இஸ்லாம்தளம்

பிப்ரவரி22, 2009

தொழுகையும், ஜக்காத்தும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எந்த ஆத்மாவையும்,அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திப்பதில்லை. அல்குர்ஆன் 23:62

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது மூஃமீன்கள் மீது கடமையாகும். அல்குர்ஆன் 2:45

(நபியே!) தொழுது வருமாறு நீர் உம் குடும்பத்தினரை ஏவும்.நீரும் அதன் மீது உறுதியாக இரும். நாம் உம்மிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. எனினும், உமக்கு வேண்டியவற்றையெல்லாம் நாமே கொடுத்து வருகின்றோம். முடிவான  நன்மை பரிசுத்த தன்மைக்குத்தான். அல்குர்ஆன் 20:132

தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். அல்குர்ஆன் 2:110

“ஈமானுக்கும் குஃப்ருக்கும் இடையே வித்தியாசம் தொழுகையை விடுவதே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) நூல்: முஸ்லிம்,திர்மிதி, அபூதாவூத்

நீங்கள் தொழுகையை கடைப்பிடித்துத் தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள், ‘ருகூவு’ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து)’ருகூவு’ செய்யுங்கள்.அல்குர்ஆன் 2:43

விசுவாசிகளே உங்களுடைய பொருள்களூம், உங்களுடைய சந்ததிகளும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து உங்களைத்  திருப்பிவிட  வேண்டாம். எவரேனும்  இவ்வாறு செய்தால், அத்தகையோர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்தாம். அல்குர்ஆன் 63:9

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). அல்குர்ஆன் 2:171

யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 2:277

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். அல்குர்ஆன் 2:277

(மறுமையின் சுவனவாசிகள்) சுவனபதியில் இருந்துக் கொண்டு, (நரகவாசிகளை நோக்கி) உங்களை நரகத்தில் புகுத்தியது எது” என்று குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கவர்கள், நாங்கள் தொழக்கூடியவர்களில் இல்லை, நாங்கள் ஏழைகளுக்கு  ஆகாரமளிக்கவில்லை வீணான காரியங்களில் மூழ்கிக்  கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக்   கிடந்தோம். கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். (நாங்கள் மரணித்து இதனை உறுதியாகக் காணும் வரையில்(இவ்வாறே இருந்தோம்) என்றும் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:40-47

மேற்கிலோ, கிழக்கிலோ உங்கள் முகங்களை திருப்புவது (மட்டும்) நன்மையாகிவிடாது. எனினும், எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் மலக்குகளையும், வேதத்தையும் நபிமார்களையும் மெய்யாகவே  விசுவாசித்து, பொருளை (இறைவனுக்காக) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிபோக்கர்களுக்கும், யாசகர்களுக்கும் விடுதலையை விரும்பியவர்களுக்கும் கொடுத்து தொழுகையையும் கடைப்பிடித்து ஜக்காத்தும் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களும்; நஷ்டத்திலும் கஷ்டத்திலும் கடுமையான யுத்த நேரத்திலும் பொருமையைக் கைக் கொண்டவர்களும், ஆகிய இவர்கள் தாம்நல்லோர்கள். அன்றி, இவர்கள் தாம்  உண்மையானவர்கள்; பயபக்தியுடையவர்கள். அல்குர்ஆன் 2:177

……எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாது இருக்கின்றாரோ அவர்களுக்கு, (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனையை, நன்மாராயங் கூறுவீராக! (பொன், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக்காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு” உங்களுக்கா நீங்கள் சேகரித்து வைத்திருந்த
வற்றை சுகித்துப் பாருங்கள்” என்று கூறப்படும் நாளையும் (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டும்!) அல்குர்ஆன் 9:34,35

மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு, அல்லாஹ்வும்
ரக்கம்  காட்ட மாட்டான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜரீ இப்னு அப்துல்லாஹ்(ரழி) நூல்: புகாரி,முஸ்லிம்,அஹ்மத்

ஈமானுக்கு மரியாதை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இந்த உலகத்தில் உள்ள மனித சமுதாயம் ஒவ்வொன்றும் ஒரு வித உணர்வுகளை மதிக்கும் வண்ணம் தங்கள் குலத்திற்கோ, கோத்திரத்திற்கோ, நாகரீகத்திற்கோ மரியாதை செலுத்தி வருவதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் முஸ்லிம்களாகிய நாம் எந்த விஷயத்தில் யாருக்கு ஏன் எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்பதை சிந்தித்துணர கடமைப்பட்டிருக்கிறோம்.

பக்தியே கதி என அதிலேயே முக்தி அடையச்சொல்லி இஸ்லாம் கூறவில்லை. அதே சமயம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் இறை நம்பிக்கை இரண்டற கலந்து விட்டால் நம்முடைய பாவக் கொடூரங்கள், குற்றச் சிந்தனையிலிருந்து விடுபட ஏதுவாய் அமையும். நம்முடையது என்று கூறிக்கொள்ள இந்த உலகத்தில் நிரந்தரமானது நாம் இருக்கும் வரை நம் உயிர் மட்டுமே. அப்படி நம்முடனேயே நமக்கே நமக்கான உயிர் கூட அது பிரியும்போது நம்மிடம் சொல்லிப்போவதில்லை. அது நமக்கே தெரியாமல் போய்விடுகிறது. இந்த வாழ்வாதாரத்தின் ஜீவ நாடியாக கருதப்படும் உயிர்நாடியை நமக்குத்தந்த இறைவன் மீது நாம் வைத்திருக்க வேண்டிய நம்பிக்கையே ஈமான் என்பதை இறையடிமைகளாய் திகழ வேண்டிய முஸ்லிம்கள் விளங்க வேண்டும். விளங்காதவர்களுக்கு விளக்கவும் வேண்டும். இது நமது கடமையுங்கூட.

இறை நம்பிக்கை மனிதனிடத்தில் அறவே நீங்கிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஷைத்தானின் மாய வலைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம்! தாராளம்!! நம்மை அவன் வலையில் வீழ்த்த பெரும் யுக்தியெல்லாம் வகுப்பதில்லல. மாறாக ஒரு மனிதனிடம் சோம்பேறித்தனம் இருக்கிறதென்றால் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறான். அதன் மூலம் இறைவனை சிந்திப்பதற்கு அவன் அவசரம் காட்டாமல் ஆக்கி விடுகிறான். ஒருவனிடம் ஆணவம் இருக்கிறதென்றால் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி நாமெல்லாம் ஏன் தொழுதுகிட்டு என்ற நினைப்பை அவனுக்கு ஊட்டுகின்றான். அதே போல் ஒருவன் கஞ்சனாக இருக்கிறானென்றால் அவனை இறை வழியான நல்வழியில் அவனது பணம் செலவழியா வண்ணம் பார்த்துக் கொள்கிறான். ஆகவே ஷைத்தான் ஒரு நிராயுதபாணி; நம்முடைய குறைகளை நிறைகளாக்குவதில் வல்லவன்.

இன்றைய சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்னைகள் இல்லாமலில்லை. பிரச்னைகளே இல்லாவிட்டாலும் அந்த வாழ்க்கையில் திருப்பு முனைகள் ஏற்படுவது சாத்தியமில்லை. அதே போல் நம் ஒவ்வொருவருக்கும் சுகம் துக்கம் இரண்டும் உண்டு. அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். வெற்றியாயினும் தோல்வியாயினும் அது இறைவன் புறத்திலிருந்தே வந்ததாக கருத வேண்டும். வெற்றி வந்தால் அது தன்னால் வந்ததென்றும், தோல்வி வந்தால் அது இறைவனால் வந்தது என்று கருதினால் அதுதான் மமதை. இறைவனுடைய உதவியை நாட வேண்டிய நாம் அந்த உதவியை எப்படி நாட வேண்டும் என்று இறைவன் அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.

பொறுமையோடும் தொழுகையோடும் என்னிடம் உதவி தேடுங்கள் என்று. இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது பொறுமையோடும், தொழுகையோடும் தான் அவனது உதவி கிடைக்கும். அந்த தொழுகை பொறுமையுடையதாக இருக்க வேண்டும். ஓதும் திக்ருகள் பொறுமையுடையதாக இருக்க வேண்டும். ஏதோ வந்தோம் நாமும் தொழுதோம் திக்ரு துஆ ஓத அவகாசமில்லை. பரபரப்பான சூழ்நிலையில் வெளியேறினோம். இதுவல்ல உள்ளச்சம். முறையான உள்ளச்சத்தை எனக்கு தந்தருள்வாயாக என்பதை முதற்கண் பிரார்த்தனையாக நமது துஆ அமையப்பட வேண்டும். பிறகு கல்வி வீடு மனைவி மக்கள் பொருளாதாரம் என்று சகல வித பிரார்த்தனைகளையும் அடுக்கடுக்காக அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே போகலாம். இவ்வளவையும் கேட்டால் நம்மை பேராசைக்காரன் என்று இறைவன் எண்ணிக்கொள்ள மாட்டான்; மனித குணமே அப்படி நினைக்கும். இறைவனது அருள் அளவிற்கரியது. அந்த ஒப்பில்லா இறைவனின் அன்பை என்னென்பது? ஒரு தாய் தான் பெற்ற குழந்தைமீது எவ்வளவு அன்பை பொழிகிறாள். அந்த தாயன்பை வார்த்தையால் வடிக்க முடியுமா? இதைவிட இறைவனின் அன்பு அளவிட முடியாதது.

தன்னுடைய தூதர்களிடம் காட்டிய அன்பு ஒரு விதம் என்றால், மானிடர்களிடம் காட்டும அன்பு ஒருவிதம். இறைவனே இல்லை என்று சொல்லுகிறவனுக்கு கூடல்லவா அவனது அருட்கொட எல்லையில்லாமல் விரிந்துள்ளது. இறைவனே இல்லை என்பவன் மண்ணைத் தின்ற சரித்திரம் கிடையாது. மண்ணோ நெருப்போ தான் அவனைத் தின்கிறது. ஆனால் முஸ்லிம்களாய் இருந்து கொண்டு எனக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பது போலல்லவா பலரது நிலை உள்ளது. தொழுகைக்கான அழைப்பு பள்ளிவாசலில் பாங்கு ஒலிக்கிறது. வெற்றியின் பக்கம் வாருங்கள் என்றும், பஜ்ர் தொழுகையின் போது சொல்லப்படுகின்ற தூக்கத்தைவிட தொழுகையே மேலானது என்றால் யாரும் திருப்பி தொழுகையை விட தூக்கமே மேலானது என்றோ, வெற்றி தொழுகையினால் இல்லை, நாங்கள் வரமாட்டோம் என்று வாயால் பதில் சொல்வதில்லை. அதே சமயம் நமது செயலால் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். என்னே நமது ஈமான்? ஈமானுக்கு நாம் செலுத்தும் மரியாதை? சிந்திக்க வேண்டாமா?

நபி அவர்கள் தினமும் 70 முறை பாவமன்னிப்பு கேட்பவர்களாக இருந்தாந்தார்கள். இறைவன் நபி அவர்களின் முன்பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டதாக கூறிய பின்னரும் அவர்களூடைய நடைமுறையில் மாற்றமில்லை. காரணம் வினவப்பட்டபோது இறைவனுக்கு நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்ற பதில்தான் நபி அவர்களிடமிருந்து வந்தது. அவர்களுடைய உள்ளச்சம் எங்கே, நம்முடைய உள்ளச்சம் எங்கே? நான் என்ன பாவம் செய்தேன் தொழுவதற்கு? இதுவல்லவா இன்றைய முஸ்லிம்களின் சவடாலாக உள்ளது. மேலும் தொழுகிறவன் என்னத்த வாரி இறைச்சிட்டான்? என்னத்த சாதிச்சுட்டான்? என வாய் சவடால் நீள்கிறது. சிந்திக்க பல பூகம்பங்களும் சுனாமிகளும் போதவில்லையா? அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லையா? சிந்திக்க மறுக்கிறதா உள்ளம்?

நபி கற்றுக்கொடுத்த பிரார்த்தனையில் ஒன்று யா அல்லாஹ் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ எவ்வளவு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறாயோ அதுபோல் எனக்கும் என் பாவங்களுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்துவாயாக. இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவதில் தான் என்ன ஒரு பாங்கு, என்ன ஒரு பணிவு. நம்மிடம் பணிவு இருக்கிறதா? பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று கேட்குமளவிற்கு தான் நம்முடைய ஈமான் உள்ளது. ஆம் சில பொருட்கள் இருக்கின்றன. அரிசி, பருப்பு, உப்பு, புளி போன்றவற்றை கிலோ என்ன விலை என்று விசாரிப்போம். விறகு எடை என்ன விலை என்று விசாரிப்போம் ஆனால் தங்கம் வெள்ளி போன்ற ஆபரனங்களை கிராம் என்ன விலை என்று விசாரிப்போம். காரணம் அதை கிராம் கணக்கில்தான் வாங்கப் போகிறோம். ஆனால் நாம் தங்கம் அளவிற்கு ஈமானை மதித்தால்கூட பரவாயில்லை. ஆனால் தங்கத்திற்கு மாற்றமாக கவரிங்கை மாட்டிக்கொண்டு அலைவதுபோல் இறைவனுக்கு மாற்றாக அவனுக்கு மட்டுமே சொந்தமான வணக்க வழிபாடுகளை இறையடியார்கள் என கருதப்படும் தர்காக்களில் அடக்கப்பட்டிருக்கும் மஹான்களுக்கும் பங்கிட்டு தந்தால் அது கவரிங்கை தங்கம் என்று பொய் சொல்வது போல் தான் என்பதை சிந்திக்க வேண்டும். கவிரிங்கை அடகு கடையில் வைக்க இயலாதது போல் இணை வைத்து விட்டு ஈமானைப் பெற இயலாது என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ஆகவே சகோதரர்களே தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை தவறு என்று எண்ணி வருந்துவதோடு அதற்காக உளப்பூர்வமாக இறைவனிடம்
பாவமன்னிப்பு தேடி மீண்டும் அத்தவறுகளை ஈமானிய விஷயத்திலாவது செய்யாமல் இருக்க முயற்சி செய்து பயன் பெறுவோமாக. இதோ நம் இறைவன் கூறுகிறான்,

எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் – அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
எவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 4:110,111

நல் அமல்கள் நஷ்டமடையுமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ்வின் விதிவிலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும், பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கிறேன்.

ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:30

நாம் செய்த அமல்கள் எல்லாம் எந்த தரத்தில் உள்ளன. நம் அமல்கள் நம் மோசமான செயல்களினால் நஷ்டமடையுமா? தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளினால் நல் அமல்கள் எல்லாம் பாதிக்கப்படுமா? ஏனென்றால் நம் தவறான செயல்களினால் அல்லஹ்வின் முன் நிற்கும்போது, கைசேதப்பட்டு விடக்கூடாதே; அல்லாஹ் நம்மை இழிவுபடுத்தி விடக்கூடாதே; தோல்வியைத் தழுவிடக்கூடாதே என்பதற்காகத்தான்.

ஒரு வியாபாரம் செய்கிறோம் என்றால், வார முடிவிலோ மாத முடிவிலோ கணக்குப் பார்ப்போம். இலாபமா? நஷ்டமா? என்பது தெரிந்துவிடும். இலாபம் என்றால் இன்னும் அதிகம் இலாபம் சம்பாதிக்க முயற்சி செய்வோம். நஷ்டம் என்றால் இலாபம் அடைய முயற்சி செய்து பார்ப்போம். இன்னும் நஷ்டம்தான் என்றால் அந்த வியாபாரத்தை விட்டுவிடுவோம். ஆனால் நம்முடைய அமல்களை கணக்கு பார்ப்பதில்லை. இலாபமா? நஷ்டமா? என்று சிந்தித்து பார்ப்பதுமில்லை. நஷ்டம் என்றால் (நவூதுபில்லாஹ்) இன்னும் என்ன செய்யவேண்டும்? வியாபாரத்தில் நஷ்டம் என்றால் அந்த நஷ்டத்தை வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்போம். ஆனால் நம்முடைய அமல்களில் கோட்டை விட்ட பின்பும் சுதாரிக்கவில்லை என்றால் மறுமை நாளில் தோல்வியை சந்திக்க நேரிடும்.

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும். ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். அல்குர்ஆன் 75:20-25

வேலை நேரங்களிலும் ஓய்வு கிடைக்கும் நேரங்களிலும் தேவையில்லாத சர்ச்சைகளிலும் வீண் விவாதங்களிலும், அவதூறுகளிலும், புறம் பேசுவதிலும் ஈடுபடுகிறோம். நம்மை படைத்த இறைவனை சந்திக்கும்போது, இந்த செயல்கள் நம்மை பஞ்சை பராரியாக ஆக்கிவிடக்கூடாதே, (நவூதுபில்லஹ்) பஞ்சை பராரி யார் என்றால் நல்அமல்கள் செய்தும் அல்லஹ்வின் முன்னிலையில் ஏழையாக நிற்பது.

வறியவன் (பஞ்சை பராரி) என்பவன் யார்? என்று நபி அவர்கள் வினவினார்கள். மக்கள் கூறினர்: எவரிடம் திர்ஹமோ, வேறு எந்த பொருளோ இல்லையோ அவரே எங்களில் வறியவர் ஆவர் என்று கூறினர். நபி அவர்கள் பதிலளித்தார்கள். ஒருவன் மறுமை நாளில் தொழுகையுடனும், நோன்புடனும், ஜகாத்துடனும் அல்லஹ்விடம் ஆஜராவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர்மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான்; எவரேனும் ஒருவரின் செல்வத்தைப் பறித்துப் தின்றிருப்பான்; எவரேயேனும் கொன்றிருப்பான்; எவரேயேனும் நியாமின்றி அடித்திருப்பான். எனவே அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்படும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்கு உள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டு விடும். பிறகு அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் வறியவன் ஆவார். அறிவிப்பவர்: அபூ†ுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

இன்னும் சிலர் அல்லஹ்வும் அவன் தூதரும் காட்டித்தராத முறையில் உழைக்கின்றார்கள். தங்கள் எண்ணத்தில் பெரும் இலாபம் அடைவதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருக்கின்றனர்.

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். அல்குர்ஆன் 88:2,3

‘(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:103,104

பாவத்திற்குமேல் பாவம் செய்து கறைகளின் மேல் கறைகள் படிந்து நாம் வாழ்வில் முன்னேறிச் செல்கிறோம். நாம் நம்மில் இருக்கும் கறைகளை மாற்ற முயற்சி செய்ய மாட்டோமா? இதே ரீதியில் சென்றால் நம்முடைய இறுதி முடிவு எப்படி இருக்கும்? நம்மை படைத்த இறைவனை சந்திக்கும்போது பாவங்களுக்காக வெருண்டு ஓடுவோமா? இல்லை வெற்றி பெறுவோமா? எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னித்து விடு அல்லாஹ் உன்னை தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?

எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- (அவர் பெரும் நஷ்டவாளியாவார்) அல்குர்ஆன் 101:6-8

அல்லாஹ் நம் அனைவரையும் நன்மைகள் அதிகம் செய்து வெற்றிபெறும் சிறிய கூட்டத்தினரோடு சேர்த்து வைப்பானாக.

அநீதியாளர்களின் ஆட்சி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நீங்கள் சற்று ஆழ்ந்து நோக்கினால் உங்கள் வாழ்க்கையின் கேடுகளுக்கு அறியாமையைத் தவிர மற்றொரு காரணமும் புலப்படும். ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ மனிதன் என்ற பெயரல்ல என்பதைப் புரிந்து கொள்ளச் சொற்ப அறிவு போதுமானது. எல்லா மக்களும் மனித குலத்தின் அங்கங்களே. மக்கள் அனைவருக்கும் வாழும் உரிமை உள்ளது. தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அனைவரும் உரிமையுடையவர்களே! அனைவரும் அமைதி, நீதி, மரியாதை, கண்ணியம் ஆகியவற்றிற்கு உரியவர்களே!

மனிதனின் சுபிட்சத்திற்குப் பொருள் மக்கள் அனைவரின் சுபிட்சமாகும். ஒரு குடும்பத்தினுடைய அல்லது ஒரு சமூகத்தினுடைய சுபிட்ச நிலை மட்டும் அல்ல. ஏனெனில் சிலர் இன்புறப் பலர் துன்புற்றால் மனிதன் சுபிட்சத்தை அடைந்துள்ளான் என்று கூற இயலாது; மனித வாழ்வின் வளம் என்பதன் பொருள் மக்கள் அனைவரின் வாழ்க்கை வளமே ஆகும். ஒரு சாராருடைய அல்லது ஒரு சமூகத்துடைய வளமாக இருக்க முடியாது. ஒருவர் வாழ்ந்து பத்து பேர் வீழ்ந்தால் நலிவடைந்தால் அதை மனித இனத்தின் செழிப்பு என்று கூறிவிட முடியாது.

இந்த  தெளிவான கருத்தை நீங்கள் சரியானதென்று ஏற்றுக் கொண்டால், மனித இனம் தனது சுபிட்சத்தையும், நலன்களையும் எவ்வழியில் எய்த முடியும் எனச் சிந்தியுங்கள். மனித வாழ்வு சுபிட்சம் அடைவதற்கு ஒரே வழி, யார் எல்லா மக்களையும் ஒரே மாதிரியாகக் கருதுகிறாரோ அவரே மனித வாழ்வின் சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதே என் கருத்தாகும்.

யார் சுய நலத்தை கருதவில்லையோ யார் அதிகாரம் செலுத்துவதில் அறியாமையால் தவறிழைக்க மாட்டாரோ, யார் ஆசை மேலீட்டினால் அதிகார உரிமையைத் தகாத முறையில் பயன்படுத்த மாட்டாரோ, யார் ஒருவருக்கு பகைவனாகவும் மற்றவருக்கு நண்பராகவும், ஒருவரிடம் பரிவாகவும் மற்றவரிடம் பாரபட்சமாகவும், ஒருவருக்கு செவி சாய்க்காமலும் மற்றவருக்கு வசப்பட்டும் நடக்க மாட்டாரோ அவருடைய ஆணைகளுக்குட்பட்டால் தான் அந்த சுபிட்சம் கிடைக்கும். நீதியை நிலை நாட்ட இதுவே வழியாகும். இவ்வாறு மட்டுமே எல்லா மக்களுக்கும் எல்லா சமூகங்களுக்கும் எல்லா வகையினருக்கும் நியாயமான அவர்களுடைய உரிமைகள் கிடைக்கும்.

இவ்வுலகில் இத்தகைய நீதி வழுவாத நடுநிலை தவறாத, சுய நலமற்ற மனித பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவர் யாராக இருக்க முடியும்? அனேகமாய் உங்களில் எவரும் அத்தகைய ஒருவர் நம்மிடையே இருப்பதாக பதிலளிக்க துணியமாட்டார். இத்தகைய எல்லா அம்சங்களும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானவை. மற்றவர் யாரும் இம்மகிமை கொண்டவரல்ல. மனிதன் எவ்வளவுதான் விசாலமான உள்ளத்தைக் கொண்டவனாயினும் சுயநலம் அற்றவனாயினும் அவனுக்கென்று சில விருப்பு வெறுப்பு உள்ளவனாகவே இருக்கின்றான்.

மனிதனுக்கு  சிலரிடம் பற்று  அதிகமாகவும் சிலரிடம்  குறைந்தும்  இருக்கம் , சிலரிடம் அவனுக்கு அன்பிருக்கும் சிலரிடம் இருக்காது. இக்குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட மனிதர் எவரும் இருக்க முடியாது. எங்கே இறை மேலாதிக்கத்திற்கு பதிலாக மனிதர்களின் ஆதிக்கம் ஏற்றுக் கொள்ளப் படுகின்றதோ அங்கே ஏதாவது ஒரு வகையில் அநியாயமும் கொடுமையும் நிச்சயம் காணப்படுகின்றன.

இந்தப் புரோகிதரர்களையும் குருமார்களையும் அரசர்களையும் முதலாளிகளையும் கவனியுங்கள். இச்சாரார் அனைவரும் பொது மக்களைவிடத் தங்களை உயர்ந்தவர்களாகத் தாங்களாகவே கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் சக்தியாலும் செல்வாக்கினாலும் இவர்கள் உண்டாக்கி யிருக்கும் உரிமைகளை சாதாரண மக்களுக்கு அளிப்பதில்லை. இவர்கள் கண்ணியமானவர்கள் பிறர் இழிவானவர்கள். இவர்கள் உயர்ந்தவர்கள் பிறர் தாழ்ந்தவர்கள். இவர்களின் மன இச்சைகளுக்காக மகிழ்ச்சிக்காக மக்களுடைய உயிர், உடமை, மானம், மரியாதை ஒவ்வொன்றும் பலியிடப்படுகின்றது. இந்த நியதிகளையெல்லாம் ஒரு நீதியாளனால் வகுக்கப்பட்டிருக்க முடியுமா? இவற்றில் அவர்களின் தன்னலமும் ஒருதலைப்பட்சமும் தென்படவில்லையா?

தங்களுடை வலிமையினால் பிற சமூகங்களை அடிமைபடுத்தியுள்ள இந்த சர்வாதிகார சமூகங்களைப் பாருங்கள். இவர்களின் எந்த சட்டத்தில் எந்த நியதியில் இவர்களின் சுயநலம் கலக்காமல் உள்ளது? ஒவ்வொரு வகையிலும் தங்களை பிறரைக் காட்டிலும் உயர்த்தியே வைத்துக் கொள்கிறார்கள். தங்களுடைய தேவைகளுக்காக பிறருடைய நலன்களைப் பலியிடுவதைத் தங்களுடைய உரிமை என்றே கருதுகிறார்கள்.

இவர்கள்  மற்ற மனிதர்களைப்  போல் சாதாரண  மனிதர்கள்  என்பதை உலகம்  அறிகிறது. ஆனால் இவர்களோ தங்களைக் தெய்வங்களாகக் காட்டிக் கொள்கிரார்கள். மக்களும் இவர்களை தங்களுடைய வாழ்வும் சாவும் இவர்கள் கையில் இருப்பது போலவும் கருதி இவர்கள் முன்னிலையில் கைகட்டி, சிரம் தாழ்த்தி,  அஞ்சி அடங்கி  நடக்கிறார்கள்.  இவர்கள்  மக்களின் பணத்தை பல வகையிலும் பறிக்கிரார்கள். இதைத் தங்களுடைய நலன்களுக்காக கணக்கின்றி வாரி இறைக்கிறார்கள். இது நீதி யாகுமா? நியாயமாகுமா? யாருடைய பார்வையில் எல்லா மக்களின் உரிமைகளும் நலன்களும் ஒரே மாதிரியாக உள்ளனவோ அத்தகைய நீதியாளனால் நிர்ணயிக்கப்பட்டதாக இருக்க முடியுமா?

உலகில் எங்கெல்லாம் மனித சட்டத்தை இயற்றியுள்ளானோ, அங்கெல்லாம் அநீதி நிச்சயமாக நடந்துள்ளது என்பதை உங்கள் மனதில் பதிய வைக்க விரும்புகிறேன். சில மனிதர்களுக்கு அவர்களுடைய நியாயமான உரிமைகளைக் காட்டிலும் மிக அதிகமான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில மனிதர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் மனித பலவீனமே. அவன் ஒரு விஷயத்தில் தீர்வு காணத் தொடங்கும் போதெல்லாம் அவனுடைய உள்ளத்திலும் சிந்தனையிலும் அவனுடைய சுய, குடும்ப, குலம் அல்லது சமூக நலன்களின் எண்ணம் நிலைத்த வண்ணமே இருக்கின்றது. சொந்தக்காரர்களிடம் உள்ள பரிவு பிறர் உரிமைகளிலும் நலன்களிலும் ஏற்படுவதில்லை.

மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மனிதர்களிடையே பிறப்பு, குலம், சமூகத்தின் அடிப்படையில் வேறுபாடு செய்யாமல் பண்பு, செயல், தகுதி அடிப்படையில் மட்டும் வேறுபாடு செய்யும் இறைவனின் சட்டத்தை நாம் ஏற்றுக் கொள்வதே இந்த அநியாயத்திற்கான பரிகாரமாகும்.

அச்சமும், துக்கமும் இல்லாதவர்கள் யார்?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 10-62 எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 46-13 யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” 2-38 எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். 7-35 நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 6-48 முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 5-69 எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2-112 யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2-274