இஸ்லாம்தளம்

மார்ச்14, 2009

உலக அமைதியின்மைக்கு காரணம் மதவாதமா? இனவாதமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

தொன்று தொட்டு இன்றுவரை மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாய் சிந்தப்பட்டுள்ளது. மதம் பிடித்த மனிதன்தான் மனிதனை கொல்கின்றான். இன்று உலகில் காணப்படும் அமைதியின்மைக்கு மதங்கள்தான் காரணம் மதங்கள் அழிந்தால்தான் மதங்களை ஒழித்தால்தான் மனித இனம் அமைதி பெறும் என்றெல்லாம் நாத்திகர்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இன்று உலகில் நடைபெறும் சம்பவங்ளை பார்க்கும்பொழுது இதில் உண்மையிருக்குமோ என்று மக்களுக்கும் சந்தேகம் ஏற்படுகின்றது. மதத்தின் பெயரால் இன்று மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுவதற்கு இந்த சந்தேகங்களும் ஒரு காரணமாகும்.

மதங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் மதவாதிகள் தங்களுக்குள் சண்டை போடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். ‘மத்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே பேர் ரக்னா’ என்று அல்லாமா இக்பால் கவிதை பாடினார். எந்த மதமும் தங்களுக்குள் பேதங்களைப் பாராட்ட சண்டையிட்டுக்கொள்ள கற்றுத்தரவில்லை. என்பது இதன் அர்த்தமாகும். பிறகு மதங்களின் பெயரால் இந்தச் சண்டை ஏன்? இந்தக் கேள்விக்கு நாம் விருப்பு வெறுப்பின்றி ஆராய்வோம்.

மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாக சிந்தப்படுகின்றது என்ற நாத்திகர்களின் வாதம் பொய்யானது. அடிப்படை இல்லாதது.

உலகில் நடைபெற்ற மிகப்பெரிய யுத்தங்களான கருதப்படுவது முதலாவது உலக யுத்தமும், இரண்டாவது மகா உலக யுத்தமும்தான். இந்த யுத்தங்கள் ஈவு இறக்கமில்லாமல் லட்சக்கணக்கான மனித உயிர்களை அநியாயமாக பலிவாங்கின. இந்த யுத்தங்கள் மதத்தின் பெயரால் நடத்தப்பெற்ற யுத்தங்கள் அல்ல. இனத்தின் பெயரால், மண்ணின் பெயரால் நடத்தப்பட்ட யுத்தங்களாகும். இந்தியாவை எடுத்துக்கொண்டால் மகாபாரத யுத்தம் போல் இதுவரை ஒரு யுத்தம் நடந்ததில்லை. இதுவும் மதத்தின் பெயரால் நடந்த யுத்தம் அல்ல. ஆதிக்க வெறியால் நடபெற்ற யுத்தமாகும். அடுத்து இலங்கை என்ற நாட்டையே இராமர் எரித்து சாம்பலாக்கிய மகாயுத்தம், இதில் மோதிய இராமரும் இராவணரும் இருவரும் இந்துக்கள்தான். இதுவும் மதத்தின் பெயரால் நடந்த யுத்தமல்ல. பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நடத்தப்பட்ட யுத்தம். இவையெல்லாம் புராண இதிகாசகால யுத்தங்கள்.

வரலாற்று ரீதியாக பார்ப்போமானால் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய யுத்தம் கலிங்கத்துப் பரணியில் சாம்ராட் அசோகன் நடத்திய யுத்தம். இதுவும் மத்ததின் பெயரால் நடந்த யுத்தம் அல்ல. நாடு பிடிக்கும் ஆசையில் நடந்த யுத்தங்களாகும். சந்திரகுப்தன், அலெக்சாண்டர், நெப்போலியன் போன்றோர் நடத்திய யுத்தங்களும் நாடு பிடிக்கும் யுத்தங்களே. அன்மையில் நடைபெற்ற யுத்தமான வளைகுடாப் போர் கூட நாடு பிடிக்கும் யுத்தமே.

இன்று உலகில் வல்லரசுகள் மோதுவது மதத்தின் பெயரால் அல்ல. ஆதிக்கத்தின் பெயரால்தான் மோதுகின்றன. ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சி மதத்தின் பெயரால் நடைபெற்றதல்ல. அது வர்க்கப் போராட்டம். இதில் பத்து லட்சத்திற்கும் மேலாக மக்கள் மடிந்தார்கள். ஆப்ரிக்கா கண்டத்திலும், அமெரிக்க கண்டத்திலும் நடைபெறுவது வெள்ளையன் கருப்பன் என்ற இனப்போராட்டம். நம் நாட்டிலும் மேல்ஜாதி, கீழ்ஜாதி என இனத்தின் பெயரால்தான் மனிதனின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. தங்களை பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் என்று தமிழகத்தில் வலம்வரும் இவர்கள் நடத்தும் போராட்டங்களும் இனப்போராட்டங்களே. இலங்கையில் நடபெற்று வரும் இரத்தக் களரிக்குக் காரணம் இன வெறியே தவிர மதவெறி அல்ல.

இனம், மொழி, நாடு, வர்க்க நலன் என்ற எண்ணங்கள் தலை தூக்கும் பொழுதெல்லாம் உலகில் மனித இரத்தம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது. உலகில் சாந்தியும் சமாதானமும் இல்லாமல் போனதற்கு இப்படிப்பட்ட வாதங்கள்தான் காரணமாகும். வகுப்பு வாதம் வளருவதற்கு இவைகள்தான் துணைபோகின்றன. இப்படிப்பட்ட வகுப்பு வாதங்களுக்கு சாவு மணி அடிக்க இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கம் ஒன்றே வழி. அது ஒன்றுதான் இனவாதத்திற்கும், வகுப்பு வாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது. எந்த மார்க்கம் வகுப்பு வாதத்திற்கு எதிராக இருக்கின்றதோ, அந்த மார்க்கத்தவர்களை வகுப்பு வாதிகள் என்ற பட்டம் சூட்டி இந்த திருடர்கள் தப்பிக்கப் பார்க்கின்றனர்.

மதத்தின் பெயரால் சண்டைகளே நடக்க வில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நடக்கின்றன. ஆனால் இனத்தின் பெயரால், ஆதிக்கத்தின் பெயரால், மண்ணின் பெயரால் நடைபெறும் சண்டைகளுக்கு முன்னால் இந்த சண்டைகள் ஒன்றும் அவ்வளவு பெரிய சண்டைகள் அல்ல. உதாரணத்திற்கு சொல்கின்றேன்: இஸ்லாத்தை நிலைநாட்ட நபி(ஸல்) அவர்களும் சில யுத்தங்களில் கலந்து கொண்டார்கள். இதைப் பற்றி பேராசிரியர் K.S.ராமாகிரிஷ்ணராவ் எழுதிய “இஸ்லாமிய மார்க்கத்தின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்)” என்ற தலைப்பில் எழுதிய நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

இறைத்தூதர் யுத்த களத்தின் அணுகுமுறையை முழுக்க மாற்றினார். அரேபிய தீபகற்பம் முழுக்க அவர் ஆளுகையின் கீழ் வந்தபோது, அவர் வாழ்நாளில் ஏற்பட்ட எல்லா போர்களிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு சில நூறுகளை தாண்டவேயில்லை. அவர் அரேபியாவின் காட்டுமிராண்டிகளுக்கு தொழக்கற்றுக் கொடுத்தார். தனியாகவல்ல; யுத்தத்தின் ஆரவாரங்களுக்கு நடுவேயும், கூட்டமாகத் தொழக் கற்றுத் தந்தார். எப்பொழுதெல்லாம் தொழுகை நேரம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் தொழுகையை கைவிடக்கூடாது; ஏன் ஒத்திப் போடக்கூடாது என்று அவர் போதித்தார். படைகளில் ஒரு பிரிவினர் தொழுது கொண்டிருக்கும் பொழுது மற்றொரு பிரிவினர் போரிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு பிரிவினர் தொழுகையை முடித்த பிறகு போர் செய்ய செல்வார்கள். காட்டுமிராண்டித்தனம் நிலவிய காலத்தில் யுத்தங்களே மனிதத் தன்மை உடையதாக ஆக்கப்பட்டது. கொள்ளையடித்தல், ஏமாற்றுதல், வாக்கு முறித்தலுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் வெளியிடப்பட்டன. குழந்தைகள், பெண்கள், வயதான ஆண்களை காயப்படுத்தக்கூடாது; கொல்லக்கூடாது என்று கட்ட்ளைகள் வெளியிடப்பட்டன. பேரிச்ச மரத்தை, பல மரங்களை வெட்டக்கூடாது என்றும், மத குருமார்களை அவமானப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

மெக்காவை அவர் கைப்பற்றியபோது அவரது அதிகாரம் உச்சகட்டத்தில் இருந்தது. எந்த நகரம் அவரது போதனைகளை கேட்க மறுத்ததோ, எந்த நகரம் அவரையும் அவரை பின்பற்றுவோரையும் பெரும் சித்திரவதை செய்ததோ, எந்த நகரம் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் துரத்தி அடித்ததோ, 200 மைல்களுக்கு அப்பால் ஒரு இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்த நிலையிலும் இடையறாத பகையில் தாக்குதல்களை தொடுத்ததோ, அந்த நகரம் இப்பொழுது அவரது காலடியில் கிடந்தது. தன்மீதும் தன்னை பின்பற்றுவோர் மீதும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக யுத்த விதிகளின்படி அவர் பழி தீர்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் என்ன செய்தார்? முஹம்மதுவின் இதயத்திலிருந்து அன்பும் இரக்கமும் பெருக அவர் “உங்கள் மீது எந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை” என்று கூறினார்.

தற்காப்புக்காக மனித உள்ளங்களை ஒன்று படுத்த யுத்தத்தை அவர் ஏன் அனுமதித்தார் என்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நோக்கம் நிறைவேறிய பொழுது அவர் தன்னுடைய மோசமான எதிரிகளைக்கூட மன்னித்துவிட்டார். தன்னுடைய சிறிய தந்தையார் ஹம்ஸாவை கொன்றவர்கள் அவரது உயிரற்ற உடலை கீறி ஈரலை வெளியே எடுத்து கடித்த மிகவும் கொடூரமான எதிரிகளைக் கூட அவர் மன்னித்துவிட்டார்.

உலகம் தழுவிய சகோதரத்துவம், மனித குலத்தின் சமத்துவம், போதித்த கொள்கைகள் மனித இனத்தை மேம்படுத்த அவர் தந்த போதனைகளில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. எல்லா பெரிய மதங்களும் அந்தக் கொள்கைகளை போதித்துள்ளன. ஆனால் இறைத்தூதர் முஹம்மது மட்டும்தான் அந்தக் கொள்கைகளை உண்மையில் நடைமுறைப் படுத்தியவர் ஆவார். அதன் மதிப்பு எதிர்காலத்தில் சர்வதேச உள்ளுணர்வு முழுக்க விழித்தெழும் வேளையில் முழுமையாக உணரப்படும். இன வேற்றுமைகள் மறையும். வலிமை வாய்ந்த உலக சகோதரத்துவக் கொள்கை நிலை பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று உலகில் நடைபெறும் மதச்சண்டைகளுக்கு அந்த மதங்களல்ல காரணம். இனவெறி பிடித்த ஆதிக்க சக்திகள். தங்கள் சக்திகளை மறைக்க விலை போகும் சில மதவாதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள். தங்கள் தில்லுமுல்லு, சூழ்ச்சிகளை மறைக்க மதங்கள் மீது பழிபோடுகின்றனர். சிலுவை யுத்தங்களுக்கு காரணம் கிறிஸ்துவ பாதிரிமார்கள். பாலஸ்தீன யுத்தங்களுக்கு காரணம் யூதகுருமார்கள். ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு காரணம் சில சுயநலமிக்க முல்லாக்கள். பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதற்கும், அதன் பின் நடந்த கலவரங்களுக்கும் சில சாதுகளும், சன்னியாசிகளும்தான் காரணம். முஸ்லிம்களிடையே நடைபெறும் சுன்னத் ஜமாஅத், ஷியா கலவரங்களுக்கு சில முஸ்லிம் முல்லாக்களே காரணம். ஆக இந்த சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் காரணம் இந்த மதங்களை தங்கள் கைக்குள் வைத்து ஆட்டி படைக்கும் மதக்குருக்கள்தான் காரணம். இவர்களை ஓரங்கட்டினால், தனிமைப்படுத்தினால் இந்த சண்டைகள் தானாக நிற்கும்.

மதங்கள் வேண்டும். மதங்கள் தான் மனிதனை மேன்மைப்படுத்தும். மதங்கள்தான் உலகில் அமைதியை கொண்டுவரும். ஆனால் குருக்கள், சன்னிதானங்களை தலையில் தூக்கி ஆடுவோமேயானால் அமிர்தமும் விஷமாகிவிடும். உலக பிரச்னைக்கு ஒரே தீர்வு மதங்களை தூய்மைப்படுத்துவது, புரோகிதரர்களின் கைகளிலிருந்து மதங்களை விடுவிப்பது. இதை விடுத்து மதங்களை குற்றம் சொல்வதில் பயனில்லை. உலக அமைதிக்கு ஒரே வழி. ஒன்று இன வெறி, ஜாதி வெறி, மொழி வெறி, ஆதிக்க வெறி, வகுப்பு வெறி இவை அனைத்தும் களையப்படவேண்டும். மதங்களிலிருந்து புரோகிதரர்களைக் களையெடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பையத்தா? மையத்தா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

தெள்ளத் தெளிவாக குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும் முரணாக மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே பிர்- முரீது வியாபாரம் நடந்து வருகிறது. அந்த வியாபாரத்தில் இரகசியம்! இரகசியம்! என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அந்த ரகசியம் என்ன? என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்துகிறது. யாரையும் கேவலப்படுத்தும் நோக்கத்துடன் அல்ல. மக்களுக்கு சத்திய மார்க்கத்தை உணர்த்த இக்கட்டுரை இடம் பெறுகிறது.

எனது மாமனார் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள பெரியவர் ஒருவர் முரீது பெற்றுள்ளார் எனத் தெரிந்து அவரை சந்தித்து முரீது பெற்றுள்ளதைப் பற்றி விசாரித்தேன். அப்பொழுது அவர் சொன்னதாவது ‘தம்பி’ நான் தற்போது கலவைக்கு 1 கீ.மீ. முன்னுள்ள அகரம் என்னும் காலனியில் குடியிருக்கும் ஷைகு அப்துல் கரீம் காதிரி என்பவரிடம் முரீது பெற்றேன். எனக்கு ஒரு வருடம் முன்பே என் மூத்த மகன் முரீது வாங்கினான். நான் என் மகனிடம் ஷைகு என்ன சொல்லிக் கொடுத்தார் எனக் கேட்டேன். அப்பொழுது என் மகன் எனக்கு ஷைகு ஒரு கலிமாவை கற்று கொடுத்தார். ஆனால் அதை யாரிடமும் சொல்லக்கூடாது, மீறி சொன்னால் நெஞ்சு வலி வந்து இறக்க நேரிடும். இந்த கலிமாவை அந்த ஷைகிடம் முரீது பெற்ற பீர்பாய்களிடம் மட்டும்தான் சொல்ல அனுமதி உள்ளது என மகன் சொன்னான். இதைக் கேட்டு எனக்கு தன்னை அறியாத ஒரு ஞானத்துடன் அவரிடம் சென்று முரீது பெற்றேன். அவ்வாறே ஷைகு கலிமாவை சொல்லிக் கொடுத்தார். அதனை யாரிடமும் சொல்லக்கூடாது என தடை விதித்தார்.

முரீது பெறுவதற்கு நீர் தயாரெனில் சொல் போகலாம் என என்னிடம் கேட்டார். ஆனால் ஷைகிடம் நீ ஸலாம் சொல்லக்கூடாது ‘ஆதாப்’ எனச் சொல்லவேண்டும். அவரிடம் முஸாபா செய்யும்போது அவருடைய கட்டை விரலுடன் உன்னுடைய கட்டை விரலை சேர்த்து முஸாபா செய்யவேண்டும். ஷைகு உட்கார்ந்திருந்தால் அவருடைய மடியில் உன் தலையை சாய்த்து முஸாபா செய்ய வேண்டும். இது என்னுடைய ஷைகு கற்றுத் தந்தது என பெரியவர் கூறினார். அதன் பிறகு நான் அந்த பெரியவரிடம் கேட்ட சில கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

நான்:     பைஅத் என்றால் என்ன?

பெரியவர்:  பைஅத் என்றால் மைய்யத் ஆகிவிடுதல்

நான்:     உங்கள் தரீக்கா எது?

பெரியவர்:  காதிரிய்யா தரீக்கா

நான்:     உங்களுக்கு ஷைகு சொல்லிக் கொடுத்த திக்ருகள் யாவை?

பெரியவர்:  ஒரே கலிமாதான். அதை நாவால் சொல்லக் கூடாது. அதனை உள்ளத்தால் மட்டுமே சொல்லவேண்டும். ஆனால் அதனை யாரிடமும் சொல்ல மாட்டோம்.

நான்:     தொழுகை பற்றி வலியுறுத்திச் சொன்னாரா?

பெரியவர்:  நீங்கள் வியாபாரம் செய்வதால் ஜும்மா மட்டும் தவறாமல் போகவும்.

நான்:     ஒரு நாளைக்கு 5 வேளைத் தொழுகை கட்டாயக் கடமையாயிற்றே.

பெரியவர்:  நாங்கள் மஃரிபத்தில் ஆகிவிட்டவர்கள்.

இதற்குப்பிறகு அந்த பெரியவரிடம் நான் தங்கள் ஷைகை காண வேண்டும் வருகிறீர்களா? என்றேன். பெரியவர் சம்மதித்து என்னை ஷைகிடம் அழைத்துப் போனார். ஷைகு வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவரின் மனைவி சற்று பொறுங்கள், அவர் வந்து விடுவார் எனக் கூறினார். சிறிது நேரத்தில் ஷைகு வந்தார். அப்பொழுது ஷைகிடம் நான் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும் கீழ்வருமாறு:

நான்:     உங்கள் தரீக்கா எது?

ஷைகு:    காதிரிய்யா

நான்:   தரீக்காவை ஆரம்பித்தவர்?

ஷைகு:  முஹியத்தீன் அப்துல் காதிர் ஜிலானி(ரஹ்)

நான்:    தாங்கள் கற்றுக் கொடுக்கும் கலிமா எது?

ஷைகு:  அதை முரீது வாங்குபவனுக்கு மட்டும் சொல்லவேண்டும்.

நான்:    கலிமா ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ தானே, அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஷைகு:  நான் கற்றுக் கொடுப்பது மஃரிபத் கலிமா. அதை இதயத்தால் மட்டும் தியானிக்க வேண்டும். ஏனெனில் வாய் பொய் சொல்லுகிறது. ஹராம் சாப்பிடுகிறது. எனவே வாயால் தியானிக்கக் கூடாது.

நான்:   மனதில் தியானம் நிலை பெறுவது கடினமாயிற்றே.

ஷைகு:  அதனை மனதில் படிய வைப்பதே ஷைகின் கடமை.

நான்:    தங்கள் முரீது தொழுவதில்லையே?

ஷைகு:   அதை அவரிடம் கேளும்.

நான்:    நீங்கள் தொழுவதில்லையே?

ஷைகு:  பைத்தியமே, தொழுது எவன் வலியானான்? தொழுகையை விட திக்ருதான் மேலானது. திக்ரு செய்பவன் தான் வலியாவான். பானிப்பட்டில் ஒரு வலி அவர் தொழுகை இல்லாமலேயே வலி ஆனார்.

நான்:     அல்லாஹ் குர்ஆனில் தொழுபவர்கள் தான் மூமின்கள் என்று சொல்கிறானே?

ஷைகு:   குர்ஆன் என்ன உனக்காகவா இறக்கப்பட்டது? உன் மீதா வஹீ வந்தது? இல்லையே? அது நபிகள்(ஸல்) மீது தானே இறக்கி வைக்கப்பட்டது. எனவே அந்த வஸீயத்துகள் எல்லாம் அவருக்கே.

ஷைகு:  நீ இவ்வாறு எல்லாம் குறுக்குக் கேள்விகள் கேட்கிறாயே! நீ சொல், குர்ஆனில் ‘தன் ஆன்மாவை அறிந்தவன் தன் இறைவனை அறிவான்’ என்று இருக்கிறதே (இப்படி குர்ஆனில் இல்லை) இதில் சொல்லப்பட்டிருப்பது படி ஆன்மாவை எவ்வாறு அறிவது? தொழுகையிலா? இல்லை. நான் சொல்லும் முழு கலிமாவால் தான். நீங்கள் சொல்வது அரை கலிமா. இந்த இந்தியாவிலேயே முழு கலிமாவை சொல்லி ஈடேற்றம் செய்பவன் நானும், என் பீர்பாய்களும் தான்.

நான்:   மார்க்கத்தில் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை கண்டால் ஸலாம் சொல்லுங்கள் எனச் சொல்லி இருக்கையில் தாங்கள் மட்டும் ‘ஆதாப்’ என்று சொல்கிறீர்களே! இது மார்க்கத்தை நிராகரிப்பதல்லவா?

ஷைகு:  மார்க்கத்தில் சொல்லி இருப்பது முஸ்லிம்களுக்குத்தான். மூமின்களுக்கு இல்லை. நான் மூமின். ஆகவே ஸலாமை விட மேலான ஆதாப் எனச் சொல்லுகிறேன்.

நான் இந்த ஷைகின் உல்ட்டா பேச்சுகளைக் கேட்டு இனி இவரிடம் பேசிப் பயனில்லை. நான் முஸ்லிம் என்கிறார். சற்று நேரத்தில் மூமின் என்கிறார். குர்ஆன் ஹதீஸ் படி நடக்க வேண்டும் என்கிறார். சற்று நேரத்தில் குர்ஆன் உன்மீதா இறக்கப்பட்டது என்கிறார். எனவே அவர் சொல்வதெல்லாம் சரி எனச் சொல்லவே, பையன் நம் வழிக்கு வந்து விட்டான் என நினைத்து,  நூதனமான ஷிர்க்குகளைச் சொன்னார்.

இப்படிப்பட்ட ஷைகுகளிடம் சிக்குபவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு இல்லாதவர்களே. எனவே அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இப்படிப்பட்ட ஷைகுகள் மலிந்தால் உண்மையான கலிமாவைச் சொல்பவர்கள் இல்லாமல் போய்விடும். இதை எல்லாம் எடுத்துச் சொல்ல பெரும்பாலான மவ்லவிகள் முன்வருவதில்லை. நாம் மற்றவர்களை நம்பிச் செயல்படாமல் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததுபோல் சாதாரண மக்களும் குர்ஆன் ஹதீஸை நேரடியாக விளங்கிச் செயல்பட முன் வந்தால் அன்றி, இப்படிப்பட்ட வேஷதாரிகளின் வேஷம் கலையப் போவதில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்து நிலையை உருவாக்கப் பாடுபடுவோம்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

சுவர்க்கத்தை நோக்கி…

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 3:133

இவ்வுலகில் வாழ்கின்ற  நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.

சுவர்க்க வாழ்வு

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

‘ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு (தயாரித்து) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்தவொரு ஆத்மாவும் அறியாது’ என்ற 32:17 வசனத்தையும் ஓதினார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி,முஸ்லிம், திர்மிதி)

நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு

சுவர்க்கத்திற்குறியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்துவிட்டால், “நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி நோயுறமாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜீவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் மரணிக்கவே மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆக மாட்டீர்கள்; என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதி)

சுவர்க்க வாயில்கள்

நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்பவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறியதும், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று அபூபக்கர்(ரழி) கேட்டார்கள்; ‘ஆம்’ அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹ்லுப்னு ஸஅத்(ரழி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜ்ஜா)

“நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன்; சுவர்க்க வாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கவாசிகளின் இதயங்கள்

பாவங்கள், விரோதங்கள், பொறாமைகள் போன்ற அனைத்து கெட்டவைகளும் நீங்கிய இதயங்களாக இருப்பார்கள்.

“விசுவாசங்கொண்டு, நற்காரியங்கள் செய்து சுவர்க்கத்தில் நுழைந்துவிட்ட அவர்களின் நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்” என்ற இறை வசனத்தின்படி பரிசுத்தமான நெஞ்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் 7:43, 15:47

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழு நிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மூக்குச்சளி சிந்த மாட்டார்கள்; எச்சில் துப்பமாட்டார்கள்; அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவர்களுடைய குணங்கள் ஒரே மனிதருக்குள்ள குணத்தைப் போன்று (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது காலை, மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம், திர்மிதி

சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை

அச்(சுவனத்தில்) வீண் வார்த்தைகளையோ, பொய்யையோ செவியுறமாட்டார்கள்; ‘ஸலாமுன்’ (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்ற வார்த்தையை தவிர அதில் அவர்களுடைய முகமன் வார்த்தை ‘ஸலாமுன்’ என்பதாகும். அல்குர்ஆன் 78:35, 10:10

சுவர்க்கத்து தோட்டங்கள், ஆறுகள், நீரூற்றுகள்

அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த நல்லடியார்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. அல்குர்ஆன் 47:15

சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்

சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்துவிடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா என்று அல்லாஹ் கேட்பான். இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வென்மையாக்கவில்லையா? நீ எங்களை சுவர்க்கத்தில் நுழைவித்து நரகத்தைவிட்டும் எங்களை நீ காப்பாற்றவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று ரஸூலுல்லாஹ் கூறினார்கள். (ஸுஹைபு (ரழி), முஸ்லிம், திர்மிதி)

மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

அல்லாஹ் நம்மை சுவர்க்கத்து வாசிகளாகவும் அவனைக் கண்டு மனமகிழ்வு பெருவோரிலும் ஆக்கி அருள் செய்வானாக! ஆமீன்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

ஜன்னத்தும் ஜாஹிலிய்யத்தும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் பரிபூரணமாக்கி விட்டேன். (5:3)

என்று அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவினால் இறக்கப்பட்ட இந்த வசனத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டாலும் அவ்வசனம் கூறும் மகத்தான செய்தியை மறப்பவர்களாகவும் மறைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ‘மார்க்கத்தை பூரணப்படுத்தி விட்டேன்’ எனும் இந்த வார்த்தை அல்லாஹ்வின் வல்லமையுடன் தொடர்புபட்ட ஒரு விடயமாகும். ஏனென்றால் மகா கருணையுடைவனான அவன் எந்த வித சந்தேகமுமற்ற வெள்ளை வெளேர் என்ற நிலையில் ஒரு உத்தம தூதரின் மூலம் தெளிவாக இன்னும் சொல்லப்போனால் எமக்கு தேவையான அனைத்து விடயங்களையும் ஒன்று திரட்டி யாராலும் குறை காண முடியாத நிலையில் அனைவராலும் எந்தவித சிரமுமின்றி செயல்படுத்தக் கூடியதாக இந்த இஸ்லாம் மார்க்கத்தை அவன் எமக்களித்ததோடு மட்டுமல்ல அதை உலகம் அழியும் வரை அவனே பாதுகாப்பதாக வாக்களித்துள்ளான்.

நாங்கள் பரிபூரணமாக ஈமான் கொண்டுள்ள இந்த அல்லாஹ்வினால் பூரணப்படுத்தி வைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட ‘இஸ்லாம்’ மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதில் ஏன் இத்தனை பிரச்னைகள், பிரிவுகள், கருத்து முரன்பாடுகள். நபி(ஸல்) அவர்களுக்கே வஹியைத் தவிர தன் சொந்த யூகத்தை பினபற்றுவதற்கோ பிறருக்கு ஏவுவதற்கோ முடியாது என்று இருக்கும்போது அதை மார்க்கமாக்குவதற்கு முடியாத போது, இந்த உலகத்திலுள்ள எந்த நாட்டுக்கு அல்லது எந்த கல்வி நிறுவனத்துக்கு அல்லது எந்த அறிஞருக்கு அல்லது எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ மார்க்கத்தில் உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வதை அல்லது பிறருக்கு எத்தி வைப்பதைத் தவிர என்ன அதிகாரம் இருக்கிறது? அல்லது தங்களை வேறுபடுத்தி காட்டிக்கொள்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

இறைவனால் முழுமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு அதற்கு எந்த வித கூடுதல், குறைத்தல் தேவையற்ற நிலையில் அதில் இருப்பதை இருப்பது போல் ஏற்றுக்கொள்வதற்கும், எடுத்து வைப்பதற்கும் இத்தனைப் பிரிவுகளும், பிளவுகளும், முரண்பாடுகளும், போலி வேஷங்களூம் எதற்காக? இதற்காக உலகலாவிய ரீதியில் உயிர்ப்பலிகள், காலவிரயம், பணவிரயங்கள், மாநாடுகள், விவாதங்கள். முஸ்லிம்களே எப்பொழுது நீங்கள் இந்த போலிகளிடமிருந்து விடுபட்டு நீங்களாகவே குர்ஆன், ஹதீஸை அதில் உள்ளது உள்ளது போலவே விளங்கிப் பின்பற்றப் போகிறீர்கள்?

முதலில் குர்ஆன் ஹதீஸ் என்ன கூறுகிறது என்று விளங்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதற்கு மாற்றமான எந்த அறிஞருடைய கருத்தாக இருந்தாலும் சரி, எத்தனை வால்யூம்கள் எழுதப்பட்ட கிதாபுகளாக இருந்தாலும் சரி, அதை புறக்கணித்து விடுங்கள். அப்பொழுதுதான் மற்றைய மதங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தாந்தங்கள், தத்துவங்கள், பொன்மொழிகள் அனைத்தையும் விட இஸ்லாத்தை உயர்வாக போற்றுவதிலும் மதிப்பதிலும், பின்பற்றுவதிலும் அர்த்தமிருக்கும்.

இதற்கு மாற்றமாக இன்றைய அறிஞர்கள், ஆலிம்கள், ஹஜ்ரத்துகள், உலமாக்கள், ஷேக்குகள், குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமான முன்னோர்கள், சூஃபியாக்கள், அவ்லியாக்கள் ஸலஃபியாக்கள் போன்றவர்களின் மனிதக் கருத்துக்களை மார்க்கமாக முன்வைக்கும் நிலையைப் பார்த்தால், நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை இந்த சந்தர்ப்பத்தில் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது என்று பாருங்கள்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

‘தலாக்’ ஓர் ஆய்வு!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மனிதனின் குடும்ப வாழ்வு நரக வாழ்வாக நீடிக்க வகையில்லாது ஒரு முடிவுக்கு கொண்டு வர அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள சாதனம் ‘தலாக்’ விவாக விடுதலை. அந்த தலாக் இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விதவிதமான பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அல்லாஹ் அளித்துள்ள இந்த அனுமதி ‘தலாக்’ – இதன் எதார்த்தமான நிலையை ஆராய்வோம்.

அல்லாஹ்வின் சட்டங்களை ஆராய்வதற்கு சிறந்த உரைகல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன். அடுத்து அந்த அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்துள்ள அல்லாஹ்வின் இறுதித் தூதரின் நடமுறைகள். இதற்குமேல் முடிவு செய்யும் அதிகாரம் யாருக்குமில்லை. மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இன்று இந்த இரண்டு அடிப்படைகளை விட்டு மனித அபிப்பிராயங்களை முன்னோர்களின் பெயரால், இமாம்களின் பெயரால் மார்க்கத்தில் நுழைத்து அதை மதமாக்கியதாகும். அதே வரிசையில் தான் இந்த ‘தலாக்’ பிரச்னையிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பெருந்தொகையினர் மனித சட்டத்தை இறை சட்டமாக ஆக்கியுள்ளனர்.

குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் கடைபிடிக்கும் தங்களை அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை முஸ்லிம்களும், அவர்களை வழிநடத்திச் செல்லும் ஜமாஅத்துல் உலமா சபையினரும் அவர்கள் நடத்தும் வார, மாத இதழ்களிலும் தலாக் சட்டம் இறவனின் தீர்ப்பாகும். இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்று ஏகோபித்து எழுதுகிறார்கள். ஆனால் “நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3 தலாக் ஒரே தலாக்காகவே கணக்கிடப்பட்டது” என்ற உண்மையான சட்டத்தை மாற்றி ‘ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3’தலாக்’ மூன்று தடவையாக கணக்கிடப்பட்டு விவாக முறிவு ஏற்படும்’ என்ற சட்டத்தை அல்லாஹ்வின் சட்டம் என்று சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் சட்டத்தை மாற்ற யாருக்கும் அதிகாரமில்லை என்று சொல்லிக்கொண்டு மனித சட்டங்களை மார்க்கமாக்குவதில்தான் குறியாய் இருக்கிறார்கள். ஏனிந்த முரன்பாடோ தெரியவில்லை. தலாக் விஷயத்தில் மட்டுமல்ல, அவர்களது பெரும்பாலான நிலைகளில், மத்ஹபு, தரீக்கா, ரமழான் இரவுத்தொழுகை இப்படி எண்ணற்ற பிரச்னைகளில் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தியதற்கு முரணாக நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் மனிதர்களால் நடமுறைப்படுத்தப்பட்ட மனித நடைமுறைகளையே இவர்களும் பக்தியுடம் கடைபிடிக்கின்றனர்.

இந்த தலாக் விஷயத்திலும் நபி(ஸல்) நடமுறைக்கு முரணாக ‘ஒரே சமயம் சொல்லும் மூன்று தலாக் செல்லும் என்ற தவறான சட்டத்தை பெரும்பான்மையினராக அவர்கள் சொல்லுவதால் அதுதான் சரி, குறைந்த எண்ணிக்கையினரான குர்ஆன், ஹதீஸ் வழியில் நடப்பவர்கள் சொல்லும் ‘ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் ஒரே தவணையாகவே கணக்கிடப்பட வேண்டும்” என்ற நபியின் நடமுறை ஏற்கத்தக்கதல்ல என்று வாதிடுகிறார்கள். பெரும்பான்மை கொண்டு சட்டம் வகுக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்.

பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (6:116)

நாங்கள் பெரும்பான்மையினர் நாங்கள் கூறுவதுதான் சரி என்று மார்தட்டும் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலையை உற்று நோக்கும்போது இந்த 6:116 வசனம் அவர்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. எனவே மத்ஹபு, தரீக்கா வழி செல்வோர் விஷயத்தில் உண்மை முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காரணம் முன்னோர்களைப் கண்மூடிப் பின்பற்றும் மாற்று மதத்தினருக்கும், அதே போல் முன்னோர்களைப் கண்மூடிப் பின்பற்றி இஸ்லாமிய மார்க்கத்தையும் மதமாக்கியுள்ள முக்கல்லிதுகளுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. ‘ஒரே சமயத்தில் 3 தலாக் சொன்னால் அது செல்லுபடியாகும் என்ற தவறான சட்டத்தையே இந்த பெரும்பான்மை அஹ்லசுன்னத் வல் ஜமாஅத்தினர் கடைபிடிக்கின்றனர். இதை விரிவாக ஆராய்வோம்.

‘தலாக்’ அல்லாஹ்வின் கட்டளை என்ன?

தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்டி அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும் ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான். (2:228)

(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம் அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது – இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். (2:229)

மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன்  மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (2:230)

(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள். ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள். இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள். அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:231)

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும் (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள். (2:232)

முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரிய கைசேதம் என்னவென்றால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தெள்ளத்தெளிவான குர்ஆனையும், ஹதீஸையும் ஏறிட்டுப் பார்க்க அவர்கள் விரும்புவதில்லை; முற்படுவதுமில்லை. மற்ற மதத்தினரைப் போல் இவர்களும் தங்களின் முன்னோர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கத்தான் முற்படுகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு குர்ஆனையும், ஹதீஸையும் நோட்டமிட ஆரம்பித்தால் அவை அவர்களுடம் பேச ஆரம்பித்துவிடும். அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் விட தெளிவான விளக்கத்தை மற்றவர்கள் தரமுடியும் என்று நம்புகிறவர்கள் பெரும் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

இப்போது நாம் எடுத்து எழுதியுள்ள இறைவாக்குகளை கவனமாகப் பாருங்கள். இந்த வசனங்களில் தலாக்கினுடைய எண்ணிக்கை சொல்லப்படவில்லை. ஒரு தலாக். இரண்டு தலாக், மூன்று தலாக் என்று சொல்லப்பட்டிருக்கின்றதா அல்லது முதல் தவணை அல்லது இரண்டாவ்து தவணை, மூன்றாவது தவணை என்று முறை, வேளை, சந்தர்ப்பம் என்று அவகாசம் கொடுப்பதையே உள்ளங்கை நெல்லிக்கனியாக எடுத்துக் காட்டுகிறது.

مَرَّتَانِ மர்தானி என்ற அரபி பதம் வெவ்வேறு அவகாசங்கள் இரண்டைக் குறிக்குமேயல்லாமல், ஒரே நேரத்தில் கூறப்படும் இரண்டு எண்ணிக்கையைக் குறிப்பிடாது. மூன்று வேளை சாப்பாடு, மூன்று வேளை மருந்து என்று சொல்லும்போது ஒரே வேளயில் மூன்று வேளை சாப்பாட்டையும், அல்லது மருந்தையும் சாப்பிடுவது என்று பொருள்படும் என்று கூறுபவர்களை அறிவாளிகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

எனவே கணவன் மனைவி என்ற உறவைப் பிரிக்க அல்லாஹ் வெவ்வேறு சந்தர்ப்பத்தை அளித்துள்ளானேயல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று தலாக்கைச் சொல்லி உறவைப் துண்டிக்கச் சொல்லவில்லை. காரணம் நினைத்த மாத்திரத்தில் உடனடியாக மனைவியை விரட்டிவிட மார்க்கம் அனுமதிக்கவில்லை. என்பதற்கு உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21) கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உhpமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டுடி (2:228) உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21) ஈமான் கொண்டவர்களே! மூஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை முன்னமேயே ‘தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை (33:49) என்ற வசனத்தையும் ஒப்பு நோக்கும் எவரும் மணந்து மனைவியுடன் வாழ்ந்தபின் அந்த மனைவி பிடிக்கவில்லை என்பதால் தவணைகளை புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறி அவளை மனைவி என்ற உறவிலிருந்து பிரித்து விட முடியாது. அது செல்லாது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

எனவே ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தடவை அல்ல, முன்னூறு ‘தலாக்’ சொன்னாலும் அது ஒரே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியதாகவே பொருள்படும். இன்னும் இரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கவே இருக்கின்றன. ஆனால் அதற்கு மாற்றமாக ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே ‘தலாக்’ சொல்லி 3 தவனைகளுக்குறிய காலக்கெடு முடிந்து விட்டால் கணவன் மனைவி என்ற உறவு முறிந்துவிடத்தான் செய்கிறது. காரனம் தவனைகள் முடிந்து விட்டன. அதே சமயம் அந்தப் பெண் வேறொரு கணவனை அடைந்துகொள்ள உரிமை இருப்பதுடன், இதே கணவனை விரும்பினால் மீண்டும் மணமுடித்துக்கொள்ளவும் முடியும். மூன்று தவணைகளில் மூன்று தலாக் சொல்லி பிரிந்து விட்டால் மட்டுமே, வேறு கணவனுக்கு மனைவியாகி வாழ்ந்து பின் அவரிடமிருந்து முறைப்படி தவணைகளில் ‘தலாக்’ பெற்ற பின்பே முன்னைய கணவன் அவளை மீண்டும் மனைவியாகக் கொள்ள முடியும்.

தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். (2:226)

இந்த இறைவாக்கு சொல்வதென்ன? மனைவியுடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்தவரே உடனடியாக மனைவியை விரட்டிவிட முடியாது. நான்கு மாதம் பொறுக்கவேண்டும். அதற்குள் சேர்ந்து கொள்ளவும் அல்லாஹ் வாய்ப்புத் தருகிறான்.

இந்த நிலையில் தவணைகளைப் புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று ‘தலாக்’ சொன்னவுடன் மண முறிவு ஏற்பட்டு விடும் என்று சட்டம் வகுப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மதிப்பவர்களா? சொல்லுங்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று தலாக் ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்ற ஹதீஸை பார்ப்போம்.

நபி(ஸல்) காலத்திலும், அபூபக்ரு(ரழி) காலத்திலும், உமர் (ரழி) அவர்களின் ஆரம்ப இரண்டு ஆண்டுகளிலும் ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்பது ஒரு ‘தலாக்’காகவே (தவணை) கருதப்பட்டு வந்தது; நிதானத்தை மேற்கொள்ள வேண்டிய விஷயத்தில் மக்கள் அவசரம் காட்டுவதைக்கண்ட உமர்(ரழி) அவ்வாறு நாம் அதைச் சட்டமாக்குவோம் எனக்கூறி சட்டமாக்கினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), நூல்:முஸ்லிம்)

இந்த ஹதீஸ் தெள்ளத்தெளிவாக அல்லாஹ்வின் சட்டத்தை அதன் அடிப்படியில் நபி(ஸல்) நடைமுறையை உமர்(ரழி) மாற்றினார்கள் என்பதை தெளிவாக கூறுகிறது. இந்த நிலையில் தலாக் சட்டம் இறைவனின் தீர்ப்பு; இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன? உமர்(ரழி) அவர்கள் மாற்றியமைத்தது தான் அல்லாஹ்வின் சட்டமா? நபி(ஸல்) அவர்களுக்கே இல்லாத, இறைவனின் சட்டத்தை மாற்றும் அதிகாரம் உமர்(ரழி) அவர்களுக்கு இருந்ததாக இவர்கள் நம்புகிறார்களா? ஏனிந்த முரண்பாடு?

மஹ்மூது இப்னு லபீத்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் ஒருவர் தனது மனைவிக்கு ஒரே தவணையில் மூன்று ‘தலாக்’ கூறி விடுகிறார். இதனைக் கேள்வியுற்ற நபி(ஸல்) சினமுற்றவர்களாக எழுந்து விட்டனர். பின்னர், நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா? என்றார்கள் என்று காணப்படுகிறது. இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி, இங்கு மூன்று தலாக்கும் ஒரே நேரத்தில் சொல்லப்பட்டு மணமுறிவு ஏற்பட்டதால் தானே நபி(ஸல்) அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். இருக்கையை விட்டு எழுந்து குர்ஆனோடு விளையாடுகிறாரா என்று சுய விளக்கம் தருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் சுய விளக்கம் சரிதானா?

அல்லாஹ் மூன்று தவணை என்று வெவ்வேறு அவகாசத்தைக் குறிப்பிட்டிருக்க, மூன்று தலாக் ஒரே நேரத்தில் சொன்னவர்  தவணை என்று இருப்பதை எண்ணிக்கையை கணக்கில் கொண்டது குர்ஆனோடு விளையாடுவதாக ஆகாதா? அதனால் நபி(ஸல்) அவர்கள் கோபப்பட்டிருக்க முடியாதா? தலாக் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனத்தில் (பார்க்க 2:226-2:237) 2:231ல் “அல்லாஹ்வின் வசனங்களை கேலிகூத்தாக ஆக்காதீர்கள்” என எச்சரிக்கிறான். இந்த வசனத்தையும் இதர வசனங்களையும் ஆய்ந்து பார்க்கும்போது அல்லாஹ் மூன்று தவனை என்று சொல்லியிருப்பதை அந்த நபர் மூன்று எண்ணிக்கையாக ஆக்கி செயல்பட்டுள்ளதை அறிந்தே நபி(ஸல்) அவர்கள் வேகப்பட்டார்கள் என்று ஏன் கூற முடியாது? அவர்களின் சுய விளக்கத்தை விட இந்த விளக்கமே குர்ஆன் வசங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.

“ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் ஒரே தவணையாகவே கொள்ளப்படும்” என்ற இறை சட்டத்தை மாற்றி ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் மூன்று தவணைகளாகக் கொள்ளப்பட்டு மணமுறிவு ஏற்பட்டுவிடும். கணவன் மனைவி பிரிந்தேயாக வேண்டும் என்ற மனிதச் சட்டத்தை இறைச் சட்டமாகப் பிரகடனம் செய்யும் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டிய பல குடும்பங்களை தங்கள் மனித சட்டத்தால் பிரித்து அக்குடும்பங்களை சிதறடித்த மாபெரும் குற்றத்திற்கு ஆளாகி மறுமையில் அல்லாஹ்வின் பெரும் சாபத்திற்கும், தண்டணைக்கும் ஆழாக வேண்டி வரும் என அவர்களை எச்சரிப்பது ஒவ்வொரு உண்மை முஸ்லிமின் கடமையாகும். எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு உண்மையிலேயே அடிபணிந்து நடக்க துஆச் செய்கிறோம்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த