இஸ்லாம்தளம்

மார்ச்20, 2009

உங்களுக்கொரு கடிதம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

சகோதரர்களே! ஒரு வகையில் முஸ்லிம்கள் நற்பேறு பெற்றவர்களே! அவர்களிடம்தான் இறைவனின் வாக்கான அல்குர்ஆன் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அதே நிலையில் இருக்கிறது.

மற்றொரு வகையில் இன்றைய உலகில் முஸ்லிம்கள் துர்பாக்கியசாலிகளே! இறைவனின் வாக்கான திருகுர்ஆனை தம்மிடம் வைத்திருக்கும் அவர்கள் அதன் ஆசிகளையும் வரம்பிட முடியாத அருட்பேறுகளையும் இழந்த நிலையில் இருக்கிறார்கள். இறைவன் அதனை இறக்கியருளியதின் நோக்கம் அதனை அவர்கள் ஓதியுணர்ந்து அதன்படி நடக்கவேண்டும் என்பதுதான். அது அவர்களுக்கு கண்ணியத்தையும் வலிமையையும் கொடுப்பதற்காக வந்திருக்கிறது. உலகத்துக்கு இறைவனுடைய பிரதிநிதியாக ஆக்குவதற்கு அது வந்திருக்கிறது. இதற்கு வரலாறு சான்று கூறுகிறது. அதன் அறிவுறைகளுக்கு தக்கவாறு செயல்பட்டபோது அவர்களை அது உலகத்திற்கு தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் உயர்த்தியது.

ஆனால் இப்போது அது அவர்களிடத்தில் இந்த நிலையில் இல்லை. அதனை வீட்டில் வைத்து ஜின்னையும் பூதத்தையும் விரட்டுவது, அதில் உள்ள வசனங்களை எழுதிக் கழுத்தில் கட்டுவது, கரைத்து குடிப்பது, நற்கூலிக்காக பொருள் தெரியாமல் ஓதுவது போன்ற செயல்களில்தான் அது இன்று பயன்படுத்தப்படுகிறது. தமது வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளுக்கு அவர்கள் வழிகாட்டியாய் அதனைக் கொள்வதைல்லை.

எங்கள் கொள்கை எப்படி இருக்கவேண்டும்; எங்கள் நடத்தை எவ்வாறு அமையவேண்டும்; எங்கள் நற்குண நல்லொழுக்கமுள்ள பண்புகள் எப்படி இருக்கவேண்டும்; வியாபரத் தொடர்புகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்; நட்பிலும் பகமையிலும் எந்தச் சட்டத்தை பின்பற்றவேண்டும். எமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கின்ற கடமைகள் யாவை; எது சத்தியம், எது அசத்தியம் எதை நாங்கள் பின்பற்ற வேண்டும் எதை நாங்கள் விட்டுவிட வேண்டும். யார் யாருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும், நன்பர் யார், பகைவர் யார், கண்ணியமும் வெற்றியும் நற்பயனும் எதில் இருக்கின்றன? என்றெல்லாம் அவர்கள் அதனிடம் கேட்பதில்லை.

இந்தப் பிரச்னைகளை எல்லாம் திருகுர்ஆனிடம் கேட்பதை இன்று முஸ்லிம்கள் கைவிட்டு விட்டார்கள். ஆனால் உலகாயதவாதி, நாத்திகர், இணைவைப்பவர், இஸ்லாத்தை மறுப்பவர், வழிகெட்டவர், சுயநலம் படைத்தவர், ஆகியவர்களிடம் இந்தப்பிரச்னைகளைப் பற்றி இன்று முஸ்லிம்கள் ஆலோசனைகள் கேட்கிறார்கள்; அவர்கள் அளிக்கும் ஆலோசனைப்படியே நடக்கிறார்கள்.

எனவே இறைவனின் கட்டளைகளை அலட்சியம் செய்துவிட்டு மற்றவர்களின் அதிகாரத்திற்குட்பட்டு நடப்பதால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ அந்த விளைவு இன்று அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது.

இறைவன் அருளிய திருமறையுடன் முஸ்லிம்கள் நடந்துகொள்ளும் முறைகளும் செய்கின்ற கூத்துக்களும் நகைப்புக்கிடமானவையாக இருக்கின்றன. இதே செயல்களை வேறொரு மனிதன் வேறொரு பணியில் செய்யக்கண்டால் அவனைப் பார்த்து எள்ளி நகையாடுவார்கள். பைத்தியக்காரன் என்று பட்டம் சூட்டுவார்கள்.

நீங்களே சொல்லுங்கள்; ஒரு மனிதன் மருத்துவரிடம் சென்று மருந்தொன்றை குறித்துக்கொண்டு வருகிறான். அதனை அவன் துணியில் மடித்துக் கழுத்தில் மாட்டிக் கொள்கிறான். அல்லது அதனைக் கரைத்துக் குடிக்கிறான் என்றால் அவனைப்பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவனுடைய செயலைப்பார்த்து சிரிக்க மாட்டீர்களா? அவனை முட்டாள் என்று நினைக்க மாட்டீர்களா?

எல்லோரையும் விடவும் சிறந்த மருத்துவனான இறைவன் உங்கள் நோய்க்கு நிக்ரற்ற மருந்தையும் அருட்கொடையையும் குறித்துக் கொடுத்திருக்கிறான். அந்த குறிப்புகளுக்கு உங்கள் கண்கள் முன்னாலேயே இரவும் பகலும் இத்தகைய கூத்துக்கள்தான் நடந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் அதைப் பார்த்து யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. மருத்துவரின் குறிப்பு கழுத்தில் மாட்டிக்கொள்வதற்கோ கரைத்துக் குடிப்பதற்கோ உள்ளதல்ல. அதன்படி மருந்தை உபயோகிப்பது அவசியம் என்பதை யாரும் யோசிப்பதில்லை.

நீங்களே சொல்லுங்கள்; நோயுற்றிருக்கிற ஒரு மனிதன் மருத்துவ நூல் ஒன்றைக் கொண்டு வந்து படிக்கிறான். அதனைப் படித்தால் மட்டும் நோய் நீங்கிப் போகும் என்பது அவன் நினைப்பு. அவனைப்பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவனுடைய மூளை கெட்டு விட்டது அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்கள் என்று சொல்ல மாட்டீர்களா?

ஆனால் நோய்களுக்காக அனுப்பித் தந்த தெய்வநூலை நீங்கள் இந்த நிலையில்தான் வைத்திருக்கிறீர்கள். அதனை ஓதும் நீங்கள் ஓதுவதால் மட்டுமே எல்லா நோய்களும் பறந்து போகும் என்றும், அதனுடைய கட்டளைப்படி நடக்க வேண்டியதுமில்லை என்றும், அது தீங்கு என்று காட்டக்கூடியவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டியதுமில்லை என்று நினைக்கிறீர்கள். தன்னுடை நோய் நீங்குவதற்கு மருத்துவ நூலைப் படிப்பது ஒன்றே போதுமானது என்று நினைக்கிற நோயாளிக்கு நீங்கள் எந்தத் தீர்ப்பை வழங்குகிறீர்களோ அதே தீர்ப்பை உங்களுக்கு ஏன் நீங்கள் வழங்கிக் கொள்வதில்லை?

உங்களுக்கு தெரியாத மொழியிலே ஒரு கடிதம் உங்களுக்கு வந்தால், அந்த மொழி தெரிந்தவர்களிடம் ஒடோடிச் செல்கிறீர்கள். அதிலுள்ள பொருளை நீங்கள் தெரிந்து கொள்ளும்வரை உங்களுக்கு அமைதி ஏற்படுவதில்லை. ஏதோ நாலுகாசு வரக்கூடிய சாதரணக் கடிதங்களைப் பொறுத்த மட்டில் நீங்கள் நடந்துகொள்ளும் முறை இது.

ஆனால் இம்மை மறுமையினுடைய செல்வங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு எல்லாம் தெரிந்த இறைவனிடமிருந்து உங்களுக்கு வந்திருக்கிற கடிதத்தை அப்படியே போட்டு வைத்துக் கொள்கிறீர்கள்! அதிலுள்ள பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் துடிப்பு உங்களுக்கு ஏற்படுவதில்லை. இது ஆச்சரியப்படக்கூடிய விசயமல்லவா?

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பரிட்சை வாழ்க்கை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருளாதாரம். “அருளில்லார்க்கு அவ்வுலகில்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என்ற முதுமொழி இதை உணர்த்தும் படைத்த இறைவன் மனிதனுக்கென்று அருளிய அருள் மார்க்கம் இவ்வுலகில் மனிதனுக்குரிய பங்கையும் தெளிவுபடுத்தி கூறியுள்ளது. மறுஉலக பேருகளை இவ்வுலகிலேயே உழைத்துப்பெற வேண்டும் என்று விதித்திருக்கிறான் அல்லாஹ். உலக இன்பங்களை துறந்து காடு சென்று கடுந்தவம் செய்வது கொண்டே ‘முக்தி’ பெறமுடியும் என்ற கட்டாய விதியை இறைவன் விதிக்கவில்லை.

இவ்வுலக இன்பங்களை வரையறைக்குட்பட்டு முறையாக அனுபவித்துக்கொண்டே மறுமைப் பேறுகளையும் பெறும் வழியை இஸ்லாம் போதிக்கிறது. மறு உலகப் பேறுகளை நிறைவாகப் பெறுவதற்கு முறையான வழிகாட்டுதலையும் தெளிவாகத் தருகிறது இஸ்லாமிய மார்க்கம். இரண்டும் பின்னிப் பிணைந்த ஓர் உன்னத நிலையைத்தான் இஸ்லாம் போதிக்கிறது.

ஆனால் ஷைத்தான் அதற்கு மாறாக ஒன்று இவ்வுலக பேறுகளையே சதமாகக்கொண்டு மறு உலகத்திற்கு வேண்டிய சாதனங்களைத் தேடுவதில் குறை செய்யவைக்கிறான். அல்லது மறுஉலகப் பேறுகளைத் தேடுவதையே முழுக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது போன்ற மயக்கத்தை உண்டாக்குகிறான். அல்லாஹ் விதிக்காததை (துறவறம்) மனிதர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவைக்கிறான். அதையும் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் தோல்வியுற்று இம்மை, மறுமை இரண்டையும் நஷ்டப்படுத்தி நரகில் விழ வழி வகுக்கிறான். இப்படி ஒன்றில் இம்மையை மட்டும், அல்லது மறுமையை மட்டும் தேர்ந்தெடுத்து அதனால் தோல்வியுற்று வழிகெட்டு நரகில் விழும் கூட்டம் ஏராளம்.

ஆனால் இம்மையை வரையரைக்குட்பட்டு நிறைவாக அனுபவிக்கவும் மறுமையை நிறைவாகப் பெறவும் அழகிய வழிமுறைகளைத் தருகிறான் படைத்த இறைவன்.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அல்குர்ஆன் 67:2

”நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” அல்குர்ஆன் 8:28

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். அல்குர்ஆன் 63:9

இவ்வளவு தெளிவாகச் சொல்லப்பட்டும் ஷைத்தான் மனிதனுக்கு பொருள் செல்வத்திலும் மக்கள் செல்வத்திலும் மயக்கத்தைக் கொடுத்து அவனை வழி தவறச் செல்கிறான். ஆனால் இந்த பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் மறுமையில் உதவிடப்போவதில்லை என்பதை அறுதியிட்டு  உறுதியாக அல்லாஹ் இறைவாக்குகளில் கடுமையாக எச்சரிக்கிறான்.

”அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா. “அல்குர்ஆன் 63:9

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். அல்குர்ஆன் 34:37

அன்புச் சகோதர சகோதரிகளே! இறைவனின் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னும் பொருட்செல்வத்திலும் மக்கட் செல்வத்திலும் வரம்பு மீறி பேராசை கொண்டிருப்பவர்கள் அவை காரணமாக தங்கள் ஐங்கால தொழுகைகளை மற்றும் அமல்களை வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டுக் கொடுக்காமல் சேமித்து வைப்பவர்கள் நிச்சயமாகத் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படவேண்டும். ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டு உரியவர்களுக்கு சேர்க்காதவர்கள் படிப்பினை பெறாதவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே.

இன்றைய நமது முஸ்லிம் சமுதாயத்தின் பெரும் செல்வந்தர்களெல்லாம் அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கைகளை மறந்து பொருளைத் தேடுவதையே தங்களின் முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தங்கள் தொழுகை மற்றும் நல்ல அமல்களை அனைத்தும் காணாமல் போய்விடுகின்றன.

பல லட்சங்கள் சேர்ந்தால் அதை கோடியாகவும் கோடிகள் சேர்ந்தால் அதை பல நூறு கோடிகளாக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு இரவு பகல் பாராது அயராது பாடுபடுகிறார்களேயல்லாமல் அசலான மறுமையை மறந்து விடுகிறார்கள். என்றும் இவ்வுலகிலேயே நிலைத்திருப்பதுபோல் தப்புக்கணக்கு போடுகிறார்கள். இவர்கள் எத்தனை ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் இவர்கள் அனுபவிப்பது என்னவோ மிகமிகக் குறைவுதான். ஒரு சாதாரண நடுத்தர மனிதன் சாப்பிடுவது, குடிப்பது சுகிப்பது போன்றவற்றைக்கூட இவர்கள் அனுபவிக்க முடியாமல் இவர்களை அல்லாஹ் ஆக்கிவிடுகிறான். முறைப்படி இவ்வுல இன்பங்களை அனுபவிப்பதையும் இழந்து விடுகிறார்கள். மறுமை பேறுகளையும் தங்களின் செயல்களினால் இழந்து விடுகிறார்கள்.

சாதாரன அறிவு படைத்த ஒரு மனிதனாலும் இப்படிப்பட்ட ஏமாளியாக இருக்க முடியுமா? ஆனால் ஷைத்தான் சொத்துக்கள் மீதும், பிள்ளைகள் மீதும் பேராசையை உண்டாக்கி இவ்வாறு செயல்பட வைக்கிறான். உண்மையில் இவர்களுடையது என்று சொல்லிக் கொண்டிருக்கும் சொத்துக்கள் இவர்களுடையது அல்ல. அவற்றிற்குரிய ‘ஜகாத்’ ஆக, அதற்கு மேலும் சதக்காவாக இவர்கள் வாரி வழங்கிச் செல்வதே இவர்களின் சொத்தாக மறுமையில் பலன் தரும் என்பதை புரிந்து செயல்படுவார்களா? ஷைத்தானின் மாயையை விட்டு விடுபடுபவார்களா? அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

எல்லோரும் கொண்டாடுவோம்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ  وَالْمُلْكَ  لاشَرِيْكَ  لَك
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீ கலக லப்பைக்,
இன்னல் ஹம்த வன்னிஃ மத லக்க வல் முல்க் லாஷரீக்க லக்

பொருள்: இறைவா உன் அழைப்பிற்கிணங்கி இதோ வந்தேன்,வந்தேன் இறைவா.
உனக்கிணை யேதுமில்லை வந்தேன் இறைவா!!
நிச்சயமாக சர்வ புகழும் எல்லா அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன.
உனக்கேதும் இணையில்லை.

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவா! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள் மீதும் அனுக்கிரகம் புரிவாயாக. நீ இபுறாஹீம் நபி மீதும் அவர்களது கிளையார் மீதும் அனுக்கிரகம் புரிந்தவாறு. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும்  அவர்கள் கிளையார்கள்மீதும் அபிவிருத்தி செய்வாயாக, நீ இபுராஹீம் நபி அவர்கள்மீதும் அவர்கள் கிளையார்கள்மீதும் அபிவிருத்தி செய்தவாறு நிச்சயம் புகழுக்குரியவனும் தலைமையுடையவனுமாக இருக்கின்றாய்.

இஸ்லாமிய மாதங்களில், வருடம் இரண்டு நாட்களை நாம் சங்கை பொருந்திய பெருநாட்களாக கொண்டாடி வருகிறோம். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை நோன்புப் பெருநாளாகவும், துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது பிறையினை ஹஜ்ஜுப் பெருநாளாகவும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

ஹஜ்ஜுப் பெருநாள் என்றதுமே நமக்கு இரண்டு நபிமார்களைப் பற்றி நினைவிற்கு வரும். அல்லாஹ்வின் உற்ற தோழர் என்ற கருத்தில் அழைக்கப்படும் “கலீலுல்லாஹ்” என்ற பெயருக்கு சொந்தக்காரரான நபி இபுறாஹீம் (அலை) அவர்களும், அவர்களின் அருமை மகனார் அருந்தவப் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் நம் நினைவில் நிற்கும் அந்த இரண்டு நபிமார்களாவர். அல்லாஹ்வின் அருள்மறையாம் திருகுர்ஆனை கருத்தூன்றி ஆராயும்போது நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய தியாகவாழ்வு பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய அற்புத வரலாறாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும், துன்ப துயரங்களையெல்லாம் அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்து வெற்றி பெற்ற வீர வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை சுருக்கமாக பார்ப்போம்.

நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் இளம் பிராயத்திலேயே ஓரிறை கொள்கையான இஸ்லாத்தை எடுத்து சொன்னதின் காரணத்தினால், அவருடைய தந்தையாராலேயே வீட்டைவிட்டும் விரட்டப்பட்ட சோதனை. அல்குர் ஆன் 19:46

கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னன் நம்ரூது என்பவனை எதிர்ததினால் நெருப்பு குண்டத்தில் எறியப்பட்ட சோதனை. அல்குர் ஆன் 21:68,69

திருமணமாகி பல்லாண்டு காலம் பிள்ளைப்பேறு இன்றி பரிதவித்த சோதனை. அல்குர்ஆன் 37:100,101

முதிர்ந்த பருவத்தில் உள்ள இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு நபி இஸ்மாயீல் (அலை) பிறக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பின்பு அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் தம் மனைவி ஹாஜிரா அம்மையாரையும், மகன் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் தகிக்கும் சுடுமணலில் தன்னந்தனியாக விட்டுப் பிரிந்த சோதனை.  புகார,ி அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்

அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு தம் அருமை மைந்தரான நபி இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்த சோதனை. அல்குர்ஆன் 37:02,03

ஆக வாழ்நாளில் பல அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்தும்கூட மனம் தளராமல் எல்லாம் வல்ல இறைவனிடமே பிரார்த்தனை செய்து பொறுமையுடன் துன்பங்களை சகித்து கொண்டிருந்ததினால் சோதனைகளெல்லாம் சாதனையாக மாறிய சாகஸ வரலாற்றை குர்ஆனில் காணலாம். கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்பாக நடந்த சில நிகழ்ச்சிகளை குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. அந்த பாலைவன சுடுமணலில் அன்னை ஹாஜிரா அவர்கள் ஒவ்வொரு மலைக்குன்றின் அடிவாரத்தில் தண்ணீரை தேடி ஓடிய அந்த நிகழ்ச்சியை நாம் நினைவு படுத்தி கொள்வதற்காகத்தான் இப்போது புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் சபா, மர்வா என்ற மலைக்குன்றுகளிடையே ஓடிவருவதை அல்லாஹ் கடமையாக்கி வைத்திருக்கிறான். அன்றைய தினம் அன்னை ஹாஜிராவும் அவர்தம் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் தாகத்தை தீர்த்து கொள்ள உதவிய அந்த தண்ணீர் தடாகம் தான் இன்றளவும் ஜம் ஜம் என்ற பெயரில் ஹாஜிகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீராக விளங்குகிறது.

நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் புதல்வரை அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பலியிட துணிந்தபோது, எல்லாம் வல்ல இறைவன் ஒரு ஆட்டை அனுப்பி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பகரமாக குர்பானீ கொடுக்க செய்ததுடன், இனி மறுமை நாள் வரை வாழும் வசதியுள்ள முஸ்லிம்கள், குர்பானீ கொடுக்கும் பழக்கத்தையும் கடமையாக்கி வைத்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்களை நபி இபுறாஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர் ஆன் 3:95

நபி இபுறாஹீம் (அலை) அவர்களது செயலை பின்வரும் காலத்தவரும் (மறுமை நாள் வரை) நினைவு கூறுவதை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர் ஆன் 37:108

அன்பு சகோதர சகோதரிகளே, ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தின் உயரிய காரணங்களையும் தத்துவார்த்தங்களையும் ஓரளவு சுருக்கமாக புரிந்து கொண்டோம். இன்னும் அதிக விளக்கத்திற்கு திருக்குர் ஆனையும் ஹதீஸ் நூல்களையும் பார்வையிடும்படி கேட்டு கொள்கிறோம்.

நபி இபுறாஹீம் (அலை) அவர்களது வாழ்வில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏற்பட்ட துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் நமக்கு ஒரு மகத்தான படிப்பினை இருக்கிறது. அதுதான் எத்தகைய கடும் சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ்வை பிரார்த்தித்து பொறுமையுடன் ஐவேளை தொழுகையையும் மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்பதே அந்த படிப்பினையாகும்.

ஹஜ்ஜுப்பெருநாள் அன்று பள்ளிவாசலுக்கு சென்று பெருநாள் தொழுகை முடித்ததும் கடமை முடிந்தது என்று நினைக்காமல் ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனைகளை குறிப்பாக, நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கை பாதையினை நெஞ்சில் நிறுத்தி உறவினர், நண்பர்களிடையே ஒருவருக்கொருவர் உபதேசம் செய்ய வேண்டும். வசதிமிக்கவர்கள் குர்பானீ கொடுக்க வேண்டும். இதை பற்றி விரிவாக குர்பானீ சட்டத்திட்டத்தில் காணலாம். மேலும் ஹஜ்ஜு மாதம்பிறை 9 அதாவது அரஃபா தினம் என்றழைக்கப்ப்டும் நாளில் சுன்னத்தான நோன்பு நோற்கவேண்டும். அதற்கு அரஃபா நோன்பு என்று நபி (ஸல்) அவர்கள் பெயர் சூட்டுகின்றார்கள். உடல் ஆரோக்கியம் நிறைந்த ஆண், பெண் இருபாலாரும் சுன்னத்தான இந்த நோன்பை நோற்பதற்கு முயற்சி செய்யவேண்டும். அரஃபா தினத்தன்று நோற்க வேண்டிய நோன்பு பற்றி கீழ்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது முந்தைய மற்றும் அடுத்த இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்கள்: முஸ்லிம், அபூதாவுது, திர்மீதி, இப்னுமாஜா அறிவிப்பவர்:அபூகதாதா (ரலி)

(இந்த நோன்பு ஹஜ்ஜு கடமையாற்றும் ஹாஜிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க). அடுத்து, குர்பானீயின் சட்டத்திட்டங்களை சுருக்கமாக பார்ப்போம்.

குர்பானியின் சட்டங்கள்:
ஹஜ்ஜுப் பெருநாளன்று பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே குர்பானி என்று சொல்லப்படுகிறது. நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் இதனைச் செய்துள்ளனர். அல்லாஹ்வும் தன் திருமறையில் இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான்.

உமது இறைவனுக்காகத் தொழுது மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக என்று அல்லாஹ் கூறுகிறான். அல்குர் ஆன் 108:2

ஹஜ் பெருநாள் தினத்தில் அறுத்துப் பலியிடுவதைவிடச் சிறந்த அமலை ஒருவன் செய்துவிட முடியாது. அந்தப் பிராணியிலிருந்து சிந்துகின்ற இரத்தம் அல்லாஹ்விடம் மிகவும் உயர்ந்த மதிப்பை பெற்றதாகும். அதனைச் சிறந்த முறையில் அறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா நூல் :திர்மீதி

தானே அறுக்க வேண்டும்:

குர்பானி யார் கொடுக்கின்றாறோ, அவர் அறுப்பதற்கு ஆட்களைத் தேடி கொண்டிராமல் தானே அறுப்பது சிறந்ததாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தானே அறுத்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் இரு கொம்புகள் உள்ள வெண்மையும், கறுப்பும் கலந்த இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தனர். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறி அவர்கள் தன் கையால் அறுத்தனர்.  அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல் :புகாரி

எப்படி அறுப்பது என்று தெரியாதவராக இருந்தால் அறுக்கின்றபோது, அந்த இடத்தில் நின்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ஃபாத்திமா (ரலி) அவர்களை அவ்வாறு செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

குர்பானி கொடுக்க எண்ணியவர் செய்யக்கூடாதவை:

குர்பானி கொடுக்க வேண்டும் என்று எவர் நாடுகிறாறோ அவர் துல்ஹஜ் பிறை ஒன்றிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை பத்து நாட்களுக்கு நகங்கள், முடிகளை களையக்கூடாது.
உங்களில் யாரேனும் குர்பானி கொடுக்க விரும்பினால் அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து (அறுத்து முடியும்வரை பத்து நாட்களுக்குத்) தன் நகங்களையும் முடிகளையும் களையாதிருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) நூல்:முஸ்லிம்

குர்பானி கொடுக்கும் நேரம்:

பெருநாள் தொழுகையும் அதன் பின்பு ஓதப்படுகின்ற இரண்டு குத்பாக்களும் முடிவதற்கு முன்னால் குர்பானி கொடுக்கலாகாது. அதற்கு முன்பே ஒருவன் அறுத்துவிட்டால் அது ஏற்கப்படாது. இன்னொன்றை அவன் அறுத்துப்பலியிட வேண்டும். எவன் தொழுகைக்கு முன்னர் அறுக்கின்றானோ அவன் தனக்காக அறுக்கின்றான். (அது வணக்கமாகாது) எவன் தொழுகையும் இரண்டு குத்பாக்களும் முடிந்த பின் அறுக்கின்றானோ அவனே முழுமையாக வணக்கத்தை நிறைவேற்றியவனாவான். முஸ்லிம்களின் சுன்னத்தையும் அவனே செய்தவனாவான் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். நூல்: புகாரி,முஸ்லிம்

நபி (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுதேன். தொழுது முடித்த பின் ஆடு ஒன்று அறுக்கப்பட்டுக்கிடப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ, அந்த இடத்தில் வேறொன்றை (தொழுகைக்குப்பின்) அறுக்க வேண்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுந்துப் இப்னு சுஃப்யான் (ரலி) நூல்கள்: புகாரி,முஸ்லிம்.

குர்பானி பிராணிகள்:

ஆடு மாடு ஒட்டகம் ஆகிய மூன்றை மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் இம்மூன்றையும் அரபியில் அன்ஆம் என்று கூறுவர் (சூரதுல் ஹஜ் 22:34) இம்மூன்றைத் தவிர மற்ற எந்தப் பிராணியும் குர்பானிக்கு உரியதன்று. மாடு, ஒட்டகத்தை ஏழு பேர்கள் கூட்டாகக் கொடுக்கலாம் ஹூதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட வருடம் ஏழு நபர்கள் கூட்டாக ஒரு மாட்டையும், அதுபோல் ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தையும், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் குர்பானி கொடுத்தோம் என்று ஜாபர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

ஒற்றைக் கண் குருடு, வியாதியுடையது, நொண்டி, கிழட்டுப் பருவம் அடைந்தது ஆகிய பிராண்ிகள் குர்பானிக்கு ஏற்றவையல்ல என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரழி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், இப்னு ஹிப்பான், நஸயீ,திர்மீதி,இப்னுமாஜா

ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை, குர்பானி கொடுத்துள்ளதாக அபூராபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை அஹ்மது இமாம் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும்:

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்துள்ளனர் என்று அபூ அய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: இப்னுமாஜா,திர்மீதி

இந்த ஹதீஸின் அடிப்படையில் தனக்கும்,தன் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டைக் கொடுப்பது போதுமானது.

கூலியாகக் கொடுக்கக்கூடாது:

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தபோது அதன் இறைச்சியையும் தோலையும் ஏழைகளுக்குக் கொடுக்கும்படியும் உரித்தவர்களுக்குக் கூலியாக இதில் எதனையும் கொடுக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டனர் என்று அலி (ரலி) அவர்கள் அறிவித்துள்ளனர். நூல்கள்: புகாரி,முஸ்லிம்

பங்கிடும் முறை:

குர்பானி கொடுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள் (உறவினர்கள், ஏழைகளுக்கும்) உண்ண கொடுங்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நாம் அதனை உண்ணுவதும், பிறருக்கு உண்ணக் கொடுப்பதும் சுன்னத்தாகும். இவ்வளவுதான் உண்ண வேண்டும் என்று வரம்பு எதுவும் கிடையாது.அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம்.

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பது:

(எனினும்) குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். அல்குர் ஆன் 22:37

இந்த திருவசனத்தில் அல்லாஹ் குர்பானி கொடுப்பதன் மூலம் இறையச்சத்தை நாடுகிறான் என்பதை விளங்க முடிகிறது. ஆகவே இறையச்சம் என்பது உயிறுள்ளவருக்குத்தான் இருக்கும். இறந்தவர்களுக்கு இருக்காது. மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆதமின் மகன் இறந்து விட்டால் மூன்று விஷயத்தை தவிர மற்ற எல்லாத் தொடர்புகளூம் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை (1) நிரந்தர தர்மம் (2) பயன் தரும் கல்வி (3) தன் பெற்றோருக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்:முஸ்லிம்

அடுத்து நம் இளைய வயதினரில் பெரும்பாலோர் பெருநாள் கொண்டாட்டத்தின் காரணங்களை சரிவர தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். பெருநாட்களின் தாத்பரியம் என்ன? பெருநாட்களை எப்படி கொண்டாட வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாத காரணத்தினால் சில சகோதர சகோதரிகள் துரதிஸ்டவசமாக இஸ்லாத்திற்கு புறம்பாக உள்ள கலாச்சாரங்களை பின்பற்றும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய விரும்பத்தகாத பழக்க வழக்கங்களை விட்டொழித்து நமது புனிதமிக்க மார்க்கமாகிய இஸ்லாம் வழிகாட்டிய முறையில் பெருநாள் கொண்டாட்டம் அமைய வேண்டும்.

திரைப்படம், திரைப்பாடல்கள்

வானொலி நிகழ்ச்சிகளில் பெருநாள் தினத்தன்று திரைப்படப்பாடல்களை விரும்பி கேட்பதும், மற்றும் தொலைக்காட்சி, வீடியோவில் திரைப்படங்கள் பார்ப்பதும் நம் இளையரிடையே பரவலாக காணப்படுகிற பழக்க வழக்கங்களாகும். இது நமது இஸ்லாமிய பண்பாட்டில் உள்ளது அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். நமது இஸ்லாத்தின் கலாச்சாரத்திற்கு மாற்றமாக நம் மனதை கெடுத்து பலவித தவறான எண்ணங்களையும் கருத்துக்களையும் போதிக்கும் திரைப்படங்களை பார்ப்பதை நாம் கைவிட வேண்டும். மேலும், நமது மனோ இச்சைகளை தூண்டி ஷைத்தானிய எண்ணங்களை நம் மனதில் பதியும் எந்த விஷயங்களும் நம் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்பதை மனோவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதன்படி நம் இளைய சமுதாயம் வாழ்க்கையில் உயர்ந்து சிறந்த மனிதர்களாக உருவாவதற்கு இந்த திரைப்படங்களும், திரைப்பாடல்களும் தடையாக இருக்கின்றன. ஒழுக்க கேட்டையும், நெறியற்ற வாழ்க்கை முறையினையும், ஆபாச வசனங்களையும் வன்முறைகளையும் தூண்டி மனிதனை வழிகேட்டிற்கு அழைத்து செல்வதில் பெரும்பாலான திரைப்படங்களும், திரைப்பாடல்களும் வழிகாட்டியாய் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. இது விஷயத்தில் பெரியவர்களும் இளையவர்களுக்கு போதனை செய்து சீர்திருத்துவது கடமை என்பதை இங்கு நினைவுப்படுத்துகிறோம்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

சூனியமும் ஜோசியமும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

சூனியம் (ஸிஹர்) செய்வது இறை நிராகரிப்பு (குஃப்ர்) ஆகும். இது அழிவை ஏற்படுத்தும் ஏழு பாவங்களில் ஒன்றாகும். இது மனிதர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காமல் இடையூறைத்தான் எற்படுத்தும்.  அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:

وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلا يَنْفَعُهُمْ 2.102

….. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்…. (அல்குர்அன் 2:102) மேலும் கூறுகிறான்:

وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى020.069

…… சூனியக்காரர்கள் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டார்கள். (அல்குர்அன் 20:69)
சூனியம் செய்பவன் காஃபிர் (இறை நிராகரிப்பாளன்) ஆவான்.

وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلا تَكْفُر 002.102ْ

…. ஆனால் ஸுலைமானோ காஃபிராக இருக்கவில்லை. அந்த ஷைத்தான்கள்தான் மெய்யாகவே காஃபிர்களாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் மனிதர்களுக்குச் சூனியத்தையும் பாபிலூன் (என்ற உரில்) ஹாரூத், மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(து என்று கூறி பல)வற்றையும் கற்று கொடுத்து வந்தார்கள். (மேலும் அவர்கள் கூறியதாவது) அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தை கற்கச் சென்ற மனிதர்களை நோக்கி) நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் காஃபிர்களாகி விடுவீர்கள். அதலால் இதைக் கற்று) நீங்கள் காஃபிர்களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை எவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை…… (அல்குர்அன் 2:102)

இத்திருவசனத்தில் (ஷைத்தான்) ஜின்கள், மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற காரணத்தைக் காட்டி அல்லாஹ் அவர்களைக் “காஃபிர்கள்’ என்று கூறுகிறான்.

ஷரீஅத் சட்டப்படி சூனியம் செய்பவனை கொலை செய்திட வேண்டும். சூனியத்தின் மூலம் இட்டப்படும் செல்வம் அசுத்தமானதும் ஹராமானதும் ஆகும். அறியாத மக்களும் அநியாயக்காரர்களும் பலவீனர்களும் சிலரைப் பழிவாங்க வேண்டும் அல்லது கெடுதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக சூனியக்காரர்களை நாடிச் செல்கிறார்கள். சிலர் சூனியத்தை அகற்றுவதற்காக சூனியக்காரர்களிடம் நோக்கிச் செல்கிறார்கள். இதுவும் குற்றச் செயலாகும். இதுபோன்ற தீங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்வையே நாடி அவனுடைய திருவசனங்களின் மூலமாகவே நிவாரணம் தேட வேண்டும்.

ஜோதிடனும் குறி சொல்பவனும் மறைவான விஷயங்கள் தனக்குத் தெரியும் என்று கூறினால் அவ்விருவரும் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள். ஏனெனில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் மறைவானதை அறிய முடியாது.

عَالِمُ الْغَيْبِ فَلا يُظْهِرُ عَلَى غَيْبِهِ أَحَدًا  إِلا مَنِ ارْتَضَى مِنْ رَسُولٍ فَإِنَّهُ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ رَصَدًا 072.26,27

அவன்தான் மறைவான இவ்விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவன். மறைவாக உள்ள இவ்விஷயங்களை அவன் எவருக்கும் வெளிப்படுத்துவதுமில்லை. ஆயினும் தன்னுடைய தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு அதனை அவன் அறிவிக்கக்கூடும். அதனை அவன் அவர்களுக்கு அறிவித்த சமயத்தில் நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் பின்னும் (மலக்கை) பாதுகாப்போராக அனுப்பி வைக்கிறான். (அல்குர்அன் 72:26,27)

قُل لاَّ يَعْلَمُ مَن فِى السَّمَـوتِ والاٌّرْضِ الْغَيْبَ إِلاَّ اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ

(நபியே!) நீர் கூறும்: வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவைகளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்….. (அல்குர்அன் 27:65)

பொய்யர்களும் ஜோசியர்களும் அறிவீனர்களை ஏமாற்றி பணம் பறிக்க பல வழிகளில் முயல்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள் ஒரு முறை உண்மையானால் 99 முறை பொய்யாகி விடும் என்பதை அந்த அறிவீனர்கள் விளங்கிக் கொள்வதில்லை. வியாபார முன்னேற்றத்திற்காக நல்ல மனைவி அமைய, காணாமல் போன பொருள்களை கண்டு பிடிப்பதற்காக அவர்களை நாடிச் செல்கிறார்கள். குறி சொல்பவனின் வார்த்தையை உண்மையென நம்புகிறவன் காஃபிராகி மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவான்.

நபி அவர்கள் கூறினார்கள்: ஜோசியன் அல்லது குறிகாரனிடத்தில் வந்து அவன் கூறுவதை உண்மையென நம்பக் கூடியவன் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட வேதத்தை நிராகரித்தவனாவான். (முஸ்னத் அஹமத்)

ஒருவர் ஜோசியன் அல்லது குறி சொல்பவனின் கூற்றை சோதித்துப் பார்ப்பதற்காக அவர்களிடம் சென்றால் அவர் காஃபிராகிவிட மாட்டார். எனினும் இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். அவனது 40 நாள் தொழுகைகள் ஏற்கப்படாது.

நபி அவர்கள் கூறினார்கள்: ஒருவர் குறி சொல்பவனை அணுகி அவனிடம் எதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அவருடைய 40 நாள் தொழுகைகள் அங்கீகரிக்கப்படாது. (ஸஹீஹ முஸ்லிம்)

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

இறைத்தூதர்கள் பொய்யர்களா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மதப்புரோகிதரர்கள் இடைத்தரகர்கள் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கல்லையும், மண்ணையும், பறவைகளையும் அனைத்து படைப்புகளையும் தெய்வமாக்கி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் அற்ப்பத்தனத்தை கண்டிக்கப் புறப்பட்ட இந்தப் பகுத்தறிவாளர்கள், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, பொய் கடவுள்களைக் கண்டிக்கப்போய், உண்மையான இறைவனையும் கண்டிக்கத் துணிந்து விட்டார்களே!

இது நியாயமா? கடவுளின் பெயரால் மதப்புரோகிதரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக உண்மையான இறைவனை மறுக்கத்துணிந்த இந்த பகுத்தறிவாளர்கள் அரசியல் பெயரால் இன்றைய அரசியல்வாதிகள் அதைவிடக் கடுமையாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே அந்த அரசியலையும் மறுக்கத் துணியாதது ஏனோ? மாறாக இன்றைய சாக்கடை அரசியலில் பகுத்தறிவாளர்களும் முக்கிக்குளிப்பது ஏனோ? தங்களுக்குள்ள அற்ப அறிவைக் கொண்டு கண்முன்னால் காணும் அரசியலை அறிவதுபோல் கண் முன்னால் தெரியாத, அறிவுக்கு எட்டாத இறைவனை அறிந்து கொள்ளும் ஆழ்ந்தறிவு இல்லாதவர்களாக இருப்பதால்தானா?

கண்ணால் இரையைக் கண்டபின் அதற்காக ஓடிவரும் பகுத்தறிவற்ற மிருகங்களைப்போல், இறைவனையும் மறுமையையும் கண்ணால் கண்டபின் ஓடிவரும் பரிதாப நிலையிலா பகுத்தறிவாளர்கள் இருக்கின்றனர்? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை நலனைக் கருத்தில் கொண்டு படிக்க அனுப்புகிறார்கள். முதிர்ந்த அறிவைப் பெறாத பிள்ளைகளோ தங்கள் பிற்கால வாழ்க்கையை கண்ணால் காணாததால், அதன் முக்கியத்தை உணராது, பள்ளிக்கூட வாழ்க்கையின் அற்ப சுகங்களையும், உல்லாச ஊர் சுற்றல்களையும் பெரிதாக எண்ணிப் படிப்பைப் பாழாக்கி எதிர்கால வாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததாக ஆக்கிக் கொள்கின்றனர். மாணவர்கள் தங்கள் பகுத்தறிவு செய்த துரோகத்தைத் தங்களது பிற்கால வாழ்க்கையில் பட்டு அனுபவித்தபின் உணர்ந்து வேதனைப்படுகிறார்கள். நிதர்சனமாக கண்டுதான் செயல்படுவேன் என்ற பகுத்தறிவு வாதத்தின் நிலையும் இதுதான்.

முதிர்ச்சி பெறாத மாணவ அறிவை உடையவர்களாகத்தான் பகுத்தறிவாளர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியுமா? மாணவன் பிற்கால வாழ்க்கையில் பகுத்தறிவின் துரோகத்தைப் பட்டு உணர்வதுபோல் இந்தப் பகுத்தறிவாளர்களும் மறுமையில் இறைவன் தனது தூதர்கள் மூலம் அறிவித்த உண்மையை ஏற்கும் பக்குவம் பகுத்தறிவுக்கு இல்லாமல் போனதே என்று எண்ணி, வேதனைப்பட இருக்கிறார்களா? அல்லது நாளை மறுமையில் பட்டபின் புத்திவரப்போகிறதா?

பல்லாயிரக்கணக்கான மனிதப்புனிதர்களான இறைத்தூதர்கள், இறைவனிடமிருந்து நேரடிச் செய்தி பெற்று இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று உலகிற்கு அறிவித்தது இந்தப் பகுத்தறிவாளர்களுக்குப் பொய்ச்செய்தியாம்; அறிவிலும், ஆற்றலிலும் குறைவான அரை வேக்காடுகள் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மனித அபிப்பிராயங்கள் பேருண்மைகளாம். மனிதனை தெய்வமாக்கும் மூடநம்பிக்கைக்கும், அதைப்பார்த்து ஏமாந்து படைத்த ஒரே இறைவனையே மறுக்கும் மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் இருக்கிறதா?

இந்த பகுத்தறிவாளர்கள் பேரறிஞர்களாக மதிப்பவர்கள் ஆதம், நோவா, ஏப்ரஹாம், இஸ்ஹாக், இஸ்மாயீல், தாவூத், சுலைமான், மோஸஸ், ஜீஸஸ், முஹம்மது இன்னும் இவர்கள் போன்ற எண்ணற்ற இறைத்தூதர்களை விட எந்த வகையில் சிறந்தவர்கள் என்பதை விளக்குவார்களா? இத்தனை ஆயிரக்கணக்கான மேதைகளின் தகவலுக்கு மாற்றமாக அப்படி ஒரு இறைவன் இல்லை, இறைவனைக் கற்பிப்பவன் முட்டாள், இறைவனை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று கற்பனையில் உளறிக்கொட்டிய அரைக்கிணறு தாண்டிகள் பெரும் பகுத்தறிவாளர்களா? பேரறிஞர்களா? இதுதான் பகுத்தறிவாதமா?

இந்தப் பகுத்தறிவாளர்கள் எதனைப் பகுத்தறிவு என்கிறார்கள்? புதிதாகக் கண்டு பிடித்துவிட்டார்களா? அல்லது இதுவும் காட்டுமிராண்டிப் பத்தாம் பசலிக் கொள்கைதானா என ஆராய்வோம். இறைவனை மறுக்கும் மூடக்கொள்கை காட்டுமிராண்டிகள் காலத்திலிருந்தே இருக்கிறது. இவர்களின் புதிய கண்டுபிடிப்போ, பகுத்தறிவில் பட்டதோ அல்ல. அதுதான் போகட்டும். இன்று இவர்கள் பெரிதாக பீற்றிக்கொள்ளும்  தீண்டாமை மற்றும் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள், மூடச்சம்பிரதாயச் சடங்குகள், அனாச்சாரங்கள், நல்ல காலம், கெட்ட காலம், சகுனங்கள் இன்னும் இவை போன்றவற்றை எதிர்ப்பதாவது இவர்களது பகுத்தறிவில் உதித்ததா என்று ஆராய்ந்தால், அவையும் பத்தாம் பசலிக் காலத்திலிருந்தே இறைத்தூதர்கள் கடுமையாக எதிர்த்தவையே.

இறைத்தூதர் ஆதம்(அலை) அவர்களிலிருந்து நூஹ்(அலை) இறைத்தூதர் வரை ஆதத்தின் சந்ததிகள் கொலை, கொள்ளை, குடி சூது, விபச்சாரம் போன்ற பாவமான செயல்களைச் செய்தார்களேயல்லாமல் மனிதனை இறைவாக்கும் இணைவைக்கும் தவறைச் செய்யவில்லை. இறைவனை மறந்து காலத்தின் மீதும், நேரத்தின் மீதும், சகுனங்களின் மீதும், மற்றும் படைப்பினங்களின் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. தவறுகளைச் செய்யும் மனிதன், தான் செய்வது தவறுதான் என்பதை உணர்ந்திருந்ததால், தனது தவறை எண்ணி வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும் நிலையிலேயே இருந்தான். இறைவனும் மனிதனை மன்னித்துக்கொண்டே இருந்தான்.

இது மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்க்கக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவரும் ஷைத்தானுக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. தான் கடும் முயற்சி செய்து மக்களைப் பாவம் செய்யவைத்தும், அவர்கள் பாவமன்னிப்பு கேட்டு மீண்டு விடுகிறார்களே என அங்கலாய்த்தான். எனவே மனிதனை புண்ணியமாக நல்ல காரியமாக நினைத்துப் பெரும்பாவத்தைச் செய்யவைக்க வழி என்ன என ஆராய்ந்தான்.

அதன் விளைவு, மனிதர்களிலே வாழ்ந்து மடியும் நல்லோர்களை சமூக சேவயாளர்களைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை மக்கள் உள்ளத்தில் விதைத்து, அவர்களுக்காகச் சமாதி கட்டி சிலை வடித்து மரியாதை என்ற பெயரால் ஆரம்பித்து, பின் அதனையே கடவுள் வணக்கமாக மாற்றிப் படைத்த இறைவனுக்கு இணை வைக்கும் கொடுமையை வேரூன்றச் செய்தான். மனித வர்க்கம் ஷைத்தானின் மாய வலையில் சிக்கிச் சீரழியலானது. அவர்கள் சிலை வணக்கத்தைக் கடவுள் வணக்கமாக, நண்மையானதாக பக்தியாக எண்ணிச் செய்ய ஆரம்பித்ததால் அது குறித்து வருந்தி பாவ மன்னிப்பு கேட்கும் நிலையையும் இழந்து விட்டார்கள். ஷைத்தான் தனது முயற்சியில் வெற்றியடைந்தான்.

ஷைத்தானை மறுக்கும் பகுத்தறிவாளர்களும் அவனது இந்த சூழ்ச்சிக்கு இரையாகி இருக்கிறார்களே. இன்று தமிழ் நாட்டில் பல பகுதிகளில் பெரியார் சிலை வடித்து அதற்கு மாலை மரியாதை செய்து வருவது எல்லை மீறி துதிபாடுவது இதனை நிரூபிக்கிறதே. சிலைக்கு படிமம் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டால் அது மூட நம்பிக்கை ஆகாதா? இன்னும் 1000 வருடங்களுக்குப்பின் பெரியார் சிலையும், இன்று பகுத்தறிவாளர்கள் எள்ளி நகையாடும், செருப்பு மாலை அணிவித்து இழிவு படுத்தும் எண்ணற்ற கடவுள் சிலைகளோடு சங்கமமாகி விடாதா?

அப்படிப்பட்ட இழிசெயலையே மூட நம்பிக்கையையே பகுத்தறிவாளர்கள் தமிழமெங்கும் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆயினும் இதனைப் பகுத்தறியும் தூர நோக்கு பகுத்தறிவாளர்களிடம் இல்லையே! முதிர்ச்சி அடையாத மாணவ பகுத்தறிவையே கொண்டிருக்கிறார்களே! இன்றைய பகுத்தறிவாளர்களின் தமிழகம் தழுவிய பெரியார் சிலை வடித்தலை ஆய்ந்துணர்பவர்கள் மட்டுமே எதிர்காலத்தில் பெரியார் சிலையின் பரிணாம வளர்ச்சி எங்கு போய் முடியும் என்பதை உணரமுடியும். (தொடரும்)

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த