இஸ்லாம்தளம்

மே25, 2009

அழிவுப் பாதையின் உச்சக்கட்டத்தில்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக – அறிவியல் – அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் – அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் – திரைப்படங்களும் – ஆடல் பாடல் – கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.

ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் – நடிகர்கள் – நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி ஓட்டம் – காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் – வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் – இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை – கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) – வேகமாக கற்றுத் தரமுடியும். காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை – குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் – நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் – மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் – நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் – அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் – வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் – கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் – மது அருந்தாமல் – விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? என்று யாராவது காட்டினால் தெரிந்து கொள்ளலாம். ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் – நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?

திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா – நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சும் மனநிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் – ஒரே ஒரு சணடை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான். எல்லா மொழிக்காரர்களும் ஒருவேளை அரசாணை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்தந்த மொழி வெறி அவரவர்களுக்கு.

அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க – ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் – சின்னத்திரை எனப்படும் T.V.   சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V.   க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் – தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் – குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் – செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப – தேசிய சர்டிபிகேட்,

சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் – பணப் புயலும் போங்கள். நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி – எண்ணை – மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? – சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை. எல்லாம் T.V.  மயம்; இல்லை இல்லை எல்லாம் T.V.   மாயம்.

இந்த மூன்றைத் தவிர அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை – மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். பள்ளி- கல்லூரி காலங்களில் கைக்கடியாரம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியாமலிருந்த மக்களுக்கு விஞ்ஞானம் – கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்ஃபோன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்ஃபூன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு.

பெரிதான் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் கெட்டுவிடும் என்று சொன்னார்கள் – அதையும் தாண்டி புனிதமாக சிறிதே – சிறிதான் இந்த செல்போன்களில் இன்டர்நெட் இணைப்புடன் – F.M. T.V. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அதையே உற்றுநோக்கி – இயக்குவதாலும் – படம் பார்ப்பதாலும் கண் என்ன  ஆகும் என்று மெய்ஞானம் தான் பதில் சொல்லவேண்டும்.

ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டு முதல் தயாரிப்பை ஒருவன் கண்டுப்பிடித்தவுடனேயே அதைப் போன்ற – அதனைவிட பன்மடங்கு வசதிகளுடன் அடுத்தடுத்தவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஒருவர் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவே செல்போன்கள் தயாரிக்கப்ட்டன. ஆனால் இன்று அதன் நிலையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் – பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் – பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் – பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் – காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் – திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாரும் எல்லாமும் பெற அன்பு மட்டுமே போதாது நல்லறிவும் வேண்டும். நல்லறிவும் நம் வீடு தேடி வரும்; வீடு தேடி என்ன நல்ல உள்ளங்களை தேடி நாடி வரும்; அழிவே வீடு தேடி வரும்போது அறிவு வீடு தேடி வராதா என்ன? எனவே உள்ளங்களை சுத்தமாக்கிட நற்போதனை சார்ந்த அறிவை வரவேற்பதை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதவும் கடமையாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உலகை நீக்கமற இயக்கிக்கொண்டிருக்கும் இறைவன் அருளிய மார்க்கத்தில் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி நாம் ஒவ்வொருவரும் நற்பண்புகளை அடைந்திட முயலவேண்டும். இஸ்லாத்தில் இல்லாத மனித நேயம் – சகோதரத்துவம் – மனிதன் மனிதனாக வாழக்கூடிய வழிமுறை வேறெங்கும் இல்லை என்பதை நாம் சொல்லி அல்ல. ஒவ்வொருவரும் படித்து, கேட்டு, உணரவே வலியுறுத்துகிறோம். ஏனெனில் அல்லாஹ்வை அஞ்சக் கூடிய விதத்தில் அஞ்சி முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடாதீர்கள் என்று (3:102) அல்குர்ஆன் கூறுகிறது. அல்குர்ஆனை ஏன் இங்கு விளக்க விளைகிறோம் என்றால் அல்குர்ஆன் கூறுகிறது.இதோ (நபியே) இந்நெறி நூலிலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக: நிச்சயமாக தொழுகை மனிதரை மானக் கேடானவற்றையும் – தீமையை விட்டும் விலக்கும். நிச்சயமாக இறைவனின் தியானம் (திக்ரு) மிகவும் பெரிதான சக்தியாகும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன் (29:45). நபியவர்கள் சொல்வதை பாருங்கள்.  எவர் தன் இரு தொடைகளுக்கிடையில் இருப்பதையும் காத்துக் கொண்டாரோ அவர் சுவர்க்கம் புகுவார். (ஆதாரம் – புகாரி) மேலும் எவர் அந்நியப் பெண்களிடம் தன் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். எனவே பார்வை ஒன்றே போதுமே என்ற போக்கில் அனைத்துப் பாவங்களுக்கும் பார்வையை முதலீட்டாக்கி நாம் செய்யும் ஒவ்வொரு அடுத்தடுத்த தவறுகளையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஓரினச் சேர்க்கையிலும் – விபச்சாரத்திலும், மதுவிலும் – சூதிலும் இருக்கும் இன்பத்தை விட நரகத்தில் கொடுமை அதிகம் என்பதை பயந்து நற்பேறுகளை அடைய இஸ்லாமே அருமருந்து என்பதை உளப்பூர்வமாக உணர்வுப்பூர்வமாக ஏற்று – இறைவனுக்கு பயந்து இவ்வுலகில் தடுக்கப்பட்ட சிற்றின்பங்களை துறந்து – மறு உலகில் கிடைக்கும் பேரின்பங்களை அடைந்திட எல்லோரும் முன்வர வேண்டும். நல்லதை பார்த்து, நல்லதைக் கேட்டு – நல்லதைப் பேசி, நல்லதையேச் செய்யும் நன்மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள் புரிவானாக. ஏதோ பெயரளவில் முஸ்லிமாக இருந்தோம் – வாழ்ந்தும் – மடிந்தோம் என்றில்லாமல் அல்லாஹ் சொல்வது போல் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து முஸ்லிமாகவே மரணிக்கும் நற்பேற்றை நாம் அடைவோம்.

பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உலாவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதை விட நம்மை நாமே பழுது பார்த்துக் கொள்ள ஒவ்வொரு நொடித் துளியையும் பயன்படுத்திக்கொண்டு பண்படுவோம். அதன் மூலம் இன்புறுவோம். உலகில் எல்லாவற்றையும் துறந்து விடச்சொல்லி இறைவன் சொல்லவில்லை. குடும்பம் – வீடு – வாசல் – தர்மம் – ஆட்சி அதிகாரம் அனைத்திலும் என்னதான் விஞ்ஞானங்கள் வந்தாலும் மெய்ஞானத்தால் இஸ்லாம் கூறும் வழிமுறைகளை அறிந்துணர்ந்து நடப்போமானல் எந்த விபரீதங்களையும் இறைவன் அருளால் எதிர்கொள்ள முடியும். இறைவன் போதுமானவன்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

“ஸலவாத்”

Filed under: ISLAM — islamthalam @ 12.24

إِنَّ اللَّهَ وَمَلَـئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِىِّ يأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً

இந்த நபியின் மீத அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56)

“ஸலவாத்” என்று சில துஆக்களை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தார்கள். அவை அனைத்துமே நபி(ஸல்) அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் விதமாகவே அமைந்துள்ளன. “ஸலவாத்” களில் மிகவும் உயர்ந்த  “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத்த” என்று தொடங்கும் ஸலவாத்துக்கு உரிய பொருளைப் பார்ப்போம்.

“யா அல்லாஹ்! இப்ராஹிம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீஅருள் புரிந்ததைப் போல், முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிவாயாக” அதாவது ஸலவாத் சொல்வது என்றால் நாம் நபி(ஸல்), அவர்களுக்காக துஆ செய்கிறோம் என்பது பொருள்.

ஸலவாத் ஏன் கூற வேண்டும்?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழி காட்டுதலை நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். தனக்கு, வல்ல அல்லாஹ்வால் தரப்பட்ட அந்தப் பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கடுகளவு கூட்டவும், குறைவுமின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். நரக நெருப்பிலிருந்து நம்மை விடுதலை செய்யும் சரியான வழியை நமக்குக் காட்டினார்கள். மக்கள் நேர்வழி அடைய வேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும், தன் சமுதாயம் நேர்வழி அடைய வேண்டுமென்பதற்காக அத்தனையையும் தாங்கிக் கொண்டார்கள். நமது தாய், தந்தை மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட அவர்கள் மீது அன்புவைப்பது நம்மீது கடமையாகும். அதில் ஒரு பகுதியாகவே நாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். அதாவது ஸலவாத் சொல்கிறோம். ஆம் ஸலவாத் என்றாலே துஆ என்றுதான் பொருள்.

“ஸலவாத் பொருள்”

நம்மில் சிலர் ஸலவாத் என்றால், “நபிகள் நாயகத்திடம் நாம் எதனையோ கேட்கிறோம்” என்று கருதிக் கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல, மாறாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக ஸலவாத்தில் நாம்தான் துஆ செய்கிறோம். உதாரணத்துக்கு நாம் மேலே எழுதியுள்ள ஸலவாத்தின் பொருளை மீண்டும் பார்ப்போம்.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى(ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரழி) நூல்: புகாரி

இதுதான் அந்த ஸலவாத்தின் உண்மைப்பொருள். இதில் நாம் தான் அல்லாஹ்வின் திருத்தூதருக்காக துஆசெய்கிறோம். நாம் அவர்களிடம் எந்த ஒன்றையும் கேட்கவில்லை. இது போல் நாம் சொல்கின்ற எந்த ஸலவாத்துக்கும் “நபிகளுக்காக துஆ செய்வது” என்பதே பொருள். நமக்கென்ன தகுதி உண்டு? அல்லாஹ்வின் படைப்பினங்களில் தலை சிறந்து விளங்குகின்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு “நாம் துஆ செய்து என்ன ஏற்பட்டுவிடும்” என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம்.

“துஆ” என்பது உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்காக செய்ய வேண்டியது” என்ற தவறான எண்ணமே இந்த ஐயத்தின் அடிப்படை. உண்மையில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவரும் உயர்ந்தவருக்காக துஆ செய்யலாம். உயர்ந்தவரும் தாழ்ந்தவருக்கு துஆ செய்யலாம். அதற்குரிய ஆதாரங்களை பார்ப்போம்.

“சுவனத்தில் வஸீலா என்ற பதவி ஒன்று உண்டு. அதை ஒரே ஒரு அடியாருக்கு அல்லாஹ் வழங்க இருக்கின்றான். அந்தப் பதவியை அடையும் ஒரு நபராக நான் இருக்க விரும்புகின்றேன்” எனவே எனக்காக வஸீலா என்ற பதவியை அல்லாஹ்விடம் கேளுங்கள்.” அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம். என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிகவும் சாதாரண நிலையில் உள்ள நம்மிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றார்கள்.

இன்னொருமுறை உமர்(ரழி) அவர்கள் உம்ரா செய்ய மக்கா சென்ற போது “உமது துஆவில் நம்மை மறந்துவிடாதீர்!” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உமர்(ரழி) அவர்களிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்”) என்று உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெகுவாக வலியுறுத்தினர். அதற்கு பதிலாக “வஅலைக்குமுஸ்ஸலாம்” என்று பிரதி துஆ சொல்வதைக் கடமையாகவும் ஆக்கினர்.

அதுபோல் ஸலவாத் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். எனினும், “நமது இந்த துஆவினால் தான் நபிகள் நாயகத்தின் அந்தஸ்து உயரப் போகின்றது?” என்று எவரும் தவறாக எண்ணலாகாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை மிக உயர்வான நிலையிலேயே வைத்துள்ளான். மாறாக, அல்லாஹ்வின் தூதரை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதற்காக நமக்கே அல்லாஹ் பேரருள் புரிகின்றான். அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன் மொழிகளைப் பார்ப்போம்.

“யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள்புரிகிறான்” என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) நூல் : முஸ்லிம்.

“என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும்” என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல் : அபூதாவூது.

இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக் கொண்டிருப்பதோ நபி(ஸல்) அவர்களின் மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும். என்பதை ஹதீஸ் மூலம் நாம் உணரலாம்.

“உங்கள் ஸலவாத் என்னை வந்தடையும்” என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியதிலிருந்து, ஸலவாத்தைத் தவிர மற்ற பாடல்கள் கொண்டாட்டங்கள் அவர்களை அடையாது என்றும் விளங்க முடியும்.

என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவன் நாசமாகட்டும்” என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : திர்மிதீ

“என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன்தான் கஞ்சனாவான்”. என்பதும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியாகும். அறிவிப்பவர் : அலி(ரழி) நூல் : திர்மிதீ

“யாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் (அதாவது துஆ செய்தால்) அவன் அவ்வாறு செய்யும் போதெல்லாம் மலக்குகள் (வானவர்கள்) அவனுக்காகத் துஆ செய்கிறார்கள்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆமிர் இப்னு வபிஆ (ரழி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா.

அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- “நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன்” அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் அவுபு(ரழி) நூல் : அஹ்மத்

“உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, சில நபித் தொழர்கள் “நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும் போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்?” என்று கேட்டனர். எங்கள் நபி(ஸல்) அவர்கள் “நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். அதாவது நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர் : அவ்ஸ் இப்னு அவ்ஹ்(ரழி) நூல்கள் : அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா

இந்த ஹதீஸிற்குச் சிலர்தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுக்க முற்பட்டதால் இங்கெ சில விளக்கங்களைச் சொல்வது மிகவும் அவசியமாகிவிட்டது.

“நபிமார்களின் உடல்கள் மக்கி விடாது” என்ற சொற்றொடர்களிலிருந்து சிலர் அவ்லியாக்களின் உடல்களையும் மண் மக்கிவிடச் செய்யாது என்று தவறான விளக்கங்கள் கூறத் துவங்கி விட்டனர். அது எவ்வளவு தவறான விளக்கம் என்பது அறிவுடையோருக்கு நன்றாகவே தெரியும். ஸஹாபாக்களில் சிலர்,” நீங்கள் மக்கிவிடும் போது எப்படி எங்கள் ஸலவாத் உங்களுக்கு எத்தி வைக்கப்படும்?” என்று கேட்டதற்குப் பதிலாகவே இதனை நபி(ஸல்) கூறினார்கள். இந்த இடத்தில் ஒன்றை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்!

அல்லாஹ்வின் நேசர்களிலேயே நபிமார்களுக்கு அடுத்த இடம் ஸஹாபாக்களுக்குத் தான் உண்டு. அவ்லியாக்களின் உடல்கள் மக்கி விடாது என்றால் ஸஹாபாக்களின் உடல்கள் தான் அதில் முதலிடம் பெறும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபாக்களை நோக்கி “நபிமார்களையும், ஸஹாபாக்களாகிய உங்களையும் மண் திண்ணாது” என்று கூறாமல், “நபிமார்கள்” என்று மட்டும் சொல்கிறார்கள். இதிலிருந்து ஸஹாபாக்களுக்கே இந்த ஊத்திரவாதம் இல்லை என்பது தெளிவு. ஸஹாபாக்களுக்கு இல்லாத சிறப்பு அவர்களுக்குப் பின்னர் தோன்றியவர்களுக்கு இருக்க முடியாது என்று தெரிய முடிகின்றது.

எனவே நபிமார்களின் உடல்களை மட்டும் தான் மக்கிப் போகாமலிருக்கும். மற்றவர்களின் உடல்களை அல்லாஹ் நாடினால் அவன் பாதுகாக்கலாம்: பாதுகாக்காமலிருக்கலாம். அல்லாஹ் நாடினால் பிர்அவ்ன் போன்ற கொடியவனின் உடலையும் கூடப் பாதுபாப்பான்.

ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டிட அனுப்பப்பட்ட நபிமார்கள், பல்வேறு சோதனைகளைத் தாங்கி, ஒரு சில மக்களை நேர்வழியின்பால் கொண்டு வந்தனர். அவ்வாறு நேர்வழி அடைந்த மக்கள், தாங்கள் நேர்வழி அடையக் காரணமாக இருந்த நபிமார்களின் மீது பேரன்பு கொண்டிருந்தனர்.

அந்த அன்பு நாளடைவில் பக்தியாக உருமாறியது. தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களாக அந்த நபிமார்கள் சித்தரிக்கப்பட்டனர். அதன் காரணமாய்த் தங்கள் தேவைகளை அந்தக் ‘காலம் சென்ற நபிமார்களிடமே’ கேட்கத் தலைப்பட்டனர். சுருங்கச் சொல்வதென்றால் “அந்த நபிமார்கள் எந்த லட்சியத்திற்குப் பாடுபட்டனரோ அந்த இலட்சியத்தை அதே நபிமார்களின் பெயரால் அழித்து விட்டனர்.”

உதாரணத்திற்குக் கிறித்தவர்கள் ஈஸா நபியை வரம்புமீறி உயர்த்தியதைச் சொல்லலாம். இதைப்பற்றித்தான் நபி(ஸல்) சொன்னார்கள்.

யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிக்கட்டும்! (ஏனெனில்) அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். ஆதார நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, தாரமீ, முஅத்தா, அஹ்மது.

யூத கிறித்தவ சமுதாயம் அடைந்த நிலைகளை தன் சமுதாயம் அடையக்கூடாது என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் தனக்குத் தன் சமுதாயத்தினர், ஸலவாத் கூற வேண்டும் என்று கற்றுத்தந்தனர். மனித இனத்திலேயே மிகவும் உயர்ந்த மதிப்புடைய நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருள்புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி, சொல்லிச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் தேவைகளைக் கேட்கும்படியோ, தன் பொருட்டால் கேட்கும்படியோ, சொல்லாமல் தனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி சொல்லி இருக்கிறார்கள் என்றால், நபி(ஸல்) அவர்களைவிட மதிப்பில் மிகவும் குறைந்த மற்றவர்களிடம் நம் தேவையைக் கேட்பது எப்படி நியாயமாகும்?

நபி(ஸல்) அவர்களை விட மற்றவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் நெருங்கியவர்கள் என்று எண்ணுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது அல்லவா? தங்களின் துன்ப நேரத்தில் இறந்துவிட்டவர்களை அழைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களைவிட மற்றவர்களை உயர்வாக மதிக்கிறார்கள் என்றுதானே பொருள்?

இன்றைக்கு நல்லவர்களின் பெயரால் நடந்து கொண்டிருக்கின்ற கொண்டாட்டங்களும், இணைவைத்தலுக்கும் “ஸலவாத்” என்பதே தக்க மறுப்பாக அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களை மதிக்கும் போதும் அன்பு செலுத்தும்போதும் அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது மற்றவர்களை மதிப்பதாக எண்ணிக் கொண்டு அவர்களிடம் முறையிடுதலும் தேவைகளைக் கேட்டலும் எப்படி நியாயமாகும். என்று மக்கள் சிந்தித்தாலே போதும். இந்த சமுதாயம் சீர் பெற்றுவிடும்.

ஸலவாத்தை இந்த அளவு நபி(ஸல்) வலியுறுத்திச் சொன்னதின் நோக்கத்தை இதன் மூலம் உணரலாம். ஏனைய நபிமார்களின் பெயரால் ஏற்பட்ட தவறான உடன்படிக்கைகள் தன் பெயரால் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தன்னை மதிக்கின்ற முறையையும் சொல்லித் தந்தார்கள்.

ஒரு முஸ்லிம், தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறலாம். அதற்கு நன்மையும் உண்டு. இதில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை. ஆனால் “இப்படித் தான் செய்ய வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற காரியங்களை நாம் அப்படியே செய்ய வேண்டும். அதில் எந்தவித மாறுதலும் செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை.

உதாரணமாக தொழுகையில் ‘ருகூவு’ செய்யும் போதும், ‘சுஜுத்’ செய்யும் போதும் “இதைத் தான் ஓத வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘ஸலவாத்’ ஓதுவது சிறந்தது தானே என்று எண்ணிக் கொண்டு ருகூவில் – சுஜுதில் ஒருவன் ‘ஸலவாத்’ ஓதினால், நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அவன் மாறுதலைச் செய்கின்ற காரணத்தினால், அவன் குற்றவாளியாக ஆகின்றான்.

நபி(ஸல்) அவர்கள் “இதைத்தான் இந்த நேரத்தில் ஓத வேண்டும்” என்று காட்டித் தந்திருக்கும் காரியங்களில், மாறுதலோ கூடுதல் குறைவோ செய்ய எவருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு உதாரணம் பார்ப்போம்! தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக, நபி(ஸல்) அவர்கள் ‘பாங்கு’ சொல்வதை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘அல்லாஹு அக்பர்’ என்று துவங்கி ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று முடிக்க வேண்டும். இது தான் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாங்கு. இன்று சிலர் நன்மை என்று கருதிக் கொண்டு, பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ‘பாங்கு’ என்று ஒரு முறையை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கும் போது. அதில் எந்த ஒன்றையும் அதிகமாக்குவது எவ்விதத்திலும் அனுமதிக்கப்படாததாகும். பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ சொல்வதும், ருகூவில் ‘ஸலவாத்’ சொல்வதும் ஒன்று தான்.

பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ கூற வேண்டும் என்று இருக்குமானால் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருப்பார்கள். நன்மை செய்வதில் நம்மை விட அதிக ஆர்வம் கொண்டிருந்த நபித் தோழாகள் அதனை செய்திருப்பார்கள். ஆனால் நபியவர்களும் நமக்கு அவ்வாறு சொல்லித் தரவில்லை. நபித் தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை.

இந்தச் செயலை அறிஞர்கள் ஆட்சேபணை செய்யும் போது, பாமர மக்கள் ஸலவாத்தையே மறுப்பதாக தவறாக எண்ணிக் கொள்கின்றனர். ஒரு சில விஷமிகள் மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட பிரச்சாரத்தை முடுக்கி விடுகின்றனர். ஸலவாத் அதிகமாக ஓத வேண்டும். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட எந்த அமலிலும், ஸலவாத் உட்பட எதனையும் அதிகப்படுத்தக் கூடாது. இதை இன்னும் தெளிவாகப் பார்ப்போம்.

‘ஸலவாத்’ ஓதுவதை விட குர்ஆன் ஓதுவது அதிக நன்மை தரக்கூடியது என்பதில் அறிஞர்களுக்கிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் கிடையாது. ஒருவன் ‘பாங்கு’ சொல்வதற்கு முன்னால் ‘அலம்தர கைப’ என்ற சூராவை ஓதிவிட்டு பாங்கைத் துவக்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் இன்னொருவன் பாங்கு சொல்வதற்கு முன்னால் ‘யாஸீன்’ என்ற சூராவை ஓதுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நாம் நிச்சயமாக அதை ஆட்சேபனை செய்வோம்! “ஸலவாத்தை விட சிறந்த குர்ஆன் வசனங்களைத் தானே நான் ஒதுகிறேன்” என்று அவன் கூறினால் நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? பாங்குக்கு முன்னால் குர்ஆன் ஓதுவதை எந்த அடிப்படையில் தவறு என்று நாம் ஆட்சேபணை செய்தோமோ. அது ‘ஸலவாத்’ பிரச்சனைக்கு பொருந்தாதா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பாங்கு ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று முடிகின்றது, ஒருவன் இப்படி யோசிக்கிறான். ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பது கலிமாவின் ஒரு பகுதி தான், இன்னொரு பகுதி “முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ அதைக் காணோம் என்று கருதிக் கொண்டு பாங்கை முடிக்கும்போது “முஹம்மதுர் ரஹுலுல்லாஹ்’ என்று முடித்தால் எவராவது ஏற்க முடியுமா? அவன் சொன்ன வார்த்தை உண்மையான, நன்மையான வார்த்தை என்பதற்காக நாம் அங்கீகரிக்க மாட்டோம். பாங்கின் கடைசியில் நல்ல ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது எப்படித் தவறு என்று நாம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வாறே பாங்கு சொல்வதற்கு முன்னாலும் எதையும் அதிகமாக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாங்குக்கு முன்னால் ஸலவாத் சொல்வது ஆதாரமற்றது என்று நாம் சொல்லும் போதும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தவிர நாமாக உருவாக்கிக் கொண்ட ‘பித்அத்’ தான ஸலவாத்களை சொல்லக் கூடாது என்று நாம் கூறும் போதும், நாம் ஸலவாத்தையே மறுப்பதாக நம்மீது அவதூறு பரப்பப்படுகின்றது . நாம், அவர்கள் சொல்லித் தந்த முறைப்படி சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாகவே சொல்கிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் உண்மையை உள்ளபடி புரிந்து கொண்டவர்களாக ஆக்குவானாக – ஆமீன்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

முஸ்லிம் தேடும் மனைவி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

பெண்ணைக் குறித்தும் திருமணத்தைக் குறித்தும் இஸ்லாம் போதிக்கும் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் ஒரு முஸ்லிமை, வெறும் வெளி அலங்காரங்களை மட்டுமே கொண்ட இந்தக் கால இளம் பெண்கள் எவரும் கவர்ந்திட முடியாது. மாறாக, முழுமையான மார்க்கப்பற்றுள்ள பெண்கள்தான் அந்த முஸ்லிமை ஈர்க்க முடியும். ஆகவே, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தம் மண வாழ்வை நிம்மதியானதாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் ஆக்கக்கூடிய இஸ்லாமிய நற்பண்புகள் மிக்க பெண்ணையே அவர் தேர்ந்தெடுப்பார் அதில் நிதானத்தையும் கடைப்பிடிப்பார். கொள்கையற்று வீணான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சி யையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். அதற்கெல்லாம் மேலாக உறுதிமிக்க மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, அழகிய பண்பாடுகளை உடைய பெண்ணைத் தான் முஸ்லிம் தேடுவார். மேலும், இது விஷயத்தில் நபி அவர்களின் வழிகாட்டுதலை கருத்தில் கொள்வார்.

நபி அவர்கள் கூறினார்கள்: “நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக் கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுடையவளையே தேடிப் பெற்றுக் கொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

(வாழ்த்துகிற பொழுது ‘உன் இருகரங்கள் மண்ணாகட்டும், உன் நெற்றி மண்ணாகட்டும்’ என்றெல்லாம் நபி அவர்கள் கூறுவார்கள். அதற்கு அதிகமதிகம் அல்லாஹ்விற்குச் சிரம் பணி(ந்து ஸஜ்தா செய்)யட்டும் என்பது பொருளாகும்.)

மார்க்கத்தைப் பேணக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு நபி அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு உபதேசித்தது, அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனென்றால், நபி அவர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கதே என்று கூறியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தமது மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத, கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்காத பெண்ணை மணந்து சிரமத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ளவும் நபி அவர்கள் கட்டளையிட்டார்கள்.

முகீரா இப்னு ஷஃஅபா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி அவர்களின் காலத்தில், நான் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் பேசினேன். நபி அவர்கள் ‘அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன். அதற்கு நபி அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிக ஏற்றமாக இருக்கும்” என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸயி)

அன்சாரிப் பெண்ணை மணந்து கொள்ள இருந்த ஒருவர் நபி அவர்களிடம் வந்தார். நபி அவர்கள், அவரிடம் ‘அப்பெண்ணைப் பார்த்தாயா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அப்பெண்ணைப் பார்த்துக் கொள்!’ என அவருக்கு நபி கட்டளையிட்டார்கள். (ஸுனனுன் நஸயி)

ஒரு நல்ல பெண்ணிடம், விரும்பத்தகுந்த ஆன்மிகப் பண்புகளை ஓர் ஆண் எதிர்பார்ப்பது போன்றே அவள் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கையான ஒன்றுதான். இதை நபி அவர்கள் பல ஹதீஸ்களில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்றாக முடியாது.

இதனால்தான் நபி அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்: “மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்.” (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

(இந்த இடத்தில், மனைவி தனது கற்பைப் பாதுகாப்பதையே கணவரைப் பாதுகாப்பதென்று நபி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்களிடம் ‘பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?’ என கேட்கப்பட்டது. அதற்கு நபி அவர்கள், ‘கணவர் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். அவர் ஏவினால் கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவளது ஆன்மாவிலும் அவர் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள்’ என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது)

கணவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சி யையும் நற்பாக்கியத்தையும் வழங்க ஆற்றல் பெற்ற மனைவியின் தனித்தன்மையைப் பற்றி நபியவர்களின் உயர்ந்த கண்ணோட்டமாகும் இது. இத்தகைய பெண்ணே இல்லறத்தில் திருப்தி, அமைதி, மன மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வழங்கவும் ஆற்றல் பெற்றவள். அது மட்டுமின்றி பல தலைமுறைகளுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் வீரர்களை உருவாக்குபவராகவும் மேதைகளை உற்பத்தி செய்பவராகவும் விளங்குவாள்.

உடல், உணர்வு, ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற அடிப்படையின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட வேண்டுமென நபி அவர்கள் ஆசைப்பட்டார்கள். அப்போதுதான் திருமண உறவு பலமாக அமைந்து வெறுப்புணர்வும் மனக்கசப்பும் அதை அசைத்து விட முடியாமல் இருக்கும். ஆகவே, எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றும் உண்மை முஸ்லிம் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிடமாட்டார். மாறாக, அவளைவிட்டும் தாமும் விலகி மக்களையும் எச்சரிப்பார்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பொருட்டால்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்று முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் அதாவது தர்கா, தரீக்கா, மத்ஹபு இவற்றை சரிகண்டு மார்க்கத்திற்கு உட்பட்டதாக ஏற்று நடப்பவர்கள். அவர்கள் அல்குர்ஆன் அல்அஃராஃப் 7:55 இறைக் கட்டளைக்கு நேர்முரணாக தொழுகைகளுக்குப் பின்னரும், மற்றும் தங்களின் கூட்டு செயல்பாடுகளிலும், சப்தமிட்டு (துஆ) பிரார்த்தனையாக இருந்தாலும், கூட்டு(துஆ) பிரார்த்தனையாக இருந்தாலும் அவற்றை முடிக்கும் போது நபி(ஸல்) அவர்களின் பொருட்டால், ஷுஹதாக்களின் பொருட்டால், அவலியாக்களின் பொருட்டால் எங்களின் இந்த துஆவை ஏற்று அருள்புரிவாயாக யா அல்லாஹ் என்று தங்களின் பிரார்த்தனைகளை முடிக்கிறார்கள்.

அவர்களில், அல்லாஹ்விடம் என்ன கேட்பது? இறந்து மண்ணுக்குள் சென்றுவிட்ட அவுலியாக்களிடமே நேரடியாகக் கேடடுப் பெற்றுக் கொள்ளலாம்; பெற்றுக் கொள்ள முடியும் என்ற கொள்கையுடையோரும் உண்டு. இவர்கள் தர்காக்களிலுள்ள கபுருகளுக்கே சுஜுது – சிரம் பணியலாம். அது அல்லாஹ்வுக்கு மாறு செய்வது ஆகாது என்று நம்பும் பரேல்வி (அகீதா) கொள்கை கொண்ட ஆக வழிகெட்ட கூட்டமாகும்.

ஆனால் இந்த பரேல்வி கொள்கை தவறு என்று கூறும் தப்லீஃக், தேவ்பந்தி(அகீதா) கொள்கை உடையோரும் நபிமார்களின், நாதாக்களின் , நல்லடியார்களின் பொருட்டால் கேட்பது மார்க்க முரணான -இறைவனுக்கு இணை வைக்கும் தீய செயல் என்பதை உணராதிருக்கிறார்கள். நேரடியாக அவர்களிடம் கேட்கவில்லையே! அவர்களின் பொருட்டால்(?) மன்னிக்கும்படி, நமது தேவைகளைப் பூர்த்தி செய்து தரும்படி படைத்த அல்லாஹ்விடம் தானே கேட்கிறோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது.

மேலும் தங்களின் இந்த இணை வைக்கும் தீய செயலுக்கு ஆதாரமாக அல்குர்ஆன் அல்மாயிதா 5:35 இறைவாக்கைத் திரித்து வளைத்து ஆதாரமாகத் தருகிறார்கள். அந்த இறைவாக்கு வருமாறு:

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சி – ஆதரவு வையுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை (வஸீலா) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் பாடுபடுங்கள்; அதனால் நீங்கள் வெற்றி பெறலாம். (5:35)

அல்லாஹ் இங்கு வஸீலா என்று குறிப்பிட்டிருப்பது அல்லாஹ்வின் நேசத்திற்குரிய நல்லடியார்கள் தாம்; நாம் பாவிகள், அந்த நல்லடியார்களின் பொருட்டால் அல்லாஹ் நம்மை மன்னித்து நமக்கு கிருபை செய்யலாம் என்பது அவர்களின் விளக்கமாகும்.  இந்த சுய விளக்கம் தவறு என்பதை பனீ இஸ்ராயீல் 17:57 இறைவாக்கைப் படித்துப் பார்ப்பவர்கள் எளிதாக விளங்க முடியும். அது வருமாறு:

(இறைவனையன்றி) இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள், ஏன் அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்கள் கூட தங்களை இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களையே செய்து கொண்டும், அவனது அருளை எதிர் பார்த்தும், அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது. (17:57)

இந்த இறைவாக்கு அல்லாஹ்வுக்கு மிகமிக நெருக்கமாக இருக்கும் நபிமார்களும், இவர்கள் வாதிடுவது போல் நெருக்கமாக இருக்கும் அவுலியாக்களான நல்லடியார்களும் இறைவனின் அடிமைகளே! அவர்களே அல்லாஹ்வை அஞ்சி தங்களின் நற்கருமங்களைக் கொண்டு அல்லாஹ்வின் மன்னிப்பையும், ஆதரவையும், அருளையும் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்கள் இவர்களுக்காக எப்படி பரிந்துரை செய்ய முடியும்? நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷ்கள் அல்லாஹ் காஃபிர்கள ் நிராகரிப்பாளர்கள் என முத்திரை குத்தி அவர்களை நரகவாசிகள் என தெளிவான அறிவித்துள்ளான். அதற்குக் காரணமே அவர்கள் நபிமார்களையும், வலிமார்களையும் தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை (வஸீலா) செய்வார்கள் என நம்பி, அவர்களை அழைத்துப் பிரார்த்தித்ததே என்பதை யூனூஸ் 10:18, ஜுமர் 39:3, கஹ்ஃப் 18: 102-106 இறைவாக்குகள் தெள்ளத் தெளிவாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. நபி இப்றாஹிம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளுக்கே இந்தக் கதி என்றால், நம் தமிழக முஸ்லிம்கள் குடிகாரர்களையும், பயித்தியங்களையும், கஞ்சா மஸ்தான்களையும், இதற்குக் கீழும் போய் கழுதைகளையும், குதிரைகளையும், கட்டைகளையும் அவுலியாக்களாக்கி, தர்காக்கள் கட்டி அங்கு போய் அவர்களை அழைத்துப் பிராாத்திப்பவர்களின் (வஸீலா) நாளை மறுமையின் நிலை என்னவாகும்? சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த பொருட்டால் (வஸீலா) என கேட்டு மக்களை வஞ்சிக்கும் புரோகித மவ்லவிகள் அதை நியாயப்படுத்தும் முறை மேலும் பெரியதொரு குற்றத்தைச் செய்ய வைக்கிறது. வஸீலாவை நியாயப்படுத்து முறை வருமாறு:

நாட்டின் பிரதம மந்திரியையோ, முதன் மந்திரியையோ, உயர் அதிகாரிகளையோ நேரடியாகச் சந்தித்து நமது தேவைகளை முறையிட முடியுமா? முடியாது. அவர்களுக்கு வேண்டப்பட்ட மந்திரி, எம்எல்ஏ., எம்.பி., எம்.எல்.சி., போன்றோரின் அறிமுகத்துடன் (வஸீலா) தான் அவர்களைப் போய் சந்திக்க முடியும். அது போல் தான் நாம் அவுலியாக்களின் அறிமுகத்துடன் (வஸீலா) தான் அல்லாஹ்விடம் நம்முடைய தேவைகளை முறையிட முடியும், என மனித அறிவை மயங்கச் செய்யும் காரணத்தைக் கூறுவார்கள் இந்தப் புரோகித மவ்லவிகள்.

சுய சிந்தனையற்ற மக்கு மக்களும் இந்த போலிக் காரணத்தைச் சரி கண்டு அந்த முகல்லிது பின்னால் அணிவகுப்பார்கள். இந்த அவர்களின் சுய விளக்கத்தில் எத்தனைக் கொடூர இணை வைக்கும் மாபாதகங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்பதை வரிசையாகப் பார்ப்போம். முதல் குற்றம் மாபெரும் வல்லமைமிக்க அல்லாஹ்வை அவனால் படைக்கப்பட்ட பிரதம மந்திரி, முதன் மந்திரி, உயர் அதிகாரி என மனிதர்களோடு ஒப்பிட்டு உதாரணம் கூறி இருப்பது கொடிய குற்றம்; அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் குற்றமாகும்.

இதோ குர்ஆன் கூறுகிறது காது கொடுத்து கேளுங்கள்: ?வானங்களிலோ, பூமியிலோ இவர்களுக்காக யாதொன்றையும் அளிக்க சுதந்திரமும், ஆற்றலும் அற்றவற்றையா அல்லாஹ்வை விட்டு விட்டு இவர்கள் அழைக்கிறார்கள். (16:73)

ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள். (அந்நஹ்ல் 16:74)

இந்த இரண்டு இறைவாக்குகளையும் கவனமாகப் படித்து விளங்குகிறவர்கள் அன்று நபி(ஸல்) காலத்தில் தாருந்நத்வா மவ்லவிகள் அல்லாஹ்வைப் பற்றி எப்படிப்பட்ட அறிவீனமான உதாரணத்தைக் கூறி அன்றைய குறைஷ்களை ஏமாற்றி வஞ்சித்தார்களோ, அதே அறிவீனமான, இணை வைக்கும் உதாரணத்தையே இன்றைய முகல்லிது மவ்லவிகள் கூறி முஸ்லிம்களை வஞ்சித்துச் சுரண்டுகிறார்கள் என்பதை எளிதாக விளங்க முடியும்.

இந்த உதாரணத்தின் மூலம் இந்த முகல்லிது மவ்லவிகள் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வை எந்த அளவு இழிவுபடுத்தி கேவலப்படுத்துகிறார்கள். (நவூதுபில்லாஹ்) என்று வரிசையாகப் பார்ப்போம்.

அவர்கள் கூறும் 1. பிரதம மந்திரி, முதன் மந்திரி, 2. இடைப்பட்ட மந்திரி, எம்.எல்.ஏ. எம்.பி.எம். எல்.சி., 3. தேவைகள் நிமித்தம் இவர்களிடம் செல்பவர்கள் என்ற இந்த மூன்று நிலையிலும் இடம் பெற்றுள்ளவர்கள் மனிதர்களே! இங்கு தேவை உடைய மனிதன் தன்னைப் பற்றி அறிந்திருக்கும் அளவுக்கு இடையில் வரும் மந்திரி, எம்.எல்.எ., எம்.பி., எம்.எல்.சி., அறிந்திருக்கும் அளவுக்கு பிரதம மந்திரி, முதன்மந்திரி, உயர் அதிகாரி அறிய மாட்டார். அறியும் வாய்ப்பும் இல்லை. இங்கு அந்த தேவையுடைய மனிதன் நல்லவனா? கெட்டவனா? யோக்கியனா? அயோக்கியனா போன்ற விவரங்கள், அவனறிந்த அளவு இடையில் வருபவர்களுக்குத் தெரியாது. இடையில் வருகிறவர்கள் அறிந்த அளவுக்கு பிரதமமந்திரி, முதன்மந்திரிக்குத் தெரியாது.

இங்கு தேவையுடைய மனிதனைப் பற்றிய உண்மை விபரம் மேலே போக போக இறங்கு வரிசையில் செல்கிறது. எனவே இந்த இந்த அறிவீனமான உதாரணத்தின் மூலம் முறையிடும் மனிதனைப் பற்றிய உண்மைத் தகவல்கள் அவனறிந்த அளவுக்கு அல்லாஹ்வுக்குத் தெரியாது. எனவே உலகில் பிரதம மந்திரியை அல்லது முதன் மந்திரியை அவரது அறியாமையைப் பயன்படுத்தி, அவரை ஏமாற்றிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் என்று கூறும் இந்த முகல்லிது மவ்லவிகள் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?

அவர்கள் நினைப்பதற்கு நேர் மாறாக, இங்கு அல்லாஹ் , சம்பந்தப்பட்ட மனிதனைப்பற்றி அந்த மனிதனே அறிந்துள்ளதற்கும் மேலதிகமாகவே அறிந்தவனாக இருக்கிறான். அந்த மனிதனுக்கோ தான் இதுவரை செய்துள்ள நல்லது, கெட்டது மட்டுமே தெரியும். ஆனால் முக்காலமும் அறிந்த இறைவனோ அந்த மனிதன் இறப்பதற்கிடையில் செய்யவிருக்கும் நல்லது, கெட்டது அனைத்தையும் முற்றிலும் அற்ப அறிவையுடைய பிரதமந்திரி, முதன் மந்திரி இவர்களோடு, முழுமையான அறிவையுடைய இறைவனை ஒப்பிட்டுப் பேசும் முகல்லிது தர்கா, தரீக்கா தப்லீஃக், தேவ்பந்த் மவ்லவிகள் எந்த அளவு வழிகேடர்களாகவும், மக்களை வழிகெடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை சிறிது சுய சிந்தனையுடையவனும் விளங்கிக் கொள்ள முடியும்.

நபிமார்களை , நாதாக்களை , அவுலியாக்களை, பொருட்டாகக் கொண்டு உதவி தேடுவதற்கு இந்த முகல்லிது மவ்லவிகள் கூறும் இரண்டாவது காரணம் வருமாறு:

சாதாரண மக்களாகிய நாமெல்லாம் பாவங்களிலேயே மூழ்கி இருக்கும் பெரும் பாவிகள்; நாம் அல்லாஹ்வை நேரடியாக நெருங்கமுடியாது. நபிமார்கள், நாதாக்கள், அவுலியாக்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அல்லாஹ்வின் அன்பை அதிகமாகப் பெற்றவர்கள். எனவே அவர்களின் பொருட்டால் கேட்கும்போது அல்லாஹ் அவர்களுக்காக வேணும் மனமிறங்கி நமது தேவையைப் பூர்த்தி செய்து கொடுப்பான் என்பதாகும். அதாவது பாவத்தில் மூழ்கி இருக்கும் மக்கள் மீது அல்லாஹ்வை விட அவனது நல்லடியார்கள் அதிகமான அன்பும் அக்கறையும் உடையவர்கள் என்ற குருட்டு நம்பிக்கையை மக்களின் உள்ளங்களில் விதைக்கிறார்கள் இந்த முகல்லிது மவ்லவிகள்.

அல்லாஹ் படைத்த மனிதன்மீது அல்லாஹ்வை விட அவனது அவுலியாக்களுக்கு அதிக அன்பு இருக்கிறது என்று எண்ணுவதை விட மாபெரும் குற்றம் வேறு ஒன்று இருக்க முடியுமா? அல்லாஹ் ஜுமர் 39:53-ல் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.

என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய அருளில் அவர் நம்பிக்கை இழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன் என்று நீர் கூறுவீராக. (39:53)

மேலும் ஃகாஃப் 50:16 என்ன கூறுகிறது என்று பாருங்கள். மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி நரம்பை விட நாம் அவனுக்ககு சமீபமாகவே இருக்கிறோம். (50:16)

பெற்ற தாய் தனது குழந்தையிடம் அன்பு செலுத்துவதை விட பல மடங்கு அல்லாஹ் தான் படைத்த மனிதனிடம் அதிகம் அன்பு காட்டுகிறவனாக இருக்கிறான். அந்த அன்புக்கு ஈடாக வேறு எவருடைய அன்பும் இருக்க முடியாது.

தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்திலும் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று உறுதி அளிக்கிறோம்.

இது அல்லாமல் அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் ?எனக்கே அடிபணியுங்கள். என்னிடமே கேளுங்கள்? என்று கூறுகிறான். இந்த அளவு தெள்ளத் தெளிவாக நெற்றிப் பொட்டில் அடிப்பது போல், தனக்கும் அடியானுக்கும் இடையில் எந்தப் பரிந்துரையாளரோ, இடைத்தரகரோ இல்லாமல், உங்கள் தேவைகளை நேரடியாக என்னிடமே கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் அல்ஃபுர்கான் 25:30-ல் கூறி இருப்பதுபோல் இந்த குர்ஆனின் இந்த அனைத்து உபதேசங்களையும் புறக்கணித்து விட்டு பொருட்டு என்ற பெயரால் இடைத்தரகர்களை அழைப்பவர்கள் யாராக இருக்க முடியும்? அப்படிப்பட்டவர்களின் முடிவு? அதையும் அல்லாஹ் 25:27,28,29-ல் நேரடியாகக் கூறி எச்சரித்துள்ளான். அவை வருமாறு.

?அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக் கொண்டு ?அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான்? (25:27)

?எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாதிருக்க வேண்டாமா?? (25:28)

?நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் (குர்ஆன்) வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்? (என்று புலம்புவான்) (25:29)

என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள்? என்று (நம்) தூதர் கூறுவார். (25:30) இவ்வளவு தெள்ளத் தெளிவாக அல்லாஹ் அல்குர்ஆனில் நேரடியாக எச்சரித்திருந்தும், இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு மவ்லவிகளின் தப்பான சுய விளக்கங்களைக் கேட்டு அதன்படி நடப்பவர்களை நாளை மறுமையில் போய்ச் சேரும் இடம் எதுவோ?

ஆக அல்லாஹ்வைவிட அவுலியாக்கள் தான் மனிதர்களிடம் அதிக அன்பு, கருணை காட்டுகிறவர்கள் என்று முஸ்லிம்களை நம்பச் செய்து அவுலியாக்கள் பரிந்துரையாளர்களாக ஆக்குகிறவர்கள் – பொருட்டால் கேட்பவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?

இந்தப் புரோகிதர்கள் தங்களின் தொழிலை தக்க வைத்துக் கொள்ள இன்னொரு தந்திரத்தையும் கையாள்கிறார்கள். அல்லாஹ் மார்க்கக் கடமைகளை மிகமிக எளிதாக, சுமையற்றதாக ஆக்கி இருப்பதாக குர்ஆனில் பல இடங்களில் கூறி இருக்கிறான். (பார்க்க 2:159, 4:28, 16:89, 19:97, 22:78, 25:33, 44:58, 54: 17,22,32,40, 80: 20) இப்படித் தெள்ளத் தெளிவாக எளிதாக்கப்பட்ட மார்க்கக் கடமைகளை, பிக்ஹின் பெயரால் மிகவும் கடினமாக ஆக்கி இருக்கிறார்கள். எனவே பெரும்பாலான முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகள் நிறைவேற்றுவதற்குக் கடினமானவை என நினைத்துக் கொண்டு அவற்றை விடடு விரண்டோடுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் தாங்கள் பெரும்பாவிகளாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். அல்லாஹ் தங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டான் என நினைக்கின்றனர். உலகில் குற்றங்கள் செய்பவர்கள் குறுக்கு வழியில் அக்குற்றங்களிலிருந்து விடுபட முயல்வது போல், இந்த முஸ்லிம்களும் குறுக்கு வழியில் இந்தப் புரோகித மவ்லவிகளிடம் போய் தஞ்சமடைகின்றனர். அவர்கள் இவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, ?பொருட்டால்? என்ற பெயரால் இடைத்தரகர்களைப் புகுந்து கொண்டு அவர்களிடம் தவறான வழிகளில் கொள்ளையடிப்பதோடு, அவர்களை நரகில் தள்ளுகின்றனர்.

நபிமார்களை, நாதாக்களை, அவுலியாக்களை பொருட்டாகக் கொண்டு கேட்பதற்கு, பிரதம மந்திரி, முதன்மந்திரி போன்ற மனிதர்களை அல்லாஹ்வோடு ஒப்பிட்டு உதாரணம் கூறுவதன் மூலம் அல்லாஹ்மீது இன்னொரு மாபெரும் பழியையும் சுமத்துகிறார்கள். அது வருமாறு:

பிரதம மந்திரியாகட்டும், முதன் மந்திரியாகட்டும் அவர்களும் மனிதன் என்ற நிலையில் தேவை உடையவர்கள் என்பதில் சிறிது சந்தேகமில்லை. அவர்கள் மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி., போன்றோரின் பரிந்துரையை ஏற்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்கள். அந்த கோரிக்கைகளில் அவர்களுக்கு முழுமையான உடன்பாடு இல்லை என்றாலும் அவற்றை நிறைவேற்றிக் கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். காரணம் இந்த மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ., எம். எல். சி., போன்றோரின் தயவு இல்லாமல் இவர்கள் அந்த பிரதம மந்திரி, முதன் மந்திரி பதவிகளில் நிலைத்து இருக்க முடியாது. அவர்களின் தயவு – உதவி அவசியம் இவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறது; எனவே பரிந்துரையை ஏற்கிறார்கள்.

இதுபோல் அதிகாரிகளுக்கு பணம், மனைவிமார்களின் தேவை இருப்பதால் அந்த மனைவிமார்களின் பரிந்துரையை ஏற்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதுபோல் அல்லாஹ்வுக்கு நபிமார்களின், நாதாக்களின், அவுலியாக்களின் தயவு – உதவி தேவை என இந்த முகல்லிது மவ்லவிகள் நம்புகிறார்களா? அப்படி நம்பினால் அவர்கள் ஈமான்-நம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியுமா? அவர்கள் இறைநேசர்களா? அல்லது இறைவனுக்குப் பகைவர்களா? சொல்லுங்கள்!

அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன் என்று அல்குர்ஆனின் எத்தனை இடங்களில் அடித்துக் கூறுகிறான். எவரது பரிந்துரைக்கும் கட்டுப்பட்டவன் இல்லை அல்லாஹ் என்று அல்குர்ஆன் தெளிவாகக் கூறவில்லையா? (பார்க்க. பகரா 2:255, இக்லாஸ் 112:2) இந்த நிலையில் அல்லாஹ் நபிமார்களின், நாதாக்களின், அவுலியாக்களின் பரிந்துரைகளை எதிர்பாக்கிறான் என்று இந்த முகல்லிது தர்கா, தரீக்கா, தப்லீஃக், தேவ்பந்த் மவ்லவிகள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?

இந்தப் பொருட்டால் என்பது எவ்வளவு பெரிய குற்றம், இறைவனை இழிவுபடுத்தும் (நவூதுபில்லாஹ்) ஷிர்க்கான குற்றம் என்பதை உரிய அல்குர்ஆன் எச்சரிக்கைகளைக் கொண்டு தெளிவுபடுத்திய பின்னராவது, தவ்பா செய்துவிட்டு இந்தப் புரோகிதர்கள் மீள்வார்கள் என நினைக்கிறீர்களா? அது ஒரு போதும் நடக்காது. காரணம் அதைவிட்டு மீண்டுவிட்டால் அவர்களின் பிழைப்பு என்னாவது? வாழ்க்கைக்கு வேறு வழி என்ன? எனவே வேறு வாழ்வு ஆதாரம் கிடைக்காத நிலையில் அந்தப் புரோகிதத் தொழிலை விட்டு வெளியேறும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லவே இல்லை.

எனவே முஸ்லிம் பொது மக்கள்தான் சிந்தித்துச் சுதாரிக்க வேண்டும். தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை இவர்களிடம் தாரை வார்த்துவிட்டு, அதல்லாமல் பெரும் பாவத்தையும் சுமந்து கொண்டு நரகம் புக வேண்டுமா? இது முஸ்லிம்களுக்குத் தேவையா? என சிந்தித்து விளங்கி அல்குர்ஆனின் மேலே எடுத்து எழுதியுள்ள படித்துணர்ந்து இந்த ?பொருட்டால்? என்ற புருடாவை விட்டு தெளபா செய்து மீள வேண்டும். அல்லாஹ் அருள்புரிவானக.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

சபை ஒழுங்கு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் ‘அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்

நபி அவர்களைவிட (அவர்களின்) தோழர்களுக்கு எவரும் மிகவும் உவப்பானவராக இருக்கவில்லை. எனினும் நபி அவர்களை அவர்கள் பார்ப்பின் எழுந்திவிட மாட்டார்கள். காரணம் இதை நபி அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதைத் தோழர்கள் அறிந்திருந்ததால்தான். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) திர்மிதீ

முஆவியா(ரலி) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களின் மகனாரிடமும், ஸஃப்வான் (ரலி) அவர்களின் மகனாரிடமும் வந்தனர். அப்பொழுது அவ்விருவரும் அவர்களுக்காக எழுந்து நின்றனர். அப்பொழுது முஆவியா(ரலி) அவர்கள் அவ்விருவரையும் ‘நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவருக்குத் தமக்காக மக்கள் எழுந்து நிற்பது மகிழ்ச்சியை நல்குகிறதோ அவர் நரகத்தை தம் இடமாக்கிக் கொள்ளவும் என்று நபி அவர்கள் கூற நான் கேட்டேன்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ் நூல்: அபூதாவூத், திர்மிதீ

உங்களில் எவரும் சபையில் வீற்றிருப்பவரை எழுந்திருக்கச் செய்து அங்கு அமரவேண்டாம். எனினும் நீங்கள் நெருங்கி அமர்ந்து இடத்தை விசாலமாக்கி (அவருக்கு இடம்) அளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விசாலாமாக்கி வைப்பான் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

“ஒருவர் சபையிலுருந்து ஒரு வேலையாக எழுந்து சென்று பின்னர் திரும்பி வருவாரானால் அவரே அவ்விடத்திற்கு மிகவும் உரிமையுடையவராவார்” என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி)வின் மகனார் வஹ்பு நூல்: திர்மிதீ

நபி அவர்களிடம் நாங்கள் சென்றால் எங்களில் ஒவ்வொருவருக்கும் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு நாங்கள் அமர்ந்து விடுவோம். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: அபூதாவூத்

“இருவருக்கிடையில் அவ்விருவரின் அனுமதியின்றிப் பிறர் அமர்வது கூடாது” என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அம்ருப்னு ஷுஐப் நூல்: அபூதாவூத், திர்மிதீ

பள்ளிவாயிலுக்குள் வந்த நபி அவர்கள் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி “உங்களுக்கு என்ன வந்துவிட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காணுகிறேன் என்று வினவினர். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த