இஸ்லாம்தளம்

மார்ச்11, 2009

‘ஜகாத்’ செலுத்தாதவர்களின் நிலை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

உலக மக்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் 1421 வருடங்களூக்குமுன் மனிதன் நாகரீகமடையாத அந்தக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இன்று இந்த நாகரீகக் காலத்திலும் அதன் நிலை மங்காமல் எந்த மாற்றத்திற்கும் அவசியமில்லை என்று நிலை நாட்டிக்கொண்டிருப்பது அதியசமன்றோ. அது மட்டுமல்ல உலகம் அழியும் வரை மக்கள் கடைபிடிக்க எளிதாகவும் தெளிவாகவும் இருப்பதும் அதிசமன்றோ.

இதற்குக் காரணம் என்ன? மனிதனால் அல்லது மனிதர்களில் அறிஞர்கள் அடங்கிய குழுவினரால் திட்டமிடப்பட்ட ஒரு வாழ்க்கை நெறியாக அது அமைந்திருந்தால் அது சாத்தியமா? நிச்சயமாக இல்லை. இஸ்லாம் அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது(ஸல்) என்ற தனி மனிதராலோ அல்லது அவர்களும், அவர்களது தோழர்களும் இணைந்த ஒரு குழுவினராலோ அலசி ஆராயப்பட்டு அமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை நெறித் திட்டம் அல்ல. மாறாக இஸ்லாம் அகில உலகங்களையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வரும் சர்வ வல்லமை மிக்க இறைவனால், அவனது இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் அகில உலக மக்களுக்கும் நிறைவு செய்யப்பட்ட வாழ்க்கை நெறியாகக் கொடுக்கப்பட்டதாகும்.

அந்த வல்லோனாகிய ஏக இறைவன் இவ்வுலக வாழ்க்கையை மனிதர்களுக்கு  இவ்வுல வாழ்க்கை ஒரு சோதனை என்று தனது இறுதி மறை அல்குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளான். உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும 67:2 எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை பணக்காரன், தொழிலாளி முதலாளி, அதிகாரம் வகிப்பவன் அதற்கு கட்டுபடுபவன் போன்ற பாகுபாடுகளுடன் நடமாடவிட்டிருப்பது சோதனையின் காரணமாகவே.

கணக்கில் அடங்காத மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளுடைய இவ்வுலக வாழ்க்கையை அதாவது மிக மிக அற்பமானதொரு வாழ்க்கையை ஒப்பிட்டு அறிபவர்களே இந்த உண்மையை ஏற்க முடியும். தினசரி கோடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை நோட்டுகளை புறக்கணிக்கதக்க நிலையை உணர முடியும். அன்றாடம் சில சில்லறைக் காசுகளை மட்டும் பார்த்து வருபவனுக்கு அதுவே பெரும் சொத்தாகத் தெரியும்.

இதே போல நிரந்தரமான கணக்கிலடங்காத மறு உலக வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கே அற்பமான புறக்கணிக்கத்தக்க இவ்வுலக வாழ்க்கையின் நிலை புரியும். மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போகும் இவ்வுல வாழ்க்கையைவிட பெரியதொரு வாழ்க்கை இருப்பதை ஏற்க முடியாதுதான். அவர்களுக்கு இவ்வுலகமே சர்வமும்.

இவ்வுலகின் ஆசாபாசங்களுக்கும், சொத்து சுகங்களுக்கும், பணம் காசுக்கும் அடிமைப்பட்டு கிடப்பவன், மறுமையின் அழியாத நித்தியமான பதவிகளையும் சுகங்களையும் அறியாதவனாகத்தான் இருப்பான். அந்த அளவுக்கு அவனது அக புற கண்கள் குருடாகத்தான் இருக்கும். எனவே அவனிடமே கஞ்சத்தனமும், அற்பத்தனமும் நிறைந்து காணப்படும்.

மறுமையின் நிறந்தர நித்திய வாழ்க்கையை அறிந்து வைத்திருப்பவன் இவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின் பங்கும் இருக்கிறது. அவற்றை முறைப்படிக் கணக்கிட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் வைகோல் போரை நாய் காத்து கிடந்த கதையாகத்தான் முடியும் என்பதை உணர்ந்து கொள்வான்.

இவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.

ஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5

இவற்றில்

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். ”அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக! அல்குர்ஆன் 9:34

அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ”இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்) அல்குர்ஆன் 9:35


ஆகிய இரு கடுமையான எச்சரிக்கைகளையும் உண்மையான முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சில் நிறுத்தி இந்தக் கொடுமையான தண்டனையிலிருந்து விடுபட தங்கள் சொத்துக்களிலிருந்து ஜகாத்தை முறையாக கணக்கிட்டுக் கொடுத்துவிட கடமைப்பட்டிருக்கிறார்கள்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மென்மையான முஸ்லிம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

@font-face { font-family: TheneeUniTx; src:url(http://readislam.net/THENEE.eot); }

உண்மை முஸ்லிம், மனிதர்களிடம் மென்மையாக, நிதானமாக, நளினமாக நடந்து கொள்வார். அவரது மென்மை நேசிக்கப்படும்; அவரது நளினம் போற்றப்படும்; அவரது நிதானம் புகழப்படும். ஏனெனில், இவை புகழத்தக்க நற்பண்புகளாகும். அதன்மூலம் மனிதர்களை நெருங்கி அவர்களது நேசத்திற்குரியவராகத் திகழ முடியும். அல்லாஹ் தனது அடியார்களிடம் அப்பண்புகளை விரும்புகிறான்.

நன்மையும் தீமையும் சமமாகி விடாது. ஆதலால் தீமையை நீர் நன்மையைக்கொண்டே தடுத்துக்கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சிநேகிதனைப் போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும்பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்அன் 41:34,35)

மென்மையை வலியுறுத்தும் சான்றுகள், முஸ்லிமின் சமுதாய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டிய உயரிய பண்பு என்பதை உறுதிப் படுத்துகிறது. நளினம் என்பது அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒன்றாகும். அது தனது அடியார்களிடம் பிரதிபலிப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.

நபி கூறினார்கள்: “அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறமனிதர்களுடன் பழகும்போது மென்மையை கைக்கொள்ளுமாறு நபி அவர்கள் போதித்தார்கள். அடியார்களிடம் மென்மையை வெளிப்படுத்தும் கிருபையாளனான அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் அழைக்கும் முஸ்லிம், மனிதர்களிடம் மலர்ந்த முகத்துடனும் மென்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வளவுதான் கோபத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் மென்மையை விட்டுவிடக்கூடாது.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு கிராமவாசி மஸ்ஜிது (நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மென்மையும், நளினமும், பெருந்தன்மையும் மூடிக்கிடக்கும் இதயங்களைத் திறக்கும் திறவுகோல்களாகும். முரட்டுத்தனத்தாலும், சிரமப்படுத்துவதாலும், மிரட்டுவதாலும் எதனையும் சாதித்துவிட முடியாது.

நபி அவர்கள் கூறினார்கள்: “நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மென்மையையும், நளினத்தையும், முகமலர்ச்சியையும் மக்கள் நேசிப்பார்கள். கடுமையையும், முரட்டுத்தனத்தையும் மக்கள் வெறுப்பார்கள் என்பதுதான் நபி அவர்களின் இக்கூற்றுக்குக் காரணமாகும்.

…. கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்… (அல்குர்அன் 3:159)

இது ஒரு நிரந்தர உபதேசமாகும். உறுதி செய்யப்பட்ட நிலையான வழிமுறையாகும். நேர்வழியின்பால் மனிதர்களை அழைப்பதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு அழைப்பாளருக்குமான அவசியப் பண்பாகும். அப்பண்பின் மூலம் அவர்களது இதயங்களை வெல்ல முடியும். அம்மனிதர்கள் அழிச்சாட்டியம் செய்யும் வம்பர்களாக இருப்பினும் அவர்களிடமும் மென்மையான அணுகுமுறையையே மேற்கொள்ள வேண்டும்.

இக்கருத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களையும் ஃபிர்அவ்னிடம் அனுப்பிவைத்தபோது கூறினான்.

“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான். நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் பயந்து நல்லுணர்ச்சி பெறலாம்” என்றும் கூறினோம். (அல்குர்அன் 20:43,44)

இம்மார்க்கத்தின் வழிகாட்டுதலில் மென்மை என்பது நன்மையின் சங்கமமாகும். எவர் அதனை அருளப்பட்டாரோ அவர் நன்மை அனைத்தையும் அருளப்பட்டவராவார்; அதனை அருளப்பெறாதவர் நன்மையிலிருந்து அகற்றப்பட்டவராவார்.

நபி அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

தனி மனிதர், குடும்பம், மற்றும் சமுதாயம் இந்த மென்மையை கடைபிடிக்கும்போது நன்மை அவர்களை சூழ்ந்து கொள்ளும். இத்தன்மை கொண்டவர்கள் மக்களில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக காட்சியளிப்பார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் நபி அவர்கள் கூறினார்கள்: “ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.” மற்றோர் அறிவிப்பில்: “ஒரு  குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: “ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)

மனிதனிடம் அமைய வேண்டிய பண்புகளில் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தன்மையுடைய பண்பைவிட வேறெந்த பண்பு மகத்தானது?

நபி அவர்கள் கூறினார்கள்: “நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்த உலகின் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம்(அலை) முதல் இறுதி நபியான நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய உம்மத்துகளில் கடைசி மனிதனாகப் பிறக்கக்கூடிய அனைத்து உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றிவிடுவான் என்பதில் நாஸ்திகர்களைத்தவிர மற்ற எந்த கூட்டாத்தாருக்கோ அல்லது எந்த கொள்கையுடையோருக்கோ எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது என்பது திண்ணம். ஏனென்றால் எந்த ஆத்மாவும் இறை நியதிப்படி மரணத்திலிருந்து தப்பமுடியாது. அனைத்து ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். இதில் எந்த ஆத்மாவும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைய மனிதன் தன் உலக இச்சைக்கு அடிமையாகி அற்ப வாழ்வில் மூழ்கி மரணத்தை மறந்தவனாக நிலையில்லா வாழ்வின் விளிம்பில் நின்று இறைக்கட்டளைக்கு மாறாக உலக தேவைகளைப் பூர்த்தி செய்ய பகிரங்க முயற்சி செய்கின்றான்.

மனிதனுடைய இன்றைய வாழ்வின் முழு நோக்கம் காசு, பணங்கள் மட்டும்தான் உலக வாழ்க்கைக்கு முக்கிய அடிப்படை அஸ்திவாரம் என்ற தவறான ஒரு மனக்கணக்கு. இதன் கேட்டை உணராமல் இதற்காக உண்ணாமலும், உறங்காமலும் தினந்தோறும் மனிதனுடைய வாழ்வில் பெரும் போராட்டங்கள் உத்தரவாதமில்லாத தன் உயிரின் இரகசியத்தை எண்ணிப் பார்க்கக்கூட நேரமில்லாத மனித இனம்; படைத்தவன் பறிக்க நாடினால் தடுக்க வழியில்லாத உயிரின் இரகசியம் படைத்தவனுக்கே வெளிச்சம். அவனையும் மறந்து உலக வாழ்வின் ஆடம்பரத்தில் சிக்கி நிராகரிப்பின் பாதையில் தோல்வி நடைபோடும் மனித இனம். இத்தகைய நிராகரிபோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கைதான் கீழ்கண்ட அல்குர்ஆன் வசனங்கள்.

அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை.[23:55,56]

இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? [26:129]

‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! [4:78]

மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள் ”எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் [8:50,51]

உடலில் உலவிக் கொண்டிருக்கும் ஆவி அடங்கிப்போனால் எத்தனைப் புகழோடும் வாழ்ந்தவனாகினும், கற்றறிந்த மேதையாகினும், நிபுணனாகினும், கோடிக்கணக்கான செல்வங்களுக்கு அதிபதியாகினும், அல்லது சந்ததிகளை அதிகமாக அடைந்தவனாகினும் அவன் உயிரை மலக்குகள் கைப்பற்றிச் செல்லும்போது அவனது புகழோ, மேதையோ, நிபுணத்துவமோ செல்வங்களோ, சந்ததிகளோ எந்தப்பயனும் அளிக்காது. அவன் உயிரை மீட்டுத்தரவும் முடியாது.

அவனுடைய உடலை மூட வேண்டுமானால் கஃபன் துணி தயாராக இருக்கும். தூக்கிச் செல்ல நாற்சக்கர வண்டியோ அல்லது யாரோ நால்வர் தூக்கிச் சென்று புதைகுழியில் வைக்கத் தயாராய் இருப்பார்கள். உள்ளே வைத்தவுடம் அனைவரும் விலகி விடுவர். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவன் மட்டுமே தகுதியானவனாக இருப்பான். இறைக்கட்டளைக்கு அடிபணிந்து வாழ்ந்த உண்மை முஸ்லிம் தக்க பதிலைக்கூறி புது மாப்பிள்ளையைப்போல கியாமநாள் வரை நித்திரையில் மூழ்கியிருப்பான். இறைக்கட்டளைகளை நிராகரித்து வாழ்ந்தவனோ பதிலளிக்க முடியாதவனாக கபுரின் அதாபில் (கல்லறை வேதனை) மூழ்கி துன்பத்தை அனுபவிப்பான்.

அதனால்தான் நபி(ஸல்) இரண்டு வஸ்துக்களுக்கு இந்த உம்மத்தார்மீது அதிகமாக பயந்தார்கள். “இச்சைக்கு வழிபடுவதும் நெடுநாள் உயிர்த்திருப்பதிலும் ஆதரவு வைப்பதுமான இந்த இரண்டு குணங்களைப் பற்றி நான் பயப்படுவதுபோல் வேறு எந்த வஸ்துவைப் பற்றியும் உங்கள் மீது நான் அவ்வளவாக பயப்படுவதில்லை” என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் கூற்று உண்மையாக இன்று ஒவ்வொரு மனிதனுடைய இலக்கு எதை நோக்கி செல்கிறது என்று பார்த்தால் இறைவனாலும், இறைத்தூதராலும் அங்கீகரிக்கப்படாத ஹராமான எந்த வழியிலும் இன்று 1000 சம்பாதிப்பவன் நாளை 50000 சம்பாதிக்கத் துடிக்கிறான். இவ்வாறு கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திலிருக்கும் மனிதன் வரை 2 கோடிக்கு சொந்தக்காரன் அதை 10 கோடியாக்க என்ன வழி? அதற்காக கொடுக்கல் வாங்கலில் துரோகம் செய்வதும், அடுத்தவருக்கு சொந்தமான சொத்தை அல்லது பொதுச் சொத்தை அபகரிப்பதும் அதையும் மிஞ்சி சொத்து சேர்ப்பதில் இடையூராக இருப்பவனைக் கொலை செய்யக்கூட அஞ்சாத உள்ளம். இருண்ட வாழ்க்கையின் இச்சையை நோக்கி செல்லும் மட்டரகமான அறிவு; இறைவன் அளித்ததைக் கொண்டு திருப்தியுறாத உள்ளம்; உலக இச்சையை தெய்வமாக்கிக் கொண்டது. தன்னுடைய அந்திய காலத்தில் தலை ஆடி கால் தடுமாறி சுகம் கெட்டப் பின்பும் மருத்துவரை நாடி உடல் நலம் பேண ஆசை. இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.

மனிதனுக்கு வயது ஆகஆக அவனில் இரு செயல்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஒன்று பொருள் மீது பேராசையும், இரண்டு வயதின்மீது பேராசையும்தான் அவை. அனஸ்(ரழி) புகாரி, முஸ்லிம், திர்மிதி

இன்றைய முஸ்லிம்கள் உலக வாழ்வில் மூழ்கிப்போய் இஸ்லாத்தின் கடமைகளை முழுமையாக பேணாமல் கலிமாவை உறுதிப்பாடில்லாமல் வாயளவில் ஒப்புக்கொண்டு தொழுகையை சரிவர பேணாமல், வாரத்தில் ஒரு நாள் ஜும்ஆ தொழுகை தொழுதால் போதும் என்றும், நோன்பை பேனாமலும், ஜகாத்தை முறையாக கொடுக்காமலும், ஹஜ்ஜுடைய காலங்களில் வசதி வாய்ப்பையும் பெற்றும் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவைகளை மார்க்கமாக எண்ணி ஊரறிய செய்து வழி அறியாதவன் திசைமாறி செல்வதைப்போல் உலக வாழ்வில் மூழ்கி குஃப்ரைத் தேடிக்கொள்கின்றனர்.

அல்லாஹ் மனிதனுடைய உண்ணும் உணவிற்கும், உடுத்தும் உடைகளுக்கும், வசிக்கும் வீட்டைப் பற்றியும் மட்டும் உங்களிடம் கேள்வி கேட்கமாட்டான். ஹராமான வழியில் ஈட்டிய பிற சொத்துகளுக்கு உங்கள் மீது விசாரணை செய்வான். அந்த நேரத்தில் கைசேதப்பட்ட மக்களில் நாமும் ஒருவராகி விட வேண்டாம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

உதாரணமாக நம்ரூத் என்பவன் மிகப்பெரிய அளவில் தேசங்களை ஆண்டான். அவன் அல்லாஹ்விற்கு எதிராக பல சவால்களை விட்டான். மேலும் சுவனபதியின் வருணனைகளை கேள்விப்பட்டு நான் ஒரு சுவர்க்கத்தை அமைத்துக் காட்டுகிறேன் என்று நிறைய செல்வங்களை திரட்டி சொர்க்கத்தை போல ஒன்றை அமைத்தான். ஆனால் அதில் அவன் பிரவேசிக்கும்போது அவனுடைய உயிரை மலக்குகள் வந்து கைப்பற்றி சென்றனர். அவனுடைய ஆடம்பர வாழ்க்கையின் ஆணிவேர் பறிக்கப்பட்டு மாண்டு போனான்.

அவ்வாறே மூஸா(அலை) அவர்களுடைய சமூகத்தில் காரூன் என்பவன் வாழ்ந்தான். அவன் அந்த சமூகத்தாரின் மீது அட்டூழியம் செய்தான். அல்லாஹ் அவனுக்கு ஏராளமான பொக்கிஷங்கள் அளித்ததின் காரணமாக அச்செல்வங்கள் அவன் கண்ணை மறைத்துவிட்டன. அவனுடைய கஜானா சாவியை சிரமத்துடன் சுமந்து செல்லும் அளவில் இருந்தது(28:76) அதனால் அவன் கர்வத்துடம் தனது சமூகத்தாரிடம் நடந்து கொண்டான். இன்னும் இவை அனைத்தும் என்னுடைய அறிவின் வல்லமையால் நான் சம்பாத்தித்தவை என்று கூறி கர்வமடித்தான்.

அவனுடைய சமூகத்தார் இவனை மிகவும் பெரும் அதிஷ்டசாலி என்றும் கூறினர். ஆனால் அல்லாஹ்வின் வேதனையில் அகப்பட்டு அவனும், அவனுடைய செல்வங்களும், வீடுகளும் பாதாளத்தில் சொருகப்பட்டு மாண்டு போனான். அவனைப் பெரும் அதிஷ்டசாலி என்று கூறிய அவனுடைய சமூகத்தார் அவனுடைய பேரழிவை கண்டு அல்லாஹ்வின் கிருபை இல்லாதிருந்தால் நாமும் இவ்வாறே அழிந்திருப்போம் என்று கூறினார்கள்.

இன்று  சில பகுதிகளில் தொழுகையப் பேணக்கூடிய முஸ்லிம்களில் சிலர் மறைமுகமாக வட்டித்தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் அல்லாஹ் அதை பார்த்துக் கொண்டிருக்கின்றான். வழிதவறி வந்த செல்வங்களை வழிதவறியே வெளியேற்றிவிட அல்லாஹ் வல்லமை படைத்தவனாக இருக்கின்றான். தேடியவனே அனுபவிக்க முடியாமல் செலவத்திரட்டுகள் அழிந்து போவதை நாம் கண்ணால் காணவில்லையா? அல்லது தகப்பன் தேடிய செல்வங்கள் பிள்ளைகளால் அழிவதை நாம் காணவில்லையா?

நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெªடிளியினால் ஆக்கியிருப்போம்.

அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).

தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக்கொடுத்திருப்போம்) ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். [43:33-35]

அதனால்தான் உலகவாழ்வின் மேல் மனிதன் கொண்ட உவப்பைத் தடுக்க நபி(ஸல்) அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களிடம் ஒரு அறிவுரை கூறினார்கள். “இப்னு உமரே நீர் காலையில் எழுந்திருக்கும்போது உன் மனதில் நான் மாலை வரை உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. மாலையானால் நாம் காலையில் உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. உயிர்வாழ்தில் மரணத்துக்கு வேண்டிய ஆவணங்களை தயார் செய்துகொள். நாளை கியாமத்தில் அல்லாஹ்விடன் உன் நிலை எப்படியிருக்குமோ உனக்குத் தெரியாது” என்று அறிவுரை கூறினார்கள். இந்த அறிவுரையை ம்னதில் கொண்டு ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் பொருளீட்டி செல்வநிலை அடைந்து உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதை மக்களுக்கும் உதவி புரிந்து அழிவில்லா நிலையான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக ஆக்கிக்கொள்ளவும் நம்ரூது, காரூனின் நிலையை விட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை காத்து நல்லருள் புரிவானாக ஆமீன்.


உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

சமாதி வழிபாடு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை முஸ்லிம்களாகவே படைத்து முஸ்லிம்களாக வாழவைத்துள்ளான். நாம் இறக்கும்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாகவே இறக்க வேண்டுமென்பது இறைவனுடைய கட்டளை.  அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்கு தவ்ஹீத் விஷயத்தை தெளிவாக சந்தேகமற அறிந்து கொவது அவசியமாகிறது.  தவ்ஹீத் என்பதை ஏகத்துவம் அல்லது ஓறிரைக் கொள்கை என்று கூறலாம்.

ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு என்ற அடிப்படியிலே ஒரு சாராரும் இறைவனை நேரடியாக நாம் நெருங்க முடியாது அந்த இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை கடவுள்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வணங்கி வருகிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களை பொருத்த மட்டில் இது போன்ற நம்பிக்கைகள் கிடையாது. அவதார நம்பிக்கையோ அல்லது இறைவனுக்கு குமாரன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோ அல்லது இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை சிலைகளாக படங்களாகவோ படைத்து அவற்றை வைத்துத்தான் அந்த ஓர் இறைவனை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால் ஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது. அதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிமகள் இறந்துபோன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய நல்லடியார்கள் என்ற அடிப்படையிலே இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ”இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ”வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும். அல்குர்ஆன் 10:18.

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ”அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களi வணங்கவில்லை”” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 39:3

குர்ஆனில் அல்லாஹ் மிகத்தெளிவாக இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக தங்களை அல்லாஹ்வின்பால் நெருங்கக் செய்யக்கூடியவர்களாக யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ் காஃபிர் எனக் கூறுகிறான். அதுமட்டுமல்ல

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக.
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:102-104

நன்றாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் எந்த ஒரு கஷ்டத்திலும் பிரச்னையிலும் நாம் அல்லாஹ்விடம் தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனும் அவனிடமே மட்டுமே உதவி தேடச் சொல்கிறான்.

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம் அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை பாவ மன்னிப்புக் கோறுதலை ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும் நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவர்களாக அல்லாஹ்விடம் நெருங்கச்செய்வார்கள் என்ற அடிப்படையில் இறந்து போனவர்களை அவ்லியாக்களாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது அவர்களுடைய அடக்கஸ்தலங்களுக்குச் சென்று எங்களுக்கு குழந்தை பேற்றைத் தாருங்கள், நோய்களை குணமாக்குங்கள் என்று வேண்டுவது அல்லது அவர்களை அல்லாஹ்விடம் எங்களுக்கு கேட்டுப் பெற்றுத்தாருங்கள் எங்களுக்காக முறையிடுங்கள் அல்லது அவர்களுடைய பொருட்டால் அல்லாஹ் எங்களுக்கு அதனை நிரைவேற்றித்தா என்று கேட்பது, கப்ருகளை சுற்றி வலம் வருவது, அங்குள்ள படிக்கட்டுகளை முத்தமிடுவது இன்னும் கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், மேளதாளமங்கள் இன்னும் ஏராளமான இணைவைப்பு காரியங்கள் செய்து வழிகேட்டின்பால் சென்று மன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோமாகா!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

யார் பொறுப்பு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

சமூகத்தில் படர்ந்த அனாச்சாரயார் பொறுப்பு லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது இறைவனுக்கு வைக்கும் சமாதி வணக்கம். இந்த நிலை ஓரளவு மாறுதல் அடைந்துவிட்டால் பிற சில்லரை அனாச்சார அனுஸ்டானங்களெல்லாம் நாளடைவில் தாமாகவே விடுதலை பெற்றுவிடும் அதற்கு போறாட்டங்களும் கிளர்ச்சிகளும் தேவை இராது.

சில்லரை அனாச்சாரங்கள் என்பது, சொறுகப்பட்டிருக்கும் மின்சார பல்புகள் போன்றவை. அவைகளை உடைத்து விடுவதால் பயனில்லை. வேறு பல்புகள் மாட்டிவிடப்படலாம். எரிவதற்கு இயங்க வைக்கும் இயந்திரம் வேறிடத்தில் இருக்கிறது. அது மெயின் சுவிட்ச். அதை இயங்காமல் செய்து விடுவதால் மட்டுமே தான் கருதிய பலன் கைகூடும். இந்த மூலத்தை இரகசியத்தை உணர்வதில்லை.

சில்லரை அனாச்சார செய்கைகளை கண்டிக்கவும், திருத்தவும் ஈடுபடுகிறோம். அவை வீண் வேலை! பலிபீடம் அங்கல்ல! தர்கா மணி மண்டபங்களுக்குள் இருக்கின்றது. அவைதான் தகர்க்கப்பட வேண்டும். அப்படித் தகர்த்துவிட்டால் ஏகத்தவத்தன்மைக்கு இழிவும் பாதகமும் ஏற்படாது. சமூகம் தாழ்ந்து கொண்டே போகாது.

இந்த உண்மையை உணர்ந்து கொண்ட உணர்ச்சி மிகுந்த தொண்டர்கள் பலர், கல்லரை வணக்க ஒழிப்புப் பணியில் கருத்தை செலுத்துகிறார்கள். இதகைய புனிதமும் ஜீவாதாரமுமான தொண்டு புரிய இலாயக்குள்ளோர் மதகுருமார்களான மெªலவிகள் தான் என்பது நம்மிடை நிலவி வரும் தவறான கருத்து. இம்முறையில் அந்த தொண்டு  புரிபவன் தூற்றப்படுகிறான், மிறட்டப்படுகிறான். மார்ர்கப் புலமையற்ற மடையா, இந்த பணி புரிந்திடலாமோடா? எனப்  பரிகசிக்கப்படுகிறான்,  கண்டிக்கப்படுகிறான்! காரசாரமாக!

அனாச்சாரங்களை கண்டிக்கும் இலட்சியத்தோடு அறப்போர் புரிபவன் மிஷ்காத்தை கரைத்துக் குடித்தவனாக இருக்கவேண்டியதில்லை 5, 7, 10 ஆண்டுகள் என்று அரபி மதரஸாக்களில் கற்றுத் தேர்ந்து படாடோபங்களோடு காட்சி தரவேண்டியதில்லை. கலைகள் பலவற்றில் சட்ட நுணுக்க வல்லுனர்களாக ஆராய்ந்தறிந்த சாஸ்திரியாக இருக்கத்தான் வேண்டுமென்ற விதியும் இல்லை. அனைவராலும் அது முடியக்கூடிய காரியமா? இஸ்லாம் அப்படி ஏதேனும் சட்டம் விதிக்கவில்லை. ஒவ்வொருவனுக்கும் மதப்பணியைக் கடமையாக்கி இருக்கிறது.

“லாயிலாஹா இல்லல்லாஹூ” இந்தக் கலிமா மந்திரத்தை ஓதி விட்டாலே போதுமே கல்லறை வணக்கம், ஆண்டவனுக்கு இணைவைக்கும் இழி செயல் இஸ்லாத்துக்கு ஆகாது. அது விலக்கப்படவேண்டும் என்ற கருத்தைப் பெற அதைச் செயலாக்கிக்காட்டும் துணிவைப் பெற. இதற்காக மார்க்க ஞானங்களை எல்லாம் துருவிப்பார்க்க வேண்டியதில்லை! அதன் மூலம் சன்னதுகள் தேவையில்லையே!

ஓர் கலியாண வீடு என்று வைத்துக்கொள்வோம். பாடகர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பாகவத சிகாமனி, மயான காண்ட ஒப்பாரி மாலை பாடுகிறார். கூடியிருந்து கேட்டோர் கனன்றெழுந்து ஓய்! பாகவதரே, உன்பாடலை நிருத்தும்! நீயும் ஒரு பாடகனா? காலமுணர்ந்து பனியாற்றும் இசைவாணனா?  மங்களகரமான விழாவில் கல்யாணி ராகம் படுவதை விட்டு, முகாரி பாடலாமா? என்று கேட்கிறார்கள். என் பாடலை ரசிக்க வந்த மகாஜனங்களே, உங்களுக்கு ரசிக்கும் தன்மை கிடையாது. நீங்கள் என்னைப்போல் பாகவதர்களா? பட்டம் பெற்றவர்களா? சங்கீதக் கலை கற்றவர்களா? சினிமா டிராமாவில் நடித்தீர்களா? இந்நிலையில் நீங்கள் என்னைக் கண்டிப்பதா? கனல் கக்கும் விழிகளை உருட்டி மிரட்டிக்காட்டுவதா? இப்படிப் பதறித் துடித்து பதில் தருகிறார் பாகவதர் என்று கற்பனை செய்து கொள்வோம்.

இந்நிகழ்ச்சிப்படி பாகவதரின் கருத்துப்படி, தவற்றைக் கண்டிக்க முற்பட்டது தகாது என விழங்குகிறது. இது பொருத்தமா? நேர்மையா? பகுத்தறிவுக்கு ஏற்றதா? சங்கீதக் கலை தெரிந்தவர்கள்தான் கண்டிக்க வேண்டும், திருத்தும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதா? இது முறையா? கூடுமா? முடியக்கூடிய காரியமா? பாகவவதரைப்பற்றி  என்னகருத்து உதிக்க முடியும்?

அதேபோல் நம்மில் சில மவுலவிமார்கள் பட்டமும், ஆடை அலங்காரப்பட்டும் இல்லாத மதப்பணியாளர்களை தூற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்! நம்மைக் குறை கூற இவர்களுக்கென்ன அந்தஸ்துண்டு? உரிமை உண்டு? எனக் கொக்கரிக்கிறார்கள்.

இந்நிலை மாறவேண்டும், மதப் பணிபுறிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிமையிருக்கிறது என்ற உயரிய எண்ணங்கள் கொண்ட இதயங்கள் பெருகவேண்டும். அதற்கு எல்லோருக்கும் வாய்ப்பும் வசதியும் அளிக்கப்படவேண்டும். அதுவரை ஏமாற்றுவோர், ஏமாற்றப்படுவோர் இருந்தேதான் தீருவர். சமூகம் சீரழிந்து கொண்டேதான் போகும்.

(திருச்சி ரசூல் அவர்களால் நடத்தப்பட்ட ஷாஜஹான் 15-03-54 இதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி)

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த