இஸ்லாம்தளம்

மார்ச்13, 2009

திருமணம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தமாகும். மாற்று மதத்தில் கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவது இஸ்லாத்தில் இல்லை. திருமணம் புரியவுள்ள ஆணும் பெண்ணும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் தங்களது பரிபூரண சம்மதத்தை தெரிவிக்க வேண்டியது மிக அவசியமாக வலியுறுத்தப்பட்ட விஷயமாகும்.

முன்பே மணமுடிக்கப்பட்டு கணவனை இழந்துவிட்ட விதவையும், அல்லது முந்திய கணவனால் விவாக முறிவு (தலாக்) கொடுக்கப்பட்ட பெண்ணும் தனக்காக இத்தா காலம் முடிந்ததும் மறுமணம் முடிக்க விரும்பினால் அப்பெண்ணின் முழு சம்மதத்தையும் பெற்றே மண முடித்து வைக்கவேண்டும். இப்பெண்களை அயிம்மா என்றோ தய்யிபா என்றோ அழைப்பர்.

கண்ணிப்பெண்ணாக இருப்பாளேயானால் அவள் தனது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். அவளுக்கு விருப்பமில்லையெனில் கட்டாயம் சொல் மூலம் தெரிவிக்க வேண்டும். அவள் எந்த பதிலும் தராமல் மெளனம் சாதித்தால் அது சம்மதம் என்ற பொருளைத் தரும். இப்பெண்களை ‘பாகிரா’ என்று அழைப்பர்.

‘அயிம்மா’ பெண்களுக்கு அவர்களது சம்தமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள். கன்னிப் பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணாத்தால்) தெளிவாகச் சொல்ல வெட்கப்படுவாளே! என்று சிலர் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவளது மெளனம் சம்மதமாகும் என்றார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா, அப்பாஸ், அபூஹுரைரா(ரழி- அன்கும்) நூல்:புகாரி முஸ்லிம் அபூதாவூத், நஸயீ,திர்மிதி, இப்னுமாஜ்ஜா

இந்த நபிமொழி மூலம் ஏற்கனவே திருமணம் செய்த பெண்கள் தங்களது அடுத்த திருமணத்துக்கு தெளிவான சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்பதை அறியலாம். கன்னிப்பெண்கள் தங்களது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். சம்மதம் இல்லையெனில் நிச்சயமாக வாய்விட்டு சொல்லியே ஆக வேண்டுமென்பதை உணரலாம். இவ்விதமாக மணப்பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தி வைக்கப்படும் திருமணம் இஸ்லாத்தில் செல்லத்தக்கதல்ல. அது முறிக்கப்படும்.

கன்சா(ரழி) என்ற அம்மையார் அறிவிக்கிறார்கள்; எனது தந்தை கிதாம்(ரழி) அவர்கள் எனக்கு பிடிக்காத இடத்தில் மணமுடித்துக் கொடுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இதே நிகழ்ச்சியை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (முஅத்தாமாலிகி, புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, பைஹகீ)

இவ்விதம் தனது தந்தையின் வற்புறுத்தலில் நடத்தப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் மூலமாக ரத்து செய்யப்படவே கன்சா(ரழி) அவர்கள் அபூலுபாபா(ரழி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள் என்ற விபரம் அப்துர்ரஹ்மான் பின் யஜீத்(ரழி) அறிவிக்க இப்னுமாஜ்ஜா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் ஒரு கன்னிப்பெண் சம்மதமின்றி அவளது தந்தையால் நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்ததாக அபூதாவூதில் இப்னு அப்பாஸ்(ரழி) கூற பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே எந்த முஸ்லிம் பெண்ணையும் அவளது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்க இஸ்லாத்தில் இடமில்லை. அப்பெண்ணைப் பெற்றெடுத்த தந்தைக்கும் அனுமதியில்லை என்பதை தெளிவாக உணர்ந்து பெற்றோர்கள் நடந்து கொள்வது அவசியமாகும்.

மணமகளுக்குரிய தகுதிகள்

நீ நல்லொழுக்கமுள்ளவளை மணம் புரிவதன் மூலம் வெற்றியடைந்துகொள்! என நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)

மணமகனுக்குரிய தகுதிகள்

எவருக்கு திருமண வயது வந்து விட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களையும், வெட்கஸ்தலங்களையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது. எவருக்கு திருமணம் செய்ய வசதிபடவில்லையோ அவர் நோன்பு வைத்துக்கொள்ளட்டும். (அறிவிப்பு: இப்னு மஸ்வூத்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ, தாரமி, பைஹகீ, அஹ்மத்)

இந்நபிமொழி ஆண்களுக்கு கூறப்பட்டதாகும். மணமகன் பெண்ணுக்காக மஹர், திருமண செலவு, வலீமா விருந்து என பல செலவு செய்யவேண்டியவனாகிறான். அது மட்டுமின்றி திருமணம் முடிந்த நேரம் முதல் தனது மனைவிக்காக உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். எனவேதான் மணமுடிக்கும் மணப்பெண்ணுக்கு தனது உடல் ரீதியான சுகத்தையும், பொருளாதார ரீதியான சுமையையும் சுமக்க தகுதியுடையவன் தனது திருமண வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம்; அதற்கான வசதியில்லாதபோது நோன்பு வைத்து தனது இச்சையை அடக்கவும் நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள்.

எங்கள் மனைவிக்கு நாங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் யாவை? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘நீ உன்ணும்போது அவளுக்கும் உணவளிக்க வேண்டும்; நீ ஆடை அணியும்போது அவளுக்கு ஆடை அணிவித்தல் வேண்டும்; அவளது முகத்தில் அடித்தலாது’ என நபி(ஸல்) அறிவுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா(ரழி) நூல்: அபூதாவூத்)

எனவேதான் ஒருவேளை செல்வ செழிப்புள்ள மனமகள் ஒருவருக்கு மனைவியாக அமைந்தாலும் அவளது சொத்து பங்கில் அவளது உரிமையின்றி கணவன் கைவைக்க அனுமதியில்லை என இஸ்லாம் கூறுகிறது. மண முடிக்க நாடும் மணமகன் தான் மணக்கும் பெண்ணை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாக்கும் தகுதியை பெற்றிருப்பது அடிப்படை தகுதியாகும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

இன்றைய பெண்களின் முக்காடு!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]

அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு ‘அஸ்மாவே’ நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது’ என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்

கீழ்கண்ட கட்டுரையில் வரும் சம்பவங்களும், நபர்களும் உண்மையே அன்றி கற்பனை அல்ல. இக்கட்டுரையில் வரும் சம்பவங்கள், நபர்கள் உங்களை போல் இருந்தால் அதற்கு தாங்களே பொறுப்பு. நாங்கள் அல்ல. நமது சகோதரிகளின் அலட்சியத்தால் அல்லது கவன குறைவால் இது கூட சரியான வார்த்தையாக தோன்றவில்லை. இப்படி கூட நடக்குமா? என்ற எண்ணத்தில் செயல்படுவதால் இப்படி நம்மை எண்ண வைக்கிறது. இதை படித்துவிட்டு சகோதரிகளிடம் இருந்து காரசாரமான அம்பு மழைகளை எதிர்பார்க்கிறோம். நாம் குறை சொல்வது நோக்கமல்ல. நம்மை நாமே பரிசோதனை செய்வதே நோக்கம்.

முக்காடு என்பது தமிழ் பேசும் சகோதரிகளால் பல வண்ணங்களில் துப்பட்டி, அரை துப்பட்டி, முழு துப்பட்டி, கூசாலி துப்பட்டி, புர்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கற்பனையான வடிவம் கொடுத்து அதை அணிவதையே இஸ்லாமிய உடையாக கருதுகிறார்கள். உண்மையில் இஸ்லாமிய உடை என்று ஒன்று இல்லை. அந்தந்த நாடுகளில் சகோதரிகள் அங்குள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இறைத் தூதர் சொன்ன வழியில் அணிவதே இஸ்லாமிய உடையாகும். முகம், இரு கைகள் மட்டும் தெரிய மற்ற உடல் உறுப்புகளை மறைப்பது, இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது அனைத்தும் இஸ்லாமிய உடையாகும். அது எந்த வண்ணத்தில், வடிவில் இருந்தாலும் சரியே. இக்கட்டுரையின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மை நிலையை உணர்த்தவே இவ்வாறு அழைக்கிறோம்.

முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

1.பார்த்தால் முக்காடு

இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !!!

2.கிராமிய முக்காடு

முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?

3.கிழடு கட்டை முக்காடு

இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) ‘ஹாயாக’ போய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!

4.சீருடை முக்காடு (Uniform)

இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?

5.சவுதி முக்காடு

இவர்கள் சவூதி அல்லது  மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு  செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?

6.ஏர்போர்ட் முக்காடு

இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.

இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம். முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒளிவு மறைவு அற்ற சுதந்திரமாக வாழும் நாடுகளில் ஒழுக்க கேடுகளின் பட்டியலை எழுதினால் அது நீண்டு கொண்டே போகும்.

கல்யாணமில்லா குடும்பங்கள், தகப்பன் இல்லா குழந்தைகள், தகப்பன் பெயர் அல்லா முகமறியாத குழந்தைகள், பாசத்திற்கு அழும் குழந்தைகள், பிஞ்சிலே பழுத்த கிழங்கள், மணமாவதற்கு முன்பே குடும்ப உறவு காதல் பெயரில், முதியோர் இல்லங்கள் இப்படி எத்தனை எத்தனையோ…..

முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.!?

படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம். கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழும் மேலை நாடுகளில் முஸ்லீகள் தாங்கள் மட்டும் முக்காடு அணிந்தால் போதாது தங்களது குழந்தைளுக்கும் பள்ளிக்கூடத்தில் முக்காடு போட அனுமதி வேண்டும் என போராட்டம் செய்கிறார்கள், வாகன உரிமை சான்றிதழில் முக்காடுடன் உள்ள படம்தான் வேண்டும் என அரசாங்கத்தின் மீது வழக்கு போடுகிறார்கள். ஒரு பிரபலமான தமிழ் நடிகை படப்பிடிப்புக்கு வரும்போது தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டு முக்காடு இட்டு வருகிறாள். ஏன் என்ன காரணம் என கேட்டதற்கு மக்களின் கண்களில் இருந்து தப்பவே என்கிறார் !!!!!!

நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.

“உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில் சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள்.கற்களையோ ,கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, நீங்கள் வைரம் என்றால் முக்காடு இடுங்கள். இல்லை..இல்லை… நாங்கள் கூலாங்கற்கள் என்றால்…  சகோதரிகளே நீங்கள் வைரமா ??? கூலாங்கற்களா !!!! “

பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை போடாதே என சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் உணர்ந்து போடு என்று கூறத்தான் ஆசைப்படுகிறேன்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

புதியதொரு சகாப்தம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம் உலகம் இன்று பல்வேறு பிரிவுகளாகப் பிளவு பட்டுள்ள சூழ்நிலையை நாம் காண்கிறோம். அவரவர் தம்மனம் போன போக்கில் செல்ல அவரவர் தம் முன்னோர் காட்டிய வழியில் செல்ல விரும்புவதால் பல பிரிவுகள் இந்த இந்த சமுதாயத்தில் மலிந்து காணப்படுகின்றன

கடந்த காலங்களில் இஸ்லாத்தின் பெயரால் இந்த சமுதாயத்தில் நுழைந்துவிட்ட தவறான கொள்கைகள், ஆதாரமற்ற வணக்க முறைகள், அறியாமையின் காரணமாக புரையோடிப் போய்விட்ட மூட நம்பிக்கைகள், போலிச் சடங்குகள் ஏராளம். மக்கள் ஷிர்க்கிற்கு வெண்சாமரம் வீசி மார்க்கத்தில் “பித்அத்”களை நுழைத்து இஸ்லாம் மார்க்கத்தை சடங்கு  மூட்டையாக ஆக்கிவிட்டார்கள். அல்லாஹ்வும், அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் நமக்கு காட்டிய அந்த ஒரே வழியைத் தவறவிட்டு பலவழிகளில் மக்கள் செல்வதை காண்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ். இன்று இஸ்லாமிய வரலாற்றில் புதியதொரு சகாப்தம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக மார்க்கத்தை வைத்து வயிறு வளர்க்கும் நிலையையே இஸ்லாமிய உலகம் கண்டு வந்தது. குர்ஆனும், ஹதீஸும் விலைப்பேசப்பட்டு வந்தன. பணம் பெற்றுக்கொண்டு மார்க்கம் உபதேசிக்கப் பட்டு வந்தது. மார்க்கம் பிழைக்கும் வழியாகவும், மார்க்கத்தை உபதேசிப்பவர்களில் பெரும்பாலோர் தங்கள் உலக ஆதாயத்தையே குறியாகவும் கொண்டிருந்தனர். இந்த இழி நிலை மாறி தங்கள் கையிலிருக்கும் பணத்தைச் செலவழித்து மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்கும் இவர்கள் அல்லாஹ்வின் பொருத்ததை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கப் புறப்பட்டிருக்கின்றார்கள்.

மக்களிடையே மார்க்கம் மதமாக்கப்படுவதற்கு மூல காரணங்களாக இருக்கும் முன்னோர்களை கண்மூடிப் பின்பற்றும் பழக்கம் மண்மூடிப்போக ஜிஹாத் செய்யவும் காலங்காலமாக வாழையடி வாழையாக பரம்பரை பரம்பரையாக நடந்துவரும் காரியங்கள் என்ற நம்பிக்கையில் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக சமுதாயத்தில் வேறூன்றிவிட்ட அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழியவும் சத்திய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து, பின்பற்றவும் மார்க்கத்தை பிழைப்புக்காக பயன்படுத்தாமல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை மனித யூகங்கள் கலக்காமல் அனைவரும் புரிந்திட இஸ்லாத்தை முழுமையாக நிலை நாட்ட அயராது உழைக்க உறுதி பூண்டுள்ளார்கள்.

ஆகவே இவர்களின் கூச்சலிற்கு வளைந்து நெளிந்து குனிந்து போக வேண்டிய அவசியம் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. குர்ஆனும், நபிவழியும் எவற்றை மார்க்கமாக போதிக்கின்றனவோ அவற்றை நெஞ்சுயர்த்திச் சொல்ல இவர்கள் அஞ்சப்போவதில்லை.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பெற்றால்தான் பிள்ளை!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை, உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை! இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான். அவர்களை அவர்களின் தந்தை பெயரை சேர்த்தே அழையுங்கள் அதுவே அல்லாஹ் விடத்தில் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்களை கொள்கையில் சகோதரர்களாகவும், நண்பர்களாகவும் ஆவார்கள். தவறுதலாக நீங்கள் கூறிவிட்டால் உங்கள் மீது குற்றமில்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவது குற்றமாகும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கிறான். அல்குர்ஆன் : 33: 4, 5

மேலே கூறப்பட்டுள்ள வசனத்தை ஆய்ந்து படியுங்கள். இறைவனாகிய அல்லாஹ்வின் வசனங்களில் நம்பிக்கை கொண்ட நாம் இவ்வசனத்தின் அடிப்படையில் நடக்கிறோம் என்றால், நிச்சயமாக இல்லை. எத்தனையோ முஸ்லீம்கள் பிறரின் பிள்ளைகளை தத்து எடுத்து வளர்க்கின்றனர். அப்பிள்ளைகளை தம் பிள்ளைகள் எனக் கூறுவதோடு மடடுமில்லாமல் தம் பிள்ளைகளுக்கு தரவேண்டிய அனைத்து உரிமைகளைகளையும் கொடுத்தும் மற்றும் எடுத்தும் வருவதை காண்கிறோம். இது தவறு என்பதை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

நாம் ஒரு குழந்தையை தத்தெடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. மாறாக அக்குழந்தையை தன் குழந்தை எனக் கூறுவதைத்தான் தவறு என்கிறது. காரணம் ரத்த பந்தங்களை மாற்றிக்கூறுவதை இஸ்லாம் வெற்று வார்த்தைகள் அதாவது பொய் எனக் கூறுகிறது. பிறரின் பிள்ளைகளை தம் பிள்ளைகள் எனக் கூறுவது பொய்தானே! ஆகவே அப்பிள்ளைகளை அவர்களின் தந்தை பெயருடன் அதாவது (இன்ஷியலுடன்) அழையுங்கள். பள்ளியில் சேர்க்கும் போதும் சரி திருமணம் போன்ற சடங்குகளிலும் சரி தந்தையின் பெயரை சேர்த்தே குறிப்பிட வேண்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும்.

அவர்களின் தந்தையை அறியமுடியாத அநாதைக் குழந்தையாய் இருந்தால். அதாவது மருத்துவ மனையில் அல்லது தற்போது தமிழக அரசால் நடத்தப்படும் தொட்டில் குழந்தை போன்ற இடங்களில் இருந்து குழந்தையை எடுத்து வளர்த்தால் அவர்களை சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் பாவிக்க வேண்டும் அல்லது நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்க வேண்டும்.

தந்தை பெயர் இல்லாவிட்டால் பள்ளிக்கூடத்தில் சேர்க்கமாட்டார்கள் என்று வாதம்புரிவோர் எந்தவொரு படிவத்திலும் தந்தை அல்லது காப்பாளர் என எழுதியிருப்பதை அறியதவராகவே இருக்கின்றனர். மேலும் பிறரின் பிள்ளை எனக் கூறி வளரப்பதால் அப்பிள்ளையின் மனம் புண்படும் என வாதிப்போர், பிற்காலத்தில் அவனுக்கு புத்தி வந்த பின் தெரிய வரும்போது ஏற்படும் மன உளைச்சலை எண்ணிப்பார்க்க வேண்டாமா?

இயல்பிலேயே மனிதன் குழந்தையில்லாத போது தத்து எடுத்து வளர்ப்பான் தொடர்ந்து இவனுக்கு பிள்ளைப்பேறு கிடைத்தபின் தத்துப்பிள்ளையை வேறுபடுத்திப்பார்ப்பான் இது மனித இயல்பு. இப்படி நடத்தப்படும் போது அப்பிள்ளைக்கு மன வருத்தம் ஏற்படும். எனவே ஆரம்பத்திலிருந்தே பிறரின் பிள்ளைதான் என்பதை தெளிவு படுத்தி விடவேண்டும். அதுமட்டும் இல்லாமல் சொத்துப் பங்கீடு எனும் பாகப்பிரிவினையில் கூட தத்துப் பிள்ளைகளுக்கு எந்த உரிமையையும் இஸ்லாம் வழங்க வில்லை.

காரணம் பெற்ற பிள்ளைகள் இருக்கும் போது தத்துப் பிள்ளைகளுக்கு பங்கு தரும்போது பிரச்சினைகள் வரும் வளர்த்தது போதாதா சொத்து வேறு தரனுமா? என பெற்ற பிள்ளைகள் கேட்பார்கள். பிரச்சினைகள் பெரிதாகி பல்வேறு தவறுகளுக்கு வழிவகுக்கும். ஏனவே தான் இஸ்லாம் எந்த சட்டத்திலும் தெளிவான முடிவுகளை அறிவிக்கிறது. ஆனால் தனக்குரிய மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தன் விருப்பத்தின்படி யாருக்கும் தர்மம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது. அதனடிப்படையில் வளர்ப்புப் பிள்ளைகளுக்கு தம் சொத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கை எழுதி வைக்கலாம். இருப்பினும் எழுதி வைக்காவிட்டால் வளர்ப்புப் பிள்ளைகளுக்கு சொத்திலிருந்து எந்தப் பங்கும் சேராது என்பதையும் கவனத்தில் கொள்க.

ஆகவே பிள்ளைகளை எடுத்து வளர்ப்போரும், வளர்வோரும் தங்கள் நிலையை அறிந்து இறைவனின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். பிறரிடம் வளரும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர் உயிரோடு இருந்தால் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளையும். உரிமைகளையும் செவ்வனே நிறைவேற்ற வேண்டும்.

தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி மனிதனுக்கு வலியிறுத்தினோம்.  அல்குஆன் 46 :15 என இறைவன் தன் திருமறையில் கட்டையிடுகிறான்.

ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு இறைதூதர் (ஸல்) அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் (ஸல்) இரண்டாவது முறையும் உம்முடைய தாய்  என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் (ஸல்) உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும்  என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லீம்.

உலகில் அனைவரைவிடவும் தாய் மதிக்கப்படும் உறவு. எந்த அளவுக்கு என்பதை மேற்கூறிய ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது. ஆகவே! தன் விஷயத்தில் சரியாக நடக்காத தாயாக இருப்பினும் இதே நிலைதான்.காரணம் நல்ல தாய் கெட்ட தாய் என இறைவனோ, இறைத் தூதரோ வேறுபடுத்திக் கூறவில்லை!.

ஒரு சிலர் தத்துப்பிள்ளையை சொந்த பிள்ளையைவிட அதிகமாக நேசிப்பதும் கண்காணிப்பதும் உண்டு. இது தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும். அதுபோலவே தம்மை எவரேனும் எடுத்து வளர்த்து ஆளாக்கினாலும் கூட பெற்ற தாய்- தந்தை இருப்பின் அவர்களை கவனிப்பதும் தம் கடமை என பிறரிடம் வளர்ந்த பிள்ளைகள் அறிய வேண்டும்.

இதில் மாறு செய்யக்கூடியவர்கள் நிச்சயமாக ஏக இறைவனின் தண்டணைக்கு உள்ளாவார்கள் என்பதை அஞ்ச வேண்டும். இன்னும் சில பகுதிகளில் திருமணமான பிறகு மகனை இழக்கும் பெற்றோரும் உண்டு. இதற்கு மார்க்க அறிவில்லாத சம்மந்திகளும் மருமகள்களுமே காரணம் என்பதை நாம் விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே எண்ணுகிறேன். தாயிடம் இருந்து பிள்ளையை பிரிப்போர் பின் வரும் ஹதீஸை படித்து திருந்த வேண்டும்.

எவர் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் பிரிவினையை உண்டு பண்ணி விடுகிறாரோ, அவருக்கு பிரியமானவர்களை விட்டு மறுமையில் இறைவன் பிரிவினையை ஏற்படுத்தி விடுவான். என இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம் : அஹ்மத்.

பிள்ளைகளுடைய உரிமைகளைப் பெற தகுதியானவர்கள் பெற்றோரே! அதில் குறிப்பாக தாய் முதல் மூன்று இடங்களை பெற்றவராக இருப்பதால் பெற்றால்தான் பிள்ளையா? என்றெல்லாம் முரட்டு வாதம் புரிவோர் இறைவனிடம் கூற எந்த பதிலை தயார் செய்து வைத்திருக்கின்றார்களோ தெரிய வில்லை.

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பெற்றால்தான்பிள்ளை என்பதை விளங்கி அதனடிப்படையில் நடப்போமாக! அதற்கு ஏக இறைவன் உதவியும் செய்வானாக !

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

கருத்து மோதல்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம்களில் முன்னோர்களையும், இமாம்களையும் கண்மூடிப் பின்பற்றுபவர்கள் ஒருபக்கம்.

குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம்.

இரு சாரருக்கும் பத்திரிகைகள் இருக்கின்றன. அவர்களுடைய அபிமான பத்திரிகையை மட்டும் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தப் பத்திரிகை சொல்வதுதான் இஸ்லாம்; கிணற்றுத் தவளைக்குக் கிணறுதான் உலகம். மனிதர்கள் தவறிழைப்பவர்கள். பத்திரிக்கை இஸ்லாத்திற்கு முரணான கருத்தையும் போதிக்கும். அதைச் செயல்படுத்தினால் மறுமையில் அவர்களைப் பாதிக்கும். கருத்தை உரசிப்பார்க்க உரைகல் தேவை. அதற்கு நேர் முரணான பத்திரிக்கைதான் உரைகல். அப்போதுதான் சத்தியத்தையும், அசத்தியத்தையும் இனம் காண முடியும். இவர்கள் கண்களை மூடிக்கொண்டு அசத்தியத்திற்குக் கால் பிடிப்பார்கள். சத்தியத்தை காலால் மிதிப்பார்கள். இப்படியே இவர்களது வாழ்க்கைப் பயனம் முடியும்; கால கடந்த ஞானம் பெறுவார்கள் மறுமையில்

“நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில் ஆ, கை சேதமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே என்று கூறுவார்கள்.

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டார்கள்.

எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களை பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக (என்பர்) (அல்குர்ஆன் 33:66-68)

வழிகேட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றொருவர் முரண்பட்ட இரு கருத்துகளை செவியுறுகிறார். இவர்கள் சொல்வதுதான் என்ன? என்ற எண்ணம் முதலில் தோன்றுகிறது. விளைவு குர்ஆன், ஹதீஸ் ஒளியில் சத்தியம் ஒளிர்கிறது. அசத்திய இருள் அகல்கிறது. இறுதியில் தான் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். இவர்களைப் பார்த்து அல்லாஹ் நன்மாராயம் கூறுகிறான்.

(என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயம் கூறுவீராக! அவர்கள் சொல்லை உபதேசங்களைச் செவியேற்று அவற்றிலுள்ள அழகானவற்றைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தான். இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.  (அல்குர்ஆன் 39:17,18)

ஒரு விஷயத்தைப் பற்றிய பலருடைய பேச்சுகள், எழுத்துகள் நம்மை சிந்திக்க வைத்து சுய சிந்தனைக்கு வழி வகுக்கும்.

பல்வேறு பத்திரிகைகளைப் படிக்கும்போது ஒரு விஷயத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களை சமுதாயம் தெரிந்து கொள்ளும். சிந்திக்கத் தலைப்பட்டு சுய சிந்தனைக்குத் தயாராகும். சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறிந்து கொள்ளும் சமுதாயம் இதன் அடிப்படையில் உருவாகி விட்டால் யாரும் எதைச் சொல்லியும் ஏமாற்ற முடியாது.

கருத்து மோதலால் சுய சிந்தனை வளர்கிறது; தக்லீத் (கண்மூடிப் பின்பற்றல்) தேய்கிறது.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த