்ரெம்பர்14, 2009

ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24
ஹதீஸ் தெளிவுரை: எம். ஏ. ஹபீழ் ஸலபி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை

‘யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூ-தாவூத்).

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமழான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீள வேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.

எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு நம்மீது கடமையாக்கப்பட்டதோ, இந்த உன்னத இலட்சியத்தை மறந்து விடுகிறோம். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள் என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் எத்தகைய நன்மையும் கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமோ, அவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினூடாக மனிதனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

ஒரு முஃமின் தனது வாழ்வின் ஒவ்வொரு கனப் பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும் என்பதையே மேற்குறிப்பிட்ட நபிமொழி நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் ரமழான் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நோன்பைப் பாழ் படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக் கொண்டே தாங்கள் நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல ரமழான் மாதங்கள் நம்மைக் கடந்து சென்றாலும் நம்மில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. எப்போது அல்லாஹ் அருளிய வேதம் அல்-குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியும் புறக்கணிக்கப்படுகின்றதோ, அப்போது நாம் பெறும் பேறுகள் வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கும். எனவே நபி(ஸல்) அவர்களிள் எச்சரிக்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து நம்முடைய நல் அமல்களை நாம் பாழ்விடுத்தி விடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். சிறிய அளவே அமல் செய்தாலும், செய்த அந்த அமல் இறையச்சத்துடன் அமைந்து விடுமானால் இறைவன் பூரண திருப்தி அடைவான்.

இறை திருப்தியை மட்டும் நாடி மட்டும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்க வழிபாட்டை, அற்பமான தீய நடிவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்:

‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்’ (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா – 183 வது வசனம்).

இவ்வசனத்தின் மூலம் நோன்பு எதற்காக என்பதை வல்ல அல்லாஹ் தெளிவாகக் சுட்டிக் காட்டுகிறான். எனவே நோன்பு நோற்பதால் சிறந்த இறையச்சம் ஏற்பட வேண்டும்.

நோன்பு நோற்றிருக்கும் வேளையில் நமது வீட்டிலிருக்கும் உணவை இறையச்சத்தின் காரணமாக உண்ணாமல் தவிர்த்து விடுகிறோம். நாம் தனியே இருக்கும் போது யாரும் பார்ப்பதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் தனியே இருக்கும் வேளையில் யாரும் பார்க்கமாட்டார்கள் என்றாலும், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு கனமும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற நம்பிக்கை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட காரணத்தால் நாம் நோன்புடைய வேளைகளில் சாப்பிடுவதில்லை.

இதேபோல் ரமழான் அல்லாத காலங்களிலும் வல்ல அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும். ரமழானில் விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய முயலும்போது, இறைவனுக்குப் பயந்து அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதையே நாம் தவிர்ந்து கொண்டதை சிந்திக்க வேண்டும். நம்மிடம் ஹலாலான உணவு இருந்தும், நோன்புடைய காலங்களில் நாம் உண்ணுவதில்லை. கட்டிய மனைவி இருந்தும் நோன்புடைய பகல் வேளைகளில் மனைவியைத் தீண்டுவதில்லை. இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப் பட்டதற்கான காரணம். இந்த ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிதான் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள். ‘பசித்திருப்பதல்ல நோன்பின் நோக்கம்’ என்பதை ஆழமாக விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி எத்தகைய மாற்றங்களை நம்மிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

-: பொய் பேசாமை :-

பொய் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது.

ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்; ”என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.” (அத்தியாயம் 40 ஸூரத்துல் முஃமின் – 28வது வசனம்)

‘..(நபியே!) நீர் கேளும் – மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ்; இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.’ (அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 144வது வசனத்தின் கடைசிப் பகுதி).

என அருள்மறை குர்ஆன் கூற, புனிதமிக்க ரமழானில்தான் பொய்களை அதிகமாகப் பேசுகின்றனர். மார்க்கம் என்ற பெயரால் புனைந்துரைத்து, சிறப்புக்கள் என சில ‘அமல்’களையும் அதற்கான கூலிகளையும் அள்ளி வீசுகின்றனர். இறை இல்லங்களில் அல்லாஹ்வின் வேதமும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூய்மையானப் போதனைகளும் பேசப்படுவதற்குப் பதிலாக போலிகளை உலவ விடுகின்றனர் நம்மில் பலர். இவர்கள் நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும், எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதில்லை.

‘உண்மையைக் கடைப்பிடியுங்கள். உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையே பேசி, அதிலேயே தொடர்ந்து இருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் அவன் உண்மையாளன் எனப் பதியப்படுகின்றான். பொய்யைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில், பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய்யுரைத்து அதில் மூழ்கியிருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்படுகின்றான்’ என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி), ஆதார நூல்: புகாரி, முஸ்லிம்).

பொய் பேசுகிறவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்பெறுவதுடன், அவன் செல்லுமிடம் நரகமாகவும் இருக்கும். இன்று நம்மவர்கள் மத்தியில் பொய் பேசுவது மலிந்துள்ளது. எவ்வளவோ பேர் மார்க்கத்தின் பெயரால்; எத்தனையோ பொய் சொல்கிறார்கள். நம்மில் அதிகமானவர்களிடம் பொய் சொல்வது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் உள்ளது. அதனால்தான் சர்வ சாதாரணமாக, சளைக்காமல் பொய் சொல்லும் கலையில் ஆற்றல் பெற்றுத் திகழ்கின்றார்கள். பொய் சொல்வதைப் பெரிய திறமையாகவும் கருதுகின்றார்கள். பொய் சொல்லாமல் இந்தக் காலத்தில் எப்படி வாழமுடியும் என்று முஸ்லிம்களே கேள்வி கேட்கும் நிலை! பொய் சொன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமும் முஸ்லிம்களிடம் எடுபட்டுப் போய்விட்டது.

‘எவனிடம் நான்கு விடயங்கள் இருக்கின்றனவோ, அவன் நயவஞ்சகனாவான். நான்கில் ஒன்றிருந்தாலும் நயவஞ்சகத்தின் ஒரு பகுதி உள்ளவனாவான். அதைவிடும் வரை நயவஞ்சகனாவான்.

1. பேசினால் பொய்யுரைப்பான்

2. வாக்களித்தால் மாறு செய்வான்

3. வழக்காடினால் அநீதியிழைப்பான்

4. உடன்படிக்கைச் செய்தால் அதை மீறுவான். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)

இன்று எமது வியாபாரம், கொடுக்கல், வாங்கல், குடும்ப விவகாரம், அண்டை அயலவர்கள் தொடர்பு என்று எல்லா அம்சங்களிலும் முஸ்லிம்களிடம் பொய் மிகைத்து நிற்கிறது. எனவே இந்த நோன்பின் மூலம் பயிற்சி பெற்று, பொய் சொல்வதிலிருந்து எம்மைத் தடுத்துக் கொள்ளவில்லையானால் நாம் நோன்பு நோற்கவில்லை. வெறும் பட்டினிதான் கிடந்துள்ளோம் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ரமழான் காலங்களில் மார்க்கம் அதன் சிறப்பு என்ற பெயரால் பொய் போசுவது கண்டிப்பாக நிறுத்தப்படவேண்டும். தமக்குத் தோன்றியதையெல்லாம் மார்க்கம் என்று பேசும் மடமை நிலை மாற வேண்டும். ‘கேள்விப்பட்டதையெல்லாம் ஒருவன் பேசுவது அவன் பொய்யன் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்’ (முஸ்லிம்).

மார்க்கம் என்ற பெயரில் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்படுவதும், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக மக்களுக்கு ஒலி-ஒளி பரப்பப்படுவதும் சிலருக்கு ஆதாரமாகிகிட்டது. மூன்று நாள், பத்து நாள், நாற்பது நாள் என்று ஊரை விட்டு அடுத்த ஊருக்குச் சென்று வந்தவர்களெல்லாம் தமது வாயில் வந்ததெல்லாம் மார்க்கம் என்று பேசி தூய்மையான இஸ்லாத்தை மலினப் படுத்துகிறார்கள். எங்கோ கேட்டதெல்லாம் மார்க்கம் என்று ஒரு சாரார் பேசும்போது மற்றொரு சாரார் பக்தி சிரத்தையோடு கேட்கின்றனர். இது ரமழான் காலங்களில் அதிகரித்து வருகிறது. நபி(ஸல்) அவர்களின் மீது இட்டுக் கட்டுவதும், பொய் கூறுவதும் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்வதற்குரிய கொடிய குற்றமாகும். மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி இவ்வாறு நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு இறை இல்ல நிர்வாகங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘மாபெரும் சதியாதெனில், மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும்’ (அஹ்மத்) எனவே நாவை அடக்குவது அவசியம். நாவினால் ஏற்படும் பெரிய தீமை பொய்யாகும். ஆகவே பொய்யுரைக்காது நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொய், வாழ்க்கையின் எந்தத் துறையிலும் நுழைந்துவிடாதவாறு இஸ்லாம் மிகக் கவனமாக வழி நடத்துகிறது.

பொய், பொய்சாட்சி, பொய் சத்தியம், பொய் வாதம், மார்க்கத்தின் பெயரால் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுதல் போன்ற தீய கொடூரங்களை, துரோகங்களைத் தவிர்ப்பதற்காக நோன்பு என்கிற ஆன்மீக பயிற்சிக் கூடத்தை இஸ்லாம் ஒருமாத காலம் ஏற்பாடு செய்து தந்துள்ளது. அடியான் பட்டினி கிடப்பதால் எஜமானனுக்கு எந்தவித நன்மையும் ஏற்பட்டு விடுவதில்லை. கடமையான நோன்பினை ஒரு மாத காலம் இறை நம்பிக்கையாளர்களிடம் நோற்கச் செய்துவிட்டு, அவர்கள் பொய் சொல்லாமல், பொய்யான, தீமையான நடவடிக்கைளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இந்தப் பண்புகளை தன் அடியார்களிடமிருந்து வெளிப்படுத்தவே நோன்பைக் கடமையாக்கியுள்ளான். ரமழானுக்குப் பின்னரும் இந்த நல்ல பண்புகள் தொடருமானால், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ இணக்கம், நம்பிக்கை, நல்லுறவு நிலவும்.

‘எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும், அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (புகாரி, முஸ்லிம்).

-: தீய நடவடிக்கையிலிருந்து ஒதுங்குதல் :-

நாம் நோற்கும் நோன்பு, நம்மைத் தீய நடவடிக்கையிலிருந்து தடுக்க வேண்டும். இது நம்மை நல்ல வழிகளில் செல்லத் தூண்ட வேண்டும். ரமழானிலும் நாம் நமது தீய செயல்களை மாற்றவில்லை என்றால், நமது ஈமானை நாம் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ‘இபாதத்’ செய்வதற்கும், மன அமைதி பெறுவதற்கும் நோன்பு ஓர் அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை நாம் பயன்படுத்தவில்லையெனில் நாம் துர்பாக்கியசாலிகள். குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்கள் அதிகமான தீமைகளில் ஈடுபடுகின்றனர். மற்றவர்களின் தூக்கத்திற்கு இடையூறாக நடந்து கொள்கின்றனர். இளைஞர்களின் பெற்றோர்கள் கூட இவர்களைக் கண்டிக்க முடியாத நிலை. அல்லது கண்டிக்கத் தவறுகின்றனர்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம், ”உண்மையான ஓட்டாண்டி (நஷ்டவாளி) யார் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்க, அதற்குத் தோழர்கள் யாரிடம் திர்ஹமோ, பொருட்களோ அற்ற வறுமை நிலை தோன்றுகின்றதோ அவரே ஓட்டாண்டியாவான்’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் சமூகத்தில் உண்மையான ஓட்டாண்டி யாரெனில், அவர் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளையும் அதிகமாக நிறைவேற்றியவராக மறுமையில் வருவார். அதே நேரம் அம்மனிதர் ஒருவரை ஏசியிருப்பார். இன்னொருவரைப் பற்றி அவதூறு கூறியிருப்பார். வேறொருவரின் சொத்துக்களை (அநியாயமான முறையில்) சாப்பிட்டிருப்பார். அடுத்தவரின் இரத்தத்தை (நியாயமற்ற முறையில்) ஓட்டியிருப்பார். மற்றொருவரை அடித்திருப்பார். (இவ்வாறான நிலையில், இவரால்) குறித்த அநியாயத்திற்குட் படுத்தப்பட்டவர்கள் தமது முறையீடுகளை (அல்லாஹ்விடம்) தெரிவித்து விண்ணப்பிப்பர். அவ்வேளை அவர்களின் மத்தியில் இவரது (இபாதத் மூலம் கிடைத்த) நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும். குறித்த அநியாயக்காரன் பற்றிய (குற்ற) முறையீடுகள் முடிவடையும் முன்னர் அவரது நன்மைகள் முடிவடைந்துவிடும். எனவே முறைப்பாடு செய்பவர்களின் தீமைகளிலிருந்து எடுத்து, இவன் மீது சுமத்தப்படும். பின்னர் நரகில் எறியப்படுவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: முஸ்லிம்).

ரமழான் இறையச்சத்தையும், இபாதத்களையும் நம்மிடம் அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாம் நஷ்டவாழிகள். ரமழானில்தான் முஸ்லிம்கள் மத்தியில் சண்டையும், சச்சரவும் அதிகமாக ஏற்படுகிறது. சமூகம் பிளவுண்டு சின்னா பின்னமாகிறது. அதுவும் மார்க்கம் அல்லாததை மார்க்கம் என்று கருதி பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. வீண் வம்பு கூடாது என்ற மார்க்கத்தில் அதுவும் மார்க்கம் என்ற பெயரால், மற்ற முஸ்லிம்களின் இரத்தத்தைக் கூட ஓட்டத் துணியும் அயோக்கியத்தனம் மாற வேண்டும். இறை இல்லங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அங்கு தூய முறையில் வணங்கவும், வழிபடவும் முஃமீன்களுக்கு உரிமையுண்டு. அதைத் தடுக்க இவ்வுலகில் யாருக்கும் உரிமையில்லை. சுதந்திரமாக வழிபட எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆகவே பள்ளியில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும்போதுதான் பிரச்னைகள் எழுகின்றன. எல்லோருக்கும் சம உரிமை உண்டு. மக்கள் உண்மைக்குத் தலைவணங்கும் காலம் கனிந்து வருகிறது. எனவே, தவறான சிந்தனையில் மூழ்கியிருப்பவர்கள் இந்த ரமழானிலாவது தமது நிலையை மாற்றிக்கொள்ள முனைவதோடு தவறான அணுகுமுறைகளை விட்டு அறிவு வழியில் அமைதியான விடயங்களைக் கருத்தாடலுக்கு வழிவகுக்க உடன்பட வேண்டும்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள் தனமாக நடந்து கொண்டால், நான் நோன்பாளி என்று கூறட்டும்’ என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி, திர்மிதி).

நம்முடன் யாரேனும் சண்டைக்கு வந்தால், அல்லது திட்டினால் பொறுமை செய்வது அவசியமாகும். ரமழானில் நோன்பு நோற்று பயிற்சி பெற்றவர்கள், நோன்பை நிறைவு செய்தவுடன் பெருநாள் அன்று இஸ்லாம் ஹராமாக்கிய காரியங்களில் (அதாவது திரைப்படங்களை பார்ப்பது, மது அருந்துவது, இன்னும் பல கேலிக் கூத்துக்களில் ஈடுபடுவது) ஈடுபடவும் செய்வார்கள் என்றால், இவர்கள் வீணாக பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமேத் தவிர, இவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. ரமழானுக்கு முன்னர் எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில்தான் இனியும் இருக்கப் போகிறார்கள் என்றால் புனித ரமழானால் எந்தவித பயனையும் பெறவில்லை என்பதுதான் இதன் பொருள்.

அதேபோல் நம் சமுதாயத்தின் இளம்யுவதிகள் அரட்டை அடிப்பதிலும், புறம்பேசுவதிலும், கோள் சொல்வதிலும், ‘சூரியன்’ ‘வெற்றி’ ‘சக்தி’ ‘தென்றல்’ போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒலி-ஒளி பரப்பப்படும் மெகாத்தொடர்கள் முதல் கெகாத் தொடர்கள்வரை பார்ப்பதில் தங்கள் நேரத்தை வீணடிப்பதிலும் கழிப்பார்கள் என்றால் அவர்கள் நோற்ற நோன்பால் எந்தவித பயனும் கிடைக்கப் போவதில்லை. இன்று நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி, இலஞ்சம், ஊழல், போன்ற தீய செயல்களில் ஈடுபடுவது பொய், புறம், பேசுவது ஆகிய காரியங்களில் சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறு ஈடுபடுவர்கள் தாம் பசியோடு இருப்பது மட்டும்தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகிறார்களா?

-: அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் :-

ஹதீஸின் இறுதிப்பகுதி அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்று கூறி நிறைவடைகிறது. பல ஹதீஸ்களும், ஹதீஸ் குத்ஸியும் அல்லாஹ் மனிதர்களிடமும், ஏனையவற்றிடமும் தேவையற்றவன் என்று பிரகடனப்படுத்துகின்றன. நாம் நோன்பு நோற்பதால் அல்லாஹ்வின் மாட்சிமையில் எதுவும் கூடிவிடுவதுமில்லை: நாம் நோன்பு நோற்காததால் அவனது ஆட்சி அதிகாரத்தில் எதுவும் குறைவதுமில்லை.

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.’ (அத்தியாயம் 112- ஸூரத்துல் இக்லாஸ் – 2வது வசனம்).

நாம் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, வழிப்பட்டு நடப்பது நமது நலனுக்குத்தான். உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்விடம் தமது தேவையை வேண்டி, அவன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கினாலும், அவனது அருளில் ஒரு ஊசிமுனையளவு கூட குறைந்து விடாது. அதேபோல் அனைவரும் ஈமான் கொண்டு பயபக்தியுடன் வணங்கினாலும் அவனுக்கு எதுவும் கூடப்போவதுமில்லை. எனவே தூய்மையான எண்ணமில்லாத, வணக்கவழிபாடுகளில் எத்தகைய பயனும் இல்லை. முழுமையாக அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று வழிபட்டு நடந்து மறுமையில் அல்லாஹ் வழங்கக் காத்திருக்கும் சுவர்க்கத்திற்கு உரியவர்களாக நாம் மாற முனைய வேண்டும்.

குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் தமது காலத்தையும், நேரத்தையும் வீணடித்துவிடாது இந்த ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள முஃமீனாக வாழ்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த விதத்தில் நிலைநாட்ட வேண்டும்.

எனவே நோன்பு நம்மிடம் எதிர்பார்க்கும் இலட்சியத்தை அடைந்து கொள்ள ஆவண செய்வோமாக!

‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்’ (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா – 183 வது வசனம்).

புனிதமிகு ரமழான் நம்மிடம் இறையச்சத்தை வேண்டி நிற்கிறது. அடுத்த ரமழானை நாம் அடைவோமா இல்லையா என்பதை யாரும் அறியோம். இந்த ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்தி, நல்லமல்கள் செய்து நல்லவர்களாக வாழ பயிற்சி பெறுவோமாக..!

நோன்பு கேள்வி – பதில்கள்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

கேள்வி: மன திருப்திக்காக நோன்பு நீய்யத்தை தமிழில் சொல்லிக் கொள்ளலாமா..?  ஒளு செய்து விட்டு மனைவியை முத்தமிட்டால் ஒளு முறியுமா..? ஷரீஃப்.

விளக்கம்: ஹஜ்-உம்ராவிற்கு தவிர மற்ற அமல்களுக்கு நிய்யத் சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்ற எந்த விதியும் மார்க்கத்தில் இல்லை. நிய்யத் என்றால் என்னவென்று விளங்காததால்தான் நாம் நியத்தை வாயால் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.எனவே முதலில் அதை விளங்குவோம்.

இன்னமல் அஃமாலு பின்னிய்யத்’| என்பது நபிமொழி.(புகாரி)

எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும்-என்பது இதன் பொருள். நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் நம் எண்ணத்தில் உதிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால்தான் நாம் தண்ணீர் குடிப்போம் இதுதான் நிய்யத் ‘நான் இப்போது தண்ணீர் குடிக்கப்போகிறேன்’ என்று யாரும் வாயால் சொல்லி விட்டு தண்ணீர் குடிப்பதில்லை.

குடிப்பது-நடப்பது-தூங்குவது-பார்ப்பது-என்று நமது ஒவ்வொரு செயலும் நிய்யத் அடிப்படையிலேயே அமைகின்றன. வணக்க வழிபாடுகளுக்கான நிய்யத்தின் நிலையும் இதுதான்.

தொழவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் ஒளுசெய்ய முடியும் தொழுகைக்கு தயாராக முடியும். இப்படி தயாரான பிறகு மீண்டும் நிய்யத் செய்கிறேன் என்பது அறிவுக்குப் பொருந்தாத மார்க்கத்தில் இல்லாத காரியமாகும். நிய்யத் செய்கிறேன் என்று அரபியிலோ தமிழிலோ சில வார்த்தைகளை கூறுவது நபி வழிக்கு மாற்றமான கட்டாயம் விட்டுத் தொலைக்க வேண்டிய செயலாகும்.

மன திருப்திக்காக செய்யலாமா..? என்பதுதான் ஷைத்தானுக்கு இடம் கொடுக்கும் வாதமாகும். தெளிவான ஒரு காரியத்திற்கு எதிராக மன ஊசலாட்டங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

நோன்பை பொருத்தவரை பஜ்ருக்கு முன்னால் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட வேண்டும் என்று ஹதீஸ் வந்துள்ளது(திர்மிதி) எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் அமல் அவ்வளவுதான்.

ஒளுவிற்கு பிறகு மனைவியை தொட்டாலோ முத்தமிட்டாலோ ஒளு போகாது ஏனெனில் தொழுகையின் போது நபி அவர்கள் தம் மனைவி ஆயிஷா ரலி அவர்களை தொட்ட விபரமும் அதே போல் ஆய்ஷா அவர்கள் தம் கணவர் நபி அவர்களை தொட்ட விபரமும் புகாரி உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.


கேள்வி: சஹர்வுடைய நேரம் முடிந்த பிறகு நாம் தண்ணீர் குடிக்கலாமா? பவுஜியா,பரங்கிப்பேட்டை.

சஹர் முடியும் நேரம் என்று ஒரு சிலரால் குறிப்பிட்ட நேரம் வரையறுக்கப்பட்டு அந்த நேரங்களையே ஒருசில ஜவுளிக்கடைகள் விளம்பர அட்டைகளில் பிரசுரித்துக் கொடுக்கிறார்கள். உண்மையிலேயே சஹர் முடியும் நேரத்திற்கும், இவர்கள் தொழுது கொண்ட நேரங்களுக்கும் மிகுந்த வேறுபாடுண்டு.

சுபுஹு தொழுகைக்கு பாங்கு சொல்லி முடியும்வரை சஹர் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு. சுபுஹு தொழுகைக்காக உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை சஹர் உணவை உண்ண நபி (ஸல்) ஏவியுள்ளார்கள். உம்மி மக்தூம் (ரலி) (சுபுஹுக்காக) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்பது நபி மொழி . அறிவிப்பாளர்:ஆய்ஷா(ரலி), (புகாரி,முஸ்லிம்,நஸயி)

நாங்கள் ஸஹர் செய்து விட்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுகைக்கு கிளம்புவோம் என்று ஜைத் பின் தாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிவதற்கும்,தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம் எவ்வளவு என்று கேட்டேன் அதற்கு ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஸஹர் முடிந்து தொழுகை ஆரம்பமாக ஏறத்தாழ பத்து நிமிடங்களே இடைவெளி இருந்தன. நபியுடைய இந்த வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமாக இன்றைய நடைமுறையுள்ளது. ஸஹர் முடிந்து விட்டது என்ற அறிவிப்புக்குப்பின் 20,25 நிமிடங்கள் கழித்தே பாங்கு சொல்லப்படுகிறது, அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து இகாமத் சொல்லப்படுகிறது. ஆக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு முன்பே ஸஹரை முடித்து கொள்ள வேண்டும்! என்று போலியான சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். இந்த சட்டங்களை அலட்சியப் படுத்தி விட்டு பாங்கு சொல்லும் வரை உண்ணுவோம், பருகுவோம்.


கேள்வி: பெண்கள் நோன்பு வைத்துக் கொண்டு குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா? தெரியாமல் கொடுத்தால் அதற்கு பரிகாரம் உண்டா? ஷரீஃப்

விளக்கம்: கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும். (மேலதிக விளக்கம் ‘நோன்பு சட்டங்கள், சலுகைகள், பரிகாரம்’ என்றக் கட்டுரையில்)

எனவே நோன்பு நோற்பதால் உடல் நலத்திற்கு பிரச்சனை இல்லையெனில் நோன்பு நோற்று குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாம்.


கேள்வி: ரமளானின் இரவு நேரங்களில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டு குளிக்காமல் ஸஹர் செய்யலாமா..? இரவு நேரத்தில் குளிப்பதற்கு கஷ்டப்படுவதால் பலர் மனைவியுடன் சேருவதில்லை. குளிக்க வேண்டும் – குளிக்கத் தேவையில்லை என்று இரு கருத்து நிலவுகிறது. எனவே இது சம்பந்தமான தெளிவு வேண்டும். அபுதாபியிலிருந்து சகோ:அப்துர்ரஹ்மான்.

விளக்கம்: மனைவியுடன் சேர்ந்தோ அல்லது தூக்கத்தில் விந்து வெளிபட்டாலோ குளிப்பு கடமையாகிறது. இந்த குளிப்புக்கடமை என்ற சட்டம் தொழுகைக்குறியதாகும். நோன்பிற்கோ இதர நல்ல காரியங்களுக்கோ குளிப்புக் கடமையானவர் குளிக்கவேண்டும் என்று இஸ்லாம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு தயாரானால் ..(ஒளு செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை இறைவன் இங்கு விளக்குகிறான்..அதை தொடர்ந்து..) நீங்கள் குளிப்புக் கடமையானவராக இருந்தால் குளித்து சுத்தமாகிக் கொள்ளுங்கள்..என்கிறான்'(பார்க்க,குர்ஆன்:5,6)

எனவே ரமளானில் மனைவியுடன் கூடி குளிப்புக் கடமையானால் அவரோ அவர் மனைவியோ ஸஹருக்கு முன் குளிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

இறை நம்பிக்கையாளர்களே! நோன்பின் இரவுகளில் உங்கள் மனைவியுடன் நீங்கள் உடலுறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது……………..எனவே (விரும்பினால்) நீங்கள் அவர்களோடு உறவுக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதை தேடிக் கொள்ளுங்கள்……… இன்னும் பஜ்ர் வரை உண்ணுங்கள் பருகுங்கள்.’|(பார்க்க குர்ஆன்:2:187)

இந்த வசனத்தில் உறவு கொள்வது-உண்ணுவது-பருகுவது எல்லாம் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று அனுமதியளிக்கிறான் இறைவன். சிலர் சொல்வதுப் போல் உறவுக்குப் பின் குளித்து விட்டுதான் ஸஹர் செய்ய வேண்டும் என்பது சட்டம் என்றால் மூன்று காரியங்களும் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று இறைவன் கூறமாட்டான். இந்த வசனத்iதை ஆழமாக சிந்தித்தால் குளிப்புக் கடமையான நிலையிலேயே ஸஹர் செய்யலாம் நோன்பை தொடரலாம் என்பதை விளங்கலாம்.

ஸஹருக்கு அடுத்து பஜ்ர் தொழுகை இருப்பதால் – தொழுகைக்கு குளிப்பு அவசியம் என்பதால்- கட்டாயம் குளிக்க வேண்டும். இது தொழுகைக்கான குளிப்புத்தானே தவிர நோன்புக்குறியதல்ல என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.

நபி-ஸல்-அவர்களும் குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்து நோன்பை தொடர்ந்துள்ளார்கள். இதற்குரிய ஆதாரம் புகாரி-முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.


கேள்வி: வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க தடை உண்டா?. ஆம் எனில் பிறகு எந்த நாட்களில் வைக்க வேண்டும்? ஷஃபிகுர் ரஹ்மான்.

வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க ஹதீஸ்களில் தடை இருப்பது உண்மைதான்.

நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘நேற்று நோன்பு வைத்தாயா? என்றார்கள். ‘இல்லை’ என்றேன். ‘நாளை நோன்பு வைக்கப்போகிறாயா?. என்றார்கள். ‘இல்லை’ என்றேன். ‘அப்படியானால் நோன்பை முறித்துவிடு’ என்றார்கள். நான் நோன்பை முறித்து விட்டேன் என ஜூவைரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அலி(ரலி), ஜாபிர்(ரலி), ஜூனாதா(ரலி), அனஸ்(ரலி), அபூஹூரைரா(ரலி) ஆகிய நபித்தோழர்கள் மூலமாகவும் ‘வெள்ளிக் கிழமைகளில் நோன்பு தடைசெய்யப்பட்ட செய்தி வந்துள்ளது. (புஹாரியில் உள்ள ஹதீஸ் எண்: 1984, 1986, 1986, – திர்மிதி – 740)

வெள்ளிக்கிழமையை எப்படி சிறப்பிக்க வேண்டுமோ, அப்படி சிறப்பித்து விட்டான். அந்த சிறப்பின் காரணமாக அன்றைய தினம் நோன்பு வைத்தால் நன்மை அதிகம் என்ற நாமாக அதை தனிமைப் படுத்தக் கூடாது என்பதால் இந்த தடை வந்திருக்கலாம். வியாழன் – வெள்ளி, அல்லது வெள்ளி – சனி, என இரண்டு நாட்கள் சேர்ந்தார்போல் நோன்பு வைக்க ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு.

ஒவ்வொரு மாதமும் 13,14,15 ஆகிய பிறை நாட்களில் நோன்பு வைப்பதற்கும், வார நாட்களில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பதற்கும் புஹாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய ஹதீஸ் நூல்களில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.


கேள்வி – நோன்பு காலத்தில் இரவில் மனைவியுடன் உடல் உறவு கொண்டு விட்டு ஒலு செய்து விட்டு துங்கி விட்டோம் எழுந்திருக்கும்போது பாங்கு சொல்லி விட்டார்கள் பிறகு எழுந்திருத்து குளித்து விட்டு நிய்யத் செய்ய நாடினேன் ஆனால் பிரயாணத்தில் வந்து விட்டு அன்று மாலை திரும்புவதால் பிரயாணக்களைப்பில் இருப்பீர்கள் ஆகையால் களா செய்து கொள்ளாலாம் என்று என் மனைவி சொல்ல களைப்பின் காரணமாக அந்த நோன்பை களா செய்து ஆறு நோன்பில் வைத்தேன் சரியா விபரம் தேவை. மெய்தீன் – யாஹூ மெயில் வழியாக

பிரயாணிகளும் நோயாளிகளும் நோன்பை களா செய்யலாம் என்று அனுமதியுள்ளது. (பார்க்க அல் குர்ஆன் 2:184,185) ஒருவர் உள்ளுர் திரும்பிய பிறகு அவர் பிரயாணியாக கருதப்பட மாட்டார் எனவே பிரயாணிக்குரிய சலுகை இவருக்குப் பொருந்தாது. நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் போது உங்கள் மனைவி பிரயாண களைப்பை காரணம் காட்டி இருக்க வேண்டிய அவசியமில்லை. நோன்பு வைக்க முடியாத அளவிற்கு உங்கள் உடம்பு களைப்படைந்திருந்தால் இறைவன் அதை மிக்க அறிந்தவனாக இருப்பதால் கவலைப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. பிறகு களா செய்தது சரிதான். பாங்கு சொன்ன பிறகு குளித்து விட்டு நிய்யத் செய்ய நாடியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

குளிப்பு கடமையான நிலையிலேயே நோன்பிற்குரிய நிய்யத்தை மனதில் எண்ணிக் கொள்ளலாம் எந்த பிரச்சனையும் இல்லை. குளிப்பு கடமையானவர்கள் நோன்பு நோற்கக் கூடாது நிய்யத் செய்யக் கூடாது என்று எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை. நபி(ஸல்) குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்றுள்ளார்கள். (புகாரி 1931,1932)

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடமையான நோன்பிற்குரிய நிய்யத்தை நாம் நினைத்த நேரமெல்லாம் எண்ணிக் கொள்ள முடியாது. பஜ்ருக்கு முன்பே அந்த எண்ணம் நம்மிடம் வந்து விட வேண்டும்.

எவர் பஜ்ருக்கு முன்பு நோன்பு நோற்க முடிவு செய்யவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை என்பது நபிமொழி (ஹப்ஸா(ரலி) திர்மிதி 662)

எனவே மனைவியுடன் குடும்ப வாழ்வில் இணைபவர்களாக இருந்தாலும் ‘காலையில் எழ முடியாவிட்டாலும் நோன்பை தொடர வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருந்து விட்டால் அவர்கள் நோன்பைத் தொடரலாம். எழுந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்து விட்டு பஜ்ருக்கு பிறகு எழுந்து நோன்பு நோற்க எண்ணினால் அது அன்றைய தினத்திற்குறிய நோன்பில் சேராது. பின்னர் அதை களா செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும்.


கேள்வி – நோன்பு காலங்களில் குர்ஆன் ஓதுவதை கட்டாயம் செய்ய வேண்டுமா… குர்ஆன் ஒதத் தெரியாதவர்களின் நிலை என்ன விளக்கவும். இப்ராஹீம் – ஹாட் மெயில் வழியாக.

நோன்பு காலங்களில் மட்டுமல்ல முஸ்லிம்கள் எந்த நேரத்திலும் குர்ஆனுடன் தொடர்பு உள்ளவர்களாகவே இருக்க வேண்டும். குர்ஆன் இறங்கியதால் தான் ரமளான் என்ற ஒரு மாதமும் அதில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவும் மிக சிறப்புப் பெற்றுள்ளது. எதன் வெளிப்பாட்டால் ரமளான் சிறப்புப் பெற்றதோ அந்த குர்ஆனுடன் நாம் அதிகமாக ஐக்கியமாவதின் மூலம் தான் ரமளானை சிறப்பிக்க முடியும். குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் என்றெல்லாம் தட்டிக் கழிப்பது அறிவுடமையல்ல. முயற்சி செய்தால் கண்டிப்பாக குர்ஆன் ஓத முடியும். உண்மையிலேயே ஓத முடியாவிட்டாலும் முயற்சி செய்தால் அந்த முயற்சிக்கு இறைவன் கூலி கொடுப்பான்.


கேள்வி – நோன்பாளிகள் நறுமணம் பூசிக் கொள்ளலாமா..சென்ட் ஸ்ப்ரே இவைகளைப் பயன் படுத்தலாமா.. குவைத்திலிருந்து யூசுப் – ஹாட்மெயில் வழியாக.

உண்ணுவது – பருகுவது – உடலுறவுக் கொள்வது போன்ற காரியங்களுக்கு மட்டுமே தடை வந்துள்ளது. அந்த முயற்சிகலோ – அது சார்ந்த முயற்சிகளிலோ ஈடுபடக் கூடாது. அதுவல்லாத செயல்களுக்குத் தடையில்லை. மணம் பூசிக் கொள்வது – பவுடர் போட்டுக் கொள்வது – எண்ணைய் தேய்த்துக் கொள்வது – விக்ஸ் – டைகர்பாம் – தைலம் போன்றவற்றை தேவைக்கு பயன்படத்துவது இவற்றிர்க்கெல்லாம் தடை எதுவுமில்லை.


கேள்வி : எனக்கு மாதவிடாய் சரியாக வருவதில்லை. சில சமயம் 15 – 20நாட்கள் நாட்கள் வரை வருகிறது. இந்நிலையில் நான் எப்படி ரமளான் நோன்பை நோற்க முடியும்? சகோதரி கதீஜா – எமிரட்ஸ் மெயிலில்.

உங்கள் கேள்வியில் தெளிவு இல்லை. சரியாக வருவதில்லை என்று கூறிவிட்டு 15 – 20 நாட்கள் நீடிக்கிறது என்றும் குறிப்பட்டுள்ளீர்கள். இது போன்ற பிரச்சனைகளுக்கு கேள்வி ஒழுங்காக கிடைத்தால்தான் சட்டங்களை தெளிவாக பெற முடியும். உங்களுக்கு இது நீண்ட காலபிரச்சனையா என்றும் தெரியவில்லை.

இப்படி ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு முன் மாதாமாதம் உங்களுக்கு 1 முதல் 6 நாட்கள் வரை மாதவிடாய் வந்துக் கொண்டிருந்தால் அதுதான் உங்களின் வழக்கமான மாதவிலக்கு நாட்களாகும். சிலருக்கு 3 நாட்கள், சிலருக்கு 5 நாட்கள் 7நாட்கள் மிக அபூர்வமாக சில பெண்களுக்கு 15 நாட்கள் வரைக்கூட மாதவிலக்கு வரும். நாட்கள் மாறாமல், கூடுதல் குறைவு இல்லாமல் ஒரு பெண்ணுக்கு இயல்பாக எத்துனை நாட்கள் மாதவிலக்கு வந்தாலும் அந்த பெண்ணை பொருத்தவரை அது மாத விலக்கு தான்.

உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி துவங்கும் மாதவிலக்கு மாத கடைசி வரை (அதாவது 10 நாட்கள்)நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாதமும் இதுதான் வழமையாக உள்ளது. நாட்கள் மாறுவதும் இல்லை, 10நாட்கள் என்பது 12 நாட்களாக கூடுவதோ 8 நாட்களாக குறைவதோ இல்லை என்றால் அந்த பெண்ணின் மாதவிலக்கு நாட்கள் 10 தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அந்த பெண்ணை பொருத்தவரை அது குறைப்பாடும் அல்ல. அந்த பத்து நாட்களில் அந்த பெண் தொழக் கூடாது – நோன்பு வைக்கக் கூடாது. நோன்பை பின்னர் வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு மாற்றமாக ஒழுங்கீனமாக இப்படியும் – அப்படியுமாக மாறி -மாறி மாதவிலக்கை உணரும் பெண்கள் அதை பரிசீலிக்கத்தான் வேண்டும்.

மாதந்தோரும் 3 நாட்களோ – 5 நாட்களோ மதவிலக்கு வரும் பெண்ணுக்கு திடீரென்று அதற்கு மேற்பட்ட நாட்களும் நீடிக்கிறது என்றால் வழமையாக வரும் நாட்களை மட்டும் தான் மாதவிலக்கு நாட்களாக அந்தப் பெண் கணக்கெடுக்க வேண்டும். மேற்கொண்டு நீடிக்கும் நாட்கள் மாதவிலக்கு நாட்களில் அடங்காது.

நரம்பு கோளாரின் காரணமாக தொடர்ச்சியான இரத்தப் போக்கு ஏற்படலாம். அப்படி ஏற்படும் இரத்தப் போக்கிற்கும் மாதவிடாய்க்கும் சம்பந்தமில்லை.

மாதவிடாய் என்பது ஒரு நோயல்ல ஆனால் உதிரப்போக்கு என்பது நரம்பு நோய். வெளியேறும் இரத்தத்தின் தன்மையை வைத்துக் கூட இதை தெரிந்துக் கொள்ள முடியும். கரு முட்டை சிதைவினால் ஏற்படும் மாதவிடாய் இரத்தம் கருத்த சிவப்பில் அடர்த்தியாக இருக்கும். முடியும் தருவாயில் மஞ்சல் நிறமாகி விடும். அதன் வாடையும் வேறுவிதமாக இருக்கும். நரம்பு பிரச்சனையால் ஏற்படும் இரத்தப் போக்கிற்கு இந்த தன்மை இருக்காது.

எனவே மாதவிலக்கு அல்லாத இரத்தப் போக்கை காணும் பெண்கள் நோன்பையோ தொழுகையையோ விட்டுவிட அனுமதி இல்லை.

இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இதுபற்றியெல்லாம் பெண்கள் கேட்டு தெளிவு பெற்றுள்ளனர்.

‘(மாதவிலக்கு அல்லாத நாட்களில் வெளிப்படும் மஞ்சல் நிற இரத்தத்தையும், மண் நிறத்து இரத்தத்தையும் நாங்கள் மாதவிலக்காக முடிவு பண்ண மாட்டோம்’ என்று நபித்தோழியான உம்மு அத்திய்யா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாடம் மாவிடாய், எண் 326)

மாதவிலக்கு – இரத்தப் போக்கு சட்டங்கள்.

எனக்கு அடிக்கடி கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதுபற்றி சட்டத்தை தெரிந்துக் கொள்ள நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். ‘இது ஒரு நரம்பு நோயாகும். ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிலக்கு நாளாக கருதிக் கொள். பின்னர் குளித்து 23 அல்லது 24 நாட்கள் தொழு, நோன்பும் வை இது உனக்கு போதுமானதாகி விடும். மற்றப் பெண்கள் மாதவிடாய் காலத்தை எப்படி கழிக்கிறார்களோ அது போன்று ஒவ்வொரு மாதமும் செய்துக் கொள்’ என்று நபி(ஸல்) கூறினார்கள். (ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) திர்மிதி 118, அபூதாவூத், அஹ்மத்)

தொடர் இரத்தப் போக்கு அல்லது நாட்கள் நீடித்துக் கொண்டு போகுதல் போன்ற அறிகுறித் தென்படுபவர்கள் இந்த செய்தி அடிப்படையில் தன் அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும்

வழக்கமான மாதவிலக்கு நாட்கள் போக மீதியுள்ள நாட்களில் கீழாடையை இறுக்கமாக்கிக் கொண்டு – இரத்தம் வெளிப்படும் நிலையிலேயே நோன்பை வைத்துவிட வேண்டியது தான். தொழுகைக்கும் இதுதான் சட்டம்.


கேள்வி – நோன்பு வைத்துக் கொண்டு ஆற்றிலி மூழ்கி குளிக்கலாமா… முஹம்மத் ஜஃப்ரி – யாஹூ மெயில் வழியாக.

ஆற்றிலி மூழ்கி குளிக்க தடையில்லை ஆனால் வாய் வழியாக தண்ணீர் உள்ளே சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


கேள்வி – வருடா வருடம் நோன்பில் கடைசி பத்து நாட்களில் ஊரார்களை அழைத்து இஃப்த்தார் பார்ட்டி என்று ஏழைகள் அல்லாதவர்களுக்கு கொடுக்கும் விருந்து அல்லாஹ்வுக்கு பிடித்தமான செயல்தானா? இதற்கு விளக்கம் தேவை. nizous@hotmail.com

மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய விருந்தாக இருக்கட்டும், நன்மையை எதிர்பார்த்துக் கொடுக்கக் கூடிய இது போன்ற விருந்தாகட்டும் எந்த விருந்திலும் ஏழைகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பது இஸ்லாம் சொல்லும் அறிவுரை. அவ்வாறு புறக்கணிக்கபட்டால் அது கெட்ட விருந்தாகவே முடியும் என்றும் நபிமொழி எச்சரிக்கிறது.

பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்துதான் விருந்துக்களிலேயே மிகக் கெட்டது என்பது நபிமொழி. (அபூஹூரைரா(ரலி) புகாரி1577)

விருந்துக்களில் பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு பணக்காரர்கள் என்றுமே ஏங்குவதில்லை. ஏனெனில் அவர்களிடம் பணம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய உணவை அவர்களால் உண்ண முடியும். ஏழைகளை பொருத்தவரை இது போன்ற உணவுகளுக்கு அவர்களின் உள்ளம் ஏங்கத்தான் செய்யும். திருமணம் உட்பட இது போன்ற விருந்துக் காலங்களில் தமக்கும் அழைப்பு வந்தால் சென்று கலந்துக் கொள்ளலாமே.. என்று அவர்களின் உள்ளம் வெளிப்படுத்தும் ஆசையில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களை புறக்கணித்து எதிர்ப்பார்ப்பே இல்லாதவர்களை அழைத்து விருந்து கொடுக்கும் நடை முறைதான் பரவலாக இருந்து வருகின்றது. இத்தகைய விருந்து பகட்டுக்காகவோ – பெருமைக்காகவோ வழங்கப்படும் விருந்தாகத்தான் இருக்க முடியும். வயிற்றுப்பசியுடன் இருக்கும் ஏழைப் புறக்கணிக்கப்பட்டு பசி என்றால் என்னவென்றே தெரியாதவர்களை அழைத்து விருந்தளிக்கும் போது அது கெட்ட விருந்தாகவே முடியும் என்ற நபியின் வார்த்தை எத்துனை அர்த்தம் வாய்ந்தது என்பதை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிகின்றது.

எனவே ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பகட்டுக்காக நடத்தப்படும் எந்த விருந்தும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருவதாக அமையவே அமையாது.


கேள்வி – என்பெயர் நாசர் நான் குவைத்தில் வசிக்கிறேன். என் கேள்வி நோன்பு வைத்துக் கெண்டு மருத்துவர் இடம் ஊசி போட்டு கொள்ளலாமா?. உடம்பில் அடிபட்டு விட்டால் காயத்துடன் மருந்தும் தையலும் போடலாமா?. n_007201 at yahoodotcodotin

உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் நோன்பை சிரமமாகக் கருதினால்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல் குர்ஆன் 2: 184 – 185)

இந்த வசனம் இரு சாராருக்கு சலுகையை முன் வைக்கிறது.

1) நோயாளிகள். 2) பிரயாணிகள்.

இவர்கள் நோயின் காரணமாகவோ – பிரயாணத்தின் காரணமாகவோ நோன்பை விட்டு விடலாம். பின்வரும் காலங்களில் அதை நோற்று பூர்த்தி செய்து விட வேண்டும்.

நோயாளி நோன்பை விட்டு விடலாம் என்பது எதை குறிக்கிறது?

பொதுவாக நோயாளி என்று இங்கு குறிப்பிடப்படுவதால் அனைத்து நோயையும் இது கட்டுப்படுத்தத்தான் செய்யும். இருப்பினும் நோய் என்றவுடன் நோன்பை விட்டு விடலாமா… என்று சிந்திக்கும் போது ஒரு அழுத்தம் இந்த வசனத்தில் இருப்பதை உணரலாம். அதாவது நோயாளி நோன்பை விட்டு விடலாம் என்பதிலிருந்து அவர் நோன்பு வைக்க முடியாத அளவிற்கு நோயாளியாக இருக்க வேண்டும் என்பது விளங்குகிறது.

தலைவலி என்பதும் – கண்வலி – கால் வலி போன்ற வலிகளும் நோய்தான் என்றாலும் இத்தகையோர் நோன்பு வைக்காமலிருக்கலாம் என்று முடிவு செய்வதில் எந்த நியாயமுமில்லை ஏனெனில் நோன்பால் இவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. இவர்கள் தலைவலிக்கு மருந்து தடவிக் கொண்டு – கண்வலிக்கு கண்களில் சொட்டு மருந்து இட்டுக் கொண்டு நோன்பைத் தொடலாம்.

காலில் அடிப்பட்டு ஒருவர் கட்டுப்போட்டுள்ளார் – ஒருவர் ஆணிக்கால் நோயால் அவதிப்படுகிறார் என்றால் இத்தகைய நோயுக்கும் நோன்பிற்கும் சம்பந்தமில்லை. இவர்கள் மருத்துவம் செய்து கொள்ளும் நிலையில் நோன்பைத் தொடலாம்.

ஒருவருக்கு அடிப்பட்டு காயம் ஏற்பட்டு விட்டது இதனால் அவருக்கு எத்தகைய இரத்த இழப்பும் (இதனால் அவருக்கு அதிகப்படியாக வெளியேறிக் கொண்டிருக்கவில்லை) ஏற்படவில்லை என்றால் அவர் தையல் போட்டுக் கொண்டு நோன்பைத் தொடரலாம். இரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தால் – இரத்தம் தேவைப்படும் நிலையில் அவர் இருந்தால் – ‘நான் நோன்பு வைத்துக் கொள்ளும் நிலையில் இரத்தம் ஏற்றிக் கொள்கிறேன்’ என்று சொல்லக் கூடாது. இவர் நோன்பு வைக்க முடியாத நோயாளியாகவே கருதப்படுவார். ஏனெனில் நோன்பாளி இரத்தம் குத்தி எடுப்பதை (இன்றைக்கு இதுதான் இரத்த தானம்) நபி(ஸல்) தடுத்துள்ளார்கள். நோன்பாளி பலவீனப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு தடுத்தார்கள் என்று நபித் தோழர் அறிவிக்கிறார்.

‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ”நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்து வந்தீர்களா?’ என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘இல்லை! ஆயினும், (நாங்கள் அதை வெறுத்தது) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி – 1940)

பலவீனப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் இரத்தம் கொடுக்கலாம் என்றாலும் ஏற்கனவே அடிப்பட்டு இரத்த இழப்பிற்கு ஆளானவர் பலவீனமற்றவராக இருப்பார் என்று கருத முடியாது. அவருக்கு இரத்தம் தேவைப்படும் நிலையிலிருந்தால் அவர் நோன்பு வைக்க முடியாத நோயாளியாகவே கருதப்படுவார். இரத்தம் ஏற்றப்பட்டு உடல் ஆரோக்ய நிலையைப் பெற்ற பின் தான் அவர் நோன்பு வைக்க வேண்டும்.

உண்ணக் கூடாது, பருகக் கூடாது, உடலுறவு கொள்ளக் கூடாது என்றத் தடையே வந்துள்ளது. இதிலிருந்து வாய் வழியாக வயிற்றை அடையும் எதுவும் நோன்பை முறித்து விடும் என்பதால் வாய் வழியாக உட் கொள்ளும் மாத்திரை – டானிக் போன்ற மருந்துகளை நோன்பாளி பயன்படுத்தக் கூடாது. ஊசி என்பது வாய்வழியாக உட்கொள்ளும் பொருளல்ல. ஊசி வழியாக ஏற்றப்படும் மருந்து வயிற்றை சென்று அடையப்போவதுமில்லை. அது நரம்பு மண்டல வழியாக நேரடியாக இரத்தத்தில் கலப்பதாகும். எனவே நோன்பாளி நோயாளியாக இருந்தால் அவர் ஊசி வழியாக மருத்துவம் செய்து கொண்டால் அவரது நோன்பு முறியாது. இந்த சந்தர்பத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் மருத்துவம் நோயிக்குரியதாக இருக்க வேண்டுமே தவிர உடல் ஆரோக்யத்திற்காக நோன்பு வைத்துக் கொண்டு மருத்துவம் செய்துக் கொள்ளக் கூடாது. உதாரணமாக நோன்பு வைத்திருக்கும் நிலையில் நோன்பாளி பலவீனப்படுவார் என்பது நாம் அறிந்ததே.. நோன்பாளி ஒருவர் தம் பலவீனத்தைப் போக்கிக் கொள்ள ‘நான் ஒரு பாட்டில் குளுகோஸ் ஏற்றிக் கொள்கிறேன் – இது நரம்பு வழியாகத்தான் உள்ளே போகிறது’ என்று முடிவெடுப்பாரேயானால் அது மருத்துவத்தில் அடங்காது. ஏனெனில் நோன்பாளி பலவீனப்படுவது நோன்பிற்குரிய இயல்பாகும். அது நோயல்ல என்பதால் அவர் செய்வதும் மருத்துவமாகாது. எனவே நோன்பாளி அவசியத்திற்காக நோன்பு வைத்துக் கொண்ட நிலையில் மருத்துவம் செய்து கொள்ளலாம்.


கேள்வி – நோன்பு காலங்களில் ஒரு பர்ளுக்காக 70 பர்ளுகளுடைய நன்மையும் ஒரு சுன்னத்துக்காக ஒரு பர்ளுடைய நன்மையும் வழங்கப்படுவதாக இஸ்லாம் கூறுகின்றது. எனவே நோன்பு காலங்களில் தொழுவதற்கும் பின்வரும் காலங்களில் பழக்கப்படுத்திக் கொள்வதற்கும் சுன்னத்தான தொழுகைகள் மற்றும் அவற்றிற்கான நன்மைகள் தொடர்பாக குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கமாக குறிப்பிடுவீர்களா? ilysjan at yahoodotcom

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஒரு பர்ளுக்கு எழுபது பர்ளுடைய நன்மை என்றோ – ஒரு சுன்னத்துக்கு ஒரு பர்ளுடைய நன்மை என்றோ எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை.

நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுகின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – (அபூஹூரைரா(ரலி) – புகாரி 1894)

ஒன்றுக்கு பத்து என்பது பொதுவாக எல்லா நன்மைகளுக்கும் உரியதாகும். (சில அறிவிப்புகளில் எழுநூறு வரை என்று கூறப்பட்டுள்ளது) ஆனால் ஒரு சுன்னத்துக்கு ஒரு பர்ளுடைய நன்மை என்பதை காண முடியவில்லை.

சுன்னத்தான தொழுகைகளைப் பற்றி இப்போது விரிவாக வெளியிட முடியாது. தொழுகைப் பற்றிய கேள்வி பதில் தொகுப்பு வெளியிடப் போகிறோம். சந்தேகங்களை எழுதுங்கள் என்று அறிவிப்பு செய்திருந்தோம். அப்போதே நீங்கள் சுன்னத் தொழுகைகளைப் பற்றி கேட்டிருக்க வேண்டும். இது நோன்பு பற்றிய தொகுப்பாகும். எனவே பிரிதொரு சந்தர்பத்தில் தான் உங்களின் இந்தக் கேள்விக்கான விரிவான பதில் கிடைக்கும்.


கேள்வி – நோன்பிற்கு ஒவ்வொரு நாளும் நிய்யத் வைப்பது அவசியமா? அல்லது முதல் நோன்பின் போது நிய்யத் வைத்தால் முழு மாதத்திற்கும் அது போதுமானதாகுமா? fsen at netscapedot.net

எவர் பஜ்ருக்கு முன்பு நோன்பு நோற்க முடிவு செய்யவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை என்பது நபிமொழி (ஹப்ஸா(ரலி) திர்மிதி 662)

ரமளான் மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும் என்று இறைவன் கூறியுள்ளதிலிருந்து அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவரிடம் வந்து விட வேண்டும் என்பது தெரிகிறது. ‘இந்த மாதம் முழுதும் நோன்பு நோற்க வேண்டும்’ என்று ஒருவர் மனதில் முடிவு செய்தால் அதுவே முழு நோன்பிற்குரிய நிய்யத் ஆகி விடும் என்றாலும் ஒருமாதம் என்பதால் இடையில் நோய் – பிரயாணம் இன்னபிற காரணங்கள் குறுக்கிட்டு நோன்பு வைக்க முடியாத சூழல் உருவாகலாம் என்பதால் தான் சூழ்நிலையை அனுசரித்து ‘பஜ்ருக்கு முன்’ நோன்பிற்கான எண்ணம் வர வேண்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். எனவே தினமும் அந்த எண்ணம் நம் மனதில் உதிக்க வேண்டும் என்பதுதான் சரியாகும்.


நோன்பாளி பேஸ்ட் உபயோகிக்கலாம்.

நோன்புக் காலங்களில் வாயை சுத்தம் செய்யலாமா.. என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவதுண்டு. சிலர் நோன்பின் காரணத்தால் வாயை சுத்தம் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு செய்வது நோன்பை பாதிக்கும் என்றும் விளங்கிக் கொண்டு வாயில் கை வைக்காமல் இருப்பார்கள். தொழுகையின் போது சரியாக வாய் கூட கொப்பளிக்க மாட்டர்கள். இது தவறான முடிவாகும். நோன்புக் காலங்களில் வாயை சுத்தம் செய்யக் கூடாது என்ற தடையும் இல்லை.

இன்னும சொல்லப் போனால் நோன்புக் காலங்களில் இன்னும் கூடுதலாக வாயை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் நோன்புக் காலங்களில் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் போது வாய் வாடை அதிகமாக வர வாய்ப்புள்ளது. இந்த வாடை பிற மனிதர்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வானவர்களைக் கூட பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.

எந்த வாடையால் மனிதர்கள் பாதிக்கப்படுவார்களோ அதே போல மலக்குகளும் பாதிக்கப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் ‘வெங்காயம் பூண்டை பச்சையாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வருபவர்களை எச்சரித்த போது கூறியுள்ளார்கள் (முஸ்லிம்)

‘நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத முறை பார்த்திருக்கிறேன்!’ என்று ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) கூறினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

”என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமம் தந்தவனாக ஆம்விடுவேன் என்ற அச்சம் (எனக்கு) இல்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குமாறு நான் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ஜாபிர்(ரலி), ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் வழியாகவும் இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் நோன்பாளிக்கு என்று தனிச்சட்டம் எதுவும் கூறப்படவில்லை.

”பல்துலக்குதல் வாயைத் தூய்மைப்படுத்துவதும் இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருவதுமாகும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) கூறினார். (இவை அனைத்;தும் புகாரியின் நோன்புப் பாடத்தில் இடம் பெற்றுள்ளது)

நபி(ஸல்) நோன்பு வைத்திருக்கும் போது எண்ணிலடங்கா முறை பல் துலக்கியுள்ளார்கள் என்றால் வாயை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

பல் துலக்குவதாக இருந்தால் மிஸ்வாக் குச்சியால் துலக்க வேண்டும். பேஸ்ட் போட்டு விளக்கக் கூடாது ஏனெனில் பேஸ்டின் சுவையை வாய் உணர்கிறது என்றெல்லாம் சிலர் கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

பேஸ்ட்டால் பல்துலக்கும் போது வாய் உணரும் வாசனையையும் புத்துணர்வையும் புதிய மிஸ்வாக்கால் பல்துலக்கும் போதும் வாய் உணரத்தான் செய்யும்;. அவ்வளவு ஏன் தண்ணீரால் வாய் கொப்பளிக்கும் போது தண்ணீரின் சுவையைக் கூட வாய் உணரத்தான் செய்கின்றது. அதற்காக வாயே கொப்பளிக்கக் கூடாது என்று சொல்லி விடலாமா…? என்றெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. எனவே நோன்பாளி பேஸ்ட் இட்டு பல் துலக்க எந்த தடையுமில்லை என்பதை நாம் விளங்கலாம்.

வாய் துற்வாடையை போக்க இப்போது ‘ஸ்ப்ரே’ வந்து விட்டது (மேற்கத்திய மோகம்) நோன்பாளி ஸ்ப்ரே பண்ணலாமா… என்ற சந்தேகத்தை எடுத்துக் கொண்டால் இதில் கவனம் தேவை ஏனெனில் ஸ்ப்ரே பண்ணும் போது அது தொண்டையைக் கடந்து விட வாய்ப்புள்ளது. அது நோன்பைப் பாழ்படுத்தி விடும் என்பதால் அதை உபயோகிக்காமல் இருப்பது தான் நல்லது.

இன்னுமொரு ஆட்சேபனை.

முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். (அபூஹூரைரா(ரலி) புகாரி 1904)

இந்த ஹதீஸை சிலர் எடுத்துக் காட்டி ‘சிறப்பு மிக்க’ அந்த வாடையை மாற்றக் கூடாது என்று வாதிப்பதையும் பரவலாகப் பார்க்கலாம்.

இவர்கள் விளங்குவதுதான் அந்த ஹதீஸூக்கு அர்த்தம் என்றால் நபி(ஸல்) நோன்புக் காலங்களில் பல் துலக்கி இருக்கவே மாட்டார்கள் என்ற சாதாரண விளக்கத்தைக் கூட புரிந்துக் கொள்ளாதவர்கள் இவர்கள்.

‘அல்லாஹ்விடத்தில் சிறப்புக்குரியது’ என்றால் அதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். நோன்பு வைப்பதால் வாயில் துர்வாடை வருகிறது என்று நோன்பையோ அதன் வாடையையோ வெறுக்க வேண்டாம். அந்த வாடை அல்லாஹ்விடத்தில் சிறப்புகுரியதாகும் என்பதே அதன் அர்த்தமாகும்.

எனவே தொண்டை வழியாக எதுவும் உள்ளே நுழையாத வகையில் வாயை எத்துனை தூய்மையாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்காக பேஸ்ட் போன்றவற்றையும் பயன்படுத்தலாம் தடையில்லை.

தொண்டைக்கு செல்லாத வகையில் உப்பு – காரம் போன்றவற்றைக் கூட வாயில் வைத்து சுவையை அறியலாம்.

வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம்.

பல் துலக்குதவற்குரிய அடிப்படையே இங்கும் பொருந்தி விடும். உண்ணுதல் – பருகுதல் – உடலுறவுக் கொள்ளுதல் ஆகியவைக் கூடாது என்பது நோன்புக்காக விதிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டமாகும். ஒருவர் வாசனை திரவியங்களை பயன்படுத்தும் போது ‘கூடாது’ என்று தடுக்கப்பட்ட எதுவும் அங்கு நிகழவில்லை என்பதால் அவற்றைப் பயன்படுத்தலாம் ஆனால் வாசனைப் பொருளை மூக்கின் வழியாக நுகரும் போது இதிலிருந்து எதுவும் (துகல்கள் – ஸ்ப்ரேயில் பயன்படுத்தப்பட்டுள்ள இதர பொருள்கள்) வயிற்றுக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ‘நோன்பாளி மூக்கிற்கு தீவிரமாக தண்ணீர் செலுத்தாமல் இருக்கட்டும்’ என்ற ஹதீஸை நாம் இங்கு பொருத்திக் கொள்ள வேண்டும்.

தொழுகையின் முக்கியத்துவம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
“உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம்.
அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.

அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். “இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
ஒருவர் ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டார். உடனே தம் தவறை உணர்ந்து வெட்கமும், வேதனையும் அடைந்தார். “நம் கதி என்னவாகுமோ?”என
நினைத்து அண்ணல் நபி
அவர்களிடம் ஓடி வந்து நிலைமையை விளக்கினார். செய்த தவறை உணர்ந்து வேதனையால் துடிக்கும் அவருக்கு நபி அவர்கள் பின்வரும் திருமறையின் வசனத்தை ஓதி ஆறுதல் அளித்தார்கள்.

“பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.” (திருக்குர்ஆன் 11:114) இதைக் கேட்ட அந்த மனிதர் “எனக்கு மட்டும்தானா?” என வினவினார். “இல்லை! இது என்னைப் பின்பற்றும் உம்மத்தினர் (சமூகத்தினர்) அனைவருக்கும்தான்” என நவின்றார்கள் நபி
அவர்கள். (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : உபாதா பின் ஸாமித் (ரலி)
அண்ணல் நபி
நவின்றார்கள்: “ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.” (அபூதாவூத்)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நபிகள் நாயகம்
அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: “எவர் தம் தொழுகைகளைச் சாpயான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு – அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஔpயாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது. (முஸ்னத் அஹ்மத், இப்னு ஹிப்பான்)

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
நபி
அவர்கள் நவின்றார்கள்: “இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் உட்கார்ந்து கொண்டு, சூரியன் மஞ்சளித்துப் போகும்வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். இணை வைப்பாளர்களுக்குரிய சூரிய வழிபாட்டு நேரம் வரும்போது அவன் எழுகின்றான், சீக்கிரம் சீக்கிரமாக நான்கு ரக்அத்களை கொத்தி எடுக்கின்றான் (கோழி தன் அலகை பூமியில் கொத்தி எடுப்பதைப்போல) அவன் தன் தொழுகையில் அல்லாஹ்வைச் சிறிதும் நினைவு கூர்வதில்லை.” (முஸ்லிம்)

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)
நபி
அவர்கள் நவின்றார்கள்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள பகல் நேர  இரவு நேர வானவர்கள், வைகறை வேளையிலும் மாலைப்பொழுதினிலும் தொழுகையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். தம் பணியை பரஸ்பரம் ஒப்படைக்கின்றார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் வானவர்கள் தம் இறைவனிடம் செல்லும்போது, “நீங்கள் என் அடியாரை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று அவன் வினவுவான். அதற்கவர்கள்,

“நாங்கள் உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் கண்டோம். நாங்கள் அவர்களை விட்டு வரும்போது கூட அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு வந்தோம்” என்பார்கள். (புகாரி, முஸ்லிம்)

உமாடிபின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ  அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)
நபி
அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : ஷக்காத் பின் அவ்ஸ் (ரலி)
நான் நபி
அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கின்றேன் “வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்) இணை வைத்தவன் ஆவான். வெளிப்பகட்டுக்காகவே நோன்பு நோற்றவனும் இணை வைத்தவன்தான், வெளிப்பகட்டுக்காகவே கொடை அளித்தவனும் இணை வைத்தவனே!” (முஸ்னத் அஹமத்)

லைலத்துல் கத்ர்

Filed under: ISLAM — islamthalam @ 12.24
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்

اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

லைலத்துல் கத்ர் இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி அவர்கள் லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)நூல்: புகாரி, முஸ்லிம்

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

”எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், ‘ஆம்’ நாங்கள் ரமலானின் நடுப்பத்து நாள்களில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், ‘எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அதை நான் மறந்து விட்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் ஸஜ்தாச் செய்வது போல் கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்’ எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்க இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை கண்டேன்’ என்று விடையளித்தார். நூல்: புகாரி

“ஜகாத்” செலுத்தாதவர்களின் நிலை

Filed under: ISLAM — islamthalam @ 12.24
உலக மக்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் 1421 வருடங்களூக்குமுன் மனிதன் நாகரீகமடையாத அந்தக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இன்று இந்த நாகரீகக் காலத்திலும் அதன் நிலை மங்காமல் எந்த மாற்றத்திற்கும் அவசியமில்லை என்று நிலை நாட்டிக்கொண்டிருப்பது அதியசமன்றோ. அது மட்டுமல்ல உலகம் அழியும் வரை மக்கள் கடைபிடிக்க எளிதாகவும் தெளிவாகவும் இருப்பதும் அதிசமன்றோ.

இதற்குக் காரணம் என்ன? மனிதனால் அல்லது மனிதர்களில் அறிஞர்கள் அடங்கிய குழுவினரால் திட்டமிடப்பட்ட ஒரு வாழ்க்கை நெறியாக அது அமைந்திருந்தால் அது சாத்தியமா? நிச்சயமாக இல்லை. இஸ்லாம் அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது(ஸல்) என்ற தனி மனிதராலோ அல்லது அவர்களும், அவர்களது தோழர்களும் இணைந்த ஒரு குழுவினராலோ அலசி ஆராயப்பட்டு அமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை நெறித் திட்டம் அல்ல. மாறாக இஸ்லாம் அகில உலகங்களையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வரும் சர்வ வல்லமை மிக்க இறைவனால், அவனது இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் அகில உலக மக்களுக்கும் நிறைவு செய்யப்பட்ட வாழ்க்கை நெறியாகக் கொடுக்கப்பட்டதாகும்.

அந்த வல்லோனாகிய ஏக இறைவன் இவ்வுலக வாழ்க்கையை மனிதர்களுக்கு  இவ்வுல வாழ்க்கை ஒரு சோதனை என்று தனது இறுதி மறை அல்குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளான். உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும 67:2 எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை பணக்காரன், தொழிலாளி முதலாளி, அதிகாரம் வகிப்பவன் அதற்கு கட்டுபடுபவன் போன்ற பாகுபாடுகளுடன் நடமாடவிட்டிருப்பது சோதனையின் காரணமாகவே.

கணக்கில் அடங்காத மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளுடைய இவ்வுலக வாழ்க்கையை அதாவது மிக மிக அற்பமானதொரு வாழ்க்கையை ஒப்பிட்டு அறிபவர்களே இந்த உண்மையை ஏற்க முடியும். தினசரி கோடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை நோட்டுகளை புறக்கணிக்கதக்க நிலையை உணர முடியும். அன்றாடம் சில சில்லறைக் காசுகளை மட்டும் பார்த்து வருபவனுக்கு அதுவே பெரும் சொத்தாகத் தெரியும்.

இதே போல நிரந்தரமான கணக்கிலடங்காத மறு உலக வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கே அற்பமான புறக்கணிக்கத்தக்க இவ்வுலக வாழ்க்கையின் நிலை புரியும். மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போகும் இவ்வுல வாழ்க்கையைவிட பெரியதொரு வாழ்க்கை இருப்பதை ஏற்க முடியாதுதான். அவர்களுக்கு இவ்வுலகமே சர்வமும்.

இவ்வுலகின் ஆசாபாசங்களுக்கும், சொத்து சுகங்களுக்கும், பணம் காசுக்கும் அடிமைப்பட்டு கிடப்பவன், மறுமையின் அழியாத நித்தியமான பதவிகளையும் சுகங்களையும் அறியாதவனாகத்தான் இருப்பான். அந்த அளவுக்கு அவனது அக புற கண்கள் குருடாகத்தான் இருக்கும். எனவே அவனிடமே கஞ்சத்தனமும், அற்பத்தனமும் நிறைந்து காணப்படும்.

மறுமையின் நிறந்தர நித்திய வாழ்க்கையை அறிந்து வைத்திருப்பவன் இவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின் பங்கும் இருக்கிறது. அவற்றை முறைப்படிக் கணக்கிட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் வைகோல் போரை நாய் காத்து கிடந்த கதையாகத்தான் முடியும் என்பதை உணர்ந்து கொள்வான்.

இவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.

ஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5

இவற்றில்

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர்.‘அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக! அல்குர்ஆன் 9:34

அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ”இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் 9:35


ஆகிய இரு கடுமையான எச்சரிக்கைகளையும் உண்மையான முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சில் நிறுத்தி இந்தக் கொடுமையான தண்டனையிலிருந்து விடுபட தங்கள் சொத்துக்களிலிருந்து ஜகாத்தை முறையாக கணக்கிட்டுக் கொடுத்துவிட கடமைப்பட்டிருக்கிறார்கள்.