இஸ்லாம்தளம்

மார்ச்21, 2009

நன்மையின் பெயரால்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஷஃபான் மாதம் 15ஆம் இரவு நம்மவர்களால் மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்பட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த விழாவை கொண்டாடுவதில் தமிழக மக்களோடு ஆலிம்களும் ஆர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் காலங்காலமாக நன்மை என்ற பெயரில் நடத்தி வருகின்றனர்.

முன்னோர்கள்களில் சிலர் இதனை உருவாக்கினர் என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இவற்றுக்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை. அதற்காக முயற்சிகளை மேற்கொள்வதுமில்லை. படித்தவர்களின் நிலைமையே இதுவானால் படிக்காதவர்கள் எப்படி உண்மையை உணரமுடியும்?

மூன்று யாசீன்
இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப்பின் மூன்று ‘யாசீன்’ ஓதி துன்பம் துயரங்கள் நீங்கவும் நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் துஆச்செய்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த இரவில்தான் ‘தக்தீர்’ எனும் விதியை நிர்ணயிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையிலேயே மூன்று யாசீன் ஓதி துஆசெய்யும் வழக்கம் இருந்து வருகின்றது.

ஷஃபான்15ஆம் இரவில் குறிப்பிட்ட சில அமல்களைச் செய்வதற்கு ஆதாரமுண்டா என்றால் திருமறைக் குர்ஆனிலோ, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திலோ, அருமை ஷஹாபாக்களின் செயல்களிலோ, தாபீயீன்கள், நான்கு இமாம்கள் வழிமுறைகளிலோ இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இப்படிச் செய்வது நன்மையானது என்றால், நம்மைவிட நன்மை செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சஹாபாக்கள் இதனைச் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் தோன்றிய சிலர்தான் இதனை உருவாக்கினர். இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் இந்த இரவில் 100 ரக்அத்துக்கள் தொழவேண்டும் என்று கூறியிருப்பதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது.

நன்மைகள் தானே
தொழுவது யாசீன் ஓதுவது துஆ செய்வது போன்றவை நன்மைகள்தானே, அவைகளைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்வது எப்படி? என்று, நம்மில் பெரும்பான்மையினர் பலரும் நினைக்கலாம். சற்று நிதானமாக படித்து சிந்தித்து சரியாக விளங்கிக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர் கூறுகிறார்கள்
“எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்.”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அலி (ரழி) அபூதாவூது, நஸயீ)

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி) ஜாபிர் (ரழி) புகாரீ, முஸ்லிம், நஸயீ)

ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் இத்தகு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது மார்க்கமாக இருந்திருப்பின் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விஷேச இரவு என்று கருதிக்கொண்டு  செய்துவரும் போலி வணக்கங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் தூதரை எல்லா நிலைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.

தொடர்ந்து படிக்க

“பராஅத்” இரவு ஹதீஸ்கள் எக்காரணங்களால் பலவீனப்படுகின்றன?

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மறைவான வணக்கம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?

நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.

ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் ‘ஸஹ்ரில்’ சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.

உறுதியான நம்பிக்கையின் அடையாளம்

நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.

அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!

மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!

இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! ‘மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.

சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.

இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.

யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.

அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.

செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

‘தவ்ஹீத்’ பெயரால்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மற்ற மனிதர்களையும் ஒன்றினைக்கும் வாழ்க்கை நெறி! இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இந்த செயற்கரிய சாதனை கடந்த 1000 ஆயிடம் வருடங்களாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உலக முஸ்லிம்கள் பிரிவிலும் பிளவிலும் சிக்கித்தவிக்கிறார்கள்.

முஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணையும் சாத்தியக்கூறுகள் மிகுந்திருந்தும் அங்கும் அவர்கள் பிரிந்தே கிடக்கிறார்கள். மார்க்க ரீதியில் மத்ஹபுகள், தரீக்காக்கள் என்றும், இயக்கங்கள், அமைப்புகள் என்றும் அகில உலக அளவில் குழு குழுவாக பிரிந்து கிடக்கிறார்கள்.

அறிஞர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளும் அரசியல் காரணங்களும் முஸ்லிம்களைப் பிரிவிலும் பிளவிலும் நிரந்தரமாய் சிக்க வைத்துள்ளன. தங்கள் தங்கள் அணிகளை ஒவ்வொருவரும் வளர்ப்பதால் சர்வதேச அளவில் முஸ்லிம்களை ஒன்றினைக்க யாரும் முனைப்போடு முற்படவில்லை. இதை யாரும் இன்றளவும் உரத்து ஒலிக்கவில்லை. அல்குர்ஆனோடு ஐக்கியமாவதே உண்மை ஒற்றுமை! மாறாக வேண்டும்போது கூடுவதும் வேண்டாதபோது கலைவதும் உண்மை ஒற்றுமையல்ல. இதை குர்ஆன் ஹதீஸ் வழி நிற்போர் மற்றவர்களுக்கு உணர்த்தக் கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர்களும் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

இஸ்லாம் தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும் உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர்களால் குறுகிய வரையறைக்குள் தள்ளப்பட்டு விட்டது.

தவ்ஹீத் குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட தூர நோக்கு இல்லாத வெற்று வேதாந்தம் என்று மாயத்தோற்றம் தமிழகத்தில் எப்படியோ தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பர தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்தப் பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இஸ்லாமிய தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாய முழுமைக்கும் எல்லாக் காலங்களிலும் பொதுவுடமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறியாகும் என்பதை மிக அழுத்தமாக கோடிட்டு காட்ட விழைகிறோம்.

தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப்பெயர் அல்ல. தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாரின் தனியுடமையல்ல. தங்களைத் தனிமைப்படுத்தி பிரித்துக்காட்ட இட்டுக்கொள்ளும் பிரிவுப்பெயருமல்ல. சீரிய சிந்தைனயாளர்கள் கூட தங்களை மற்றவர்களிடமிருந்து தங்களை தவ்ஹீத்வாதிகள் என்றே இனம் பிரித்து காட்டினார்கள்.

தங்களை அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தார்களிடமிருந்து பிரித்துக்காட்ட தவ்ஹீத ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று பெயர் பொறித்துக்கொண்டார்கள். அதில் பெருமை பட்டும் கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று இவர்கள் பங்கிற்கு இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவை தோற்றுவித்து விட்டார்கள்.

பத்து நூறு, ஆயிரம் என்றோ, பத்தாயிரம் என்றோ அதைவிட கூடுதலாகவோ கூட்டம் கூடியவுடன் குழுக்கள் அல்லது சபைகள், குரூப்கள் அமைத்துக்கொள்ளவோ இயக்கங்கள் காணவோ அமைப்புகள் ஏற்படுத்தவோ தவ்ஹீத் கொள்கை அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. மாறாக ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஏற்பதன் மூலம் மனித சமுதாயம் ஒன்றுபடவும் வேண்டும்; ஒன்றுபடுத்தவும் வேண்டும் என்ற உன்னத உயர் இலட்சியத்திற்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட அருட்கொடையே ஓரிறைக் கொள்கை.

பல தெய்வ வழிகேடுகளை வழிபாடாகவும், ஒழுக்க கேடுகள் அனைத்தையும் உயர் நெறிகளாகவும், பிரிந்து வாழ்வதை பிறப்பின் இலட்சியமாகவும், விரோதங்கள், குரோதங்களையும் வாழ்க்கை விதியாக்கிக்கொண்டும் அனைத்து அநாகரிங்களையும் நன்மைகளாகவும் புண்ணியங்களாகவும் விலங்கினும் கீழாய் ஒழுங்கீனங்களில் வீழ்ந்திருந்த மக்கள், ஒன்றுபட்டு உலகை வியக்க வைத்த இலட்சிய வாழ்விற்குச் சொந்தக்காரர்களாய் மாற்றியமைத்தது எது? ஓரிறைக் கொள்கை!

இவ்வற்புதம் இறுதி வேதம் யாருக்கருளப்பட்டதோ அந்த இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் 23 ஆண்டுகளில் அருளப்பட்டு இஸ்லாம் நிறைவு பெறும் நிகழ்வு ஏறத்தாழ கால் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. இந்தப் பேருண்மை இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. ஆச்சர்யத்தின் விளிம்பிற்கே இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில் ஜீரணிப்பதும் மிக கஷ்டமாயிருக்கிறது ஏன்?

பிரிந்து வாழ்வதிலும், பிள்வு படுவதிலும் இன்புறும் இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு இஸ்லாம் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் முஸ்லிம்களை மட்டுமல்ல, மனித சமுதாயத்தையே ஒன்றிணைக்கும் வாழ்க்கை நெறி என்பதை மனப்பூர்வமாய் ஏற்பதுகூட மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் மலைப்பாயிருக்கிறது.

தற்காலிகமாய் பல குழுக்கள் ஏதேனும் விபத்துகளால் ஒன்று கூடுவதும், கூடிய நோக்கம் நிறைவுறுமுன் அல்லது நிறைவுற்றதும் பிரிந்துவிடுவதும் ஒற்றுமையாகுமா? இஸ்லாலிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்கமுடியுமா? ஒருக்காலும் ஏற்க முடியாது.

பிரிவுகளும் பிளவுபட்ட குரூப்பிஸ போக்குகளும் எப்படி ஒற்றுமையாக முடியும்? ஒருக்காலும் ஒற்றுமாயாகாது. எனவே அன்புச் சகோதர சகோதரிகள் காய்தல் உவத்தலின்றி நடுநிலைக் கண்ணோட்டத்துடன் சிந்தித்து பிரிவினை அணி, குழு மனப்பான்மையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதுடன் மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் மலர ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன் வஸ்ஸலாம்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பிறர் நலம் பேணுதல்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை நாடுபவராக இருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் “மார்க்கம் என்பது நன்மையை நாடுவது” என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: “யாருக்கு?” நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்ப கால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது.

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது, அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவது ஆகியவற்றிற்கு உறுதிப் பிரமாணம் செய்துகொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் நாடுபவராக இருந்தால்தான், தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்புவார். ஆனால் இது மிகவும் சிரமமானது என்பதில் சந்தேகமில்லை. தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டுமென்பது ஈமானின் மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். மார்க்கம் என்பதே “பிறர் நலன் பேணல்’ என்ற அடிப்படை, முஸ்லிமின் உணர்வுடன் ஒன்றிவிட்டால் இதைச் செயல்படுத்துவது சிரமமல்ல.

இது முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமிடம் வெளிப்படுத்த வேண்டிய இயற்கைப் பண்பாகும். இதற்கு முரணாக ஒர் உண்மை முஸ்லிமால் செயல்பட இயலாது. இத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் வாழும் முஸ்லிம் சுயநலம், அகம்பாவம் போன்ற கீழ்த்தரமான காரியங்களில் இறங்க மாட்டார். ஆம்! பாத்திரத்தில் இருப்பதுதான் அகப்பையில் வரும்! மலர்கள் நறுமணத்தைத்தான் பரப்பும்! செழுமையான பூமி நல்ல மரங்களைத்தான் வளர்க்கும்!

உண்மை முஸ்லிம், நண்பர்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும், உபகாரம் செய்வதையும் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நட்பின் கயிறுகளைப் பலப்படுத்தும் விதமாக உபகாரத்தை தனது இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தங்களது வாழ்வில் வெளிப்படுத்திய நற்பண்புகளே அவர்களை உலக மனிதர்களில் சிறந்தவர்களாக்கியது.

நபி (ஸல்) அவர்கள் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் முஸ்லிம்களின் இதயங்களில் உபகாரம் செய்ய வேண்டுமென ஆர்வத்தை வளர்த்தார்கள். பனூ ஸலமாவைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய உபகாரங்கள் எதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்! அவ்விருவருக்காகவும் துஆச் செய்வது, அவர்களுக்குப் பின் அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களால் மட்டுமே உமக்கு எற்பட்ட இரத்த பந்துக்களிடம் இருந்திருப்பது, அவ்விருவரின் நண்பர்களுக்கு கண்ணியமளிப்பது” என்று கூறினார்கள். (ஸன்னன் அபூ தாவூத்)

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான நட்பை மதிப்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தினார்கள். அது சில வேளைகளில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ரோஷத்தை எற்படுத்தியது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜாவின் (ரழி) தோழியர்களுக்கு மிக அதிகமாக உபகாரம் செய்து வந்தார்கள்.

இதோ அன்னை ஆயிஷா (ரழி) அவர்களே கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரழி) அவர்கள் மீது ரோஷப்பட்டதுபோல வேறெந்த மனைவியர் மீதும் ரோஷப்படவில்லை. நான் அவரைப் பார்த்ததில்லை. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரழி) அவர்களை அடிக்கடி நினைவு கூர்வார்கள். சில வேளைகளில் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து இதை பல பங்குகளாகப் பிரித்து கதீஜா (ரழி) அவர்களின் தோழியருக்கு அனுப்பி வைப்பார்கள். நான் சில வேளைகளில் “”உலகத்தில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லையா?” என்று கூறுவேன். நபி (ஸல்) அவர்கள், “”கதீஜா இப்படி இப்படியெல்லாம் இருந்தார்கள்; அவர் மூலமாக எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்” என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதோ இந்த இஸ்லாமிய நேர்மையை விட உயர்ந்த வேறு நேர்மை இருக்க முடியுமா? பெற்றோர்கள் அல்லது மனைவி இறந்துவிட்ட பின்னரும் அவர்களின் தூரமான தோழர், தோழியர்களுக்கும் உபகாரம் செய்யப் பணிக்கப்பட்டுள்ளோம். அப்படியிருக்க நாம் நமது வாழ்வில் நமது நெருங்கிய தோழர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இஸ்லாம் கற்றுக் கொடுத்த நேர்மை, உபகாரம், பிறர் நலம் பேணுதல், நேசம் கொள்வது என்பது போன்ற பண்புகளின் நோக்கம் என்னவெனில் ஒருவர் தனது சகோதரருக்கு எல்லா நிலைகளிலும் உதவி செய்தாக வேண்டும். அதாவது தனது சகோதரர் சத்தியப் பாதையில் இருந்தால் அவருக்கு உதவி, ஒத்தாசை செய்து அவரைப் பலப்படுத்த வேண்டும். அவர் அசத்தியத்தில் இருந்தால் அவரைத் தடுத்து அவருக்கு நல்வழி காட்டி, வழிகேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதையே பின்வரும் நபிமொழி நமக்கு போதிக்கிறது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதர் தனது சகோதரருக்கு உதவி செய்யட்டும்! அவர் அநீதியிழைப்பவராக, அல்லது அநீதியிழைக்கப்படுபவராக இருந்தாலும் சரியே. அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், அவரைத் தடுக்கட்டும். அது அவருக்கு உதவியாகும். அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு உதவி செய்யட்டும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

முன்மாதிரியாகத் திகழும் உண்மை முஸ்லிம், தனது சகோதரர்களுடன் மென்மையாகவும், அவர்களை நேசிப்பவராகவும், அவர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் உயர் பண்புகளை வலியுறுத்தும் இஸ்லாமின் கண்ணோட்டத்தை ஆய்வு செய்வார்.

நபி (ஸல்) அவர்களுடனே இருந்து அவர்களுக்கு ஊழியம் செய்து வந்த அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட “அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்” என்றே கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி) நெற்றி மண்ணில் படட்டும் என்பதற்கு பொருள் அதிகமாக ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதாகும்.

உண்மை முஸ்லிம் தனது சகோதரன் அநீதம் செய்பவனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனைப் பிரியமாட்டார். ஏனெனில் தான் விரும்புவதையே தமது சகோதரனுக்கும் விரும்ப வேண்டுமென்கிறது இஸ்லாம். எந்தவொரு முஸ்லிமும் தான் பிறருக்கு அநீதி இழைப்பதையோ பிறர் தனக்கு அநீதி இழைப்பதையோ விரும்பமாட்டார். அவ்வாறே தனது சகோதரருக்கும் இதை விரும்பமாட்டார். அதனால் சகோதரன் அநீதிக்குள்ளாக்கப்பட்டால் அவருடைய தோளோடு ஒட்டி நின்று அநியாயத்தைத் தடுத்து உதவி செய்வார். அநீதி செய்பவராக இருந்தாலும் தோளோடு ஒட்டி நின்று அவரை அநியாயம் செய்வதிலிருந்து தடுப்பார். இதுதான் உண்மையான உபகாரம். இதுதான் தூய்மையான பிறர் நலம் பேணுதலாகும். இதுதான் ஒரு முஸ்லிம் எங்கும், எப்போதும் மேற்கொள்ள வேண்டிய அழகிய பண்பாகும்.

அல்லாஹ் உனக்காக!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். பிறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்: நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்?

அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான். பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான்.

பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள் நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்?

இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான்.

உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருந்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான்.

அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருந்தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்? அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன்

இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப்புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசி விடுங்கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்

மேற்சென்ன தன்மைகள் கொண்ட இறைநம்பிக்கை அங்கு ஒருவனுக்கு எந்தப் பலனையும் தராது. அத்தகைய வணக்கங்கள் எந்த புண்ணியமும் ஈட்டித் தராது. யதார்த்த நிலை இதுதான். இதில் எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை. நிலைமை இவ்வாறிருக்க வெளிப்பகட்டுக்காகவும், புகழாசைகளுக்காகவும் செயல்படும் உணர்வுகள் குறித்து நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவை பெரும் நாசத்தை விளைவிக்கக்கூடாது. இல்லையெனில் நம் உழைப்பு, முயற்சி அனைத்தும் வீணாகிவிடும். நம்முடைய இந்த முதலீடு வீணாகிவிட்டதே என்று நாம் மறுமையில் கை பிசைந்து நிற்போம். சின்னஞ்சிறு நற்செயலும் நமக்கு துணை செய்யாதா என்று தவித்து நிற்கும் அந்த மறுமை நாளில், நம்முடைய வாழ்வின் முதலீடு முழவதும் முற்றிலும் வீணாகிவிட்டிருப்பது தொியவரும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த