இஸ்லாம்தளம்

ஜூன்2, 2009

அல்குர்ஆனின் மாதம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான்
இந்த ரமழான்.
இது நோன்பின் மாதமாகும்,
இது அல்குர்ஆனின் மாதமாகும்,
இது பொறுமையின் மாதமாகும்,
இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும்,
இது இரவு வணக்கத்தின் மாதமாகும்,
இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

இப்படி பல பாக்கியங்களை உள்ளடக்கிய ரமழான் மாதமென்பது அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போன்று: ‘எண்ண முடியுமான சில நாட்களாகும்’ (2: 184). எனவே குறிப்பிட் இந்த நாட்களில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்மைகளை அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறவேண்டும். அதிகம் அதிகம் நன்மை செய்வதற்கு அழகான ஒரு சூழலை அல்லாஹ் அமைத்துத் தரும் போது கூட இதை ஒருவன் பயன்படுத்த தவரினால் அவன் வேரெந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்துவான்!.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை

1. ‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).

2. ‘உங்களில் எவர் அம்(ரமழான்)மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

3. இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிலைபெற்றுள்ளது:

முதலாவது: ‘ஷஹாதது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதர்ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகும் என்று சாட்சி கூறுதல்).

இரண்டாவது: தொழுகையை நிரைவேற்றல்,

மூன்றாவது: ஸகாத் கொடுத்தல்,

நான்காவது: ஹஜ் செய்தல்,

ஐந்தாவது: ரமழான் மாதம் நோன்பு நோற்றல்.’

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

4. ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபியிடத்தில் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எதை அல்லாஹ் என் மீது விதியாக்கினான் என வினவினார். அதற்கு நபியவர்கள், ஐந்து நேரத்தொழுகையாகும் அதைத்தவிர உபரியானவைகளை நீ விரும்பி செய்தால் உண்டு. நோன்பில் அல்லாஹ் எதை என் மீது விதியாக்கினான் அதற்கு நபியவர்கள், ரமழான் மாத நோன்பாகும் அதைத்தவிர உபரியானவைகளை நீ விரும்பி நோற்றால் உண்டு. ஸகாதில் அல்லாஹ் எதை என் மீது விதியாக்கினான் அதற்கு நபியவர்கள் இஸ்லாத்தின் அதன் சட்டங்களை தெளிவு படுத்தினார்கள். சத்தியத்தின் மீது அனுப்பி எவன் உங்களை கண்ணியப்படுத்தனானோ அவன் மீது சத்தியமாக அல்லாஹ் எதை என் மீது விதியாக்கினானோ அதில் எந்தக்குறைவும் நான் செய்யமாட்டேன், உபரியானவைகளை நான் செய்யமாட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர், இவர் சொல்வதில் உண்மையாளராக இருப்பாரென்றால் வெற்றி பெற்று விட்டார் என்றோ, அல்லது உண்மையாளராக அவர் இருப்பரானால் சுவர்க்கம் நுழைந்து விட்டார் என்றோ’ கூறினார்கள். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

5. அப்துல் கைஸ் குழுவினர் நபியிடத்தில் வந்த போது இவர்கள் யாரென நபியவர்கள் கேட்டார். அவர்கள் ரபீஆ கோத்திரத்தார் என கூறினர். எந்தக்கவலையும் துக்கமும் அற்ற வரவாக உங்கள் வரவு அமையட்டும் என நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! புனிதமான மாதங்களில் தவிர உங்களை சந்திக்க வருவதற்கு எமக்கு முடிவதில்லை. எமக்கும் உங்களுக்கும் மத்தியில் நிராகரிப்பாளர்களான முழர் கூட்டத்தினர் வசிக்கும் இடம் உள்ளது. அல்லாஹ்வின் தூதரே எம்மை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் காரியங்களை எமக்கு கட்டளையிடுங்கள் அதை நாம் நிறைவேற்றுவதுடன் எம்முடன் இருப்போருக்கும் அதை நாம் அறிவிப்போம். இன்னும் அவர்கள் குடிபானங்களை பற்றியும் கேட்டனர். நபியவர்கள் அவர்களுக்கு நான்கை கட்டளையிட்டதுடன், நான்கை விட்டும் அவர்களை தடுத்தார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை ஒருமைபடுத்துமாறு ஏவினார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை ஒருமைபடுத்துவது என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தான் மிகவும் அறிந்தவர்கள் என அவர்கள் கூறினர், ‘அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதர்ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகும் என்று சாட்சி கூறுதல்). இரண்டாவது: தொழுகையை நிறைவேற்றல், மூன்றாவது: ஸகாத் கொடுத்தல், நான்காவது: ரமழான் மாதம் நோன்பு நோற்றல், கனீமத்தில் ஐந்தில் ஒன்றை கொடுத்தல்’ என கட்டளையிட்டனர். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

6. குறைஷிகள் அறியாமை காலத்தில் ஆஷுரா தினம் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர், பிறகு நபியவர்களும் ரமழான் நோன்பு கடமையாகும் வரை அந்த தினத்தில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் பின் உங்களில் நாடியவர்கள் (ஆஷுரா) நோன்பை நோற்கவும், நாடியவர்கள் விடவும் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி.

நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து ஆதாரங்களின் மூலம், ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமையென்பதை விளங்க முடிகிறது. இதை எவர் மார்க்கம் அனுமதித்த தகுந்த காரணமின்றி அலட்ச்சியப்படுத்துவாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரிய குற்றத்தை செய்தவராவார். நம்மில் சிலர் இந்த ரமழான் மாத நோன்பை அலட்சியமாக விட்டு விடுவதையும் அதைப் பற்றி எந்தக் கவலையுமின்ற இருப்பதும் வேதனைக்குரிய விடயமாகும்.

மார்க்கம் அனுமதித்தக் காரணங்கள் இன்றி நோன்பை விடுவது பெரும் குற்றமாகும்:

காரணமில்லாமல் ரமழானின் நோன்பை விடுவது கூடாது. அது பெரும்பாவங்களில் ஒன்றாகும். வேண்டுமென்று அவர் நோன்பைவிட்டால் அவர் பாவியாகிவிடுவார். அதற்காக அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதுடன் அதை அவர் நோற்க வேண்டும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நான் உறங்கிக் கொண்டிருந்தபோது என்னிடத்தில் இரு மனிதர்கள் வந்து எனது மேல்கையை பிடித்து கரடு முரடான ஒரு மலைக்கு கொண்டுசென்று அதில் ஏறுமாறு கூறினார்கள். அதற்கு நான் என்னால் முடியாது என்று கூறினேன். அவ்விருவரும் உமக்கு நாம் வழியமைத்து தருகின்றோம் என்று கூறியதும், நான் மலையின் நடுப்பகுதிக்கு செல்லும்வரை ஏறினேன். அப்போது கடுமையான சத்தத்தைகேட்டு இது என்ன சத்தம் எனக்கேட்டேன். அதற்கவர்கள் இதுதான் நரகவாசிகள் ஓலமிடும் சத்தம் என்றார்கள். மீண்டும் அவ்விருவரும் என்னை நடத்திச் செல்கின்றார்கள். அப்பொழுது நான் ஒரு கூட்டத்தை (கண்டேன்) அவர்களின் குதிகால்கள் கட்டப்பட்டும், அவர்களுடைய கன்னங்கள் கிழிக்கப்பட்டு அதனால் அவர்களின் கன்னங்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து இவர்கள் யாரென கேட்டேன். (அதற்கு) அவ்விருவரும், இவர்கள்தான் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன்பாக நோன்பை திறந்தவர்கள் எனக்கூறினார்கள்.
(அறிவிப்பவர்:- அபூஉமாமா அல் பாஹிலி(ரழி) (அந் நஸாயி பிஃல் குப்ரா)

ரமழான் மாதத்தின் சிறப்பு


அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம்:
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).. இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்வதற்கு முன்வரவேண்டும்.

சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும்:
‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நரகத்திற்குரியவர்கள் விடுதலை:
‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

பாவங்களுக்கு பரிகாரம்:
‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் குழந்தைகள், தன்னில், தன் அண்டை வீட்டார் ஆகியோர் விஷயத்தில் ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு தொழுகை, நோன்பு, தர்மம், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் ஆகியவை பரிகாரமாக அமைகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: புஹாரி).

நன்மைகளை அதிகப் படுத்துவதற்கான அழைப்பு:
‘ரமழானின் முதல் இரவு வந்து விடுமானால் ஷைத்தான்களும், அட்டூழியம் புரியும் ஜின்களும் விழங்கிடப்படுகின்றனர். நரகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் அதில் ஏதும் திறக்கப்படமாட்டாது, சுவர்க்கத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படும் அதில் ஏதும் மூடப்படமாட்டாது. ஓர் அழைப்பாளர் நன்மையை விரும்புபவர்களே அதிகம் நன்மை செய்யுங்கள், பாவங்களை விரும்புபவர்களே பாவங்களை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுப்பார். ஒவ்வொரு இரவும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.’ என நபிகள் நாயகம் (ஸல்ய) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா).

ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு:
ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

நன்மையில் நிறைவான மாதம்:
துல் ஹஜ், ரமழான் ஆகிய பெருநாட்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற்போல் குறையாது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), புஹாரி).

இந்த ஹதீஸுக்கு இஸ்ஹாக் (ரஹ்) விளக்கமளிக்கும் போது: (எண்ணிக்கையில் இருபத் தொன்பது நாட்களாகக் குறைந்தாலும் (நன்மையில்) அது நிறைவானதாகும்’ என்று இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:

முன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு:
‘எவர் இறைநம்பிக்கையுடனும் மறுமையின் நற்கூலியைப்பெறுகின்ற எண்ணத்துடனும் ரமழான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். எவர் ரமழானின் இரவுக்காலங்களில் இறைநம்பிக்கையுடனும் மறுமையின் நற்கூலியைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் நின்று வணங்குவாராயின் அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நோன்பு பரிந்து பேசும்:
‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நோன்பை போன்ற ஓர் வணக்கம் இல்லை:
‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).

கணக்கின்றி கூலி வழங்கப்படும்:
‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நோன்பின் கூலி சுவர்க்கம்:
‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).


நரகத்தை விட்டு பாதுகாப்பு:
அல்லாஹ்வின் வழியில் ஒருவர் ஒரு நாள் நோன்பு வைத்தால், அந்த நாளிற்கு பகரமாக அவரின் முகத்தை நரகத்தை விட்டும் எழுபது ஆண்டுகள் அல்லாஹ் தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

‘நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).

மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்:
‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி:
‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி, முஸ்லிம்).

கஸ்தூரியை விட சிறந்த வாடை:
‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்).

மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. ‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத தடவைகள் நான் பார்த்திருக்கிறேன்.’ (அறிவிப்பவர்: ஆமிர் இப்னு ரபீஆ (ரழி), புஹாரி). என்ற இந்தச் செய்தி இவர்களுக்குத் தெரியாததே இதற்குக் காரணம்.

நோன்பு எனக்குரியது என்ற அல்லாஹ்வின் வாக்கு:
‘மனிதனின் அனைத்து செயல்களும் அவனுக்குரியதே. ஆனால் நோன்பைத் தவிர. இது எனக்குரியதாகும். இதற்கும் நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.’ (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

ரமழான் மாத நோன்பை நாம் எவ்வாறு உறுதி செய்வது:

இரண்டு அம்சங்களில் ஒன்றைக்கொண்டு ரமழானை உறுதிப்படுத்துதல்

1. நோன்பு மாதத்திற்கான பிறையை காணுதல்:
எவர் நோன்பு மாதத்திற்கான பிறையை காண்கின்றாரோ அவர் மீது நோன்பு நோற்பது கடமையாகும். அல்லது பருவ வயதையடைந்த நீதமான ஒருவர் பிறையைக்கண்டதாக சாட்சி கூறினால் அந்த சாட்சியத்தின் அடிப்படையில் நோன்பு நோற்பது கடமையாகும்.

2. ஷஃபான் மாத முப்பது நாட்களையும் பூரணமாக்குதல்:
இருள் அல்லது மேகம் அல்லது பிறையைக் காண முடியாது தடுக்கக்கூடிய காரணிகள் எதுவும் இல்லாவிட்டால் ஷஃபான் மாத முப்பது நாட்களையும் பூர்த்தியாக்க வேண்டும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
நீங்கள் ரமழான் பிறையைக்கண்டு நோன்பு பிடியுங்கள், ஷவ்வால் பிறையைக்கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு பிறை தென்படாவிட்டால் ஷஃபான் முப்பது நாட்களை பூர்த்தி செய்யுங்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

‘மனிதர்கள் பிறையை பார்த்தனர், நான் பார்த்ததை நபிகளார் (ஸல்) அவர்களுக்கு அறிவித்தேன். நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தார்கள், மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.’ (அறவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: அபூதாவுத், தாரமி, இப்னு ஹிப்பான், ஹாகிம்).

சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பது தடை:
யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பாரோ அவர் காஸிமின் தந்தை (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களு)க்கு மாறு செய்து விட்டார் என அம்மார் (ரலி) கூறினார்கள் (புஹாரி).

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).

பிறையை பார்க்கும் போது கூறவேண்டிய பிரார்த்தனை:
நபி (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டால் ‘அல்லாஹும்ம அஹில்லஹு அலய்னா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி, ரப்பீ வரப்புகல்லாஹு’ என்று கூறுவார்கள். (இறைவனே! பாதுகாப்பு, இறை நம்பிக்கை, அமைதி இஸ்லாம் ஆகியவை மூலம் இதை எங்கள் மீது தோன்றச் செய்வாயாக! பிறையே! என் இறைவனும், உன் இறைவனும் அல்லாஹ்தான். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், திர்மிதி).

நோன்பின் நிய்யத்:
பர்ழான நோன்பை நோற்பதற்காக இரவில் நிய்யத்தைக் குறிப்பாக்குவது அதாவது நோன்பு நோற்பதாக
மனதால் நினைப்பது கடமையாகும். அது ரமழான் மாத நோன்பா? அல்லது குற்றப்பரிகாரத்திற்கான நோன்பா? அல்லது நேர்ச்சைக்குரிய நோன்பா? என்பதை அவரது நிய்யத்தின் மூலம் நாடவேண்டும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எவர் பஜ்ருக்கு முன் நோன்பு நோற்பதாக நிய்யத் வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை. (அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)

இந்த ஹதீஸிலிருந்து, இரவின் ஆரம்பம் அல்லது அதனுடைய மத்தி அல்லது அதன் கடைசி போன்றவற்றிற்கிடையில் நிய்யத் வைப்பதில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை அறியமுடிகின்றது.

இரவில் நோன்பு நோற்பதாக நிய்யத்வைத்து பஜ்ர் உதயமானதற்குப்பின் அவர் விழித்தால் அவர் உணவைத் தடுத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் நாடினால் அவருடைய நோன்பு சரியானதாகும். ஸுன்னத்தான நோன்பிற்கு பஜ்ர் உதயமானதற்குப் பின்னிருந்து எந்த உணவையும் உண்ணாமலிருந்தால் பகல் வேளையில் நிய்யத் வைப்பது கூடும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு நாள் நபிகளார்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து உங்களிடம் ஏதாவது உணவு இருக்கின்றதா? என்று கேட்டார்கள். அதற்கு நாம் இல்லை என்று கூறினோம். அதற்கவர்கள் அப்படியென்றால் நான் நோன்பாளி என்று கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா).

நிய்யத்தின் இடம் உள்ளமாகும். நிய்யத்தை வாயால் மொழிவது வழி கேடான பித்அத்தாகும். நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித்தாரத எந்த ஒன்றும் மார்க்கமாகாது, அவ்வாறு ஒருவர் செய்வாராயின் அது அல்லாஹ்விடத்தில் நிராகரிக்கப்படும். நோன்பிருக்கும் பலர் நிய்யத் வைக்கிறோம் என்ற பெயரில் ‘நவய்து ஸவ்ம அதின் அன்னதாயி பஃர்ழ ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ (இந்த வருடத்தின் பஃர்ழான ரமழான் நோன்பை அல்லாஹ்விற்காக நாளை பிடிக்க நிய்யத் வைக்கிறேன்) என்று சில வார்த்தைகளை வாயால் மொழிகின்றனர். இது தெளிவான வழிகேடாகும், மாறாக நிய்யத்தை மனதால் என்னுவது தான் நபிகளாரின் வழி முறையாகும்.

ஸஹருடைய நேரத்தின் சிறப்பு

நோன்பிருக்கும் பலர் தெரிந்தோ தெரியாமலோ ஸஹர் செய்வதை தவற விடுகின்றனர். அவர்கள் இரவில் தூங்கச் செல்லும் போதே நோன்பின் நிய்யதை வைத்து விடுகின்றனர். இதன் மூலம் பலருக்கு ஃபஜ்ர் தொழுகை கூட தவறிப் போய் விடுகிறது. எவ்வாறு ஒரு முஸ்லிமின் மீத நோன்பு கடமையோ அதே போன்று பஃஜுருடைய தொழுகையும் அவன் மீது கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமும் ஃபஜ்ர் தொழுகை விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது.

ஸஹர் நேரத்தின் சிறப்பு, ஸஹர் செய்வோருக்கு கிடைக்கும் அல்லாஹ்வின் அருள் பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருந்தால் ஒரு போதும் அதை தவர விடமாட்டார்கள். அல்லாஹ் தனது திருமறையில் இறையச்சமுடையோர் பற்றி குறிப்பிடும் போது:

‘(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.’ (3: 17).

‘அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்க மாட்டார்கள். அவர்கள் விடியற் காலங்களில் (ஸஹர் நேரத்தில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.’ (51: 17,18).

ஓவ்வொரு இரவிலும், இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது எமது ரப் (அல்லாஹ்) துன்யாவின் வானத்திற்கு இறங்கி, என்னிடம் யார் பிரார்த்திப்பார்களோ அவர்களது பிரார்த்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன், என்னிடம் கேட்கக்கூடியவர்களுக்கு நான் கொடுப்பேன், என்னிடம் பாவ மன்னிப்பு தேடுபவர்களுக்கு நான் மன்னிப்பை வழங்குவேன்.’ என கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

மேற்குறிப்பிட்ட இறை வசனங்களின் மூலமும், நபி மொழியின் மூலமும் ஸஹர் நேரத்தின் சிறப்பை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அந்த நேரம் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும், பாவங்கள் மன்னிக்கப்படும், தேவைகள் நிறைவேற்றப்படும் உயர்ந்த நேரமாக இருக்கின்றது. எனவே அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் கைகளை ஏந்தி பிரார்த்தித்து அல்லாஹ்வுடைய அருளை பெற்றுக்கொள்ள முனைவோமாக!

ஸஹர் செய்வதன் சிறப்பு:

நீஙகள் ஸஹ்ர் செய்யுங்கள், ஏனெனில் ஸஹ்ர் உணவில் பரக்கத் உள்ளது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

அல்லாஹ் அருள் புரிகிறான்:
‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்). முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.

வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்தல்:
‘நமது நோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

ஸஹர் செய்வதை பிற்படுத்தல்:
‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்தோம். பின்பு தொழுகைக்காக நாங்கள் நின்றோம் என்ற ஸைத் (ரலி) கூறியதும், ‘அவ்விரண்டுக்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு’ என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித் (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

ஸஹ்ல் பின் ஸஃத் (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘நான் என் குடும்பத்தாருடன் ஸஹர் செய்து விட்டு நபி (ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத் தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்’ (புஹாரி).

நபி (ஸல்) அவர்களிடம் பாங்கு கூறுபவர்கள் இருவர் இருந்தனர். ‘பிலால் (ரழி) அவர்கள் (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள், அப்போது நபி (ஸல்) அவர்கள். ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ர் (வைகறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்’ என்று குறிப்பிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

வானொலி, தொலைக்காட்சி மூலமாக ஸஹர் முடிவு நேரம் இது என்று பஃஜ்ருடைய அதானுக்கு முன் ஒரு நேரத்தை அறிவிக்கின்றனர், ஒரு சிலர் அறிவிக்கப்பட்ட அந்த நேரத்துக்குப் பின் எழுந்து விட்டால் எந்த ஒன்றையும் சாப்பிடாமல், குடிக்காமல் பசியுடனே நோன்பு இருக்கின்றனர். இது அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ சுமத்தாத வீணான ஒரு சுமையாகும். மேலே உள்ள ஹதீஸிலிருந்து நமக்கு தெளிவாக விளங்குவது என்னவென்றால் பஃஜுடைய அதான் வரை தாராளமாக ஒருவருக்கு உண்ணுவதற்கு பருகுவதற்கு முடியும் என்பதை. தனது மனோ இச்சைகளை அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவிப்பவர்களுக்கு அல்லாஹ் பின் வரும் வசனத்தின் மூலம் கடுமையாக எச்சரிக்கின்றான்:

மேலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை, ஆகவே, அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக
அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33: 36).

அதே போன்று இன்னும் சிலர் பஜ்ருடைய அதான் சொல்லப்பட்டுவிட்டது என்பதை உறுதியாக தெரிந்ததன் பின்பும் சாப்பிடுவதை ஆரம்பிக்கின்றனர். இது அவர்களது அன்றைய தின நோன்பை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடும். நபியவர்கள் பஃஜ்ருடைய அதானை கேட்கும் போது உண்ணுவதை பருகுவதை மேலே உள்ள ஹதீஸில் நிறுத்த சொல்லியிருக்கிறார்கள்.

இங்கே சுற்றிக்காட்டப்பட வேண்டிய மற்றுமொரு விஷயம் என்னவெனில், அபூதாவுத், இப்னு மாஜா போன்ற கிரந்தங்களில் பதிவாகி இருக்கும் ஒரு செய்தியில் ஒருவர் ஸஹருடைய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பஃஜ்ருடைய அதான் சொல்லப்பட்டால் அவர் அதில் தேவையானதை எடுத்துக்கொள்ளட்டும் என வந்துள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உங்ளில் எவராவது உணவுத் தட்டு கையில் இருக்கும் போது (பஃஜ்ருடைய) பாங்கோசையை செவிமடுத்தால் அவர் தமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் வரை தட்டை வைக்க வேண்டாம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், இப்னு மாஜா). இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் தரத்தில் உள்ளது என ஷைகு அல்பானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோன்பாளி செய்யவேண்டியவைகள்:

தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிரைவேற்றல்:
நோன்பிருக்கும் பலர் தொழுகை விஷயத்தில், தொழுகையை கூட்டாக நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். ஒரு முஸ்லிம் எவ்வாறு நோன்பு என் மீது கடமை என்பதை உணர்ந்து அதை நோற்கின்றானோ அதே போன்று தொழுகையும் என் மீது கடமை என்பதை தெளிவாக விளங்கி அதை உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். அனைத்து வணக்கங்களை விட தொழுகைக்கு இஸ்லாத்தில் ஒரு மகத்தான இடமிருக்கின்றது. ‘தொழுகையை ஒருவர் வேண்டுமென்று விடும் போது அவர் காஃபிர், நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள உடன்படிக்கை தொழுகை, எவர் தொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் காஃபிராகி விட்டார்.’ என்று நபியவர்கள் கூறிய ஆதாரப்பூர்வமான செய்திகள் பதிவாகி இருக்கும் போது எவ்வாறு இதில் ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்? இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது தொழுகையை விடும் ஒரு முஸ்லிமுடைய நோன்பே கேள்விக்குறியாகி விடுகின்றது.

அல்குர்ஆனை ஓதுதல், அதை விளங்குதல், அதன்படி செயல்படுதல்:
அல்குர்ஆனுக்கும், ரமழானுக்கும் உள்ள நெறுங்கிய தொடர்பை நாம் மேலே விளக்கியுள்ளோம். அல்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை இன்னும் சரியான முறையில் விளங்காமல் முஸ்லிம்களில் பலர் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். மரணித்தவர்களுக்கு ஓதுவதற்கும், வீட்டில் பரக்கத்துக்காக வைப்பதற்கும், தொங்கவிட்டு அழகு பார்ப்பதற்கும் அல்குர்ஆன் அருளப்பட்டதாக பலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

அல்குர்ஆனை ஓதுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:
‘மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக!’ (முஸ்ஸம்மில்: 4)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்குர்ஆனை ஓதுங்கள், ஏனெனில் யார் அதனை ஓதினார்களோ அவர்களுக்கு அது மறுமையில் பரிந்துரை செய்யும்.’ (முஸ்லிம்).

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘குர்ஆனை ஓதிய மனிதருக்கு மறுமையில் உலகில் நீங்கள் குர்ஆனை ஒதியவாறு, இங்கும் நன்றாக ஓதிக் கொண்டு, சென்று கொண்டேயிருங்கள், நீங்கள் ஓதி இறுதியாக நிறுத்துமிடம் தான் உங்கள் தங்குமிடமாகும் என்று கூறப்படும்.’
(திர்மிதி, அபூதாவூத்).

‘அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு எழுத்தை ஒருவர் ஓதினால், அவருக்கு பத்து நன்மைகள் அதற்காக வழங்கப்படும்.’ (திர்மிதி, தாரமி).

அல்குர்ஆனை விளங்குவது:
‘அவர்கள் அல்குர்ஆனை ஆய்வு செய்ய வேண்டாமா? அவர்களின் உள்ளங்களுக்கு என்ன பூட்டு போடப்பட்டுள்ளதா?’ (47: 24).

‘அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.’ (4: 82).

அதன்படி செயல்படுவது:
‘அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான். (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பான (முதஷாபிஹான)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால் )கள் (இவற்றைக் கேட்கும் போது) சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால் எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.’ (39: 23).

‘நாம் ஒரு சாய்ந்திருந்த மனிதனின் பால் வந்தோம், மற்றொருவர் மிகப் பெரிய பாராங்கல்லை எடுத்து அவனது தலையில் போடுகிறார், அவனது தலை சுக்கு நூறாகி விடுகிறது. மறுபடியும் அவர் போய் அந்தப் பெரும் பாராங்கல்லை எடுத்து வருகிறார், அவனது தலை பழைய நிலைக்கு திரும்பி வீடுகிறது, மறுபடியும் அந்த பெரும் பாராங்கல்லை அவனது தலையில் போடுகிறார் அது நொறுங்கிப் போகிறது. இவ்வாறு இவன் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் இவன் யார் என கேட்டபோது, இவன் தான் அல்குர்ஆனைப் படித்து எனினும் அதை புறக்கனித்தவனாக, கடமையாக்கப்பட்ட தொழுகைகளையும் நிறைவேற்றாமல் தூங்கியவன் என பதிலளிக்கப்பட்டது.’ (புஹாரி, முஸ்லிம்).

ஸுன்னத்தான (உபரியான) வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்:
உபரியான வணக்கங்களை செய்வதன் மூலம் ஒரு அடியான் அல்லாஹ்வின் பால் நெறுங்கிக்கொண்டே இருக்கிறான் என்பது நபி மொழியாகும். எனவே நாம் அதிகம் அதிகம் உபரியான வணக்க வழிபாடுகளை செய்வதன் மூலம் அல்லாஹ்வினுடைய நெறுக்கத்தைப் பெற முயலவேண்டும். ரமழான் என்பது குறிப்பிட்ட சில நாட்களாக இருப்பதால் இந்த நாட்களை தூக்கத்தின் மூலம், வீணாண காரியங்களின் மூலம் செலவிடாமல் அல்லாஹ்வின் அன்பை பெற முடியுமான உபரியான வணக்கங்களை அதிகம் அதிகம் செய்வோமாக!

தான தர்மம் செய்தல்:
‘நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகம் தர்மம் செய்பவராக இருந்தார்கள். அவர்களை ஜிப்ரீல் (அலை) சந்திக்கும் வேளையில் ரமழானில் மிக அதிகமாக நன்கொடையளிப்பவர்களாக இருந்தார்கள். ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்தித்து, குர்ஆனை அவருக்கு கற்றுக்கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தன்னை ஜிப்ரீல் (அலை) சந்திக்கும் வேளையில் வேகமாக வீசும் காற்றைவிட அதிக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி), புஹாரி, முஸ்லிம்).


அல்குர்ஆனின் மூலமும், நபிகளாரின் பொன் மொழிகளின் மூலமும் அதிகம் ஆர்வப்படுத்தப்பட்ட ஒரு விஷயம் தான் தான தர்மமென்பது. நோன்புடைய காலமென்பது ஒவ்வொரு முஸ்லிமும் பசியின், தாகத்தின் கொடுமையை நன்றாக உணரக்கூடிய ஒரு காலப்பகுதியாகும். நமது பல சகோதர முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும் நமது ஊர்களில், பல நாடுகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். எனவே நாம் அவர்களுக்கு உதவுவென்பது மிக உயரிய நன்மைகளை பெற்றுத் தரும் ஒரு செயலாகும். அது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தான தர்மமென்பது ரமழான் காலத்தில் அதிகமாக செய்ய வேண்டிய ஒன்றென்பதை மேற் சொன்ன ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

உம்ராச் செய்தல்:
ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா என்பது ஹஜ்ஜுடைய கூலியை பெற்றுத்தரும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்:
நோன்பு காலங்களில் நோன்பாளியின் பிரார்த்தனைக்கு அல்லாஹ்விடம் தனி இடம் உண்டு என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. எனவே நாம் அதிகம் அதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்னை என்பது உயரிய ஒரு வணக்கமாகும். நாம் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்திக்கக்கூடியவர்களாக, அவனிடம் உதவி தேடுபவர்களாக இருக்க வேண்டும்.

‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நோன்பாளி செய்யக்கூடாதவைகள்

இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவன் எல்லாக்காலங்களிலும் உயரிய பண்புகளுடன் நடப்பதற்கும், அநாகரீமாக, அறிவீனமாக நடப்பதை விட்டு விலகி இருப்பதற்கும் வேண்டப்பட்டுள்ளான். அல்லாஹ் தனது திருமறையில் இறை விசுவாசிகளின், இறை நல்லடியார்களின் உயரிய பண்புகளை பற்றி குறிப்பிடும் போது:

‘இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.’ (23: 3).

‘அன்றியும் இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து, ‘எங்களுக்கு எங்கள் செயல்கள், உங்களுக்கு உங்கள் செயல்கள், ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை’ என்று கூறுவார்கள்.’ (28: 55).

‘இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள், மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால், ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று), சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.’ (25: 63).

‘அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள், மேலும், அவர்கள் வீணான காரிய(ம்நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள்.’ (25: 72).

இறை நம்பிக்கையாளனிடம் நோன்பு காலங்களில் அதிகம் அதிகம் இந்தப் பண்பு வேண்டப்படுகிறது என்பதற்கு பின் வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகும்:

‘நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் தீய வார்த்தைகளை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம், கூச்சலிட வேண்டாம், அவரிடம் எவராயினும் வசை மொழி பேசினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை சொல்லிவிடட்டும்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

‘எவர் பொய் பேசுவதையும், பொய்யாக நடப்பதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

‘எத்தனையோ நோன்பாளிகள் தங்கள் நோன்பினால் தாகத்தை தவிர வேறெதையும் பெற்றுக் கொள்ளவில்லை. எத்தனையோ இரவில் நின்று வணங்குபவர்கள் தங்கள் இரவு வணக்கத்தின் மூலமாக கண் விழித்திருந்ததைத் தவிர வேறெதையும் அவர்கள் பெற்றுக்கொள்ள வில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: தாரமி).

‘நோன்பு ஒரு கேடயமாகும், எவர் (பகல் காலங்களில்) இல்லறத்தில் ஈடுபட வேண்டாம், அறிவீனமாக நடக்கவேண்டாம். எவராவது அவரை ஏசினாலோ, அவருடன் சண்டையிட்டாலோ நான் நோன்பாளி என்று இரண்டு முறை சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகும். ஆவன் தனது உணவை, பானத்தை, இச்சை உணர்வை எனக்காகவே விட்டு விடுகிறான். நோன்பு எனக்குரியதாகும். நூன் தான் அதற்கு கூலி கொடுப்பேன், ஒரு நற்செயல் அது பத்து மடங்காக பெறுக்கப்படுகின்றது.’ (புஹாரி).

‘மனிதனின் அனைத்து செயல்களும் அவனுக்குரியதே. ஆனால் நோன்பைத் தவிர. இது எனக்குரியதாகும். இதற்கும் நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் நோன்பு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு வைத்தால், அந்நாளில் அவர் தீயதைப் பேச வேண்டாம். மேலும் கூச்சல் போட வேண்டாம். ஒருவர் நோன்பு வைத்தவரை திட்டினால் அல்லது சண்டை போட்டால், ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு 1) நோன்பு திறக்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி, 2) அல்லாஹ்வை சந்திக்கும் போது நோன்பின் மூலம் கிடைக்கும் நன்மைகளால் ஏற்படுகின்ற மகிழ்ச்சி’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நோன்பாளியைப் பொறுத்த வரையில் அவன் தனது வாயையும், வயிறையும், (பசியையும், தாகத்தையும்) கட்டுப்படுத்தி தியாகத்திற்கு மத்தியில் செய்யும் நோன்பென்ற வணக்கம் அவனது வீணாண காரியங்களால் பலனற்றுப் போய் விடுகின்றது என்பது மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களின் மூலம் விளங்கும் ஒரு உண்மையாகும்.

சினிமாக்கள், கேலிக்கைகள், இசைகளை செவிமடுத்தல், பிறரை பற்றி புறம் பேசுதல் இவ்வாறான வீணாண காரியங்களின் மூலம் நேரத்தை செலவளிப்பது எல்லாக்காலங்களிலும் ஹராமாக்கப்பட்ட செயல்களாக இருக்கும் போது நோன்பு காலங்களில் எவ்வாறு இவ்வாறான கேலிக்கைகளில் நேரத்தை விரயம் செய்ய முடியும்? இவ்வாறு நேரத்தை செலவளிப்பவர்களின் நோன்பில் எந்தப் பயனுமில்லை என்ற எச்சரிக்கை மேற்கூறப்பட்ட பொன் மொழிகளின் மூலம் விளங்க முடிகிறது.

நோன்பு திறத்தல்

நோன்பு திறப்பதை அவசரப்படுத்தல்:
‘மனிதர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலமெல்லாம் நன்மையில் இருப்பர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), ஆதார நூல்: புஹாரி).

நானும், மஸ்ரூக் அவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்தோம். அவர்களிடம் மஸ்ரூக் ‘நபித்தோழர்களில் இருவர் உள்ளனர். அவ்விருவருமே நல்லவற்றில் குறைவு செய்வதில்லை. அவர்களில் ஒருவர், மஃரிப் தொழுகையையும், நோன்பு துறப்பதையும் விரைந்து செய்கிறார். மற்றொருவர் மஃரிப் தொழுகையையும், நோன்பு திறப்பதையும் தாமதப்படுத்துகிறார் என்று கேட்டார். மஃரிபையும் நோன்பு திறப்பதையும் விரைந்து செய்பவர் யார்? என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி)’ என்று பதில் கூறினார்கள் ‘இவ்வாறே நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள்’ என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (முஸ்லிம்).

நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

எதைக்கொண்டு நோன்பு திறப்பது சிறந்தது:
செங்கனிந்த பேரீத்தங்காய், அது இல்லாவிட்டால் பேரீத்தம் பழம், அதுவும் இல்லாவிட்டால் தண்ணீர் அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது முடியுமான உணவு, பானங்களைக்கொண்டு நோன்பு திறப்பது ஸுன்னத்தாகும்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மஃரிப்) தொழுகைக்கு முன் செங்கனிந்த பேரீத்தங்காய், அது இல்லாவிட்டால் பேரீத்தம் பழம், அதுவும் இல்லாவிட்டால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: திர்மிதி).

‘உங்ளில் எவராவது நோன்பு திறக்கும் போது பேரித்தப் பழங்களைக் கொண்டு நோன்பு திறங்கள், ஏனெனில் அது பரக்கத் நிறைந்ததாகும். நீங்கள் பேரித்தப்பழங்களை பெற்றுக் கொள்ளவில்லையானால் தண்ணீரைக்கொண்டு திறங்கள், அது பரிசுத்தமானதாகும்.’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிர் காலத்தில் பேரித்தம் பழங்களைக் கொண்டும், கோடை காலத்தில் தண்ணீரைக் கொண்டும் நோன்பு திறப்பார்கள்.’ (திர்மிதி).

‘இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்து, பகல் அங்கிருந்து திரும்பிச் சென்று, சூரியன் மறைந்து விட்டால், நோன்பாளி நோன்பு திறப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ


‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்)

நோன்பாளியை நோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு:
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

பிறரிடத்தில் நோன்பு திறந்தால் ஓத வேண்டிய துஆ:

أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ

‘அஃப்தர இன்தகுமுஸ் ஸாஇமூன வஅகல தஆமுகுமுல் அப்ரார வஸல்லத் அலைகுமுல் மலாஇகா’ (அபூதாவுத்).

பொருள்: நோன்பாளிகள் உங்களிடத்தில் நோன்பு திறந்தனர், உங்கள் உணவை நல்லவர்கள் உண்டனர், உங்கள் மீது வானவர்கள் அருள் வேண்டி பிரார்த்திக்கின்றனர்.’

நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை:
‘நிச்சயமாக நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் போது மறுக்கப்படாத ஒரு பிரார்த்தனை உண்டு’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்த ஹதீஸ் இப்னு மாஜா என்ற கிரந்தத்தில் 1753 ஹதீஸாக பதிவாகி உள்ளது. இந்த ஹதீஸ் பலவீனமானது என ஷைகு அல்பானி தனது அல் இர்வாஃ என்ற நூலில் (921) குறிப்பிடுகிறார்.

இரவு வணக்கம்:

இறை நம்பிக்கையாளன்:
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவர்களாய் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள், அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள், மேலும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானதர்மங்கள்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆத்மாவும் அறிந்த கொள்ள முடியாது. (32: 15,16,17).

ரஹ்மானின் அடியார்கள் யார்?
‘இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள். எங்கள் இறைவனே! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக, நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள். (25: 64,65).

அறிவுடையோர் யார்?
‘எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜுது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: ‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?’ நிச்சயமாக (இக்குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.’ (அஸ்ஸுமர் 39: 9).

அகிலத்துக்கே வழிகாட்டியாக அனுப்பப்பட்டவரை அல்லாஹ் எவ்வாறு பன்படுத்தினான்?
‘போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் – சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக! அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப் படுத்திக் கொள்வீராக. மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக! நிச்சயமாக நாம் விரைவில் கனமான – உறுதியான – ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம். நிச்சயமாக இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப் படுத்தவல்லது. (முஸ்ஸம்மில் 1- 7).

இரவு வணக்கம் என்பது எல்லாக் காலங்களிலும் செய்வதற்கு சுன்னத்தாக்கப்பட்ட ஒன்றாகும் என்றாலும் ரமழான் காலத்தில் இரவு வணக்கம் சிலாகித்து சொல்லப்பட்ட ஒன்றாகும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாகும்:


நபி (ஸல்) அவர்கள் ரமழானில் நின்று வணங்கிட தன் தோழர்களுக்கு உறுதியாக கட்டளையிடாமல் ஆர்வமூட்டினார்கள். அப்போது அவர்கள், ‘எவர் இறைநம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் ரமழானில் நின்று வணங்குவாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

இரவுத் தொழுகையின் எண்ணிக்கை:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).

இரவுத் தொழுகையின் சிறப்பு:
‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

நபியவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்களெல்லாம் நபியவர்கள் வருகை தந்து விட்டார்கள், நபியவர்கள் வருகை தந்து விட்டார்கள், நபியவர்கள் வருகை தந்து விட்டார்கள், என்று (மகிழ்ச்சி பொங்க) கூறியவர்களாக விரைந்தனர். நானும் மக்களோடு மக்களாக நபியை பார்ப்பதற்காக சென்றேன், அவரது முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் இது ஒரு பொய்யரின் முகம் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டேன். நபியவர்கள் முதலாவது பேசிய வார்த்தைகள், “மனிதர்களே ஸலாத்தை பரப்புங்கள், உணவின்றி தவிப்போருக்கு உணவலியுங்கள், மனிதர்கள் தூங்குகின்ற போது எழுந்து தொழுங்கள் அமைதியாக சுவர்க்கம் நுழைவீர்கள்” என கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம், ஆதாரம்: திர்மிதி).

இரவுத் தொழுகையை கூட்டாக நிறைவேற்றல்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவு மஸஜிதில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிய போது மக்களும் அன்னாருடன் இரவுத்தொழுகையை நிறைவேற்றினர், இரண்டாவது நாள் இரவு கூட்டம் அதிகமாகியது, மூன்றாவது அல்லது நான்காவது நாள் இன்னும் கூட்டம் அதிகமாகவே, நபியவர்கள் ஸுபஹ் நேரம் வரும் வரை தனது வீட்டைவிட்டு வெளியே வரவில்லை, அதன் பின் மக்களை பார்த்து இந்த இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாகி விடுமோ என்ற அச்சம் தான் என்னை உங்களிடம் வருவதை தடுத்தது என கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், “இந்த இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் தான் (என்னை உங்களிடம் வருவதை தடுத்தது) என வந்துள்ளது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

இமாமுடன் இறுதி வரை தொழுதவருக்கு இரவு முழுக்க நின்று வணங்கிய நன்மை:
‘நாம் ரமழானில் நபியவர்களுடன் சேர்ந்து நோன்பு நோற்றோம், (ரமழான்) மாதத்தில் ஏழு நாட்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் போது நமக்கு நபியவர்கள் இரவினுடைய மூன்றில் ஒரு பகுதி வரை தொழுகை நடத்தினார்கள், ஆறாவது நாள் நபியவர்கள் தொழுகை நடத்தவில்லை. ஐந்தாவது நாள் பாதி இரவு வரை நமக்கு தொழுகை நடத்தினார்கள், நாங்கள் நபியிடத்தில் இரவின் மீதிப்பகுதியிலும் தொழுதிருக்கலாமே என்று சொன்னோம். அதற்கு நபியவர்கள் எவர் இமாமுடன் இறுதி வரை தொழுவாரோ அவர் இரவு முழுக்க நின்று வணங்கிய நன்மையை அல்லாஹ் அவருக்கு எழுதி விடுகிறான் என கூறினார்கள். பிறகு நபியவர்கள் மாதத்தில் மூன்று நாள் எஞ்சியிருக்கும் வரை நமக்கு தொழ வைக்கவில்லை. மூன்றாவது நாள் அவரது உறவினர், மனைவியர் அனைவரையும் ஒன்று சேர்த்து நமக்கு சஹர் தவறிப்போய் விடுமோ என்று நாம் பயப்படுமளவுக்கு இரவில் நமக்கு தொழுகை நடத்தினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூதர் (ரழி), ஆதாரம்: நஸாஈ).

பித்அத்துக்கு ஆதாரம் தேடுபவர்கள் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் தான் இரவுத் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது எனவே இஸ்லாத்தின் பெயரால் பித்ஆக்களை உருவாக்க முடியும் என, உமர் (ரழி) அவர்களின் நிகழ்ச்சியை வைத்து வாதிடுகின்றனர். நபியவர்கள் இரவுத் தொழுகையை கூட்டாக நிறைவேற்றிய நாம் மேலே குறிப்பிட்ட ஆதாரத்தை வைத்துத் தான் உமர் (ரழி) அவர்கள் பள்ளியில் பிரிந்து தொழுதவர்களை உபை இப்னு கஃப் (ரழி) அவர்களின் இமாமத்தின் கீழ் ஒன்று படுத்தினார்கள். நபியவர்கள் எந்த அச்சத்தின் காரணத்தால் கூட்டாக நிறைவேற்றுவதை விட்டார்களோ அந்த அச்சம் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் வர வாய்ப்பில்லை, காரணம் நபியவர்களின் பிரிவோடு இஸ்லாம் என்ற மார்க்கம் முழுமை படுத்தப்பட்டுவிட்டது. எனவே அதற்குப்பின் எதுவும் கடமையாவதற்கு வாய்ப்பில்லை. சில பித்அத் வாதிகள் இந்த உண்மையை புரிந்து கொள்ளத் தவறியதனால் ஏற்பட்ட விளைவாகும்.

எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள் நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும். ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். அல்லது ஒருவருக்கு இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கவும் செய்யும். இதை வைத்து அந்த நாளை நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ கூறிவிட முடியாது. இவ்வுலகம் சோதனைக் கூடமாகும். மரணிக்கும் வரை ஒவ்வொரு மனிதனும் பல விதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பான். சோதனைகள் வரும்போது அதை ஒரு முஸ்லிம் பொறுத்துக் கொள்ளவும் பொருந்திக் கொள்ளவும் வேண்டும். அது அவனுடைய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இப்படி ஈமான் கொள்வது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும்.

அல்லாஹ்வையும் வானவர்களையும் நபிமார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

ஆகவே நமக்கு நடக்கக்கூடிய நல்ல கெட்ட காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் நம்மீது விதித்த விதியின்படியே நடக்கின்றதென்று நம்ப வேண்டுமே தவிர, இன்று கெட்ட நாள், இதனால்தான் எனக்கு இந்த ஆபத்து நடந்ததென்று கூறுவது மூட நம்பிக்கையும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய ஒன்றாகும்.

சோதனையின்றி வாழ்வில்லை

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்) அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின் பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். ஆதாரம்: திர்மிதி

ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது

ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இது அல்லாஹ்வின் ஏற்பாட்டினால் தான் (களா கத்ரினால்தான்) ஏற்பட்டதென்றும், நான் பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இது எழுதப்பட்டு முடிந்து விட்டதென்றும் இது நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லையென்றும் நம்பாத வரை அவர்கள் உண்மையான முஃமினாக முடியாது.

இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இப்னு உமரின் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! களாகத்ரை (விதியை) ஈமான் கொள்ளாதவர், உஹது மலை அளவு தங்கத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் எனக்கூறி, இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை கூறினார்கள். அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

உபாதா பின் சாமித்(ரலி) அவர்கள் தன் மகனைப்பார்த்து, மகனே! உனக்கு ஏற்படுகிற துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உனக்கு வராமல் போய்விடாது என்ற உண்மையையும், உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் நீ அறிந்து கொள்ளாதவரை நிச்சயமாக நீ உண்மையான ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்ளமாட்டாய் எனக்கூறி, பின்வரும் ஹதீஸையும் எடுத்துக் கூறினார்கள்.

அல்லாஹ் எழுது கோலை முதலில் படைத்து நீ எழுது எனக் கட்டளையிட, எதை எழுத வேண்டும் என அது கேட்க, இறுதிநாள் வரைக்கும் எல்லாவற்றிற்கும் உண்டான விதிகளை எழுது என அல்லாஹ் கட்டளையிட்டான், என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் எனக் கூறி, மகனே! இவ்வாறு விதியை நம்பாது ஒருவர் மரணித்து விடுவாராயின் அவர் என்னை சார்ந்தவரல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவும் எடுத்துரைத்தார்கள். ஆதாரம்: அஹ்மத்

இப்னு அபூதைலமீ அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் உபை பின் கஃபை அணுகி, என் உள்ளத்தில் விதியைப்பற்றி சிறிது சந்தேகம் உள்ளது. அதை நீக்குவதற்கு ஏதாவது சொல்லித்தாருங்கள். அல்லாஹ் அந்த சந்தேகத்தை போக்கிவிடுவான் என்று கூறினேன். அதற்கு உபை பின் கஃபு(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். (இப்னு அபூ தைலமியே!) நிச்சயமாக உமக்கு ஏற்படும் துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உமக்கு வராமல் போகாது எண்ற உண்மையையும், உமக்கு எற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உமக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையம் அறிந்து, களா கத்ரைக் கொண்டு நீர் ஈமான் கொள்ளாதவரை உஹது மலை அளவு தங்கத்தை செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். இவ்வாறு நீர் களாகத்ரைக் கொண்டு ஈமான் கொள்ளாது மரணித்துவிட்டால் நீர் நரகவாசிகளில் ஒருவரே என்றார்கள். பின்பு நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களிடமும் ஹுஸைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்களிடமும் வந்தேன். இவர்கள் எல்லோரும் இது போலவே நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்

சோதனை வருவது அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் நேசத்தையே வெளிக்காட்டுகின்றது.

அல்லாஹ் தன் அடியாருக்கு நலவை நாடினால் இவ்வுலகிலேயே தண்டனை (சோதனை)யை வழங்குகின்றான். அல்லாஹ் தன் அடியாருக்கு கெடுதியை நாடினால் மறுமையில் தண்டனையை முழுமையாக வழங்குவதற்காக இவ்வுலகில் எவ்வித தண்டனையும் (சோதனையும்) வழங்குவதில்லை, அதிக சோதனையுடன்தான் அதிக கூலியும் கிடைக்கும், அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். அதை யார் பொருந்திக் கொள்கின்றார்களோ அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கின்றது, யார் அதை கோபிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் கோபம் கிடைக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி

ஸஃபர் மாதமும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதம்தான்

சோதனைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது என நம்ப வேண்டிய ஒரு முஸ்லிம், ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையயை களிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன் கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து இன்னும் இது போன்ற பல சடங்குகளையும் செய்து அந்தப்பீடையை போக்கவேண்டும் என்று எண்ணி பல சடங்கு சம்ரிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் நமது இஸ்லாமிய பல சகோதர சகோதரிகள் செய்கின்றார்கள். இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூட நம்பிக்கையுமாகும். இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கைகளை விட்டுவிட்டு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று நம்ப வேண்டும். ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறை வசனமோ நபி மொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதை தடுக்கும் நபிமொழியைத்தான் பார்க்க முடியும்.

இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது, ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

ஸஃபர் மாதத்தை பீடையுள்ள மாதம் என்பதற்கு, இந்த மூட நம்பிக்கையுள்ளவர்கள் கூறும் காரணம், நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்தது போல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையா? முன்பு கூறியது போன்று இது அல்லாஹ்வின் விதிப்படி நடந்ததென்று ஒரு முஸ்லிம் நம்ம வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள், ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள், இதை யாரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள், அந்த நாளை யாராவது பீடையுள்ள மாதம் என்று கூறுகின்றார்களா? அதை கொண்டாடும் நாளாக அல்லவா? எடுக்கின்றார்கள். நமக்குள் நாமே முரண்படுகின்றோம்.

ஆகவே ஸஃபர் மாதத்தையும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதமாக நினைத்து நமது அன்றாட காரியங்களை செய்ய வேண்டும். ஸஃபர் மாதத்தில் ஏதும் சோதனைகள் வந்தால்கூட அது ஸஃபர் மாத்தினால் ஏற்படவில்லை, அல்லாஹ்வின் ஏற்பாட்டினால்தான் வந்தது என்று நம்ப வேண்டும். இப்படிபட்ட உறுதியான ஈமானை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

<!– tag script Beginsகுறிச்சொற்கள்: , , ,

tag script end –>

பிரிவு: சட்டங்கள் |

நபிவழியை பின்பற்றுவதின் அவசியமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…


புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவன் தான் நமக்கு மார்க்கமாக இஸ்லாத்தைத் தேர்வு செய்து, அதைப் பூரணப்படுத்தித் தந்து, தனது பேரருளையும் புரிந்தவன். அடுத்து அவனுக்கு முழுமையாக அடிபணிவதன் மூலம் வீண் விரயம், புதியன பின்பற்றல், கீழ்ப்படியாமை போன்றவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி மக்களுக்கு அழைப்புவிடுத்து, எச்சரிக்கை செய்த அவனுடைய அடிமையும் திருத்தூதருமாகிய ரசூல்(ஸல்) அவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. மேலும் அவர்களுடைய சந்ததியினர், தோழர்கள், அவர்களது அடிச்சுவட்டில் தீர்ப்பு நாள் வரை நடப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் அவனது அருள் கிட்டுமாக.


இந்தியாவின் உத்திரப் பிரதேச தொழில் பேட்டையான கான்பூரிலிருந்து வாராந்தரம் வெளிவரும் “இதாரத்” பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பிரசுரமான ஒரு கட்டுரை என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அக்கட்டுரை, சவூதி அரேபியாவின் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இணக்கமான தன்மையையும், பித்அத் (நூதன கிரியை)களுக்கு எதிரான போக்கையும் எதிர்த்தும் விமர்சித்தும் எழுதப்பட்டு இருந்தது. அதனை எழுதியவர் இங்கு பின்பற்றப்படும் ஸலஃபி (இஸ்லாமிய வழிசென்ற முன்னோர்கள்) கோட்பாடு நபி(ஸல்)அவர்களுடைய சுன்னாவுடன் இணக்கமானதல்ல என்று குற்றச்சாட்டியுள்ளார்.


அதை எழுதியவரின் இம்முயற்சி அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத்தவர் மத்தியில் பிளவைத் தோற்றுவிப்பதையும், பித்அத்கள், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன், சத்தியத்திற்கு முரணான பித்அத்களையும் வழிகேடுகளையும் பரப்பும் செயலானது மிகவும் வெறுப்புக்குரிய செயலும் ஆபத்தானதும் என்பதில் ஐயமில்லை.


குறித்த கட்டுரை, சவூதி அரேபியாவினதும், அதன் ஆட்சியினரதும் இஸ்லாமிய வழிமுறை பற்றி பேசும் தொனியில் நபி(ஸல்)அவர்களது பிறந்த தின விழா பற்றி சிற்சில கருத்துக்களை முன்வைத்துள்ளது. எனவே, அது தொடர்பாக மக்களுக்குத் தெளிவு தருவது அவசியம் என்பது என் கருத்து.


அல்லாஹ்வின் உதவியுடன் நான் கூறுவதாவது: நபி(ஸல்) அவர்களுடைய அல்லது மற்றொருவருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல. அது மார்க்கத்தின் பெயரால் கொண்டு வரப்பட்ட ஒரு பித்அத் (நூதன செயல்) என்பதால் நிறுத்தப்படுவது அவசியமாகும்.


நபி(ஸல்) அவர்கள் அதைக் கொண்டாடவில்லை. தனக்காகவோ தனக்கு முன் வாழ்ந்து சென்ற நபிமார்களுக்காகவோ, தனது மகள்கள், மனைவியர், மற்றைய உறவினர்களுக்காகவோ பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறவில்லை. அத்துடன் நேர்வழி நடந்த கலீஃபாக்கள், நபித் தோழர்கள், அவர்களைத் தொடர்ந்தவர்கள் எவருமே பிறந்த தினங்களைக் கொண்டாடவில்லை. முந்தய நூற்றாண்டுகளில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களும் இதைக் கொண்டாடவில்லை. அவர்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற முன்மாதிரியை (சுன்னாவை) நன்கு அறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்கள் மீது அளவிலா அன்பு கொண்டவர்கள். அவர்களது ஷரீஅத்தை இக்காலத்தில் வந்தவர்களைவிட மிகச் சரியாகப் பின்பற்றியவர்கள். எனவே பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்றமானது எனக் கண்டிருந்தால் அதை அவர்கள் நிச்சயமாகச் செய்திருப்பார்கள்.


நாம் நபி(ஸல்) அவர்களது சுன்னாவை(வழிமுறையை)ப் பின்பற்றுவதன் மூலம் பித்அத் (நூதனக்கிரியை)களைத் தவிர்த்து கொள்ளும்படி உத்திரவிடப்பட்டுள்ளோம். இந்த உத்திரவு இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்ற தன்மையிலிருந்தும் அல்லாஹ்வும் அவனது ரசூலும் தந்தவை போதுமானவை என்ற நிலைப்பாட்டிலிருந்தும் “அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத்தவரின் அங்கீகாரம் பெற்றது” என்ற உறுதிப்பாட்டிலிருந்தும், “நபித்தோழர் சமூகத்தாலும்” அவர்கள் வழி வந்தவர்களாலும் மிகச் சரியாகப் பின்பற்றப்பட்டது என்ற நெறிமுறையிலிருந்தும் பெறப்பட்டதாகும்.


நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:
“யாரேனும் ஒருவர் எம்முடைய விஷயமொன்றில் புதுமையைச் சேர்க்கின்றாரோ, அது அந்த விஷயம் சார்ந்தது அல்ல, அது நிராகரிக்கப்பட வேண்டும்.” (புகாரி, முஸ்லிம்)


“முஸ்லிம்” ஹதீஸ் கிரந்தத்தில் உள்ள மற்றுமோர் அறிவிப்பின்படி,
“யாரேனும் ஒருவர் நமக்கு உடன்பாடு இல்லாத செயலொன்றை செய்வாரெனில் அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததாக வருகின்றது.


மற்றொரு நபிமொழி,
“நீங்கள் என்னுடைய சுன்னாவை (வழிமுறையை)யும் நேர்வழி நடந்த கலீஃபாக்களின் சுன்னாவையும் அனுசரித்து நடவுங்கள், அவற்றில் உறுதியாக நில்லுங்கள்”, என்று கூறுகின்றது.
மேலும் “மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப் பட்டவற்றையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள். எல்லாப் புதியனவும் நூதனக் கிரியைகளே நூதனக்கிரியைகள் யாவும் வழிகேட்டின்பால் இட்டுச் செல்பவைகளே” என ஒரு நபிமொழி அறிவிக்கப்படுகின்றது.


நபி(ஸல்) அவர்கள் தமது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை குத்பா உரைகளிலும், “மிகச் சிறந்த பேச்சு அல்லாஹ்வின் வேதத்தை(குர்ஆனை) உடையதே, மிக்க சிறந்த வழிகாட்டல் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் உடையதே, மிகவும் மோசமானவை நூதனக் கிரியைகள், நூதனக்கிரியைகள் யாவும் வழிகேட்டின்பால் இட்டுச் செல்பவைகளே” என்று மொழிவார்கள்.


எனவே இந்த நபிமொழிகள் யாவும் நூதனக் கிரியைகளுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன், விழிப்புடன் இருக்கும்படியும் எம்மைப் பணிக்கின்றன. ஏனெனில் அவை எம்மை நேரிய வழியிலிருந்து வழிகேட்டின்பால் இட்டுச் செல்லக் கூடியன என்பதனாலாகும். நபி(ஸல்) அவர்கள் நூதனக் கிரியைகளின் பாரதூரத்தையும், பாதகமான விளைவுகளையும் விட்டு மக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக பல நபி மொழிகளை ஆதாரமாகக் காட்ட முடியும்.


அல்லாஹ் கூறுகின்றான்.


﴿وَمَا آتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا﴾


“மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 59:7)


மேலும் கூறுகின்றான்,


﴿فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ﴾


“ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களைச் சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினைத் தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்”. (அல்குர்ஆன் 24:63)


இன்னும் கூறுகின்றான்,


﴿لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا﴾


“அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவுவைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப் போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது”. (அல்குர்ஆன் 33:21)


மீண்டும் கூறுகின்றான்,


﴿وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنْ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ﴾


“இன்னும் முஹாஜிர்களிலும், அன்சார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களிலும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தியடைகின்றான். அவர்களும் அவனிடம் திருப்தி அடைகின்றார்கள். அன்றியும் அவர்களுக்காக சுவனபதிகளைச் தயார்படுத்தி இருக்கின்றான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்”. (அல்குர்ஆன் 9:100)


மீண்டும் கூறுகின்றான்.


﴿الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا﴾


“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்”. (அல்குர்ஆன் 5:3)


இறுதியாக எடுத்துக்காட்டப்பட்ட இறை வசனங்கள், அல்லாஹு தஆலா இந்த உம்மத்திற்கான மார்க்கத்தைப் பூரணப்படுத்தி தனது அருளையும் பொழிந்து விட்டான் என்பதைத் தௌ;ளத் தெளிவாகவே அறிவிக்கின்றது.


நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதை முழுமைப்படுத்தி, தனது சொல், செயல், அங்கீகாரம் யாவையும் சட்டங்களாக்கி வைத்துவிட்டுத்தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றார்கள். அத்துடன் மக்களால் மார்க்கத்தினுள் நுழைந்து பின்னர் மார்க்கமாகக் காட்டக்கூடிய எல்லா வகையான நூதனச் செயல்களும், அவற்றை உட்புகுத்தியவர்கள் நல்ல நோக்கத்துடன் செய்திருந்தாலும், நிராகரிக்கப்பட வேண்டியவைகளே என அழுத்தமாகக் கூறிச்சென்றார்கள்.


அல்லாஹ்வின் எதிரிகளான யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் அல்லாஹ் அனுமதிக்காதவற்றைத் அவர்களது மதத்தினுள் புகுத்தினார்கள். நூதனக் கிரியைகள் பல கற்பித்தார்கள். அத்தகைய வழிமுறையைப் பின்பற்றி இஸ்லாத்தினுள் நூதனக் கிரியைகளைக் கற்பித்து அனுமதிக்கப் பட்டவைகளாக ஆக்குவதை சங்கைமிக்க நபித் தோழர்களும் கண்டித்து, அவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி எச்சரிக்கையும் விடுத்தார்கள்.


மேலும், இஸ்லாத்தினுள் நூதனக் கிரியைகள் சேர்ப்பதானது “இஸ்லாம் முழுமையாகவும் மிகச் சரியாகவும் இல்லை” எனக் கருதுவதாக அமைய முடியும் அத்தகைய கருத்து மிகத் தீயது மட்டுமல்ல, “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்” என்ற இறை வசனத்தற்கும் நூதனக் கிரியைகள் பற்றிய நபி(ஸல்) அவர்களது எச்சரிக்கைகளுக்கும் நேர்முரணானது என்பதுமாகும். இவை நம் கவனத்திற்குரியவை.


நபி(ஸல்) அவர்களுடைய மற்றும் மற்றவர்களுடைய பிறந்த தினத்தை வருடாவருடம் கொண்டாடுவதானது “அல்லாஹ் மார்க்கத்தைப் பூரணப் படுத்தவில்லை” “நபி(ஸல்) அவர்கள் தமது மார்க்கக் கடமைகளைத் தமது மக்களுக்கு ஒழுங்காகக் கற்றுக் கொடுக்கவில்லை” போன்ற கருத்துக்களையும் கொடுக்கின்றன. அவற்றின் காரணமாகவே பிற்காலத்தில் தோன்றியவர்கள் அல்லாஹ் அனுமதிக்காதவற்றை மார்க்கத்தில் புகுத்தி அவை தம்மை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கி வைக்கும் என்று கருதுகின்றார்கள்.


அல்லாஹ் தனது மார்க்கத்தைப் பூரணப் படுத்தி அளவற்ற அருளையும் கொடுத்திருக்க நபி(ஸல்) அவர்கள் தமது தூதை பகிரங்கமாக முன்வைத்து இவை சுவனத்தைப் பெற்றுத் தரும் நல்லன என்றும் இவை நரக நெருப்பைப் பெற்றுத்தரும் தீயன என்றும் தமது உம்மத்தவருக்கு அறிவித்திருக்க மேற்கானும் விதத்தில் நினைப்பதும் சந்தேகத்திற்கிடமின்றி ஆபத்தானது மட்டுமல்ல, அல்லாஹ்வையும் அவன் தூதரையும் குறைகாண்பதற்குச் சமமான பெரும் பாவச் செயலாகும்.


அல்லாஹ்வின் தூதர் மொழிந்ததாக ஓர் ஆதாரபூர்வமான நபிமொழியை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


“(வல்லமை பொருந்திய) அல்லாஹு தஆலா ஒரு நபியை தமக்குத் தெரிந்த நல்வழியில் தமது மக்களை வழிநடத்திச் செல்லவும் தமக்குத் தெரிந்த தீமைகளைவிட்டு எச்சரிக்கவும் உரிய உதவி வழங்காது (உலகுக்கு) அனுப்பவில்லை.” (முஸ்லிம்)


நபி(ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களிலும் மிகச் சிறப்பானவர் என்பதும், தனது தூதை மிகச் சரியாகவும் முழுமையாகவும் நிறைவு செய்து, தமது மக்களுக்கு அறிவுரை பகர்ந்த இறுதியானவர் என்பதும் யாவரும் மிக அறிந்த விஷயம்.


அல்லாஹ் தனது அடியார்களுக்குரிய மார்க்கக் கடமைகளுள் ஒன்றாக, மீலாத் விழா கொண்டாடுவதை அனுமதித்து இருக்க வேண்டும். இல்லையென்றால், நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு அது பற்றி விளக்கி, அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அல்லது அவர்கள் தமது வாழ்வில் அதனைக் கொண்டாடியிருக்க வேண்டும். அல்லது நபித் தோழர்கள் அதனைச் செய்திருக்க வேண்டும். இவ்வாறு எதுவுமே இல்லாததால், மீலாத் விழா மார்க்கத்திற்கு உடன்பாடான ஒரு விஷயம் அல்ல என்பதை நன்கு தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது. அதோடு இங்கு தரப்பட்ட விளக்கங்களிலிருந்து இது (மீலாத் விழா) சன்மார்க்கத்தில் நுழைக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் தமது மக்களுக்கு எச்சரிக்கை செய்ததுமான ஒரு பித்அத் என்பதும் தெளிவாகின்றது.


மேலே தரப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் எண்ணற்ற மார்க்க அறிஞர்கள் மீலாத் கொண்டாடுவதை நிராகரித்துள்ளதுடன், அது பற்றி கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இஸ்லாமிய ஷரிஅத்தின்படி எந்தவொரு விஷயத்தை அனுமதிப்பதாயினும், அல்லது தடை செய்வதாயினும், அல்லது மக்களிடையிலான பிணக்குகள் தொடர்பாக ஏதும் நடவடிக்கை எடுப்பதாயினும், அவை அல்லாஹ்வின் வேதத்து(குர்ஆனு)க்கும், நபி(ஸல்) அவர்களது சுன்னாவுக்கும் இணக்கமாக இருத்தல் வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படையான வழிமுறை.
அல்லாஹ் கூறுகின்றான்.


﴿يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا﴾


“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.” (அல்குர்ஆன் 4:59)
மேலும் கூறுகிறான்.


﴿وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ﴾


“நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கின்றீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கின்றது.” (அல்குர்ஆன் 42:10)


இந்த விஷயம் தொடர்பாக அல்லாஹ்வின் அருள்மறையை நோக்குவோமாயின் அது நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்கும்படி கட்டளையிடுவதைக் காண்போம். அவர்கள் எவற்றையிட்டு “ஆகும்” என கட்டளை பிறப்பித்தார்களோ அவற்றை ஏற்ற நடப்பதுடன், எவற்றை “ஆகாது” என எச்சரித்துத் தடுத்தார்களோ அவற்றை விட்டு ஒதுங்கி இருக்கும்படி அல்குர்ஆன் கட்டளை இடுகின்றது. அத்துடன், அல்லாஹ் மக்களுக்குரிய மார்க்கத்தை (இஸ்லாத்தை)ப் பூரணப்படுத்தியுள்ளதாகவும் இறைமறை இயம்புகின்றது. எனவே நபி(ஸல்) அவர்களின் போதனைகளுள் மீலாத் கொண்டாடுவது பற்றி கூறப்படாததால், அது சன்மார்க்கம் சார்ந்த ஒரு செயல் என ஏற்க முடியாது. மார்க்கம் என்பது அல்லாஹ்வால் நமக்காகப் பூரணப்படுத்தப்பட்டு நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும்படி மொழியப்பட்டதாகும்.


அடுத்து, இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை நோக்குவோமாயின், நபி(ஸல்) அவர்களோ, அவர்களது தோழர்களோ அதை கொண்டாடியதற்கு ஆதாரம் இல்லை. எனவே மீலாத் என்பது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சம் அல்ல எனத் தெளிவாகின்றது. அது மக்களால் கொண்டுவரப்பட்ட நூதனக் கிரியையும், கண்மூடித்தனமான போலிச் செயலுமாகும். உதாரணமாக யூதர்களும் கிறிஸ்தவர்களும் கொண்டாடும் திருநாட்களைக் குறிப்பிடலாம்.


எனவே, நீதி, நேர்மை, சத்தியம் என்பவற்றுடன் அற்ப அளவு உறவும் உணர்வும் கொண்ட யாராயினும், இதுவரை கூறிய உண்மைகளை மனதில் இருத்தி நோக்குவார்களெனில் எவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்பதை அறிவர். உண்மையில் இது அல்லாஹ்வும் ரசூலும் எச்சரித்த நூதனக் கிரியைகளை (பித்அத்தை) சார்ந்ததாகும்.
அறிவுடன் சந்திக்கும் ஒருவர், உலகளாவிய ரீதியில் ஏராளமான மக்கள் இதனைக் கொண்டாடுகிறார்களே என ஏமாந்துவிடக் கூடாது. ஏனெனில், சத்தியம் ஷரீஅத்தின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதேயன்றி மக்களின் எண்ணிக்கையைக் கொண்டதல்ல.


வல்லமை பொருந்திய அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி இவ்வாறு கூறுகின்றான்.


﴿وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنتُمْ صَادِقِينَ﴾


“யூதர்கள் கிறிஸ்தவர்கள் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின் வீணாசையேயாகும், “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால், உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (அல்குர்ஆன் 2:111)
மீண்டும் கூறுகின்றான்.


﴿وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ﴾


“பூமியில் உள்ளோரில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்துவிடுவார்கள்.(ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 6:116)


பித்அத்கள் யாவும் அவற்றின் தன்மையைப் பொறுத்து பல தீமைகளுக்கு வழிவகுக்கும். ஆண் பெண் கலத்தல், இசையுடன் கூடிய ஆடல் பாடல்கள், மதுபானம் அருந்துதல், போதைப் பொருட்கள் உட்கொள்ளல் என்பன அவற்றுள் சில. அத்துடன் நபி(ஸல்) அவர்கள் மீதும், இன்னுமுள்ள நல்லடியார்கள் மீதும் அளவு கடந்த அன்பு பூண்டு, அவர்களிடம் பிரார்த்தனைப் புரிவதும், அவர்களது உதவிநாடி கெஞ்சுவதும், அவர்கள் மறைவானவற்றை அறிந்துள்ளனர், என்ற நம்பிக்கையுடன் நாட்டங்கள் நிறைவேற்ற வேண்டுதல் புரிவதும் கூட நடைபெறும், இவை மிகப்பெரிய ஷிர்க் (இணைவைத்தல்) சார்ந்த செயல்களே. இவற்றின் மூலம் அவர்கள் இறைநம்பிக்கை அற்றவர்களாக மாறிவிடுவர்.


நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்று இவ்வாறு காணப்படுகின்றது.
“நீங்கள் மார்க்கத்தில் வீண் செலவையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுக்கு முன்னிருந்த மக்கள் இதனால் அழிந்து போயுள்ளனர்.”


மீண்டும் அவர்கள் மொழிந்ததாகக் காணப்படுவதாவது.
“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டதுபோல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நான் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” என்று கூறுங்கள்.” (புகாரி)


நம் சமூகத்தின் மிக முக்கியமானவர்கள் கூட இத்தகைய விழாக்களில் மிகத் தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயற்படுவதையும், இவற்றுக்குச் சார்பாக கருத்து வெளியிடுவதையும் காண்கின்றோம். அத்தகையவருள் பலர் ஐவேளைத் தொழுகைளையோ ஒழுங்காக நிறைவேற்றாதிருப்பது ஆச்சரியமும் வேதனையும் மிக்கதே. இது பற்றி அவர்கள் வெட்கப்படுவதாகவோ, வேதனைப் படுவதாகவோ, பெரும் பாவமொன்றில் ஈடுபட்டுள்ளோமே என உணர்வதாகவோ தெரிவதில்லை.


எத்தகைய சந்தேகமுமின்றி இத்தகையவர்களின் இச்செயல் இவர்களது பலவீனமான விசுவாசத்தையும், தூரநோக்கில்லாத தன்மையையும், துருப்பிடித்துவிட்ட உள்ளங்களின் இறுக்கமான போக்கையுமே தெளிவு படுத்துகின்றது. இவர்களது பாவச் செயல்களும், கீழ்ப்படியாமையுமே இந்நிலைக்குக் காரணம். அல்லாஹ் நம்மையும் எல்லா முஸ்லிம்களையும் இந்நிலையிலிருந்து பாதுகாப்பானாக.


இங்கு குறிப்பிடவேண்டிய மிகவும் அதிசயமும் ஆச்சரியமுமான மற்றொரு விஷயம் என்னவெனில், சிலர், மீலாத் விழாக்களின் போது நபி(ஸல்) அவர்களும் அங்கு பிரசன்னமாகி இருப்பார்கள் என நம்புவதே. இதன் காரணமாக அவர்கள் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களை வரவேற்று வாழ்த்துகின்றார்களாம். இது அப்பட்டமான பொய் மாத்திரமன்று. மிக மோசமான அறிவீனமும் கூட. நபி(ஸல்) அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் கியாமத் தினத்திற்கு முன் அவர்களது அடக்கத்தளத்திலிருந்து எழுந்து வரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் மக்களை சந்திக்கவோ, அவர்களது கூட்டங்களில் கலந்துகொள்ளவோ மாட்டார்கள். மாறாக, அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் கியாமநாள் வரை தமது அடக்கத்தளத்திலேயே இருப்பார்கள். அதேவேளை அவர்களது தூய ஆன்மா உயர்ந்த, கண்ணியமான அந்தஸ்தில் அல்லாஹ்வுடன் இருக்கும்.


அல்லாஹு தஆலா கூறுகின்றான்.


﴿ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ﴾


“பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கின்றீர்கள். பிறகு, கியாம நாளன்று நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 23:15,16)


நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.
நான்தான் கியாம நாளன்று முதன்முதலாக எழும்புபவன், நானே முதலாவதாக (மற்றவர்களுக்காக) பரிந்து பேசுபவன், என்னுடைய பரிந்து பேசுதலே முதலாவதாக ஏற்கப்படும்.


குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எடுத்துக் காட்டப்பட்ட மேற்காணும் மேற்கோள்கள் மரணித்த எவருமே கியாம நாளுக்கு முன் தமது அடக்கத் தளங்களிலிருந்து எழுந்து வருவது இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன. அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் இது விஷயத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு முஸ்லிமும் இவை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி, அல்லாஹ்விடமிருந்து எத்தகைய அதிகாரமும் பெறாத அறிவு குன்றிய மக்கள் உருவாக்கியுள்ள பித்அத்கள், மூட நம்பிக்கைகள் என்பனவற்றை நம்பி, எளிதில் தவறான வழியில் செல்பவர்களாக இருக்கக் கூடாது.


நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் மொழிவதானது, அல்லாஹ்வுடைய கூற்றுக்களுக்கு ஏற்ப, மிக ஏற்றமான சிறப்புமிக்க செயற்களுள் அமைந்தனவாகும்.


அல்லாஹ் கூறுகின்றான்.


﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾


“இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகின்றான், மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.” (அல்குர்ஆன் 33:56)


நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.
“எவரொருவர் என் மீது ஒருமுறை ஸலவாத்துச் சொல்கிறாரோ, அவர்மீது அல்லாஹ் பத்து முறை தனது அருளைச் சொரிகின்றான்.”


இது எல்லா நேரத்திலும், குறிப்பாக ஒவ்வொரு தொழுகையின் பின்னர் மொழிவது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழுகையின் இறுதி கட்டத்தில் இதை மொழிவது கட்டாயம்(தஷஹ்ஹீத்) என இஸ்லாமிய அறிஞர்கள் பலரால் கூறப்பட்டுள்ளது. ஹதீஸ்களின்படி “அதான்” அழைப்பு விடுக்கப்பட்டவுடனும், நபி(ஸல்) அவர்களுடைய பெயரைக் கேட்டவுடனும், வெள்ளிக்கிழமைப் பகலிலும் இரவின் ஆரம்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது மிக மிக அவசியம் என வேண்டப்பட்டுள்ளது.


இதுதான் இந்த விஷயம் தொடர்பாக நான் வலியுறுத்திக் கூறவிரும்புவதாகும். எவர்கள் அல்லாஹ்வின் அருளொளி கிடைக்கப் பெறுகின்றார்களோ அவர்கள் அனைவரும் இவ்விளக்கங்களால் திருப்தியுறுவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.


இனி, நபி(ஸல்) அவர்கள் மீது ஆழ்ந்த விசுவாசமும், அளவிலா பற்றும் கொண்ட பக்திமிகுந்த முஸ்லிம்களுள் சிலர் இத்தகைய நூதனமா(பித்அத்தா)ன கொண்டாட்டங்களை சரிகாணுவது வேதனையாயுள்ளது. அத்தகைய மக்களிடம் கேட்கின்றேன், “எமக்குக் கூறுங்கள். நீங்கள் அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த, நபி(ஸல்) அவர்களது அடிச்சுவட்டில் செல்ல விரும்புகின்ற ஒருவராயின் தயவுசெய்து கூறுங்கள், நபி(ஸல்) அவர்கள் மீலாத் கொண்டாடினார்களா? அவர்களது தோழர்களோ அடுத்து வந்தவர்களோ கொண்டாடினாhகளா?” இல்லையே! உண்மையில், இச்செயல் இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள், கிறிஸ்தவர்களிடமிருந்து பெறப்பட்டதே. அதனை நம்மவர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனர்.


இத்தகைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு பாராட்டும் வழிமுறை சார்ந்தது அல்ல. அவர்கள் மீது அன்பு பாராட்டுபவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்களது போதனைகளை நம்பி நடக்க வேண்டும். அவர்கள் தடுத்தவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும். அவர்கள் காட்டித்தந்த முறைப்படி அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு வர வேண்டும். இதுதான் நமக்குரிய நடைமுறை. அத்துடன் ஒவ்வொரு வேளையிலும், குறிப்பாகத் தொழுகை வேளைகளில் நபிகளார் பெயர் வரும்போது ஸலவாத்தும் ஸலாமும் மொழிவதன் மூலம் அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பை அழகாக வெளிப்படுத்த முடியும்.


அந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுவது போல் வஹ்ஹாபிய்யத்தைச் சேர்ந்தவர்கள் இத்தகைய நூதனக் கிரியை (பித்அத்)களை நிராகரிப்பது புதிய விஷயமே அல்ல. அவர்கள் குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்களது சுன்னாவிலும், ஆழ்ந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்கள். நபி(ஸல்) அவர்களது அடிச்சுவட்டிலும், அவர்களைத் தொடர்ந்து நல்வழி நடந்த நல்லவர்கள் அடிச்சுவட்டிலும் நடக்க ஆர்வம் கொண்டவர்கள். குர்ஆனிலும் நபி(ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது போலவும், நபித்தோழாகளால் முழுமனதுடன் ஏற்கப்பட்டது போலவும், அல்லாஹ்வின் பேரறிவு, பண்புகள், பேராற்றல் பற்றி நன்கு கற்றுணர்ந்து, மார்க்கக் கட்டளை பிறப்பிக்கும் தகுதிபெற்ற முன்னோர்கள், இமாம்கள், ஆகியோரது கூற்றுக்களை நம்பி நடைமுறைபடுத்தவும் ஆர்வம் கொண்டவர்கள். மார்க்க விவகாரங்களில் எத்தகைய திருத்தமும், உருவகம் உதாரணம் என்பன மூலம் சிதைத்தலும், மறுத்தலும் செய்யப்படாமல் அறிவிக்கப்படுபவைகளை வஹ்ஹாபிய்யத்தைச் சேர்ந்தவர்கள் நம்புகின்றவர்கள், ஆழ்ந்த அறிவும், நம்பிக்கையும், இறையுணர்வும் கொண்ட முன்னோர்களும் அவர்களது வழிநடந்தவர்களும் காட்டிய வழியில் உறுதியாக நிலைத்து நிற்பவர்கள். மார்க்கத்தின் அடித்தளம் “அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடத் தகுந்த வேறு இறைவன் இல்லை, முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய திருத்தூதர்” என்ற நம்பிக்கையின் மீது அமைந்துள்ளது என்பதை முழுமனதுடன் நம்புபவர்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் இதுதான் நம்பிக்கையின் ஆணிவேராகும். முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்துப்படி இந்த அம்சங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவும், அங்கீகாரமும் – அவற்றை அடியொட்டிய செயலும் மிக அவசியம் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.


கலிமாவின் கருத்தாவது வல்லமை பொருந்திய அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும். வழிபட வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றது. அவனுக்கு வேறு எவரையும் துணை கற்பிக்கக் கூடாது. அவனையன்றி வேறு எவரையும் வணங்கி, வழிபடுவதை மறுக்க வேண்டும் என்பனவற்றையும் குறிப்பிடுகின்றது. எனவே, ஜின்களும் மனித வர்க்கமும் ஏன் படைக்கப்பட்டது. நபிமார்கள் ஏன் அனுப்பப்பட்டார்கள். வேதக் கிரந்தங்கள் ஏன் அருளப்பட்டன என்பன நன்கு தெரியவருகின்றது.
மேலும், “இபாதத்” என்பது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதும், அவன் மீது அன்பு செலுத்துவதும் மட்டும் அல்ல. அதன் முறையான கருத்து என்னவெனில் அவனுக்கு மட்டும் முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, வணங்கி, வழிபட்டு, வாழ்தல் என்பதாகும். அல்லாஹு தஆலாவால் அருளப்பட்டு நபிமார்களால் பரப்பப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இறந்த காலத்திலும் இன்னும் இதுவன்றி இன்னுமொரு மார்க்கம் இறைவனிடம் ஏற்கப்படவோ, அங்கீகாரம் பெறவோமாட்டாது. எனவே இதன்படி வாழ்தலே இவ்வுலக மக்கள் அனைவருடைய கடமையாகும்.


ஒருவர் அல்லாஹ்வுக்கு அடிபணிவதுடன், அதேவிதமான அடிபணிவை மற்றொருவருக்கும் செலுத்துவாராயின் அவர் ஒரு முஷ்ரிக் (இறைவனுக்கு இணைவைப்பவர்) ஆவார். அதே போன்று எவரொருவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதுடன் மற்றொருவரிடமும் பிரார்த்தனை புரிகின்றாரோ அவரும் அதே தரத்தை உடையவராவார். எவரொருவர் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அடிபணிந்து நடக்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்காக தனது கடமைகளில் தவறு செய்கின்ற தற்பெருமை பிடித்தவராவர்.


அல்லாஹ் கூறுகின்றான்.


﴿وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ اُعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ﴾


“மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடமும் “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பிவைத்தோம்.” (அல்குர்ஆன் 16:36)


முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்று முழுமையாக சான்று பகரும் வகையிலேயே வஹ்ஹாபியத்தின் அடித்தளம் சார்ந்த நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அதே நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து பித்அத்களையும், மூட நம்பிக்கைகளையும், ஷரீஅத்திற்கு மாறானவற்றையும், ஒதுக்கித் தள்ளவும் விழைகின்றது. இவற்றையே தாமும் நம்பி நடந்ததுடன், மற்றவரையும், நம்பி நடக்கும்படி ஷெய்க் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள். இது தொடர்பாக யாரேனும் அவரைப் பற்றி முரண் வழியில் பேசுகின்றாரேனில், அவர் பொய் பேசுகிறார் என்பது மட்டுமல்ல, எத்தகைய ஆதாரமுமில்லாத ஓர் அம்சத்தைப் பேசி பாவத்தைச் சுமக்கின்றார் என்று தான் கூற வேண்டும். இட்டுக்கட்டப்படும் எல்லா விதமான பொய்களுக்கும் அல்லாஹ் எத்தகைய தண்டனைகளை கொடுப்பதாகக் கூறியுள்ளானோ, அவற்றை இவ்வாறு பொய் பேசுபவர்கள் பெறுவர் என்பதில் ஐயமில்லை.


ஷெய்க் அவர்கள் “ஏகத்துவப் பிரகடனம், லா இலாஹஇல்லல்லாஹ்” என்ற தலைப்பில் எழுதிய ஆய்வு நூல்கள் பலவற்றில் தமது கருத்துக்களை அழகுற எடுத்தியம்பியுள்ளார்கள். அவற்றின் மூலம், வல்லமைப் பொருந்திய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை” என நம்பி, அதற்கு பொருத்தமாக வணங்கி வழிபட்டு வருவதானது சிறிய பெரிய அனைத்து ஷிர்க்களிலிருந்தும் பாதுகாப்பைத் தரும் என விளக்கிக் கூறியுள்ளார்கள். யாரேனும் ஒருவர் அவரது இந்த நூல்களைப் படித்திருந்தால் அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்து போதனை செய்த அவரது முறையைத் தெரிந்திருந்தால், அவரது மாணவர்கள், சீடர்களின் தன்மையை அறிந்திருந்தால், அவர் போதனை செய்தவைகளும், அவற்றிற்கான முறைகளும் ஸாலிஹான முன்னோர்கள், கண்ணியமிக்க இமாம்கள் ஆகியோர் போதித்து காட்டித்தந்த முறைகளுக்கு மாறாக இல்லை என்பதை மிக எளிதில் அறிந்து கொள்வர். உண்மையில் அந்த சங்கை மிக்க முன்னோர்கள் “அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கவேண்டும். பித்அத்களை, மூட நம்பிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்” என்ற ரீதியில் காலமெல்லாம் ஆற்றிவந்த அழகான பணிகளையே இவரும் ஆற்றி வந்தார். நிலைநிறுத்தினார் என்பது வரலாறு எடுத்துக்கூறும் பேருண்மை.


இதுதான் சவூதி அரசின் அடித்தளமாக இருக்கின்றது. சவூதி அரேபிய இஸ்லாமிய அறிஞர்களும் இக்கருத்துக்களையே கொண்டுள்ளனர். இஸ்லாத்திற்கு முரணான மூட நம்பிக்கைகள், பித்அத்கள் ஆகியவற்றிற்கும், நபி(ஸல்) அவர்கள் முழுமையாகத் தடை செய்த வீண் விரயங்களுக்கும் எதிரான கடுமையான போக்கை சவூதி அரசு கடைப்பிடிக்கின்றது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த எல்லா முஸ்லிம்களும், இஸ்லாமிய அறிஞர்களும், ஆட்சியாளரும் உலக முஸ்லிம்கள் அனைவரையும் மதித்து அன்பு பாராட்டுகின்றனர். அந்த வகையில் அவர்கள் எந்த நாட்டை, பிரிவை, அமைப்பைச் சேர்ந்தவர்கள் என எவரையும் நோக்குவது இல்லை. அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் அங்கீகரிக்காத பித்அத்கள் சார்ந்த எல்லா விதமான கொண்டாட்டங்களையும், மக்கள் ஒன்று கூடலையும் அவர்கள் நிராகரிக்கின்றனர். அவற்றை அவ்வாறு நிராகரிக்கக் காரணம், “மார்க்கத்தில் சேர்க்கப்படும் எல்லாப் புதியவைகளும் பித்அத்களே, அவற்றைப் பின்பற்றுவது ஆகாது” என முஸ்லிம்கள் கட்டளையிடப் பட்டுள்ளனர் என்பதனாலேயே இஸ்லாம் மிகச் சரியானது பூரணத்துவமானது.


அல்லாஹ்வும் அவனது ரசூலும் கட்டளைப் பிறப்பித்து, நபித் தோழர்களாலும், அவர்கள் வழிவந்தவர்கள். அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆகியோராலும் பெறப்பட்டு, அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்தினரால் ஏற்கப்பட்ட எதிலும் எத்தகைய கூட்டலும் செய்வதற்கு அவசியமே இல்லை. மீலாத் விழாக் கொண்டாடுவது பித்அத் என்பதாலும், வீண் செலவு, ஷிர்க் என்பவற்றைக் கொண்டுவருவது என்பதாலும் அதைத் தடுக்க வேண்டும் எனக் கோருவது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த இஸ்லாமிய வழிமுறைகளுக்கு முரணானது அல்ல. மாறாக, “மார்க்க விஷயத்தில் வீண் செலவையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுக்கு முன்னிருந்தோர் மார்க்க விஷயங்களில் வீண் செலவு செய்ததால் அழிந்து போனார்கள்” என்ற ஹதீஸின் படி நபி(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகும்.
நபி(ஸல்) அவர்கள் மீண்டும் மொழிந்தார்கள்.


“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டதுபோல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நாம் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” எனக் கூறுங்கள்.” (புகாரி)


இவைதான் அச்சஞ்சிகையில் பிரசுரமான குறிப்பிட்ட கட்டுரை தொடர்பாக நான் கூற விரும்புபவை.
அல்லாஹ் எம்மையும் எல்லா முஸ்லிம்களையும் அவனுடைய மார்க்கத்தை விளங்கவும், அதிலே நிலைத்து நின்று உறுதியோடு நடக்கவும் அருள்புரிவானாக. அவன் தயாளமும் கருணையும் மிக்கவன்.
அல்லாஹ் அவனது அருளையும் கருணையையும் நமது உயிரிலும் மேலான நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களது சந்ததியினர், தோழர்கள் மீதும் பொழிவானாக.

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள். இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம்.

அதனால் குர்அனை தஜ்வீத் முறைப்படி பல தடவைகள் ஓதி முடித்தும் இருக்கின்றோம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவது கருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும். சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும். இவ்வாறுதான் குர்ஆனை நாம் அணுக வேண்டும். இவ்வாறில்லாமல் அவசர அவசரமாக கருத்துணராமல் அரபியில் மட்டும் அல்லது மொழியாக்கத்தை வேகம் வேகமாக படித்து முடிப்பதினால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கத்தை நாம் முழுமைப்படுத்த முடியாது. இதனால்தான் குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான். குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துணர்ந்து குர்ஆனை படிக்க வேண்டும் என்கிற வசனங்களையும், நபிமொழிகளையும் இனி தெரிந்து கொள்வோம்.

இறை வாக்குகள்

1. (நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம். (அல்குர்ஆன் 38:29)

குர்ஆனை ஓதுவதால் அதிக நன்மை இருக்கின்றது என்பதில் கொஞ்சம்கூட ஐயமில்லை, அப்படி இருந்தும் இப்புனிதமிக்க குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட அடிப்படை நோக்கம், சிந்திப்பதற்கேயன்றி வெறும் கருத்துணராமல் ஓதுவதற்கு மாத்திரமல்ல என்பதை மேலுள்ள திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது.

ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனின் சட்டதிட்டங்களை பாழ்படுத்திவிட்டு அதன் எழுத்துக்களை மாத்திரம் மனனம் செய்வது குர்ஆனை சிந்திப்பதாகாது. கருத்துணராமல் குர்ஆனை ஓதக்கூடியவர்களில் ஒருவர், நான் குர்ஆன் முழுக்க ஓதிவிட்டேன் எனக்கூறுகின்றார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் அதில் கூறப்படும் நல்லொழுக்கங்களோ, அமல்களோ காணப்படவில்லை!.

2. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: அல்லாஹ் தன் அடியார்களை இக்குர்ஆனை சிந்திக்கும்படியும் அதன் தீர்க்கமான கருத்துக்களையும் இலக்கிய வசன நடைகளையும் உணராமல் அதை புறக்கணிப்பதையும் அல்லாஹ் தடுக்கிறான். இது குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கும்படி ஏவப்பட்ட தெளிவான ஏவலாகும்.

3. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

4. நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் – அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121)

இந்த வசனத்திற்கு இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை குறிப்பிடுகின்றார்கள்: (என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக! குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி என்பது, அது ஹலாலாக்கியதை ஹலாலாக்குவதும், அது ஹராமாக்கியதை ஹராமாக்குவதும் அல்லாஹ் இறக்கிய முறைப்படி ஓதுவதுமாகும்.)

ஷஃகானி(ரஹ்) அவர்கள்: (அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள்) என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கும்போது, (அதில் உள்ளதைக் கொண்டு அமல் செய்வார்கள்) என்பதுதான் அதன் விளக்கமாகும். ஆகவே அமல் அறிவுக்குப் பிறகுதான் ஏற்படும். அறிவு சிந்திப்புக்கு பின்புதான் ஏற்படும் என்கிறார்கள்.

5. என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் 25:30)

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: குர்ஆனின் கருத்தை உணராமல் படிப்பது அதை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்குவதாகும்.

இப்னுல் கைய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குர்ஆனை புறக்கணிப்பது பல வகையாகும், அதில் நான்காவது வகை கருத்துணர்ந்து படிப்பதை விட்டுவிடுவதாகும்.

நபி மொழிகள்1. அல்லாஹ்வின் வீடுகளில் நின்றும் எந்த ஒரு வீட்டிலாவது ஒரு கூட்டத்தார் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை அவர்கள் (விளங்கி) படித்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் அமைதி இறங்குகின்றது, இன்னும் அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்கின்றது, இன்னும் அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்கின்றார்கள், அல்லாஹ் தன்னிடமுள்ள (மலக்குகளிடம்) அவர்களை (புகழ்ந்து) கூறுகின்றான். ஆதாரம்: முஸ்லிம் இந்த நபிமொழியில், குர்ஆனை, விளங்கி ஓதுபவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் கிடைப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாம் இந்த நபிமொழியின் ஒரு பகுதியைத்தான் செயல் படுத்துகின்றோம். (அதாவது குர்ஆனை அரபு மொழியில் மாத்திரம் ஓதுகின்றோம்) அதை கருத்துணர்ந்து படிப்பதில்லை. காரணம் கருத்துத் தெரிந்து ஓதுவதினால் அதிகமாக ஓத முடியாது என்பது பலரின் எண்ணம். ஆனால் இது முற்றிலும் தவறாகும். நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவு சூரத்துல் மாயிதாவின் 118 ஆம் வசனத்தை மட்டும் ஓதிக்கொண்டே அன்றைய இரவின் தொழுகை எல்லாம் தொழுது முடித்திருக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத்

இதோ நபி(ஸல்) அவர்கள் அதிகம் ஓதுவதை விட சிந்திப்பதற்கு முன்னுரிமை வழங்கி ஒரு வசனத்தை மட்டும் ஒரு இரவு முழுக்க ஓதியிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

2. நான் ஒரு நாள் இரவு நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். முதல் ரக்அத்தில் ”அல்பகரா” ஸுராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறு வசனங்கள் வந்ததும் ருகூவுக்கு செல்வார்கள் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். பின்னர் அவர்கள் தொடர்ந்து ஓதினார்கள். அந்த ஸுராவை ஓதி முடித்து ருகூவுக்குப் போவார்கள் என்று எனக்குள் கூறிக் கொண்டேன். பின்னர் ”அன்னிஸா” அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி, தெளிவாக ஓதினார்கள். ‘தஸ்பீஹ்’ உள்ள வசனத்தை ஓதும் பொழுது அவர்கள் தஸ்பீஹ் செய்வார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவதின் வசனத்தை ஓதும் பொழுது அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடும் வசனங்களை ஓதினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். அதில் ”ஸுப்ஹான ரப்பியல் அளீம்” எனக் கூறினார்கள். அவர்களது ருகூவு அவர்களது நிலையின் அளவைப் போன்றிருந்தது. பின்னர் ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு, ரப்பனா லகல் ஹம்து’ என்று கூறினார்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் சென்றார்கள். (ஸஜ்தாவில்) ”ஸுப்ஹான ரப்பியல் அஃலா” எனக் கூறினார்கள். அவர்களது ஸஜ்தா நிலையின் அளவுக்கு நெருக்கமாக இருந்தது.அபூ அப்தில்லாஹ் ஹுதைபா பின் யமான்(ரலி), ஆதாரம்: முஸ்லிம் மேற்கண்ட நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை நிறுத்தி, நிறுத்தி ஓதியது மட்டுமல்லாமல் அல்லாஹ்வை துதிக்கும் வசனத்தை ஓதும்போது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வார்கள். அல்லாஹ்விடம் கேட்கும் (சுவர்க்கம்) தொடர்புடைய வசனங்கள் வந்தால் அதை அல்லாஹ்விடம் கேட்பார்கள், நரகம் பற்றிய அல்லது அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட சமுதாயம் பற்றியுள்ள வசனம் வந்தால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். கருத்துணர்ந்து நபி(ஸல்) அவர்கள் ஓதவில்லையென்றால் எவ்வாறு இந்தப் பிரார்த்தனைகளைச் செய்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை கருத்துணர்ந்து ஓதியிருக்கின்றார்கள் என்பதற்கு இது பெரும் உதாரணமாகும். 3. மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதுபவர் அதை விளங்கமாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: திர்மிதி, தாரமிமேற்கண்ட நபிமொழியில் மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதி முடிக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். காரணம் அதைவிடவும் குறைந்த நாளில் ஓதினால் குர்ஆனை விளங்க முடியாது. இதிலிருந்து குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கம் அதை கருத்துணர்ந்து படித்து அதை பின்பற்ற வேண்டும் என்பது தெளிவாகி விட்டது. ஆகவே நாமும் திருமறை குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதி அதன் கருத்துக்களை உணர்ந்து அதன்படி நடந்து பிறருக்கும் எத்திவைத்து ஈருலக வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

<!– tag script Beginsகுறிச்சொற்கள்: , , , ,

tag script end –>

பிரிவு: அல்குர்ஆன் |

படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

சிந்திக்கும் திறன் உள்ளவனே மனிதன்! அண்டப் பெருவெளியின் மையத்தில் நிற்கும் அவனிடம் இயற்கையாகவே சில கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகள் அனைத்தும் அவனையும் அவனைச் சூழ்ந்திருக்கும் இப் பெருவெளியைக் குறித்தும் அறிய விரும்பும் அவனது ஆவலை வெளிப்படுத்துவதாகும். அறியாப் பாமரன் முதல் அறிவியலாளன் வரை அனைவரது உள்ளத்திலும் இக்கேள்விகள் எழுகின்றன. மனிதனுக்கு எப்போது அறிவும் சிந்தனையும் வழங்கப்பட்டதோ அன்று முதல் அவன் இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான். நாகரீக வளர்ச்சியின் படித்தரங்களை ஆராய்ந்தால் இதுவே நமக்குப் புலப்படுகிறது.

மனிதனால் முன்வைக்கப்படும் கேள்விகளில் முதன்மையானது இப்பேரண்டத்தை உருவாக்கியவன் யார்? என்பதாகும். சிகரங்களின் உச்சியிலோ கடலின் அடியிலோ ஆகாயத்தின் வெளியிலோ அவற்றை உருவாக்கியவனின் பெயர் எழுதப்படவில்லை. ஆனால் மலைகள், கடல்கள், ஆகாய வெளி, காற்று, நீர் என ஒழுங்காகப் படைக்கப்பட்டிருக்கும் பெருவெளியின் ஒவ்வொரு அங்கமும் இதற்குப்பின்னால் வல்லமை மிக்க ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதற்கு அமைதியான சாட்சிகளாக இருக்கின்றன!

மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம். தந்தையால் வெளிப்படுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில் சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது! ஆரம்ப நிலையிலிருக்கும் இக் கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம், குளிர், காற்று, ஒளி, ஒலி எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை! ஆனால் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது! ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன. இதயம், நுரையீரல், இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன.. எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய அற்புதமாகிய மூளை உருவாகின்றது! எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான, புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச் செய்து, இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப் பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை?

சிந்தனை செய்து இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள குர்ஆன் அழைக்கிறது!

படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனின் உள்ளமையை அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுப்பூர்வமான கோட்பாடைத் திருக்குர்ஆன் கூறுகிறது.

“ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள் ளனவென்றும். பூமி, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?)” (அல்குர்ஆன் 88: 17-20)

பரந்து வியாபித்திருக்கும் பேரண்டப் பெருவெளியின் அழகிய படைப்பைக் குறித்து ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் மாபெரும் படைப்பாளனின் அதியற்புத சக்தியை விளங்கிக் கொள்ள இயலும்! கற்பனைக் கதைகளுடனும் புரியாத தத்துவங்களுடனும் கடவுளைக் கற்பித்த புராதன கால கட்டத்திலேயே இஸ்லாம் இம்மா பெரும் பிரபஞ்ச நாதனின் வல்லமைகளைக் குறித்த அறிவுப் பூர்வமான விளக்கங்களை அளித்தது! கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்ப வேண்டும் என்பதை விட படைத்தவனைக் குறித்து அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை இஸ்லாம் கற்றுத் தருகிறது. இறை கொள்கையில் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் இத்தகைய உயர்ந்த கொள்கை இன்று நடைமுறையில் உள்ள எந்த மதத்திலும் கிடையாது என்பது இஸ்லாமினுடைய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தைக் குறித்தும் ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் அந்த இறைவனின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுமாறு மனிதனுக்கு அழைப்பு விடுக்கும் குர்ஆனிய வசனங்கள் பாமரர் முதல் விஞ்ஞானிகள் வரை புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தெளிவாகவும் எளிதாகவும் உள்ளது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் அருளப்பட்ட வசனங்களைப் பாருங்கள்

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96: 1 -4)

மேற்கண்ட வசனங்கள் மனிதனின் சிந்தனை உணர்வைத் தட்டியெழுப்பக் கூடியதாக உள்ளன.

இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்கு முன் நம் நிலை எவ்வாறிருந்தது? நம் தந்தையின் உடலில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுவில் ஒரு அணுவாக, தாயின் சினைப்பையில் உள்ள கருமுட்டைகளில் ஒரு முட்டையாக வேறுபட்டுக் கிடந்த ஓர் ஆன்மா. பின்னர் விந்தணுவும் சினை முட்டையும் இணைந்த ஒரு கருவாக. பின்னர் முதிர்ச்சியடைந்த தசைப் பிண்டமாக. பின்னர் அதில் எலும்புகளும் மஜ்ஜைகளும் ஊருவாகி கண், காது மூக்கு, கை, கால் என எல்லா உறுப்புகளும் உருவாகி ஒரு முழு மனிதனாகப் பிறந்து வருகிறோம். இவ்வுலகில் உள்ள கோடிக்கணக்கான மனிதர்களுள் ஒரு மனிதனாக நாமும் வாழ்கிறோம்! நம்முடைய உடலில் பல்வேறு செயல்பாடுகள். எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், சுவாச உறுப்புகள், ஜீரண உறுப்புகள், நோய் எதிர்ப்பு என வியக்கத் தக்க செயல்பாடுகள் நடை பெறுகின்றன. இன்னின்னவாறு செயல்படுங்கள் என்று நாம் அவ்வுறுப்புகளுக்குக் கட்டளையிடுவதில்லை! நாம் சாப்பிடுகிறோம், ஜீரணமாகிறது. உடலுக்குத் தேவையான சக்திகளை உணவிலிருந்து தயாரிக்க உறுப்புகள்! கழிவை வெளியேற்ற, இரத்தத்தைச் சுத்தீகரிக்க, சிந்திக்க, செயல்பட, எழுத, பேச என அனைத்தும் உடல் உறுப்புகளின் ஒன்றோடொன்று ஒத்துழைக்கும் வியத்தகு செயல்பாடுகள்! யாருடைய செயல்பாடு இதற்குப் பின்னால் உள்ளன? கண்ணுக்குத் தெரியாத கற்பனை செய்ய முடியாத இரு வேறு கூறுகளாகப் பிரிந்து கிடந்த விந்தணுவையும் சினை முட்டையையும் இணைத்து நம்மைப் படிப்படியாக வளரச் செய்து முழு மனிதனாக்கிய அவ்விறைவனின் அதியற்புத ஏற்பாடு இது! இவ்வாறு படைத்த இறைவனே நம்மைப் படைத்த விதத்தை எடுத்துக்கூறி நம்மை சிந்திக்கச் சொல்கிறான். அறியாத பாமரன் முதல் அறிவியலாளன் வரை இத்தகைய சிந்தனையால் தன் இறைவனைப் பற்றி அறிய உதவும் எளிய கோட்பாடை குர்ஆன் கற்றுத் தருகிறது. இதோ வல்லமை மிக்கவனாகிய அந்த இறைவன் குர்ஆனில் மக்களைப் பார்த்துக் கேட்கின்றான்.

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (23:12-14)

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (56: 58, 59)

இவ்வாறான வசனங்கள் நம்மைப் படைத்தவனை நோக்கிய சிந்தனையின் பால் இட்டுச் செல்கிறது. அவ்விறைவனின் மகா வல்லமையை விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே மனிதனின் ஆன்மீக லௌகீக வாழ்வுகள் சீரடைகின்றன. இறை சிந்தனையைப் பற்றிய இன்னும் சில விபரங்களை அடுத்த பதிவில் காண்போம். இன்ஷா அல்லாஹ்.

<!– tag script Beginsகுறிச்சொற்கள்: , , , ,

tag script end –>

பிரிவு: அல்குர்ஆன், கல்வி, மதங்கள் ஆய்வு |

//