இஸ்லாம்தளம்

மார்ச்12, 2009

விண்ணுலகப் பயணம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

سُبْحَانَ الَّذِى أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الاْقْصَى தன் அடியாரை (மும்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர் ஆன் 17:1)

அண்ணல் நபி அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்குகிறான். நபிகள் நாயகம் அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.

அல்லாஹ்வின் ஆற்றலில் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் இதில் எள்ளளவும் ஆச்சரியம் இருக்க முடியாது. இதில் சந்தேகம் கொள்ளும் எவனும் முஸ்லிமாக இருக்கவும் முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் “மிராஜை” கட்டாயம் நம்பியே ஆகவேண்டும்.

இன்றைய இஸ்லாமியர்கள் மிஃராஜ் பற்றி கொண்டுள்ள தப்பான அபிப்ராயங்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.

மிஃராஜ் எந்த மாதம் எந்த நாள் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். அறிஞர் “ஸதீ“ அவர்கள் “துல்கஃதா மாதத்தில் ஏற்பட்டது“ என்கிறார்கள். இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் ரபீவுல் அவ்வலில் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக நபித்தோழர்கள் ஜாபிர் இப்னு அப்பாஸ்(ரலி) இருவரும் ரபீவுல் அவ்வல் 12-ல் மிஃராஜ் ஏற்பட்டதாக இயம்புகின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரக் குறிப்போடு “ரஜப் 27-ல் நடந்தது “ என்கிறார்.

மிஃராஜ்  எந்த மாதம் ஏற்பட்டது என்பதில் கருத்து  வேறுபாடு  தோன்றக் காரணம் என்ன? மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டும் என்பதைத் தவிர அந்த நாளுக்கு என்று விசேஷத் தொழுகையையோ, விசேஷ நோன்பையோ நபிகள் நாயகம் அவர்கள் சஹாபாக்களுக்கு கூறவில்லை.

ஏதேனும் ஒரு விசேஷமான அமலை அவர்கள் தம் தோழர்களுக்குச் சொல்லியிருந்தால் நபித்தோழர்கள் அனைவரும் அந்த அமலைச் செய்வதற்காக அந்த நாளை நினைவு வைத்திருப்பார்கள். இரண்டு, மூன்று அபிப்ராயங்கள் கொண்டிருக்க முடியாது. ஆஷுரா நாளில் நபிகள் நாயகம் அவர்கள் நோன்பு நோற்கக் கூறியதால் அந்த நாள் எது என்பதை நன்றாகவே சஹாபாக்கள் நினைவில் வைத்திருந்தார்கள். முஹர்ரம் பத்தாம் நாள் தான் ஆஷூரா என்று ஒரு குரலில் சொன்னார்கள். மிஃராஜைப் பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியை நம்ப வேண்டும். எந்த தேதியில் நடந்தது என்று முடிவு கட்டுவது அதற்காக நாமாக விசேஷ வணக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) ஜாபிர்(ரலி) உர்வா, ஜுஹ்ரி ஆகிய இமாம்கள் ரபியுல் அவ்வலில் மிஃராஜ் ஏற்பட்டதாக உறுதி செய்கின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரத்துடன் ரஜப் 27-ல் மிஃராஜ் ஏற்பட்டது என்கிறார்.

பலமான ஆதாரத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படும் ரபியுல் அவ்வலை விட்டு விட்டு, பலவீனமான ஆதாரத்துடன் அறிவிக்கப்படும் “ரஜப் 27”ஐத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

அதன் சிறப்பை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக, அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தராத புதுப்புது வணக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இன்று மிஃராஜ் நல்லதொரு வியாபாரமாக ஆகிவிட்டது. பயான் செய்வோருக்கு நல்ல அறுவடை. “பெண்ணின் முகம், குதிரை உடல் “ கொண்ட விந்தைப் பிராணியை பிரிண்ட் செய்து இது தான் புராக் என்று வ்ிற்பனை ஒரு பக்கம். அதனை வீடுகளில் மாட்டிக் கொண்டு தாங்களே பூரிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். மிஃராஜின் வணக்கங்கள், விசேஷத் தொழுகை, விசேஷ நோன்பு என்று அதன் முறைகளை விவரிக்கும் பிரசுரங்களின் வியாபாரம் இன்னொரு பக்கம். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த விசேஷ வணக்கங்களை கண்ணாடி பிரேம் போட்டு தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் இன்னொரு பக்கம்.

பள்ளிவாசல்களின் அலங்காரம், பூக்கட்டுகள், புத்தாடை, நெய்ச்சோறு என்று நன்றாகவே மிஃராஜை ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவில் விடிய விடிய விழித்து விழாக் கொண்டாடி விட்டு சுபுஹுகள் தொழ பள்ளியில் இமாமையும் மோதினோரையும் விட்டு விட்டு செல்லும் ஊர்கள் எத்தனை?

அன்புமிக்க இஸ்லாமியர்களே! மிஃராஜை நம்புங்கள்! அது நமக்கு உணர்த்தும் பாடத்தை படியுங்கள்! இறைவனின் ஆற்றலை, இறை தூதரின் சிறப்பை, தொழுகையின் மகத்துவத்தை மனதில் இருத்துங்கள்! இது போன்ற ஏமாற்று வலைகளில் விழாதீர்கள். முஃமீன்களின் மிஃராஜாக இருக்கின்ற மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளை தொழுகையை தொழுது வருவோமாக! மேலும் படிக்க மிஃராஜ்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

ஏழைகளின் பங்கு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

   உங்களில் எவர் செயல்களால்
மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்;
மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 67:2

    வல்லோனாகிய ஏக
இறைவன் இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரிட்சை வாழ்க்கை என்று அல்குர்ஆனில் தெளிவு
படுத்தியுள்ளான். எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி,
அதிகாரம் வகிப்பவன் அதற்குக் கட்டுப்படுபவன் போன்ற ஏற்றத்தாழ்வுகளுடன் நடமாட
விட்டிருப்பது சோதனையின் காரணமாகவே. இவ்வுலகம் இயங்கி சோதனையான பரிட்சை முடிவடைய
வேண்டுமென்றால் இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் அவசியம் என்பதை அறிஞர்கள் மறுக்க
மாட்டார்கள்.

    கணக்கில் அடங்காத
மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளை கொண்டதுதான் இவ்வுலக
வாழ்க்கை. மிக அற்பமானதொரு வாழ்க்கையை அறியும் உண்மை அறிஞர்களே இந்த உண்மையை
ஏற்கமுடியும். தினசரி கோடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை
நோட்டுகளை புறக்கணிக்கத்தக்க நிலையை உணரமுடியும். அன்றாடம் சில சில்லறை காசுகளை
மட்டும் பார்த்து வருபவனுக்கு அதுவே பெரும் சொத்தாகத் தெரியும்.

    இதே போல்
நித்தியமான கணக்கிலடங்காத மறு உலக வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கே
இவ்வுலகின் வாழ்க்கையின் அற்பம் புரியும். மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை
இல்லாதவர்கள் அழிந்து போகும் அற்ப இவ்வுலக வாழ்க்கையைவிட பெரியதொரு நிரந்தர
வாழ்க்கை இருப்பதை ஏற்க முடியாதுதான். அவர்களுக்கு இவ்வுலகமே சர்வமும்.

    தாயின்
சின்னஞ்சிறிய கருவறையில் குழந்தை இருக்கும்போது, அங்கிருந்து ஒரு பிரமாண்டமான
உலகறைக்குப் போக இருக்கிறோம் என்பதை எப்படி நம்ப முடியாமல் இருக்கிறதோ அதேபோல்,
இந்த உலகறையை விட்டும் அதைவிட பன்மடங்கு பிரமாண்டமான மறு உலகறைக்குப்போக
இருப்பதையும் மனிதன் நம்பாமல் இருக்கிறான். ஆனால் கருவறையிலிருந்து இவ்வுலகறைக்கு
மனிதன் வந்தது பெரிய உண்மையோ சர்வ நிச்சயமோ, அதேபோல் மனிதன் இவ்வுலகறையிலிருந்து
மறு உலகறைக்கு செல்வதும் மிகப்பெரிய உண்மையாகும். சர்வ நிச்சயமாகும்.

    இவ்வுலகின்
ஆசாபாசங்களுக்கும், சொத்து சுகங்களுக்கும், பணம் காசுக்கும் அடிமைப்பட்டுக்
கிடப்பவன், மறுமையின் அழியாத நித்தியமான பதவிகளையும், சுகங்களையும்
அறியாதவனாகத்தான் இருப்பான். அந்த அளவுக்கு அவனது அக, புற கண்கள் குருடாகத்தான்
இருக்கும். எனவே அவனிடமே கஞ்சத்தனமும், புறக்கணிக்க வேண்டிய அற்ப்பத்தனம்
காணப்படும்.

    மறுமையின் நிரந்த
வாழ்க்கையை உண்மையில் அறிந்து வைத்திருப்பவன், அவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால்
கொடுக்கப்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காகத்தான்
கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின் பங்கும்
இருக்கிறது. அவற்றை முறைப்படி கணக்கிட்டு உரியர்வகளிடம் ஒப்படைத்து விடவேண்டும்.
அப்படி ஒப்படைக்கத் தவறினால் அவன் நிலை கேடாகவே முடியும் என்பதை உணர்ந்து
கொள்வான்.

    இவ்வுலக சொத்து
சுகங்களை பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் கஞ்சதனத்தால்
அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான்
போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல; அவற்றை உரியவர்களுக்கு கொடுக்காமல் கட்டிக்
காத்துக் கிடந்ததற்குரிய தண்டனையை இனிமேல் தான் அடையப் போகிறான். ஆயினும்
இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாக
கண்டபின்னர்தான் அழுது புழம்பப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன்
தராது.

    ஏழை, எளியவர்கள்
மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக
அவன் சேர்த்து வைத்த தங்கமும், வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது
நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள
சொத்திலிருந்து ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களின் பங்கை முறைப்படி
செலுத்துவதன் அவசியம் பற்றியும், அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும்
கீழ்வரும் குர்ஆன் வசனங்களைப் பார்த்து உணர்வு பெற வேண்டியது ஒவ்வொரு ஆண் பெண்மீது
கடமையாகும். ஜகாத் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் சில
2:43,83110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5

    இன்னும் எவர்கள்
பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில்
செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு
என்று நன்மாராயம் கூறுவீராக!. அல்குர்ஆன் 9:34

    (நபியே! அவர்களுக்கு
நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை)
நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும்
விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் (இன்னும்) ”இது தான் நீங்கள்
உங்களுக்காகச் சேமித்து வைத்தது ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப்
பாருங்கள்” (என்று கூறப்படும்). அல்குர்ஆன் 9:35

    ஆகிய இரு
கடுமையான இரு எச்சரிக்கைகளையும், முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சில் நிறுத்தி இந்தக்
கொடுமையான தண்டனையிலிருந்து விடுபட தங்கள் சொத்துக்களில் ஜகாத்தை கணக்கிட்டு
எளியவர்களுக்கும் தேவையுடைவர்களுக்கும் கொடுத்துவிடக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
எனவே அன்புச் சகோதர சகோதரிகளே! அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வங்களிலிருந்து
ஏழைகளுக்குறிய பங்கை முறையாக கணக்கிட்டு அவர்களிடம் ஒப்படைத்து விடுபவர்களே நாளை
அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்பதை உணர்வார்களாக!


 
உங்கள் நன்பர்களுக்கு
அறிமுகப்படுத்த

பெண்களின் வழிபாட்டுரிமை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள் அவர்களின் உலக இலாபங்களை அடையும் விஷயத்தில் மட்டுமல்லாது ஆன்மீக விஷயத்திலும் ஆண்களுக்கு கொடுக்கும் உரிமைகளை பெண்களுக்கு மறுக்கவில்லை. உதாரணத்திற்கு ஆண்கள் தங்களின் ஜவேளை தொழுகையை நிலைநாட்ட பள்ளிவாயில்களை நோக்கி செல்வது அவர்களின் கடமை என்பதையும், அவ்வாறு செல்லாதவர்கள் நபியவர்களால் கண்டிக்கப்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்த உண்மையே. இவ்வாறு ஆண்கள் பள்ளிக்கு வருவதை கடமையாக்கிய இஸ்லாம் பெண்களின் நலன் கருதியும், பெண்கள் வீட்டையும், குழந்தையும் பராமரிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு பெண்கள் அவர்களின் இல்லங்களிலேயே தொழுதுக் கொள்வதை சிறப்பிற்குரியது என்று கூறுகிறது.

ஒரு பெண் அவளின் வீட்டு முற்றத்தில் தொழும் தொழுகையை விட அவளின் அறையில் தொழும் தொழுகை மிக சிறந்தது. இன்னும் அவளின் அறையில் தொழும் தொழுகையைவிட உள் அறையில் தொழும் தொழுகை மிகச்சிறந்தது என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அபூதாவூத்

இவ்வாறு பெண்கள் வீட்டில் தொழுவதையே சிறந்தது என்று கூறும் நபி அவர்களே பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவதை அனுமதித்துள்ளார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு முறை நபியவர்கள் இஷா தொழுகையை பிற்படுத்துகிறார்கள். எந்த அளவுக்கு என்றால் உமர்(ரலி) அவர்கள் பெண்களும் குழந்தைகளும் (தொழுகையை எதிர்பார்த்தவர்களாகவே) தூங்குகிறார்கள் என்று அறிவிப்பு கொடுத்து தொழுகைக்காக அழைக்கும்வரை (நபியவர்கள் பிற்படுத்தினார்கள்) பிறகு வெளியேறி இஷாவை தொழவைத்து முடித்துவிட்டு இப்போது இந்த பூமியிலே உங்ளைத்தவிர வேறு யாரும் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கவில்லை என்று கூறினார்கள். நூல்: புகாரி

நபி அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி

இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

இந்த ஹதீஸின் மூலம் நபி அவர்கள் பெண்களை பள்ளிக்கு அனுமதித்து அவர்களுக்கு தொழுகையும் நடத்தியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு பெண்களை அனுமதித்ததோடு மட்டுமல்லாமல் தன் உம்மத்தவர்கள் பெண்களை பள்ளியை விட்டும் தடுத்துவிடக்கூடாது என்பதற்காக அதற்கான கட்டளையும் பிறப்பித்தார்கள்.

நபி அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி

நபி அவர்கள் எந்த ஒன்றை மார்க்க விஷயமாக கட்டளை பிறப்பித்தாலும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் அதை கூறமாட்டார்கள் என்றிருக்கும்போது மஸ்ஜிதை விட்டுப் பெண்களை தடுக்கக்கூடாது என்பது இறைவனின் கட்டளையாகவும் ஆகாதா?

மஸ்ஜிதுக்கும் பெண்களுக்கும் எந்த தொடர்புமே இல்லாமல் இருப்பதையும் பார்த்தால், இஸ்லாமிய பெண்களை அவர்களின் வணக்கஸ்தலங்களை விட்டும் அவர்களின் மார்க்கம் தடுக்கிறது என்று மாற்று மதத்தவர்கள் எண்ண மாட்டார்களா? கல்வி கற்பதற்காக, பொருள்களை வாங்குவதற்காக, ஊரையும் நாட்டையும் சுற்றி பார்ப்பதற்காக பெண்களை அனுமதிக்கும் இவர்கள் இறை இல்லத்திற்கு இறைவனை துதிக்க மட்டும் அவர்களை ஏன் தடை செய்கிறார்கள்? இறைவனோ இறைத்தூதரோ ஒரு விஷயத்தில் கட்டளை பிறப்பித்துவிட்டால் அதில் மாற்று கருத்துக் கொள்ள இறைவன் நமக்கு எந்த அதிகாரத்தையும் தரவில்லையே!

பெண்கள் பள்ளிக்கு வரும்போது சில கட்டுப்பாடுகளை பேணுமாறு கூறினார்களே தவிர பள்ளிக்கே வரக்கூடாது என்று கூறவில்லை.

நபி அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை நான் கேட்பேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டு இருக்கும்) அந்த குழந்தையின் தாயாருக்கு சிரமமளிக்க கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கி முடித்து விடுவேன். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்:புகாரி

“உங்களில் ஒரு பென் மஸ்ஜிதுக்கு வந்தால் அவள் நறுமணம் பூசவேண்டாம்” என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம்

நபிஅவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச்சென்று தொழுது வந்துள்ளனர் என்பதற்கு பின்வரும் ஹதீஸ்களும் தெளிவான சான்றுகளாகும்.

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி அவர்கள் எழுவதற்கு முன் சற்று அமர்ந்து இருப்பார்கள். பெண்கள் ஆண்களை சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக நான் கருதுகிறேன் என்று இப்னு ஹிஷாம் கூறுகிறார். நூல்:புகாரி

நபி அவர்களுக்குப்பின் வந்த கலீஃபாக்களும் பெண்களை பள்ளிவாசலில் அனுமதித்துள்ளார்கள் என்பதை பின்வரும் செய்தியின் மூலம் அறியலாம்.

உமர்(ரலி) அவர்களின் மனைவி (ஆதிகா) சுபுஹ் தொழுகைக்கும், இஷா தொழுகைக்கும் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்திலே கலந்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (உங்கள் கணவர்) உமர் அவர்கள் இதை விரும்பமாட்டார். இன்னும் ரோஷப்படுவார் என்று அறிந்திருந்தும் எதற்காக நீங்கள் வெளியேறி (மஸ்ஜிதுக்கு) வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (இதுவரை என்னை அவர் தடுக்கவில்லையே) என்னை மஸ்ஜிதுக்கு வராமல் தடுப்பதை விட்டும் அவரை எது தடுத்தது என்று வினவினார்கள். அதற்கு (அவர்களின் மகன் அப்துல்லாஹ்) இப்னு உமர் அவர்கள் அல்லாஹ்வினுடைய பெண் அடிமைகளை அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுக்காதீர்கள் என்ற நபியின் சொல்தான் அவர்களை தடுத்துள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி

இவ்வாறு நபியவர்களின் சொல் பெண்களை மஸ்ஜிதை விட்டும் தடுக்கக்கூடாது என்று மிக ஆணித்தரமாக இருந்தும், அதை ஸஹாபாக்கள் செயல்படுத்தி காட்டியதாக பல செய்திகள் அறியப்பட்டும் இவைகளுக்கு மாற்றமாக வேறொரு கருத்துக்கொள்ள எந்த ஒரு அடியாருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்பதை கீழ் வரும் வசனம் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் யாதொரு விஷயத்தப்பற்றி கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில் (அதற்கு மாறாக வேறு) அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)

இவ்விறை வசனத்தை மனதில் நிறுத்தி மஸ்ஜிதுக்கு செல்ல பெண்கள் விரும்பினால் அவர்களை அனுமதித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை சரியான முறையில் நிறைவேற்றி இறைவனின் அருளைப் பெற விசுவாசிகள் முன்வர வேண்டும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நாஸ்திகர்கள் இறைவனையும் மறுமையையும் மறுத்துக்கூற பிரதான காரணம் என்ன? அவர்களின் அந்த எண்ணம் சரியா? அவர்கள் எண்ணப்படி தங்கள் திட்டத்தில் வெற்றி அடைந்தார்களா? என்று பார்ப்போம். ஒரே தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த இந்த உலக மக்களிடம் இன்று எண்ணற்ற மதங்களையும், பிரிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் விரோத குரோத மனப்பான்மைகளையும் பார்க்கிறோம். ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக மக்களின் ஜனத்தொகையில் குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைக்கின்றனர். சமத்துவ சகோதரத்துவ சீரானதொரு வாழ்க்கையை மனித சமுதாயத்தில் பார்க்க முடியவில்லை.

மனித சமுதாயத்தின் பெரும்தொகையினரை தீண்டத்தகாதவர்கள் என மதத்தின் பெயராலேயே ஒதுக்கி வைத்து, கொடுமைகள் பல இழைக்கப்பட்டு வருகின்றன. நாய்க்கிருக்கும் அந்தஸ்து கூட இந்த மனிதர்களுக்கு இல்லை என்ற கொடுமையை பார்க்கிறோம். ஆக இப்படி சமுதாயத்தில் காணப்படும் அத்தனை கொடுமைகளுக்கும் இறைவனையும், மறுமையையும் நம்புவதே காரணமாக இருக்கிறது. இறைவனையும், மறுமையையும் சொல்லியே பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் ஏமாற்றுகின்றனர். அந்த மயக்கம் காரணமாகவே பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்குக் கட்டுபடுகின்றனர். எனவே இறைவனும், மறுமையும் இல்லை. மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவுற்றுவிடுகின்றது என்று நிலை நாட்டி விட்டால், இப்படிப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் அழித்து விடலாம். ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கி விடலாம் என்பது நாஸ்திகர்களின் எண்ணமாகும்.

நாஸ்திகர்கள் கூறக்கூடிய கொடுமைகள் அனைத்தும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். அதை அனைத்தையும் அகற்றி ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அவர்கள் கொடுக்கும் திட்டம்தான் மிகவும் தவறான ஒரு திட்டமாகும். ஆபத்தான திட்டமாகும். அவர்களின் திட்டம் குறிப்பாக தமிழகத்தில் எப்படிப்பட்ட நிலையை உண்டாக்கி இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். நாட்டில் மலிந்து காணப்படும் கெடுதிகளுக்கு, இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கத்தை நேர்வழியை மதங்களாக்கி மக்களை பல பிரிவினர்களாக்கி அதன் மூலம் அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகிதரர்கள் எந்த அளவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அதே அளவு அதில் எவ்வித குறையுமின்றி நாஸ்திகர்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நாஸ்திகர்கள் உணரவேண்டும்.

கள் குடிப்பது கூடாது; குடி குடியைக் கெடுக்கும்; இது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. மக்களை இந்த உண்மையை உணரவைத்து அவர்களை குடியை விடச் செய்வதே அறிவுடையவர்கள் செய்யும் நல்ல முயற்சிகள். தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டால், கள் குடி ஒழிந்துவிடும் என்று தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துபவனை அறிவாளி என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பலன்களை மக்கள் இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும். குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் குடிக்கவில்லை என்பதற்காக குடியை விடப்போவதில்லை. ஸ்பிரிட்டைக் காய்ச்சி குடிக்க ஆரம்பிப்பான். அவனுக்கு வேண்டியது போதை. அந்தப் போதையை எப்படியெல்லாம் பெற்றுக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பெற்றுக் கொள்ள முயல்வான். குடியை விடமாட்டான். இதே போல் மூட்டைப் பூச்சித் தொல்லைத் தாங்கமுடியவில்லை என்பதற்காக வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்படமாட்டான். அறிவுள்ள மனிதன் வீட்டிலிருந்தே கொண்டே மூட்டைப்பூச்சித் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான்.

இப்படிப்பட்ட ஒரு அறிவற்ற முயற்சிதான், இறைவனின் பெயரால் சிறு சாரார் பெரும் சாராரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதற்காக இறைவனே இல்லை என்று நிலைநாட்டச் செய்யப்படும் முயற்சியுமாகும். கள்ளுக்கு பயந்து தென்னையை வெட்டி வீழ்த்தியதால், தென்னயிலிருந்து பெறப்படும் பயன்களை மனிதன் இழப்பதுபோல் சமூகத்தில் சிறு தொகையினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என்ற காரணத்தால் இறைவன் இல்லை என்று சொல்வது சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இறை நம்பிக்கையின் மூலம் அடையும் பெரும் பலன்களை இழக்கச் செய்வதாகும்.

நாஸ்திகர்கள் பிரதானமான ஒரு விஷயத்தை சிந்திக்கத் தவறி விடுகின்றனர். மக்களுக்கு அத்தியவாசியமாகத் தேவைப்படும் காரியங்களிலேயே அவற்றைப் பெற்றுத் தருவதாகச் சொல்லிக்கொண்டு ஒரு சாரார் அதன் மூலம் பிழைப்பு நடத்துவர் அவசியம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு இந்த இடைத்தரகர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர். அவர்களின் தில்லுமுல்லுகளும் அதிகரிக்கின்றன. இந்த இடைத்தரகர்களின் தில்லுமுல்லுகளை ஒழிப்பதற்கு வழி, மனிதனுக்கு அத்தியாவசிமானவற்றை அவசியமில்லாமல் ஆக்கிக் கொள்வது என்று நாஸ்திகர்கள் சொன்னால் அதை எந்த அறிவாளியும் ஏற்றுக்கொள்ள முடியுமா? எளிதாக விளங்க உதாரணம் ஒன்றைச் சொல்கிறோம்.

மனிதனுடைய வாழ்க்கைக்கு உணவு பிரதானமானதாக இருக்கிறது. உணவில் பிரதானமாக நாம் அரிசியைப் பயன்படுத்துகிறோம். ஆகவே அரிசி நமக்கு அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கிறது. இந்த அரிசி நமக்கு கிடைக்க செய்ய அரிசி வியாபாரிகள் என்ற இடத்தரகர்கள் உண்டாகி விடுகிறார்கள். இந்தத் தரகர்களின் எண்ணிக்கை அரிசியை இவர்களிடமிருந்து வாங்கிச் சாப்பிடும் மக்கள் தொகையைவிட மிகக்குறைந்த எண்ணிக்கையினரே. இவர்கள் முறையாக அரிசியைப் பெற்று ஒரு நியாயமான ஆதாயத்தோடு கலப்படம் எதுவும் செய்யாமல் மக்களுக்கு கொடுத்தால் இது உண்மையில் ஒரு சேவையாகும். ஆனால் இந்த நாட்டில் நடைமுறையில் என்ன நடக்கிறது?

மக்களின் அத்தியாவசிய தேவையை அறிந்துகொண்ட அந்தத் தர்கர்கள் அந்த அரிசியில் மண்ணையும், கல்லையும் கலந்து அரிசி என்று விற்கிறார்கள். அதாவது மக்களின் அவசியத் தேவையை துஷ்பிரயோகம் செய்து கல்லையும் மண்ணையும் அரிசியாக்கி காசாக்குகிறார்கள். இந்த ஈனச் செயலை மனிதாபிமானமுள்ள எந்த மனிதனும் செய்ய மாட்டான். இந்த ஈனச் செயலுக்குரிய கொடிய தண்டனையை மறுமையில், தான் பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுள்ள எவனும் செய்ய மாட்டான். மனித உருவத்தில் வாழும் மிருகங்கள் மட்டுமே இந்தச் செயலை செய்ய முடியும்.

இங்கு நாஸ்திகர்கள் நமக்கு அரிசி தேவையிருப்பதால்தானே இந்த ஈனர்களுக்கு கல்லையும் மண்ணையும் அரிசியாக்கி காசாக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. எனவே மக்களே யாரும் அரிசி வாங்காதீர்கள், அரிசியை சமைத்து சாப்பிடாதீர்கள் என்று போதிக்க வருவார்களா? அப்படி அவர்கள் வந்தால் அவர்களை யாரும் அறிவாளிகளாக ஏற்றுக்கொள்வார்களா? இப்போது மனிதன் உபயோகிக்கும் பெரும்பாலும் எல்லா உணவுப் பொருள்களிலும் கலப்படங்கள் பெருத்து விட்டதை அறிகிறோம். கலப்படம் செய்ய முடியாத உணவுப் பொருள்கள் மட்டுமே தப்பியுள்ளன. அதிலும் நாஸ்திகர்கள் மக்களிடையே இருந்த இறை நம்பிக்கையை போக்கியபின் இந்த உணவுப் பொருள் கலப்படங்கள் அதிகமாகிவிட்டன.

கல்வியில் பெயரால் நடக்கும் அக்கிரமங்கள்

அடுத்து மனிதன் கல்வியறிவை அடைய விரும்புகிறான். மக்களுக்கு கல்வியை போதிக்கிறோம் என்று ஒரு சாரார் கிளம்புகிறார்கள். உண்மையில் இதனை ஒரு சேவையாகக் கருதி அவர்கள் செய்வார்களானால் அது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் நாட்டின் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது?

சாதாரண L.K.G யிலிருந்து கல்வியின் பெயரால் எத்தனை துறைகள் இருக்கின்றனவோ அத்தனையிலும் அநியாயங்கள், லஞ்ச லாவன்யங்கள், தில்லுமுல்லுகள், மோசடிகள் சொல்லித்தீராது, எழுதித் தீராது. நாஸ்திகர்களுக்கும் இவை அனைத்தும் நன்றாகவே தெரியும். கல்வியின் பெயரால் ஒரு சிறுவர்க்கம் சமுதாயத்தையே ஏய்த்துப் பிழைக்கின்றனர். எனவே இந்த சமுதாயத்திற்கு கல்வியே தேவையில்லை, கல்வியற்ற ஆதிகால மக்களை போல் வாழ்க்கை நடத்துவோம் என்று எந்த நாஸ்திகர்களூம் சொல்லமாட்டார்கள். இப்படி மனித சமுதாயத்திற்கு, மனித வாழ்விற்கு அத்தியாவசியமான அனைத்துத் துறைகளிலும் இடைத்தரகர்களாக ஒரு சிறு வர்க்கம் புகுந்துகொண்டு முழு சமுதாயத்தையும் ஏமாற்றி வருகின்றனர்.

மனிதனுக்கு தேவை என்று வந்துவிட்டால் அந்த தேவையின் அளவை அனுசரித்து ஒரு சிறுவர்க்கம் அதை துஷ்பிரயோகம் செய்து அவர்கள் பிழைப்பு நடத்துவது தவிர்க்க முடியாததாகவே மனித வாழ்க்கையில் அமைந்து விடுகிறது. மனிதன் இவ்வுழகில் வாழ்வதாக இருந்தால் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டே ஆகவேண்டும். தேவைகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. தேவைகளைத் துறந்து வாழ் என்று மனிதனுக்கு உபதேசம் செய்பவன் அறிவாளியாக இருக்க முடியாது. மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் இப்படிப்பட்ட மோசடிகள், தில்லுமுல்லுகள், ஏமாற்று நடத்தும் துறைகள் மனித வாழ்வுக்கு அவசியமில்லை என்று கூறத்துணியாத நாஸ்திகர்கள், மனித சமுதாயத்தின் அடிப்படை நம்பிக்கையான இறை நம்பிக்கை மட்டும் அவசியமில்லை என்று கூறத்துணிவதேன்?

மனித வாழ்க்கையின் வெற்றியே அந்த இறை நம்பிக்கையின் அடிப்படியிலேயே இருக்கிறது. மனித வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் காணப்படும் சீர்கேடுகள், சீராக இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் மிகமிக அத்தியாவசியமாக இருக்கின்றன. அதன் காரணமாக அவற்றின் அத்தியாவசியத்திற்கு ஏற்றால் போல் அந்த துறையில் ஒரு சாரார் புகுந்து தங்களின் அற்ப உலக ஆதாயத்திற்காக அரிசியின் பெயரால், அரிசியில் கல்லையும் மண்ணையும் கலப்பது போல் சத்திய மார்க்கத்தில், சத்திய மார்க்கத்தின் பெயரால் அசத்திய மதங்களைக் கலக்கத்தான் செய்வார்கள்.

அரிசியில் கல்லிருந்தால் அதிலுள்ள கல்லை அகற்ற முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், அரிசியை சாக்கடையில் கொட்ட துணியக்கூடாது. அதே போல் சத்திய மார்க்கத்தில் கலக்கப்பட்டுள்ள அசத்திய மதங்களை அகற்ற பாடுபட வேண்டுமேயல்லாது, சத்திய மார்க்கத்தையும் அழித்துவிட முற்படக் கூடாது. இது மனித சமுதாயத்திற்கு பயங்கர நஷ்டத்தையும் அழிவையும் வீழ்ச்சியையுமே ஏற்படுத்தும். இதை நாஸ்திகர்கள் நிதானமாக சிந்தித்து விளங்க முற்பட வேண்டும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

அபூலஹப்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த செய்தியை அவர்களின் பெரிய தந்தை அபூலஹபிடம் கூறுவதற்காக அவனது அடிமைப்பெண் ஓடிவரும்போது மகிழ்ச்சி மிகுதியால் அந்தப் பெண்ணையே தன் சுட்டுவிரல் நீட்டி விடுதலை செய்தான். இதன் காரணமாக அவன் நரகில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, அந்த விரலை மட்டும் நரகம் தீண்டாது. மாறாக அந்த விரலிலிருந்து நீர் சுரந்து கொண்டிருக்கும் அதைச் சுவைத்து அவன் தாகம் தீருவேன். இப்படி ஒரு கதையை பல்வேறு நூல்களிலும் மீலாது மேடைகளிலும் நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இதை நாம் விரிவாக ஆராய்வோம்.

நபிகள் நாயகம் அவர்களுக்கு எத்தனையோ எதிரிகள் இருந்திருந்தும் அல்லாஹ்வினால் குர்ஆனில் இவனைத் தவிர வேறு எவரும் (தனிப்பட்ட முறையில்) சபிக்கப்படவில்லை. இவனை சபிப்பதற்கு என்றே தனியாக அல்லாஹ் ஒரு சூராவை அருளி இருக்கிறான்.

எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரித்து விட்டு காபிர்களாகவே இறந்தும் விடுகிறார்களோ, அவர்கள் மீது அல்லாஹ், மனிதர்கள், மலக்குகள் அனைவரின் சாபமும் உண்டு. மேலும் (அந்த நரகத்தில்) என்றென்றும் தங்கி விடுவர். அவர்களின் வேதனை (கொஞ்சமும்) குறைக்கப்படவும் மாட்டாது. (அந்த வேதனையிலிருந்து சிறிதும் ஓய்வு வழங்கப்படவும் மாட்டாது (குர்ஆன் 2:161,62) என்ற வசனமும், ஏறக்குறைய இதே கருத்தை வலியுறுத்துகின்ற 2:86, 3:88 வசனங்களும் ஒரு உண்மையை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.

அதாவது, காபிர்களாக இறந்துவிட்ட யாருக்கும் தண்டனையிலிருந்தும் சலுகையோ அல்லது தண்டனைக் குறைப்போ அறவே கிடையாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. சாதாரண காபிர்களுக்கே இந்த நிலை என்றால் மிகவும் கொடியவனாக திகழ்ந்த அபூலஹபுக்கு மட்டும் எப்படி தண்டனையை இலேசாக்க முடியும் திருக்குர்ஆனின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட இந்த நிகழ்ச்சியை உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

அண்ணல் நபி அவர்கள் தனது உறவினரை எல்லாம் ஒரு மலை அடிவாரத்தில் கூட்டி தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது எல்லோரும் மெªனமாகக் கலைந்து செல்ல அபூலஹபுடைய கரங்கள் மட்டும் மண்ணை வாரி பூமான் நபி அவர்கள் மீது இறைத்ததோடு மட்டுமன்றி, இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? நீ அழிந்து போ! என்று சொல்லி சென்றானே அந்தக் கரங்களை அல்லது அதன் ஒரு பகுதியான விரல்களை நரகம் தீண்டாது என்றால் இதை உண்மை என்று எப்படி ஏற்பது?

அபூலஹபுடைய இரண்டு கைகளும் நாசமாட்டும் மேலும் அவனும் நாசமாகட்டும் (குர்ஆன் 111:2) என்று திருக்குர்ஆன் அவனது கரங்கள் நாசமாகட்டும் என்று கூறும் போது அந்தக் கையில் ஒரு பகுதியாகத் திகழும் ஒரு விரல் மட்டும் நாசமாகாது என்பது அல்லாஹ்வின் கருத்துடன் மோதும் நிலை அல்லவா? அல்லாஹ்வின் சொல்லை பொய்யாக்குகின்ற இந்தக் கற்பனைக் கதையை எப்படி இஸ்லாமிய உலகம் உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ளது?

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றது என்பது நபிமொழி. அபூலஹப் தன் விரல் அசைந்து அடிமைப்பெண்ணை விடுதலை செய்யும் போது அவனது எண்ணம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அகில உலகிற்கும் வழிகாட்டியாகத் திகழும் அல்லாஹ்வின் தூதர் உலகில் பிறந்து விட்டார்கள் என்பதற்காக அவன் அவ்வாறு செய்யவில்லை, மாறாக தனது தம்பி அப்துல்லாஹ்வுக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்திக்காகவே உரிமை விட்டான். ரசூலுல்லாவை அல்லாஹ்வின் தூதர் என்று உணர்ந்து செய்த செயலல்ல. குடும்பப் பாசத்தை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட காரியத்திற்கெல்லாம் அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் கிடையாது.

அண்ணல் நபி அவர்கள் குழந்தைப் பருவத்திலிருக்கும் போது எத்தனை காபிர்களின் கரங்கள் தொட்டுத் தூக்கி இருக்கின்றன! அந்தக் கரங்களுக்கும் நீர் சுரக்க வேண்டாமா? எத்தனை நெஞ்சங்கள் அவர்களைத் தழுவியுள்ளன! எத்தனை உதடுகள் முத்திமிட்டுள்ளன! அவர்களைச் கொஞ்சிய நாவுகள் தான் எத்தனை! அவர்களைச் சுமந்து திரிந்த தோள்கள் எத்தனை! அவர்கள் நரகில் வீழ்ந்து கிடக்கையில் அவர்களின் கைகளிலிருந்தும், இதழ்களிலிருந்தும், மார்புகளிலிருந்தும் தேன் சுரக்க வேண்டாமா? மொத்தத்தில் மக்கத்து காபிர்கள் அனைவரும் ரசூலுல்லாஹ்வின் சிறு பிராயத்தில் கொஞ்சி மகிழ்ந்தவர்கள் தானே? அவர்களுக்கு இது போன்ற சலுகை உண்டு என்ற விபரீத முடிவுக்கு இந்தக் கற்பனைக் கதை இட்டுச் செல்லாதா?

இந்தக் கதையை கூறுவோர் இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பிறகும் அதை உண்மைப்படுத்த முயற்சிக்கின்றனர். புகாரியிலே இந்தக் கதை இடம் பெற்றுள்ளது எனக் கூறுகின்றனர். அதனால் இந்த விஷயத்தையும் தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது.

அபூலஹபுடைய குடும்பத்தினரில் ஒருவரது கனவில் விரலில் இருந்து நீர் சுரப்பதாகக் காண்பிக்கப்பட்டது என்பதே அந்தச் செய்தி. பல காரணங்களால் இது ஏற்க முடியாததாகும்.

1) கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.
2) கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.
3) இதைக் கூறுபவர் உர்வா என்பவர், இவர் அந்தக் காலக்கட்டத்தில், பிறக்காதவர். நபித்தோழர் அல்லர். கனவில் காட்டப்பட்டது இவருக்கு எப்படித் தெரிந்தது?
4) கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.
5) எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.

இந்தக் காரணங்களால் இந்தக் கனவை அடிப்படையாகக் கொண்டு கதைவிட முடியாது. குர்ஆனின் தெளிவான கருத்துக்களுக்கும் நபிகள் நாயகம் அவர்களின் அருளுரைக்கும் முரண்பட்ட நிகழ்ச்சிகள், எந்த கிதாபுகளில் காணப்பட்டாலும், எவ்வளவு பெரிய ஆலிமின் வாயிலிருந்து தோன்றினாலும் அவைகள் தூக்கி எறியப்பட வேண்டும். இது போன்ற சிந்தனையும் வழிப்புணர்ச்சியும் சமுதாயத்திலில் தோன்றும் போது தீனுல் இஸ்லாம் நிமிர்ந்து நிற்கும். சிந்தனை புரட்சியை அல்லாஹ் முஸ்;லிம் சமுதாயத்திற்கும் வழங்குவானாக ஆமீன்!


உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த