இஸ்லாம்தளம்

பிப்ரவரி21, 2009

இறை நம்பிக்கையும், நற்செயல்களும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! 2-25

நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது. 17-9

எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம். 21-94

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான-) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான். 19-96

எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு. 22-50

எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான். 65-11

ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்)கூலி கொடுக்கிறான். 30-45

எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக. 18-110

எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். 25-71

எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் வெற்றியடைந்தோரில் ஆவார்கள். 28-67

எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான். 3-57

நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள். 98-7

இன இழிவு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர். வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர். உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.

செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை. இன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன. ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில் இன இழிவு நீங்கியதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

டாக்டர் பாப சாஹிப் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா? அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பெளத்த மதத்திற்கு போயிருப்பாரா? அங்கேயாவது அவருக்கும் அவருடன் பெளத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா? இல்லையே! நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது இன இழிவு நீங்கியபாடில்லை.

அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா? அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித? படுத்தியக் கொடுமையை நாடே அறியும். MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.

இந்த நிலையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார். அதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா? இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல; இன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.

ஆதி காலத்தில் தமிழக மக்கள் “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற ஏகத்துவ அடிப்படையில் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் ஒரே உண்மையான இறைவனை மட்டும் நம்பிச் செயல்பட்டு வந்தனர்; வணங்கி வந்தனர். ஆரியரின் படயெடுப்பிற்குப் பின்னரே விதவிதமான கற்பனை பொய்க் கடவுளர்களும், அவர்களுக்கென விதவிதமான கோவில்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டன. இன்று ஆங்காங்கே கற்பனை தர்கா – சமாதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவது போல் இந்த சமாதிக் கடவுளர்களின் பரிணாம வளார்ச்சிதான் சிலை வடிவிலான பொய்க்கடவுள்கள்.

இந்த ஆரியப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான பொய்க்கடவுளர்களின் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் அவர்களுக்கென்ன இலாபம்! இன இழிவு நீங்கி விடுமா? அல்லது அதற்கு மாறாக இன இழிவு மேலும் வலுப்படுமா? அறிவு ஜீவிகள் பகுத்தறிவுக்கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி மனுதர்மத்தை நிலை நாட்டி ஜாதிகளாகப் பிரித்து மக்களில் பெருந்தொகையினரை அடிமைகளாக்கி அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக இழி ஜாதியினராகக் கற்பித்து, அதன் மூலம் ஆதாயம் அடையத்தான், ஆரியர்கள் பொய்க்கடவுள்களை கற்பனை செய்து அந்தப் பொய்க்கடவுள்களுக்காக கோவில்களை இந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே கட்ட வைத்தனர். அந்த கற்பனைக் கோவில்களில் இந்த தாழ்த்தப்பட்ட மக்களாக சிறுமைப்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் இன இழிவு மேலும் வலுப்படுத்துவதாக ஆகுமா? அல்லது இந்த இன இழிவு போக்க வழிவகுக்குமா?

அன்று இந்த ஆரியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக்கொண்டே பொய்க்கடவுளர்களின் கோவில்களைக் கட்ட வைத்ததற்கும் இன்று தமிழக அரசு அதே தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்குவதற்கும் வேறுபாடு உண்டா? ஏக இறைவனை மறுக்கும் டாக்டர் கலைஞர், கி.வீரமணி போன்றோர் இந்தப் பொய்க் கடவுள்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகர்கள் ஆக்குவது கொண்டு எங்கனம் நியாயம்? பொய்க்கடவுள்களை உண்மைக் கடவுள்களாக நம்பி மக்கள் மேலும் வழிகேட்டிலும் அடிமைத்தனத்திலும் சிக்குவது ஆகாதா? அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா? நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால் அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும். இன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை. இதை நாம் சொல்லவில்லை, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், கி.வீரமணி மற்றும் தமிழகத்தின் பெரும்பான்மையினர் மதித்துப் போற்றும் ஈ.வெ.ரா பெரியாரே 18.03.1947ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில் அப்பட்டமாக அறிவித்துள்ளார். இதை 1947ல் குடி அரசு பதிப்பகம். ஈரோடு பதிப்பகத்திலிருந்து, ஈரோடு தமிழன் பிரஸில் அச்சிட்டு 2 அணாவுக்கு விறபனையான “இன இழிவு இஸ்லாமே நன் மருந்து” ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்? சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார். பெரியாரின் இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக எதித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அன்றும் இன்றும் முஸ்லிம்களும் சமாதிகள் – தர்காக்கள் என்று என்று வழிபடுவதும் முஸ்லிம்களின் முடச்சடங்கு சம்பிரதாயங்களையும் மற்றும் பல மூட நம்பிக்கைளையும் எடுத்துக்காட்டியதின் மூலம் அன்று பெரியார் முஸ்லிமாவது தடைப்பட்டது. 1919லிருந்து பெரியாரின் நெஞ்சில் ஆழமாக தைத்த முள் இன்றளவும் அகற்றப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இஸ்லாம் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. என்று மனிதன் படைக்கப்பட்டானோ அந்த முதல் மனிதர் ஆதத்திற்கு ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி. அந்த தூய வாழ்க்கை நெறி நேர்வழி காலத்திற்கு காலம் வயிறு வளர்க்கும் புரோகிதரர்களால் கோணல் வழிகளாக ஆக்கப்படும்போதெல்லாம் ஏகன் இறைவன் மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பி மீண்டும் தூய வாழ்க்கை நெறியை நிலை நாட்டினான். இறுதி இறைத்தூதரான முஹம்மதுக்கு (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அருளப்பட்ட நூல் புரோகிதரர்களால் மாசுபடுத்த முடியாத அளவில் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின்னர் இறைத்தூதரோ வழிகாட்டல் நூலோ வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. அறிவு ஜீவிகளே, முற்போக்கு சிந்தனையாளர்களே! உங்கள் உள்ளங்களில் ஏற்கனவே படிந்திருக்கும் சிந்தனையை சிறிது நேரம் தூர எடுத்து வைத்து விட்டு நடுநிலையோடு இப்போது சொல்வதை ஆராய்ந்து பாருங்கள்.

இன்றைய தமிழக முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் 5 சதவிகிதத்தினர் கூட அரபு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் சந்ததிகளாக இருக்க மாட்டார்கள். எஞ்சிய 95 சதவிகித முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்களே. சில தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணர்களாக, செட்டியாளர்களாக, முதலியார்களாக, நாயுடுகளாக, தேவர்களாக, நாடார்களாக, கள்ளர்களாக, முத்துராஜாக்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக இப்படி எண்ணற்ற ஜாதியினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே! அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்களே! தாங்கள் இருந்து கொண்டிருந்த மதத்தில் தாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டவர்களாக இழிவு படுத்தப்பட்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் அதனை வெறுத்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிம் ஆனவர்களே! ஆயினும் அவர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தினுள் நுழையவில்லை. பெயரளவில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அல்லாமல் உண்மையான ஓரிறை விசுவாசிகளாகவில்லை. அவர்களின் பழைய மதத்திலுள்ள ஆச்சாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை, பெயர் மாற்றத்தோடு இங்கும் நடைமுறைப்படுத்தினார்கள்.

அங்கு கோயில்களில் பூஜை புணஸ்காரம், நெய் பால் அபிஷேகம் என சடங்கு செய்தவர்கள், இங்கு தர்கா சமாதிகளில் ஃபாத்திஹா, சந்தனம், பூ, அபிஷேகம் என சடங்கு செய்கிறார்கள். அங்கு கோவில்களில் சடங்குகள் செய்து தேர் இழுத்தார்கள். இங்கு தர்காக்களில் கொடியேற்றி சடங்குகள் செய்து கூடு இழுக்கின்றனர். அங்கு பஜனை பாடியவர்கள் இங்கு மவ்லூது என்ற பஜனை பாடுகிறார்கள். அங்கு திதி கர்மாதி என இறந்தவர்களுக்காக சடங்கு செய்தவர்கள், 3ம்,7ம்,40ம், வருஷ ஃபாத்திஹா என இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்கிறார்கள். அங்கே கோவில்களில் உண்டியல்கள், இங்கே தர்காக்களில் உண்டியல்கள்; அங்கு வரதட்சனை வாங்குகிறார்கள். இப்படி இங்கும் இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் துணையுடன் அனைத்து மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து வருகின்றனர்.

ஆயினும் பெரியதொரு ஆச்சரியம்; தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அப்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை பிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது. மக்களுக்கு முன்னின்று தொழ வைப்பதிலிருந்து ஒரு பரம்பரை முஸ்லிம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு முஸ்லிமுக்கு கிடைத்து விடுகிறது.

நாம் முன்னர் விவரித்த 95 சதவிகித முஸ்லிம்களில் யாராவது அவர்களின் முன்னைய ஜாதியை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்களா? ஒரு போதும் இல்லை. அதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக்கொண்டிருந்த இன இழிவு கிறிஸ்தவனாகியும் தொடர்கிறது. நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்றே அடையாளம் காட்டப்படுகிறார்கள். அம்பேத்கார் தழுவிய பெளத்த புத்த மதத்திலும் (நியோ புத்திஸ்ட்) என அடையாளம் காட்டப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தை தழுவி யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களிலுருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனின் நேரடி கட்டளைப்படி நடக்காமல் முன்னைய மதத்தில் கடை பிடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய செயல்கள் இபோதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அதிசயதக்க வகையில் அவர்களின் பிறப்போடு இணைக்கப்பட்டிருந்த இன இழிவு இல்லாமலேயே போய்விட்டது. அவர்கள் பெயர் அளவில் மட்டும் முஸ்லிமாக ஆனவுடன் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டு விட்டது. அன்று பள்ளரிலிருந்து பறையரிலிருந்து சக்கிலியலிருந்து முஸ்லிமானவர்களை இன்று யாரும் பள்ளவ முஸ்லிம், பறை முஸ்லிம், சக்கிலிய முஸ்லிம் என்று சொல்லுவதே இல்லை. பிராமணரிலிருந்து முஸ்லிமானவரும், பள்ளர் பறையர், சக்கிலியலிருந்து முஸ்லிமானவரும் சரி சமமானவர்களாகவே மதிக்கப்படுகிறார்கள். தோளோடுதான், காலோடுகால் ஒட்டி நின்று ஒரே வரிசையில் இறைவனைத் தொழுகிறார்கள். தகுதி இருந்தால் முன் நின்று இமாமாக தலைவராக நின்று தொழ வைக்கவும் செய்கிறார்கள்.

இறை மறுப்புக் கொள்கையுடையோரே நீங்கள் அனைவரும் மகத்துவமிக்க ஓரிறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் புகுந்துக்கொண்டு புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்துள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்கள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் இவற்றைக் காரணமாக காட்டி, என்றும் நிலைத்திருக்கும் ஓரிறைவனைக் எப்படி மறுக்கத் துணிகிறீர்கள்? இதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த நாஸ்திக சிந்தனையாளர்கள் அண்ணா, பெரியார், ரஸ்ஸல், பெர்னாட்ஷா போன்றோரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உண்மையான ஓரிறைவனை அவர்கள் மறுத்ததாக இல்லை. அதற்கு மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க்கடவுள்களையும், மூடச்சடங்குகளையும், சம்பிராதயங்ளையும், அனாச்சரங்களையும், முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ள கற்பனைகளையும் மறுத்துள்ளனரே அல்லாமல், அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் சக்திமிக்க இணையோ, துணையோ, தேவையோ இல்லாத ஓரிறைவனை மறுத்ததாகப் பார்க்க முடியவில்லை. புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும்தான் கடுமையாகச் சாடியுள்ளனர்.

அல்குர்ஆனை பொறுமையோடு, ஏற்கனவே உள்ளங்களில் பதிந்து போயுள்ள எண்ணங்களை அகற்றிவிட்டு நடுநிலையோடு படித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும், மூடநம்பிக்கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும் இவற்றைக் கற்பனை செய்து மக்களை வழிகெடுப்பவர்களான இடைத்தரகர்களான புரோகிதரர்களையும் நீங்கள் அனைவரும் சாடுவதைவிட ஆயிரம மடங்கு அதிகமாகச் சாடியுள்ளதை பார்ப்பீர்கள். இப்படிப் பொய்த் தெய்வங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். என்று இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில்

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் அத்தியாயம் 2:174

ஆயினும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளை முதுகுக்குப் பின்னால் எறிந்து புரோகிதரர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வழ்வுக்காகப் பெருங்கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள். ஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு தன்னை அறுத்துக்கூறு போடும் கசாப்புக்கடைகாரர்களை நம்பும் ஆட்டு மந்தைகள் போல் தங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதப்புரோகிதரர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மனித மந்தைகளாகவே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஆயினும் எல்லா மதங்களிலுமுள்ள வெகு சொற்பமான மனிதர்கள் தங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பயன்படுத்தி இந்த மதப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை விளங்கியதாலும் கடவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதாலும், உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் நாஸ்திகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களே மனிதர்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிப் பிரிவினைகள், இன இழிவு, மனிதனே மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகள் இவற்றைப் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்தாலும் அவற்றை போக்கி சகோதரத்துவ சமத்துவ சமநிலை சமுதாயத்தைச் அமைக்க அவர்களின் பகுத்தறிவில் படும் திட்டங்களைத் தருகின்றனர். தனித்தொகுதிகள், இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற திட்டங்கள் அனைத்தும் இத்தரத்தை உடையவையே. இப்படிப்பட்ட மனித பகுத்தறிவுத் திட்டங்களால் ஏழு தலைமுறை என்ன? எழுபது தலைமுறை ஆனாலும் இன இழிவு நீங்காது. சகோதரத்துவ சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாது.

அனைத்து மதங்களிலும் புரோகிதர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டு எவ்வித சீர்த்திருத்தமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அனைத்து மதங்களிலும் இந்தப் புரோகிதரகளின் வஸீகரப் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாகச் சிந்திக்கும் மக்களும் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சுயசிந்தனையாளர்கள் ஒன்று திரட்டப்பட்டால் அவர்களின் சுய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி முறையான முழுமையான பகுத்தறிவாளர்களாக அவர்களைச் செம்மைப்படுத்தினால் உலகில் மாபெறும் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும். இன்று தெளிவான ஆதாரங்களுடைய அதன் பரிசுத்த நிலை இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்கள், இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பது போல்

என்னுடைய இறைவா நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டனர். (25:30 அல்குர்ஆன்)

என்று இறைத்தூதர் மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கொப்ப இறுதி வழிகாட்டல் நூலைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிமகளும் மதப்புரோகிதரர்கள் பின்னால் செல்வதால் அவர்களைக் கொண்டு மறுமலர்ச்சி ஏற்படும் வாய்ப்பே இல்லை. எனவே அல்குர்ஆனின் முஹம்மது அத்தியாயம் 47:38ல்

எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.

என்று இறைவன் கூறியிருப்பதை இன்று அனுபவத்திலேயே பார்க்கிறோம். மற்ற மதங்களிலுள்ள சிந்தனையுள்ள சகோதரர்கள் அங்குள்ள மதப்புரோகிதரர்களின் தில்லுமுல்லுகளை விளங்கிச் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து அதன் விளைவாக நேரடியாக அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து, சிந்தித்து விளங்கி இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். அவர்கள் புரோகிதரர்கள் பிடியில் சிக்காமல் சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இன்றைய பரம்பரை முஸ்லிம்களைவிட மிகச் சிறந்தவர்களாக, சிந்தித்து விளங்கிச் செயல்பட்ட அந்த நபித்தோழர்களைப் போல் பார்க்க முடிகிறது.

எனவே பகுத்தறிவு சிந்தனையாளர்களே நீங்கள் அனைவரும் மதப்புரோகிதர்கள் பிடியிலிருந்தும், அவர்களின் கற்பனைகளில் உருவான பொய்க்கடவுளர்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். மீண்டும் அந்தப் புரோகிதரர்கள் பிடியில் சிக்கப்போவதில்லை. எனவே அதற்கு மேலே ஒரு படி உயர்ந்து இதற்கு முன்னர் பகுத்தறிவு வாதம் புரிந்த அனைத்துப் அறிஞர்களும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டும், நடைமுறைப்படுத்த இயலாமல் தவறிய கொள்கையும், நமது இந்திய மக்களின் ஆதிக் கொள்கையுமான “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற அடிப்படையில் அந்த ஓரிறைவன் மனித இனத்திற்கு வகுத்தளித்த இயற்கை நெறியான வாழ்க்கை நெறியான சாந்தி, அமைதி மயமான இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சகோதரத்துவ, சமத்துவ சமநிலை சாந்தி சமுதாயம் சமைய ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம், குறைந்த பட்சம் தெய்வமில்லையா? (நாஸ்திகம்) ஒரு தெய்வமா? (ஏகத்துவம்) என்ற அடிப்படையில் முதலில் விதண்டாவாதம் இல்லாமல், அழகிய முறையில் ஊடகங்களில் விவாதித்து உண்மையை கண்டறிய வேண்டுகிறோம்.

தமிழக மக்களின் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் உடல் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் மற்றும் பொழுது போக்கு இவற்றை மட்டும் நிறைவுபடுத்தி கொடுப்பது மட்டும் சீரீய பணியல்ல. அவர்கள் மனிதர்களாக, மனிதப் புனிதர்களாக நீதி, நேர்மை, தர்மம், மனித நேயம், சத்தியம் நேர்வழி இவற்றையும் சிந்தித்து விளங்கி, திருந்தி செம்மையுற பாடுபடுவதுதான் சிறந்த பணியாக இருக்க முடியும்.

பெரியாரின் நீண்ட உரைகளால், எழுத்துக்களால் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்களும், அவர்களின் சந்ததிகளும் மீண்டும் அந்தப் புரோகிதரர்களின் பிடியில் போய் சிக்கும் மிகப்பரிதாபமான, அபாயமான நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் நாட்டை சீர்படுத்தி விடலாம் என்று முயன்றால் அது ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இறை நெறியை வாழ்வு நெறியாக்குவோம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

வல்ல அல்லாஹ் இந்த உலகத்தை படைத்து அதிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவையும் அளித்து வருகிறான். படைத்து பரிபாலித்து அழிக்க வல்ல அல்லாஹ் மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதையும் வரையறைத்திருக்கிறான். அல்லாஹ்வின் தூதர்களில் ஒருவராகிய நபி மூஸா (அலை) அவர்களிடம் கொடுங்கோல் மன்னன் பிர்அவ்ன் அல்லாஹ்வைப்பற்றி கேட்ட கேள்விக்கு மூஸா (அலை) அவர்கள் அளித்த பதில் இதைத்தான் பறைச்சாற்றுகிறது.

மூஸாவே! உங்களிருவன் இறைவன் யார்?” என்று அவன் கேட்டான்.
”ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 20: 49,50)

முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை இவ்வுலகத்திற்கு அல்லாஹ் அனுப்பிய போது தான் காட்டும் வழியை பின்பற்றித்தான் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்ற கட்டளையுடன் தான் அனுப்பியிருக்கிறான்.

என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்” என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:38)

இவ்வாறு நபிமார்கள் மூலமாக தன்னுடைய நேர்வழியை மனிதர்களுக்கு தெளிவுபடுத்தும் வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழி காட்டுவதற்காக இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களை அனுப்பினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி தன்னுடைய திருமறையிலே பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர். (அல்குர்ஆன் 3:164)

நமக்கு நேர்வழியை திருமறை குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இவ்வாறு நேர்வழி தெளிவாகிய பிறகு முஸ்லிம்கள் குர்ஆனின் பக்கமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் பக்கமும் அழைக்கப்பட்டால் அவர்கள் அதை உடனே செயல்படுத்தக் கூடிய மக்களாக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்களே வெற்றியாளர்கள் என திருமறையில் வல்ல அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ”செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோன் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24: 51)

அவ்வாறு இல்லாமல் தம்முடைய வாழ்க்கையில் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு மாற்றமாக செயல்பட எந்த ஒரு இறை நம்பிக்கையாளருக்கும் அதிகாரம் இல்லை எனவும் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனிலே தெளிவுபடுத்துகிறான்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)

இவ்வளவு தெளிவான போதனைகளையும் மீறி நாம் மனம்போன போக்கிலே வாழ்ந்து அல்லாஹ்வும் அவனுடைய து}தர் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழியை புறக்கணித்தோம் என்று சொன்னால் மறுமையிலே கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

அவர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) ”எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்” என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். உங்களுக்கு அழிவே வராது என்று இதற்கு முன் சத்தியம் செய்து நீங்கள் கூறிக் கொண்டிருக்கவில்லையா?
(அல்குர்ஆன் 14:44)

எனவே நம்முடைய வாழ்க்கையை குர்ஆனும் ஹதீஸும் காட்டித்தந்த முறைப்படி அமைத்துக்கொள்ள வேண்டும். என்ற பேராவலுடன் இந்த நூலகம் துவக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்திலே குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் மார்க்க அறிஞர்களால் ஆற்றப்பட்ட ஆடியோ வீடியோ கேசட்டுகள் மற்றும் நூற்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இவற்றை வாங்கி கேட்டு படித்து பயன்பெற்று நம்முடைய வாழ்க்கைகளை அதன்படி அமைத்துக் கொண்டு மறுமையிலே வெற்றியாளர்களாக இருக்க முயற்சிப்போம். இவ்வாறு நாம் மார்க்கத்தை அறிந்து கொள்வதிலிருந்தும் வல்ல அல்லாஹ் நமக்கு நன்மையை நாட விரும்புகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என முஆவியா(ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி எண் 71)

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த முறைப்படி வாழ்ந்து மறுமையில் சொர்கத்திற்குரிய மக்களாக இருக்க அருள்புரிவானாக.

அநியாயக்காரன் யார்?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? 2:140

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! 5:45

அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். 6:21

இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். 6:33

(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம். 6:68

அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? 6:93

இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் – நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.” 6:135

மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். 6:144

அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். 14:34

இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை. 22:71

அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; “அத்தூதருடன் நானும் – (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான். 25:27

எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். 29:49

அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர். 30:29

எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? 32:22

(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; 42:22

உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். 49:11

எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் – அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். 62:5

நல்ல கணவன்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதோ, அல்லாஹ்வின் தூதர் ஆண்களை எச்சரிக்கிறார்கள்: “பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) “பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) “பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்) இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும். நபி அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும். சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ! பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. நபி அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி) நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது. பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி கூறியுள்ளார்கள். நபி அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி) இந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்’ என்று வலியுறுத்துகிறது. சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்) நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது. மேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19) இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் “உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?” என்று அறிவுரை கூறினார்கள். இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும். எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார். “முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர் அவர்கள் தெளிவு படுத்தினார்கள். நபி அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்) ”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915 உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160 ”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56 ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ”நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162 ”இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082