இஸ்லாம்தளம்

மார்ச்19, 2009

அல்குர்ஆன் விரிவுரை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்பாத்திஹா (தோற்றுவாய்)
மெªலவி E.M.அப்துர் ரஹ்மான்

1.சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2.அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5.நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6.நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது)  கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.

இறக்கப்பட்ட வரலாறு

நபி (ஸல்) அவர்கள், மூமின்களின் தாயான கதீஜா (ரலி) அவர்களிடம் பின் வருமாறு கூறினார்கள். நான் தனித்திருக்குங்கால், மறைவிலிருந்து ஒரு சப்தத்தைச் செவியேற்கிறேன். அதனால் எனக்கு இதயத்திடுக்கம் ஏற்படுகிறது. இதைக் கேட்டு விட்டு கதீஜா(ரலி), “நாங்கள் அபூபக்கர்(ரலி)அவர்களை அழைத்துக்கொண்டு வரகா நவ்பலிடம்பின் சென்று இச்சம்பவத்தைப் பற்றிக் கூறுங்கள் என்று சொன்னார்கள்.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் வரகா என்பவரிடம் விஷயத்தைக் கூறினார்கள். இதைக்கேட்ட வரகாபின் நவ்பல் என்பவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி “தங்களுக்கு மறைவிலிருந்து சப்தம் வரும்பொழுது  முஹம்மதே! முஹம்மதே! என்று கூவிஅழைக்கப் பட்டால், தாங்கள் அப்படியே நின்று அவரின் வார்த்தையைக் கேளுங்கள்” எனச்சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அப்படியே செய்தார்கள். சப்தம் வந்த பொழுது “இதோ ஆஜாராக இருக்கிறேன் என கூறினார்கள். அப்பொழுது அசரீரி சொல்லுக! பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று கூறி இந்த பாத்திஹா சூராவை முழுதும் ஓதிக் காண்பித்தது அப்பொழுதுதான் இந்த ஸூரா இறங்கியது. மேற்கண்ட வரகா தான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தபோது தாங்கள் தாம் நபியென்று ஆறுதல் கூறி அனுப்பியவர்.

ஒரு அடிமை சர்வபுகழும் அல்லாஹ்வுக்கே என மனதாரக்கூறும் பட்சத்தில் ஆண்டவன் ஒருவனே என்றும் அவனே வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அவன் உள்ளமையும் அவனது இலட்சனங்களும் அழிவற்றவை என்றும்  உறுதி கொண்டவனாக ஆகின்றான். இத்தன்மைகளை கொண்டவனே புகழுக்கு உரியவனாக இருக்க முடியும்.

உலகில் அவனது அடிமைகள் செய்யும் குற்றங்களுக்கு அளவு கிடையாது. அவ்வாறு இருந்தும் கூட அல்லாஹ் அளவற்ற அருளாளனாகவே இருந்து வருகின்றான். திருமறையில் அல்லாஹ் “என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து பரந்து) சூழ்ந்து நிற்கிறது. (7:156) அடியார்கள் குற்றங்கள் செய்தாலும் அவர்களது நன்றியை எதிர்பார்க்காமலும் மீண்டும் மீண்டும் அருள்புரிந்துகொண்டு வரக்கூடியவனே “ரஹ்மான்” அளவற்ற அருளாளன்.

“அளவற்ற அருளாளன் எவருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர யாரும் (அதுசமயம்) பேசமாட்டார்கள்” (அல்குர்ஆன் 79:38) என்ற இறைவனின் வாக்குப்படி அல்லாஹ் அனுமதித்தவர்களைத் தவிர மற்றெல்லோரும் பேசுவதற்கு திராணியற்ற நிலையில் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் அந்நாளில் அவனேதான் எஜமானன்.

‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்’
என்ற வசனத்தின் மூலம் இறைவன் தன்னையே வணங்கும்படியும் தன்னிடமே உதவி வேண்டும்படியும் வணக்கத்திற்கு  தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும் இலாபத்தையோ நஷ்டத்தையோ உண்டாக்கும் சக்தி அவனுக்கே அல்லாமல் வேறு யாருக்கும் இல்லையென்று நம்புவதும் இஸ்லாத்தின் கொள்கையாகும். இதற்கு மாற்றமாக வணக்கத்திற்கு தகுதியானவன் வேறுயாரும் உண்டு என்று நம்புவதும்  அவர்களுக்கு வணக்கம் செய்வதும் அவனைத் தவிர வேறு யாருக்கும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தியுண்டு என்று நம்புவதும் இஸ்லாத்தில் ஷிர்க்(இணைவத்தல்)என்னும் மன்னிக்க முடியாத குற்றமாகும். நபியோ, ரசூலோ, குத்போ,வலியோ,யாருக்காயினும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தி உண்டென்று நம்புவதும் அவர்களிடம் உதவி தேடுவதும் பெரும் குற்றமே. இதைப் போல் நட்சத்திரங்களுக்கோ, நாட்களுக்கோ, சகுனங்களுக்கோ லாப நஷ்டத்தை உண்டாக்கும் தன்மையுண்டு என்று நம்புவதும் கடுமையான குற்றமாகும். ஒவ்வொருவரும் தனது சிறு தேவை முதல் பெருந்தேவைகள் வரை எல்லாத் தேவைகளையும்  நிறைவேற்றும்படி அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள் “செருப்பின் வார் அறுந்துபோனால் அதையும் அல்லாஹ்விடமே கேட்பாயாக” எனக் கூறினார்கள் (திர்மிதீ)

வருங்காலத்தை அல்லாஹ்வைத் தவிர வேறும் யாரும் அறியமுடியாது. ஜோசியத்தின் மூலமாகவோ குறிகாரரின் மூலமாகவோ பின்னால் நடைப்பெறப் போகும் காரியங்களைத் தெரிந்துகொள்ள முடியும் அன்று நம்புவது இணைவைத்தல் ஆகும். இதைக் குறித்தே நபி(ஸல்)அவர்கள் “(எதிர்காலத்தைப் பற்றி) குறிகாரன் சொல்வதை ஒருவன் நம்புவானேயானால் அவனுடைய நாற்பது இரவுத் தொழுகைகள் (இறைவனால்) அங்கீகரிக்கப்பட மாட்டாது” எனக் கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம் (முஸ்லிம்)

நாட்களாலும் நட்சத்திரங்களாலும் காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை நம்புவது பெறும் குற்றமாகும் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். “அல்லாஹ்வின் அருளால் மழை பெய்தது என்று சொன்னவன் விசுவாசியென்றும் இன்னின்ன நட்சத்திரங்களால் தான் மழை பெய்தது என்று சொன்னவன் ஆண்டவனுக்கு மாறு  செய்தவன் என்றும் கூறினார்கள்” ஹதீஸ் சுருக்கம் (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் அடியார்களில் அவனது அருள் பெற்றவர்கள், அவனின் கோபத்த்திற்கு ஆளானவர்கள், வழி தவறியவர்கள் ஆகிய மூன்று வகையினர். அல்லாஹ்வின் அருள்பெற்ற முதல் பிரிவினர் வழியிலெயே தன்னையும் நடத்தும்படி ஒவ்வொரு அடியானும் இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டுமென்பதை 6 வது வசனம் கூறுகிறது.

உண்மைக் கொள்கைகளுடன் தப்பான கொள்கைகளையும் விசுவாசம் கொண்டு, இறைவனுடைய கட்டளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவற்றிற்கு மாறு செய்ததன் காரணமாக இறைவனுடைய கோபத்திற் குள்ளானவர்கள்  இரண்டாவது பிரிவினர்.

அடிப்படையான உண்மையான கொள்கைகளில் விசுவாசம் கொள்ளாமல் நேர்வழியை விட்டும் விலகி நடந்தவர்கள் மூன்றாவது பிரிவினர்.

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீக்கீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களையுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள். (அல் குர்ஆன் 4:69)

கடைசியாக சூரா ஃபாத்திஹாவில் ஆமீன் என்ற  இவ்வாக்கியம் இந்த அத்தியாயத்தில் சேர்ந்த்தல்ல எனினும் இந்த சூராவை ஓதி முடித்தவுடன் ‘ஆமின்’ என்று கூறும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அவனது அருள் பெற்றவர்கள் சென்ற வழியில் நம்மை நடத்தி அருள் புரிவானாக ஆமீன்!

அல் அஸ்ரு – காலம்
மெªலவி E.M.அப்துர் ரஹ்மான்

1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

மனிதன் வயதையெல்லாம் அழிந்துபோகும் பொருளைத் தேடுவதிலும், தன்னை விட்டுப்பிரியும் மனைவி, மக்கள், சுற்றத்தார், சிநேகிதரோடு உல்லாசமாக இருந்து கொண்டு சந்தோச வாழ்க்கை நடத்துவதிலுமே செலவு செய்கிறான். விலை மதிக்க முடியாத ஒவ்வொரு மூச்சையும் இந்த முறையில்தான் வீணாக்குகின்றானே தவிர தான் பிறந்ததின் உண்மை நோக்கத்தைப் பற்றிக் சிறிதுகூட சிந்திப்பது கிடையாது. அவனது நோக்கம் தவறானது என்பதைக் காட்டுவதற்காகவே தான் இந்த சிறிய அத்தியாயம் இறக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் அவனுடைய தவறான நோக்கமானது முடிவில் பெரும் நஸ்டத்தைத்தான் உண்டாக்கும் என இந்த சிறிய அத்தியாயத்தில் இறைவன் தெளிவுபட கூறுகிறான்.

இறக்கப்பட்ட வரலாறு
கல்தாபின் உஸைத்  என்ற  நபர் அபூபக்கர் ஸித்தீக் (ரலி)அவர்களின் பழைய நண்பராக இருந்தார். இஸ்லாம் தோன்றிய பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள். கல்தா என்பவர் நிராகரிப்பவராகவே இருந்தார்.

ஒருநாள் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களை கண்ட கல்தாபின் உஸைத் ஸித்தீக்கை நோக்கி, அபூபக்கரே! உமது அறிவின் திறமையாலும் சுறுசுறுப்பாலும் வர்த்தகத்தில் பெருத்த லாபத்தைப் பெற்று வந்தீரே! இப்பொழுது உமக்கு என்ன நேர்ந்துவிட்டது? நஷ்டத்தில் வீழ்ந்து விட்டீர்: மேலும் உமது மூதாதையரின் மார்க்கத்தையும் புறக்கணித்து விட்டீர்; லாத், உஜ்ஜா வை வணங்குவதையும் விட்டொழித்து விட்டீர். எனவே, அவற்றின் அன்பையும் இழந்து விட்டீர் எனக் கூறினார்.

கல்தாவின் கடுஞ்சொற்களைச் கேட்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் சத்தியத்தை ஏற்று நற்கிரியைகள் புரிந்து வரும் ஒருவன் எப்பொழுதும் நஷ்டத்தில் விழமாட்டான் என பதிலளித்தார்கள். இதை உறுதிப்படுத்தவே இவ்வத்தியாயத்தை அல்லாஹ் அருளினான்.

அஸ்ரு என்னும் பதத்திற்கு காலம் என்பது பொருள். இவ்விடத்தில் ஒரு மனிதன்  இருக்கும் காலம் அதாவது வாழ்நாளைக் குறிக்கிறது. மனிதனுடைய வாழ்நாள் அதிலுள்ள ஒவ்வொரு மூச்சும் விலை மதிக்க முடியாதது . சென்று போன காலத்தை என்ன ஈடு கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாது.வாழ்நாள் மிக அருமையானது என்பதை காட்டவே அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்து கூறியிருக்கிறான். ஒரு மனிதன் என்ன நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றானோ அந்த நோக்கத்தை நிறைவேற்றினால் தான் ஈடேற்றம் உண்டு. அவ்வாறு இல்லாதவரை அவன் நஷ்டமடைந்தவன் தான். இந்த நஷ்டத்தை விட்டுத் தப்பவேண்டுமானால், ஈமான் (நம்பிக்கை) கொண்டு நற்கருமங்களை செய்து பிறரும் நற்கருமங்களைச் செய்யும்படி தூண்டவேண்டும்.

ஈமான்: அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய உண்மையான இலட்சணங்களைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் அவன் அனுப்பிய நபிமார்களைப் பற்றியும் பூரணமாக நம்பிக்கை கொள்வதே ஈமானாகும். நற்கருமங்கள்: என்ற பதம் விரிவான பொருள்  தரக்கூடியது. அல்லாஹ்வை  மனதால் தியானிப்பது, நாவல் துதிப்பது, சரீரத்தால் வணங்குவது, பொருளினால் அவன்  கட்டளைப்படி தருமம் செய்வது, பிறருக்கு உபகாரம் செய்வது, படைப்புகளின்மீது இரக்கம் காட்டுவது பெற்றோருக்கு பணிவிடை செய்வது,  நீதியும்  நேர்மையும்  நிலைக்க  பாடுபடுவது,  ஏழைகளுக்கும்,  அனாதைகளுக்கும் உழைப்பது ஆகிய இவையெல்லாம் நற்கருமங்களில் சேர்ந்தவையாகும்.

தான் எதை நன்மையென்றும் உண்மையென்றும் உணர்ந்திருக்கின்றானோ அதை தன்னோடு மட்டும் வைத்துக்  கொள்ளாமல்  பிறருக்கும்  போதித்து அந்த உண்மையின்  பக்கம்  கொண்டு  வர பாடு படவேண்டும். அதற்கு  எதிர்ப்பிருந்த போதிலும் பொருமையுடன் சகித்துக் கொண்டு  லட்சியத்தை கைவிடாமல் அது மக்களின் மத்தியில் பரவ முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் அந்த உண்மையானது பிறருக்கு கசப்பாக தோன்றலாம். அதனால் மனம் குன்றிவிடக் கூடாது. “உண்மை கசப்பாயினும் அதைச் சொல்லிக் கொண்டே யிரு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் உள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாக்குப்படி ஒருவன்  நடந்து கொண்டால் நாளடைவில்  அந்தச் சத்திய  கொள்கையானது மக்களின் மத்தியில் வேறூன்றித் தழைக்க ஆரம்பித்துவிடும்.

நபி (ஸல்)அவர்கள் “ஒருவன் மற்றொருவனை நற்கருமங்களைச் செய்யும்படி தூண்டினால் நற்கருமங்கள் செய்தவனுக்கு எவ்வளவு நற்கூலி கிடைக்கிமோ அவ்வளவு நற்கூலி தூண்டியவனுக்கும் கிடைக்கும். ஒருவனைக் மற்றொருவன் கெட்ட காரியம் செய்யும்படி தூண்டினால் கெட்ட கரியம் செய்தவனுக்கு எவ்வளவு தண்டனை உண்டோ அவ்வளவு தூண்டியவனுக்கும் உண்டு. அதில் கொஞ்சமும் குறையாது. (முஸ்லிம்)

சத்தியத்தை போதித்தல்: ஹக் என்ற பதத்திற்கு உண்மை, உரிமை என்பது பொருளாகும். இவ்விடத்தில் உண்மையான மார்க்கத்தையும் உண்மை பேசுவதையும் பிறருடைய உரிமயைப் பாதுகாப்பதையும் குறிக்கும். ஒருவருக்கொருவர் பொருமையைப் போத்தித்தல்: ஸப்ரு என்ற பதத்திற்கு பொருமை என்பது பொருள். ஒருவருக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள், பிறரால் உண்டாகும் வசைகள் துன்பங்கள் முதலியவற்றைப் பொருத்துக் கொள்வதே பொறுமையாகும். முதலில் மனிதன் தன்னைச் சீர்திருத்திக்கொண்டு மற்றவர்களைச் சீர்திருத்த முயற்சிக்க வேண்டும். ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்து பிறரையும் நன்மை செய்யும்படியும் கெட்ட காரியங்களை விட்டு விலகும்படியும் தூண்டவேண்டுமென்று இதில் கூறப்படுகிறது.

அல்காபிரூன் – நிராகரிப்போர்
மெªலவி E.M.அப்துர் ரஹ்மான்

1.சொல்லுக: நிராகரிப்பவர்களே! 2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். 3.மேலும், நான் வணங்குகிறவனை நீங்களும் வணங்குபவர்களல்லர்.4. இன்னும் நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குகிறவனுமல்லன். 5. மேலும், நான் வணங்குபவணை நீங்களும் வணங்குபவர்களல்லர். 6.உங்களுக்கு உங்களது மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.

சர்வ சக்தியும் உடையவன் இறைவன் ஒருவனேயென உணரும் ஒருவன், அழிவின் பக்கமே கொண்டு போகும் பலவீனமான படைப்புகளை ஒருக்காலும் வணங்க மாட்டான். எனவே அல்லாஹ்வை உண்மையாகவே நம்பும் நான், நீங்கள் அறியாமையின் காரணத்தால் வணங்கும் படைப்புகளை ஒருக்காலும் வணங்கமாட்டேன்.நான் கொண்டுள்ள உண்மையான தன்மைகளை நீங்கள் உணரும்வரை, என் வழியிலேயே என்னை விட்டுவிடுங்கள். உங்களுக்குத் தற்போது உங்கள் வழி சிறந்ததாகத் தோன்றலாம். அடுத்து எது உண்மையென்று தெரிந்து கொள்வீர்கள்.

இவ்வத்தியாயம் இறங்கிய வரலாறு
அபூஜஹீல், ஆஸ்பின்வாயில், வலீத்பின் முஙைரா, அஸ்வத் போன்ற குறைஷிக் காபிர்களான பிரமுகர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ் அவர்கள் மூலம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு பின்வருமாறு சொல்லி அனுப்பினார்கள்.

நமது தெய்வங்களைப் பற்றியும் அவைகளுக்கு வணக்கம் செய்வது பற்றியும் முஹம்மது தூஷணமாக பேசக்கூடாது. நமது கூட்டத்தாரில் தலைத்தனம் வகிக்க வேண்டுமென்று அவருக்கு விருப்பம் இருந்தால் அவரைத் தலைவராக்கி விடுகிறோம். பொருள் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் அதிகமான பொருளை சேகரம் செய்து கொடுக்கிறோம். அழகிய பெண் வேண்டுமென்ற ஆசை இருந்தால் நமது குலத்தில் அழகில் சிறந்த பெண்ணை கொடுக்கிறோம்.

இவ்விசயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டதும், இவை ஒன்றுமே எனக்கு தேவையில்லை. எனது சமூகத்தவராகிய நீங்கள் கேவலமான முறையில் நாசமடையாமல் நேர்மையான பாதையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதுதான் எனது விருப்பம் என்று பதில் சொல்லி அனுப்பினார்கள். ஆசைகளைக் காட்டி முஹம்மது அவர்களை வசப்படுத்த முடியாதென்பதைத் தெரிந்த குறைஷித் தலைவர்கள், வேறொரு சமரச யோசனையைச் சொல்லி அனுப்பினார்கள். அதாவது:

நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டுமானால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும். ஒரு வருஷம் அவர் நமது தெய்வங்களை வணங்கி வரவேண்டும். மறு வருஷம் நாம் அவருடைய கடவுளை வணங்குவோம். இவ்வாறு செய்து வருவது இருவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு நல்ல வழி. இச்சமரச யோசனைக்கு மறுப்பாகவே இந்த அத்தியாயத்தில் உள்ள விஷயங்களைக் கூறும்படி இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.

கருத்துரை
எல்லாவற்ரையும் படைத்து இரட்சித்து ஆளும் சர்வ சக்தியுள்ள ஒரே இறைவனை நான் வணங்குகிறேன். நீங்கள் அவனால் சிருஷ்டிக்கப்பட்ட சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவைகளையும் உங்கள் கைகளால் உண்டாக்கப்பட்ட சிலைகளை வணங்கி வருகிறீர்கள். இந்த படைப்புகளும், சிலைகளும் உங்களைக் காப்பாற்றக் கூடியவை என நீங்கள் விசுவாசம் கொண்டிருக்கின்றீர்கள். இவைகளால் இலாபமோ நஷ்டமோ உண்டாக்க முடியாது. இந்த உணர்ச்சி உங்களுக்கு உதயமாகும் வரை என் வழியில் என்னை விட்டுவிடுங்கள் உங்கள் வழியில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள்.வணக்கத்திற்கு மூலமானது தவ்ஹீது எனும் இறைவன் ஒருவன் என்பதை நிலைநிறுத்துவதும், ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைத்தல் நிராகரிப்பாகும்.

இதன் சிறப்பு
நபித்தோழர் நெªபல் பின் முஆவியா அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரே நித்திரைக்குச் செல்லுங்கால் நான் எதை ஓத வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் குல்யா அய்யுஹல் காபிரூன் என்ற அத்தியாயத்தை ஓதிவிட்டு நித்திரை செல்லுங்கள் அது (ஷிர்க்) இணைவைத்தலை விட்டும் அகற்றக் கூடியதாகும். (மனத் தூய்மையுடன்) ஓதுபவன் ஷிர்க்கை விட்டும் காப்பாற்றப்படுகிறான். அப்படியே மரித்தாலும் (தவ்ஹீத்) ஏக தெய்வக் கொள்கியின் மீதே மரிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அஹ்மது, அபூதாவூது,திர்மதீ, நஸயீ.)

அல் பீல் – யானை

மெªலவி E.M.அப்துர் ரஹ்மான்

1.யானை(ப்படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்க வில்லையா? 2.அவர்களுடைய சூழ்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 3.மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். 4.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 5.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப்போல் அவன் ஆக்கி விட்டான்.

யானைப்படை அழிந்த வரலாறு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன், அப்ரஹா என்ற பெயருள்ள அரசன் மக்காவிற்கு கிழக்கிலுள்ள எமன் நாட்டில் அரசு செலுத்தி வந்தான். இயற்கையில் அவன் துற்குணமுள்ளவன். மக்காவிலுள்ள  கஃபாவானது  அரபியர்களிடம்  விசேஷ மதிப்பு  பெற்றிருந்தது  பற்றி அவன் பொறாமை கொண்டு தன் நாட்டின் தலைநகர் ஸன்ஆ விலும்மொரு பெரிய கோவிலை கட்டினான். மக்காவிற்குச் ஹஜ்ஜு செய்யக் கூடாதென்றும் தன்னுடைய கோவிலுக்கே எல்லோரும் வரவேண்டுமென்றும் பிரகடன படுத்தினான். இவன் வார்த்தைக்கு ஒருவரும் மதிப்பு கொடுக்கவில்லை.

அரபியர்கள் வழக்கப்படி கஃபாவிற்கே யாத்திரை போனார்கள் இவன்கட்டிய கோவிலுக்கு யாரும் வரவில்லை. அதைப்பற்றி அவனுக்கு அதிக வருத்தம் உண்டு. இப்படியிருந்து வரும் சமயம் இவனுடைய கோவிலில் மலபாதை கழித்து ஆபாசம் செய்துவிட்டார்கள். அதைப்பற்றி  விசாரிக்கும்போது அவ்வாறு செய்தது  மக்காவாசி என்று தெரிந்தது. சிறிது  காலத்திக்குப்பின்  அந்தக்  கோவிலும்  தீப்பற்றி எரிந்து விட்டது. விசாரணையில்  மக்காவாசியே தீ வைத்ததாக  தெரிந்தது.  இவ்விரு  சம்பவங்களாலும் இயற்கையில் அவனுக்கு கஃபாவின் மீதும் மக்கா வாசிகளின் மீதும் இருந்து வந்த கோபம் மிகவும் அதிகமாகி விட்டது.

கஃபாவை இடித்து நாசம் செய்துவிட வேண்டுமென்று தீர்மானித்து, ஒரு பெரிய படையுடன் மக்காவை நோக்கி புறப்பட்டான்.அப்படையில் யானைகள் அதிகம் இருந்ததால் யானைப் படைகள் என்று கூறப்பட்டது. அதில் மிகப்பெரிய யானையின் பெயர் மஹ்மூது. கஃபாவை மட்டும்தான் இடித்துத் தகர்க்கப் போவதாகவும் பொதுமக்களுக்கு எத்தகைய  இடையூறும் விளைவிக்கப்  போவதில்லையென்றும் ஆனால் இடிப்பதை எவராவது தடுத்தால் எல்லோரையும் தொலைத்து விடுவதாயும்  முற்கூட்டியே மக்காவாசிகளுக்கு  சுற்றறிக்கை அனுப்பி விட்டான். இதனால்  நபி (ஸல்) அவர்களின்  பாட்டனார்  அப்துல் முத்தலிபைத்  தவிர்த்து  பாக்கியுள்ள மக்காவாசிகள் அனைவரும் பீதியினால் நகரை விட்டும் பக்கத்திலுள்ள மலைகளில் போய் மறைந்து கொண்டார்கள்.

அப்துல் முத்தலிபும் அப்ரஹாவும்
அப்ரஹாவின் படைகள் மக்காவிற்குச் சிறிது தூரத்திலுள்ள வாதியே முகஸ்ஸர் என்ற இடத்தில் தங்கி இருந்தன. ஒரு தினம் அப்துல் முத்தலிப் அவர்கள் அப்ரஹாவிடம் விஜயம் செய்ய, அப்ரஹா அவர்களை வரவேற்று உமது தேவை என்ன என வினவினான். எனது ஒட்டகைகளை உமது படையினர் பிடித்துக் கொண்டார்கள், அதனைப் பெற்றுச் செல்லவே வந்திருக்கிறேன் என்றார். இதைக்கேட்ட அப்ரஹா வியப்புடன் உமது ஒட்டகையைப் பற்றிய விசயத்தைத்தான் தெரிவிக்கிறீர், நான் கஃபாவை இடிக்க வந்திருக்கிறேனே அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று அப்ரஹா சொல்ல அதற்கு முத்தலிப் ஒட்டகைக்கு நான் சொந்தக்காரன் என் பொருளை நான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் கஃபாவின் சொந்தக்காரன் வேறு. அவன் உடமையை அவன் காப்பாற்றிக்கொள்வான். என அர்த்தமுடன் பதிலுரைத்தார். ஒட்டகைகளைக் கொடுத்து அப்துல் முத்தலிபை அனுப்பிவிட்டு அப்ரஹா காஃபாவை இடித்து தரை மட்டமாக்கும்படி தனது யானைப்படைக்கு உத்தரவு பிறப்பித்தான். கட்டளையை நிறைவேற்ற யானைப்பாகர்கள், யானைகளை எவ்வளவுதான் அடித்து மிரட்டியும் அவை ஒரு அடிகூட முன் எடுத்து வைக்கவில்லை. ஏனேன்றால் மஹ்மூது என்ற தலமை யானை கஃபாவை நோக்கிச் செல்ல மறுத்து முன்னால் படுத்து விட்டது. அதைக் கிளப்ப அவர்களால் முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அவைகள் முழுச் சத்தியாக்கிரகம் செய்துவிட்டன.

கரு நிறமான பறவைகள்
இச்சமயம் ஜித்தா கடற்கறையின் திசையிலிருந்து கரு நிறமான பறவைகள் கூட்டங் கூட்டமாக பறந்து வந்தன. ஒவ்வொரு பறவையின் இரு கால்களிலும் அலகிலும் பொடிக் கற்கள் இருந்தன. யானைப் படையினர் நேருக்கு நேர் அவை வந்ததும் ஆகாயத்தில் பறந்துக்கொண்டே அப்பொடிக் கற்களை படைகள் மீது எறிந்தன. அக்கற்கள் யார்மீது விழுந்தனவே அவர்கள் மெல்லப் பட்ட வைகோள்களின் சக்கை போன்று ஆயினர்.

கஃபாவை இடித்துத் தள்ள கட்டளை பிறந்தபொழுது மறுத்துச் சத்தியாக்கிரஹம் செய்த யானைகளைத் தவிர்த்து மற்றெல்லாப் படையினரும் இக்கதிக்குள்ளாயினர். ஆங்காங்கே மலைகளில் மறைந்துக் கொண்டிருந்த மக்காவாசிகள், குரைஷிகள் கண்கூடாக பார்த்தனர். கஃபாவை தாக்க வந்த பெரும்படை சிறிய  பரவைகளால்  நாசமாக்கப்பட்டது, நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னறிக்கையான அற்புதம் என்றும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் நடந்த 55 வது நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

எனவே, தங்களின் படை பலத்தாலோ, செல்வச் செருக்காலோ, நாவன்மையாலோ அல்லாஹ்வின் மார்க்கத்தை அழித்துவிடக் கணவு காண்பவர்கள், யானைப் படையின் கதியும், அதன் சம்பவமே போதிய சான்றாகும்.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: