இஸ்லாம்தளம்

மார்ச்10, 2009

மன்னிப்பு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

தனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை எற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். அது குறித்து வலியுறுத்தும் திருக்குர்ஆனின் வசனங்கள் எராளம். அந்தப் பண்புகளைப் பெற்றவர்களை இஸ்லாம் “இறையச்சமுள்ள சிறந்த முன்மாதிரியான முஸ்லிம்’ என்றும் “அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் அடைந்தவர்கள்’ என்றும் கூறுகிறது.

அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)

இதன் காரணமாவது அவர்கள் தங்களது கோபத்தை தடுத்துக் கொள்வார்கள். போட்டி, பொறாமை கொள்ளாமல், பகைமை, பொறாமையின் நெருப்புக் கங்குகளை “மறந்து மன்னித்துப் புறக்கணித்தல்’ என்ற தண்ணீரால் அணைத்து விடுவார்கள். பரிசுத்த மனதுடன் நிம்மதிப் பெருங்கடலில் நீந்தி அல்லாஹ்வின் திருப்பொருத்தம், அல்லாஹ்வின் அன்பு என்ற கரையைத் தொடுவார்கள்.

எவரது உள்ளங்கள் இஸ்லாம் என்ற நேர்வழியின் திறவுகோல் மூலம் திறக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே மன்னிப்பின் உச்சத்துக்கு செல்ல முடியும். அவர்களது மனம் நற்குணத்தால் மலர்ந்திருக்கும். அவர்கள் தங்களது நீதம் செலுத்துதல், உதவி செய்தல், பிறர் தவற்றை மன்னித்தல் போன்ற நற்பண்புகளால் அல்லாஹ்விடமுள்ள மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அடைந்து கொள்வார்கள்.

எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால் அதனால் அவன் மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம் செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும். (அல்குர்ஆன் 42:39-43)

அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் தங்களது மகளாரான ஆயிஷா (ரழி) அவர்களை சில பாவ நாவுகள் அவதூறு கூறி காயப்படுத்தியபோது அபூபக்கர் (ரழி) அவர்களின் இதயத்தில் கவலைகள் அலைமோதின. அவதூறு கூறியவர்களுக்கு தான் செய்துவந்த உதவியை துண்டித்து விடுவதாக சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் தனது அருள் வசனத்தை இறக்கி வைத்தான்:

உங்களில் செல்வந்தரும், (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையோரும் தங்கள் பந்துக்களுக்கோ, எழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹ்¢ஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு எதும் வருத்தம் எற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 24:22)

இஸ்லாம், தனது உறுப்பினர்கள் தண்டிப்பது, கண்டிப்பது, சிறிய விஷயங்களுக்கெல்லாம் நீதி தேடி செல்வது, பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்காது. மாறாக பொறுமையும், மன்னிப்பும், பெருந்தன்மையுமான நடைமுறைகளையே மேற் கொள்ளும்படி வலியுறுத்துகிறது.

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால் நபியே! தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின், உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சினேகிதனைப்போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 41:34,35)

ஒரு தீமையை எப்போதும் தீமையால் எதிர்கொண்டால் மனித மனங்கள் குரோதங்களுக்கும், பகைமைக்கும் ஆளாகிவிடும். அதே தீமையை நன்மையால் எதிர்கொண்டால் கோப ஜுவாலைகள் அணைந்து, மனம் கொதிப்படைவதிலிருந்து அமைதியாகி, குரோதமெனும் அழுக்குகளிலிருந்து தூய்மையாகிவிடும். அதன்மூலம் கொடும் விரோதிகளான இருவர் ஒருவரையொருவர் நேசிக்கும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். இது தீமைகளைத் தடுத்துக்கொள்ள மிக அழகிய வழியாகும். ஆனால் இப்பண்பு பெரும் பாக்கியசாலிக்கே சாத்தியமாகும். அதையே அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இது இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு மு·மினிடம் அமைந்திருக்க வேண்டிய பண்பாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மு·மின் தனது கோப உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அழகிய முறையில் மறந்து, மன்னித்துவிட வேண்டும். இந்த மனிதநேயப் பண்பை வலியுறுத்தி அது முஸ்லிம்களின் இதயத்தில் குடிகொள்ள வேண்டுமெனக்கூறும் எராளமான வசனங்கள் திருமறையில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்களின் வழிகாட்டியும் தலைவருமான நபி (ஸல்) அவர்களும் இப்பண்புகளைக் கைக்கொண்டு பிறரையும் தூண்டினார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடும்போதே தவிர (தனிப்பட்ட முறையில்) தங்கள் கரத்தால் எவரையும் அடித்ததில்லை. எந்தவொரு பெண்ணையும் ஊழியரையும் அடித்ததேயில்லை. அவர்களுக்கு எதேனும் துன்பம் விளைவித்ததற்காக எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அல்லாஹ்வுக்காக பழி வாங்கியுள்ளார்கள்”. (ஸஹீஹ் முஸ்லிம்)

மன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒரம் தடித்த நஜ்ரானி போர்வை ஒன்றை அணிந்திருந்தார்கள். அதை ஒரு கிராமவாசி பிடித்துக்கொண்டு மிகக்கடுமையாக இழுத்தார். நான் நபி (ஸல்) அவர்களின் புஜத்தைப் பார்த்தேன். கடுமையாக இழுத்ததன் காரணத்தால் அதில் போர்வையின் ஒரத்தின் அடையாளம் பதிந்திருந்தது. பின்பு அந்த கிராமவாசி “முஹ்ம்மதே! உம்மிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்க உத்தரவிடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பி சிரித்தவர்களாக அவருக்கு சில அன்பளிப்புகளைக் கொடுக்க உத்தரவிட்டார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் மன்னிக்கும் மாண்பு மிக அழமானதாகும். தனக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்தனுப்பிய யூதப் பெண்ணையும் மன்னித்தார்கள். அதன் விபரமாவது: ஒரு யூதப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்து சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக அனுப்பி வைத்தாள். அதை நபி (ஸல்) அவர்களும் சில நபித் தோழர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் “அதை சாப்பிடாதீர்கள்; அதில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.

பிறகு அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் “நீ இவ்வாறு செய்யக் காரணமென்ன?” அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரா என்பதை அறிய விரும்பினேன். நீங்கள் நபியாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுத்துவிடுவான்; விஷம் உங்களுக்குத் தீங்களிக்காது. நீங்கள் நபியாக இல்லையென்றால் உம்மிடமிருந்து நாங்கள் நிம்மதி அடைந்து விடுவோம்” என்றாள். அப்போது நபித்தோழர்கள் “அவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்று கூறி மன்னித்து விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

தௌஸ் என்ற கூட்டத்தினர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து கொண்டிருந்தனர். அந்தக் குலத்தைச் சேர்ந்த து·பைல் இப்னு அம்ரு (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், “தௌஸ் கூட்டத்தினர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து, சத்தியத்திற்குக் கட்டுப்பட மறுத்து விட்டனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்” என வேண்டிக்கொண்டார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கி அமர்ந்தவர்களாக தனது திருக்கரத்தை உயர்த்தினார்கள். அங்கிருந்தவர்கள், “அந்த தௌஸ் கூட்டத்தினர் அழிந்து விட்டார்கள்” என்று கூறினார்கள். எனினும் அல்லாஹ்வின் அடியார்கள் மீது கருணையும், பரிவும் கொண்ட காருண்ய நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினர் அல்லாஹ்வின் தண்டனைக்கு இலக்காவதை விரும்பாமல், “யா அல்லாஹ்! தௌஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ்! தௌஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ்! தௌஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உறவை முறித்தல், புறக்கணித்தல், நேர்வழியைத் தடுத்தல் போன்ற இழி குணங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அதை மன்னிப்பு, மற்றும் பெருந்தன்மையின் மூலம் எதிர்கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை முஸ்லிம்களின் இதயங்களில் நபி (ஸல்) அவர்கள் விதைத்தார்கள். மனிதர்கள் கடினத்தன்மைக்கு கட்டுப்படுவதைவிட மிக அதிகமாக அன்பிற்கு கட்டுப்படுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளங்கி இருந்தார்கள்.

எனவேதான் உக்பா இப்னு ஆமிர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் மிகச் சிறப்பானதை எனக்கு அறிவித்துத் தாருங்கள்” என வேண்டிக் கொண்டபோது, நபி (ஸல்) அவர்கள், “உக்பாவே! உம்மைத் துண்டிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, உமக்குக் கொடுக்காதவர்களுக்குக் கொடுத்து வருவீராக! உமக்கு அநீதமிழைத்தவர்களைப் புறக்கணித்து விடுவீராக!” என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில், “உமக்கு அநீதமிழைப்பவரை மன்னித்து விடுவீராக!” என்று வந்துள்ளது. (முஸ்னத் அஹ்மத்)

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

சமாதானத்திற்கு சிறந்த வழி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்றைய முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீதுகள் சொல்வதை விட்டு மனித யூகங்களை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதால் மாற்று மதத்தாருடன் இருக்க வேண்டிய உறவுகள் துண்டிக்கப்பட்டு துவேஷ மனப்பான்மை முற்றி சில சமயங்களில் கலவரங்களும் ஏற்பட காரணமாக அமைந்து விடுகின்றது. மாற்று மதத்தினருக்கு எதிராய் விஷக்கருத்துகளை முஸ்லிம் சமுதாயத்தில் விதைப்பவர்கள் அவற்றின் தீயவிளைவுகளை சிந்தித்து தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இப்போது மாற்று மதத்தார் விஷயத்தில் குர்ஆனும், ஹதீதுகளும் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.

16:125. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.

29:46. இன்னும் நீங்கள் சேதத்தையுடையவர்களுடன் அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள

60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

இந்த வசங்களிலிருந்து மாற்று மதத்தாரிடம் அழகிய உபதேசங்களையும் தர்க்கங்களையும் கொண்டே அணுக வேண்டுமேயல்லாது முறை தவறி நடக்கக்கூடாது என்றும் அவர்களுக்கு உதவி உபகாரங்கள் செய்வதையும் , நீதியாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை என்பது தெளிவாக புரிகின்றது. அடுத்து யாருடன் பகைத்து போராட வேண்டுமென்றும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்ளோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.

2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

2:193. பித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

மேற்கண்ட திருவசனங்களிலிருந்து, நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளும் விஷயம், சத்திய இஸ்லாத்தைச் செயல்படுத்த விடாமல் தடுப்பவர்கள், சத்திய பிரச்சாரத்தைத் தடுக்க முற்படுகிறவர்கள், இஸ்லாம் மார்க்கத்தை நேரடியாக எதிர்ப்பவர்கள், இப்படிப்பட்டவர்களை பகைத்து எதிர்த்துப் போராடுவதை, அல்லாஹ் நம்மீது கடமையாக்கி இருக்கிறான். சத்திய இஸ்லாத்தின் வழியில் குறுக்கிடாமல், அதே சமயம் ஏற்று நடக்காமல் இருப்பவர்களிடம், பகைமை பாராட்டுவதையோ, அவர்களை எதிர்ப்பதையோ அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்கிறோம்.

இந்த வசனங்கள் மூலம் நபி[ஸல்] அவர்கள் பகைத்து எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் யாராக இருந்தார்கள் என்று பார்த்தால், சத்திய இஸ்லாத்தைப் போதித்த நபி[ஸல்] அவர்களின் மிக நெருங்கிய பந்துகளான, ஒரே இனத்தவர்களான, அரபி பாஷை பேசும் குறைஷிகளான இப்றாஹீம்[அலை] அவர்களின் மகன் இஸ்மாயீல்[அலை] அவர்களின் சமூகத்தாரேயாகும். இஸ்மாயீல்[அலை] அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுபவதாகச் சொல்லிக் கொண்டிருந்த குறைஷிகளேயாகும்.

நபி[ஸல்] அவர்கள் அவர்களைப் பகைத்து எதிர்த்துப் போராட நேரிட்ட காரணம் நபி[ஸல்] அவர்களால் போதிக்கப்பட்ட சத்திய இஸ்லாத்தை [இஸ்மாயீல்[அலை] அவர்கள் உண்மையில் போதித்ததும் இதே இஸ்லாம் மார்க்கத்தைதான். அவர்கள் கண்மூடித்தனமாக நடத்தி வந்த அனாச்சாரங்களுக்கு, சத்திய இஸ்லாம் சாவுமணி அடித்த ஒரே காரணத்தால், எதிர்த்துப் போராடியதேயாகும். யூத கிறிஸ்தவர்கள் இந்த குறைஷிகளுக்குத் துணைபோன சமயத்தில் அவர்களையும், எதிர்த்துப் போராட நேரிட்டது. ஆக சத்திய இஸ்லாத்தை, உண்மைப் பிரச்சாரத்தை எதிர்த்து போராடுகிறவர்கள் எந்த சமூகத்தில் இருந்தாலும், அல்லாஹ்வின் ஆணைப்படி; முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம், சத்திய இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும், அதை எதிர்காமல் இருந்து வருபவர்களைப் பகைப்பதையோ, அவர்களை எதிர்த்துப் போராடுவதையோ அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பதையும் மேலே கண்ட வசனங்களிலிருந்து விளங்குகிறோம்.

எனவே சத்திய இஸ்லாத்தை ஏற்காமலும், அதே சமயம் அதை எதிர்க்காமலும், எதிர்ப்பவர்களுக்கு துணை போகாமலும், தங்கள், தங்கள் மதச் சடங்குகளைச் செய்து கொண்டிருப்பவர்களிடம் தொடர்ந்து அழகிய முறையில் உபதேசம் செய்து அவர்களை உண்மையை உணரச் செய்து, இஸ்லாத்தை ஏற்கவைக்க முயற்சிகள் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்களே அல்லாமல் அவர்களிடம் கடுமையாகவோ குரோதமாகவோ நடந்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு நன்மை செய்யவும், நீதி செய்யவுமே அல்லாஹ் கட்டளையிடுகிறான்; காரணம் சத்திய இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு மிகக் கடுமையான வேதனை மறுமையில் அவர்களுக்காக காத்திருக்கிறது.

18:29. (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக் ”இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது ஆகவே> விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்் (அந்நெருப்பின்) சவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்் அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சட்டுக் கருக்கி விடும்் மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்> இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.

அவர்களின் மறுமை வாழ்வு இவ்வளவு கடினமாக இருப்பதால் அவர்களைத் தாராளமாக இவ்வுலகில் அனுபவிக்க அல்லாஹ்வே விட்டு வைத்திருக்கிறான். அல்லாஹ் எந்த அளவு தாராளமாக நடந்து கொள்கிறான் என்பதை கீழ் வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

43:33-35. நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால் அவர்களின் வீட்டு முகடுகளையும் (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம். அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும் அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்)் ஆனால் இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சகங்களேயன்றி வெறில்லை் ஆனால் மறுமை(யின் வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்.

படைத்த ரப்புல் ஆலமீம் இவ்வுலகக் காரியங்களில், அவனை நிராகரிப்பவர்களிடம் இவ்வளவு தாராளமாக நடந்துகொள்வதில் ஆச்சரியமில்லை. நாம் அவர்களுக்கு நன்மை செய்வதையும், நீதி செய்வதையும் அல்லாஹ் நமக்கு அனுமதித்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

குர்ஆன் ஹதீதுகள் போதனைகளை நாம் புறக்கணித்ததால் அவை கூறும் போதனைகளுக்கு மாற்றமாக மனித யூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ் பகைக்கச் சொன்னவர்களை நேசிப்பவர்களாவும், பகைக்கக் கூடாதவர்களை பகைப்பவர்களாகவும் ஆகிவிட்டோம்.

முஸ்லிம்களாகிய நாம் ஒழுக்க விதிகளையும், நியாய விதிகளையும் மீறிக்கொண்டு அப்படிப்பட்ட எந்த விதிகளும் இல்லாதவர்களிடமா ஒழுக்கத்தையும் நியாயத்தையும் எதிர்ப்பார்க்க முடியும்? உலகிற்கு ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கப் கடமைப்பட்ட சமுதாயமே ஒழுக்க கேட்டிற்கு வித்திட்டால், பின் யார் தான் உலகிற்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்? முஸ்லிம்களாகிய நாம் ஒழுக்கத்தையும் நியாயத்தையும் எடுத்து நடப்பதால் உண்டாகும் பலாபலன்களை அனுபவ வாயிலாக மாற்று மத சகோதரர்களை உணர வைக்க நாம் முயலவேண்டும். இதுவே சமாதானத்திற்குச் சிறந்த வழியாகும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளும் மனிதன்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

‘மனிதன் சிந்திக்கக்கூடியவன்’ இது நியதி. ஆனால் எல்லோரும் சிந்திக்கின்றனரா? இது விடை காண முடியாத வினா!

இறைப்படைப்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் பாடம் பெறக்கூடியவனே. சிந்தனைவாதி! இந்த அடிப்படையில் எல்லாம் வல்ல அல்லாஹ், மனித இனத்தவராகிய நம்மைப் பார்த்து சில வினாக்கள் தொடுக்கின்றான்.

நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? அன்றியும், நீங்கள் குடிக்கும் நிரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? (56:57-72)

மரம் செடி கொடிகள் நீர் தீ புழு பூச்சிகள் பறவைகள் விலங்கினங்கள், மனிதர்கள் முதலிய அத்தனைப் படைப்பினங்களிலும் நமக்குப் போதனைகள் உண்டு. படைப்பினங்கள் அனைத்திலும் அழகிய படைப்பாக மனிதனையே படைத்திருப்பதாக அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக்கியுள்ளான்.

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (95:4)

இவ்வாறு தெளிவாக அறிக்கை விட்ட அல்லாஹ், அடுத்தடுத்த வசனங்களில் அவனுடைய நடத்தை காரணமாக ஏற்படுகின்ற விளைவுகளையும் எச்சரிக்கை அறிவுரைகளையும் கூறுகின்றான்.

பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் ஈமான் கொண்டு )ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர  (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாhத நற்கூலியுண்டு. (95:5இ6)

நற்கருமங்களை செய்தவர்களுக்குக் கிடைக்கக் கூடிய நற்கூலியைப் பற்றித் தெளிவாக்கிய எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதர்களுக்குரிய பொறுப்புணர்வுகளைப் பற்றியும் தெளிவாக்குகிறான்.

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், அப்போது அதைச் சுமந்து கொள்வதிலிருந்து அவை விலகிக்கொண்டன, இன்னும் அதைச் சுமப்பதிலிருந்து அவை பயந்தன, (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான், நிச்சயமாக அவன் (அமானிதத்தை நிறைவேற்றும் விஷயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான். (33:72)

(அத்தகைய அமானிதத்தை ஏற்றுக்கொண்டு அதற்க்கு மாறாக நடக்கும்) முனாஃபிக்கான (வேஷதாரிகளான) ஆண்;களையும்; முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான (இணைவைப்பவர்களான) ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான (விசுவாசிகளான) ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன். (33:73)

அல்லாஹ் நம்மீது விதித்த பொறுப்பு மகத்தானது. 1.அல்லாஹ் விதித்த கட்டளைகளுக்குச் சற்றும் மாறுபடாமல் உலகில் வாழ்வது, 2.எக்காரணம் கொண்டும் அவனுக்கு எவ்விதத்திலும் யாதொரு தன்மையிலும் இணை வைக்காமல் வாழ்வது. இவ்விரண்டிலுமே அவனுடைய பொறுப்புகள் நம்மீது சுமத்தப்படுகின்றன. அமானிதத்தை எவ்விதம் மோசடி செய்யாமல் காப்பாற்ற வேண்டுமோ வாக்குறுதியை எவ்வாறு மீறாமல் நடந்து மனிதத் தன்மையோடு வாழ வேண்டுமோ, அவ்வாறே அல்லாஹ் நம்மீது சுமத்திய பொறுப்புகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் வாழ்ந்து சிறக்க வேண்டும். இதுவே மனித நியதியாகும். இத்தகைய மனிதர்களையே அல்லாஹ் அருள்கொண்டு நோக்குவதாக தன் திருமறையில் அறிவிக்கின்றான். அவன் அருளுக்குப் பாத்திரமானவர்களாக நாம் நடக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற்ற மனிதர்களாக நாம் திகழ இயலும்.

இறைவனைப்பற்றி மனிதனின் வாக்குமூலம்:
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து ”நான் உங்களுடைய இறைவன் அல்லவா?”” என்று கேட்டதற்கு, அவர்கள் ”மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்”” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும். (7:172)

அல்லது, ”இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.) அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம். (7:173,174)

சமுதாயத்தினர்கள்! இவ்வாறாக திருமறை தெளிவாக்கிய பின்னரும் கூட நம்முள் பலர் பாராமுகமானவர்களாக உள்ளோம். நம்முடைய செயலற்ற தன்மைகளுக்கு காரணம் கூறி தப்பிவிடலாம் என்று இனியும் எள்ளளவும் எண்ணாதீர்கள்! நம்மை நாமே ஏமாற்றி கொள்ளலாமே தவிர, படைத்தவனை ஏமாற்றி விட்டதாக எண்ணாதீர். இறும்பூது எய்தாதீர்! மறுமை உண்டு! அதில் மாமன்னாகிய அல்லாஹ்விடம் நாம் பதில் கூறியே தீர வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் நம்முடைய பாவங்களைப் பொறுத்தருளப் போதுமானவன்!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பொருப்பாளர்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ்வின் விதி விலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன்.

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். அல்குர்ஆன் 66:6

தாய், தந்தையர் தங்களுடைய பிள்ளைகளின் மீது எவ்வளவு கருணையும் பாசமும் காட்டுகின்றனர். தங்களுடைய பிள்ளைகளின் சுக துக்கத்திற்காகவே தங்களை மாற்றிக்கொண்டவர்கள் எத்தனைபேர்? தன்னுடைய மகனுக்கு மகளுக்கு ஒரு வயதில் என்ன உணவு கொடுக்கவேண்டும் என்பதிலிருந்து அவர்களின் வருங்கால வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பது வரை தீர்மானித்து வைத்து இருக்கின்றனர். அவர்கள் எந்தத் துறையில் ஆர்வமாய் இருக்கின்றார்களோ அவற்றில் அவர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகின்றனர். தன் மகன் மகள் இலட்சியத்தை அடையும்வரை போராடுகின்றனர்.

ஆனால் வாழ்க்கையின் மிக முக்கியமான இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தேடித்தருகின்ற காரியத்தைச் செய்யச் சொல்வதில் அவர்கள் மறந்து விடுகின்றனர். தங்களின் மகனின் மகளின் உற்றார் உறவினர்களின் சுகதுக்கத்தில் பங்கு கொள்கின்ற நாம் அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் எவ்வளவு வேதனைப்படுகிறோம். ஆனால் தன் மகன் மகள் உற்றார் உறவினர்கள் ஒரே இறைவனை வணங்காமல் இறைவனின் ஏவல் விலக்கல்களை ஏற்காமல் வாழ்கின்றார்களே அவர்களை நேர்வழியில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோமா? இல்லை அவர்கள் செய்யும் அனாச்சாரங்களை விட்டாவது விலகி இருக்கின்றோமா?

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி கேட்கப்படுவார். அறிவிப்பாளர்: இப்னுஉமர் நூல்:புகாரி, முஸ்லிம்

பெரும்பாலான தாய் தந்தையர்கள் தம் பிள்ளைகள் குடும்பத்திற்காகவே வாழ்கின்றனர். அவர்களின் இம்மையின் வருங்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபடுகின்றனர். தன் பிள்ளைகளை கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனர். நாளை தேர்வு உண்டே படிக்கவில்லையா? என்று தன் பிள்ளைகளிடம் கேட்கும் பொறுப்பாளர்களே! நாளை உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேர்வு உண்டே அதற்கு தயாராகி விட்டீர்களா? உங்களை தயார் படுத்திக் கொண்டீர்களா?

பொறுப்பாளர்கள் தன் மகன் மகள் இறைவனின் அருட்கொடைகளை எண்ணி மகத்தான இறைவனுக்கு வழிபடுகின்றனரா?  இல்லை, மகத்தான இறைவனின் அருட்கொடைகளை புறக்கனிக்கின்றனரா? ஒரே இறைவனை மட்டும்தான் வணங்கவேண்டும் என்பதை அவர்கள் அறியவில்லை. அறிந்திருந்தாலும் அதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. லுக்மான்(அலை) தன் மகனுக்கு உபதேசம் செய்வதைப் பாருங்கள். லுக்மான்(அலை) உபதேசம் செய்தது மாதிரி நீங்கள் உபதேசம் செய்தீர்களா?

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ”என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) அல்குர்ஆன் 31:13

பொறுப்பாளர்கள் தம் பிள்ளைகள் பரிட்சையில் மதிப்பெண் குறைத்து வாங்கிவிட்டால் உடனே கோபப்பட்டு அடிக்கின்றீர்கள். ஆனால் தன் பிள்ளைகள் 10 வயது அடைந்த பிறகும் தொழாமல் இருப்பதற்கு எத்தனை பொறுப்பாளர்கள் உங்களது பிள்ளைகளை அடித்தீர்கள் என்று நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். லுக்மான்(அலை) உபதேசம் செய்ததைப் பாருங்கள்.

(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் சித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன். அல்குர்ஆன் 31:16

”என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். அல்குர்ஆன் 31:17

இவ்வாறு பெற்றோர்கள் மிக முக்கியமாக இஸ்லாமிய போதனைகளை படித்து கொடுக்காமல் இம்மையை நினைவுபடுத்தி மறுமையை நினைவூட்டவில்லையானால் தங்கள் பிள்ளைகள் மறுமையில் நஷ்டமே அடைவார்கள்.

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் தன் சகோதரனை விட்டும் – தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். அல்குர்ஆன் 80:34-37

(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான். அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்- தன் மனைவியையும், தன் சகோதரனையும்- அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்- இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்). அல்குர்ஆன் 70:10-14

ஆகவே நாம் இறைவன் ஒருவனையே வணங்கி அவனுடைய தூதரை மட்டுமே நமது வழிகாட்டியாக எண்ணி செயல்பட்டு நமது பிள்ளைகளுக்கும், உறவினர்களூக்கும் உபதேசம் செய்து வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

அறிஞர்களின் மதிமயக்கம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதிகாரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலையீட்டிற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 39:3, 5:3, 3:19, 3:85, 42:21, 49:16, 9:31, 7:3, 33:66-68, 30:32, 6:159, 22:78, 4:33, 18:102-106)

இன்னும் இவை போன்ற எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள் இதை  உண்மைப்படுத்தும். ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் அதை மனித அறிவு ஏற்றுக்கொண்டாலும் அதைக்கொண்டு அல்லாஹ்வின் ஒரேயொரு கட்டளையைப் புறக்கணித்தாலும் உதாசீனப்படுத்தினாலும் அது இறை நிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் என்பதில் உண்மை விசுவாசிகளூக்கு சிறிதும் சந்தேகமில்லை. இறைத்தூதர்கள் இந்த விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக நடந்து கொண்டார்கள். தங்களின் சுய அறிவை சிறிதும் மார்க்கத்தில் நுழைக்காமல் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்கள். அதனால் அவர்கள் மக்கள் மன்றத்தில் புறக்கனிக்கப்பட்டாலும், மக்கள் எண்ணற்ற துன்பங்களைத் தந்தாலும் பொறுமையுடன் சகித்துக்கொண்டார்களே அல்லாமல் சத்தியத்தில் எதையும் அது சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் மக்களிடமிருந்து மறைக்கத் துணியவில்லை.

وَمَا عَلَيْنَا إِلاَّ الْبَلاَغُ الْمُبِينُ

இன்னும் எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை. (36:17)

என்ற அல்லாஹ்வின் கட்டளையை சிரமேல் கொண்டு செயல்பட்டார்கள். இன்றைய சூழ்நிலைக்கு இது சாத்தியம், இது சாத்தியமில்லை என்று அவர்களாகச் சுயமதிப்பீடு செய்து மார்க்கப் பிரச்சாரம் செய்யவில்லை. தங்களின் அறிவு ஆற்றலைக்கொண்டு மார்க்கத்தை மக்களிடையே பரப்பிவிட முடியும் என்று தப்புக் கணக்கும் போடவில்லை. நேர்வழிக் காட்டும் முழு அதிகாரமும் அல்லாஹ்வின் கையில் மட்டுமே இருக்கிறது என்பதில் மிகத்தெளிவாக இருந்தார்கள். இப்படி செய்தால் மக்கள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்; அப்படிச் செய்தால் மக்கள் அதிகமாகச் சத்திய வழியில் இணைந்து விடுவார்கள் என்று அவர்களாக சுயமதிப்பீடு செய்து செயல்படவில்லை. அல்லாஹ் அறிவித்தவற்றை ஒரு சின்னஞ்சிறிய விஷயத்தையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதில் அவர்கள் சிறிதும் குறைவு செய்யவில்லை. அது விஷயத்தில் அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் மிகமிகக் கடுமையாக இருக்கின்றன. அவை வருமாறு:

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்;  அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கிலி)ருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

وَإِن كَادُواْ لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لاَّتَّخَذُوكَ خَلِيلاً  وَلَوْلاَ أَن ثَبَّتْنَاكَ لَقَدْ كِدتَّ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئًا قَلِيلاً  إِذاً لَّأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لاَ تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا

(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டி கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

மேலும், நாம் உம்மை உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லையெனின்  நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல்கூடும்.

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) மரணத்தில் இரு மடங்கு (வேதனையும்) நுகருமாறு நம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.(17:73,74,75)

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ  لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ  ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ  فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ

அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக்கட்டி கூறியிருப்பாரானல்

அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக்கொண்டு

பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்

அன்றியும், உங்களில் எவரும் அதைத் தடுப்பவர்களில்லை. (69:44-47)

அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இந்த எச்சரிக்கைகள்; எங்களுக்கில்லை; எனவே நாங்கள் எங்களது சுய விருப்பப்படி கூட்டிக் குறைத்து மார்க்கம் பிரச்சாரம் செய்யலாம்; அதற்கு தடை இல்லை என்றும் இந்த மார்க்க அறிஞர்கள் கூற முடியாது. அது குறித்து குர்ஆனின் எச்சரிக்கைகள் வறுமாறு:

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيراً

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:21)

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ

(நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னை பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருனை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடை அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا  وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءنَا فَأَضَلُّونَا السَّبِيلَا  رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்) (33:66,67,68)

اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3)

இவ்வளவு தெளிவான, கடுமையான எச்சரிக்கைகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல், குன்றி விட்ட தீபம்போல் இருந்தும் இன்றைய மார்க்க அறிஞர்கள் எந்த மயக்கத்தில் மத்ஹபுகளையும், தரீக்காக்களையும், தர்காக்களையும் ஆதரிக்கிறார்கள்? பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்த மத்ஹபு, தரீக்கா, தர்கா மோகத்தில் சிக்கி இருக்கிறார்கள்; அவற்றை எதிர்த்து சத்தியத்தைச் சொன்னால் பெரும் மேதகளாக  நம்மை  மதித்துக் கொண்டிருக்கும்  அவர்கள்  நம்மைத் தூக்கி  எறிந்து விடுவார்கள் என்ற அச்சத்தால் அறிந்துள்ள சத்தியத்தை மறைக்கிறார்களா?

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءهُمْ وَإِنَّ فَرِيقاً مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ

எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்துகொண்டே உண்மையை மறைக்கின்றனர். (2:146)

என்று அல்லாஹ் வேதத்துடைய அறிஞர்களை அடையாளம் காட்டுவது மத்ஹபுகளையும், தரீக்காகளையும், தர்ஹாக்களையும் சரிகண்டு நியாயப்படுத்தும் முஸ்லிம் அறிஞர்களுக்கும் ஏன் பொருந்தாது? மார்க்க அறிஞர்களே! இறைத்தூதர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு அஞ்சி உண்மையை மறைக்காமல் மக்களிடம் அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துரைத்தார்களோ அவ்வாறு உண்மை மார்க்கத்தை மார்க்க அறிஞர்கள் சத்தியத்தை எடுத்துரைக்க முன்வரவேண்டும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த