இஸ்லாம்தளம்

பிப்ரவரி25, 2009

நான் இஸ்லாத்தை தழுவியவிதம் Shariffa Carlo தமிழில் ஜகபர் அலி சிங்கப்பூர்

Filed under: வகைப்படுத்தப்படாதது — islamthalam @ 12.24

நான் இஸ்லாத்தை தழுவிய விதம் பல திட்டங்கள் அமைந்தவை. நான் ஒரு திட்டம் வகுத்தேன். நான் சார்ந்த குழுவினர் ஒரு திட்டம் வகுத்தார்கள். அல்லாஹ் ஒரு திட்டம் போட்டு என்னை இஸ்லாத்தை தழுவச் செய்தான். திட்டம் வகுப்பதில் அல்லாஹ் மிக மேலானவன். என்னுடைய பருவ வயதில் நான் இஸ்லாத்திற்கு எதிரான தீவிர நோக்கம் கொண்ட ஒரு குழுவினரால் ஈர்கப்பட்டேன். இவர்களில் பெரும்பாலோர் அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்கள். இவர்கள் இப்பதவியில் இருந்துக்கொண்டே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி கொண்டிருந்தார்கள். அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லாமல் தங்கள் பதவிகளை தவறாக பயன்படுத்தினார்கள்.

என்னிடம் இயற்கையிலே அமைந்த துணிச்சல், தன்னம்பிக்கை பெண்ணுரிமைக்காக போராடும் தன்மையைக் கண்டு என்னை அவர்கள் அனுகி International Relations என்ற கல்விப் பயிற்சியை முடித்தால் எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றவும் அதனைக் கொண்டு அங்கு பெண்களுக்கு பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து போராட வேண்டும் என்று அவர்கள் கூறியது எனக்கு பொருத்தாமகத் தோன்றியது.  எகிப்திய பெண்களை நான் தொலைக்காட்சியில் பார்த்ததில் அவர்கள் பளு, சுமை நிறைந்தவர்களாக கண்டதால் அவர்களை சுதந்திர இருபதாம் நூற்றாண்டிற்கு வழிகாட்ட நினைத்தேன்.

இஸ்லாமிய நாட்டில் இந்தப் பணியை தொடங்க இருப்பதால் நான் குர்ஆனையும், ஹதீதையும் இஸ்லாமிய வரலாறுகளையும் கற்றுக்கொண்டேன். நாங்கள் கொண்ட நோக்கப்படி இஸ்லாத்தை பற்றி பிரச்சாரத்தின் மூலம் திசை திருப்ப ஆரம்பித்தேன். அதனால் எனக்கு  மிக பயமாகவும் இருந்தது. இதை முறியடிக்க கிறிஸ்தவத்தை கற்க எண்ணி மதிப்பும் மரியாதையும் உள்ள ஒரு (Ph.D in Theology, Harvard University) பேராசிரியரிடம் அனுப்பப்பட்டேன். நான் ஒரு சிறந்த பேராசிரியரிடம் தான் கிறிஸ்தவத்தை கற்க போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் உண்மை அப்படி அல்ல. காரணம் அவர் ஒரு (Unitarian Christian ) அதாவது மாதா, பிதா, பரிசுத்தஆவி என்ற கிறிஸ்தவ கொள்கையில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. உண்மையில் ஜீஸஸ் (ஈஸா நபி) அவர்களை இறைவனின் தூதர் என்றுதான் நம்புகிறார்.

இதனை நிரூபிக்க அவர் என்னிடம் பழைய பைபிள் மூல நூல்களை (Greek, Hebrew, and Aramaic) எடுத்து பைபிளில் எங்கெங்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று என்னிடம் நிரூபித்தார். இதைக் கண்டதும் நான் என் கிறிஸ்தவ மதத்தின் மீது உள்ள நம்பிக்கையை இழந்தேன். இருந்த போதிலும் எந்த நோக்கத்தோடு இந்தப் பணியில் சேர்ந்தேனோ என் எதிர்கால வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படித்து வந்தேன். இதற்கிடையில் இஸ்லாத்தை அறியும் பொருட்டு முஸ்லிம் சகோதரர்களிடம் உரையாடி வந்தேன்.

என்னுடைய ஆர்வத்தை கண்ட முஸ்லிம் சகோதரர் (MSA)என்னுடை சந்தேகங்களை களைந்து இஸ்லாத்தை மேலும் கற்றுக்கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ். அச்சகோதரருக்கு மென்மேலும் அல்லாஹ் நன்மையை அளித்தருள்வானாக!

ஒரு நாள் இந்த சகோதரர் என்னிடம் இருபது முஸ்லிம் சகோதரர்கள் (ஜமாஅத்) வந்திருப்பதாகவும் இஷா வேளைக்குப் பிறகு அதில் கலந்து கொள்ளும்படியும் கூறினார். நான் அங்கு சென்று கலந்து கொண்டேன். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். அவர் அதிகம் கிறிஸ்தவத்தை அறிந்தவராயிருந்தார். நானும் அவரும் பைபிளையும், குர்ஆனையும் பல கோணங்களில் காலை பஜ்ர் நேரம் வரை கருத்து பரிமாற்றமும் விவாதமும் செய்தோம்.

மூன்று ஆண்டுகளாக நான் இஸ்லாத்தைப் பற்றி சொல்லி கொடுக்கப்பட்டேன், வாதம் புரிந்தேன், குறை சொல்லப்பட்டேன் ஆனால் யாரும் என்னை இஸ்லாத்தை தழுவ அழைப்பு  விடுக்கவில்லை. ஆனால் இவர் என்னை இஸ்லாத்தை தழுவும்படி அழைப்பு விடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் என் இதயத்தை திறந்தான். நான் முஸ்லிமாக விருப்பம் தெரிவித்து கலிமாவை மொழிந்து நிம்மதி பெருமூச்சு அடைந்தேன். நான் எனது இறுதி நாள் வரை சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன். ஆமீன்!

இறைவனால் இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்! அபூ ஷமீமா, விருதை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெருகிறீர்கள். (7:3)

அல்லாஹ் இவ்வசனத்தின் கருத்தின்படி நாம் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும் அவனால் அனுப்பப்பட்ட நபிصلى الله عليه وسلم அவர்களை மாத்திரமே பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக மற்றவர்களைப் பாதுகாவலர்களாக நம்பி பின்பற்றுவோமேயானால் நிச்சயமாக நாம் பகிரங்கமாக வழிகேட்டிலேயே ஆகிவிடுவோம்.

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது (நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி),ஜாபிர்(ரழி) புகாரீ,நஸயீ, முஸ்லிம்)

எனவே நபி அவர்கள் சொல்லாத செய்யாத அங்கீகரிக்காத அனைத்து செயல்களும் நம்மை நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடான செயல்களே! ஆனால் இன்று முஸ்லிம்கள் இந்த பித்அத்தான வழிகேடான செயல்கள் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் வாழ்கின்றனர். அவர்கள் இதன் கடுமையை உணர வேண்டும்.

மார்க்கம் என்பது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்டது. மார்க்கத்தில் உள்ள அமல்களையும் சட்ட திட்டங்களையும், ஏவல் விலக்கல்களையும் ஏற்படுத்தி நபி அவர்கள் மூலமாக அல்லாஹ் நமக்கு அருளச் செய்தான். எப்படி வணக்கத்திற்குரியவன் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் உரிய தனித்தன்மையோ அதுபோல மார்க்கத்தில் கட்டளையிடுதல் என்பதும் அல்லாஹ்வின் தனித்தன்மையில் உள்ளதாகும். நபி அவர்கள் கூட மார்க்கத்தில் தன் விருப்பத்திற்கேற்ப எந்த செயல்களையும் மார்க்கமாக அறிவித்துவிட முடியாது.

وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى  إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى  عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى
அவர்கள் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹிமூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. மிக்க வல்லமையுடையவர் (ஜிப்ரயீல்) அவருக்கு கற்றுக்கொடுத்தார். (53:3-5)

என்பதாக அல்லாஹ் கூறுகிறான். அப்படியே ஒரு சமயம் தங்களுடைய மனைவியர்களின் விருப்பத்திற்காக ஒரு பொருளை ஹராமாக்கிக் கொண்டதற்காக உடனே கண்டித்து அல்லாஹ் ஆயத்தை இறக்கி வைத்தான்.


يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (66: 1)

அல்லாஹ் நபி அவர்கள் மீது மிக அதிக பிரியமுடையவன். அத்தகைய பிரியமுள்ள நபியே சொல்லி விட்டார்கள் என்பதற்காக அல்லாஹ் நபி அவர்கள் கூறியதை அனுமதித்திருக்கலாம் அல்லவா? ஏன் அனுமதிக்கவில்லை? ஏனென்றால் மார்க்கத்தில் ஹலால், ஹராமை ஏற்படுத்துவது அல்லாஹ்வின் தனித்தன்மை. இதில் தன்னுடைய நபியையே அனுமதிக்கவில்லையென்றால் இன்று இமாம்கள் பெரியார்கள் முன்னோர்களின் பெயரால் நபி காட்டித்தராத செயல்களை எல்லாம் மார்க்கமாக எண்ணி செயல்படுவதை அல்லாஹ் எவ்வாறு ஏற்றுக்கொள்வான் இதனைச் சிந்திக்க வேண்டாமா?

மேலும் நபி காட்டித் தராத செயல்களை எல்லாம் நன்மை என எண்ணிச் செய்தால் இந்த நன்மையான செயல்களை நபி அவர்கள் நமக்கு காட்ட மறந்துவிட்டார்களா? அல்லது மறைத்து விட்டார்களா? அல்லது அவர்களுக்கே அது நன்மையான செயல் என்று தெரியாமல் போய்விட்டதா? இது நபி அவர்களின் தூதுவத்தையே களங்கப்படுத்தக் கூடிய எவ்வளவு பெரிய கொடுஞ்செயல் என்பதை ஏனோ இவர்கள் உணரவில்லை. இதைவிட கொடுஞ்செயல் என்னவென்றால் இதுவெல்லாம் மார்க்கம், நன்மையான செயல் என்று அல்லாஹ்வுக்கே அவர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள் போலும்.

அல்லாஹ் முக்காலத்தையும் அறிந்தவன். இன்று இவர்கள் நபி அவர்கள் செய்து காட்டாத எந்தெந்த செயல்களையெல்லாம் நன்மை என்று எண்ணிச் செய்கிறார்களோ இதனையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே உள்ளான். அப்படியிருக்க இவர்கள் செய்யும் இச்செயல்களெல்லாம் அல்லாஹ்விடத்தின் நன்மையான விஷயங்களாக இருக்குமேயானால் நபி அவர்களை இச்செயல்களை செய்யும்படி அல்லாஹ் ஏவியிருக்கமாட்டானா? ஏவியிருப்பானே? அப்படியெனில் ஏன் ஏவவில்லை? இச்செயல்களெல்லாம் நன்மையானது என அல்லாஹ்விற்கே தெரியாமல் போய்விட்டதா? (நவூது பில்லாஹ்)

“வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள். (உமர்(ரழி)நூல்:ரஜீன்)


قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا  الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
அல்லாஹ் கூறுகிறான், செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல் குர்ஆன் 18:103,104)

எனவே பெரியார்கள் முனோர்களின் பெயரால் மார்க்கத்தில் இட்டுக்கட்டி அதனை கண்மூடித்தனமாக பின்பற்ற சொல்லும் வர்க்கத்தினரை நம்பிச் செயல்படாமல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தையும், அவனால் அனுப்பப்பட்ட நபி அவர்களின் சுன்னத்தான வாழ்க்கையின்படி வாழக்கூடிய மக்களாக வாழ வல்ல அல்லாஹ்(ஜல்) நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

இஸ்லாமிய அழைப்புப்பணி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாத்தைப் பற்றித் தவறான பல கருத்துக்கள் குறிப்பாக செய்தி ஊடகங்களால் பரப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் கருத்துகள் திணிக்கபடுகின்றன. இச்சூழலில் நாம் மதி நுட்பத்துடன் அழைப்புப் பணிச் செய்ய கடமைப்பட்டுள்ளோம். சாதாரணமாக முஸ்லிம்களாகிய நாம் அழைப்புப் பணிச் செய்யும்போது, கருத்துகளை பூசி மெழுகும் பாணியைத்தான் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளை மதி நுட்பத்தைப் பயன்படுத்தி கலைக்கும் பணியை நாம் மேற்கெள்ள வேண்டும்.

உதாரணமாக முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் மக்கள் கூறும்போது, நான் “அடிப்படைவாதி” என்பவன் யார் என்ற கேள்வியை எழுப்புவேன். அடிப்படைவாதி என்பவர் ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது நம்பிக்கையின் அல்லது படிப்பின் அடிப்படைகளை பின்பற்றுபவர் ஆவார். உதாரணமாக ஒரு மருத்துவர் நல்ல மருத்துவராக இருக்கவேண்டும் எனில் மருத்துவத்தின் அடிப்படைகளை அறிந்து புரிந்து அதனை செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். மருத்துவத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதியாக இருக்காவிடில், அவர் ஒரு நல்ல மருத்துவராக இருக்க முடியாது. என்னை பொருத்தவரை ஒரு முஸ்லிம் அடிப்படைவாதி என்று என்னை அழைத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏனெனில் நான் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறிந்து புரிந்து அவற்றை பின்பற்றுபவனாக இருக்கிறேன். மனித குலத்திற்கு எதிரான ஏதாவது ஒரேயொரு அடிப்படை அம்சத்தை சுட்டிக் காட்டுமாறு இஸ்லாத்தை விமர்சிப்போருக்கு நான் சவால் விடுகிறேன். இஸ்லாத்தைப் பற்றி தெரியாத ஒருவர் இஸ்லாத்தின் சில அடிப்படை அம்சங்களை மனித குலத்திற்கு எதிரானது என்று எண்ணலாம். ஆனால் அவரது சந்தேகங்களுக்கு அறிவுப் பூர்வமாக விளக்கம் அளித்தால், எந்தவொரு மனிதராலும் மனித குலத்திற்கு எதிரான ஒரேயொரு விஷயத்தைக் கூட இஸ்லாத்தில் சுட்டிக்காட்ட முடியாது.

அடிப்படைவாதி என்பதற்கு பொருள், பழங்கால மதங்களில் ஏதாவது ஒன்றின் கோட்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுபவர் என்று ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி கூறுகின்றது. ஆனால் ஆக்ஸ்போர்ட் அகராதியின் புதிய பதிப்பை நீங்கள் படித்தால் இந்த பொருளில் சிறிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். புதிய பதிப்பில் பழங்கால மதங்களில் ஏதாவது ஒன்றில் குறிப்பாக இஸ்லாத்தின் கோட்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுபவரே அடிப்படைவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்லாம் என்ற வார்த்தை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே “அடிப்படைவாதி” என்ற சொல்லை கேள்விப் பட்டவுடனேயே, முஸ்லிமைப் பற்றிய எண்ணம் தான் ஒருவரது எண்ணத்தில் வரும். முஸ்லிம் என்றாலே அடிப்படைவாதி, பயங்கரவாதி என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

பயங்கரவாதி என்பவன் அப்பாவி மக்களை கதிகலங்க வைப்பவன் என்ற பொருளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். இந்த அடிப்படையில் எந்தவொரு முஸ்லிமும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. எந்தவொரு அப்பாவியையும், எந்தவொரு சமயத்திலும் முஸ்லிம் ஒருவர் கதிகலங்க வைக்கக் கூடாது. சமூக விரோதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து முஸ்லிம்கள் கதிகலங்க வைக்கவேண்டும். இப்படியே நாம் விரிவாக விளக்கிக் கொண்டே போகலாம். எனவே மதி நுட்பத்துடன் நாம் கருத்துகளை மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.

இளைஞர்களை பொருத்தவரையில், இஸ்லாத்தின் சத்தியச் செய்திகளை எடுத்துரைக்க அவர்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. உதாரணமாக நான் ஒரு மருத்துவராக ஆக வேண்டும் என்று விரும்பியதற்குக் காரணம் மருத்துவப் பணி ஒரு உன்னதமான பணி என்பதால் தான். ஆனால் அதனைவிட சிறந்த பணியை பின்னர் நான் கண்டேன்.

திருக்குர்ஆனில் இறைவன்:

(41:33) وَمَنْ اَحْسنُ قَوْلا ًمِّمَّنْ دَعَآاِلىَاللهِ وَعمِلَ صَاِلحا ًوَّقَالَ اِنَّنِيْ مِنَ الْمُسْلِمِيْنَ

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல)அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று  கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)

எனவே மருத்துவப்பணியைவிட சிறந்த பணியாக அழைப்புப்பனி தென்பட்டபோது நான் அதனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். எனவே முஸ்லிமாகிய நாம் முஸ்லிம் என்று நம்மை அழைத்துக் கொள்வதில் வெட்கமடையத் தேவையில்லை. முஸ்லில்லாதவர்களின் உள்ளத்தில் உள்ள தவறான எண்ணங்களைப் போக்க நாம் மதி நுட்பத்துடன் முயற்சி செய்ய வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற போர்வையில் கடினப்போக்கை மேற்கொள்ளாமல் அன்புடனும் கணிவுடனும் முஸ்லிம் அல்லாதவர்களிடையே நாம் பணியாற்ற வேண்டும்.

இறைவனுக்குமா இடைத்தரகர்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம்களில் இன்று  பலர்  தர்ஹாவிற்கு  சென்று அங்கு  இறந்து  போன அவ்லியாக்களிடம் நேரடியாக தங்களுடைய தேவையை கேட்பதும், நேர்ச்சைகள் செய்வதும் அவர்களுக்காக விழா எடுப்பதும் அதற்கு ஆலிம்கள் எனப்படுவோர் இணைவைக்கும் இச்செயலை கண்டிக்காமல் அதனைக் கண்டும் காணாதது போல் இருப்பதும் மிக வேதனையானது.

நபி (ஸல்) கூறினார்கள்,”யஹுதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபித்துள்ளான். அவர்கள் தங்களது நபிமார்களுடைய கபுருகளை வணக்கஸ்தலமாக்கி விட்டனர்.” (புகாரி) நபிமார்களுடைய சமாதிகளையும், வலிமார்களுடைய சமாதிகளையும் கெளரவிக்கும் விஷயத்தில் எல்லை மீறி அவர்களிடம் நம் தேவைகளை துவா செய்தால், அதனால் சமுதாயத்தில் ‘ஷிர்க்’ என்னும் மாபாதகம் நடந்தேரும். மேலும் அல்லாஹ்வின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உள்ளாக நேரிடும் என்பதை உணர்த்தவே மேற்கண்ட ஹதீஸ் அறிவுறுத்துகிறது.

மற்றும் ஒரு ஹதீஸ் “அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பிருந்தோர் அவர்களது நபிமார்களுடைய அவர்களிடையே வாழ்ந்த நல்லடியார்களுடைய அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கினார்கள். ஆனால் நீங்கள் சமாதிகளை வணங்குமிடமாக்காதீர்கள். நிச்சயமாக நான் அதை விளக்கியுள்ளேன். இவ்வாறு கபுருள்ள இடங்களில் இறைவனை தொழவும் கூட நபி(ஸல்) அவர்கள் தடை செய்த நிலையில் உன்னத சமுதாயமென திருமறையால் புகழப்பட்ட முஸ்லிம்கள் இன்று தங்களது தேவைகளை தங்களது இறைவனிடம் கேட்க  வேண்டுமென்பதை  மறந்து  தம்மைப் போன்ற  சிருஷ்டிகளின் கல்லறைகளில்  மண்டியிட்டு  முறையீடு செய்வது பற்றி என்னென்று சொல்வது?  அது அநாகரிகமில்லையா? அது  இறைவனுக்கு  இணை வைக்கும் ‘ஷிர்க்’  ஆகுமா இல்லையா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

என்னுடைய அடக்கஸ்தலத்தை நீங்கள் உற்சவ ஸ்தலமாக்கி விடாதீர்கள். (நஸயீ) என்று இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்றால், இன்று நமது சமுதாயத்தினரிடையே உள்ள பலர் அவுலியாக்களின் சமாதிகளிலும், தர்காக்களிலும் நடத்துகின்ற பேய் கூத்துகளுக்கு ஏதாகிலும் அர்த்தமுண்டா?

திருமறையில் “முஷ்ரிக்குகள்” எனக் கூறப்பட்டவர்கள் ஏகத்துவத்தில் இணை வைப்பவர்களே. சூறே பாத்திஹாவில் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். நிராகரிப்பதற்குச் சமமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். பெரும்பாலான முஸ்லிம்கள் இதர சமுதாயத்தினரைப் போலவே தங்கள் தேவைகளை வேண்டுதல்களை அவுலியாக்களின் சமாதிகளை நாடிச் சென்று சிரம் குனிந்து குறைபாடுகளை முறையிடுகின்றனர். இவர்களது முறையீடுகளை அந்த நல்லடியார்கள் செவியுருகிறார்களா? என்றால், அல்லாஹ் கூறுகிறான், (நபியே) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது. (27:80)

பிரார்த்தனை அல்லது தேவைகளை முறையீடு செய்வது என்பதும் வணக்கமேயாகும். சிபாரிசு செய்யத் தகுதி பெற்றவர்கள் எனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரங்களை அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்த்தித்தும் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் “பிரார்த்தனை வணக்கத்தின் மூளை” (அனஸ்(ரலி),திர்மிதீ. “பிரார்த்தனை என்பதே வணக்கம்தான்” (நூமானுபின் பஷீர்(ரலி), அஹ்மத், திர்மிதீ) மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், என்னையே பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்கு பதிலலிக்கிறேன். (40:60)

“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கிறீர்களோ, அவர்களூம் உங்களைப் போன்ற அடிமைகளே. (7:194)

எவர் அவனையன்றி அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்.(13:14)

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேடவேண்டும், அவனிடம் மட்டும் தான் பிரார்த்தனை செய்யவேண்டும் எனவும் அல்லாஹ் திருமறையில் தெளிவுபட கூறுகிறான். மேலும் திருமறை கூறுகிறது.

இந்நிராகரிப்போர் நம்மை விட்டு விட்டு நம்முடைய அடியாளர்களை தங்களுக்கு உதவியாளர்களாக எடுத்துக் கொள்ளலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (18:102) என்று இறைவன் கேட்கிறான். சிலர் இந்த வசனம் விக்ரகங்களை வணங்கும் காபிர்களுக்கு இறங்கியது ஆகையால் முஸ்லிம்களுக்கு பொருந்தாது என தங்களது அறியாமையை வெளிப்படுத்துகின்றனர். இறைவன் இவ்வசனத்தில் நம்முடைய அடியார்கள் என்று குறிப்பிடுவதே மறைந்த மகான்களைத்தான் குறிக்கின்றது என்பதை உணரலாம்.

இப்படிப்பட்ட  வசனங்கள்  மூலமாக  குர்ஆனில்  அல்லாஹ்  இட்ட  கட்டளைக்கு  நபி (ஸல்) அவர்கள் எப்படி விளக்கம் கொடுத்தார்களோ அப்படி நடக்க வேண்டும். அல்லாஹ்வோ, நம்முடைய நபியோ “வலிமார்களின் தர்காக்களுக்கு சென்று உங்கள் தேவைகளை கேளுங்கள் அவர்கள் கொடுப்பார்கள்” என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் வாதத்துக்காக சிலர் குர்ஆனுக்கு தங்கள் இஷ்டம்போல் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுக்கிறார்கள்.

மேற்கூறிய விளக்கங்களிலிருந்து அல்லாஹ் அல்லாத இறந்து போன அவ்லியாக்களிடம் தங்களுடைய தேவைகளுக்காக வேண்டுகோள் வைப்பது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பட்ட செயல். முஸ்லிம்களை வழிகேட்டின்பால் கொண்டு சென்று மன்னிக்கப்படாத குற்றத்திற்கு ஆளாக நேரிட்டு நரகத்திற்கே இட்டுச் செல்லும் என்பதை நினைவில் கொள்வோமாக!

நற்குணம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு. நபி அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல, நபி அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி அவர்களின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத் தூண்டவுமில்லை. நபி அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை கண்டார்கள். நபி அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு சுட்டிக்காட்டினார்கள். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “”நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் “சீ’ என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.” (ஸஹீஹுல் புகாரி) நபி அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி அவர்கள் கூறினார்கள்: “உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.” (ஸஹீஹுல் புகாரி) நபி அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்) மேலும் கூறினார்கள்: “உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.” (ஸுனனுத் திர்மிதி) அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி அவர்களிடமிருந்து நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் “என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்” என்றார். நபி அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.” (அல் அதபுல் முஃப்ரத்) நபி அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக் கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக இருந்தார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும் உறுதிப்படுத்தினார்கள். முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம் காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான். மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது. முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை. நபி அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.” (ஸுனனுத் திர்மிதி) நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி அவர்கள் கூறினார்கள்: “ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.” (ஸுனனுத் திர்மிதி) நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும். நாங்கள் நபி அவர்களின் சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல் அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி அவர்களின் சபையில் எங்களில் எவரும் பேசமாட்டார். அப்போது சிலர் வந்து நபி அவர்களிடம் “அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?’ என்று வினவினர். நபி அவர்கள், “அவர்களில் குணத்தால் மிக அழகானவர்” எனக் கூறினார்கள். நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும். நாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும். நபி அவர்கள் கூறினார்கள்: “தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.” (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்) மற்றோர் அறிவிப்பில்: “ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்” என நபி அவர்கள் கூறினார்கள். தங்களது சொல், செயலால் நபி அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள். நபி அவர்கள் “அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை” என்று வினவினார்கள். அபூதர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்” என்றார். நபி அவர்கள், “”நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை” என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா) மேலும் கூறினார்கள்: “நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.” (முஸ்னத் அஹ்மத்) நபி அவர்கள்: “யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய். எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக” என்ற துஆவை வழமையாகக் கூறி வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்) ….(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர். (அல்குர்அன் 68:4) அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம். நற்குணம் என்பது முழுமையானதொரு வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம், விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது, நன்மையில் உறுதி, உளத்தூய்மை, முகமலர்ச்சி போன்ற பல நற்பண்புகள் உள்ளடங்கியுள்ளன. இஸ்லாமின் சமூகக் கண்ணோட்டத்தைப் பற்றி ஆராய்பவர் அச்சமூகத்தை மேன்மைப்படுத்தும்படியான நற்பண்புகளை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை கண்டுகொள்வார். சமூகத்தில் முஸ்லிம் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு இஸ்லாம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பொதுப்படையானதாக இல்லாமல் சமுதாயத்தின் ஒவ்வொரு நபர்களின் ஒவ்வொரு செயலிலும் அப்பண்புகளை இஸ்லாம் வளரச் செய்திருக்கிறது. சமூகம் அனைத்தையும் நற்பண்புகளால் அலங்கரித்த சாதனையை இஸ்லாமை தவிர வேறெந்த கொள்கையாலும் சாதிக்கமுடியவில்லை. இறையச்சமுள்ள முஸ்லிம் சமூகத்தில் தனித்தன்மை பெற்றுத் திகழ்வதற்காக, இஸ்லாம் எற்படுத்தியுள்ள மார்க்க நெறிகளைப் பின்பற்றுவது சிரமமானதல்ல என்பதை அதன் சான்றுகளை ஆராய்பவர்கள் அறிந்துகொள்வர். இறைவன் எற்படுத்திய வரம்புக்குள் நின்று, அவனது விலக்கலைத் தவிர்த்து, மார்க்க நெறிகளை முழுமையாக ஏற்று, முஸ்லிமின் இலக்கணமாகத் திகழ்பவரின் ஒவ்வொரு செயலிலும் நற்பண்புகள் பிரகாசிக்கின்றன. முஸ்லிம் மோசடிக்காரராக, வஞ்சகராக, எமாற்றுபவராக, பொறாமைக்காரராக இல்லாமல் அனைத்து மக்களிடமும் நற்குணத்துடன் நடந்துகொள்வார்.