இஸ்லாம்தளம்

செப்ரெம்பர்10, 2009

நோன்பு – பயனுள்ள சிந்தனைகள்……சகோதரிகள் கவனத்திற்கு

Filed under: ISLAM — islamthalam @ 12.24
வருடந்தோரும் நம்மையெல்லாம் சந்தித்து விட்டு செல்லும் ஒரு வசந்தமான மாதம் தான் நோன்பு மாதம். நம்மில் நிறைய பேர் மற்ற மாதங்களைப் போல இந்த புனித மாதத்தையும் சராசரியாகவே கழித்து விட்டு போய் விடுகிறார்கள். அல்லாஹ்வின் பால் நம்மை நெருக்கிக் கொள்வதற்கான நிறைய வழி முறைகள் இந்த மாதத்தில் உண்டு. நாம் இந்த மாதத்திற்குறிய அட்டவனையை திட்டமிட்டு தொகுத்துக் கொண்டால் ரமளான் மாதத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1 – இந்த மாதத்தை சிறந்த முறையில் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் எண்ணம் போல் தான் வாழ்வு. உறுதி இல்லாமல் ஏனோ தானோ வென்று அந்த மாதத்திற்குள் நுழைந்தால் நாட்கள் சொல்லிக் கொள்ளாமல் அதன் வழியில் பறந்து விடும். அதனால் அந்த நாட்களை எப்படி பயன்படுத்துவது என்ற எண்ணமும் உறுதியும் ரொம்ப அவசியம்.

2 – ரமளான் பிறையை பார்த்தவுடன் முதல் வேலையாக நாமெல்லாம் ஸஹர் உணவிற்கான ஏற்பாட்டில் மள மளவென்று இறங்கி விடுவோம். தேவைதான் ஆனாலும் இந்த ஆண்டிலிருந்து அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் கொள்வோம். ரமளான் பிறை தெரிந்ததும் சாப்பாட்டு வேலையை ஒரு, ஒருமணி நேரம் தள்ளி வைத்துவிட்டு எந்த வேலை இருந்தாலும் அதை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ரமளானை வரவேற்கும் முகமாக முதல் வேலையாக குர்ஆனை கையில் எடுப்போம் – பிறை தெரிந்தவுடன் குர்ஆன் நம் கைக்கு வந்து விட வேண்டும் – குர்ஆன் இறங்கி இந்த மாதத்தை சிறப்புற செய்தது மாதிரி குர்ஆன் ஓதி இந்த மாதத்தை நாம் சிறப்புற செய்வோம். குறைந்தது 50 வசனங்களையாவது முதன் முதலில் ஓதி அதன் அர்த்தத்தை படித்து விட்டு பிறகு ஸஹர் உணவு வேலைக்கு இறங்குவோம். நீங்கள் இப்படி செய்துப் பாருங்கள் இந்த ஆண்டு ஒரு புது அனுபவத்தையும் மன நிம்மதியையும் பெற்றிருப்பதை உணர்வீர்கள்.

3 – இந்த ஆண்டு எப்படியாவது முழு குர்ஆனையும் அர்த்தத்துடன் ஓதி முடித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடுங்கள்.

4 – ஸஹர் செய்து விட்டு சுப்ஹ் தொழாமல் படுத்துவிடும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள். இது பெரும் மன வேதனயான போக்காகும். நடு ஜாமத்தில் வாய்க்கு ருசியாக வயிறு நிறைய உண்டு விட்டு தூங்குவதற்கா இறைவன் நோன்பை கடமையாக்கியுள்ளான்? தயவு செய்து அந்த போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இரவு உணவிற்கு பிறகு ஸஹர் வேலையை முடித்து விட்டு நேரத்துடன் படுத்து விட்டால் (இஷா – மற்றும் இரவுத் தொழுகைக்கு பிறகு டி.வி பார்ப்பதை ரமளானில் கட்டாயம் தவிருங்கள் அது நம் இரவு தூக்கத்தை கெடுத்து நேரத்தை பாழ்படுத்தி நல் அமல் செய்ய முடியாமல் தடுத்துவிடும்) ஸஹர் உணவு நேரத்தில் எழலாம். அல்லது சுட சுட சாப்பிட வேண்டும் என்றால் இன்னும் முன்னமே படுத்துவிட்டு காலையில் 3 மணி வாக்கில் எழுந்து சமைக்கலாம். தூக்கம் கிடைத்து விட்டதால் காலையில் எழுவதற்கு கல கலவென்று இருக்கும் உணவும் சூடாக கிடைக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக சுப்ஹ் தொழுகை தவறாமல் கிடைத்துவிடும்.

5 – ஸஹர் நேரத்தில் டிவியில் ஒளிப்பரப்பப்படுவதற்காக நிறைய இஸ்லாமிய நிகழ்சிகள் தயார் நிலையில் உள்ளன. இரவுத் தொழுகைக்கு பிறகு நேரத்தோடு தூங்கி காலையில் எழுந்தால் சமைத்துக் கொண்டே – அல்லது உணவு உண்டுக் கொண்டே இந்த நிகழ்சிகள் அனைத்தையும் பார்த்து விடலாம். இந்த வருடம் நிறைய அறிஞர்கள் பேச இருக்கிறார்கள். நிகழ்சியை தவறாமல் காணுங்கள். அதில் நமக்கு நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய இஸ்லாமிய செய்திகள் ஏராளமாக கிடைக்கும்.

6 – சுப்ஹூக்கு பிறகு அடுத்த தூக்கம் தூங்க வேண்டி இருப்பதால் எண்ணெய் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்கலாம். இல்லையெனில் அவை தேவையில்லாத கொழுப்பு சத்துக்களை நம் உடம்பில் உருவாக்கி விடும்.

7 – சுப்ஹூக்கு பிறகு வேறு எதுவும் வேலை இல்லை என்றால் ளுஹர் தொழுகை வரைக்கூட தூங்கலாம். குழந்தைகளை கவனிக்க வேண்டி இருந்தால் நேரத்துடன் எழ வேண்டி இருக்கும். அதனால் நேரக் கட்டுப்பாடு என்பது நம்மைப் போன்ற குடும்பப் பெண்களை பொருத்தவரை ரொம்பவும் அவசியம்.

8 – ளுஹர் தொழுகையில் உங்கள் வீட்டு சூழ்நிலையை கவனியுங்கள். நோன்பு வைத்துக் கொண்டு கணவரோ – சகோதரர்களோ – மகன்களோ தொழப் போகாமல் இருந்தால் அவர்களுக்கு தொழுகையை ஞாபகமூட்டி பள்ளிக்கு அனுப்பிவையுங்கள். உங்களோடு சேர்த்து வீட்டிலிருக்கும் மற்றப் பெண்களையும் தொழ தூண்டுங்கள்.

9 – ளுஹரிலிருந்து அஸர் தொழுகை வரை ஓய்வுக்குரிய நேரம் என்பதால் அந்த நேரத்தில் ஒரு பகுதியை குர்ஆனுக்காக ஒதுக்கலாம் – ஒதுக்க வேண்டும். தமிழ் அர்த்தத்தைப் படித்து சிந்திப்பதான் வாயிலாக அல்லாஹ் நம்முடன் பேசும் அந்த அற்புதத்தை காணலாம். சில வசனங்களை உங்கள் கணவர்களிடம் காட்டி அதன் விளக்கத்தைக் கேளுங்கள். இந்த சிறு தூண்டுதலின் வழியாக கணவர்களுக்கும் குர்ஆனுடன் தொடர்பு ஏற்படும். நல்லக் கணவர்களுக்கு உண்மையில் நீங்கள் கேட்கும் வசனங்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் வெளியில் செல்லும் வேலைகளில் யாரிடமாவது கேட்பார்கள். நன்மைக்கான இந்த ஞாபக மூட்டலின் மூலம் வெளியிலிருக்கும் பலரும் கூட பயன் பெறும் வாய்ப்புள்ளது.

10 – அஸர் தொழுகைக்குப் பின் நோன்பு திறக்கும் ஆவலில் சமையலில் இறங்கி விடுவோம். நீண்ட நேரம் காலி வயிறாக இருந்து விட்டு மீண்டும் சாப்பிடுவதால் கடின உணவையும் எண்ணெய் வஸ்துக்களையும் நோன்பு திறக்கும் போது தவிர்க்கலாம். போண்டா, பஜ்ஜி, வடை என்று எண்ணெய் வஸ்த்துக்களே நம் வீடுகளில் நிறைய செய்து சாப்பிடுவோம். இவற்றை நோன்பு திறந்து நேரம் கழித்து சாப்பிடலாம்.

11 – இது நோன்பு மாதம் என்பதால் மிஸ்கீன்கள் நம் வீடுகளுக்கு தவறாமல் வரும் வாய்ப்புள்ளது. அப்படி வரும் மிஸ்கீன்களின் உள்ளத்தில் என்ன நம்பிக்கை இருக்கும் தெரியுமா..? ‘இது புனிதமான ரமளான் மாதம் அதனால் நமக்கு நிறைய தர்மம் கிடைக்கும்’ என்ற நம்பிக்கை இருக்கும். இந்த நம்பிக்கையை பல-பல வீடுகளில் பொய்பித்து விடுகிறார்கள். வீடு தேடி வரும் ஏழைகள் மீது எரிந்து விழுவார்கள். முகத்தில் அடித்தார் போல் பேசி அனுப்பி விடுவார்கள். வீடு வீடாக கையேந்தும் அந்த ஏழைகளின் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்பதையெல்லாம் இவர்கள் சிந்திப்பதே இல்லை. நாம் கொடுக்கும் தர்மத்தால் நம் வீட்டில் கடன் சுமை ஏறிப்போய் விடாது. இது நன்மையை வாரி வழங்கும் மாதம் என்பதால் நாம் வழங்கும் தர்மங்களால் பல நூறு மடங்கு அல்லாஹ்விடம் நமக்கு வெகுமதி காத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ரமளான் மாதம் வந்து விட்டால் நமது தலைவர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வரித்துக் கட்டிக் கொண்டு நன்மையை செய்ய இறங்கி விடுவார்கள். வேகமாக வீசும் காற்றை விட அவர்களின் தர்மமும் நற் செயல்களும் துரிதமாக இருக்கும் என்றெல்லாம் அவர்களின் தோழர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் அளவிற்கு நம்மால் செய்ய முடியாவிட்டாலும் கூட நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும் – செய்யும் பக்குவத்தை இந்த ரமளான் முதல் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

12 – ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் எனும் மிக முக்கியமான ஒரு இரவு நம்மையெல்லாம் சந்திக்க இருக்கின்றது. அந்த ஒரு இரவு மட்டும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கிறான். நம்மால் பள்ளிகளில் சென்று இரவுத் தங்கி அந்த இரவைப் பெற முடியாவிட்டாலும் நம் வீடுகளில் இருந்து அந்த இரவை எதிர்பார்க்கலாம். கடைசி பத்து நாட்களின் இரவு வேலைகளில் நீண்ட நேரம் தொழுவது – அல்லாஹ்வை திக்ர் செய்வது – குர்ஆன் ஓதுவது – அவனிடம் கையேந்தி நம் தேவைகளை முறையிட்டு மறக்காமல் முஸ்லிம் சமுதாய நலனுக்காகவும் நமது மறுமை வெற்றிக்காகவும் பிரார்த்திப்பது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். அடுத்த வருட ரமளானட வரை வாழ்வோம் என்பது உறுதி இல்லை என்பதால் இந்த வருட லைலத்துல் கத்ரை அலட்சியப்படுத்தி விட வேண்டாம்.

13 – ‘பெருநாள்’ நமக்கெல்லாம் மகிழ்சிகரமான நாள். புது உடைகளை உடுத்துவதில் உள்ளம் குதூகளிக்கும். அதற்காக பல ஜவுளிக் கடைகளை ஏறி இறங்கி பல மணி நேரத்தை செலவிட்டு புடவை எடுப்போம். மனதிற்கு பிடித்தமாதிரி புடவை அமைந்து விட்டால் பூரிப்பு இன்னும் அதிகரிக்கும். அன்றைய தினம் நம் இல்லங்களில் தாய் – தந்தை – அண்ணன் – தம்பி – அக்காள் – தங்கை – கணவர் – குழந்தைகள் என்று எல்லோரும் புது ஆடை உடுத்தி மகிழ்சிக் கடலில் மூழ்கி இருக்கும் போது எத்துனையோ ஏழைகள் இதற்கு வழியில்லாமல் சோகத்துடனும் மன சுமைகளுடனும் தம் வீடுகளில் அடைந்து கிடப்பார்கள். அந்த சந்தோஷமான நாளை வெளியில் சென்று அவர்களால் கொண்டாட முடியாது. இருக்கும் மொத்த ஏழைகளுக்கும் நம்மால் உடை எடுத்துக் கொடுக்க முடியாது – (பொருளாதார வசதி இருந்தால் நம் பெண்களில் பலர் நிறைய செய்வார்கள்) அதனால் நாம் உடை எடுக்கும் போது புடவையின் விலையை கொஞ்சம் குறைத்து ஒன்று அல்லது இரண்டு ஏழைப் பெண்களுக்கு இரண்டு புடவை எடுத்துக் கொடுக்கலாம். நம் புது ஆடை உடுத்தும் அதே வேலையில் அந்த பெண்களும் நம் மூலம் புது சேலை உடுத்துவார்கள். அன்றைய தினம் முழுவதும் அவர்களின் எண்ணமெல்லாம் நீங்கள் தான் இருப்பீர்கள். அந்த ஏழைகளின் சந்தோஷத்தில் அல்லாஹ்வின் சந்தோஷம் கிடைக்காதா…

14 – நம்மில் நிறையப் பெண்கள் தொடர்ந்து தவறவிடும் – ஆனால் தவற விடக் கூடாத – தொழுகை பெருநாள் தொழுகை. இந்த ஆண்டு அதை விட்டுவிடாதீர்கள். ஏனெனில் ஆண்டுக்கொரு முறை மட்டும் தொழும் தொழுகையாகும் அது.

இந்த புனித ரமளானை அல்லாஹ் விரும்பக் கூடிய விதத்தில் நாமெல்லாம் அமைத்துக் கொள்ள உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் எனக்காக நீங்களும் பிரார்த்தியுங்கள்.

தஹஜ்ஜத்/ தராவீஹ்/ வித்ரு/ இரவுத் தொழுகை/ ஓர் அலசல்

Filed under: ISLAM — islamthalam @ 12.24
(தமிழ் முஸ்லிம்களிடம் இத் தொழுகைகள் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன அவற்றை அலசுகிறது இந்தக் கட்டுரை)

நபி(ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தும் – விரும்பியும் தொழுத தொழுகை வித்ருத் தொழுகை ஆனாலும் இது கடமையான தொழுகையல்ல.

உங்களின் கடமையான தொழுகைப் போன்று வித்ருத் தொழுகை கடைமையானதல்ல எனினும் நபி(ஸல்) இதை சுன்னத்தாக்கியுள்ளார்கள். ‘அல்லாஹ் ஒற்றையானவன். அவன் ஒற்றையை விரும்புகிறான் குர்ஆனையுடையவரடகளே! வித்ருத் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அலி – இப்னுஉமர்- இப்னு அப்பாஸ் (ரலி – ம்) ஆகியோர் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி 415, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)

வித்ருத் தொழுகையின் நேரம்

1) உறங்குவதற்கு முன் வித்ரு தொழுதுவிடுமாறு எனக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்று அபூஹூரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி 417)

2) இரவுத் தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி (இப்னு உமர்(ரலி) புகாரி 998)

3) சுப்ஹூக்கு முன் வித்ரை தொழுங்கள் பஜ்ர் நேரம் வந்து விட்டால் இரவுத் தொழுகை – வித்ரு முடிவடைந்து விடுகின்றன என்பது நபிமொழி (அபூஸயீத்(ரலி) திர்மிதி 431)

இந்த மூன்று ஹதீஸில் முதல் ஹதீஸூடன் மற்ற ஹதீஸ்கள் முரண்படுவதுபோல் தெரிகின்றன. முதல் ஹதீஸ் தூங்குமுன் வித்ரு தொழுது விட வேண்டும் என்கிறது. மற்றவை இரவின் கடைசிப் பகுதியில் வித்ரு தொழ வேண்டும் என்கின்றன. இந்த முரண்பாட்டை கலையும் விதமாகவும் மேலதிக விளக்கமாகவும் மற்றொரு ஹதீஸ் கிடைக்கின்றது.

உங்களில் எவரேனும் இரவின் இறுதிப் பகுதியில் விழிக்க முடியாது என்று அஞ்சினால் அவர் வித்ரு தொழுது விட்டு தூங்கட்டும். இரவில் எழலாம் என்று யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர் இரவின் கடைசியில் வித்ரை தொழட்டும் ஏனெனில் இரவின் இறுதிப் பகுதியில் குர்ஆன் ஓதும் போது மலக்குகள் அங்கு வருகிறார்கள் இதுவே சிறந்ததாகும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஜாபிர் (ரலி) திர்மிதி 418, புகாரி முஸ்லிம்)

நபி(ஸல்) இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுவார்கள் மரணத்தை நெருங்கிய காலத்தில் அவர்களின் வித்ரு தொழுகை ஸஹர் நேரம் வரை சென்றது என ஆய்ஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் – திர்மிதி 419)

இந்த ஹதீஸ்களிலிருந்து வித்ரு தொழுகையின் நேரத்தை அறிந்துக் கொள்ளலாம்.

இனி பலதரப்பட்ட தொழுகை என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் தொழுகைகளைப் பார்த்து விட்டு வித்ரைத் தொடர்வோம்.

1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல்லைல் 3) தஹஜ்ஜத்து 4) தராவீஹ் 5) வித்ரு

இப்படி ஐந்து வித தொழுகைகளை மக்கள் விளங்கி வைத்துள்ளனர். இந்த தொழுகைகளையும் அதன் எண்ணிக்கைகளையும் புரிந்துக் கொள்வதில் அவர்களுக்கு ஏகப்பட்ட குழப்பம். அறிஞர்களின் தடுமாற்றம் இவர்களின் குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தி விடுகின்றது.

ஐந்துப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த தொழுகைகளை ஐந்து விதமான தொழுகை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். இது உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.

நபி(ஸல்) அவர்களின் தொழுகைகள் பற்றிய ஹதீஸ்ககளை ஆய்வு செய்யும் எவரும் இவைகள் ஐந்துவித தொழுகைகள் அல்ல. மாறாக ஒரே தொழுகைக்கு சூட்டப்பட்டுள்ள ஐந்துப் பெயர்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக் கொள்வார்கள்.

இது இந்தத் தொழுகை! இது இந்தத் தொழுகை!! என்று நபி(ஸல்) பெயர் சூட்டி இரவில் எந்தத் தொழுகையையும் தொழவில்லை அவர்களின் வழமையான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும் ஒரே விதமாக இருந்தன. அதை மக்களுக்கு விளக்க வந்தவர்கள் தான் ஒரே தொழுகையை பல பெயர்களால் அறிமுகப்படுத்தி விட்டனர்.

இரவில் தொழுவதால் ‘ஸலாத்துல் லைல்’ இரவுத் தொழுகை என்றும், இரவில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டப்பட்டதால் ‘கியாமுல் லைல்’ என்றும், குர்ஆனில் ‘தஹஜ்ஜத்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் ‘தஹஜ்ஜத்’ என்றும் அந்த தொழுகை ஒற்றைப்படையில் முடிவதால் ‘வித்ரு’ என்றும் அந்த தொழுகைக்கு பெயர்வந்தது.

தொழுகை ஒன்றுதான் அந்த தொழுகையின் தன்மையையும் நேரத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டவர்கள் பல பெயர்களை அந்த தொழுகைக்கு சூட்டி விட்டனர்.

தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக் கொள்ளும் விதத்திலோ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்த ஒரு தொழுகையும் தொழப்படவில்லை. மற்ற வார்த்தைகளாவது ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.

”நபி(ஸல்) இந்த தொழுகைகளை பெயர் குறிப்பிட்டு தொழுததில்லை என்று கூறுகிறீர்களே… ஆனால் வித்ரு என்று ஏராளமான ஹதீஸ்களில் பெயர் வருகிறதே..” என்று யாருக்காவது சந்தேகம் வரலாம்.

‘வித்ரு’ என்ற வார்த்தையை மொழிப் பெயர்க்காமல் விட்டுவிடுவதால் தான் இந்த சந்தேகம் வருகிறது.

‘உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்’ என்பது ஹதீஸ். ஹதீஸ் வாசகங்கள் எல்லாவற்றையும் மொழி பெயர்க்கும் நாம் ‘வித்ரு’ என்பதை அப்படியே விட்டுவிடுகிறோம். அதனால் அது தனி தொழுகைப் போன்று தெரிகிறது. வித்ரை மொழிப் பெயர்க்கும் போது இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.

‘வித்ரு’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றை’ அல்லது ‘ஒற்றைப்படை’ என்று பொருள்.

உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையிலாக்குங்கள் என்று மொழி பெயர்க்கும் போது தெளிவான விளக்கம் கிடைத்து விடுகிறது.

எந்த ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகைத் தனி – வித்ருத் தொழுகைத் தனி, ஸலாத்துல் லைல் தனி என்று கூறுகிறார்களோ அதே ஹதீஸ் நூல்களில் அந்தந்த தலைப்பிற்கு கீழ் ஒரே ஹதீஸ் வார்த்தை மாறாமல் இடம் பெற்றிருப்பதை ஊன்றி கவனிக்க வேண்டும். வெறும் தலைப்புகளை மட்டும் பார்த்து சட்டங்களை வகுத்துவிடக் கூடாது. அந்தந்த தலைப்பிற்கு கீழுள்ள ஹதீஸ்களின் வார்த்தைகளைப் பார்த்து அதிலிருந்துதான் சட்டங்களை வகுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்பவர்களுக்கு இது தனி தனி தொழுகை என்ற குழப்பம் ஏற்படவே செய்யாது.

எண்ணிக்கைகள்.

13 ரக்அத்கள்

நபி(ஸல்) பதிமூன்று ரக்அத் வித்ரு தொழுவார்கள். அவர்கள் முதுமையடைந்ததும் ஏழு ரக்அத் வித்ரு தொழுதுள்ளார்கள். (ஆய்ஷா – உம்மு ஸலமா (ரலி -ம்) நஸயி – திர்மிதி 420)

நபி (ஸல்) அதிகப்படியாக பதிமூன்று ரக்அத்களும், குறைவாக ஒரே சலாமில் ஏழு ரக்அத்களும் தொழுதுள்ளார்கள். இதைவிட எண்ணிக்கையை அதிகப்படுத்தவோ குறைக்கவோ இல்லை.

நபி(ஸல்) இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள் ஐந்து ரக்அத்களை ஒற்றைப்படையில் (வித்ராக) தொழுவார்கள். அவ்வாறு தொழும் போது கடைசி இருப்பைத் தவிர மற்ற ரக்அத்களில் உட்கார மாட்டார்கள். (அதாவது நான்கு ரக்அத்களை தொடர்சியாக தொழுது – நடுவில் உட்கார்ந்து அத்தஹிய்யாத்து ஓதாமல் – ஐந்தாம் ரக்அத்தில் உட்கார்ந்து ஓதி முடிப்பார்கள்) (ஆய்ஷா – அபூ அய்யூப் (ரலி – ம்) முஸ்லிம் – திர்மிதி 421 அபூதாவூத்)

11 ரக்அத்கள்.

ரமளானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் ஆய்ஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் நபியவர்கள் பதினோரு ரக்அத்களை விட அதிகப்படுத்தியதில்லை. முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்டுவிடாதே.. (அதாவது அந்த தொழுகை அவ்வளவு அழகாக இருக்கும்) பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்டுவிடாதே… பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் தஹஜ்ஜத் ஹதீஸ் எண் 1147, திர்மிதி 403 அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)

ரமளான் ரமளான் அல்லாத நாட்கள் என்று நபி(ஸல்) எந்த வித்தியாசமும் செய்யாமல் இரவுத் தொழுகையை 11 ரக்அத்களாகவே நீடித்துள்ளார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் வலுவான சான்றாக உள்ளது

நபியவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 994)

எனது சிறிய தாயார் மைமுனா அவர்கள் வீட்டில் நான் ஒரு நாள் தங்கினேன் நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபியவர்களும் அவர்களின் மனைவியும் தலையணையின் சீள வாக்கில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை நபியவர்கள் தூங்கினார்கள் பின்னர் விழித்து தங்கள் கையால் முகத்தை தடவி தூக்க கலக்கத்தை போக்கிவிட்டு ஆல இம்ரான் அத்தியாயத்தின் இறுதி பத்து வசனங்களை ஓதி விட்டு எழந்து சென்று தொங்கவிடப் பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து தண்ணீர் சாய்த்து ஒளு செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக நின்றார்கள் நானும் அவர்களின் இடது புறம் போய் நின்றேன் எனது காதைப் பிடித்து இழுத்து வலது பக்கம் நிறுத்தினார்கள்.

இரண்டு ரக்அத் தொழுதார்கள்,

மேலும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,

இன்னும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,

மீண்டும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,

மறுபடியும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,

பின்பு ஒற்றப்படையில் (வித்ரு) தொழுதார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 992, 1198)

9 ரக்அத்துகள்

நபி(ஸல்) ஒன்பது ரக்அத்துகளாக ஒற்றைப்படையில் (வித்ரு) தொழுவார்கள். எட்டாம் ரக்அத்தில் உட்கார்ந்து எழுந்து ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். (இப்னு உமர்(ரலி) முஸ்லிம் நஸயி அஹ்மத்)

7 ரக்அத்கள்.

நபி(ஸல்) ஏழு ரக்அத் வித்ரு (ஒற்றைப்படையில்)தொழுதால் ஆறாம் ரக்அத்தில் உட்கார்ந்து எழுந்து ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். (ஆய்ஷா(ரலி) அபூதாவூத் – நஸயி – அஹ்மத்)

5 ரக்அத்கள்.

நபியவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுவார்கள். ஐந்து ரக்அத்தை ஒற்றைப்படையில்(வித்ராக) தொழுவார்கள் (அப்படி தொழும்போது) ஐந்தாம் ரக்அத்தில் உட்கார்ந்து ஸலாம் கொடுப்பார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி – முஸ்லிம் – திர்மிதி 421)

3 ரக்அத்கள்.

நபி(ஸல்) மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம், நஸயி, அஹ்மத், பைஹகி)

கிராஅத்

நபி(ஸல்) ஒற்றப்படைத் தொழுகையின்(வித்ரின்) மூன்று ரக்அத்தில் முதல் ரக்அத்தில் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா’ என்ற சூராவையும், இரண்டாம் ரக்அத்தில் ‘குல்யா அய்யுஹல் காபிரூன்’ என்ற அத்தியாயத்தையும், மூன்றாம் ரக்அத்தில் ‘குல்ஹீவல்லாஹூ அஹத்’ என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என உபை பின் கஃபு(ரலி) அறிவிக்கிறார்கள். திர்மிதி 424, அஹ்மத், நஸயி, இப்னுமாஜா)

நபி(ஸல்) மூன்று ரக்அத் வித்ரு தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் மூன்று அத்தியாயங்கள் விதம் ஒன்பது அத்தியாயங்களை ஓதுவார்கள் கடைசி அத்தியாயாத்தில் குல்ஹூவல்லாஹூ அஹத் சூராவை ஓதுவார்கள் என்று திர்மிதியில் ஒரு செய்தி வருகிறது அலி(ரலி) அறிவிப்பதாக வரும் இச்செய்தி பலவீனமானதாகும் ஏனெனில் இதன் அறிவிப்பாளர் தொடரில் அல் ஹாரிஸ் அல் அஃவர் என்பவர் இடம் பெறுகிறார் அவர் பொய்யராவார் அதனால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.

யார் ஐந்து ரக்அத் தொழு விரும்புகிறாரோ அவர் ஐந்து தொழலாம், யார் மூன்று ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் மூன்று தொழலாம், யார் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் ஒன்று தொழலாம் என்பது நபிமொழி (அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) நஸயி, அபூதாவூத், இப்னுமாஜா)

வித்ரும் மஃரிபும் வித்தியாசப்பட வேண்டும்

மூன்று ரக்அத் வித்ரு தொழுதால் மஃரிபைப் போன்று வித்ரை ஆக்கி விடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) ஹாக்கிம், தாரகுத்னி, இப்னுஹிப்பான்)

மூன்று ரக்அத் வித்ரு தொழும் போது எவ்வாறு தொழுவது? மஃரிபைப் போன்று வித்ரை ஆக்காதீர்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதால் வித்தியாசப்படுத்தி தொழ வேண்டும். முதலில் இரண்டு தொழுது ஸலாம் கொடுத்து பின்னர் ஒன்று தொழுது சிலர் வித்தியாசப்படுத்துகிறார்கள். இப்னு உமர்(ரலி) இவ்வாறு தொழுதுள்ளதாகவும் கூறுகிறார்கள். இப்னு உமர் அவர்கள் இவ்வாறு தொழுதது உண்மைதான் (புகாரி991) ஆனால் அவர்கள் தொழுத மூன்று ரக்அத்தையும் சேர்த்து அவர்கள் வித்ரு என்று சொல்லவில்லை. இரண்டு ரக்அத் தொழுது ஸலாம் கொடுத்து பிரித்ததன் மூலம் அது மூன்றாம் ரக்அத்துடன் சேராது என்பதை விளங்கலாம். பின்னர் தொழுத ஒரு ரக்அத் மட்டுமே (ஒற்றையாக இருப்பதால்) வித்ரு தொழுகையாகும்.

ஹனபி மத்ஹப் காரர்கள் போன்று தொழுவதற்கும் ஆதாரம் எதுவுமில்லை. இரண்டாம் ரக்அத்தில் உட்கார்ந்து அத்தஹிய்யாத்து ஓதுவதன் மூலம் அவர்கள் வித்ரை மஃரிபு போன்றே ஆக்கி விடுகிறார்கள். மூன்றாம் ரக்அத்தில் ருகூவிற்கு பிறகு கைகளை உயர்த்துவதால் மட்டும் அது மஃரிபிலிருந்து வித்தியாசப்பட்டு விடாது.

மூன்று ரக்அத் தொழும் போது நபி(ஸல்) எவ்வாறு தொழுதார்களோ அவ்வாறு தொழுவதே சரியாகும்.

நபி(ஸல்) மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத்தில் தான் உட்காருவார்கள் ஸலாம் கொடுப்பார்கள் என ஆய்ஷா – உபை பின் கஃபு (ரலி-ம்) அறிவிக்கிறார்கள். (நஸயி)

இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து பிரிக்காமல், அத்தஹிய்யாத்து ஓதாமல் நேராக எழுந்து மூன்றாம் ரக்அத்தையும் தொழுது இறுதியில் ஸலாம் கொடுப்பது தான் நபிவழியாகும். இவ்வாறு செய்வதன் மூலம் வித்ரு தொழுகை மஃரிபு தொழுகையிலிருந்து வித்தியாசப்பட்டு விடுகிறது.

1 ரக்அத்.

இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத் முடிவிலும் ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் ஒரு ரக்அத் தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத், நஸயி)

நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் நபி(ஸல்) தொழுதுள்ளார்கள் என்பதற்கு எந்த ஒரு ஹதீஸூம் இல்லை.

13 ரக்அத்களை விட அதிகமாக தொழவேக் கூடாதா…?

தொழலாம் தடையில்லை ஆனால் நபி(ஸல்) அவ்வாறு தான் தொழுதுள்ளார்கள் என்று (பொய்) கூறி அந்த கூடுதல் ரக்அத்களை சுன்னத்தாக்கக் கூடாது.

இரவுத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரண்டிரண்டு ரக்அத்களாக தொழு. சுப்ஹ் வந்து விட்டால் ஒரு ரக்அத் தொழுது முடித்துக் கொள்’ என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி)

எண்ணிக்கையை வரையறுக்காமல் இரண்டிரண்டாக தொழு என்று நபி(ஸல்) கூறியுள்ளதால் அவரவர் விரும்பும் அளவிற்கு சுப்ஹ்வரை எத்துனை ரக்அத்களும் தொழலாம். 13 ரக்அத்களை தாண்டி சிலருக்கு 30 ரக்அத்கள் தொழ விருப்பம் இருந்தால் தொழலாம். சிலருக்கு அதிகப்படியாக வெறும் இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழ விருப்பம் இருந்தால் அவர்கள் அவ்வாறு செய்யலாம். நாற்பது – ஐம்பது என்று சுப்ஹ்வரை தொழ ஒருவர் விரும்பினால் கூட அவர் தொழலாம். அதற்கு இந்த ஹதீஸ் அனுமதியளிக்கிறது. ஆனால் பதினோரு ரக்அத்களை தாண்டி இத்துனை ரக்அத்கள் தான் தொழ வேண்டும் இருபது ரக்அத்கள் தான் தொழ வேண்டும் என்று ரக்அத்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் உரிமை அவற்றை சுன்னத்தாக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அதிகப்படியாக தொழும் தொழுகை அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்ததாகும்.

ஜமாஅத்தாக தொழுவது.

ரமளானில் ஏழுநாட்கள் எஞ்சியிருக்கும் வரை(அதாவது 23 நாட்கள்) நபி(ஸல்) எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. 24ம் இரவில் மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள் அடுத்த நாள் தொழுகை நடத்தவில்லை 26ம் இரவில் பாதி இரவு கழியும் வரை தொழுகை நடத்தினார்கள். அடுத்த நாள் தொழுகை நடத்தாமல் 28ம் நாள் தொழுகை நடத்தினார்கள். தொழுகைக்கு குடும்பத்தினரையும் – மனைவிகளையும் அழைத்தார்கள். ஸஹர் செய்தல் தவறி விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு தொழுகையை நீட்டினார்கள். (அடுத்தடுத்த நாள் தொழவில்லை) என்று ஜூபைர் பின் நுமைர் அறிவிக்கிறார்கள் (திர்மிதி 734)

இதே செய்தி ஆய்ஷா(ரலி) வழியாக புகாரியில் வருகிறது. மக்கள் திரண்டு தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்த போது வெளியில் வராத நபி(ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகைக்கு வந்து ”நீங்கள் தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்தது எனக்கு தெரியும் ஆர்வத்தின் காரணமாக அல்லாஹ் இந்த தொழுகையை கடமையாக்கி விடுவானோ.. என்று அஞ்சி தான் நான் வரவில்லை” என்று சொன்ன செய்தி கிடைக்கிறது. (புகாரி 1129)

நபி(ஸல்) இஷாவிலிருந்து சுப்ஹ் வரை 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள். தஹஜ்ஜத்தும்; அதுதான், தராவீஹூம் அதுதான், இரவுத் தொழுகையும் அதுதான், வித்ருத் தொழுகையும் அதுதான்.

வித்ரில் குனூத்.

வித்ரில் ஓதுவதற்காக எனக்கு நபி(ஸல்) துஆவை கற்றுக் கொடுத்தார்கள் என ஹஸன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

اللهّم اهد ني فيمن هديت وعافني فيمن عافيت وتولّني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شرَّ ما قضيت فإنّك تقضي ولا يقضى عليك وإنه لا يذلُّ من واليت تباركت ربنا وتعاليت

அல்லாஹூம்மஹ்தினீ ஃபிமன் ஹதைத்த, வ ஆஃபினி ஃபீமன் ஆஃபைத்த, வதவல்லனி ஃபீமன் தவல்லைத்த, வபாரிக்லி ஃபீமா அஃதைத்த, வகினீ ஷர்ர மா க்கலைத்த, வஇன்னக்க தக்ளீ வலா யுக்ளா அலைக்க, வஇன்னஹூ லா யதில்லு மன் வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த.

பொருள்: இறைவா நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ யாருக்கு துன்பங்களை துடைத்தாயோ அவர்களுடன் எனது துன்பங்களையும் துடைப்பாயாக! நீ யாருக்கு பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ வழங்கியவற்றில் எனக்கு பரக்கத் செய்வாயாக! நீ விதியாக்கியதின் கெடுதியை விட்டும் என்னை காப்பாயாக! நிச்சயமாக நீயே விதிப்பவன். உன்மீது எதையும் விதிக்க முடியாது! நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது உன் மகத்துவம் மேலானது. (திர்மிதி 429)

இந்த துஆவை இரவுத் தொழுகையின் ஒற்றைப்படை(வித்ரு) கடைசி ரக்அத்தில் ருகூஃவிற்கு முன்போ – பின்போ அவரவர் விருப்பப்படி ஓதிக் கொள்ளலாம். இரண்டு நிலையிலும் நபி(ஸல்) குனூத் ஓதியதற்கு ஆதாரம் கிடைக்கின்றன. (ஹஸன் – உபை பின் கஃபு(ரலி-ம்) வழியாக ஹாக்கிம் அபூதாவூத் நஸயி)

நபி(ஸல்) குனூத் ஓதும் சந்தர்பங்களில் கைகளை உயர்த்தியதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அதே போன்று குனூத்திற்கு ஆமீன் சொல்வதற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. மக்கா மதீனா போன்ற இடங்களில் கைகளை உயர்த்தி குனூத் ஓதினாலும் பிறர் அதற்கு ஆமீன் சொன்னாலும் நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அந்த சந்தர்பங்களில் நாம் அமைதியாக நின்றுக் கொள்ள வேண்டும் என்பதே சரியாகப்படுகிறது. (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

பயணங்களில் நோன்பு நோற்றல்

Filed under: ISLAM — islamthalam @ 12.24
‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.’ (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 183வது வசனம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறையில் நோன்பு விசுவாசிகள் அனைவரும் மீதும் கடமை என்பதைக் குறிப்பிட்டுவிட்டு அதன் பயனைப் பற்றிக் குறிப்பிடும்போது விசுவாசிகள் அனைவரும் இறையச்சமுடையோர் ஆகலாம் என்று கூறுகிறான். இவ்வாறு விசுவாசிகள் அனைவரையும் இறையச்சமுடையோராக்கும் நோன்பை நாம் எவ்வாறு நோற்க வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)’ (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா 184 ஆம் வசனம்).

அல்லாஹ்வால் விசுவாசிகள் மீது விதிக்கப்பட்ட நோன்பு ஒரு குறிப்பிட்ட நாட்களில் (ரமழானில்) நோற்கப்பட வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகள், வயோதிகர்கள் நோன்பு நோற்பதற்கு பகரமாக ஏழைகளுக்கு நோன்பு நோற்கவும், நோன்பு திறக்கவும் உணவளிக்க வேண்டும் என்றும் அருள்மறை குர்ஆன் கூறுகிறது. மேலும் பயணத்தில் இருப்பவர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு, அவர்கள் செய்ய வேண்டியதென்ன என்பதை கீழ்க்காணும் அருள்மறை வசனம் தெளிவாக்குகிறது:

..எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)..’ (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா – 185வது வசனத்தின் கடைசி பகுதி).

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல் )அவர்களின் காலத்தில் பயணம் என்பது இன்றைய கால கட்டத்தைப் போன்று அத்தனை எளிதானதன்று. ஏனெனில் அன்றைய நாட்களில் பாலைவனத்தில் பயணிப்பதற்கு வாகனம் என்றால் ஒட்டகம் மாத்திரமே உண்டு. இன்று இருப்பது போன்று பளிங்கு போன்ற தார் சாலைகளோ, சாலைகளில் பறக்கும் கார்களோ, இரும்புத் தண்டவாளத்தில் ஓடும் இரயில் வண்டிகளோ, விண்ணில் பறக்கும் விமானமோ கிடையாது. இருக்கும் மண் சாலைகளிலும் வழிகாட்டிகளோ  பசியெடுத்தால் உண்ண உணவு விடுதிகளோ  களைப்பாயிருந்தால் தங்கி ஓய்வெடுக்க ஓய்வகங்களோ கிடையாது. இருப்பினும் ரமழான் மாதங்களில் பாலைவனத்தில் பயணம் செய்யும்போது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் அன்புத் தோழர்களில் வலிமையுடையவர்களும் நோன்பு நோற்றிருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. பயணத்தில் இருப்பவர்கள் நோன்பு நோற்பது பற்றி அருள்மறை குர்ஆன் கூறுவது போன்று அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் நமக்கு வழிகாட்டுதல்கள் இருக்கின்றன:

நபித்தோழர் ஹம்ஸா பின் அம்ரில் அஸ்லமி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் ”பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார்கள். ஹம்ஸா பின் அம்ரில் அஸ்லமி (ரலி) அவர்கள் அதிகமதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ‘நீர் விரும்பினால் நோன்பு நோற்பீராக: நீர் விரும்பினால் நோன்பு நோற்காமல் விட்டு விடுவீராக!’ என்று கூறினார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்: புஹாரி 1943, முஸ்லிம் 2621, அபூதாவூத் 2402, திர்மிதி 711, நஸயீ 2383, இப்னுமாஜா 2383, 1662, அஹ்மத்).

மேற்கண்ட ஹதீஸிலிருந்து பயணம் மேற்கொள்ளும்போது உடல் வலிமையையும், நோன்பு நோற்பதற்கான வசதி வாய்ப்புகளையும் பெற்றிருப்பவர்கள் நோன்பு நோற்கலாம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்த போது ஒரு மனிதர் நிழலில் தங்கவைக்கப் பட்டு மக்கள் (அவரைச் சற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ”இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ”இவர் நோன்பு நோற்றிருக்கிறார்” என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் (பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயல் அன்று’ என்று கூறினார்கள்’ என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். (ஆதார நூல்: புகாரி – 1946, முஸ்லிம் 2607).

(ஒரு பயணத்தில்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத்தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராகத் திகழ்ந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது. ஒதுங்க நிழல் இல்லை).

நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பு நோற்காமல் இருந்தவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி (தண்ணீர் புகட்டியும், தீனி போட்டும்) வேலை செய்தார்கள். நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்கக் கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ”இன்று நோன்பு நோற்காமல் விட்டவர்கள் (மறுமையில் அதிக) நன்மையைக் கொண்டு சென்று விட்டார்கள்” என்று கூறினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்: புகாரி 2890, முஸ்லிம்).

மேற்கண்ட ஹதீஸ்களிருந்து ரமலான் மாதத்தில் தாம் மேற்கொள்ளும் பயணம் முழுவதிலும் நோன்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நோன்பைத் தொடர முடியுமெனில் அவர்கள் நோன்பு நோற்றுக் கொள்ளலாம். அவ்வாறு முடியாதவர்கள் நோன்பை விட்டுவிட்டு பின்னர் அதனை மற்றொரு நாளில் நோற்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நாம் எவ்வாறு அல்லாஹ் இட்டக் கட்டளையை ஏற்று வணக்க வழிபாடுகளை செய்கின்றோமோ, அதுபோல வணக்கவழிபாடுகளில் அல்லாஹ் அளித்த சலுகைளை பயன்படுத்த வேண்டிய சரியான வேளைகளில் பயன்படுத்துவதும் நம்மீது கடமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது நோன்புகளையும் அங்கீகரித்து, ‘ரய்யான்’ என்னும் சுவன வாசல் வழியாக நம்மைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக!..

லைலத்துல் கத்ர் இரவும் – இருபத்தி ஏழும்..!

Filed under: ISLAM — islamthalam @ 12.24
‘நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியம் மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகலகாரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்), அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.’ (அத்தியாயம் 97 ஸுரத்துல் கத்ரி – 1முதல் 5வரையிலான வசனங்கள்)

என லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த லைலத்துல் கத்ர் இரவு எப்போது, அதில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்வோம்.

லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதத்தின் 27ஆம் இரவில்தான் என இஸ்லாத்தில் பெரும்பான்மையான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். அவர்கள் அவ்வாறு விளங்கிக் கொண்டதற்கு காரணத்தையும் கூறுகின்றனர். லைலத்துல் கத்ர் இரவு பற்றி அல்லாஹ் இறக்கிய மேற்படி அத்தியாயத்தில் லைலத்துல் கத்ர் என்ற வார்த்தை மூன்று முறை வருகிறது. மேற்படி மூன்றை ஒன்பதைக் கொண்டு பெருக்கினால் இருபத்திஏழு. எனவே இருபத்தி ஏழாம் இரவில்தான் லைலத்துல் கத்ர் என்று, குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லாத ஒரு ‘அரிய?..!’ விளக்கத்தைத் தருகின்றனர். மேற்படி விளக்கத்தைத் தருவதோடு மட்டுமில்லாமல் இஸ்லாமிய மார்க்கத்தை ஓர் சடங்கு மார்க்கமாக கருதிய பலர், ரமளான் மாதத்தின் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் (அதாவது வெள்ளி, திங்கள், மற்றும் 27ஆம் இரவு ஆகிய நாட்களில்) பள்ளிகளில் நிரம்பி வழிவர். குறிப்பாக இருபத்தி ஏழாம் இரவில் மாத்திரம் அதுவரை கண்டிராத கூட்டம் பள்ளியில் அலைமோதும். அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும், பண்டங்கள், பழங்கள் குவியவும் காரணமாக அமையும். அந்த நிலை சரியானதுதானா என்பதை இந்த கட்டுரையில் ஆய்வு செய்வோம்.

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.’ (அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான் – 2முதல் 4வரையிலான வசனங்கள்) என அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்.

அருள்மறை குர்ஆன் யாருக்கு அருளப்பட்டதோ, அந்த அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் பற்றி என்ன விளக்கமளிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ர்) இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதார நூல்: புஹாரி)

லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் வெளியில் வந்தேன் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தார்கள். அவ்விருவருடனே ஷைத்தான் இருந்தான். எனவே நான் அதை மறந்துவிட்டேன். எனவே அதை (லைலத்துல் கத்ரை) கடைசி பத்து நாட்களில் தேடுங்கள்’ (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)

மேற்குறிப்பிட்ட ஹதீஸ்கள் யாவும் பொதுவாக லைலத்துல் கத்ர் பிந்திய பத்து இரவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

‘லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ – (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி)

மேற்படி ஹதீஸிலிருந்து லைலத்துல் கத்ர் இரவு பிந்திய பத்துக்களில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த செய்திகள் இருக்க, மூன்றை ஒன்பதால் பெருக்கினால் வரும் விடை 27. அந்த 27ஆம் இரவில்தான் லைலத்துல் கத்ர் இரவு என்ற ‘அதிமேதாவித்தனமான’ விளக்கத்தை இவர்களுக்கு அளித்தது யார்?. இறைத்தூதருக்கும் மேலாக லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் அளிக்க வேறு எவருக்கும் அருகதையேதும் உண்டா? எவரோ அளித்த ஆதாரமற்ற விளக்கத்தை வைத்துக் கொண்டு, அந்த 27ஆம் இரவில் மாத்திரம் தொழுதுவிட்டு மற்ற ஒன்பது இரவுகளையும் வீணே விட்டுவிடுவது சரிதானா? இல்லை முறைதானா? அவ்வாறு தொழும் அந்த 27ஆம் இரவில்கூட பழங்கள், பதார்த்தங்கள், நேர்ச்சை பொட்டலங்கள் என்று அமர்க்களப்படுத்தப்படுவதெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயலா? ‘லைலத்துல் கதர் இரவின்’ சிறப்புக்களைப் பற்றி அறிந்தால், மார்க்கத்தில் இல்லாத செயல்களைச் செய்ய மனம் இடம் கொடுக்குமா?

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்றை காண்போம்:

‘யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சொன்ன வணக்கத்தை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு அவர்கள் காட்டித் தந்த வழிமுறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

லைலத்துல் கத்ரும் பிரத்யேகத் தொழுகையும்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையும் காட்டித் தரவில்லை. அவ்வாறு பிரத்யேகத் தொழுகை எதுவும் இல்லை என்பதற்கு கீழக்காணும் ஹதீஸே போதிய ஆதாரமாகும்.

‘ரமளானில் நபி(ஸல்) அவர்கள் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, ரமளானிலும், ரமளான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத் (8103) மேல் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஸலமா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி).


மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி (ஸல்) அவர்கள் – தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல், ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள். இவ்வாறானத் தொழுகையைத்தான் நாமும் தொழ வேண்டும். அதை விட்டுவிட்டு, இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத தஸ்பீஹ் தொழுகை, குல்குவல்லாஹு ஸுராவை நூ று தடவை ஓதி தொழும் தொழுகை, என நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத வணக்கவழிபாடுகளையெல்லாம் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் செய்து வருவது எதன் அடிப்படையில் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

லைலத்துல் கத்ர் இரவில் சொல்ல வேண்டிய பிரார்த்தனை

‘அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால், அந்த இரவில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு,

‘அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி’ (யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!) என்று கற்றுக் கொடுத்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி)

பள்ளியில் தங்கி இருத்தல் (இஃதிகாஃப்)

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் பள்ளியில் தங்கி இருந்து, மற்ற நாட்களைவிட அதிகமான அளவு வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.

‘நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும்வரை இஃதிகாஃப் (பள்ளியில் தங்கி) இருந்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

‘நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய பத்துக்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: முஸ்லிம்)

‘அல்லாஹ்வின் திருத்தூதர், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் (ரமளானின்) பிந்திய பத்து இரவுகள் வந்ததும் வணக்கத்தில் ஈடுபட முழுமையாக ஆயத்தமாகி விடுவார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பார்கள். தனது குடும்பத்தையும் விழிக்கச் செய்வார்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் முன்னெப்போதையும்விட அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெளிவாகிறது. அதுவும் (இஃதிகாஃப்) பள்ளியிலேயே தங்கி இறை நினைவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை இவ்வாறு இருக்க, நம் மக்களில் பலர் அடையாளம் தெரியாத நபர் யாரோ சொன்ன ‘அதிமேதாவித்தனமான’ விளக்கத்தை வைத்துக்கொண்டு, ரமளானின் 27ஆம் இரவில் மட்டும் ஏனோதானோ என்று பள்ளிக்கு வருவதும், மற்றுமுள்ள நாட்களிலும் இறை மன்னிப்பைத் தேடுவதை விட்டுவிட்டு, வீட்டில் குறட்டை விடுவதும் சரியானதா?

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இஃதிகாஃப் (பள்ளியில் இறை நினைவுடன் தங்கியிருத்தல்) இன்று நம் மக்களின் நடைமுறையில் இல்லை. இதற்கு காரணம் ஏனெனில் இஃதிகாஃப் இருக்கும்போது அவசியமான காரியங்களுக்குக் கூட பள்ளியைவிட்டு வெளியேறக்கூடாது என்று காட்டப்படுவதும், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இறைநினைவுடன் தங்கியிருந்த முறை மக்களுக்கு சரியாக எடுத்துக் காட்டப்படாததுமே ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைநினைவுடன் பள்ளியில் தங்கியிருந்த முறையை பார்ப்போம்.

‘நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் ஸுப்ஹுதொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடம் சென்றுவிடுவார்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)

‘நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் பித்ரு) பெருநாளன்று (காலை) உணவு உண்டு, பெருநாள் தொழுகை முடிக்காத வரை (இஃதிகாஃபை) விட்டு வெளியே வரமாட்டார்கள்’. (அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, ஹாகிம், அஹ்மத்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது (மிக முக்கியமான அவசியத் தேவைகளைத் தவிர) பள்ளியைவிட்டு வெளிவரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

பள்ளியில் தங்கி இருக்கும்போது (இஃதிகாஃப்) அனுமதிக்கப்பட்டவை

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மனிதனின் அவசியத் தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

‘நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாய்க்காரியாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

‘நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்கு அவர்களும் எழுந்தார்கள்.’ (அறிவிப்பவர்: சபிய்யா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இஃதிகாஃப் இருப்பவர் மிக முக்கியமான அவசியத் தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளுக்குச் செல்வது அனுமதிக்கப்பட்டவையே என்பதை அறியலாம்.

பள்ளியில் தங்கி இருக்கும்போது (இஃதிகாஃப்) அனுமதிக்கப்படாதவை.

அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்.’ (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா – 187வது வசனத்தின் ஒரு பகுதி)

‘இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியை தீண்டாமல் இருப்பதும், அணைக்காமல் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டேத் தவிர வெளியில் செல்லாமல் இருப்பதும் நபி வழியாகும்’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

மேற்குறிப்பிட்ட இறைமறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறையில் இருந்தும் பள்ளியில் தங்கி இருக்கும்போது அனுமதிக்கப்படாதவை எவை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

லைலத்துல் கத்ர் இரவும், முஸ்லிம்களில் பெரும்பாலோரின் நடைமுறையும்

தஸ்பீஹ் தொழுகை, குல்குவல்லாஹு ஸுராவை நூறு தடவை ஓதி தொழும் தொழுகை, ராத்திபுகள், குர்ஆன் ஓதி கத்தம் செய்தல், குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்கள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயத்தோடு ஓதி ஸஜ்தா செய்யாமல் மொத்தமாக 27ஆம் இரவில் ஓதி ஸஜ்தா செய்வது போன்றவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தராத, நாமே உருவாக்கிக் கொண்ட நூதனங்கள் (பித்அத்) ஆகும். இதுபோன்ற நூதனங்களை தவிர்ப்போம்.

லைலத்துல் கத்ர் இரவிலும், ரமளானின் கடைசி பத்திலும், அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அனுமதித்தவைகளை நடைமுறைப்படுத்துவோம். அனுமதிக்காதவைகளை தவிர்ந்து நடப்போம். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த வழியில் நம் வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வோம். அதற்குரிய அறிவையும், ஆற்றலையும், பக்குவத்தையும் தர வல்ல அல்லாஹ்வையே பிரார்த்திப்போம்.

நோன்பு கேள்வி – பதில்கள்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

கேள்வி: மன திருப்திக்காக நோன்பு நீய்யத்தை தமிழில் சொல்லிக் கொள்ளலாமா..?  ஒளு செய்து விட்டு மனைவியை முத்தமிட்டால் ஒளு முறியுமா..? ஷரீஃப்.

விளக்கம்: ஹஜ்-உம்ராவிற்கு தவிர மற்ற அமல்களுக்கு நிய்யத் சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்ற எந்த விதியும் மார்க்கத்தில் இல்லை. நிய்யத் என்றால் என்னவென்று விளங்காததால்தான் நாம் நியத்தை வாயால் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.எனவே முதலில் அதை விளங்குவோம்.

இன்னமல் அஃமாலு பின்னிய்யத்’| என்பது நபிமொழி.(புகாரி)

எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும்-என்பது இதன் பொருள். நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் நம் எண்ணத்தில் உதிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால்தான் நாம் தண்ணீர் குடிப்போம் இதுதான் நிய்யத் ‘நான் இப்போது தண்ணீர் குடிக்கப்போகிறேன்’ என்று யாரும் வாயால் சொல்லி விட்டு தண்ணீர் குடிப்பதில்லை.

குடிப்பது-நடப்பது-தூங்குவது-பார்ப்பது-என்று நமது ஒவ்வொரு செயலும் நிய்யத் அடிப்படையிலேயே அமைகின்றன. வணக்க வழிபாடுகளுக்கான நிய்யத்தின் நிலையும் இதுதான்.

தொழவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் ஒளுசெய்ய முடியும் தொழுகைக்கு தயாராக முடியும். இப்படி தயாரான பிறகு மீண்டும் நிய்யத் செய்கிறேன் என்பது அறிவுக்குப் பொருந்தாத மார்க்கத்தில் இல்லாத காரியமாகும். நிய்யத் செய்கிறேன் என்று அரபியிலோ தமிழிலோ சில வார்த்தைகளை கூறுவது நபி வழிக்கு மாற்றமான கட்டாயம் விட்டுத் தொலைக்க வேண்டிய செயலாகும்.

மன திருப்திக்காக செய்யலாமா..? என்பதுதான் ஷைத்தானுக்கு இடம் கொடுக்கும் வாதமாகும். தெளிவான ஒரு காரியத்திற்கு எதிராக மன ஊசலாட்டங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

நோன்பை பொருத்தவரை பஜ்ருக்கு முன்னால் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட வேண்டும் என்று ஹதீஸ் வந்துள்ளது(திர்மிதி) எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் அமல் அவ்வளவுதான்.

ஒளுவிற்கு பிறகு மனைவியை தொட்டாலோ முத்தமிட்டாலோ ஒளு போகாது ஏனெனில் தொழுகையின் போது நபி அவர்கள் தம் மனைவி ஆயிஷா ரலி அவர்களை தொட்ட விபரமும் அதே போல் ஆய்ஷா அவர்கள் தம் கணவர் நபி அவர்களை தொட்ட விபரமும் புகாரி உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.


கேள்வி: சஹர்வுடைய நேரம் முடிந்த பிறகு நாம் தண்ணீர் குடிக்கலாமா? பவுஜியா,பரங்கிப்பேட்டை.

சஹர் முடியும் நேரம் என்று ஒரு சிலரால் குறிப்பிட்ட நேரம் வரையறுக்கப்பட்டு அந்த நேரங்களையே ஒருசில ஜவுளிக்கடைகள் விளம்பர அட்டைகளில் பிரசுரித்துக் கொடுக்கிறார்கள். உண்மையிலேயே சஹர் முடியும் நேரத்திற்கும், இவர்கள் தொழுது கொண்ட நேரங்களுக்கும் மிகுந்த வேறுபாடுண்டு.

சுபுஹு தொழுகைக்கு பாங்கு சொல்லி முடியும்வரை சஹர் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு. சுபுஹு தொழுகைக்காக உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை சஹர் உணவை உண்ண நபி (ஸல்) ஏவியுள்ளார்கள். உம்மி மக்தூம் (ரலி) (சுபுஹுக்காக) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்பது நபி மொழி . அறிவிப்பாளர்:ஆய்ஷா(ரலி), (புகாரி,முஸ்லிம்,நஸயி)

நாங்கள் ஸஹர் செய்து விட்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுகைக்கு கிளம்புவோம் என்று ஜைத் பின் தாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிவதற்கும்,தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம் எவ்வளவு என்று கேட்டேன் அதற்கு ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஸஹர் முடிந்து தொழுகை ஆரம்பமாக ஏறத்தாழ பத்து நிமிடங்களே இடைவெளி இருந்தன. நபியுடைய இந்த வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமாக இன்றைய நடைமுறையுள்ளது. ஸஹர் முடிந்து விட்டது என்ற அறிவிப்புக்குப்பின் 20,25 நிமிடங்கள் கழித்தே பாங்கு சொல்லப்படுகிறது, அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து இகாமத் சொல்லப்படுகிறது. ஆக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு முன்பே ஸஹரை முடித்து கொள்ள வேண்டும்! என்று போலியான சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். இந்த சட்டங்களை அலட்சியப் படுத்தி விட்டு பாங்கு சொல்லும் வரை உண்ணுவோம், பருகுவோம்.


கேள்வி: பெண்கள் நோன்பு வைத்துக் கொண்டு குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா? தெரியாமல் கொடுத்தால் அதற்கு பரிகாரம் உண்டா? ஷரீஃப்

விளக்கம்: கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும். (மேலதிக விளக்கம் ‘நோன்பு சட்டங்கள், சலுகைகள், பரிகாரம்’ என்றக் கட்டுரையில்)

எனவே நோன்பு நோற்பதால் உடல் நலத்திற்கு பிரச்சனை இல்லையெனில் நோன்பு நோற்று குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாம்.


கேள்வி: ரமளானின் இரவு நேரங்களில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டு குளிக்காமல் ஸஹர் செய்யலாமா..? இரவு நேரத்தில் குளிப்பதற்கு கஷ்டப்படுவதால் பலர் மனைவியுடன் சேருவதில்லை. குளிக்க வேண்டும் – குளிக்கத் தேவையில்லை என்று இரு கருத்து நிலவுகிறது. எனவே இது சம்பந்தமான தெளிவு வேண்டும். அபுதாபியிலிருந்து சகோ:அப்துர்ரஹ்மான்.

விளக்கம்: மனைவியுடன் சேர்ந்தோ அல்லது தூக்கத்தில் விந்து வெளிபட்டாலோ குளிப்பு கடமையாகிறது. இந்த குளிப்புக்கடமை என்ற சட்டம் தொழுகைக்குறியதாகும். நோன்பிற்கோ இதர நல்ல காரியங்களுக்கோ குளிப்புக் கடமையானவர் குளிக்கவேண்டும் என்று இஸ்லாம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு தயாரானால் ..(ஒளு செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை இறைவன் இங்கு விளக்குகிறான்..அதை தொடர்ந்து..) நீங்கள் குளிப்புக் கடமையானவராக இருந்தால் குளித்து சுத்தமாகிக் கொள்ளுங்கள்..என்கிறான்'(பார்க்க,குர்ஆன்:5,6)

எனவே ரமளானில் மனைவியுடன் கூடி குளிப்புக் கடமையானால் அவரோ அவர் மனைவியோ ஸஹருக்கு முன் குளிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

இறை நம்பிக்கையாளர்களே! நோன்பின் இரவுகளில் உங்கள் மனைவியுடன் நீங்கள் உடலுறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது……………..எனவே (விரும்பினால்) நீங்கள் அவர்களோடு உறவுக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதை தேடிக் கொள்ளுங்கள்……… இன்னும் பஜ்ர் வரை உண்ணுங்கள் பருகுங்கள்.’|(பார்க்க குர்ஆன்:2:187)

இந்த வசனத்தில் உறவு கொள்வது-உண்ணுவது-பருகுவது எல்லாம் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று அனுமதியளிக்கிறான் இறைவன். சிலர் சொல்வதுப் போல் உறவுக்குப் பின் குளித்து விட்டுதான் ஸஹர் செய்ய வேண்டும் என்பது சட்டம் என்றால் மூன்று காரியங்களும் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று இறைவன் கூறமாட்டான். இந்த வசனத்iதை ஆழமாக சிந்தித்தால் குளிப்புக் கடமையான நிலையிலேயே ஸஹர் செய்யலாம் நோன்பை தொடரலாம் என்பதை விளங்கலாம்.

ஸஹருக்கு அடுத்து பஜ்ர் தொழுகை இருப்பதால் – தொழுகைக்கு குளிப்பு அவசியம் என்பதால்- கட்டாயம் குளிக்க வேண்டும். இது தொழுகைக்கான குளிப்புத்தானே தவிர நோன்புக்குறியதல்ல என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.

நபி-ஸல்-அவர்களும் குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்து நோன்பை தொடர்ந்துள்ளார்கள். இதற்குரிய ஆதாரம் புகாரி-முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.


கேள்வி: வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க தடை உண்டா?. ஆம் எனில் பிறகு எந்த நாட்களில் வைக்க வேண்டும்? ஷஃபிகுர் ரஹ்மான்.

வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க ஹதீஸ்களில் தடை இருப்பது உண்மைதான்.

நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘நேற்று நோன்பு வைத்தாயா? என்றார்கள். ‘இல்லை’ என்றேன். ‘நாளை நோன்பு வைக்கப்போகிறாயா?. என்றார்கள். ‘இல்லை’ என்றேன். ‘அப்படியானால் நோன்பை முறித்துவிடு’ என்றார்கள். நான் நோன்பை முறித்து விட்டேன் என ஜூவைரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அலி(ரலி), ஜாபிர்(ரலி), ஜூனாதா(ரலி), அனஸ்(ரலி), அபூஹூரைரா(ரலி) ஆகிய நபித்தோழர்கள் மூலமாகவும் ‘வெள்ளிக் கிழமைகளில் நோன்பு தடைசெய்யப்பட்ட செய்தி வந்துள்ளது. (புஹாரியில் உள்ள ஹதீஸ் எண்: 1984, 1986, 1986, – திர்மிதி – 740)

வெள்ளிக்கிழமையை எப்படி சிறப்பிக்க வேண்டுமோ, அப்படி சிறப்பித்து விட்டான். அந்த சிறப்பின் காரணமாக அன்றைய தினம் நோன்பு வைத்தால் நன்மை அதிகம் என்ற நாமாக அதை தனிமைப் படுத்தக் கூடாது என்பதால் இந்த தடை வந்திருக்கலாம். வியாழன் – வெள்ளி, அல்லது வெள்ளி – சனி, என இரண்டு நாட்கள் சேர்ந்தார்போல் நோன்பு வைக்க ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு.

ஒவ்வொரு மாதமும் 13,14,15 ஆகிய பிறை நாட்களில் நோன்பு வைப்பதற்கும், வார நாட்களில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பதற்கும் புஹாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய ஹதீஸ் நூல்களில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.


கேள்வி – நோன்பு காலத்தில் இரவில் மனைவியுடன் உடல் உறவு கொண்டு விட்டு ஒலு செய்து விட்டு துங்கி விட்டோம் எழுந்திருக்கும்போது பாங்கு சொல்லி விட்டார்கள் பிறகு எழுந்திருத்து குளித்து விட்டு நிய்யத் செய்ய நாடினேன் ஆனால் பிரயாணத்தில் வந்து விட்டு அன்று மாலை திரும்புவதால் பிரயாணக்களைப்பில் இருப்பீர்கள் ஆகையால் களா செய்து கொள்ளாலாம் என்று என் மனைவி சொல்ல களைப்பின் காரணமாக அந்த நோன்பை களா செய்து ஆறு நோன்பில் வைத்தேன் சரியா விபரம் தேவை. மெய்தீன் – யாஹூ மெயில் வழியாக

பிரயாணிகளும் நோயாளிகளும் நோன்பை களா செய்யலாம் என்று அனுமதியுள்ளது. (பார்க்க அல் குர்ஆன் 2:184,185) ஒருவர் உள்ளுர் திரும்பிய பிறகு அவர் பிரயாணியாக கருதப்பட மாட்டார் எனவே பிரயாணிக்குரிய சலுகை இவருக்குப் பொருந்தாது. நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் போது உங்கள் மனைவி பிரயாண களைப்பை காரணம் காட்டி இருக்க வேண்டிய அவசியமில்லை. நோன்பு வைக்க முடியாத அளவிற்கு உங்கள் உடம்பு களைப்படைந்திருந்தால் இறைவன் அதை மிக்க அறிந்தவனாக இருப்பதால் கவலைப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. பிறகு களா செய்தது சரிதான். பாங்கு சொன்ன பிறகு குளித்து விட்டு நிய்யத் செய்ய நாடியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

குளிப்பு கடமையான நிலையிலேயே நோன்பிற்குரிய நிய்யத்தை மனதில் எண்ணிக் கொள்ளலாம் எந்த பிரச்சனையும் இல்லை. குளிப்பு கடமையானவர்கள் நோன்பு நோற்கக் கூடாது நிய்யத் செய்யக் கூடாது என்று எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை. நபி(ஸல்) குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்றுள்ளார்கள். (புகாரி 1931,1932)

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடமையான நோன்பிற்குரிய நிய்யத்தை நாம் நினைத்த நேரமெல்லாம் எண்ணிக் கொள்ள முடியாது. பஜ்ருக்கு முன்பே அந்த எண்ணம் நம்மிடம் வந்து விட வேண்டும்.

எவர் பஜ்ருக்கு முன்பு நோன்பு நோற்க முடிவு செய்யவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை என்பது நபிமொழி (ஹப்ஸா(ரலி) திர்மிதி 662)

எனவே மனைவியுடன் குடும்ப வாழ்வில் இணைபவர்களாக இருந்தாலும் ‘காலையில் எழ முடியாவிட்டாலும் நோன்பை தொடர வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருந்து விட்டால் அவர்கள் நோன்பைத் தொடரலாம். எழுந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்து விட்டு பஜ்ருக்கு பிறகு எழுந்து நோன்பு நோற்க எண்ணினால் அது அன்றைய தினத்திற்குறிய நோன்பில் சேராது. பின்னர் அதை களா செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும்.


கேள்வி – நோன்பு காலங்களில் குர்ஆன் ஓதுவதை கட்டாயம் செய்ய வேண்டுமா… குர்ஆன் ஒதத் தெரியாதவர்களின் நிலை என்ன விளக்கவும். இப்ராஹீம் – ஹாட் மெயில் வழியாக.

நோன்பு காலங்களில் மட்டுமல்ல முஸ்லிம்கள் எந்த நேரத்திலும் குர்ஆனுடன் தொடர்பு உள்ளவர்களாகவே இருக்க வேண்டும். குர்ஆன் இறங்கியதால் தான் ரமளான் என்ற ஒரு மாதமும் அதில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவும் மிக சிறப்புப் பெற்றுள்ளது. எதன் வெளிப்பாட்டால் ரமளான் சிறப்புப் பெற்றதோ அந்த குர்ஆனுடன் நாம் அதிகமாக ஐக்கியமாவதின் மூலம் தான் ரமளானை சிறப்பிக்க முடியும். குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் என்றெல்லாம் தட்டிக் கழிப்பது அறிவுடமையல்ல. முயற்சி செய்தால் கண்டிப்பாக குர்ஆன் ஓத முடியும். உண்மையிலேயே ஓத முடியாவிட்டாலும் முயற்சி செய்தால் அந்த முயற்சிக்கு இறைவன் கூலி கொடுப்பான்.


கேள்வி – நோன்பாளிகள் நறுமணம் பூசிக் கொள்ளலாமா..சென்ட் ஸ்ப்ரே இவைகளைப் பயன் படுத்தலாமா.. குவைத்திலிருந்து யூசுப் – ஹாட்மெயில் வழியாக.

உண்ணுவது – பருகுவது – உடலுறவுக் கொள்வது போன்ற காரியங்களுக்கு மட்டுமே தடை வந்துள்ளது. அந்த முயற்சிகலோ – அது சார்ந்த முயற்சிகளிலோ ஈடுபடக் கூடாது. அதுவல்லாத செயல்களுக்குத் தடையில்லை. மணம் பூசிக் கொள்வது – பவுடர் போட்டுக் கொள்வது – எண்ணைய் தேய்த்துக் கொள்வது – விக்ஸ் – டைகர்பாம் – தைலம் போன்றவற்றை தேவைக்கு பயன்படத்துவது இவற்றிர்க்கெல்லாம் தடை எதுவுமில்லை.


கேள்வி : எனக்கு மாதவிடாய் சரியாக வருவதில்லை. சில சமயம் 15 – 20நாட்கள் நாட்கள் வரை வருகிறது. இந்நிலையில் நான் எப்படி ரமளான் நோன்பை நோற்க முடியும்? சகோதரி கதீஜா – எமிரட்ஸ் மெயிலில்.

உங்கள் கேள்வியில் தெளிவு இல்லை. சரியாக வருவதில்லை என்று கூறிவிட்டு 15 – 20 நாட்கள் நீடிக்கிறது என்றும் குறிப்பட்டுள்ளீர்கள். இது போன்ற பிரச்சனைகளுக்கு கேள்வி ஒழுங்காக கிடைத்தால்தான் சட்டங்களை தெளிவாக பெற முடியும். உங்களுக்கு இது நீண்ட காலபிரச்சனையா என்றும் தெரியவில்லை.

இப்படி ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு முன் மாதாமாதம் உங்களுக்கு 1 முதல் 6 நாட்கள் வரை மாதவிடாய் வந்துக் கொண்டிருந்தால் அதுதான் உங்களின் வழக்கமான மாதவிலக்கு நாட்களாகும். சிலருக்கு 3 நாட்கள், சிலருக்கு 5 நாட்கள் 7நாட்கள் மிக அபூர்வமாக சில பெண்களுக்கு 15 நாட்கள் வரைக்கூட மாதவிலக்கு வரும். நாட்கள் மாறாமல், கூடுதல் குறைவு இல்லாமல் ஒரு பெண்ணுக்கு இயல்பாக எத்துனை நாட்கள் மாதவிலக்கு வந்தாலும் அந்த பெண்ணை பொருத்தவரை அது மாத விலக்கு தான்.

உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி துவங்கும் மாதவிலக்கு மாத கடைசி வரை (அதாவது 10 நாட்கள்)நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாதமும் இதுதான் வழமையாக உள்ளது. நாட்கள் மாறுவதும் இல்லை, 10நாட்கள் என்பது 12 நாட்களாக கூடுவதோ 8 நாட்களாக குறைவதோ இல்லை என்றால் அந்த பெண்ணின் மாதவிலக்கு நாட்கள் 10 தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அந்த பெண்ணை பொருத்தவரை அது குறைப்பாடும் அல்ல. அந்த பத்து நாட்களில் அந்த பெண் தொழக் கூடாது – நோன்பு வைக்கக் கூடாது. நோன்பை பின்னர் வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு மாற்றமாக ஒழுங்கீனமாக இப்படியும் – அப்படியுமாக மாறி -மாறி மாதவிலக்கை உணரும் பெண்கள் அதை பரிசீலிக்கத்தான் வேண்டும்.

மாதந்தோரும் 3 நாட்களோ – 5 நாட்களோ மதவிலக்கு வரும் பெண்ணுக்கு திடீரென்று அதற்கு மேற்பட்ட நாட்களும் நீடிக்கிறது என்றால் வழமையாக வரும் நாட்களை மட்டும் தான் மாதவிலக்கு நாட்களாக அந்தப் பெண் கணக்கெடுக்க வேண்டும். மேற்கொண்டு நீடிக்கும் நாட்கள் மாதவிலக்கு நாட்களில் அடங்காது.

நரம்பு கோளாரின் காரணமாக தொடர்ச்சியான இரத்தப் போக்கு ஏற்படலாம். அப்படி ஏற்படும் இரத்தப் போக்கிற்கும் மாதவிடாய்க்கும் சம்பந்தமில்லை.

மாதவிடாய் என்பது ஒரு நோயல்ல ஆனால் உதிரப்போக்கு என்பது நரம்பு நோய். வெளியேறும் இரத்தத்தின் தன்மையை வைத்துக் கூட இதை தெரிந்துக் கொள்ள முடியும். கரு முட்டை சிதைவினால் ஏற்படும் மாதவிடாய் இரத்தம் கருத்த சிவப்பில் அடர்த்தியாக இருக்கும். முடியும் தருவாயில் மஞ்சல் நிறமாகி விடும். அதன் வாடையும் வேறுவிதமாக இருக்கும். நரம்பு பிரச்சனையால் ஏற்படும் இரத்தப் போக்கிற்கு இந்த தன்மை இருக்காது.

எனவே மாதவிலக்கு அல்லாத இரத்தப் போக்கை காணும் பெண்கள் நோன்பையோ தொழுகையையோ விட்டுவிட அனுமதி இல்லை.

இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இதுபற்றியெல்லாம் பெண்கள் கேட்டு தெளிவு பெற்றுள்ளனர்.

‘(மாதவிலக்கு அல்லாத நாட்களில் வெளிப்படும் மஞ்சல் நிற இரத்தத்தையும், மண் நிறத்து இரத்தத்தையும் நாங்கள் மாதவிலக்காக முடிவு பண்ண மாட்டோம்’ என்று நபித்தோழியான உம்மு அத்திய்யா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாடம் மாவிடாய், எண் 326)

மாதவிலக்கு – இரத்தப் போக்கு சட்டங்கள்.

எனக்கு அடிக்கடி கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதுபற்றி சட்டத்தை தெரிந்துக் கொள்ள நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். ‘இது ஒரு நரம்பு நோயாகும். ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிலக்கு நாளாக கருதிக் கொள். பின்னர் குளித்து 23 அல்லது 24 நாட்கள் தொழு, நோன்பும் வை இது உனக்கு போதுமானதாகி விடும். மற்றப் பெண்கள் மாதவிடாய் காலத்தை எப்படி கழிக்கிறார்களோ அது போன்று ஒவ்வொரு மாதமும் செய்துக் கொள்’ என்று நபி(ஸல்) கூறினார்கள். (ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) திர்மிதி 118, அபூதாவூத், அஹ்மத்)

தொடர் இரத்தப் போக்கு அல்லது நாட்கள் நீடித்துக் கொண்டு போகுதல் போன்ற அறிகுறித் தென்படுபவர்கள் இந்த செய்தி அடிப்படையில் தன் அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும்

வழக்கமான மாதவிலக்கு நாட்கள் போக மீதியுள்ள நாட்களில் கீழாடையை இறுக்கமாக்கிக் கொண்டு – இரத்தம் வெளிப்படும் நிலையிலேயே நோன்பை வைத்துவிட வேண்டியது தான். தொழுகைக்கும் இதுதான் சட்டம்.


கேள்வி – நோன்பு வைத்துக் கொண்டு ஆற்றிலி மூழ்கி குளிக்கலாமா… முஹம்மத் ஜஃப்ரி – யாஹூ மெயில் வழியாக.

ஆற்றிலி மூழ்கி குளிக்க தடையில்லை ஆனால் வாய் வழியாக தண்ணீர் உள்ளே சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


கேள்வி – வருடா வருடம் நோன்பில் கடைசி பத்து நாட்களில் ஊரார்களை அழைத்து இஃப்த்தார் பார்ட்டி என்று ஏழைகள் அல்லாதவர்களுக்கு கொடுக்கும் விருந்து அல்லாஹ்வுக்கு பிடித்தமான செயல்தானா? இதற்கு விளக்கம் தேவை. nizous@hotmail.com

மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய விருந்தாக இருக்கட்டும், நன்மையை எதிர்பார்த்துக் கொடுக்கக் கூடிய இது போன்ற விருந்தாகட்டும் எந்த விருந்திலும் ஏழைகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பது இஸ்லாம் சொல்லும் அறிவுரை. அவ்வாறு புறக்கணிக்கபட்டால் அது கெட்ட விருந்தாகவே முடியும் என்றும் நபிமொழி எச்சரிக்கிறது.

பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்துதான் விருந்துக்களிலேயே மிகக் கெட்டது என்பது நபிமொழி. (அபூஹூரைரா(ரலி) புகாரி1577)

விருந்துக்களில் பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு பணக்காரர்கள் என்றுமே ஏங்குவதில்லை. ஏனெனில் அவர்களிடம் பணம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய உணவை அவர்களால் உண்ண முடியும். ஏழைகளை பொருத்தவரை இது போன்ற உணவுகளுக்கு அவர்களின் உள்ளம் ஏங்கத்தான் செய்யும். திருமணம் உட்பட இது போன்ற விருந்துக் காலங்களில் தமக்கும் அழைப்பு வந்தால் சென்று கலந்துக் கொள்ளலாமே.. என்று அவர்களின் உள்ளம் வெளிப்படுத்தும் ஆசையில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களை புறக்கணித்து எதிர்ப்பார்ப்பே இல்லாதவர்களை அழைத்து விருந்து கொடுக்கும் நடை முறைதான் பரவலாக இருந்து வருகின்றது. இத்தகைய விருந்து பகட்டுக்காகவோ – பெருமைக்காகவோ வழங்கப்படும் விருந்தாகத்தான் இருக்க முடியும். வயிற்றுப்பசியுடன் இருக்கும் ஏழைப் புறக்கணிக்கப்பட்டு பசி என்றால் என்னவென்றே தெரியாதவர்களை அழைத்து விருந்தளிக்கும் போது அது கெட்ட விருந்தாகவே முடியும் என்ற நபியின் வார்த்தை எத்துனை அர்த்தம் வாய்ந்தது என்பதை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிகின்றது.

எனவே ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பகட்டுக்காக நடத்தப்படும் எந்த விருந்தும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருவதாக அமையவே அமையாது.


கேள்வி – என்பெயர் நாசர் நான் குவைத்தில் வசிக்கிறேன். என் கேள்வி நோன்பு வைத்துக் கெண்டு மருத்துவர் இடம் ஊசி போட்டு கொள்ளலாமா?. உடம்பில் அடிபட்டு விட்டால் காயத்துடன் மருந்தும் தையலும் போடலாமா?. n_007201 at yahoodotcodotin

உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் நோன்பை சிரமமாகக் கருதினால்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல் குர்ஆன் 2: 184 – 185)

இந்த வசனம் இரு சாராருக்கு சலுகையை முன் வைக்கிறது.

1) நோயாளிகள். 2) பிரயாணிகள்.

இவர்கள் நோயின் காரணமாகவோ – பிரயாணத்தின் காரணமாகவோ நோன்பை விட்டு விடலாம். பின்வரும் காலங்களில் அதை நோற்று பூர்த்தி செய்து விட வேண்டும்.

நோயாளி நோன்பை விட்டு விடலாம் என்பது எதை குறிக்கிறது?

பொதுவாக நோயாளி என்று இங்கு குறிப்பிடப்படுவதால் அனைத்து நோயையும் இது கட்டுப்படுத்தத்தான் செய்யும். இருப்பினும் நோய் என்றவுடன் நோன்பை விட்டு விடலாமா… என்று சிந்திக்கும் போது ஒரு அழுத்தம் இந்த வசனத்தில் இருப்பதை உணரலாம். அதாவது நோயாளி நோன்பை விட்டு விடலாம் என்பதிலிருந்து அவர் நோன்பு வைக்க முடியாத அளவிற்கு நோயாளியாக இருக்க வேண்டும் என்பது விளங்குகிறது.

தலைவலி என்பதும் – கண்வலி – கால் வலி போன்ற வலிகளும் நோய்தான் என்றாலும் இத்தகையோர் நோன்பு வைக்காமலிருக்கலாம் என்று முடிவு செய்வதில் எந்த நியாயமுமில்லை ஏனெனில் நோன்பால் இவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. இவர்கள் தலைவலிக்கு மருந்து தடவிக் கொண்டு – கண்வலிக்கு கண்களில் சொட்டு மருந்து இட்டுக் கொண்டு நோன்பைத் தொடலாம்.

காலில் அடிப்பட்டு ஒருவர் கட்டுப்போட்டுள்ளார் – ஒருவர் ஆணிக்கால் நோயால் அவதிப்படுகிறார் என்றால் இத்தகைய நோயுக்கும் நோன்பிற்கும் சம்பந்தமில்லை. இவர்கள் மருத்துவம் செய்து கொள்ளும் நிலையில் நோன்பைத் தொடலாம்.

ஒருவருக்கு அடிப்பட்டு காயம் ஏற்பட்டு விட்டது இதனால் அவருக்கு எத்தகைய இரத்த இழப்பும் (இதனால் அவருக்கு அதிகப்படியாக வெளியேறிக் கொண்டிருக்கவில்லை) ஏற்படவில்லை என்றால் அவர் தையல் போட்டுக் கொண்டு நோன்பைத் தொடரலாம். இரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தால் – இரத்தம் தேவைப்படும் நிலையில் அவர் இருந்தால் – ‘நான் நோன்பு வைத்துக் கொள்ளும் நிலையில் இரத்தம் ஏற்றிக் கொள்கிறேன்’ என்று சொல்லக் கூடாது. இவர் நோன்பு வைக்க முடியாத நோயாளியாகவே கருதப்படுவார். ஏனெனில் நோன்பாளி இரத்தம் குத்தி எடுப்பதை (இன்றைக்கு இதுதான் இரத்த தானம்) நபி(ஸல்) தடுத்துள்ளார்கள். நோன்பாளி பலவீனப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு தடுத்தார்கள் என்று நபித் தோழர் அறிவிக்கிறார்.

‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ”நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்து வந்தீர்களா?’ என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘இல்லை! ஆயினும், (நாங்கள் அதை வெறுத்தது) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி – 1940)

பலவீனப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் இரத்தம் கொடுக்கலாம் என்றாலும் ஏற்கனவே அடிப்பட்டு இரத்த இழப்பிற்கு ஆளானவர் பலவீனமற்றவராக இருப்பார் என்று கருத முடியாது. அவருக்கு இரத்தம் தேவைப்படும் நிலையிலிருந்தால் அவர் நோன்பு வைக்க முடியாத நோயாளியாகவே கருதப்படுவார். இரத்தம் ஏற்றப்பட்டு உடல் ஆரோக்ய நிலையைப் பெற்ற பின் தான் அவர் நோன்பு வைக்க வேண்டும்.

உண்ணக் கூடாது, பருகக் கூடாது, உடலுறவு கொள்ளக் கூடாது என்றத் தடையே வந்துள்ளது. இதிலிருந்து வாய் வழியாக வயிற்றை அடையும் எதுவும் நோன்பை முறித்து விடும் என்பதால் வாய் வழியாக உட் கொள்ளும் மாத்திரை – டானிக் போன்ற மருந்துகளை நோன்பாளி பயன்படுத்தக் கூடாது. ஊசி என்பது வாய்வழியாக உட்கொள்ளும் பொருளல்ல. ஊசி வழியாக ஏற்றப்படும் மருந்து வயிற்றை சென்று அடையப்போவதுமில்லை. அது நரம்பு மண்டல வழியாக நேரடியாக இரத்தத்தில் கலப்பதாகும். எனவே நோன்பாளி நோயாளியாக இருந்தால் அவர் ஊசி வழியாக மருத்துவம் செய்து கொண்டால் அவரது நோன்பு முறியாது. இந்த சந்தர்பத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் மருத்துவம் நோயிக்குரியதாக இருக்க வேண்டுமே தவிர உடல் ஆரோக்யத்திற்காக நோன்பு வைத்துக் கொண்டு மருத்துவம் செய்துக் கொள்ளக் கூடாது. உதாரணமாக நோன்பு வைத்திருக்கும் நிலையில் நோன்பாளி பலவீனப்படுவார் என்பது நாம் அறிந்ததே.. நோன்பாளி ஒருவர் தம் பலவீனத்தைப் போக்கிக் கொள்ள ‘நான் ஒரு பாட்டில் குளுகோஸ் ஏற்றிக் கொள்கிறேன் – இது நரம்பு வழியாகத்தான் உள்ளே போகிறது’ என்று முடிவெடுப்பாரேயானால் அது மருத்துவத்தில் அடங்காது. ஏனெனில் நோன்பாளி பலவீனப்படுவது நோன்பிற்குரிய இயல்பாகும். அது நோயல்ல என்பதால் அவர் செய்வதும் மருத்துவமாகாது. எனவே நோன்பாளி அவசியத்திற்காக நோன்பு வைத்துக் கொண்ட நிலையில் மருத்துவம் செய்து கொள்ளலாம்.


கேள்வி – நோன்பு காலங்களில் ஒரு பர்ளுக்காக 70 பர்ளுகளுடைய நன்மையும் ஒரு சுன்னத்துக்காக ஒரு பர்ளுடைய நன்மையும் வழங்கப்படுவதாக இஸ்லாம் கூறுகின்றது. எனவே நோன்பு காலங்களில் தொழுவதற்கும் பின்வரும் காலங்களில் பழக்கப்படுத்திக் கொள்வதற்கும் சுன்னத்தான தொழுகைகள் மற்றும் அவற்றிற்கான நன்மைகள் தொடர்பாக குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கமாக குறிப்பிடுவீர்களா? ilysjan at yahoodotcom

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஒரு பர்ளுக்கு எழுபது பர்ளுடைய நன்மை என்றோ – ஒரு சுன்னத்துக்கு ஒரு பர்ளுடைய நன்மை என்றோ எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை.

நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுகின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – (அபூஹூரைரா(ரலி) – புகாரி 1894)

ஒன்றுக்கு பத்து என்பது பொதுவாக எல்லா நன்மைகளுக்கும் உரியதாகும். (சில அறிவிப்புகளில் எழுநூறு வரை என்று கூறப்பட்டுள்ளது) ஆனால் ஒரு சுன்னத்துக்கு ஒரு பர்ளுடைய நன்மை என்பதை காண முடியவில்லை.

சுன்னத்தான தொழுகைகளைப் பற்றி இப்போது விரிவாக வெளியிட முடியாது. தொழுகைப் பற்றிய கேள்வி பதில் தொகுப்பு வெளியிடப் போகிறோம். சந்தேகங்களை எழுதுங்கள் என்று அறிவிப்பு செய்திருந்தோம். அப்போதே நீங்கள் சுன்னத் தொழுகைகளைப் பற்றி கேட்டிருக்க வேண்டும். இது நோன்பு பற்றிய தொகுப்பாகும். எனவே பிரிதொரு சந்தர்பத்தில் தான் உங்களின் இந்தக் கேள்விக்கான விரிவான பதில் கிடைக்கும்.


கேள்வி – நோன்பிற்கு ஒவ்வொரு நாளும் நிய்யத் வைப்பது அவசியமா? அல்லது முதல் நோன்பின் போது நிய்யத் வைத்தால் முழு மாதத்திற்கும் அது போதுமானதாகுமா? fsen at netscapedot.net

எவர் பஜ்ருக்கு முன்பு நோன்பு நோற்க முடிவு செய்யவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை என்பது நபிமொழி (ஹப்ஸா(ரலி) திர்மிதி 662)

ரமளான் மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும் என்று இறைவன் கூறியுள்ளதிலிருந்து அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவரிடம் வந்து விட வேண்டும் என்பது தெரிகிறது. ‘இந்த மாதம் முழுதும் நோன்பு நோற்க வேண்டும்’ என்று ஒருவர் மனதில் முடிவு செய்தால் அதுவே முழு நோன்பிற்குரிய நிய்யத் ஆகி விடும் என்றாலும் ஒருமாதம் என்பதால் இடையில் நோய் – பிரயாணம் இன்னபிற காரணங்கள் குறுக்கிட்டு நோன்பு வைக்க முடியாத சூழல் உருவாகலாம் என்பதால் தான் சூழ்நிலையை அனுசரித்து ‘பஜ்ருக்கு முன்’ நோன்பிற்கான எண்ணம் வர வேண்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். எனவே தினமும் அந்த எண்ணம் நம் மனதில் உதிக்க வேண்டும் என்பதுதான் சரியாகும்.


நோன்பாளி பேஸ்ட் உபயோகிக்கலாம்.

நோன்புக் காலங்களில் வாயை சுத்தம் செய்யலாமா.. என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவதுண்டு. சிலர் நோன்பின் காரணத்தால் வாயை சுத்தம் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு செய்வது நோன்பை பாதிக்கும் என்றும் விளங்கிக் கொண்டு வாயில் கை வைக்காமல் இருப்பார்கள். தொழுகையின் போது சரியாக வாய் கூட கொப்பளிக்க மாட்டர்கள். இது தவறான முடிவாகும். நோன்புக் காலங்களில் வாயை சுத்தம் செய்யக் கூடாது என்ற தடையும் இல்லை.

இன்னும சொல்லப் போனால் நோன்புக் காலங்களில் இன்னும் கூடுதலாக வாயை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் நோன்புக் காலங்களில் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் போது வாய் வாடை அதிகமாக வர வாய்ப்புள்ளது. இந்த வாடை பிற மனிதர்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வானவர்களைக் கூட பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.

எந்த வாடையால் மனிதர்கள் பாதிக்கப்படுவார்களோ அதே போல மலக்குகளும் பாதிக்கப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் ‘வெங்காயம் பூண்டை பச்சையாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வருபவர்களை எச்சரித்த போது கூறியுள்ளார்கள் (முஸ்லிம்)

‘நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத முறை பார்த்திருக்கிறேன்!’ என்று ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) கூறினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

”என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமம் தந்தவனாக ஆம்விடுவேன் என்ற அச்சம் (எனக்கு) இல்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குமாறு நான் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ஜாபிர்(ரலி), ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் வழியாகவும் இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் நோன்பாளிக்கு என்று தனிச்சட்டம் எதுவும் கூறப்படவில்லை.

”பல்துலக்குதல் வாயைத் தூய்மைப்படுத்துவதும் இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருவதுமாகும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) கூறினார். (இவை அனைத்;தும் புகாரியின் நோன்புப் பாடத்தில் இடம் பெற்றுள்ளது)

நபி(ஸல்) நோன்பு வைத்திருக்கும் போது எண்ணிலடங்கா முறை பல் துலக்கியுள்ளார்கள் என்றால் வாயை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

பல் துலக்குவதாக இருந்தால் மிஸ்வாக் குச்சியால் துலக்க வேண்டும். பேஸ்ட் போட்டு விளக்கக் கூடாது ஏனெனில் பேஸ்டின் சுவையை வாய் உணர்கிறது என்றெல்லாம் சிலர் கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

பேஸ்ட்டால் பல்துலக்கும் போது வாய் உணரும் வாசனையையும் புத்துணர்வையும் புதிய மிஸ்வாக்கால் பல்துலக்கும் போதும் வாய் உணரத்தான் செய்யும்;. அவ்வளவு ஏன் தண்ணீரால் வாய் கொப்பளிக்கும் போது தண்ணீரின் சுவையைக் கூட வாய் உணரத்தான் செய்கின்றது. அதற்காக வாயே கொப்பளிக்கக் கூடாது என்று சொல்லி விடலாமா…? என்றெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. எனவே நோன்பாளி பேஸ்ட் இட்டு பல் துலக்க எந்த தடையுமில்லை என்பதை நாம் விளங்கலாம்.

வாய் துற்வாடையை போக்க இப்போது ‘ஸ்ப்ரே’ வந்து விட்டது (மேற்கத்திய மோகம்) நோன்பாளி ஸ்ப்ரே பண்ணலாமா… என்ற சந்தேகத்தை எடுத்துக் கொண்டால் இதில் கவனம் தேவை ஏனெனில் ஸ்ப்ரே பண்ணும் போது அது தொண்டையைக் கடந்து விட வாய்ப்புள்ளது. அது நோன்பைப் பாழ்படுத்தி விடும் என்பதால் அதை உபயோகிக்காமல் இருப்பது தான் நல்லது.

இன்னுமொரு ஆட்சேபனை.

முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். (அபூஹூரைரா(ரலி) புகாரி 1904)

இந்த ஹதீஸை சிலர் எடுத்துக் காட்டி ‘சிறப்பு மிக்க’ அந்த வாடையை மாற்றக் கூடாது என்று வாதிப்பதையும் பரவலாகப் பார்க்கலாம்.

இவர்கள் விளங்குவதுதான் அந்த ஹதீஸூக்கு அர்த்தம் என்றால் நபி(ஸல்) நோன்புக் காலங்களில் பல் துலக்கி இருக்கவே மாட்டார்கள் என்ற சாதாரண விளக்கத்தைக் கூட புரிந்துக் கொள்ளாதவர்கள் இவர்கள்.

‘அல்லாஹ்விடத்தில் சிறப்புக்குரியது’ என்றால் அதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். நோன்பு வைப்பதால் வாயில் துர்வாடை வருகிறது என்று நோன்பையோ அதன் வாடையையோ வெறுக்க வேண்டாம். அந்த வாடை அல்லாஹ்விடத்தில் சிறப்புகுரியதாகும் என்பதே அதன் அர்த்தமாகும்.

எனவே தொண்டை வழியாக எதுவும் உள்ளே நுழையாத வகையில் வாயை எத்துனை தூய்மையாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்காக பேஸ்ட் போன்றவற்றையும் பயன்படுத்தலாம் தடையில்லை.

தொண்டைக்கு செல்லாத வகையில் உப்பு – காரம் போன்றவற்றைக் கூட வாயில் வைத்து சுவையை அறியலாம்.

வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம்.

பல் துலக்குதவற்குரிய அடிப்படையே இங்கும் பொருந்தி விடும். உண்ணுதல் – பருகுதல் – உடலுறவுக் கொள்ளுதல் ஆகியவைக் கூடாது என்பது நோன்புக்காக விதிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டமாகும். ஒருவர் வாசனை திரவியங்களை பயன்படுத்தும் போது ‘கூடாது’ என்று தடுக்கப்பட்ட எதுவும் அங்கு நிகழவில்லை என்பதால் அவற்றைப் பயன்படுத்தலாம் ஆனால் வாசனைப் பொருளை மூக்கின் வழியாக நுகரும் போது இதிலிருந்து எதுவும் (துகல்கள் – ஸ்ப்ரேயில் பயன்படுத்தப்பட்டுள்ள இதர பொருள்கள்) வயிற்றுக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ‘நோன்பாளி மூக்கிற்கு தீவிரமாக தண்ணீர் செலுத்தாமல் இருக்கட்டும்’ என்ற ஹதீஸை நாம் இங்கு பொருத்திக் கொள்ள வேண்டும்.