இஸ்லாம்தளம்

மார்ச்25, 2009

இஸ்லாமிய சமுதாயம் படிப்பினை பெறுமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எனதருமை இஸ்லாமிய சமுதாயமே! தஃவாபணியின் முக்கியம் பற்றி இந்த சமுதாயம் இனியாவது சிந்நிக்குமா? இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ந நபி (ஸல்) அவர்கள் ஒன்றுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக  இருந்தும் 40 ஆண்டு காலம் உண்மையாளன் என்ற பெயர் பெற்றனர்.  அதன் பின் மனித சமுதாயத்திற்கு ஒருவழிகாட்டியாக இறைவனால்  அனுப்பப்பட்ட இனிய தூதர் ஆனார்கள்.

இந்த மனிதசமுதாயத்திற்கு அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டியதோடு மனித நேயத்தை கற்றுக்கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்கும் போது தான் மட்டும் உண்ணுவது முறையல்ல என்ற உன்னத மனித நேயத்தையும் கற்றுக்கொடுத்தனர். மனித நேயமிக்க இந்த இஸ்லாமிய  மார்க்கம் இன்று இந்தியாவில் மிகப் பெரிய ஒரு அபாயத்தை எதிர் நோக்கி உள்ளதை எண்ணி வேதனைப்படுகின்றேன்.

இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். இந்தியாவில் முதன் முதலில் வியாபாரமாகத்தான் இஸ்லாம் பரவியது. அவர்கள் செய்த வியாபாரத்தில் நேர்மை இருந்தது. இறையச்சம் மிக்கவர்களாக ஒழுக்க சீலர்களாகதாங்கள் செய்கின்ற அனைத்தும் இறைவனின் பொருத்தத்தை பெறவேண்டும் என எண்ணிச் செய்தார்கள். அதன் காரணமாக இஸ்லாம் இந்திய மண்ணில் பரவியது. இதன் பிறகு இந்திய மண்ணில் 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்கள் மன்னர்கள் என்ன செய்தார்கள்? இவர்கள் இம்மக்கள் மத்தியில் புனித இஸ்லாத்தை, இஸ்லாத்தின் ஏற்ற மிகு கொள்கையை எடுத்து வைத்தார்களா? குர்ஆன், ஹதீஸ்படி ஆட்சி நடத்தினார்கள்?

அரபி மொழியில் உள்ள குர்ஆனை தமிழ் நாட்டில் தமிழிலும், மகாராஷ்டிராவில் மராத்தியிலும், இந்தியாவில் அந்தந்த மாநில மொழிக்கொப்ப இந்த குர்ஆன் அன்று மொழி பெயர்த்து கொடுக்கப்பட்டு, அவற்றை மக்கள் மத்தியில் எடுத்து  வைத்திருந்தால், தாங்கள் இந்த நாட்டை ஆண்டபோது ஒரு இஸ்லாமிய ஆட்சி செய்திருப்பார்களேயானால் 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆண்ட இந்த பூமியில் ஒரு பாபரி மஸ்ஜித் இன்று இடிக்கப்படுமா? இந்த இழி நிலை ஏற்படுமா? இது  இஸ்லாமிய நாடாக அல்லவா மாறி இருக்க வேண்டும்.என்ன செய்தார்கள் இந்த முஸ்லிம் மன்னர்கள்? நபி பட்டம் கிடைத்து 23 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த நபி (ஸல்) அவர்களின் தியாகம், உழைப்புக் காரணமாக உலகில்இன்று மூன்றில் ஒரு பங்கு நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. (குர்ஆன், ஹதீஸ்படி நடக்கவில்லை என்றாலும்) அப்படி அவை தோன்றின. இங்கே என்ன செய்தார்கள் இவர்கள்? கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம் அரசர்களின் ஆட்சிக்குப் பிறகு அரசியலில் ஈடுபட்ட சமூகக் காவலர்கள்  எனக் கூறிக்கொண்டு ஏகப்பட்ட பட்டம் பெற்றுள்ள இந்த கண்ணியம் மிக்கவர்கள் என்ன செய்தார்கள்? இஸ்லாத்தின் மனிதப் பண்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்களா? இல்லை! மேடை கிடைத்தால் போதும் என மக்களை மூடர்களாக்கி இவர்கள் அரசியலில் அந்தஸ்து வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அரசியல் பிழைப்பு நடத்தினார்கள். இவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்களா? ஆண்டுக்கு ஒரு முறை நபிக்கு விழா எடுக்கும் இவர்கள் அன்றைக்காவது தஃவா பணி செய்கிறார்களா?

இல்லை! இல்லை! நாங்கள்தான் ரசூலுல்லாஹ்வின் போதனைகளைப் பின்பற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டு முஸ்லிம் அல்லாத மக்களிடம்  பணிசெய்கிறோம் எனக் கூறும் இவர்கள் தாங்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என எண்ணி தமக்கு என ஒரு சட்டத்தைப் போட்டு கொண்டு இந்த  வரையறைக்குள்ளே தான் எங்கள் ஜமாஅத்தில் இணையலாம் எனக் கூறுகின்றார்கள்.

எந்த நிலையிலாவது இஸ்லாத்தை அதன் முழுவடிவத்தை செயல் படுத்தவேண்டும் என நினைத்தார்களா? அரசு புள்ளிவிவரப்படி இன்று உள்ள முஸ்லிம்களில் 46% வறுமைக் கோட்டில் உள்ளார்கள் எனக் கூறுகிறதே! முஸ்லிம்களில் எத்தனை பெரிய பணக்காரர்கள் தன் சொத்தை கணக்கிட்டு ஜகாத் ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள்? இன்றும் எத்தனை முஸ்லிம்கள் வீட்டில் வேலை செய்யும் அரிஜன இன மக்கள் இருக்கின்றார்கள். ஜாதி இஸ்லாத்தில் இல்லை எனவே இந்த நிலையோடு ஏன் வாழ்கின்றீர்கள்? எனக் கேட்டு இஸ்லாத்தில் இணைந்த அரிஜன்கள் எத்தனை? அடிமைத் தொழிலை தவிர வேறு ஒன்றும் தொழில் செய்ய முடியாத ஒரு அடிமை சமுதாயத்திடமாவது இஸ்லாம் எடுத்துரைக்கப்பட்டதா?

இனியாவது முஸ்லிம் சமுதாயம் தஃவாபணியின் (அழைப்பு) முக்கியம் பற்றி சிந்தித்து இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்பவேண்டும். அப்படி இந்த இஸ்லாம் பரப்பப்படுமானால் எந்த பாபர் மஸ்ஜிதும் இடிக்கப்படுகின்ற சூழ்நிலையை காணமுடியாது.
1993 ல் எழுதியது

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மனித அபிப்பிராயம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்று ஆர்வமாக அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்களில் பெரும்பான்யோரை ஒரு மயக்கம் பீடித்துள்ளது. இன்று அந்தச் சகோதரர்கள், தங்களில் ஏற்பட்டுள்ள மயக்கம் காரணமாக செய்யும் தவறுகள் குர்ஆன், ஹதீஸை முறையாகவும் சரியாகவும் செயல்படுத்த முயற்சிகள் செய்யும் சகோதரர்களையும் பாதிக்கிறது. ஒட்டுமொத்தமாக அனைவரயும் சேர்த்தே சத்திய பணிக்கு விரோதமானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இது பற்றிய தெளிவு அனைவருக்கும் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.

‘இஸ்லாம்’ அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட இறைமார்க்கம். அதற்கு பூரண சொந்தக்காரன் அல்லாஹ் மட்டுமே. அதனைச் செயல்படுத்துகிறவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையைத்தான் கவனிக்க வேண்டுமே தவிர மக்களின் மனோ நிலையையும், விருப்பங்களயும் அனுசரித்து இவர்களின் சொந்த யூகங்களைப் பின்பற்றக்கூடாது. இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்களையே குர்ஆனின் பல இடங்களில் இது விஷயத்தில் மிகத் தெளிவாகவும், கண்டிப்புடனும் அல்லாஹ் எச்சரித்துள்ளான். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

(நபியே) அல்லாஹ் அருள்செய்த (சட்டதிட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளை பின்பற்றாதீர்கள்;  அல்லாஹ் உம்மீது  இறக்கி வைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். (5:49)

(குர்ஆனை) என் மனப்போக்கின்படி மாற்றிவிட எனக்கு உரிமையில்லை. என்மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை. என்று (நபியே) நீர் சொல்வீராக. (10:15)

மக்கள் அனைவரும் இஸ்லாத்தில் வந்துவிட வேண்டும், எளிதாக இஸ்லாத்ததை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அல்லாஹ் அறிவிக்காத எந்த ஒன்றையும் செயல்படுத்தக்கூடாது. அப்படி நல்லதுபோல் தோன்றும் எந்த திட்டத்தையும் குர்ஆன், சுன்னாவுடன் ஒப்பிட வேண்டும். எந்த அறிஞர் தந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அது அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது.

மேலும் மக்கள் எப்படியும் நேர்வழிக்கு வந்துவிட வேண்டும். இறைச் செய்திகளை ((வஹி) மட்டும் செயல்படுத்துவதால் மக்கள் உணர்வு பெற்று நேர்வழிக்கு வரமாட்டேன் என்கிறார்கள். எனவே நாம் எதையாவது செய்து அவர்களை நேர்வழியின்பால் ஆர்வமுடையவர்களாக திருப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இறைவனால் கட்டளையிடப்படாத எதனையும் செய்யக்கூடாது என்பதற்கு

(நபியே உம்மை) யாராவது ஒருவர் நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (4:80)

இந்த நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அறிஞர்களாக மதிக்கப்படுவோர் இறைவனது இத்தனை தெள்ளத் தெளிவான வசனங்களை எல்லாம் அறிந்தோ, அறியாமலோ புறக்கணித்து விட்டு, தங்கள் சுய சிந்தனையில் தோன்றிய அபிப்பிராயங்களை எல்லாம் மார்க்கத்தில் நுழைத்து அதன்மூலம் மார்க்கத்தில் கலப்படம் செய்துவிட்டு மார்க்கத்திற்கு பெரும் சேவை செய்துள்ளதாக மனப்பால் குடித்து வருகின்றனர். இந்தச் சாபக்கேடு நீண்ட நெடுங்காலமாக இந்தச் சமுதாயத்தை பற்றியுள்ளது. உலகின் மிக உன்னத சமுதாயம், இன்று அதாள பாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும். இன்று முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாகச் சின்னாப் பின்னமாக்கப் பட்டுக் கிடப்பதற்கும் இந்த மனித அபிப்பிராயங்கள் மார்க்கத்தில் நுழைக்கப்பட்டதே காரணமாகும்.

ஒரு கூட்டம் ஒரு அறிஞரின் மனித அபிப்பிராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இன்னொரு கூட்டம் இன்னொரு அறிஞரின் மனித அபிப்பிராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இப்படி அல்லாஹ் கொடுத்த நேரான வழிவிட்டு தடம்புரண்டு பல கோணல் வழிகளில் சென்று தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது இந்த சமுதாயம்.

இன்று முஸ்லிம்களிடையே ஆதிக்கம் செலுத்திவரும் மத்ஹபுகள், தரீகாக்கள் சூஃபிஸ வழிமுறைகள் இயக்கங்களின் பெயரால் பல பிரிவுகள் இன்னும் இவை போன்ற அனைத்தும் கோணல் வழிகளேயாகும். ஷைத்தான் இந்த கோணல் வழிகளில் முஸ்லிம்களுக்கு நல்ல பலன் கிட்டுவது போன்றதொரு மாயத் தோற்றத்தை உண்டாக்கி வைத்திருப்பதால், முஸ்லிம்களில் பெரும்பாலோர் அவற்றில் மயங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவை போன்ற தனித்தனி இயக்கங்களில் பெயரில் செய்யப்படும் முயற்சிகள் நல்லவையாகக கருதப்பட்டாலும் அவையும் மனித அபிப்பிராயங்களால் உருவாக்கப்பட்டவையே. நபி(ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள நபிமார்களின் உம்மத்துகளும் இறை கொடுத்த  நேர்வழியை  விட்டு தங்கள்  அறிஞர்களின் மனித   அபிப்பிராயங்களால்  தோற்றுவிக்கப்பட்ட கோணல் வழிகளில் சென்றே பல மதங்களையும் அந்த மதங்களில் பல பிரிவுகளையும் உண்டாக்கி வைத்துக்கொண்டு அவைகொண்டு அல்லாஹ் சொல்லுவது போல் மகிழ்வடைந்து கொண்டிருக்கிறார்கள் ஆரம்பத்தில் நாம் எடுத்து எழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்திற்கும் முரணானவையே. எனவே அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வழியில்லை. எனவே முஸ்லிம்கள் இவ்விஷயத்தில் சிந்திக்க தவறினால் அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதுபோல்

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகிவிட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32) என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளான்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மனித நேய விரோதிகள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்று முஸ்லிம்கள் இன்று இக்கட்டான ஓர் அபாய நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு கடுந்துன்பங்களை கருணையே நிறைந்த அல்லாஹ் காரணமில்லாமல் முஸ்லிம்கள் மீது திணிக்கவில்லை என்பதே உண்மை முஸ்லிமின் உறுதியான நம்பிக்கையாக இருக்க முடியும். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக நடப்பது இன்று சர்வ சாதாரணமாகி விட்டது.

மேலும் முஸ்லிம்களின் விவேகமற்ற ஒரு சிலர் முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்ற தத்துவத்தை தவறாக விளங்கிக்கொண்டு நெருப்பை நெருப்பால் அணைக்க முற்பட்ட காரணத்தாலேயே இன்று முஸ்லிம்கள் இப்படியொரு பரிதாப நிலையை அடைய நேரிட்டுள்ளது. ஒரு சில விவேக மற்ற வேதத்தையும், ஞானத்தையும் முறையாக அடையப்பெறாத அவசரக்காரர்களின் குறுகிய புத்தியால், முஸ்லிம்கள் தாங்கொணா துயரங்களையும், அவமானங்களையும் சந்திக்க நேரிட்டுள்ளது.

நிறைவான வேதமோ, ஞானமோ கொடுக்கப்பட்டாதவர்கள் தங்கள் அற்ப அறிவைக் கொண்டு, தங்களை சீரழிக்கும் சிந்தனைகளை வேத ஞானமாக எண்ணி செயல்படலாம். ஆனால் நிறைவு பெற்ற வேதத்தையும், குறைவில்லாத ஞானத்தையும் கொடுக்கப்பெற்ற  முஸ்லிம்களும்  தங்களின் அதே சீரழிக்கும் சிந்தனைகளை வேத ஞானமாக எண்ணிச் செயல்படுவது எவ்வளவு பெரிய மதியீனம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

மனித நேயத்தை பிரதான லட்சியமாகவும் அடிப்படையாகவும் கொண்ட முஸ்லிம்கள் மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கவேண்டும். தனது செயல்களுக்குரிய கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும், அல்லாஹ்வுக்கு கட்டளைகளுக்கு மாறு செய்திருந்தால் கொடும் நரகில் வீழவேண்டும் என்பவற்றை எல்லாம் உறுதியாக நம்புகிறவர்கள், இப்படி தங்களின் அற்ப அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணிக்க முடியாது. அவர்கள் முஸ்லிம்கள் என்ற நிலையில் இப்படிப்பட்ட மனித நேய விரோத போக்குகளை கடைபிடிக்க முடியாது.

ஓர் உயிரைப் படைக்கும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. எனவே அந்த ஓர் உயிரை தக்க காரணமின்றி போக்க மனிதனுக்கு உரிமையே இல்லை. அதாவது அதிகாரம் பெற்ற அரசுகளே தகுந்த சாட்சிகள் இன்றி குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒருவனின் உயிரைப் போக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கவில்லை என்னும்போது, அதிகாரத்தில் இல்லாதவர்களின் முறையற்ற சிந்தனையால் குற்றவாளிகளாக கருதப்படுகிறவர்களின் உயிரைப் போக்க இஸ்லாம் எப்படி அனுமதி அளிக்கும்?

அதிலும் குறிப்பாக இவர்கள் எதை எல்லாம் குற்றங்கள் என்று கருதுகிறார்களோ அவற்றிற்கு அணுவளவும் சம்பந்தமில்லாத அப்பாவிகளின் உயிர்களை எப்படி போக்க முடியும்? அதிலும் வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள் இவர்களின் உயிர்களை எப்படிப் போக்க முடியும்? பொதுமக்கள் நடமாடும் இடங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் எப்படி குண்டுகள் வைத்து மனித உயிர்களை போக்க முற்படமுடியும்?

நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளைகளை முறையாக விளங்கியவர்கள், குர்ஆன், ஹதீஸை முறைப்படி நேராக, கோணலில்லாமல் விளங்கியவர்கள் நிச்சயம் இப்படிப்பட்ட ஈனச்செயல்களை செய்யவே முடியாது. அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வதற்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்றவே இந்த இழி செயல்களைச் செய்கிறோம் என்று சொல்வதற்கும் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும்.

அடுத்து இப்படிப்பட கொடூர உள்ளம் படைத்தவர்களை மனித நேய விரோதிகளை எந்த மதத்தோடும் அல்லது இஸ்லாமிய மார்க்கத்தோடும் சம்பந்தப்படுத்தி செய்தி மீடியாக்கள் செய்திகள் வெளியிடுவது பெரும் தவறாகும். அவர்களும் தங்கள் அறியாமையை ஏன் மெளட்டீகத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றே எண்ண முடியும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைப் போக்கும் அற்பத்தனமான காரியங்களில் ஈடுபடும் அற்பர்கள், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே ஜாதியே. மக்களின் துண்பங்கண்டு மகிழ்ச்சியுறும் இழி பிறவிகளே.


எனவே இப்படிப்படவர்களை ஒரு மதத்தோடு சம்பந்தப்படுத்தி மீடியாக்கள் செய்தி வெளியிடுவது தர்மத்திற்கு உட்பட்டதா என்பதை மீடியாக்களை ஆள்பவர்கள் சிந்திக்க வேண்டும். அதே போல் இந்த அற்பர்களின் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு துணை போகிறவர்கள், பண உதவி செய்கிறவர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். இந்த தங்களின் ஒத்துழைப்புக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்குமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

எவ்வித காரணமுமின்றி அப்பாவி மக்களின் உயிர்களை குண்டு வெடிப்புகள் மூலம் போக்கும் விஷ ஜந்து குணம் படைத்தவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களைப் பற்றி இங்கு நாம் பேசவில்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு இப்படிப்பட்ட இழி செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி நாம் எச்சரிக்காமல் இருக்க முடியாது. இவர்களின் செயல்பாடுகள் முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாக்கும் முயற்சியாகவோ, பொதுவாக மனித சமுதாயத்திற்கு நன்மை விளைவிக்கும் முயற்சியாகவோ இல்லை என்பதே உண்மையாகும்.

பொதுவாக அரசியல் வாதிகளைப்போல் மக்கள் நலனுக்காக என்று சொல்லி தங்களை வளப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளே இவையாகும். இவர்கள் முஸ்லிம்களின் நலனை பலிகொடுத்து அற்ப இவ்வுலக ஆதாயம் அடைய செயல்படுகிறார்களே அல்லாமல், முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கோ, இஸ்லாத்தின் மேம்பாட்டிற்கோ செயல்படவில்லை என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும் உணர்வார்களா? காலம் பதில் சொல்லும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

எது உண்மையான மார்க்கம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இவ்வுலகில் படிப்பு பதவி வியாபாரம் விவசாயம் இவற்றில் நமது கவனக்குறைவால் அறியாமையால் தோல்வி நஷ்டம் ஏற்பட்டால் இத்தோல்வி நஷ்டத்தைப் படிப்பினையாக வைத்து இரண்டாவது முறையோ அல்லது பலமுறை முயற்சி செய்து தோல்வியை வெற்றியாக மாற்றலாம். நஷ்டத்தை லாபமாக ஆக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆனால் நாம் நம்பும் மறுமையைப் பொறுத்தமட்டில் இரண்டாவது சந்தர்ப்பம் அறவே இல்லை. ஒரே முயற்சியில் வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லை என்றால் மாற்ற முடியாத மீட்க முடியாத நஷ்டமாக அது நம்மை நரகில் கொண்டு சேர்த்துவிடும். இதை மனதில் பதித்துக் கொள்வோம்.

இறைவன் எதை ஏவி இருக்கிறானோ அதைதான் நாம் செய்யவேண்டும். நமது முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காக ஒன்றைச் செய்து அதைக்கொண்டு மோட்சம் அடையலாம் என்று மனப்பால் குடிக்கக்கூடாது. பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரை குறையாக எழுதினாலும் மார்க் உண்டு. கேட்கப்படாத கேள்விகளுக்கு எவ்வளவு திறமையாக எழுதினாலும் கிடைப்பது பூஜ்யம்தான். அதுபோல் இறைவனால் ஏவப்படாததைச் செய்வதால் சுவர்க்கம் கிடைக்காது. இதையும் மனதில் பதித்துகொள்வோம்.

உலகத்தில் முன்னோர்களின் அறிஞர்களின் அனுபவம் ஆற்றல் நமக்கு பயன்படலாம். காரணம் அனுபவம் ஆற்றலை லாப நஷ்டமாக உலகிலேயே சந்தித்து அடைகிறார்கள். கண்கூடாகப் பார்க்கிறார்கள். ஆனால் மறுமை விஷயத்தில் மனிதனின் ஆற்றல் அறிவு செல்லாது. இதில் இறைவன் எதைச் சொல்கிறானோ அதைப் அப்படியே ஏற்றுச் செயல்படுவதே அறிவுடமையாகும்.

மனிதன் தனது அறிவு ஆற்றல் அனுபவத்தைக் கொண்டு செயல்படுவதும் கூடாது. அதை மற்றவர்களுக்கு போதிக்கவும் கூடாது. உலக விஞ்ஞான விஷயத்தில் முன்னோர்களைப் பின்பற்றுவது முன்னேற்றத்தை தரலாம். ஆனால் மார்க்க விஷயத்தில் பின்னேற்றத்தையும் தோல்வியைத்தான் அது தரும்.

ஆனால் முன்னோர்கள் செய்தது சரியாகத்தான் இருக்கும். முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்திருக்கமாட்டார்கள் என்று கூறுபவர்கள் கூற்றில் உண்மையில்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றக்கூடியவர்கள் அதை இவ்வுலகில் முதலில் செய்து காட்டவேண்டுமல்லவா? முன்னோர்கள் ஏழைகளாக இருந்தால் இவர்களும் ஏழைகளாக இருக்க ஆசைப்பட வேண்டுமல்லவா?

அவர்கள் குடிசையில் வாழ்ந்திருந்தால் இவர்களும் குடிசையில் வாழ ஆசைப்படவேண்டுமல்லவா? அவர்கள் கூழை குடித்து கந்தையை கட்டியிருந்தால் இவர்கள் கூழை குடித்து கந்தை கட்ட வேண்டுமல்லவா? இவை எல்லாம் இழிவு இவையெல்லாம் விட்டு சுகமாக வாழவேண்டுமென்று அல்லாவா அல்லும் பகலும் பாடுபடுகிறார்கள். அப்படியானால் இவர்கள் மத விஷயத்தில் மட்டும் முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்வது சரியா?

ஏழைகளாக இருப்பதைவிட குடிசையில் வாழ்வதைவிட கூழை குடித்து கந்தையைக் கட்டுவதைவிட மிகப்பெரும் இழிவு இறைவன் கொடுத்த மார்க்கத்தை விட்டு மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவது இழிவு மாதிரமல்ல, மறுமையில் மாபெறும் நஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டால்  அவர்களால் அவ்வாறு சொல்ல முடியாது.

இவ்வுலகின் சாதாரணத் துன்பங்களை விட்டு விடுதலைப்பெற பெரும் முயற்சி எடுக்கும் மனிதன் மறுமையின் மாபெரும் துன்பங்களை உணர்ந்திருந்தால் புரிந்திருந்தால் அதை விட்டும் விடுதலை பெற முயற்சிக்காமல் இருக்க முடியுமா? சொர்க்கத்திற்கு போனாலும் நரகத்திற்கு போனாலும் முன்னோர்களைப் பின்பற்றியே நடப்போம் என்று சொல்லமுடியுமா?

சாத்தான் மனிதர்களைப் பல வழிகளில் முயற்சி செய்து நரகப்படுகுழியில் தள்ளுகிறான். முதலில் இறைவனை மறுக்கும் நாஸ்திகனாக்கப் பார்க்கிறான். அதில் அவன் தோல்வி கண்டால் மனிதன் இறைவனை ஏற்றுக்கொண்டால் இறைவனுக்கு இணைவைத்து அதன் மூலம் நரகில் விழச்செய்கிறான். இதற்காக அவன் பயன்படுத்தும் உபாயம் முன்னோர்களின், அரிஞர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கவேண்டும்  என்ற ஒரு பக்தி உணர்வை உண்டாக்குவதாகும். இதில் பெரும்பாலோர் சிக்கிவிடுகிறார்கள். முன்னைய அறிஞர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லியே மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டுப் போகிறார்கள்.

கடந்த கால சரித்திரத்தை உற்று நோக்கினால் இஸ்லாத்தை மிகவும் கடுமையாக எதிர்த்த அபூலஹப், அபூஜஹீல் இன்னும் இவர்கள் போன்ற வழிகேடர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள், இறை தண்டனைக்கு ஆளானவர்கள் என்ன கூறினார்கள்?  நமது அறிஞர்கள் நமது முன்னோர்கள் முட்டாள்களா? மார்க்கம் தெரியாதவர்களா? நீ புதிதாதகச் சொல்ல வந்துவிட்டாயோ! அவர்களைவிட நீ மிகவும் அறிந்துவிட்டாயோ? அவர்கள் எல்லாம் வழி தவறியவர்களா? நரகவாதிகளா? என்று அடுக்கிக்கொண்டே போய் மக்களை வழி கெடுத்தார்கள்.

இறுதிவேதம் அல்குர்ஆனில் கூற்று இதனை உறுதிபடுத்துகிறது

2:170. மேலும், ”அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ”அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காாியத்தைச் செய்து விட்டால், ”எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். ”(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

31:21. ”அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ”(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)

ஆகவே இறுதி வேதத்தின் உண்மையான நிலையை உணர்ந்து இறைவனின் முன்னோர்களின் அடிச்சுவட்டை கைவிட்டு உண்மையான மார்க்கத்தின் பால் திரும்பாறு இஸ்லாம் உலக மக்களை அழைத்துக் கொண்டேயிருக்கிறது.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மிஃராஜ்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் ”மிஃராஜ்” என அறியப்படுகிறது.

மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.

1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)
2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)
3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.
4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.
5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.
6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.

இந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது. அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் ‘இஸ்ரா’வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது ‘மிஃராஜ்’ சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.

இந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை ‘புராக்’ என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ‘புராக்’ எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.

பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத் திறக்கக்கோரவே அவர்களுக்காக கதவு  திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். ”நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, ”எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹ்ீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

பிறகு ‘ஸித்ரதுல் முன்தஹ்ா’விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹ்ஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்* அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.

பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.

பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.

அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள். மூஸா (அலை)

”தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்” என்று கேட்க நபி (ஸல்) ”ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்” என்று கூறினார்கள். மூஸா (அலை) ”நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் ”நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.

திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ ”நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ”நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்” என்று கூறினான். (ஜாதுல் மஆது)

மிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார். இப்னுல் கய்யிம் (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:

”நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை” என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்தோழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை. ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.

தொடர்ந்து இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: அத்தியாயம் நஜ்மில் ‘இறங்கினார், பின்னர் நெருங்கினார்’ என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள். குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. ‘மிஃராஜ்’ தொடர்பான ஹதீஸில் வந்துள்ள ‘தனா ஃபததல்லா’ என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகிலுமாகும். (இத்துடன் இப்னுல் கய்யிமின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1 : 50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2 : 284. முஸ்லிம் 1 : 91-96)

நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு ”நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்” என்று கூறப்பட்டது.

ஸித்ரத்துல் முன்தஹ்ாவின் வேரிஇருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும். நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, ‘இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்’ என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)

நரகத்தின் காவலாளியைப் பார்த்தார்கள். அவர் சிரிப்பதே இல்லை. முகமலர்ச்சியும் புன்முறுவல் என்பதும் அவரிடம் காணமுடியாத ஒன்று. அவரது பெயர் மாலிக். மேலும், செர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள். அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.

வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர். ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.

விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது. அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.

பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயானக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரிய ஆதாரமாக அமைந்தது.

(ஸஹீஹ்ுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். ”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை ‘சித்தீக்’ (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக ”நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹ்ம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ற்யிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)

இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.

இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். (அல்குர்ஆன் 6 : 75)

நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி,
(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரிய அத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். (அல்குர்ஆன் 20 : 23) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏன் அத்தாட்சிகளைக் காண்பித்தான் என்பதற்கு ”அவர் நம்மை உறுதிகொண்டவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காக”

என்ற காரணத்தைக் கூறுகிறான். இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்ததால் அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதியடைந்தது. ஆகவே தான், அல்லாஹ்வின் பாதையில் பிறரால் சகித்துக்கொள்ள முடியாததை இறைத்தூதர்களால் சகித்துக்கொள்ள முடிந்தது. உலகத்தின் எவ்வளவு பெரிய சக்தியாயினும் சரி. அது கொசுவின் இறக்கைக்குச் சமமாகவே அவர்களிடம் இருந்தது. சிரமங்களும் துன்பங்களும் எவ்வளவுதான் அவர்களுக்கு ஏற்பட்டாலும், அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

இப்பயணத்தில் மறைந்திருக்கும் ஞானங்களையும் இரகசியங்களையும் மார்க்க சட்டங்களின் இரகசியங்களை பற்றி விவரிக்கும் நூல்களில் காணலாம். எனினும், இப்பயணத்தில் பல உண்மைகளும் யதார்த்தங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்:

இந்த வானுலக பயண சம்பவத்தைப் பற்றி மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 17:1லில் மட்டும்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இந்த ஒரு வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் யூதர்களின் கெட்ட செயல்கள் மற்றும் குற்றங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகிறான். அதன் இறுதியில் இந்தக் குர்ஆன்தான் மிகச் சரியான வழிகாட்டுகின்றது என்று கூறுகிறான். இவ்வசனங்களை ஓதுபவர் மிஃராஜ் சம்பவம், யூதர்களின் அநியாயங்கள், குர்ஆனைப் பற்றிய புகழ்ச்சி, இவற்றுக்கிடையில் என்ன தொடர்பிருக்கிறது என யோசிக்கலாம். ஆம்! உண்மையில் ஆழமான தொடர்பிருக்கிறது. அதன் விளக்கமாவது:

முஹம்மது (ஸல்) நபியாக அனுப்பப்படுவதற்கு முன் யூதர்கள்தான் மனித சமுதாயத்தை வழிநடத்தும் பொறுப்பை வகித்தனர். ஆனால், அவர்கள் செய்த அநியாயங்களின் காரணமாக அப்பொறுப்புக்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர்.

எனவே, அவர்களிடமிருந்து அந்தத் தகுதியை அல்லாஹ் தனது தூதருக்கு அதிவிரைவில் மாற்றப்போகின்றான். நபி இப்றாஹ்ீம் (அலை) அவர்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியின் இரு மையங்களான மக்காவையும், ஃபலஸ்தீனையும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருங்கே அருள இருக்கின்றான்; மோசடி, குற்றம், வரம்பு மீறுதல் ஆகியவற்றையே தங்களது குலத்தொழிலாகக் கொண்ட சமூகத்திடமிருந்து ஆன்மிக வழிகாட்டலின் தலைமைத்துவத்தை பறித்து நன்மைகளையே நோக்கமாகக் கொண்ட சமுதாயத்திற்கு அல்லாஹ் அருள இருக்கின்றான் என்பதை நபி (ஸல்) அவர்களை மக்காவிஇருந்து பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்நிகழ்ச்சி உறுதி செய்தது.

மக்காவின் தெருக்களிலும் மலை ஓரங்களிலும் விரட்டியடிக்கப்பட்டு கண்ணியமிழந்து சுற்றி வரும் ஒருவருக்கு இந்தத் தலைமைத்துவம் எப்படிக் கிடைக்கும்? அதாவது, இஸ்லாமிய அழைப்புப் பணியின் முதல் கட்டமான இந்த சிரமமான காலம் வெகு விரைவில் முடிந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய காலக்கட்டம் தொடரப்போகிறது என்பதையே நபி (ஸல்) அவர்களின் இந்நிகழ்ச்சி குறிப்பிடுகிறது. இதையே பின்வரும் வசனங்களும் உறுதி செய்கின்றன. அவ்வசனங்களில் அல்லாஹ் இணைவைப்பவர்களை மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் எச்சரிக்கை செய்கிறான்.

ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.

நூஹுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவையில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17 : 16, 17)

இது நாள்வரை நிராகரிப்போருக்கு அவகாசம் தரப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த அநீதிகளை அல்லாஹ் பொறுத்து வந்தான். ஆனால், இனியும் அவர்கள் இத்தகைய தவறுகளிலிருந்து விலகாவிட்டால் அல்லாஹ் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பான் என்ற எச்சரிக்கை மேற்கூறிய வசனத்திலிருந்து தெரியவருகின்றது.

இதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்திற்கு அடிப்படையான கொள்கைகள், ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறான். முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தனி நாட்டையும் அதிகாரத்தையும் கொடுக்கும்போது அவர்களது சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையெல்லாம் அல்லாஹ் கூறுவது போன்றே இருக்கின்றது. மேலும், வெகு விரைவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தையும், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரிவாக்குவதற்கு ஒரு மையத்தையும் அல்லாஹ் தர இருக்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.

இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயண நிகழ்ச்சி மக்கா வாழ்க்கையின் இறுதியில் நடைபெற்றது. இதுவே ஏற்றமான, சரியான சொல் என்று நாம் கூறுகிறோம். அகபாவில் நடைபெற்ற முதல் ஒப்பந்தத்திற்கு முன் அல்லது முதலாவது இரண்டாவது ஒப்பந்தங்களுக்கிடையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த