இஸ்லாம்தளம்

ஓகஸ்ட்30, 2009

நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தர்மமாக அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (மழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் 2:184,185)

1) ஹம்ஸா இப்னு அம்ருல் அஸ்லமி என்னும் நபித்தோழர், நான் பிரயாணத்தில் நோன்பு நோற்கலாமா? என நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்டார்கள். (அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்) நீங்கள் விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் நோன்பை விட்டுவிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

2) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு யுத்தத்திற்குச் சென்றிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பை விட்டவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறவில்லை. யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர் நோன்பு நோற்பது அவருக்கு சிறந்ததென்றும், யாருக்கு அதற்கு சக்தி இல்லையோ அவர் நோன்பை விடுவது சிறந்ததென்றும் அவர்கள் கருதினார்கள் என அபூ சயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) ஒரு பிரயாணத்தின் போது நிழலிலே ஒருவரை சூழ்ந்து, மக்கள் கூடியிருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இந்த உங்களின் நண்பருக்கு என்ன ஏற்பட்டு விட்டது? என கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பாளி என கூறினார்கள். பிரயாணத்தில் நோன்பு நோற்பது நல்ல செயலில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: ஒரு மரத்தின் நிழலிலே ஒருவர் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. (ஆதாரம்: நஸாயி)

4) நபி (ஸல்) அவர்களுடன் கோடைகாலத்தில், நாங்கள் ஒரு பிரயாணம் செய்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தார்கள். நாங்கள் (வெப்பத்தின் காரணமாக அப்பிரயாணத்திலே) நிழலில் உட்கார்ந்தோம். நோன்பு நோற்றவர்கள்(களைத்து) விழுந்துவிட்டார்கள். நோன்பில்லாதவர்கள் எழுந்து பிரயாணிகளுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். இதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ”நோன்பில்லாதவர்கள் இன்று அதிக நன்மை பெற்றுவிட்டார்கள்” எனக் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

5) நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு தொழுகையில் பாதியையும் (அதாவது நான்கு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்தாக சுருக்குவதற்கும்) நோன்பை விடுவதற்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை விடுவதற்கு அனுமதித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்;: நஸாயி)

6) மக்கா வெற்றி பெற்ற வருடம் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக நபி (ஸல்) அவர்கள் (மக்கா) சென்றார்கள். கதீத் என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

7) கோடைகாலத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றிருந்தோம். (சூட்டின் காரணமாக)ஒரு மனிதர் தன் தலைக்கு மேல் கையை வைக்கும் அளவிற்கு அந்த சூடு இருந்தது. எங்களில் நபி (ஸல்) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்கவில்லை என அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிமான புத்தியுள்ள, வயதுவந்த ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால், பிரயாணி, நோயாளி, கர்ப்பிணிப்பெண், பாலூட்டும் தாய், நோன்பு நோற்;க இயலாத வயோதிகர்கள், நோயிலிருந்து குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் இவர்களுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும், நோயாளியின் நோய் குணமானதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும். கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய் இவ்விருவரும் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்களும் குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு அல்லது பாலூட்டியதற்கு பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். நோன்பு நோற்கவே முடியாத வயோதிகர்கள் மற்றும் நோய் குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளித்தால் போதுமாகும். இவர்கள் விடுபட்ட நோன்புகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. அல்லாஹ் நன்கறிந்தவன்.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: