இஸ்லாம்தளம்

மார்ச்9, 2009

விண்ணுலகப் பயணம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

سُبْحَانَ الَّذِى أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الاْقْصَى தன் அடியாரை (மும்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர் ஆன் 17:1)

அண்ணல் நபி அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்குகிறான். நபிகள் நாயகம் அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.

அல்லாஹ்வின் ஆற்றலில் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் இதில் எள்ளளவும் ஆச்சரியம் இருக்க முடியாது. இதில் சந்தேகம் கொள்ளும் எவனும் முஸ்லிமாக இருக்கவும் முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் “மிராஜை” கட்டாயம் நம்பியே ஆகவேண்டும்.

இன்றைய இஸ்லாமியர்கள் மிஃராஜ் பற்றி கொண்டுள்ள தப்பான அபிப்ராயங்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.

மிஃராஜ் எந்த மாதம் எந்த நாள் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். அறிஞர் “ஸதீ“ அவர்கள் “துல்கஃதா மாதத்தில் ஏற்பட்டது“ என்கிறார்கள். இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் ரபீவுல் அவ்வலில் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக நபித்தோழர்கள் ஜாபிர் இப்னு அப்பாஸ்(ரலி) இருவரும் ரபீவுல் அவ்வல் 12-ல் மிஃராஜ் ஏற்பட்டதாக இயம்புகின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரக் குறிப்போடு “ரஜப் 27-ல் நடந்தது “ என்கிறார்.

மிஃராஜ்  எந்த மாதம் ஏற்பட்டது என்பதில் கருத்து  வேறுபாடு  தோன்றக் காரணம் என்ன? மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டும் என்பதைத் தவிர அந்த நாளுக்கு என்று விசேஷத் தொழுகையையோ, விசேஷ நோன்பையோ நபிகள் நாயகம் அவர்கள் சஹாபாக்களுக்கு கூறவில்லை.

ஏதேனும் ஒரு விசேஷமான அமலை அவர்கள் தம் தோழர்களுக்குச் சொல்லியிருந்தால் நபித்தோழர்கள் அனைவரும் அந்த அமலைச் செய்வதற்காக அந்த நாளை நினைவு வைத்திருப்பார்கள். இரண்டு, மூன்று அபிப்ராயங்கள் கொண்டிருக்க முடியாது. ஆஷுரா நாளில் நபிகள் நாயகம் அவர்கள் நோன்பு நோற்கக் கூறியதால் அந்த நாள் எது என்பதை நன்றாகவே சஹாபாக்கள் நினைவில் வைத்திருந்தார்கள். முஹர்ரம் பத்தாம் நாள் தான் ஆஷூரா என்று ஒரு குரலில் சொன்னார்கள். மிஃராஜைப் பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியை நம்ப வேண்டும். எந்த தேதியில் நடந்தது என்று முடிவு கட்டுவது அதற்காக நாமாக விசேஷ வணக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) ஜாபிர்(ரலி) உர்வா, ஜுஹ்ரி ஆகிய இமாம்கள் ரபியுல் அவ்வலில் மிஃராஜ் ஏற்பட்டதாக உறுதி செய்கின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரத்துடன் ரஜப் 27-ல் மிஃராஜ் ஏற்பட்டது என்கிறார்.

பலமான ஆதாரத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படும் ரபியுல் அவ்வலை விட்டு விட்டு, பலவீனமான ஆதாரத்துடன் அறிவிக்கப்படும் “ரஜப் 27”ஐத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

அதன் சிறப்பை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக, அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தராத புதுப்புது வணக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இன்று மிஃராஜ் நல்லதொரு வியாபாரமாக ஆகிவிட்டது. பயான் செய்வோருக்கு நல்ல அறுவடை. “பெண்ணின் முகம், குதிரை உடல் “ கொண்ட விந்தைப் பிராணியை பிரிண்ட் செய்து இது தான் புராக் என்று வ்ிற்பனை ஒரு பக்கம். அதனை வீடுகளில் மாட்டிக் கொண்டு தாங்களே பூரிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். மிஃராஜின் வணக்கங்கள், விசேஷத் தொழுகை, விசேஷ நோன்பு என்று அதன் முறைகளை விவரிக்கும் பிரசுரங்களின் வியாபாரம் இன்னொரு பக்கம். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த விசேஷ வணக்கங்களை கண்ணாடி பிரேம் போட்டு தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் இன்னொரு பக்கம்.

பள்ளிவாசல்களின் அலங்காரம், பூக்கட்டுகள், புத்தாடை, நெய்ச்சோறு என்று நன்றாகவே மிஃராஜை ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவில் விடிய விடிய விழித்து விழாக் கொண்டாடி விட்டு சுபுஹுகள் தொழ பள்ளியில் இமாமையும் மோதினோரையும் விட்டு விட்டு செல்லும் ஊர்கள் எத்தனை?

அன்புமிக்க இஸ்லாமியர்களே! மிஃராஜை நம்புங்கள்! அது நமக்கு உணர்த்தும் பாடத்தை படியுங்கள்! இறைவனின் ஆற்றலை, இறை தூதரின் சிறப்பை, தொழுகையின் மகத்துவத்தை மனதில் இருத்துங்கள்! இது போன்ற ஏமாற்று வலைகளில் விழாதீர்கள். முஃமீன்களின் மிஃராஜாக இருக்கின்ற மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளை தொழுகையை தொழுது வருவோமாக! மேலும் படிக்க மிஃராஜ்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

குறுக்கு வழியும், நேர் வழியும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துகளைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது.

குழப்பத்தைத் தீர்க்க வேண்டியவர்களே குழம்பிப் போய் நிற்கின்றனர். தெளிவு படுத்த வேண்டியவர்களே தெளிவின்றி நிற்கின்றனர். அப்படியானால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குழப்பமான மார்க்கமா? என்ற கேள்வ்ி இயல்பாகவே எழுகிறது. நிச்சயமாக இது குழப்பமான மார்க்கம் இல்லை. அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், “உங்களை நான் தெளிவான மார்க்கத்தில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்று பிரகாசமானது”. ஆதாரம்: இப்னு மாஜா

ஆகவே குழப்பம் மார்க்கத்தில் இல்லை. அதை எடுத்துச் சொல்கின்றவர்களிடமும், ‘அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்’ என்ற ரீதியில் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் நம்மிடமும் தான் இருக்கிறது. அப்படியானால் எந்த அடிப்படையில் ஒன்றை எற்றுக் கொள்ளவோ, மறுக்கவோ வேண்டும்?

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள்: “உங்கள் மத்தியில் இரண்டை  விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்; மற்றொன்று என்னுடைய வழிமுறை” ஆதாரம்: முஅத்தா

நம்மிடம் தெளிவான ஆதாரங்கள் தரப்பட்டு விட்டன. இவற்றைக் கொண்டு  யார் எதைச் சொன்னாலும் உரசிப்பார்த்து அது சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளவும் மாற்றமாக இருந்தால் புறக்கணிக்கவும் தயாராகி விடவேண்டும்.

கருணைமிக்க இறைவன் மக்களை நேர்வழிப் படுத்துவதற்காக எண்ணற்ற தூதர்களை அனுப்பி நல்லுபதேசம் செய்தான். தன்னை மறுப்பவனுக்கும், தனக்கு இணைகளைக் கற்பிப்பவனுக்கும் இவ்வுலகில் அருள்மாரி பொழியக்கூடியவனாகவும் இருக்கிறான். அப்படிப்பட்ட இறைவன் அவனை விசுவாசங்கொண்ட மக்களுக்கு, தன்னிடம் உதவி தேட வேண்டிய முறைகளையும், தன்னை நெருங்குவதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தராமல் இருந்திருப்பானா? அவனின் அருமைத் தூதர், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் வழிகாட்டியாகத் திகழக்கூடிய அண்ணலார் அவர்கள் உதவி தேடுவதற்கும் இறைவனை நெருங்குவதற்கும் முன்மாதிரியாகத் திகழாமல் இருந்திருப்பார்களா? அண்ணலார் எந்த முன்மாதிரியைக் காட்டித் தரவில்லையோ, சொல்லித் தரவில்லையோ அது நிச்சயமாக மார்க்கமாக இருக்காது. அதற்குப் பின்னால் இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட தவறான விஷயமாகும் எனத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ், நம்மை அண்ணலாரைத்தான் முன்மாதிரியாகப் பின்பற்றச் சொல்கிறானே தவிர வேறு யாரையும் அல்ல. “அல்லாஹ்வையும், மறுமையையும் ஆதரவு வைப்பவர்களுக்கு அழகிய முன்மாதிரி அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது” (அல்குர் ஆன் 33:21)

உதவி தேடுவது சம்பந்தமாகவும் இறைவனை நெருங்குவது சம்பந்தமாகவும் அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதையும், அண்ணலார் என்ன கூறுகிறார்கள் என்பதையும் பார்ப்போம். அல்லாஹ் கூறுகிறான், “தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள். உள்ளச்சமுடையவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) இது கஷ்டமாகவே இருக்கிறது. (அல்குர் ஆன் 2:45)

உதவி தேடுகின்ற வழிமுறை மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. இத்தகைய வழிமுறைகளை யார் புறக்கணிப்பார்கள் என்றால் இறையச்சமற்றவர்கள் தான். இத்தகையோர் தாம் கப்ருகளையே பொக்கிஷங்களாக எண்ணிக்கொண்டு தங்கள் கைகளை அங்கே ஏந்திக் கொண்டிருப்பவர்கள்.

மரணத்தை நினைவு படுத்திக் கொள்ளவேண்டிய மண்ணறையில் மயக்கும் வாழ்வைத் தரவேண்டி வரம் கேட்பவர்கள். நித்திய ஜீவனாக இருக்கும் இறைவனை விடுத்து மரணித்தவர்களிடம் கையேந்துகின்ற இந்த முஸ்லிம் சமுதாயத்தை என்னவென்று  சொல்ல? இறைவன் தன்னை நெருங்குவதற்கான மற்ற வழிமுறைகளைச் சொல்லிக் காட்டுகிறான்.

அவர்கள் தாங்கள் செய்யும் தர்மங்களை, அல்லாஹ்வுக்கு தங்களை சமீபமாக்குவதற்கும் (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைக்கும் (துஆவிற்கும்) வழியாகக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு) சமீபமாக்கும் என்பதை நீர் அறிந்து கொள்வீராக! அல்லாஹ் அவர்களை அதி சீக்கிரத்தில் தன் பேரருளில் நுழைத்துக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கிறான். (அல்குர் ஆன் 9:99)

தான தருமங்கள், இறைவனின் அருளைப் பெற்றுத் தருகின்ற சாதனங்களாக அமைந்துள்ளன. அதனால் தான், ஸஹாபாக்களில் ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணம் செய்து, அதன் மூலம் இறைவனின் நெருக்கத்தையும், அவனது அருளையும் பெறத் துடித்தனர்.

இறைவனும், அவனது திருத்தூதரும் காட்டித் தராத எந்த வழி முறைகளையும் ஸஹாபாக்களில் எவரும் பின்பற்றியதில்லை. அந்த ஸஹாபாக்கள் தங்கள் தேவைகளை வேண்டி, மதீனத்து நகரில் இருந்த அண்ணலாரின் கப்ரிடம் கேட்கவில்லை. மாறாக இறைவன் விதித்த கடமைகளைக் கொண்டு இறைவனிடம் உதவி தேடினார்கள். அல்லாஹ் கூறியதாக அண்ணலார் கூறினார்கள்:-

எந்த அடியானும் நான் அவன் மீது விதித்துள்ளதை விட விருப்பமான வேறு எதனைக்கொண்டும் என்னை நெருங்கிவிட இயலாது. அதிகமான நபில் (உபரி) வணக்கங்களைக் கொண்டு என்னை அவன் நெருங்கலாம். (ஆதாரம் புகாரி)

இப்னு மஸ் ஊது رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்:-

“நாயகத்துடன், தோழர்களான அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ இருவரும் அமர்ந்து கொண்டிருக்கையில், நான் தொழுது கொண்டிருந்தேன். தொழுகையில் நான் அமர்ந்தபோது, முதலில் அல்லாஹ்வை வாழ்த்தினேன். பிறகு நபிகள் மீது ஸலவாத் கூறினேன். அதன் பின்னர் எனக்காக, துஆ கேட்டேன். அதைக்கேட்டுக் கொண்டிருந்த நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னை நோக்கி, “நீர் அல்லாஹ்விடம் கேளும்! அவன் அள்ளி வழங்குவான்” என்றனர். (ஆதாரம்: திர்மிதி)

வாரி வழங்கிட வல்ல இறைவன் காத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவனுடைய அருளையும், கருணையையும் புறக்கணித்து விட்டு, இறந்தவர்கள் மீது நம்பிக்கை கொள்வது பாவமல்லவா?

ஆனால், மண்ணறையில் பிராத்தனைகள் ஏற்கப்படுகின்றன; நோய்கள் நீங்குகின்றன; பைத்தியங்கள் தெளிகின்றன; கேட்டவை கிடைக்கின்றன என்று ஓங்கி முழக்கமிடுபவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றனர். மண்ணறைகளில் மட்டுமல்ல, கோவில்களிலும், சர்ச்சுகளிலும் கூடத்தான் இது போன்ற காரியங்கள் நடந்து விடுகின்றன என நாம் அவர்களுக்குப் பதில் கூறுவோம். இத்தகைய வழிமுறைகளை இஸ்லாம் அனுமதித்துள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை.

பலஹீனமான ஈமான் படைத்த முஸ்லிம்கள், கப்ரில் நடக்கின்ற சில சித்து விளையாட்டுக்களிலும், ஷைத்தான் மற்றும் ஜின்களின் ஆள் மாறாட்டத்திலும் தங்கள் ஈமானைப் பறிகொடுத்து அந்த இடங்கள் தான் இறைவனின் அருளுக்குக் குத்தகை விடப்பட்டுள்ள இடங்கள் என எண்ணி ஏமாந்து போகின்றனர்.

இறைவன் கூறுகிறான்:-

இவர்கள் தாம் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். (அல்குர் ஆன் 2:16)

வல்ல இறைவ நம்மை ஷைத்தானின் மாய வலையில் வீழாது, மாய மந்திரங்களில் விலைமதிப்பற்ற ஈமானை இழந்து விடாது பாதுகாத்து அவனுடைய நேரிய பாதையைக் காட்டி, அவனது அருளுக்குரியவர்களாக ஆக்குவானாக ஆமீன்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

உண்மைக்கு இத்ரீஸ் (அலை)

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘மலக்குல் மவ்த்’க்கு நண்பராக இருந்தார்களாம்! “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக “மலக்குல் மவ்திடம் கேட்டுக்கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்பித்தார்களாம்!” தான் நரகத்தை கண்கூடாக காணவேண்டும் என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்பித்தார்களாம்! தமது இறக்கையில் இத்ரீஸ் நபியைச் சுமந்து சென்று நரகத்தை மலக்குல் மவ்த் சுற்றிக் காண்பித்தார்களாம்! தாம் சுவர்க்கத்தைக் காண விரும்புவதாக மூன்றாவது கோரிக்கையை முன்னே வைக்க, அதையும் மலக்குல் மவ்த் நிறை வேற்றினார்களாம். சுவர்க்கத்தைச் சுற்றிப் பார்த்தபின், சுவனத்திலிருந்து வெளியே வர மறுத்துவிட்டு இன்று வரை சுவர்க்கத்திலேயே இருக்கிறார்களாம்.

இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை உண்மை தானா? என்று நாம் ஆராய்வோம். இந்தக் கதையில் சொல்லப்படுகின்ற மலக்குல் மவ்த், சுவர்க்கம், நரகம் போன்றவை சம்பந்தப்பட்டுள்ளன. இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் தான் நமக்குச் சொல்லித் தரமுடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, இவைகளை நாம் அறிய முடியாது. அல்லாஹ் இது போல் நடந்ததாக திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை.” அல்லாஹ்வின் தூதராவது இதைச் சொல்லி இருக்கிறார்களா? என்று ஆராய்ந்தால், இப்படி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்றாஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு காலித் என்பவர் மூலமாக இமாம் தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய இப்றாஹீமைப் பற்றி “பெரும் பொய்யன்” என்று ஹாபிழ் ஹைஸமீ(ரஹ்) அவர்கள் குறீப்பிடுகிறார்கள். இமாம் ஹாகிம் அவர்கள் “இவரது எல்லா ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையே” என்று கூறுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யே தவிர இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. “அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் இதைச் சொல்லவில்லை” என்பதே இந்தக் கதை பொய்யானது என்பதற்கு போதிய ஆதாரம் என்றாலும், திருக்குர்ஆன் வசனங்களுக்கும் எவ்வாறு இந்தக் கதை முரண்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.

“இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்த்தை ஏமாற்றினார்கள்” என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. “சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகக்” கூறிவிட்டு, சுவர்க்கத்திலிருந்து வெளியேர மறுத்ததன் மூலம் ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்கள்களின் பண்பாக இருக்க முடியுமா? “(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.” என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும்போது, (அல்குர்ஆன் 19:56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படி பேசி இருக்க முடியும்? அதுவும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட ‘மலக்’கிடம் பொய் சொன்னது அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா? நபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்?

“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்” என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 39:73 வசனம் சொல்கின்றது. இந்தக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்? அவர்களுக்கு மட்டு இந்தப் பொது விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும்!

“நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான், அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்ய மாட்டார்கள்! தங்களூக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்” என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 66:6 வசனம் நமக்குச் சொல்கிறது.

நரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி மலக்குல் மவ்த் அவர்கள் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சென்றிருக்க இயலும்? உயிரை வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்ட மலக்குகள், தங்களுக்கு கட்டளை இடப்படாதவைகளைச் செய்ய மாட்டார்கள். இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள் என்ற கருத்தைக் குர்ஆனின் 21:27 வசனம் சொல்லும் போது மலக்குல் மவ்த் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாக உணரலாம்.

நரகத்தின் காவலர்களாக உள்ள மலக்குகளின் அதிகாரத்தில் மலக்குல் மவ்த் தலையிட்டிருக்க மாட்டார்கள் என்று எவரும் உணரமுடியும். நாம் எடுத்துக் காட்டிய திருக்குர்ஆனின் வசனங்களுடன் முரண்படுவதாலும் இந்தக் கதை பொய்யானது என்று தெளிவாகின்றது.

சுவன வாழ்வை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தித் தரவில்லை. நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சுவன வாழ்வைத் தரும்படி பிரார்த்தனை செய்வது தான் ஒரு முஸ்லிம் செய்ய கடமையாகும். நபிமார்கள் இப்படித்தான் செய்துள்ளனர். குறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்துவிடாமல், அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டிய வழியில் நாம் நடப்போமாக. அல்லாஹ் அதற்குத் துணை செய்வானாகவும். – ஆமீன் –

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மண் கேட்ட படலம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயீல் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயீலும் தோல்வியோடு திரும்பி சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால்தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

ஒரு சில ஏடுகளில் இந்தக் கதை எழுதி வைக்கப்பட்டுள்ளது. பல மேடைகளில் கூறப்படுகின்றது. மலக்குல் மவ்திடம் உயிர் வாங்கும் பொறுப்பை ஒப்படைத்ததற்கு ஏதேனும் ஒரு காரணம் கூறியாக வேண்டும், என்பதற்காக சிலரது கற்பனையில் உதித்த பொய்தான் இந்தக் கதை என்பதை சற்று சிந்தித்தால் எவரும் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே இந்தக்கதை முரணாக அமைந்துள்ளதை நாம் விரிவாக பார்ப்போம்.

வானங்கள், பூமி,அவற்றில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் ஆணைக்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்கின்றன என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையாகும். பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனித, ஜின் இனங்கள் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்கக்கூடியவர்களாகவும், மறுக்கக்கூடியவர்களாகவும் உள்ளனர். மற்ற படைப்பினங்கள் அனைத்தும் அவனது கட்டளைக்கும் விருப்பத்துக்கும் எதிராக செயல்படுவதில்லை என்பதை முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டுமிருக்கிறோம். திருமறைக் குர் ஆன் இதைத் தெளிவாக விளக்குகின்றது.

வானமும் பூமியும் அவனது உத்திரவுப்பிரகாரம் நிலைபெற்றிருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும் [அல்குர் ஆன் 30:25]

என்று அல்லாஹ் கூறுகிறான். அந்த அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய பூமி மறுத்து விட்டதாக இந்தக் கதை அமைந்துள்ளது. வானங்களையும், பூமியையும் படைத்தபின் அவற்றை நோக்கி அல்லாஹ் ஒரு உடன்படிக்கை எடுத்ததை பின்வரும் வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

பூமியையும், வானங்களையும் நோக்கி, ‘நீங்கள் விரும்பிய நிலையிலும் விரும்பாத நிலையிலும் (எனது ஆணைக்குக் கட்டுப்பட்டு) வாருங்கள்!’ என்று (அல்லாஹ்) கூறுகிறான், “நாங்கள் (விரும்பி) கட்டுப்பட்டவைகளாக வந்தோம்” என்று அவ்விரண்டும், (வானமும், பூமியும்) கூறின.

அல்லாஹ் பூமிக்கோ,வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது என்று மேற்கூறிய குர் ஆன் வசனம் ஐயத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும்போது அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்? இந்தக் கதையை நம்பினால், திருக்குர் ஆனின் வசனத்தை நம்பாத நிலை ஏற்படுமே! இறைவனின் வல்லமையைக் குறைத்து மதிப்பிட்டதாக ஆகுமே!

எனவே பூமி அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய மறுத்திருக்கும் என்று எந்த முஸ்லிமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

இந்தக் கதையில், அல்லாஹ், மலக்குகளுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கின்றான். அதற்கு மாற்றமாக பூமி வேரொரு கட்டளையைப் பிறப்பிக்கின்றது. ஜிப்ரீல், மீகாயீல், இஸ்ராபீல் ஆகிய மூவரும்- மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள மூவரும், அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா? மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக் குர் ஆன் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

அவன் எதை ஆணையிடுகிறானோ அதைச் செய்து முடிப்பார்கள். (அல்குர் ஆன்66:6)

(எதையேனும்) பேசுவதில் அவனை அவர்கள் (மலக்குகள்) முந்த மாட்டார்கள். அவனது ஆணைப்படியே செயலாற்றுவார்கள். (அல்குர் ஆன் 21:27)

மேற்கூறிய இரண்டு வசனங்களும், வானவர்களைப் பற்றி அல்லாஹ் தருகின்ற நற்சான்று. அவனது உத்திரவை அப்படியே செயல்படுத்திக் காட்டுகின்ற வானவர்கள் – அதிலும் சிறப்புக்குரிய வானவர்கள், அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?

அப்படி எல்லாம் இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள் என்று திருக்குர் ஆன் தெளிவாக்குகின்றதே! அந்தக் குர் ஆன் வசனங்களுக்கும் இந்தக் கதை முரண்படுகின்றது.

இந்தக் கதையின் கருத்துப்படி அல்லாஹ் மண் எடுத்து வரச் சொன்னது, கீழ்த்தரமான பொருளைப் படைப்பதற்காக அல்லவே! படைப்பினங்களிலேயே மிகச் சிறந்து விளங்குகின்ற, மனித இனத்தைப் படைப்பதற்குத்தான் அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்கிறான்.

“பூமியில் நான் பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன்” (அல்குர்ஆன் 2:30) என்று மலக்குகளிடம் அல்லாஹ் கூறுகிறான். மிக உயர்ந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்லி இருக்கும் போது பூமி எப்படி மறுத்திருக்க முடியும்? என்பதையும் தாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.

அந்தப் பணியை செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும் அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறிவிட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.

அற்பமான காரியத்தை செய்து முடிக்க மண் எடுத்து வரச் சொல்லவில்லை.

மிக உயர்ந்த-சிறந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்துவரச் சொல்லி இருந்தும் அது பூமியால் மறுக்கப்படுவதாக இந்தக்கதை குறிப்பிடுகிறது. எந்த வகையில் பார்த்தாலும், இந்தக் கதை சரியானதல்ல. ஒரு முஸ்லிம் நம்பக்கூடாது என்பது ளெிவாகவே தெரிகின்றது. இது போன்ற கதைகளை நம்பினால், இறைவனைப் பற்றியும் அவனது மலக்குகளைப் பற்றியும் தவறாக நம்பிக்கை கொண்டவர்களாவோம். மேலே நாம் எடுத்துக்காட்டிய இறை வசனங்களை நிராகரித்தவர்களாகவும் நாம் ஆக நேரிடும்.

இந்தக் கதை முழுக்க முழுக்க பொய் என்பதைப் பின்வரும் நபி மொழி தெளிவாக்குகின்றது.

“பூமியின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அல்லாஹ்வே கைப்பிடி மண் எடுத்து ஆதமைப் படைத்தான்” (நபிமொழி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுஹிப்பான் அறிவிப்பவர்: அபூமூஸல் அஷரீ(ரழி)

மண் எடுத்து வரும்படி அல்லாஹ் மலக்குகளுக்கு உத்தரவிடவில்லை. மாறாக அவனே கைப்பிடி மண் எடுத்து ஆதம் (அலை)அவர்களை உருவாக்கினான், என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்கும் போது, இந்தக் கதை பச்சைப் பொய் என்பது தெளிவாகின்றது.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

உலமாக்கள் முரண்பட்டால்…..

Filed under: ISLAM — islamthalam @ 12.24

“கூடாது” என்கின்றனர் சிலர் “கூடும்” என்கின்றனர் சிலர். இரண்டு கூட்டத்தினரும் ஆலிம்கள் தான். எதைச் செய்வது? யார் சொல்லைக் கேட்பது? அப்பப்பா… மண்டையை பிச்சிக்கிறனும் போல இருக்கே! இவர்கள் குழப்புகிற குழப்பத்தில் நாம் இருக்கிற கொஞ்சம் அறிவையும் இழந்து விடுவோம் போல இருக்கே… என நம்மைப் போன்ற பாமரர்கள் பலர் குழம்பும் நிலை, பொதுவாக எல்லா இடங்களிலும் இல்லாமல் இல்லை. இறைவனின் அருளைப் பெறுவதே நமது இலட்சியமாக இருப்பதால் இக்குழப்பத்திலேயே கிடந்து உழன்று கொண்டிராமல் சரியான வழியை தெரிவு செய்து, அதன்படி நடக்க வேண்டியது அவசியமாகிறது.

இரு தரப்பினருமே “தாங்களே சரியான வழிகாட்டிகள்” எனக் கூறிக் கொள்வதால், சரியான வழி காட்டிகள் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்பும் நமக்கே வந்து விடுகிறது. எப்படிக் கண்டுபிடிப்பது? இதோ ஒரு முன்னுதாரணம். மரியாதைக்குரிய இமாம்கள் ஹதீஸ்களைத் திரட்டும்போது கூறுபவரின் தன்மைகளை ஆராய்ந்தே (அவர் உண்மையாளரா, ஞாபக சக்தி உள்ளவரா… என்பன போன்றவை) சிலர் சொன்னதை ஏற்றனர்: சிலர் சொன்னதைத் தள்ளிவிட்டனர். அதே போல நாமும் இரண்டு தரப்பாரையும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இருவருக்கும் சில வேறுபாடுகள் தெரியும். அந்த வேறுபாடுகளிலிருந்து எது சரியான கூட்டம்? இறைவனும், நபிகளாரும் காட்டிய வழியைப் பின்பற்றுபவர்கள் யார்? எனத் தெரிந்துவிடும். இப்போது இரு கூட்டத்தினரின் கூற்றுக்களையும் நோக்கி வித்தியாசங்களை விதப்படுத்துவோம்.

ஒரு தரப்பினர் ‘இறைவன் தந்த குர்ஆனும், நபிகளாரின் ஹதீஸ்களும் தடுக்கின்றவற்றைச் செய்யாதீர்கள்’ என்கின்றனர். மறு தரப்பினர், ‘இங்கு வாழ்ந்த பெரிய பெரிய மகான்கள், ஆலிம்கள் எல்லாம் இதைத் தடுக்கவில்லையே! அவர்களுக்குத் தெரியாததா இவர்களுக்குத் தெரிந்துவிட்டது’ என மறுமொழி பகர்கின்றனர்.

முதல் சாரார், அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்களை, இஸ்லாம் வெறுக்கும் அனாச்சாரங்களின் கூடாரங்களாக்காதீர்; அந்தப் புனிதர்கள் எவற்றை வெறுத்தார்களோ அவற்றையெல்லாம் அவர்களின் பேர்களிலேயே செய்யாதீர்’ என்கின்றனர். மறுசாராரோ, இவர்கள் அவ்லியாக்களே இல்லை என்கிறார்களே. இவர்களை விடலாமா! இன்னும் சில நாட்களில் அல்லாஹ்வையும், ரசூலையுமே இல்லை எனச் சொல்வார்கள்!” என்கின்றனர்; இதில் சிலர் முந்திய சாரார் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்காமலேயே கூறுவர். சிலர் விளங்கினாலும் முந்திய சாராரின் மீது பாமரர்களின் கோபத்தை உண்டாக்கிவிட வேண்டும் எனத் தங்களின் கற்பனை மூட்டைகளைக் கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

முதல் பிரிவினர் “தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக இறைமறை வசனங்களையும், இறுதி நபியின் போதனைகளையும்” தருகின்றனர். இரண்டாம் பிரிவினரோ ஏதாவது மலையாளம், உர்து மொழிகளில் எழுதிய கிதாபுகளை, மஸ்தான்கள் அல்லது அப்பாக்கள் எழுதியதாகக் கூறப்படுபவற்றைத் தூக்கிக் கொண்டு வருகின்றனர்.

ஒரு கூட்டம் மார்க்கப் பணியையே குறிக்கோளாய்க் கொண்டு செயல்படுகின்றது. எனவே இவர்கள் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் கலங்காது தொடர்ந்து தங்களின் கொள்கைகளை முழங்குகின்றனர். மற்றொரு கூட்டமோ காசையே குறிக்கோளாய்க் கொண்டு மார்க்கப்பணி செய்கின்றது. எனவே இவர்கள், “முந்திய தரப்பினர் சொல்வது சரிதான் என்றாலும்…என்றாலும் (என இழுத்து) இப்போது உள்ள மக்களிடம் இதெல்லாம் எடுபட மாட்டேன் என்கிறதே; மெல்ல மெல்லத்தான் சொல்ல வேண்டும்” என்கின்றனர். (இதுவரை மெல்ல மெல்ல சொல்லி உள்ளனரா?) நாயகம், அன்றைய அறியாமைக்கால அரபிகளிடம் தெளிவாகவும், நேரிடையாகவும், சொன்னவற்றை இன்றைய முஸ்லிம்களிடம் கூடச் சொல்லப் பயப்படுகின்றனர் இவர்கள்.

முதல் சாரார், ‘எல்லோரது கருத்தையும் கேளுங்கள். எல்லாவற்றையும் படியுங்கள் அனைத்துக்கும் குர் ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரம் கேளுங்கள். ஆதாரப்பூர்வமானவற்றை நாமும் ஏற்றுக்கொள்வோம்; ஏற்றுக் கொள்ளவேண்டும்’ எனக் கூறித் தங்களின் கூற்றுகளுக்கு, இதோ இறைவசனம்! இதோ இறை தூதர் மொழி! என விஷயங்களைத் தந்து கொண்டேயுள்ளனர். இரண்டாம் சாரார்களோ இதைப் படிக்காதீர்கள், ஈமான் பறிபோய்விடும், இவர்கள் கூறுவதைக் கேட்காதீர்கள், குழப்பி விடுவார்கள் என்கிறார்கள்! இந்த வாதத்திலேயே இவர்களின் பலவீனம் பல்லிளிக்கிறது.

இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் எவர்கள் சரியான கோணத்தில் இஸ்லாத்தை அனுகுபவர்கள் என்பதை! தெரிந்த பின்னர் இனிமேலாவது நாம் யாரையும் கண்மூடிப்பின்பற்றாமல் ஒரு நாளில் ஒரு சில மணி நேரமாவது குர்ஆன் தர்ஜுமா, ஹதீஸ் தமிழாக்கம் படித்து அதன்படி வாழ முயற்சிக்க வேண்டும். இன்ஷாஅல்லாஹ்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த