இஸ்லாம்தளம்

பிப்ரவரி20, 2009

நாவைப் பேணுக!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

உண்மை பேசுக! அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119 நேர்மையாக பேசுக! ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். அழகானதைப் பேசுக! பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83 கனிவாகப் பேசுக! உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8 நியாயமாகப் பேசுக! நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள். 6:152 அன்பாகப் பேசுக! அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36 வீண் பேச்சை தவிர்த்துடுக! நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68 பொய் பேசாதீர்! உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் – நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116 புறம் பேசாதீர்! உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12 ஆதாரமின்றி பேசாதீர்! யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35 அவதூறு பேசாதீர்! எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

ஷிர்க்,பித்அத் புரியும் இமாமைப் பின்பற்றலாமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

கடமையான ஐங்கால தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவது மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட செயல். தக்க காரணமின்றி ஜமாஅத்தை விட்டு தனித்துத் தொழக்கூடாது என்பதற்கு பல ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கின்றன. இமாமின் தொழுகை கூடாமல் போனாலும் அதன் காரனமாக பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகை கூடாமல் போகாது; நிறைவேறி விடும். இதற்கு மாற்றமாக ஷிர்க் பித்அத் புரியும் சில இமாம்கள் பின்னால் தொழும் தொழுகை நிறைவேறாது; அப்படிப்பட்ட இமாம்கள் பின்னால் தொழக்கூடாது என்று கூறி ஊர் இரண்டு படுவதற்கும், தனிப்பள்ளி கட்டுவதற்கும் சிலர் வழி வகுக்கின்றனர். அவர்களின் தவறான கூற்றிற்கு சம்பந்தமில்லாத ஹதீஸ்களைக் காட்டி சொந்த வியாக்கியானத்தை கொண்டு தங்கள் தவறான கொள்கையை நிலை நாட்டுவதுடன் சமுதாயத்தில் பிளவுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றனர். ஆகவே எப்படிப்பட்ட இமாமையும் பின்பற்றி தொழுதாலும் அதனால் நமது தொழுகைக்கு எந்த பாதிப்பு இல்லை என்பதையும் இனி விரிவாக பார்ப்போம். இணை வைக்கும் (ஷிர்க்) இமாமைப் பின்பற்றலாமா? (நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு – நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன். (31:23) தோழ்வியுற்று ஓடும் எதிரிப்படையில் ஒருவனை நபித்தோழர் ஒருவர் பாய்ந்து அவரைத் தாக்க முற்பட்டபோது அவர் ‘லா இலாஹ இல்லல்லாஹு’ என்று கூறினார். அப்போது நபித்தோழர் அதைப் பொருட்படுத்தாமல் அவரை வெட்டி வீழ்த்திவிட்டார். பிறகு அவரை வெட்டியது பற்றி வருந்தி நபி(ஸல்) அவர்களிடம் இது விஷயத்தை எடுத்து கூறினார். அப்போது அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே கலிமாவைக் கூறினான் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ? உள்ளக்கிடக்கியை நாவின் மூலமே வெளியிட முடியும் என்றார்கள். (அறிவிப்பாளர்: கபீஸாபின் துவைபு(ரழி), நூல்: முஸ்னத் அப்திர் ரஜ்ஜாக், இப்னு அஸாக்கீர்) இந்த குர்ஆன் ஹதீஸ் இரண்டிலுமிருந்து ஒருவனுடைய உள்ளத்தின் நிலை பற்றிய திட்டமான அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கிறது. அது விஷயத்தில் நாம் தலையிடுதல் கூடாது என்பதை சுட்டிக் காட்டுகின்றன. மறுமை நாளின்போது முறையே புனிதப் போரில் ஷஹீதானவரில் ஒருவரையும், தானும் கற்று பிறருக்குத் கற்பித்துக் கொடுத்த ஆலிம் – அறிஞரில் ஒருவரையும், நிறைய செல்வங்கள் அளிக்கப்பட்ட செல்வந்தரில் ஒருவரையும் கொண்டு வரப்பட்டு முதன் முதலாக இவர்களுக்கு தீர்ப்பளிக்கப்படும். இவர்களில் ஒவ்வொருவருக்கும் தான் செய்துள்ள அருட் கொடைகளை அல்லாஹ் அவர்களுக்கு எடுத்து உணர்த்துவான். அப்போது அவர்களும் அதை உணர்ந்து கொள்வார்கள். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் இவற்றிற்காக என்ன கைமாறு செய்தீர்கள் என்று கேட்பான். அதற்கு ஒருவர் (யா அல்லாஹ்) நான் உனக்காக குர்ஆனை ஓதினேன். இல்மை நானும் கற்று பிறருக்கு கற்பித்தும் கொடுத்தேன் என்பார். மூன்றாம் நபர் நீ விரும்பும் அத்துனை விஷயங்களுக்கும் நான் உனக்காக அனைத்துப் பொருள்களையும் செலவு செய்தேன் என்பார். அப்போது அல்லாஹ் முதலாம் நபரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர். உண்மையில் நீ ஒரு மாவீரன் என்று அழைக்கப்படுவதற்காக வெட்டப்பட்டு ஷஹீதாகியுள்ளீர். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மற்றொருவரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர் உண்மையில் நீ ஓர் ஆலிம் – அறிஞர் அழகாக ஓதுபவர் என்று அழைக்கப்படுவதற்காக செயல்பட்டுள்ளீர். அவ்வாறு கூறப்பட்டு விட்டது என்று கூறி இவரும் முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மூன்றாமவரை நோக்கி, நீரும் பொய் சொல்கிறீர். உண்மையில் நீர் ஒரு கொடை வள்ளல் என்று அழைக்கப்படுவதற்காகவே செலவு செய்துள்ளீர். அவ்வாறு அழைக்கப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இவரும் இழுக்கப்பட்டு நரகில் தள்ளப்படுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹதீஸ் சுருக்கம்: அபூஹுரைரா (ரழி) முஸ்லிம்) சத்தியத்தை நிலை நாட்டுவதற்காக ஒருவர் அந்த சத்தியத்தை எதிர்த்து போராடுபவர்களை எதிர்த்து சண்டையிட்டு மரணிக்கிறார். அதனை நாம் கண்ணால் காணுகிறோம். அந்த சண்டையில் வெட்டுப்பட்டு மரணிப்பதும் நமக்கு தெரிகிறது. நம் காணும் அறிவின் படி அவர் வெட்டுப்பட்டு ஷஹீதாகியுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட ஷஹீதை முதன் முதலில் அல்லாஹ் நரகில் எறிகிறான் என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது. அடுத்து ஆலிம் ஒருவர் தனது அறிவைக்கொண்டு மக்களை அல்லாஹ்வின்பால் அழைக்கிறார். அவரது உபதேசங்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் உண்மையை உணர்ந்து தங்களின் தவறுகளை விட்டு தெளபா செய்து நேர்வழிக்கு வந்து விடுகின்றனர். அவரைப் பெரும் சீர்த்திருத்தவாதி என உலகமே போற்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆலிமையும் அல்லாஹ் நரகில் எறிவதாகவும் இந்த ஹதீஸ் கூறுகிறது. அதே போல் மிகப் பெரிய செல்வந்தர் தமது செல்வங்களில் பெரும் பகுதியை அல்லாஹ்வுடைய பாதையில் அள்ளித் தருவதை நமது கண்களாலேயே பார்க்கிறோம். அவர் பெரும் கொடை வள்ளல் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ் அவரையும் நரகில் எறிவதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? நாம் நமது கண்களால் திட்டமாகப் பார்ப்பதை வைத்தோ, அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோ ஒருவனுடைய உள்ளத்தில் இருப்பது ஈமானா – இறை விசுவாசமா, குஃப்ரா – இறை நிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடியாது. அந்த இரகசியம் அல்லாஹ்வுக்கே வெளிச்சம். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று நம் நாட்டு பழமொழி. ஆயினும் இங்கு ஒருவனுடைய உள்ளத்திலிருப்பதை தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குப்ரை பற்றித் திட்டமாகத தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்? மக்கத்து காபிர்களின் அதே கொள்கையைத் தங்களின் கொள்கையாக கொண்டிருப்பதை இணைவைத்தலை ஆதரிப்பதை நம்மால் திட்டவட்டமாக உர்ஜிதம் செய்ய முடியாது. இந்த நிலையில் தன்னை முஸ்லிம் என்று சொல்வதோடு இந்த உம்மத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள ஒருவர் அல்லாஹ்வின் கட்டளையின்படியும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறைப்படியும் ஒருவர் தொழும்போது அதனைப் பின்பற்றித் தொழமாட்டேன் என்று எவ்வாறு ஒரு முஸ்லிம் சொல்ல முடியும்? அப்படிச் செய்தால் அல்லாஹ்வின் கட்டளையையே நிராகரித்த குற்றத்திற்கல்லவா ஆளாக நேரிடும். மேலும் அப்படிப்பட்ட ஒருவரைப் பின்பற்றித் தொழுவதால் அவரின் தவறான கொள்கைகளுக்கும் நாம் துணை போவதாக பொருளாகாது. ஒரு முறை ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்களிடம் பித்அத்தையுடைய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அத்தகையவருக்குப் பின்னால் அவருடைய ‘பித்அத்’ அவரிடமே இருக்கும் நிலையில் தொழுவீராக! என்றார்கள் (ஹிஷாமும் பின் ஹஸ்ஸான்(ரஹ்), முஸ்னத் ஸயீது பின் மன்சூர்) அதிய்யு பின் கியார் என்பவர் உஸ்மான்(ரழி) அவர்களிடம் வந்து, நீங்கள் அனைவருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள். இப்போது நாங்கள் காணும் நிலையில் உங்களுக்குத் துன்பம் வந்து சம்பவித்துள்ளது. (இப்போது) எங்களுக்குக் குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றி தொழுதால் நாமும் பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். அதற்கு அவர்கள் ‘தொழுகைதான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகுறச் செய்யும்போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்து கொள்வீராக! அவர்கள் தீமை விளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மை தற்காத்துக் கொள்வீராக’ என்றார்கள். (அதிய்யு பின் கியார்(ரஹ்) புகாரி) மேற்காணும் உஸ்மான்(ரழி) அவர்களின் கூற்றிலிருந்து தொழ வைப்பவர், அவர் ‘பித்அத்’ காரராக அல்லது வேறு தவறுகள் செய்பவராக இருப்பினும், நாம் ஜமாஅத்துடைய பலன் இழந்து நஷ்டம் அடைவதைவிட அவர்களுடன் சேர்ந்து ஜமாஅத் தொழுவதே மேல் என்பதை அறிய முடிகிறது. பின்பற்றி தொழுவோர் முறையாகத் தொழுதிருக்கும்போது, இமாம் முறை கேடாகத் தொழுது இமாமுடைய தொழுகை முறிந்து விடுவதால், அவரை பின்பற்றித் தொழுதவரின் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. ‘உங்களுக்கு சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அன்றி அவர்களுக்குத் தான் கேடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா (ரழி) புகாரி) இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜுபின் யூசுப் எனும் மிகக் கொடிய அநியாயம் செய்தவனுக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள் என்று இமாம் புகாரி(ரஹ்) அவர்களும், அபூஸயீதில் குத்ரி(ரழி) அவர்கள் பெரும் குழப்பவாதியாக இருந்த ‘மர்வான்’ என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகை தொழுதுள்ளார்கள் என்பதாக இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், மற்றும் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ முதலியோரும் தமது நூல்களில் வெளியிட்டுள்ளார்கள். அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்கள் காலத்தில் இப்னு உமர்(ரழி) அவர்கள் கஷ்பிய்யா, காரிஜிய்யா ஆகிய பெரும் குழப்பவாதிகளுக்குப் பின்னால், அவர்கள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதார்கள். அது சமயம் அவர்களை நோக்கி, தமக்குள் சண்டை செய்து கொண்டும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாருக்கு பின்னால் நின்று தொழுகிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், யார் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்குப் பதில் அளிப்பேன். யார் ‘ஹய்ய அலல் ஃபலாஹ்’ (வெற்றியடைவதற்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்கும் பதில் அளிப்பேன். ஆனால் யார் ‘ஹய்ய அலாகத்லி அக்கீல் முஸ்லிமி வ அக்தி மாலிஹீ’ (உமது சகோதர முஸ்லிமை வெட்டி அவருடைய பொருளை அபகரிப்பதற்காக வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அதற்கு மாட்டேன் என்று கூறிவிடுவேன் என்றார்கள் (நாபிஊ(ரழி), ஸூனனு ஸயீது பின் மன்சூர்) ஒரு முறை அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்களிடம் ஒளூவில்லாமல் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்து விட்டால் என்ன செய்யவேண்டும்? என்பதாக கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் மட்டும் தொழுகையை மீட்ட வேண்டும்; அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை என்றார்கள். (ஸாலிம்(ரழி), தாரகுத்னீ) ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் தாம் ஜுனுபாளி – குளிப்புக் கடமை உள்ளவர்களாயிருக்கும் போது (விஷயம் தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்து விட்டார்கள். பின்னர் (விஷயம் தெரிந்ததும்) மீட்டித் தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் ஏவவில்லை. (அஷ்ஷரீதுஸ்ஸகஃபி, தாரகுத்னீ) மேற்காணும் ஹதீஸ்கள் அஃதர்- ஸஹாபாக்களின் சொற்செயல்கள் வாயிலாக தொழ வைக்கும் ஓர் இமாம் அவர் தொழுகையிலோ அல்லது வெளியிலோ என்ன கோளாறுகள் செய்திருந்தாலும் அவற்றால் அவருடைய தொழுகைக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, அவரைப் பின்பற்றித் தொழுவோர் முறையாக தொழுதிருக்கும் போது, அவற்றால் இவர்களின் தொழுகைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிகிறோம். தொழுகையில் இமாம் செய்யும் தவறுகளே மற்றவர்களின் தொழுகையைப் பாதிக்காது எனும்போது, தொழுகைக்கு வெளியில் அவர் செய்யும் தவறு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும்? எவர் நமது தொழுகையைத் தொழுகிறாரோ, நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அவர் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வின் தூதரினதும் பாதுகாப்பில் உள்ளார். எனவே இந்த பாதுகாப்பில் இருப்பவருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர். (அனஸ்(ரழி), புகாரி, அபூதாவூத், திர்பிதி, அப்னுமாஜ்ஜா, தாரமி, அஹ்மத்) அப்படியானால் அவர் ஒரு முஸ்லிம், மற்ற முஸ்லிம்களுக்கிருக்கும் அதே உரிமைகளும், கடமைகளூம் அவருக்கும் உண்டு. (புகாரி) என்று இன்னொரு அறிவிப்பில் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களிலிருந்து ஷிர்க், பித்அத் சடங்குகளைச் செய்கிறவர்கள் பின்னால் தொழுதாலும், தொழுபவரின் தொழுகை கூடாமல் போகாது; மேலும் இக்காரணங்களைக் கூறி ஒருவர் பின்னால் தொழுவதை ஒருவர் தவிர்த்துக் கொண்டால், அந்த இமாம் முஸ்லிம் இல்லை; காஃபிர் அல்லது முஷ்ரிக் என்று இவர் முடிவு செய்தே பின்பற்றாமல் இருக்கிறார். ஒருவரது உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் அறிய முடியாது. அவர்களின் வெளிரங்கமான செயல்களை வைத்து ஒருவரை காஃபிர் என்றோ, முஷ்ரிக் என்றோ ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் பெறமாட்டார். இதற்குப் பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் ஆதாரங்களாக இருக்கின்றன.

முஸ்லிம்களே ஒன்று படுவீர்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

“மேலும் நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றை பலாமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். (அல்குர்ஆன் 3:103) இன்றைய உலகில் இஸ்லாம் வேகமாகப் பரவி வருகிறது. இஸ்லாத்தில் இணையும் புதியவர்களிடம் ஓர் உத்வேகம் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இதுவரை தங்களை பிணைத்திருந்த விலங்குகளை உடைத்தெரிந்து தாங்கள் பெற்ற சுதந்திரத்தை ஏனையோரும் அனுபவித்திட வேண்டும் என்ற உத்வேகமே அது. ஆனால் இங்கு வேதனை என்னவென்றால் இன்றைய உலகில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்களே பல விதத்தில் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்பதுதான். இன்றைய மார்க்க அறிஞர்கள் என்போரும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவே இஸ்லாத்தின் தனித்தன்மையை குலைத்து மாற்று வண்ணங்கள் பூசுகின்றனர். இந்நிலைகளை தகர்த்து இஸ்லாத்தைப் பூரணமாக நிலை நாட்டப் புறப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களோ சிறுசிறு கருத்து வேறுபாடுகளையும் அல்லாஹ் 4:59 வசனத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் குர்ஆன் ஹதீஸை மட்டும் கொண்டு முடிவுக்கு வராமல் தங்கள் சொந்த யூகங்களை புகுத்தி அவற்றை பூதாகார பிரச்னையாக்கி தங்களுக்குள் பிளவுண்டு கிடக்கின்றன. துண்டாடப்பட்ட பட்ட இயக்கங்கள் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என ஒங்கி ஒலிக்கின்றனர். இவர்கள் எல்லோரும் பற்றிப் பிடித்திருப்பது குர்ஆனைத்தான். ஆனால் இவர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் இப்படி பிளவுண்டு கிடக்கின்றனர். இவர்கள் இலக்கை எட்ட முடியாமல் எங்கோ நின்று எதையோ செய்து கொண்டு இதுதான் ‘இஸ்லாமியப் பணி’ என்று திருப்திப் பட்டுக்கொள்கின்றனர். குர்ஆன் என்ற தனது கயிற்றை அடியார்கள் அனைவரையும் ஒற்றுமையாகப் பற்றிப் பிடிக்கத்தான் அல்லாஹ் கோருகின்றான். இங்கே நிகழ்வதென்ன? ஜமாஅத்தே இஸ்லாமி என்றும், முஜாஹித் என்றும், ஸலபி ஜமாஅத் என்றும், அஹ்லே ஹதீஸ் என்றும், JAQH என்றும், TNTJ என்றும் இன்னும் எத்தனையோ இயக்கங்கள் அமைப்புகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் குர்ஆனையே பற்றிப் பிடித்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை? இவர்களின் இத்தகைய போக்கினால் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். அடுத்து நம்மிடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகளை களைய சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றுகூடி இறை வழிகாட்டுதலை ஆராயமல் அவசரப்பட்டு தங்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி விடுவது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நம்மால் ஏற்படுத்தப்படும் மாபெரும் முட்டுக்கட்டைதான். இறை மார்க்கத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இத்தகைய நம் செயல்களுக்காக நாளை மறுமையில் இறைவன் முன் நாம் குற்றவாளிக் கூண்டில் நின்றேயாக வேண்டும். இறைவன் தன் திருமறையில் கடுமையாக இப்படி எச்சரிக்கிறான் “(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105)

வெற்றியாளர்கள் யார்?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும் நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.3:104 ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். 3:130 எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். 3:185 முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200 எவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் – இது மகத்தான வெற்றியாகும். 4:13 ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் விலகிக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். 5:90 அந்தாளில் எவரொருவர் வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ அவர்மீது (அல்லாஹ்) கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்” 6:16 அன்றைய தினம் (நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். 7:8 எவர்கள் ஈமான் கொண்டு தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். 9:20 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்; நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு நன்மையே செய்யுங்கள். 22:77 உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் வெற்றியாளர்களாவார்கள். 30:38 எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள். 39:61 எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும். 45:30 (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள் அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 62:10 உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். 64:16

தாய் தந்தையர்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஒருவர் நபி அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி “அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம் நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” அல்குர்ஆன் 31:14 பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23 இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244 பெண்கள் எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல:் முஸ்னது அஹமது ஹதீஸ் எண் 1957 அவர்களில் (1400 ஆண்டுகளுக்குமுன் மக்காவாசிகளின்) ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாறாயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது; அவன் கோபமடைகிறான். அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோஇ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? அல்குர்ஆன் 16:58,59 எவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து அவர்களை நன்முறையில் வளர்ப்பாரோ, அவரை அவர்கள் நரகிலிருந்து காப்பற்றுவார்கள். நூல்: முஸ்லிம் நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். அல்குர்ஆன் 17:31 அன்று பெண் குழந்தை பிறந்தவுடன் உயிரோடு புதைத்தார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பிறப்பதற்கு முன்பே ஆணா, பெண்ணா என்றறிந்து பெண்ணாயிருந்தால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். உண்மையில் இதுவும் ஒரு கொலைதான். அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் “அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?” முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்” என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம். பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்! பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ பெற்றோரின் திருப்தி பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபி கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபி பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி பெற்றோரை பேணுதலும் ஜிஹாத் ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன் என்று கூறினார். உனக்கு தாய் உண்டா? என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ) அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக!