இஸ்லாம்தளம்

ஓகஸ்ட்12, 2009

நோன்பாளி பல் துலக்குவதில் குற்றமில்லை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி

1) என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு முறை உளுச் செய்யும் போதும் பல் துலக்குவதற்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, நஸாயி)

2) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது கணக்கிட முடியாத அளவிற்கு பல் துலக்குவதை நான் பார்த்திருக்கின்றேன் என ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

3) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், நோன்பு நோற்றிருக்கும் போது பகலின் ஆரம்பம் இன்னும் கடைசி நேரத்தில் பல் துலக்குவார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: பல் துலக்குவது நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திய சுன்னத்தாகும். இதனை நோன்பிலும் நோன்பு அல்லாத காலங்களிலும் செய்துள்ளார்கள். சிலர் நோன்பு நோற்றவர் பல் துலக்குவது கூடாது என்றும், அல்லது லுஹர் நேரத்திற்குப்பின் செய்யக்கூடாது என்றும் கூறுவது ஆதாரமற்றதாகும்.

நோன்பாளியின் உளு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி

அல்லாஹ்வின் தூதரே! உளுவைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுங்கள் என நபி (ஸல்) அவர்களிடத்தில் நான் கேட்டேன். உளுவைப் பரிபூரணமாகச் செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள். இன்னும் விரல்களுக்கு மத்தியில் கோதிக் கழுவுங்கள், நோன்பில்லாத நிலையில் மூக்கிற்கு தண்ணீர் செலுத்துவதை அதிகப்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு சபீரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)

விளக்கம்: நோன்பு நோற்றவர் உளுச் செய்தால் நாசிக்கும் வாய்க்கும் தண்ணீர் செலுத்தும்போது அடித்தொண்டை இன்;னும் அடிமூக்கு வரைக்கும் தண்ணீரைச் செலுத்தாமல் நோன்பில்லாத நேரத்தில் செய்வதை விட குறைத்துச் செய்ய வேண்டும். அடிமூக்கு அடித்தொண்டை வரைக்கும் தண்ணீரை செலுத்தினால் வாய்க்குள் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது.

நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி

1) அமல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்தே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: நிய்யத் என்பது உள்ளத்தில் ஒன்றை நினைப்பதற்குச் சொல்லப்படும். இன்றைய நோன்பை நோற்க வேண்டும் என்று நினைத்து ஸஹர் உணவு உண்பதே நிய்யத்தாகும். ஆனால், இன்று நிய்யத் என்ற பெயரில் சில வார்த்தைகள் (இந்த வருடத்து ரமளான் மாதத்தின் பர்ளான நோன்பை நாளைப்பிடிக்க அல்லாஹ்விற்காக நிய்யத் வைக்கின்றேன் என்று) சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. இப்படி நபி (ஸல்) அவர்கள் செய்யவுமில்லை. சொல்லித்தரவுமில்லை. இதற்கு நிய்யத் என்று சொல்லப்படவும் மாட்டாது.
இவ்வாறே, இன்றைய நோன்பை ஒருவர் நோற்க வேண்டும் என்ற நிய்யத் (எண்ணமில்லாமல்) இல்லாமல் பஜ்ர் வரைக்கும் தூங்கிவிட்டால், அவருக்கு அன்றைய நோன்பை நோற்க முடியாது. காரணம் அவர் இரவில் நிய்யத் (எண்ணம்) வைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணி பஜ்ர் வரைக்கும் ஒருவர் தூங்கிவிட்டால், ஸஹர் உணவை உண்ணாவிட்டாலும் அவர் அன்றைய நோன்பை நோற்கலாம், காரணம், அவர் அன்றைய நோன்பை நோற்க நிய்யத் வைத்திருந்தார்.

பெருந்தொடக்குள்ள பெண்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும்போது (மாதவிடாய் காரணமாக) சுத்தம் இல்லாமல் இருந்தால் (தொழவும் மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்) சுத்தமானதும் நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ஆனால், விடுபட்ட தொழுகைகளைத் தொழும்படி ஏவமாட்டார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: பெண்கள் மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேறினால் சுத்தம் இல்லாத காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது, சுத்தமானதும் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி

1) நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரை என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நானும், மஸ்ரூக் என்பவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் சென்று மூஃமின்களின் தாயே! நபி (ஸல்) அவர்களின் இரு தோழர்கள் நன்மை தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை, ஒருவர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி முதல் நேரத்தில் தொழுதும் விடுகின்றார். மற்றவர் நோன்பு திறப்பதைப் பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார் என்றனர். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படுத்துகின்றார்? என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) என்று நாங்கள் கூறினோம். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: மற்ற நபித்தோழர் அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் என்று வந்திருக்கின்றது. (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: மஃரிப் நேரம் வந்ததும் நோன்பு திறப்பதே சுன்னத்தாகும். இன்று சிலர் மஃரிப் நேரம் வந்த பின்பும், நோன்பு திறக்காமல், பேணுதல் என்ற போர்வையில், சூரியன் மறைந்த பின்பும் நோன்பு திறப்பதைப் பிற்படுத்துகின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ மஃரிப் நேரம் வந்ததும் நோன்பை திறக்கச் சொல்லியிருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாறாகச் செய்வது பேணுதலாகுமா? இது இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத்தாகும் என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (பத்ஹுல் பாரி 2:235)