இஸ்லாம்தளம்

மார்ச்24, 2009

ஆண்டுகள் கடந்து போகிறதே மனிதா

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஹிஜ்ரி 1424-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்லத் தயாராகி விட்டது. நம்முடைய ஆயுளில் நம்முடைய மீண்டும் ஒரு ஆண்டை இழந்து விட்டோம். இப்படியே ஒவ்வொரு ஆண்டையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோமே நம்முடைய ஆயுள் பனிக்கட்டிபோல் கறைந்து கொண்டிருக்கிறதே ஒரு நாளைக்கு நம்முடைய அசல் ஆயுள் முடிந்து நாமும் இவ்வுலகை விட்டு விடைப்பெற்று செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோமே? நாம் பொய்யூரிலிருந்து செல்ல இருக்கும் மெய்யூருக்கு வேண்டிய சாதனங்களை தயாரித்து வைத்திருக்கிறோமா? போன்ற சிந்தனைகள் நமக்குள் இருந்ததுண்டா? இவ்வுலகில் ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு ஆரம்பிக்கும்போது நம்முடைய வியாபார ஸ்தலங்களில் இருக்கும் (stock) பொருட்களை எடுத்து வரவு செலவு பார்த்து லாப நஷ்ட கணக்குப் பார்க்க தவறுவதில்லையே?

இந்த அக்கறையும் ஈடுபாடும் நம்மிடம் மிக அதகமாகவே இருக்கிறதே. அழிந்து போகும் அல்லது விட்டுச் செல்லும் செல்வம் குறித்து இந்த அளவு அக்கறை காட்டுகிறோமா? அதே சமயம்  அறிவுக்கு உட்படாத நம்மோடு எடுத்துச் செல்லும் செல்வம் குறித்து அக்கறை காட்டுகிறோமா இல்லையே. இதன் பொருள் என்ன? நாம் உண்மையிலேயே அறிவாளிகளாக இருந்தால் இந்த அக்கறை இன்மை நம்மிடம் இருக்குமா?

நம்மிலே பலர் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை நாம் அறிவோம். அவர்கள் சென்றுள்ள ஊர்கள் அவர்களது சொந்த ஊர் அல்ல. பிழைப்புத்தேடிச் சென்ற ஊராகும். அவர்களின் சொந்தம் பந்தம் உற்றார் உறவினர் அங்கே இல்லை. இங்குதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிழைக்கச் சென்ற ஒருவர் தனது சொந்த ஊரையும் சொந்த பந்தங்களையும் மறந்து பிழைக்கச் சென்ற ஊரே சதம் என்று எண்ணி அங்கு தனது வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு வாழ்கிறார், இங்கு தனது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக எதையும் சேமித்து வைக்காமல் அங்கேயே தாம் தூம் என்று செலவழித்து வருகிறார், சொந்த ஊரை மறந்து வந்த ஊரே நிரந்தரம் என்று மணப்பால் குடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இந்த நிலையில் பிழக்கச் சென்ற அந்நாட்டு அரசு திடீரென ஒரு சட்டம் இயற்றுகிறது. தனது குடிமக்களைத் தவிர வெளியூர் பிரஜைகளெல்லாம் இன்னும் 24 மணிநேர அவகாசத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இல்லையென்றால் பல வந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என்று சட்டம் போடுகிறது. பிழைக்க வந்த ஊராக எண்ணி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அந்நபரின் நிலை இப்பொழுது என்னவாகும். சொந்த ஊரையும் உற்றார் உறவினரையும் மறந்து பிழைக்க வந்த ஊரே கதியென்று வாழ்ந்து அனைத்தையும் இழந்துவிட்டு வெறும் ஆளாக சொந்த ஊர் வந்திருக்கும் அவருக்கு ஊரில் ஏதும் மதிப்பு மறியாதை கிடைக்குமா? அல்லது மனைவி மக்களாலும் உற்றார் உறவினராலும் இகழ்ந்துரைக்கப்படுவாரா இல்லையா. இப்பொழுது அவரது உள்ளம் எந்தளவு வேதனையில் தத்தளிக்கும் என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள். இந்த துர்பாக்கிய நிலை அவருக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? அவர் தனது சொந்த ஊரை மறந்து பிழைக்க வந்த ஊரே நிரந்தரம் என்று தப்புக்கணக்குப் போட்டு பொறுப்பற்ற வாழ்க்கை வாழ்ந்ததன் பேராபத்தை இப்போதுதான் அவர் உணர்கிறார். ஆனால் அது அவருக்குப் பலனளிக்காது.

ஏறக்குறைய இவ்வுலகில் வாழும் பெரும்பாலான மக்கள் இந்த நபரின் வாழ்க்கையையே மேற்கொண்டுள்ளனர். இவ்வுலம் அவர்களின் பிழைக்க வந்த ஊர், அவர்களின் சொந்த ஊர் மறு உலகமாகும். இவ்வுலகில் கஷ்டப்பட்டு உழைத்து மறு உலகிற்கு வேண்டிய பொருளாதரத்தை (அருளை) தேடிக்கொள்ள வேண்டியவர்கள், ஆனால் தங்கள் நிலை மறந்து இவ்வுலமே நிரந்தரம் என நினைத்து இவ்வுலக வாழ்க்கையைச் சீராக்குவதிலும் செம்மைப்படுத்துவதிலும் காலத்தைக் கழித்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் அசல் ஆயுள் முடிந்ததும் அவர்கள் பிழைக்க வந்த இவ்வுலக விட்டு அவர்களின் சொந்த ஊரான மறு உலகிற்கு நிர்பந்தத்தால் விரட்டி அடிக்கப்படுவார்கள். இந்நிலையில் வெருங்கையுடன் செல்லும் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்த்தித்துப் பாருங்கள். அவர் அனுபவிக்கப் போகும் வேதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் ஏதாவது அளவு இருக்க முடியுமா?

அறிவுள்ளவர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தூர நோகுள்ளவர்களுக்கு இந்த அறிவுரைகள் போதும். இதற்கு மேலும் நிரந்தரமான மறு உலகை அற்பமாக என்ணி மறந்து அழிந்து போகும் இவ்வுலகைச் நிறந்தர உலகாக எண்ணி தங்கள் வாழ்நாளை வீண்நாளாகக் கழித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இவ்வுலக வியாபாரத்தில் இலாப நஷ்ட கணக்குப் பார்ப்பதைவிட அதிகமாக மறு உலக விஷயத்தில் இலாப நஷ்ட கணக்குப் பார்ப்பதைவிட அதிகமாக மறு உலக விஷயத்தில் இலாப நஷ்ட கணக்கு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஐங்கால தொழுகைகளை முறைப்படி தொழுது வருகிறோமா! தேடிய செல்வத்திற்கு ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து விட்டோமா? ஏழை எளியவர்களிடம் அன்பு பாராட்டி அவர்களுக்குரிய உதவி உபகாரங்களைச் செய்கிறோமா? உற்றார் உறவினர்களை அவர்கள் வெட்டிச் சென்றாலும், நாம் அரவனைத்து செல்கிறோமா? பொதுவாக மனித பண்பாட்டுடன் மனித நேயத்துடன் வாழ்கிறோமா? போன்ற கேள்விகளை தங்களுக்குள் எழுப்பி அவற்றிற்குரிய விடைகளை காண முற்படுவார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த கூட்டத்தில் நம்மையும் இணைத்தருள்வானாக.

புத்தாண்டு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது. பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அல்லாஹ்(ஜல்) தனது இறுதித்தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை அவர்களது 40வது வயதில் தேர்ந்தெடுத்தான். அவர்களது 40வது வயதிலிருந்து 63வது வயதுவரை அல்லாஹ் தன்புறத்திலிருந்து வஹீ இறக்கி சிறிது சிறிதாக அல்குர்ஆன் வசனங்களை அருளி அதை நிறைவு செய்தான்.

அதுவே உலகம் அழியும்வரை உலக மக்கள் அனைவருக்கும் இறுதிவேதம் என்று பிரகடனப்படுத்தினான். எவற்றை இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இறக்கி கட்டளையிட்டானோ அதாவது நானே உங்களைப் படைத்த இறைவன் எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள் என்னை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். என்னிடமே உங்களுடைய தேவைகள் அனைத்தையும் கேளுங்கள் என்ற அதே போதனையைத்தான் வஹீயாக அறிவித்தான். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்க்கும் புரோகிதரர்கள் வழமைப்போல் என்ன செய்தார்கள் தெரியுமா?

இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் செய்த போதனைக்கு நேர்முரணாக அவர்களையும் இன்னும் பல நல்லடியாளர்களையும் சிலைகளாக வடித்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டிய கஃபத்துல்லாஹ்வில் சிலை வணக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். சிலை வணக்கம்தான் அசலான வணக்க வழிபாடு என்றிருந்த அன்றைய அரபு மக்களுக்கு முஹம்மது நபி(ஸல்) போதித்த ‘ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் அதுவே வெற்றியைத்தரும் என்ற போதனை அவர்களுக்கு அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியது. தங்களின் மூதாதையர்களின் வணக்க வழிபாட்டை கேவலப்படுத்துகிறார், இழிவு படுத்துகிறார் என்று ஆத்திரத்திற்குமேல் ஆத்திரம் கொண்டனர்.

ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்ற அசலான போதனையை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டினார்கள். அதற்குறிய ஒரே வழி இந்தப்போதனை செய்யும் முஹம்மது(ஸல்) அவர்களை கொலை செய்து விடுவதே சரியான தீர்வாகும் என்று, அன்று கஃபதுல்லாஹ்வை தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் முடிவுக்கு வந்தனர். அதற்குறிய எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டனர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது இறுதித் தூதரை அந்த கொலை முயற்ச்சியிலிருந்து காப்பாற்றி அவர்களைக் கொண்டு தனது மார்க்கத்தையும் இறுதி வேதத்தையும் நிறைவு செய்ய நாடிவிட்டான்.

எனவே தனது இறுதி தூதருக்கு தான் பிறந்து வளர்ந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவுக்கு வெளியேறிச் செல்ல உத்தரவு பிறப்பித்தான். அதுமட்டுமல்ல அந்த குரைஷிகளின்  கொலை வெறித்தாக்குதலிலிருந்து தனது தூதரை அதி அற்புதமாக காப்பாற்றி மதீனா சென்றடயச் செய்தான். அந்த அற்புத நிகழ்ச்சியே “ஹிஜ்ரத்” என்று சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது. அந்த நிகழ்சியை அடிப்படையாக வைத்தே ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்பட்டு வறுகிறது. ஒவ்வொரு ஆண்டின் துவக்கமும் நமக்கு அந்த மகத்தான நிகழ்ச்சியை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் ஆஷுரா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நபி(ஸல்) அவர்களது காலத்திற்கு முன்பிலிருந்தே சிறப்புக்குறிய நாளாக இருக்கிறது. அன்றுதான் மூஸா(அலை) அவர்களும் அவர்களது சமூகமும் பிர்அவ்னின் கொடுமைகளிலிருந்து மீட்சி பெற்ற நாளாகும். பிர்அவ்னும் அவனது படைகளும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாளாகும். எனவே மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அன்றைய தினம் நோன்பு நோற்றார்கள். அதை வைத்து யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களை பின்பற்றுவதற்கு நாங்களே உரிமை உள்ளவர்கள் என்று கூறி தாமும் அந்த நாளில் நோன்பு நோற்றதுடன் முஸ்லிம்களையும் நோன்பு நோற்க ஏவினர்(புகாரி) ரமழான் நோன்பு கடமையாகும் வரை முஸ்லிம்கள் ஆஷுரா நோன்பை அக்கரையுடன் நோன்பு நோற்று வந்தனர்.

ரமழான் நோன்பு கடமையான பின் விரும்பியவர் ஆஷுரா நோன்பு நோற்கும் நிலை இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு முந்திய வருடம் ஆஷுரா தினத்தில் யூதர்களுக்கு மாறு செய்யும் நோக்கத்துடன் அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால் முஹர்ரம் 9லும் 10லும் நோன்பு நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)

ஆனால் அடுத்த ஆஷுரா தினம் வருவதற்கு முன் அல்லாஹ்வின் நாட்டப்படி அல்லாஹ் அளவில் சேர்ந்து விட்டார்கள். எனவே முஸ்லிம்கள் இப்போது முஹர்ரம் 9 லும் 10 லும் நோன்பு நோற்பது நபிவழியாகும். அடுத்து நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஹுசைன்(ரழி) அவர்கள் சஹீதாக்கப்பட்டது ஹிஜ்ரி 61 இதே முஹர்ரம் 10 நாள் ஆஷுரா தினமாகும். ஆனால் இதைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் முஹர்ரம் 1 லிருந்து 10 வரை சில சடங்கு சம்பிரதாயங்களைச் செய்வதற்கும் மார்க்கத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை. இந்த முஹர்ரம் 1 லிருந்து 10 வரை கடைபிடிக்கும் அனாச்சாரங்கள் ஷியாக்களும் செய்து வரும் அனாச்சாரங்களேயாகும்.

உண்மையில் ஒவ்வொரு ஹிஜ்ரி ஆண்டும் எவ்வளவு பெரிய மகத்தானதொரு தியாகத்தினை நமக்கு நினைவூட்டுகிறது. சத்தியத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும்போது எத்தனை துன்பங்களை சந்திக்க நேரிட்டாலும் அதற்காக சத்திய பிரச்சாரத்தை துறக்கக்கூடாது; அதுவே இறுதி வெற்றியை ஈட்டித்தரும் என்ற படிப்பினையை முஸ்லிம்கள் இந்த ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தில் பெறுவோமாக.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

ஸலவாத்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழிகாட்டுதலை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். அல்லாஹ்வால் தரப்பட்ட பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கூடுதல் குறைவின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். மக்கள் நேர்வழி அடையவேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும் தாங்கிக்கொண்டார்கள். நமது தாய் தந்தை மற்றும் அனைவைரையும் விட அவர்கள் மீது அன்பு வைப்பது நம்மீது கடமையாகும்.

நம்மில் சிலர் ஸலவாத் என்றாலே நபிகள் நாயகத்திடம் நான் எதனையோ கேட்கிறோம் என்று கருதிக்கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல. மாறாக நபி அவரகளுக்காக நாம்தாம் துஆச் செய்கிறோம்.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

நபி அவர்கள் இந்த சமுதாயத்திற்காக பாடுபட்டதற்காகவும் அவர்களிம் மூலம் அல்லாஹ் நேர்வழி காட்டினான் என்பதற்காகவும் நாம் அவர்களை நன்றியோடு நினைத்து அவர்களுக்காக துவாச்செய்கிறோம். இனி சலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும் அதன் சிறப்பையும் நாம் காண்போம்.

யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்கு பத்து மடங்கு அருள்புரிகிறான். என்று நபி கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: திர்மிதீ

என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும் என்றும் நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அபூதாவூத்

இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக்கொண்டிருப்பதோ நபி அவர்கள்மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும் என்பதை இந்த ஹதீஸ்மூலம் நாம் உணரலாம்.

என்னைப்பற்றி கூறப்படும்பொழுது எவன் என்மீது ஸலவாத் கூறவில்லையோ அவன் கஞ்சனாவான் என்பதும் நபி அவர்களின் மொழியாகும். அறிவிப்பவர்: அலி(ரழி) நூல்: திர்மிதீ

யாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் அவன் அவ்வாறு செய்யும் போதெல்லாம் மலக்குகள் அவனுக்காக துஆச் செய்கிறார்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆமிர் இப்னு ரபிஆ(ரழி) நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜ்ஜா

அல்லாஹ் கூறுவதாக நபி அவர்கள் கூறினார்கள்: நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு நான் அருள் புரிகிறேன். யார் உன்மீது ஸலவாத் கூறுகிறாரோ அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு(ரழி) நூல்: அஹ்மத்

உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது என்று நபி அவர்கள் கூறியபோது, சில நபித்தோழர்கள் “நீங்கள் மக்கிவிடும்போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக்காட்டப்படும்?” என்று கேட்டனர். அதற்கு நபி அவர்கள் “நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான் (மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ்(ரழி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா

நீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எத்திவைக்கப்படுகின்றது என்ற கூற்றிலிருந்து தானாக நபி அவரகள் செவியுறுவதில்லை. மலக்குகள் மூலமாகத்தான் எடுத்துச் சொல்லப்படுகின்றது என்பதையும் நாம் தெரியமுடிகின்றது.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மரணத்திற்குப்பின்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனை படைத்தான். மனிதனை காலமெல்லாம் உலகில் வாழவைக்காமல் ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வாழவைத்து பிறகு மரணமடையச் செய்கிறான். மனிதன் மட்டுமல்லாமல் அவன படைத்த அனைத்து படைப்புகளுக்கும் மரணத்தை அடையக்கூடியவைகளாக இருக்கின்றன. ஆனால் மனிதனை மட்டும் இவ்வுலகில் வாழும்போது அவனை வணங்கவும் அவனது தூதர்களை பின்பற்றி வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் மரணத்திற்குப்பின் ஒரு சிறந்த வாழ்க்கையை நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கு நரகத்தையும் ஏற்படுத்தி உள்ளான்.

இவ்வுலகில் வாழும்போது குறிப்பாக முஸ்லிம்கள் எப்படி வாழவேண்டும் என்பதையும் மரணித்த பிறகு செய்யவேண்டிய அமல்கள் பற்றியும் இனி கான்போம். இறைவன் தன் திருமறையில் மனிதனின் படைப்பு பற்றி

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவாிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவாிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 4:1

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35

நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மாிக்கும்படிச் செய்கிறோம் அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. அல்குர்ஆன் 50:43

மேற்கண்ட வசனங்களில் மரணத்தை பற்றியும், அல்லாஹ் நம்மை இவ்வுலகில் வாழவைத்து நன்மை தீமை செய்ய வைத்து நம்மை சோதிக்கிறான் என்பதை என்பதையும் விளங்கலாம்.

பெரிய மகான்கள், நபிமார்கள் நல்லடியார்கள் மரணிக்க மாட்டார்கள் என்று சிலர் கருதிவருகின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்தபோதுகூட உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள் “யாராவது நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறினால் அவர்கள் தலையை கொய்துவிடுவேன்” என்று நீட்டிய வாளுடன் நின்றார்கள். இரண்டு பிரிவினர்கள் இரு நிலைகளில் இருந்த சமயத்தில் அபூபக்கர்(ரழி) அவர்கள் அங்கு வந்து நிலைமையை பார்க்கிறார்கள். பிறகு அல்லாஹ்வின் 3.144 வசனத்தை ஓதியபிறகு உமர்(ரழி) தன் வாளை கீழே போடுகிறார்கள். நபித்தோழர்கள் அந்த அளவுக்கு குர்ஆனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்க வேண்டிய சம்பவம் இது. 3:144 வசனத்தில், நபிமார்களும் மரணிப்பவர்களே என்று அல்லாஹ் கூறுகிறான்.

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள். அல்குர்ஆன் 3:144

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன. அல்குர்ஆன் 39:42

மேற்கண்ட வசனங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயம் வந்தேதீரும் என்பதை பார்த்தோம். அடுத்து நாம் மரணித்துவிட்டால் நமக்கு செய்யவேண்டிய கடமை பற்றியும், மறுமையில் உள்ள வாழ்க்கை பற்றியும் பார்ப்போம்.

நாம் இறந்துவிட்டால் குளிப்பாட்டி கபனிட்டு விரைவாக சென்று நல்லடக்கம் செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று நாள் துக்கம் அனுசரிக்க கூறியுள்ளார்கள். மூன்று நாள் சமைப்பதை விட்டும் அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டில் சமைத்து கொடுக்கவும் கட்டளையிட்டுள்ளார்கள். இறந்தவர் வீட்டில் ஒப்பாரி வைத்து அழுவதை கண்டித்துள்ளார்கள்.

எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வாக்கு பிரமாணம் (பைஅத்) எடுக்கும்போது நாங்கள் மையத்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது என்றும் வாக்கு பிரமாணம் எடுத்தார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்

அபூமூஸா(ரழி) அவர்கள் நோய்வாய்ப்பட்டு மயக்கத்திலிருக்கும்போது அவர் மனைவிகளில் ஒருவர் கூக்குரலிட்டு அழுதார். அவர் மயக்கம் தெளிந்த பிறகு தன் மனைவியை கண்டித்தார். துன்பங்களில் ஓலமிட்டு அழுவதையும், துயரங்களில் தனது தலையை சிரைத்துக் கொள்வதையும் தனது ஆடைகளை கிழ்த்துக்கொள்வதையும் விட்டு நபி(ஸல்) அவர்கள் விலக்கி இருந்தார்கள் என்று அபூமூஸா(ரழி) கூறினார்கள். நூல்: புகாரி

ஆனால் இன்று மார்ர்க்கத்தை போதிப்பதை விட்டு இறந்தவர் வீட்டில் கண்டதை கூறி கூலி வாங்கி இறந்து விட்டாலும் அந்த வீட்டில் பிரியாணி, பலவ்சோறு சமைக்கவும், 3,7,40 என்ற பெயரில் ஹத்தம் பாத்திஹா ஓதி பணம் சம்பாதித்து மக்களை மடையர்களாக்கி வருகின்றனர்.

இறந்தவர்களுக்கு எந்தப்பாத்திஹாவும் யாசீனும் போய்ச்சேராது. மாறாக இறந்தவர்களை சென்றடையும் விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.

ஆதமின் மகனே! மனிதன் இறந்து விட்டால், அவனது செயல்களும், அதற்குறிய நன்மைகளும் நின்று விடுகின்றன. இருப்பினும் மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள்.

1.நிலையான தர்மம், 2.பயனுள்ள கல்வி, 3.இவருக்காக இவரது ஸாலிஹான பிள்ளை செய்யும் துஆ. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

ஒருவர் உயிரோடு இருக்கும்வரை நல்லது கெட்டது எது செய்தாலும் அதை விமர்சனம் செய்வதும் குறைகளை சுட்டிக்க்காட்டுவதும் தவறில்லை. ஆனால் ஒருவர் மரணித்து விட்டால் அவரைப்பற்றி குறைகூறுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

இறந்தவர்களை திட்டாதீர்கள்: ஏனெனில் அவர்கள் என்னென்ன செய்தார்களோ அதன் பலனை அவர்கள் அடைந்து விட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: அஹ்மத், புகாரி

ஜனஸாவிற்கு வந்து ஜனஸா தொழும்வரை எவர் அங்கிருக்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. அடக்கம் செய்யும்வரை எவர் அங்கிருக்கிறாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மையுண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராத் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மிகப்பெரும் இரு மலைகளின் அளவு என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி முஸ்லிம்

கிராத் என்றால் உஹத் மலை அளவு நன்மை என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம் இப்னுமாஜ்ஜாவில் பதிவாகியுள்ளது.

ஒருவர் மரணித்துவிட்டால் அவர் குடும்பத்தினருக்கு சமைத்து கொடுக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஜஃபர்(ரழி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஜஃபர்(ரழி)யின் குடும்பத்தாருக்கு நீங்கள் உணவு தயார் செய்யுங்கள். அவர்கள் கவலையில் உள்ளனர் என்று மக்களிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜாபர்(ரழி) நூல்: அபூதாவூத், அஹ்மத், திர்மிதி

நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி வந்து மறுமை நாள் எப்பொழுது வரும் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அமானிதம் வீணடிக்கப்பட்டால் ‘மறுமையை எதிர்பார்’ என்று சொன்னார்கள். அது எப்படி வீணடிக்கப்படும் என்று கேட்டார். தகுதியில்லாதவரிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி

வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது  கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்ருகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.

நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். .இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? பின்னும் நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. அல்குர்ஆன் 82:1-19

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும்  இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குாிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 3:185

ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் 6:31

மறுமையைப்பற்றி மேலும் பல வசனங்கள் உள்ளன. இன்னும் மறுமையை நம்பாமல் உள்ள முஸ்லிம்கள் பலர் உள்ளனர். இவர்கள் நாம்தான் மரணித்து விடுவோமே பிறகு எப்படி மறுமையப்பற்றி தெரியும் என்கின்றனர். குர்ஆனை புரட்டிப்படிக்கும் யாரும் நாம் மரணித்து விட்டாலும் மண்ணோடு மண்ணாக மக்கி உடல் மடிந்து போனாலும் எல்லாம் வல்ல அல்லாஹ் மண்ணோடு மக்கிப்போன இவ்வுடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதை உணர்வார்கள். மறுமை வாழ்க்கை உண்டு என்றும் நம்புவார்கள். எனவே மறுமையை பயந்து இம்மையில் நற்காரியங்கள் செய்ய முயற்சி செய்யுங்கள்.

இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சாிக்கை செய்யும் (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பாிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை. அல்குர்ஆன் 6:51

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

“வஹ்ஹாபி”

Filed under: ISLAM — islamthalam @ 12.24

“வஹ்ஹாபி” என்ற சொல்லைக் கேட்டவுடன் அப்பாவி முஸ்லிம்கள் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். வெறுப்புடன் நோக்குகிறார்கள். கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் ஒன்றான இந்த “வஹ்ஹாப்” என்னும் திருநாமம் முஸ்லிம்களுக்கு வெறுப்பை உண்டாக்குவதன் மர்மம் என்ன? அப்படிப்பட்ட அர்த்தமற்ற வெறுப்பை உண்டாக்கியவர்கள் யார்? ஏன் உண்டாக்கினார்கள்? என்ற கேள்விகளின் விவரங்களை அப்பாவி முஸ்லிம்களுக்குத் தெளிவாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

வஹ்ஹாப் என்றால் அளவில்லாத கொடையாளன் என்று பொருளைத்தரும். அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்று. அப்படியானால் “வஹ்ஹாபி” என்றால் அல்லாஹ்வைச் சார்ந்தவன் என்ற பொருளையே தரும். புனிதமான அல்லாஹ்வின் பெயரைக்காட்டி அப்பவி முஸ்லிம்களை ஏமாற்றக்கூடிய கூட்டம் எப்படிப்பட்ட கூட்டமாக இருக்கும் என்பதை சாதாரண அறிவு படைத்தவனும் அறிந்துகொள்ள முடியும். பாமர முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக  பயமுறுத்தி பயன் அடைவதற்காக வேண்டி இவர்களால் “வஹ்ஹாபி” என்ற பூச்சாண்டி காட்டப்படுகிறது. குழந்தைகளை ஏமாற்றி அதோ பூச்சாண்டி வருகிறான் என்று பயமுறுத்துவதுபோல் இதற்கு ஆதாரமாக தேவ்பந்தி ஆலிம் ஒருவர் சொன்ன பிரபல்யமான கதை ஒன்றையே இங்கு விளக்க விரும்புகிறோம்.

ஓர் ஊரில் ஒரு வியாபாரி மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தான். நல்ல வியாபாரம். ஊர் மக்கள் எல்லோரும் அந்தக் கடையிலேயே சாமான்கள் வாங்கி வந்தார்கள். அந்த ஊர் பள்ளிவாசல் இமாமும் வரவு செலவு வைத்திருந்தார். ஆனால் ஒழுங்காகப் பணம் கொடுப்பதில்லை. மளிகைக்கடை வியாபாரி எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தான். கண்டித்துப் பார்த்தான். இமாம் சரிபட்டு வருவதாக தெரியவில்லை. ஆத்திரத்தில் வியாபாரி இமாமுக்கு கடன் கொடுப்பதை நிறுத்திக் கொண்டான்.

வந்ததே கோபம் இமாமுக்கு. உடனே பள்ளிவாசலில் மக்களுக்கு பிரசங்கம் செய்யும்போது “அந்த மளிகைக்கடைக்காரன் “வஹ்ஹாபி”  ஆகிவிட்டான். யாரும் அவனிடம் சாமான்கள் வாங்காதீர்கள் என்று ஒரு போடு போட்டார்! அவ்வளவுதான். பாவம் அப்பாவி முஸ்லிம்கள் “வஹ்ஹாபி” என்றால் ஏதோ ஒரு ஆபத்தான சமாச்சாரம் என்று கருதிக்கொண்டு அந்தக்கடைப் பக்கமே ஊர் மக்கள் போகவில்லை. வியாபாரமே முடங்கிவிட்டது. வியாபாரிக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. விசாரித்து பார்த்ததில் இமாம் தன்னை “வஹ்ஹாபி” என்று சொல்லியுள்ளது தெரிய வந்தது.

விஷயத்தை விளங்கிக்கொண்டான் வியாபாரி. இமாமைக் கூப்பிட்டு “நீங்கள் பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்களும் சாமான்கள் வாங்கிக் கொள்ளுங்கள். மக்களையும் என் கடைக்கு வந்து சாமான்கள் வாங்கச் சொல்லுங்கள்” என்று பணிவிடன் கேட்டுக்கொண்டான். இமாமுக்கு படுகுஷி. பஸ் டிரைவருக்கும், கண்டக்கடருக்கும் ஓசியில் ஹோட்டலில் சாப்பாடு கிடைப்பதுபோல், இவருக்கும் ஓசியில் மளிகைச் சாமான்கள் கிடைக்கப்போகிறதே என்ற சந்தோசத்தில், அடுத்த பிரசங்கத்திலேயே “அந்த வியாபாரி வஹ்ஹாபியை விட்டும் தெளபா செய்துவிட்டான். ஆகவே நீங்கள் எல்லாம் தாராளமாகச் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். அவனிடமே சாமான்கள் வாங்குங்கள். அதிலேதான் ‘பரகத்’ இருக்கிறது” என்று பிரகடனமே செய்து விட்டார்.

இதுதான் சில பள்ளிவாசல் இமாம்களின் “வஹ்ஹாபி” பூச்சாணிடியின் அந்தரங்க ரகசியம். மக்களை ஏமாற்றி பிழைப்பதற்கன்றே இவர்களால் கற்பனையாகக் கட்டி விடப்பட்டதே, இந்த “வஹ்ஹாபி” பூச்சாண்டி என்பதைச் சகோதர சகோதரிகள் விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். வஹ்ஹாபி பூச்சாண்டியின் சரித்திர பின்னணியை பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம். இன்ஷாஅல்லாஹ்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த