இஸ்லாம்தளம்

ஓகஸ்ட்5, 2009

சந்தேகித்தல் உளவு பார்த்தல் பற்றி…

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1660. (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6066 அபூ ஹுரைரா (ரலி).

விசுவாசியின் பிணி பாவ பரிகாரமே.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1661. இறைத்தூதர் (ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.

புஹாரி :5646 ஆயிஷா (ரலி).

1662. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்” என்று கூறினார்கள். நான், ‘(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை” என்று கூறினார்கள்.

புஹாரி : 5648 இப்னு மஸ்ஊது (ரலி).

1663. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5640 ஆயிஷா (ரலி) .

1664. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5641 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அபூஹுரைரா (ரலி) .

1665. இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

புஹாரி :5652.அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்).

அநீதி தவிர்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1666. அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2447 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1667. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2442 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1668. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்” என்று கூறிவிட்டு, பிறகு, ‘மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்” எனும் (திருக்குர்ஆன் 11:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

புஹாரி :4686 அபூமூஸா (ரலி).

அநீதி இழைப்பவனுக்கும் உதவி புரி.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1669. நாங்கள் ‘ஒரு போரில்’ அல்லது ‘ஒரு படையில்’ இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி ‘அன்சாரிகளே! (உதவுங்கள்.)” என்று கூறினார். அந்த முஹாஜிர் ‘முஹாஜிர்களே! உதவுங்கள்!” என்று கூறினார். இந்தப் பேச்சை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செவியேற்று, ‘இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இறைத்தூதர் அவர்களே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார்” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை” என்று கூறினார்கள்.அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இதைக் கேட்டுவிட்டு ‘இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்” என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர் (ரலி) எழுந்து, ‘என்னை விடுங்கள் இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவரை விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது” என்று கூறினார்கள். மக்காவாசிக(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளை விட அதிகமானார்கள்.

புஹாரி :4905 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

விசுவாசிகள் ஒருவர் மற்றவரை நேசிப்பர்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1670. ”ஒரு கட்டிடித்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறை நம்பிக்கையாளர் இன்னொரு இறை நம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்” என்று நபி (ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.

புஹாரி 481 அபூமூஸா (ரலி).

1671. ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6011 நுஅமான் இப்னு பஷீர் (ரலி).