இஸ்லாம்தளம்

மார்ச்5, 2009

திரை விலகட்டும்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மகான் அப்துல் காதிர் (ரஹ்) அவர்களின் நினைவு மாதமாக முஸ்லிம்கள் இந்த ரபியுல் ஆகிர் மாதத்தை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஜீலான் நகரில் அபூஸாலிஹ் எனும் பெரியாருக்கும் பாத்திமா எனும் அம்மை- யாருக்கும் புதல்வனாக ஹிஜ்ரி 47 – ம் ஆண்டு ரமழான் முதல் தேதியில் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள். இவர்கள் இல்லறத்தை நல்லறமாகவும் இறைப்பணியையும் செவ்வனே செயல்படுத்தி வந்தார்கள்.

இவரின்  மறைவு  ஹிஜ்ரி 561-ம்  ஆண்டு  ரபியுல் ஆகிர்  மாதமாகும்.  இவர்  இல்லறத்தை  ஏற்று  27 ஆண் பிள்ளைகளையும்,  22 பெண் பிள்ளைகளையும் பெற்றார்கள். துறவறம் மேற்கொண்டதில்லை.

இவர்கள் தமது காலமெல்லாம் ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் அறப்போருக்குத் தம்மை அற்பணித்தவர். இவரின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். துக்க தினமான நாளில் கூடு இழுத்து  கும்மாளமிட்டுத்திரியும் இவர்களை உருவாக்கிய கைக்கூலிகள் யார்? இறந்த தினத்தை சந்தோசமாக கொண்டாடும் இவர்களின் அறிவீனம் தான் என்ன?

குர்ஆன் ஹதீஸ்  மட்டுமே சான்றாகக் கொண்டு  செயல்பட்ட இவர்களின்  போதனைகள் ஒவ்வொன்றும் தத்துவ  முத்துக்கள்! இவர்களின் நூல்கள் பிரசித்து பெற்றவை. ஃபத்ஹுர் ரப்பானி, குன்யத்துத்தாலிபீன், புதூஹுல்கைப் இவைகள் ஏகத்துவத்தின் அற்புத கருவூலங்களாகும். இவையன்றி, மற்ற பல நூல்கள் அன்னாரை அவமதிக்கும் படைப்புகளே.

குர்ஆன்- ஹதீஸை மாற்ற – திரிக்க – திணிக்க முடியவில்லை. ஆகவே, மகான்களின் பேரால் தமது ஆதாயத்திற்காக மகான்களைப் பகடையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சில அரபி அரை குறை பண்டிதர்கள், இவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளைப் போல் வேறு எவருக்கும் கிடையாது. அவைகளில் சில………

எல்லா நபிமார்களுடன் ஆபத்து காலங்களில் அவர்களுடன் இருந்ததாகவும் ஏன் அல்லாஹ்வின் அருகில்  தொட்டிலில் படுத்திருந்ததாகவும், நபியவர்களின் மிஃராஜ் பயணத்தின் போது அவர்களை தம் தோள் கொடுத்து தூக்கிவிட்டவர்கள் என்றும், அவர் பிறந்த போது அன்றைய நாளில் பிறந்த குழந்தைகள் யாவும் நோன்பு நோற்றன என்றும் அவர்கள் அனைவரும் முடிவில் ‘வலீ’ (இறைநேசர்) ஆக மாறினர் என்றும்; அவர்கள்  பள்ளிக்குச்  செல்லும் போது அனைத்து  வானவர்களும் வலீ வருகிறார்   வழிவிட்டு  நில்லுங்கள்! என்று கூறுவார்கள் என்றும்; கோழியை  தின்று  விட்டு எலும்புத்  துண்டுகளை  வைத்து கோழியை உயிரூட்டினார்கள் என்றும், பிரசங்கத்தில் ஒரு பாம்பு இவர்களின் பயானை ஆர்வமுடன் கேட்க அவர் தோளில் தொற்றிக்கொண்டு அவருடன் பேசும் என்றும்; கபரஸ்தானில் உள்ள மைய்யத்துக்கள் இவர் பேச்சுக்குக்  கட்டுப்பட்டு சவக்குழியில் இருந்து வெழி வந்தன என்றும்;  உயிரை  பறிக்கும் ‘மலக்குல் மவ்த்’ பறித்த உயிர்களை,  அவரை அறைந்து  வெளியே மீட்டார்கள் என்றும், பல நூற்றாண்டுகளாக கடலில் மூழ்கிக் கிடந்த கப்பலையும், பிணங்களையும் மீட்டார்கள் என்றும் இவரின் மீது புனையப்பட்ட பகுத்தறிவுக்கப்பாற்பட்ட அபத்தமான கற்பனை கதைகள் ஏராளம்! ஏராளம்!!

மக்களை விட்டு விலகி – கம்பளி உடை தரித்து- உலகை, மணவாழ்க்கையை  வெறுத்து துறவறம் கொள்வது நபிவழியா? நபி (ஸல்) அவர்களும் ஆட்சியாளர்களாக- குடும்பத் தலைவராக இருந்து ஆத்மீகத்தையும் ஆன்மீகத்தையும் போதித்ததைத் தானே இம்மகானும் செய்தார்கள்.

பின்னால் வந்தவர்கள் தான் இஸ்லாத்திற்குப் புறம்பான கட்டுக் கதைகளைப் புனைந்தார்கள். துறவுக் கொள்கையை தெளித்த துறவிகள், அவ்லியாக்கள் ஆனார்கள். இதனை அறியா மக்கள் குர்ஆனையும்- ஹதீஸையும் புறமாக ஒதுக்கிவிட்டு குர்ஆனை மையத்துக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு, இக்கதைகளை கவிதைகளாக பாட ஆரம்பித்தனர்.இஸ்லாத்தின் ஆணிவேரை அழித்திட இதுவே முதல் மூல காரணமாயிற்று.

குறைபாடு அபாயம் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பான நிலை குர்ஆன் – ஹதீஸ் ஆகிய இவ்விரண்டில் மட்டுமே உள்ளது. இவை அல்லாதவைகளில் நாசம் தான் உண்டு. இந்த இரண்டை மட்டும் கொண்டுதான் ஒரு அடியான் இறை நேசன்  எனும் அரிய உயர் பதவியை அடைய முடியும்! (36 வது சொற்பொழிவு நூல் புதூஹுல் கைப்)

அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களை இருட்டில் இருந்து கொண்டு 1000 முறை ‘யா முஹ்யித்தீன்’ என்று கூப்பாடு போட்டால் தம்முன் தோன்றுவார்கள் என்று நம்புகின்றனர். இப்படிக் கூற அனுமதி தந்தது யார்?

தோழர்களே! உங்களுக்கும் உங்கள் இரட்சகனுக்குமிடையே தரகர்கள் வேண்டாம் ஏனெனில், நமக்கும் நம் இரட்சகனுக்குமிடயில் இந்தத் தரகர்கள் உபயோகமற்றவர்கள். அந்த மெய்யான ஹக்கு தஆலா ஒருவனே சகல அதிகாரங்களையும் செல்வங்களையும் முழுவதுமாகத் தன் கைவசத்தில் வைத்துக் கொண்டிருப்பவன்! (36 வது சொற்பொழிவு நூல் ஃபத்ஹுர் ரப்பானீ)

உமக்கேற்படும் எத்துன்பத்தையும் அல்லாஹ்வையன்றி மற்றவர்களிடம் முறையிட வேண்டாம் என்று கூறி அதற்கு ஆதாரமாக அல்குர்ஆன் 10:107 வது வசனத்தையும் ஓதிக் காட்டுகின்றனர் (நூல் ஃபத்ஹுர் ரப்பானீ)

தமது போதனைகளுக்குச் சான்றாக அவர்கள் குர்ஆன்-ஹதீஸை மட்டுமே ஏற்று தம் வாழ்க்கையிலும், அவ்வாறே வாழ்ந்து மறைந்த ஒரு நல்லடியாரை இன்று மக்கள் மறந்து, அல்லாஹ்வை விட்டு அப்துல் காதர் ஜீலானியைப் பிடித்துக் கொண்டது மாபெரும் ஷிர்க் இணைவைத்தலே! இவர்கள் குர்ஆன் – ஹதீஸ் மற்றும் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் போதனைகளை அடியோடு மறந்து மறுத்து அப்பட்டமான வழிகேட்டில் இருக்கும் இந்த நிழலைத் தேடும் நிஜங்களின் திரை விலகட்டும்! அல்லாஹ் போதுமானவன்.

மன்னிக்கப்படாத பாவம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.

எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ் கூறுகின்றான். இப்பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதற்காக பரிகாரம் கோரக் கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகின்றான். ஒருவன் தான்  செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்பு கோரி பச்சாதாபப் படுவானாயின், அப்பாவங்கள்  அனைத்தயும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். சில பாவங்களுக்காக மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால் அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம்; மன்னிக்காமலும் இருக்கலாம். இது அல்லாஹ்வின் நாட்டத்தை பொருத்தாகும்.

ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அல்லாஹ் மறுமையில்மன்னிப்பதே இல்லை. எல்லா பாவங்களையும் தான் மன்னித்து விடுவதாக கூறிவிட்டு, ஒரு பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை என  கூறும்போது அது மகா கொடிய பாவன் என்பது புலனாகிறது. இந்த பாவத்தை செய்யக் கூடியவன் சதா நரகத்திலேயே இருப்பான் எனவும் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறாயின் இவ்வளவு பெரிய கொடிய பாவம் எது? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதில்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை  வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு  தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (அல்குர்ஆன் 4:116)

மற்றோர் இடத்தில்:
எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ்சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். (அல்குர்ஆன்5:72) ஷிர்க் என்னும் அல்லாஹ்விற்கு இணைவைத்தல் அல்லாஹ்வால் மன்னிக்கப் படாத கொடிய  பாவமாகும் என்பது  இந்த இறை  வசனங்கள்  மூலம் தெரிய  வருகின்றது.

ஷிர்க் என்றால் என்ன?
இவ்வளவு பெரிய கொடும்பாவமான ஷிர்க் என்பதன் பொருள் என்ன? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதைல்லை? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவதுகட்டாயக் கடைமையாகும். அவ்வாறு அறியும் போதுதான் ,அதை விட்டு விலகி, உண்மையாகவும் தூய்மையாகவும் அல்லாஹ்வை வணங்க முடியும்.

ஷிர்க் என்பது சிலைகளை வனங்குவதும், கோவில்களுக்குச் சென்று அவைகளுக்கு வழிபடுவதும் மட்டும்தான் என முஸ்லிம்களில் பலர் கருதி வருகின்றனர். இதனால் ஷிர்க்கான பல செயல்களை செய்து விட்டு அவைகள் ஷிர்க் அல்ல என்றும் எண்ணுகின்றனர். இந்த தப்பெண்ணத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஷிர்க்கான செயல்களை செய்து தங்களை நரகநெருப்பிற்காக சித்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நினைத்துக்  கொள்கிறார்கள் இஸ்லாமிய பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தில் ஒருவனாக ஆகிவிடுவதால் மட்டும் ஷிர்க்கை விட்டு தூய்மையாகி விடலாம் என்று. எனவே இவர்களிடம் ஷிர்க்கான செயல்களைச் செய்யாதீர்கள் விட்டு  விடுங்கள் என்று கூறும்போது,  நாங்கள் என்ன ஹிந்துக்களா? நாங்கள் ராமனை வணங்குகிறோமா? கிருஷ்ணணை வணங்குகிறோமா? எங்களைப் பார்த்து ஷிர்க்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகின்றீர்களே? என்று கேட்கின்றனர். ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்குவது மட்டும்தான் ஷிர்க் என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இதற்குக் காரணம் ஷிர்க்கைப் பற்றிய அவர்களின் அறியாமையே ஆகும்.

ஷிர்க் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் செய்யவேண்டிய வணக்க வகைகளில் எதையாவது அல்லாஹ் அல்லாதாருக்குச் செய்வது, படப்பினங்களில் எதையாவது, எவரையாவது அல்லாஹ்வுக்கு நிகராக்குவது, இதுதான் ஷிர்க்காகும். அதாவது தவ்ஹீத் என்னும் ஏக இறைக்கொள்கைக்கு நேர் முரணானதுதான் ஷிர்க் முஸ்லிம்கள் அனைவருக்கும்  லாயிலாஹா இல்லல்லாஹ் என்னும் கலிமாவை மொழிந்திருக்கிறார்கள். இக்கலிமாவின் பொருள் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்  ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இந்த கலிமத்துத் தவ்ஹீதை நம்பி அதன்படி செயல்படுவதுதான் ஏக இறை நம்பிக்கையாகும்.

இதற்கு நேர் மாறுபட்டதுதான் ஷிர்க் அதாவது வணக்கதிற்கு தகுதியற்ற அல்லாஹ் அல்லாத யாருக்காவது, வணக்க வகைகளில் எதையேனும் செய்வது, அல்லாஹ் அல்லாத மற்ற படைப்பினங்கள் அனைத்தும் வணக்கத்திற்கு தகுதியற்றவைகளாகும். வணக்கங்களில் எதையேனும் ராமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ செய்தாலும்சரி, அல்லது முஹையத்தீன் அப்துல் காதிருக்கோ, நாகூர் சாஹிபிற்கோ செய்தாலும் சரி, எல்லாம் ஷிர்க்காவே கருதப்படும். ஏனெனில் படைக்கப்பட்டவர்கள் என்ற விஷயத்தில் இவர்கள் எல்லோரும் சமமானவர்களே. மலக்கானாலும்,நபியானலும், வலியானாலும், சாதாரண மனிதர்களானாலும் எல்லோரும் படைக்கப்பட்டவர்கள் தான். எனவே இவர்கள் யாரும் எந்த வணக்கதிற்கும் தகுதியற்றவர்களாவார்கள்.

வணக்கம் என்பது பயபக்தியோடு அல்லாஹ்வை நேசித்து அவனை வணங்குவதாகும். அல்லாஹ்விற்குச் செலுத்தும் ஒவ்வொரு வழிபாட்டுக்கும் வணக்கம் என்று சொல்லப்படும். இவ்வணக்கம், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போன்று செய்யப்பட வேண்டும். அவர்கள் கான்பித்தந்து செய்யுமாறு கட்டளையிட்டுள்ள வணக்கம் பல வகைப்படும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், கலீமத்துத் தவ்ஹீதை மொழிதல், ஈமானின் கடமைகளை நம்புதல், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல், அறிவு தேடுதல் இவைகள் எல்லாம் வணக்கங்களாகும். இவ்வாறே அழைத்து உதவி தேடுதல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல் இவைகள் வணக்கங்களாகும்.

இது போன்ற வணக்கங்களில் எதையாவது அல்லாஹ் அல்லாதவர்களுக்குச் செய்வதுதான் ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும்பாவமாகும். அழைத்து உதவி தேடுதல் வணக்கத்தின் வகையைச் சேர்ந்ததாகும்.எனவே அல்லாஹ் ஒருவனை மட்டுமே கஷ்ட துன்ப நேரங்களில் அழைக்க வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது ஷிர்க்காகும் என்பதை அறிகிறோம்.

உதாரணமாக இறந்துபோன அதுவும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் புதைக்கப் பட்டுள்ளவர்களை கஷ்ட துன்ப நேரங்களில் அழைப்பது, அதாவது யாமுஹையத்தீனே, யாஷாஹூல்ஹமீதே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறி அழைப்பது ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும்.

நேர்ச்சை செய்வது வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும்.இது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.அல்லாஹ் அல்லாதாருக்கு நேர்ச்சை செய்வது ஷிர்க்காகும். (அல்லாஹ்விற்காக நேர்ந்து அதை கப்ரில் கொண்டு போய் கொடுப்பதும் ஷிர்க்கானதுதான்) அதாவது எனக்கு நோய் குணமானால் முஹையத்தீன் அப்துல் காதிருக்கு ஒரு கடாய் அறுத்துக் குர்பானி(பலி) கொடுப்பேன், என் காலில் உள்ள வாதம் குணமானால் நாகூர் சாஹிபிற்கு வெள்ளியில் கால் செய்து கொடுப்பேன் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும் பெரும் பாவமாகும்.

இப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்து வரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! இறந்தவர்களை அழைத்து உதவி தேடுகிறார்கள்! கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள்! தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள்! இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள்! எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள் என்று கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் வேண்டுகிறார்கள்! யாஸாஹிபன்னாஹூரி குன்லி நாஸிர் – நாகூர் ஸாஹிபே! எனக்கு உதவுங்கள்!என்ற பொருள் கொண்ட பாடல்களைப் படிக்கிறார்கள்!

முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப் பட்டுக் கூறப்பட்டுள்ள என்னை ஆயிரம் தடவை இருட்டறையிலிருந்து அழைக்கக் கூடியவனுக்கு ஹாழிராகி உதவுகிறேன் என்ற பொருள் கொண்ட யாகுத்பா என்றகவிதையைப் பாடுகின்றார்கள். மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களை இருட்டறையிலிருந்து ஆயிரம் தடவை அழைக்கிறார்கள்! இவ்வாறு அழைக்கும் போது அவர் விஜயம் செய்து, இவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நம்புகிறார்கள்! குழைந்தை பெறும்போது, கஷ்ட நேரத்திலும் யாமுஹ்யித்தீனே! என்னைக் காப்பற்றுங்கள்! என்று கூறுகிறார்கள். எனக்கு நோய் குணமானால் இந்த வலியுல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிடுவேன் என்று வேண்டுகிறார்கள். சில நேரங்களில் அதனை செய்தும் விடுகிறார்கள்.

இவைகள் எல்லாம் ஷிர்க்கான செயல்களாகும். இது போன்ற நம்பிக்கை உடையவர்களே நிச்சயமாக இணை வைப்பவர்களாவர்கள். இந்த தவறான நம்பிக்கை கொண்டவர்களின் அமல்கள் அனைத்தையும் அல்லாஹ் பயனற்றதாக ஆக்கிவிடுகிறான். இவர்கள் இந்த தவறான நம்பிக்கையிலிருந்து விலகி, உலகில் வாழும்போதே தவ்பா செய்யவில்லையானால், மறுமையில் அவர்களுக்கு மன்னிப்பே இல்லை. நிரந்தர நரகத்தையே அடைவார்கள்.

இணைவத்தலின் தீய விளைவுகள்:
அவர்களின் நல்ல அமல்களும் பயனற்றதாகிவிடும் என்று நாமாகக் கூறவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றான். பின்னர் அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்து விடும்! (அல்குர்ஆன் 6:88)

மூமினாக, ஏக இறை நம்பிக்கை உடையவனாக ஷிர்க்கான எந்தச் செயலும் செய்யாமல் உலகில் வாழ்ந்தவன் வேறு ஏதேனும் குற்றங்கள் புரிந்து, அதற்கு உலகிலேயே பாவ மன்னிப்புத் தேடாமல மரணித்துவிட்டால், அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம். தண்டிக்கவும் செய்யலாம். அப்படியே அல்லாஹ் அவனைத் தண்டிக்கும்போது நரகத்தில் நிரந்தரமாக அவனை வைப்பதில்லை.

அல்லாஹ் தனக்கு (எதனையும்) இணையாக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். (இணைவைத்தல் அல்லாத) மற்றவைகளை, தான் நாடியவர்களுக்கு மன்னிக்கின்றான்.(அல்குர்ஆன் 4:116)

ஏக தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்காதவர்கள்.மற்ற தவறுகள் புரிந்திருப்பின் இறுதி கட்டத்திலாவது சுவர்க்கத்தில் நுழைவார்கள்.ஆனால் ஷிர்க்கான நம்பிக்கை உள்ளவர்கள் சுவர்க்கத்தின் வாடையைக்கூட பெற முடியாது. அல்லாஹ் சுவர்க்கத்தை அவர்கள் மீது ஹறாமாக்கிவிட்டான்.

அல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ அவரைத் தண்டிக்காமலிருப்பதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்.(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

சிறிது சிந்தித்துப் பாருங்கள்! ஷிர்க்கான காரியங்கள் புரிவோரின் முடிவு  எவ்வளவு பயங்கரமானது என்று எண்ணிப் பாருங்கள். இறைவன் ஷிர்கை எவ்வளவு வெறுக்கிறான் என்பதையும் உணர்ந்து பாருங்கள்! நாம் ஷிர்க்கான காரியங்களைச் செய்யாமலிருப்பதில் எவ்வளவு எச்சரிக்கையுடனிருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

பொருளற்ற வாதம்
ஷிர்க்கான செயல்களைச் செய்து வருவோரிடம் ஏன் இவ்வாறு செய்து வருகின்றீர்கள்? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணாயிற்றே? என்று நாம் கேட்கும் போது, நாங்கள் அழைத்து வரும் அவ்லியாக்களை  தெய்வமாகவா நாங்கள் கருதுகிறோம்? அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம் பெற்று தருமாறும் தானே வேண்டுகிறோம்! இது எப்படி ஷிர்க்காகும் என்று கேட்கின்றனர். அந்தோ பரிதாபம்! இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் அல்லாஹ்வை கொடுங்கோல் மன்னனுகன்றோ ஒப்பிட்டு விட்டார்கள்! அல்லாஹ் மிக நேர்மையானவன். அவன் அடியார்கள் மீது மிகவும் இரக்கம் கொண்டவன். தன் அடியார்கள் அனைவரின் அழைப்பையும்  ஒரே நேரத்தில் நிவர்த்திக்கவும் செய்கின்றான். இன்னொருவர் மூலம் அடியார்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன்  இல்லை. இன்னொருவர் சொல்லிக் கொடுத்துத் தெரிந்து கொள்ள அவன் அறியா தவனுமில்லை. அந்த இன்னொருவர் அவனை விட இரக்கம் கொண்டவருமில்லை.

ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்:
அவ்லியாக்களை அல்லாஹ்விடம் நமக்காக பரிந்து பேசுகின்ற வக்கீல்களாக கருதிக் கொண்டு நாம் எவ்வளவு பெரிய அறிவிலிகள் என்பதையல்லவா வெளிப்படுத்துகின்றோம்! அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். மையிருட்டில் நடமாடும் கறுப்பு எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்பவன், அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேசமுடியுமா? உலகிலுள்ள நீதிபதிக்கு ஒரு மனிதனின் உள்ளக் கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை பக்குவமாக நீதிபதியிடம் எடுத்துக் கூறுவார்கள். உலக நீதிபதிகள், வக்கீல்களின் சாதுர்யப் பேச்சினால்பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக் கூற சந்தர்ப்பமுண்டு. இது போல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள் அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம் அப்பழுக்கற்றவை என்று அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா? எந்தக் கணிப்பிலே நாம் அவ்லியாக்களை நமது வக்கீல்களாக மாற்றி அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யத் துணிகிறோம்?

ஒரு மனிதன் தனக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் தரகர்களை ஏற்படுத்திக்கொள்வதை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதில்லை. இவ்வாறு தரகர்களை ஏற்படுத்திய ஒரே காரணத்திற்காகத்தான் அக்கால மக்கா முஷ்ரிகீன்களை  நபி (ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். இக்காரணத்திற்காகவே அம்மக்களை காபிர்கள் என்று அல்லாஹ் கூறினான். ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நம்பி இருந்தனர். அல்லாஹ்தான் தங்களுக்கு உணவளிப்பவன் என்பதையும் ஏற்றிருந்தனர். அல்குர்ஆனின் 43:9, 43:87, 29:61, 31:25, 23:84, 23:86, 23:88, 10:31 வசனங்கள் இதனை நமக்கு தெளிவாக்குகின்றன. அல்லாஹ்வை நம்பியிருந்த அன்றைய மக்கள் காபிர்கள் என்று அழைக்கப் பட்ட காரணம், அவர்கள் அல்லாஹ்வை நேரடியாக அணுகமுடியாது! இடைத்தரகர்கள் வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.

அவர்களிடம் இவ்வாறு நம்பும் நீங்கள் ஏன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கக் கூடாது என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள்: இவர்கள் அல்லாஹ்விடத்தில் எஙளுக்காகப் பரிந்து பேசுகின்றனர் எனக் கூறினார்கள் (அல்குர்ஆன்10:18)

இதே போன்றுதான் இன்றைய முஸ்லிம்கள் பலரின் பதிலும் இருக்கின்றது. அன்று வணங்கப்பட்டு வந்த சிலைகள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு வந்த நல்லோர்களின் உருவமேயாகும். நல்லோர்கள் இறந்துவிடுவார்களானால் அவர்களுக்கு சிலை செய்து வணங்கி வந்தார்கள் அன்றைய மக்கள். (அறிவிப்பவர்: ஆயிஸா(ரழி) நூல்: புகாரீ, முஸ்லிம்)

இன்று முஸ்லிம்களில் பலர் நல்லோர்கள் இறந்த பின் அவர்களுக்கு கப்ரு, தர்ஹா கட்டி அங்கே வழிபாடு நடத்தி வருகின்றனர். சிலை-கப்ரு என்று சொற்களில் தான் வேறுபாட்டைக் காண முடிகிறதேயன்றி மற்ற செயல்கள் எல்லாம் ஒன்றாகவே உள்ளன. கொள்கைகளும் ஒன்றாகத்தான் உள்ளன.

அவர்களிடம் கோவில்கள், இவர்களிடம் தர்ஹாக்கள். அங்கே சிலைகள் இங்கே கப்ருகள். அங்கே பூசாரிகள். இங்கே லெப்பை, சாப்புமார்கள். அங்கே தேர், இங்கே கூடு. அவர்களிடம் திருவிழாக்கள் இவர்களிடம் கந்தூரிகள்.அங்கேயும் உண்டியல்கள், இங்கேயும் உண்டியல்கள், இதற்கெல்லாம் மூல காரணமாக உண்டி வளர்ப்பதற்காக வைக்கப்பட்ட உண்டியல்கள்.

இப்போது சிறிது சிந்தித்து பாருங்கள். இந்நோக்குடன் கப்ருக்குச் செல்லும் முஸ்லிமிற்கும் இதே நோக்கத்தில் சிலைகளை வணங்கியவர்களுக்குமிடையில் ஏதாவது வேறுபாடு இருக்கின்றதா? அல்லாஹ் நம்மை அழைத்து, என்னை அழையுங்கள்! நான்தான் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவன். என்னைத் தவிர உங்கள் கஷ்டங்களை துன்பங்களைப் போக்கப் கூடியவன் யாருமில்லை என்று தன் திறுமறையில் பல இடங்களில் கூறி இருக்கும்போது, இவர்கள்  செய்து வரும் ஷிர்க்கான செயல்களை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்?

உங்கள் இறைவன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழையுங்கள்! (நான் உங்களின் பிரார்த்தனைகளை) அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைபட்டவர்களாக நரகில் நுழைவார்கள் (அல்குர்ஆன்40:60)

இஸ்லாத்தின் பெயரிலே வயிறு வளர்க்கின்ற சில வேஷதாரி மெªலவிகளின் பித்தலாட்டத்தின் காரணத்தாலும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி ஷேக்மார்களின் சதிமோசத்தாலும் சமுதாயத்திற்குள் ஏராளமான ஷிர்க்கான செயல்கள் ஊடுருவி உருமாறி காட்சியளிக்கின்றன.

தங்களை காதிரி என்றும், ஷாதுலி என்றும் கூறிக்கொள்ளும் எத்தனையோ நய வஞ்சக ஷேக்மார்கள் சமுதாயத்தில் மலிந்து விட்டனர். இந்த வேடதாரிகளின் வேஷம் கலையக் கூடிய நாள் நெருங்கி விட்டது. சமுதாயம் விழித்துக் கொள்ளத் துவங்கி விட்டது.

உங்களைக் கடலிலும், கரையிலும் காப்பாற்றக் கூடியவன் நான்தான்.என்னை அணுகுவதற்கும், நான் உங்கள் துஆக்களை அங்கீகரிப்பதற்கும் யாருடைய உதவியும் சிபாரிசும் தேவையில்லை என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான். ஆனால் இன்று முஸ்லிம்களில் சிலர் யாகுத்பா போன்ற தவறான பாடல்களை வணக்கமெனக் கருதி பயபக்தியோடு பாடி வருகின்றனர். இறந்து போனவர்களை அழைத்து என்னுடைய தலைவரே! எனக்கு அபயம் அளித்து உதவக்கூடியவரே! என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவரே! எதிரிகள் என்னைத் தாக்காமலிருக்க எனக்குப் பாதுகாப்பு அளியுங்கள். என்ற பொருள் கொண்ட கவிதைகளை மவ்லிது என்ற பெயரில் ஓதி வருகின்றனர். புதிய புதிய சினிமா மெட்டுகளில் நடத்தப்படும் இந்தக் கச்சேரிக்கு தலைமை தாங்குகின்ற போலி அறிஞர்கள் எத்தனை?

அந்தோ பரிதாபம்! அல்லாஹ்விடம் கேட்க வேண்டியவற்றை அல்லாஹ் அல்லாதவர்களிடம், அதுவும் இறந்தவர்களிடம் கேட்பது ஷிர்க்கா? இல்லையா? என்று சிந்தித்துபாருங்கள்! அல்லாஹ் ஏன் இணைவைத்தலை மன்னிப்பதில்லை என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இத்தகைய கொடிய பாவத்திலிருந்தும் விடுபட்டு, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நில்லுங்கள்! பிறருக்கும் சொல்லுங்கள்! அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் நடத்திடப் போதுமானவன்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

உயிரே ஓடி வா!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَن تَنَزَّلُ الشَّيَاطِينُ  تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ

“எவர் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் ஷைத்தான்கள் இறங்குகின்றனர்”. (26:221,222)

மனிதன் இறந்தபின் அவனது உயிர் எங்கே செல்கின்றது என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் இன்னும் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியவில்லை. அதுபற்றி நாம் அக்கறை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல இறைவனும் அவனது தூதரும் நமக்கு போதுமான விளக்கத்தை தந்துள்ளனர்.

குர்ஆன், ஹதீஸை ஆராய நேரமில்லாதவர்கள் இறந்தவர்களின் உயிர் பற்றி தவறான கருத்துக்கள் கொண்டுள்ளனர். அதனை மக்களிடம் பிரச்சாரமும் செய்கின்றனர். “இறந்து போன நல்லவர்களை நாம் பலமுறை அழைக்கும்போது அவர்கள் அந்த இடத்துக்கு ஓடி வருகிறார்கள்”. இது நம்மில் சிலரது நம்பிக்கை. வேறு சிலர் “இறந்து போன நல்லவர்களின் உயிர்கள் உயிருடன் உள்ளவர்களின் உள்ளே இறங்கி பேசுகின்றன” என்று கருதுகின்றனர். இரண்டுமே தவறான நம்பிக்கையாகும்.

நல்லடியார்களில் பல பிரிவினர் உண்டு. நபிமார்களுக்கு அடுத்த இடத்தை ‘அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம்’ அடைந்தோர் பெறுகின்றனர்.


وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள். (2:154)

அவர்கள் இறைவனிடம் எவ்வாறு  உயிருடன் உள்ளனர்  என்பதை  நபி(ஸல்) அவர்கள் விளக்க முற்படும் போது,  அவர்களின் உயிர்கள்  பச்சை நிறத்துப்  பறவைக் கூட்டுக்குள்  நுழைந்து  சுவனத்தில் தான் நினைத்தபடி சுற்றித் திரிகின்றன என்று குறிப்பிட்டார்கள். ஆதாரம்:முஸ்லிம், அறி:இப்னு மஸ்ஊது(ரழி)

இத்தகைய உயர்ந்த நிலையை அடைந்துள்ள ஷஹீத்கள் தங்களுக்குக் கிடைத்த இந்த பெரும்பேரை, உலகுக்கு வந்து சொல்லிவிட்டு திரும்புவதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்டனர். அல்லாஹ் “உங்கள் சார்பாக உங்கள் நிலையை நான் உலக மக்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறி மேற்கூறிய வசனத்தையும், அதற்கு அடுத்து வருகின்ற இரண்டு வசனங்களையும் இறக்கினான் என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தனர். ஆதாரம்: அபூதாவூது அறி:அபூஹுரைரா(ரழி)

மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம் அடைந்தவர்கள் சுவனத்தில் பறவை வடிவத்தில் வாழ்கின்றனர் என்பதையும், அவர்கள் இந்த உலகுக்கு வந்து உடனே திரும்பிச் செல்ல அனுமதி கேட்டும் அல்லாஹ் அதற்கு அனுமதிக்கவில்லை என்பதையும் நமக்குத் தெளிவாக்குகின்றன.

خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلاً “அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து வேறிடம் செல்ல விரும்பமாட்டார்கள். (18:108)

அல்லாஹ்வின் பாதியில் வெட்டப்பட்டோரின் உயிர்கள் இந்த உலகுக்கு வரமாட்டா என்று தெளிவாகின்றது.  ஏனைய நல்லடியார்களின் நிலைபற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

கப்ரில் நல்ல மனிதனை வைக்கப்பட்டு அவனிடம் விசாரணைகள் முடிக்கப்பட்டவுடன் அவனுக்கு உரிய இடத்தைக் சுட்டி காட்டி இதுவே கியாமத் நாள் வரை உமது தங்குமிடமாகும் என்று மலக்குகள் கூறுவர். ஆதாரம்:புகாரி, முஸ்லிம் அறி:அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி)

கப்ரில் மனிதன் வைக்கப்பட்டு விசாரணைகள் முடிந்த உடன் “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று எனக்குக் கிடைத்த மகத்தான வாழ்வை பற்றி கூறிவிட்டு வருகிறேன்” என்று கேட்பார். (பேசாமல்) புதுமணமகனை போல் அயர்ந்து உறங்குவீராக! என்று அவருக்குக் கூறப்படும். ஆதாரம்: திர்மிதி அறி:அபூஹுரைரா(ரழி)

கப்ரில் வைக்கப்பட்டு விசாரணை முடிந்தபின் சுவனத்து ஆடைகள் அணிவிக்கப்பட்டு, சுவனத்து விரிப்பு விரிக்கப்படும். சுவனத்தின் நறுமணம் அவர்களை நோக்கி வீசிக் கொண்டிருக்கும். ஆதாரம்: அபூதாவூது அறி:பரா இப்னு ஆஸிம்

மேற்கூறிய நபிமொழிகளிலிருந்து இறந்துவிட்ட நல்லடியார்கள் ‘சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் என்றும், ‘இன்னும் சிலர் மண்ணறையிலேயே சுவனத்து இன்பங்களில் திளைத்துக் கொண்டுள்ளனர் என்றும், அவர்கள் இவ்வுலகுக்கு வந்து செல்ல அனுமதி கேட்டும் அவர்களுக்கு அனுமதி தரப்படாது என்பதையும் தெளிவாகவே நம்மால் விளங்க முடிகிறது.

இறந்துபோன நல்லடியார்கள் எவரும் திரும்பவும் இந்த உலகுக்கு விஜயம் செய்கிறார்கள் என்றோ, இன்னொருவர் உடலுக்குள் வந்து புகுந்து கொள்கின்றனர் என்றோ யாரேனும் நம்பினால் மேற்கூறிய அல்லாஹ்வின் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும் மாறு செய்த மாபெரும் குற்றவாளியாகின்றனர்.

மனிதனது உடலுக்குள் புகுந்து கொண்டு ஆள்மாறாட்டம் செய்வது ஷைத்தான்தான், நல்லடியார்கள் அல்ல; அதனை நாம் இக்கட்டுறையின் துவக்கத்தில் எழுதிய குர்ஆன் வசனத்தில் புரிந்து கொள்ளலாம். பொய் சொல்கின்ற, தீய செயல்கள் செய்கின்றவர்கள் மீதுதான் ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு ஏற்ப, இன்று பேயாடுவோர், பல்வேறு இறை கட்டளைகளை உதாசீனம் செய்தவர்களே; அவர்களையே ஷைத்தான் ஆட்டுவிக்கிறான்.

நல்லடியார்கள் தங்களுக்கு  அல்லாஹ்வினால் தரப்பட்டிருக்கும் அளவிட முடியாத பெரும் சுக வாழ்வை  அனுபவித்துக் கொண்டுள்ளனர். சுவனத்து இன்பங்களில் திளைத்தவர்களாக உள்ளனர். சுகமான நித்திரையில் இருக்கின்றனர். அழியாத பெருவாழ்வை அடைந்துள்ள நல்லவர்கள் அழிந்துவிடக்கூடிய இந்த அற்ப உலகத்துக்கு எப்படி வருவார்கள்? நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை.


إِنَّ الَّذِينَ آمَنُواْ وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلاً
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு நல்ல செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும். (18:107)

இந்த திருக்குர்ஆன் வசனம் இந்த உண்மையைத்தான் நமக்கு உணர்த்துகின்றது. ‘உயிரே ஓடி வா’ என்று அழைத்தவுடன் எவரது உயிரும் இங்கே வரப்போவதுமில்லை. பிறரது உடலுக்குள் புகுந்து கொள்வதுமில்லை.

உறுதியான ஈமான் இல்லாதவர்களிடமும், தீய செயல் புரிவோரிடமும், கோழை மனது கொண்டவர்களிடமும், ஷைத்தான்கள் ஊடுருவிக் கொண்டு உளறுகின்றவைகளைக் கண்டு, பாமர மக்கள் ‘வலியுல்லாஹ்’ வந்து விட்டதாக நம்பி வருகின்றனர். இவ்வாறு நம்புவதன் மூலம் சுவனத்து இன்பங்களையும், அல்லாஹ்வின் நேசர்களையும் அவமதிக்கின்றனர்.

அல்லாஹ் இதுபோன்ற தவறான நம்பிக்கை கொள்வதிலிருந்து நம்மைக் காப்பாற்றுவனாக! ஆமீன்!!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

தவணை முறை வியாபாரம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மூமின்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக்கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (4:29) நபி(ஸல்) அவர்கள் ஒரு வியாபரத்தில் இரு வியாபாரங்கள் செய்வதைத் தடை செய்தனர். (அபூஹுரைரா(ரலி) திர்மிதீ, அபூதாவூத், நஸயீ இன்று பரவலாக நாடெங்கும் தவணை முறை வியாபாரம் நடந்துக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இவ்வியாபாரம் நடைபெறாத ஊரே இல்லை எனக்கூறலாம். வியாபாரத்தில் நம்பிக்கை நாணயம் அவசியம் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில் இப்படித்தான் வியாபாரம் செய்யவேண்டும் எப்படியும் செய்யலாம் என்பது கூடாது என்று வியாபாரத்திற்கான வழிமுறைகள் வகுத்துத் தரப்பட்டுள்ளது. ரொக்கத்திற்கு வியாபாரம் செய்வதை இஸ்லாம் ஆகுமாக்கியது போன்றே தவணைக்கு வியாபாரம் செய்வதையும் ஆகுமாக்கியுள்ளது. தவணைக்கு வியாபாரம் செய்வதைல் சிக்கல் பிரச்னை ஏற்படாமலிருக்க தவணைக் காலம், பொருளின் விலை முதலியவற்றை தெளிவாக முடிவு செய்துகொண்டதன் பிறகே எதையும் விற்கவோ, வாங்கவோ செய்யவேண்டும் என வழியுறுத்துகிறது. மேற்காணும் ஹதீஸில் ஒரு வியாபாரத்தில் இரு வியாபாரங்கள் கூடாது என்பதன் பொருள் வருமாறு: ஒருவர் தமது பொருளை ரொக்கமானால் 100 ரூபாய்க்கும், 2 மாதத் தவணை என்றால் 150 ரூபாய்க்கும் தருவதாகக் கூறும்போது ரொக்கமா? தவணையா? என்று எந்த முடிவும் செய்துகொள்ளாமல் பொருளை அடுத்த நபரிடம் விற்று விடுவது கூடாது. இவ்வாறே ஒருவர் எனது மாட்டை உமக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குத் தந்து விடுகிறேன், நீர் உன் ஆட்டை எனக்கு ஆயிரம் ரூபாய்க்குத் தந்துவிடும் என்று கூறி நிபந்தனை வைத்து வியாபாரம் செய்கிறார் என்றால் இத்தகைய வியாபாரமும் கூடாது. அவ்வாறின்றி ஒருவர் தமது பொருளை ரொக்கமானால் ரூபாய் 100 க்கும் 2 மாதத் தவணை என்றால் ரூபாய் 150 க்கும் தருவதாகக் கூறும்போது, வாங்குபவர் இரண்டில் ஒரு விலைக்கு சம்மதித்து வாங்கிக்கொள்வாரானால் இதில் சிக்கலோ, பிரச்னையோ எற்பட வழியில்லை. இம்முறையில் வியாபாரம் செய்தால் “ஒரு வியாபாரத்தில் இரு வியாபாரங்கள்” செய்த நிலை ஏற்படாது. காரணம் இவர் ஒரு வியாபாரத்தில் ஒரு வியாபாரம் மட்டும்தான் செய்திருக்கிறார். இரு வியாபாரங்கள் செய்யவில்லை. ஆனால் ஒரு பொருளுக்கு ரொக்கத்துக்கு ஒரு விலையும், தவணைக்கு ஒரு மற்றொரு விலையும் என்பதாக இரு விலை கூறியிருக்கிறார். ஆனால் ரொக்கமோ, தவணையோ இரண்டில் ஒன்றுக்குத்தான் வியாபாரம் செய்திருக்கிறார். இவ்வாறு ரொக்கத்திற்கு ஒரு விலையும், தவணைக்கு மற்றோர் விலையுமாக விற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. மேலும் எப்பொருளையும் மார்கட் விலையைவிட கூடுதலாக விற்பது கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. காரணம் சரக்குகளை எல்லா வியாபாரிகளும் ஒரே அமைப்பில் கொள்முதல் செய்வதில்லை. ஒருவர் கடனுக்கும், மற்றொருவர் ரொக்கத்திற்கும், ஒருவர் சரக்கை ஒருவர் அடுத்தள்ள இடத்திலுருந்தும், மற்றொருவர் தூரத்திலிருந்தும் கொள்முதல் செய்திருப்பார்கள். ஆகவே தவணை முறை வியாபாரம் செய்வது ஆகும்.

அபிவிருத்தியில்லா வியாபாரம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

உலக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது வியாபாரம் தான். இந்த வியாபாரத்தை செய்யவேண்டிய முறைப்படி செய்கிறார்களா? என்றால் பெரும்பாலும் இல்லை. மற்றவர்களை ஏமாற்றுதல், மோசடி செய்தல், அபகரித்தல் போன்ற சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய காரியங்கள் நிறைய நடைபெறுகின்றன. எவ்வாறு மோசடிகள் நடைபெறுகின்றன என்பதை கீழ்காணும் திருமறை குர்ஆனின் வசனம் மூலமும், நபிமொழி மூலமும் நன்கு விளங்கிக் கொள்ளலாம். (எடையிலும்,அளவிலும்) குறைவு செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்குவார்கள். (ஆனால்,) அவர்கள் (மற்றவர்களுக்கு) அளந்து கொடுத்தாலோ அல்லது நிறுத்துக் கொடுத்தாலோ குறைவு செய்வார்கள். அல்குர்ஆன் 83:1-3 நபி (ஸல்) அவர்கள் ஒரு தானியக் குவியலுக்கு அருகில் சென்றார்கள். தமது கையை அந்தக் குவியலுக்குள் விட்ட போது, விரல்களில் ஈரம்பட்டது. அப்போது “உணவு வியாபாரியே! இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கவர்,” அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது.” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா?” என்று கூறிவிட்டு, “யார் மோசடி செய்கிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்லர்” எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ”ரைரா(ரலி) நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது போலவே, இப்போது நாம் வசிக்கும் பகுதியிலும் மோசடி, கலப்படம் போன்ற வியாபார நேர்மையற்ற தன்மை அதிகமாக காணப்படுகிறது. தாய் பாலைத்தவிர அனைத்திலும் கலப்படம் என்ற நிலை பரவிக் கிடக்கிறது. பருப்பு, எண்ணெய், அரிசி உட்பட எல்லா உணவுப் பொருட்களிலும் கலப்படம் கொடிகட்டிப் பறக்கிறது. மக்களை ஏமாற்றுவது வணிகத்தின் மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. பொருட்களில் உள்ள குறைகளை மறைத்து நல்ல சரக்கு என்று கூறி விற்பனை செய்யப்படுகிறது. அல்லது ஒருவர் கொள்முதல் செய்யும் போது கொடுக்காத பணத்தை கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து வாங்குபவர்களை கவர்ந்து விற்பனை செய்கிறார். இவ்வாறான தவறான வியாபார நடவடிக்கைகளை ஒருவர் செய்வதற்கு முக்கியமான காரணம் மிகவும் அதிகமான லாபம் அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அதிக லாபம் அடைவது போல் தோன்றினாலும் உண்மையில் அவன் செல்வத்தில் அபிவிருத்தி அடையமாட்டான். எனவே, விற்பவரும், வாங்குபவரும் வியாபாரப் பொருளை நன்கு பார்த்து, உண்மையிலேயே குறைகள் இருந்தால், அவற்றை தெளிவுப் படுத்தி வியாபாரம் செய்ய வேண்டும். அதன் மூலம் வியாபாரிக்கும், வாங்குபவருக்கும் அபிவிருத்து உண்டு. ‘விற்பவரும், வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரம் பரக்கத் செய்யப்படும். அவர்கள் பொய் சொல்லி மறைத்தால், அவர்களுக்கு இலாபம் கிடைக்கலாம். ஆனால், வியாபாரத்தில் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷான் (ரலி) நூல்:புகாரி இது மட்டுமல்லாமல், இத்தகைய தவறான நடவடிக்கைகளை அல்லாஹ் கடுமையாக கண்டிக்கிறான். “மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களைப் பார்க்க மாட்டான். அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நஷ்டமடைந்த அவர்கள் யார்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்” செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன், (பெருமைக்காக) தனது வேஷ்டியைத் தரையில் படுமாறு அணிபவன், தனது சரக்குகளை பொய்ச் சத்தியம் செய்து விற்பவன்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூதர் (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ மேலும், அரபு நாட்டில் செங்கடலுக்கு வடமேற்கு பகுதியில் “மத்யன்” என்ற பகுதி இருந்து வந்தது. இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அளவிலும், எடையிலும் பயங்கர பொருளாதார மோசடிகளைச் செய்து வந்தார்கள். அம்மக்களைத் திருத்துவதற்காக சுஐபு நபியை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர் உபதேசித்தார். அதை அம்மக்கள் கேட்கவில்லை. அவரைப் புறக்கணித்தனர். அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது. இது பற்றி திருமறை குர்ஆனின் வசனங்களை (7: 85-92 வரை)க் காணலாம். “ஆகவே,அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது.அதனால்,அவர்கள் (காலையில்) தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர்.” (அல் குர்ஆன் 7:91) சுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர். சுஐபைப் பொய்ப்பித்தவர்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள். (அல் குர்ஆன் 7:92) மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் கூறும் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும். இந்தியாவில் சமீப காலத்தில் பூகம்பம் நடந்த பகுதி குஜராத் மாநிலமாகும். இந்த மாநிலம் தான் இந்தியாவிலேயே அதிகமாக வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்ற பகுதியாகும். என்ன விதமான மோசமான வர்த்தக, வியாபார முறைகேடுகளில் ஈடுபட்டார்களோ, அவர்களையும் பூகம்பம் பிடித்துக் கொண்டது. எனவே, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இன்ஷா அல்லாஹ் நேர்மையான வியாபாரம் செய்வோமாக!