இஸ்லாம்தளம்

பிப்ரவரி19, 2009

தலைவர்களுக்கு சிலை தேவையா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மக்களுக்கு தொண்டு செய்து, அதன் முலம் மக்களிடையே பிரபலமானவர்களுக்கு, அவர்கள் இறந்தபின், சிலருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது உருவத்தை மாலையாக வடித்து, பல இடங்களில் நிறுத்தி மாலையிட்டு மரியாதை செய்து வருவதைப் பார்த்து வருகிறோம்.

மாலை மரியாதை என்பது போய் கால ஓட்டத்தில் அக்கற்சிலைகள் தெய்வங்களாக உயர்வு பெற்று விடுகின்றன. மனிதனின் கால் மிதிபடும் கல் அந்த மனிதனே தெய்வமாக வணங்கும் நிலைக்கு உயர்வதற்கு யார் காரணம்? மனிதனின் அறிவற்ற செயலே இதற்குக் காரணம். தங்களை பெரும் பகுத்தறிவாளர்கள் என கூறிக்கொள்வோரும் இதற்கு விதிவிலக்குப் பெற்றவர்களாக இல்லை.

மிதிக்கும் படியும் கல்லுதான்; வணங்கும் சிலையும் கல்லுதான். கல்லை தெய்வமாக வணங்குகிறவன் காட்டுமிராண்டி என வசை பாடியவர்கள், இன்று தாங்கள் மதிக்கும் தலைவர்களை அதே கல்லைக் கொண்டு சிலைகளாக வடித்து மாலை மரியாதை செய்து வருகிறார்கள். இந்த சிலைகளே சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தெய்வங்களாக மாறுகின்றன என்ற உண்மையை விளங்காதவர்களாக இருக்கிறார்கள்.

மனிதன், ஆரம்பத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கத்துடன் சமாதி, பின்னர் கற்சிலை வடித்தல் என்று ஆரம்பித்துப் பின்னர் அதுதான் சிலை வணக்கமாக மாறுகிறது என்பதை இறுதி மறை அல்குர்ஆன் 71:23 அம்பலப்படுத்துகிறது.

மனிதர்களாக வாழ்ந்து இறந்தவர்களுக்கு மரியாதை என்ற பெயரால் நிறுவப்படும் கற்சிலைகளே குட்டி, குட்டி தெய்வங்களாக உருவாகி மனிதர்களிடையே பல தெய்வ வழிபாட்டை உருவாக்குகின்றன. தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கின்றவர்கள் இந்த பொய்க் கடவுள்களை ஒழிப்பதற்கு பதிலாக, இவர்களே மேலும் பொய்க் கடவுள்கள் தோன்ற வழி வகுத்துக்கொண்டு அகில உலகங்களையும் படைத்து நிர்வகித்து வரும் அந்த ஒரேயொரு இறைவனை மறுக்கும் நாஸ்திகர்களாக ஆகிவிடுகிறார்கள். இவர்களும் மனிதனின் சீரழிவுக்கு புரோகிதரகளைப் போலவே ஒரு வகையில் காரணமாகிவிடுகிறார்கள்.

இந்த சிலைகள் இறைவன் மன்னிக்காத, இறைவனுக்கு இணை வைக்கும் கொடும் செயலை மனித வர்க்கம் பக்தியுடன் செய்ய வைப்பது ஒருபுறம் அச்சிலைகளே மனிதர்களிடையே பெரும் கலவரங்கள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒரு சமூகத்தாருக்கு பெரும் தலைவராகத் தெரியும் ஒருவர், இன்னொரு சமூகத்தாரின் வெறுப்புக்குக் காரணமாக இருக்கிறார். எனவே ஒரு சமூகத்தாரின் சிலையை பிரிதொரு சமூகத்தார் அவமானப்படுத்தும் நிலையும் அரங்கேறி வருகிறது.

அதனால் சிலைகளை பாதுகாக்க அதனைச் சுற்றி கம்பி வேலி போடுகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். தலைவர்களின் சிலைகள் சிறைக் கைதியாகவும் அவர்களின் தலைகள் பரவைகளின் மலக்கூடமாகவும் காட்சி அளிப்பதை பார்க்கிறோம். சிலைகளை சிறையிலிட்டு பாதுகாப்பு அளித்தும், அவற்றை உடைத்து அவமானப்படுத்தும் செயல்களும் நிற்பதாக இல்லை.

உத்திர பிரதேசத்தில் அம்பேத்கார் சிலையை யாரோ உடைத்து அவமானப்படுத்தி விட்டார்கள். அதனால் மஹாராஷ்டிராவில் பெருங்கலவரம் ஏற்பட்டு தொடர்வண்டிகள், நூற்றுக்கணக்கான பேருந்துகள், வாகனங்கள் எரிப்பு, உயிர்ச் சேதம் என பல கோடிகள் நாசமாகின.

பலருக்கு ஞாபகம் இருக்கலாம், தலைவர்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கத்துடன் மாவட்டங்களுக்கு அத்தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. அப்படி ஒரு மாவட்டத்துக்கு ஒரு தலைவரின் பெயர் வைக்கப்போய் அங்கு பெரும் கலவரங்கள் மூண்டன. அரசு அக்கலவரத்தை அடக்க முடியாமல் தவித்தன. இறுதியில் அந்த மாவட்டத்திற்கு அந்தத் தலைவரின் பெயர் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதுடன், ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு, பழைய பெயர்களே மீண்டும் வைக்கப்பட்டன.

இதே அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இன்னொரு அழகிய முடிவை எடுத்தால், அது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதாக அமையும். அதுவே நாட்டிலுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றுவதாகும். தலைவர்களுக்கு மரியாதை செய்வது என்பது, அவர்களின் நல்ல போதனைகளை எடுத்து நடப்பது என்பதாகும். அவர்களின் அழகிய செயல்முறைகளைப் பின்பற்றுவதாகும். இதுவே அவர்களை உண்மையில் மதிப்பதாகும். அதற்கு மாறாக அவர்களுக்கு சிலைவடித்து, சிறையிலிட்டு, அவர்களின் தலையை பறவைகளின் மலக்கூடமாக ஆக்குவது உண்மையில் அவர்களுக்கு மரியாதை செய்வதாக ஆகாது.

எனவே நாட்டிலுள்ள சிலகளை அகற்றுவது பல தெய்வ வணக்க வழிபாடுகளை ஒழிக்க வழி வகுப்பதோடு, சமூகங்களில் ஏற்படும் சச்சரவுகளால் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு பல கோடி நஷ்டத்தோடு, பொன்னான மனித உயிர்களும் மாய்க்கப்படுவது தவிர்க்கப்பட வழி ஏற்படும்; சிலை விரும்பிகள் சிந்திப்பார்களா?

மனிதன் சிந்திக்க வேண்டாமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? 2:44

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 2:269

அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். 4:82

(நபியே!) நீர் கூறும்; “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்; “குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” 6:50

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். 6:98

அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 13:3

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும் மானக்கேடான காரியங்கள் பாவங்கள் அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் – நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். 16:90

அவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும் உண்மையையும் குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள். 30:8

அச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை – அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.30:24

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும் பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். 35:3

அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 39:42

அவர்கள் கூறுவார்கள்; “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”

“முபாஹலா”

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முபாஹலா என்றால் என்ன? முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் “முபாஹலா” செய்யலாமா? முபாஹலா,வை நியாயப்படுத்துகிறவர்கள் அல்குர்ஆன் 3:61 இறைவாக்கை ஆதாரமாகத் தருகின்றனர். அந்த இறைவாக்கு வருமாறு:

(நபியே!) இது பற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும், எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால், வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று கூடி) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று சாபமிட்டுக் கொள்வோம், என நீர் கூறும். (3:61)

இந்த வசனம் இறங்கிய வரலாற்றைப் பற்றி வரலாற்று நூல்களில் எழுதப்பட்டுள்ள விபரம் வருமாறு:

நஜ்ரானிலிருந்து சில பாதிரிகள் மதீனா வந்து மஸ்ஜிதுல் நபவியில் தங்கி, அவர்களது தவறான முக்கடவுள் கொள்கையை நிலைநாட்ட விவாதித்து வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட 3:55-60 வசனங்களைக் கொண்டு அழகிய முறையில் விவாதித்து உண்மையை எடுத்துரைத்தனர். இது சில நாட்கள் நீடித்தன. அக்கால கட்டத்தில் அப்பாதிரிகள் அவர்களின் முறைப்படி வணக்க வழிபாடுகளில் ஈடுபட மஸ்ஜிதிலேயே அனுமதியும் கொடுத்தனர். இவ்வளவு இதமாகவும் நளினமாகவும் நபி(ஸல்) சத்தியத்தை எடுத்து வைத்தும், அந்த பாதிரிகள், இந்த இறுதி வழிகாட்டல் நூலின் தெளிவான நேரடியான வசனங்களை மறுத்து விதண்டாவாதம் செய்து, தங்களின் அசத்தியக் கொள்கையான முக்கடவுள் கொள்கையை வம்பாக நிலைநாட்டத் துடித்தனர்.

அல்குர்ஆனின் தெளிவான நேரடியான ஆதாரங்கள் கிறிஸ்தவ பாதிரிகளிடம் எடுபடாமல் போகவே இறுதியாக வேறு வழி இன்றி, எல்லாம் வல்ல அல்லாஹ் 3:61 வசனத்தை இறக்கி, அந்த பாதிரிகளை அவர்களது குடும்பத்தோடு முபாஹலாவுக்கு வரும்படி அழைப்பு விடும்படி கட்டளையிட்டான்.

இவ்வாறு அழைப்பு விடுத்ததும் அந்தப் பாதிரிகளின் உள்ளத்தில் கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது இறைவனைப் பற்றிய அச்சம் இருந்த காரணத்தால், அந்த முபாஹலா அழைப்பை ஏற்காமல், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டனர். அதன் பின்னர் நபி(ஸல்) அவர்களுக்கு முனாஃபிக்களாலும் முஷ்ரிக்களாலும், காஃபிர்களாலும், யூத, கிறிஸ்தவர்களாலும் எத்தனையோ அவதூறுகள் ஏற்பட்டன. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் யாரையும் முபாஹலாவுக்கு அழைத்ததாக ஆதாரம் இல்லை.

ஆயிஷா(ரழி)மீது படு அவதூறு ஏற்பட்டு நபி(ஸல்) பல நாட்கள் துடித்தபோதும், அவதூறு பரப்பியவர்களை முபாஹலாவுக்கு நபி(ஸல்) அவர்களோ, ஆயிஷா(ரழி) அவர்களோ அழைக்கவில்லை. நபிமார்களுக்கு வஹீ மூலம் சத்தியத்தை – நேர்வழியை அறிவித்ததோடு, அதை நிலைநாட்ட சில சமயங்களில் முஃஜிஸாத் என்ற அற்புத நிகழ்வுகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். ஆனால் இந்த முஃஜிஸாத்தை எந்த நபியும் தமது விருப்பத்திற்கு நிகழ்த்திக் காட்ட முடியாது. அல்லாஹ் அனுமதித்தால் மட்டுமே அவர்களால் முஃஜிஸாத் என்ற அற்புத நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்ட முடியும். அதே போல் இந்த முபாஹலாவும் அல்லாஹ்வின் அனுமதியின் பேரில் அழைக்க முடியுமே அல்லாமல், தங்கள் இஷ்டத்திற்கு யாரையும் முபாஹலாவுக்கு அழைக்கும் அனுமதி பெற்றிருக்கவில்லை என்பதை விளங்கமுடியும்.

மேலும் நபிமார்கள் வஹீயின் தொடர்புடன் இருந்ததால், அப்படி ஒரு முபாஹலா நடந்திருந்தால், அதன் இறுதி முடிவும் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டிருக்கும். எனவே வஹீயின் தொடர்பு இல்லாத நிலையில் ஒரு முஸ்லிம் மற்றவர்களை முபாஹலாவுக்கு அழைப்பது மார்க்கத்தைக் கேலிக் கூத்தாக்கும் ஒரு தீய செயலாகும். மனிதனும் முயற்சிகள் செய்து இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம் என்னும் இறைவனுக்கு இணை வைக்கும் ஷிர்க் எனும் கொடிய செயலில் ஈடுபட வைக்கும் அத்துவைதம் எனும் பாவச்செயலை நியாயப்படுத்தும் சூஃபிகள், நபிமார்களுக்கு முஃஜிஸாத் இருந்தது போல் எங்களுக்கும் கராமத் எனும் அற்புத செயல்கள் உண்டு என, சில கண்கட்டி வித்தைகளை செய்து காட்டி மக்களை மயக்கி தங்கள் பக்கம் ஈர்ப்பது போல், இந்த முபாஹலா எனும் பூச்சாண்டியைக் காட்டி மக்களை மயக்கி தங்கள் பக்கம் ஈர்க்கும் கெட்ட எண்ணமுள்ள போலிகளே இந்த முபாஹலா வழிகேட்டில் ஈடுபட முடியும்.

மற்றபடி, நபிமார்களுக்கு மேலதிகமாகக் கொடுக்கப்பட்டிருந்த முஃஜிஸாத், முபாஹலா அதிகாரங்கள் மற்றவர்களுக்கு இல்லை என்பதே உண்மையாகும். அதிலும் குறிப்பாக நேர்வழி நடக்கும் முஸ்லிம்களுக்கு இல்லவே இல்லை. அவர்களுக்கு சத்தியத்தை நிலைநாட்ட அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் தாராளமாகப் போதும். அதைத்தான் நபி(ஸல்) அவர்கள்.

நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள், ஒன்று இறைவனின் நேர்வழிகாட்டல் நூல் அல்குர்ஆன், மற்றது என நடைமுறை என்றும் நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகிறவனைத் தவிர வேறு எவரும் அதில் வழி கெட்டுச் செல்லமாட்டார் என்றும் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறி இருக்கிறார்கள்.

மார்க்க விவகாரம் எதுவாக இருந்தாலும், அதன் உண்மை நிலையை குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கொண்டு நிலைநாட்டி விட முடியும். குர்ஆன், ஹதீஸ் நேரடியாகச் சொல்லும் கருத்துக்கு முரண்பட்ட எவருடைய சுய விளக்கமும் தேவையே இல்லை. எனவே மார்க்கத்தை-சத்தியத்தை-நேர்வழியை நிலைநாட்ட முபாஹலா தேவையே இல்லை; முபாஹலாவை நாடிச் செல்கிறவன் வழி கேட்டைத் தேடிச் செல்கிறான் என்பதே உண்மையாகும்.

இறுதித் தூதரையும், அவருக்கு அருளப்பட்ட இறுதி வழிகாட்டல் நூலையும் ஏற்றுக்கொள்ள மறுத்த பாதிரிகளை நோக்கித்தான் முபாஹலாவுக்கு அழைப்பு விடும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். அப்படியானால் இறுதி நபியையும், அல்குர்ஆனையும் மறுப்பவர்கள்தான் முபாஹலாவின் தயவை நாடிச் செல்ல முடியும். இறுதித் தூதரையும், அல்குர்ஆனையும் மனப்பூர்வமாக ஏற்றிருப்பவர்கள், ஒருபோதும் முபாஹலாவின் துணையை நாடிச் செல்லமாட்டார்கள். அதிலும் குறிப்பாக இறுதித் தூதரையும், அல்குர்ஆனையும் ஒப்புக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக முபாஹலா தேவையே இல்லை என்பதே குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் இரவும் பகலைப் போல் தெரியும் உண்மையாகும்-சத்தியமாகும். அதற்கு மாறாக முபாஹலாவில் ஈடுபடுகிறவர்கள் மக்களிடையே வழிகேட்டையே வளர்க்கிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

மார்க்கத்தை-சத்தியத்தை-நேர்வழியை நிலைநாட்ட முபாஹலா அவசியமே இல்லை. அடுத்து இவ்வுலக விவகாரங்களில் முடிவு செய்ய முபாஹலா கூடுமா? என்பதை விரிவாகப் பார்ப்போம். உலகியல் காரியங்களில் எந்த விஷயமாக இருந்தாலும் ஆதாரங்களைக் கொண்டும், சாட்சிகளைக் கொண்டும், குற்றத்தை நிரூபித்து சத்தியத்தை நிலைநாட்டி விட முடியும். கொலைக்குற்றம், திருட்டுக்குற்றம், விபச்சாரக் குற்றம் போன்ற கொடூரக் குற்றங்களைக் கூட சாட்சிகள் கொண்டு நிரூபித்துவிட முடியும். ஒருவன் கொலை செய்துவிட்டு கொலை செய்யவேயில்லை என மறுக்கிறான். அவன் கொலை செய்ததைக் கண்ணால் பார்த்த இருவர் நீதி மன்றத்தில் சாட்சி சொன்னால் போதும்; குற்றவாளி ஆயிரம் சத்தியம் செய்து தான் கொலை செய்யவில்லை என்று கதறினாலும், நீதிமன்றம் அவன் குற்றவாளி என்றே தீர்ப்பளிக்கும். ஆக கொலைக் குற்றத்திற்கு, திருட்டுக் குற்றத்திற்கு இரண்டு நேரடி சாட்சிகள் இருந்தால் போதும்; குற்றம் நிரூபிக்கப்பட்டு விடும். குற்றவாளி தப்ப முடியாது.

ஆனால் விபச்சாரக் குற்றத்திற்கு நான்கு சாட்சிகள் வேண்டும்; அவ்வளவுதான். நான்கு சாட்சிகள் சம்பவத்தை நேரடியாகப் பார்த்ததாகச் சாட்சி சொன்னால் போதும்; இஸ்லாமிய ஆட்சியில் அப்பெண்ணுக்கு தண்டணை வழங்கப்பட்டு விடும். நான்கு சாட்சிகள் இல்லை. ஆனால் பெண்ணின் கணவன் மட்டும் அக்கோரக்காட்சியை தன் கண்களால் கண்டுவிட்டான். அவனால் தன் மனைவிக்குத் தண்டனையைப் பெற்றுத்தர முடியுமா? முடியாது. இந்த நிலையில் அக்கணவன் நெறிகெட்ட அப்பெண்ணுடன் தொடர்ந்து கணவன்-மனைவி என்ற நிலையில் வாழ அவன் மனம் இடம் கொடுக்குமா? மனம் இடம் தராது. அவன் தனது வாழ்வில் நிம்மதி பெற மார்க்கம் அவனுக்கு அளித்திருக்கும் வாய்ப்பே முபாஹலா போன்ற லிஆன் என்ற ஆயுதம். அதாவது நான் என் மனைவி இன்னொரு ஆணுடன் விபச்சாரம் செய்ததை என் கண்களால் கண்டேன். இது உண்மை. இது பொய்யாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என்மீது ஏற்படுமாக என்று அவன் தனக்கே சாபமிட்டுக் கொள்ள வேண்டும். அதை மறுப்பதாக இருந்தால் அப்பெண் என் கணவர் என்மீது பழி சுமத்துகிறார். நான் அவர் கூறும் விபச்சாரத்தில் ஈடுபடவில்லை. இது உண்மை. இது பொய்யாக இருக்குமானால் அல்லாஹ்வின் சாபம் என்மீது ஏற்படுமாக என்று அவள் தனக்கே சாபமிட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பிரிந்து விட வேண்டும்.

ஆக, இப்படி மன அமைதிக்காக கூடி வாழும் கணவன் மனைவிக்கிடையில், மனைவி மீது விபச்சாரக்குற்றம் ஏற்பட்டு, அதை நிரூபிக்க நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் மட்டுமே, தனக்குத்தானே சாபம் இட்டுக் கொள்ளும் லிஆன் என்ற முபாஹலா போன்றதற்கு அனுமதி உண்டு. வேறு எந்த நிகழ்வுக்கும் முபாஹலாவுக்கு அனுமதியே இல்லை என்பதே உறுதியாகத் தெரிகிறது. அதுவும், நான்கு சாட்கிகள் இருக்கும் நிலையில் லிஆனுக்கே அனுமதி இல்லை எனும்போது பல சாட்சிகள் இருக்கும்போது முபாஹலாவுக்கு அனுமதி எங்கே இருக்கிறது?

ஆக எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும், மார்க்கமாயிலும், உலகியல் ஆயினும், ஓர் உண்மை முஸ்லிம் முபாஹலாவுக்கு அழைக்கவும் மாட்டார். பிறரின் முபாஹலா அழைப்பை ஏற்கவும் மாட்டார். நேர்வழிவிட்டு கோணல்வழிகளில் செல்பவர்களே முபாஹலா பூச்சாண்டி காட்டி மக்களை மயக்கி தன்பக்கம் ஈர்க்க முனைவார்கள் என்பதே உண்மையாகும்.

விதியைப் பற்றி திருமறை ஹதீஸ்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் விதியுடன்(கத்ர்) படைத்திருக்கின்றோம். அல்குர்ஆன் 54-49

வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி

மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி

விதி என்பது கிடையாது மதியைக் கொண்டு விதியை வென்று விடலாம் என்று கூறுபவர்களுக்கு மேற்காணும் திருமறையும் நபிமொழியும் ஓர் எடுத்துக் காட்டாகும்.

மனிதன் நிலையினை அல்லாஹ் தெளிவுபட விளக்குகின்றான் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் மனிதனோ தன்னைத்தானே உயர்த்திக்கொண்டு எல்லாம் என் அறிவாற்றலால் வந்தது என்று பெருமையடித்துக் கொண்டு அலைவதை காண முடிகிறது.

அல்லாஹ் தன் திருமறையில்
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை. அல்குர்ஆன் 64-11

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். அல்குர்ஆன் 57-22. இவ்வாறு திருமறை தெளிவாக கூறுகிறது.

மனிதன் எத்தகைய காரியங்கள் செய்தாலும் அல்லாஹ்வே அவனை செயல்படுத்துகிறான் என்பதை நபி அவர்களின் பொன்மொழிகள் சான்று பகர்கின்றன.

அல்லாஹ் ஒவ்வொரு உயிரையும் படைத்து அதன் ஆயுளையும் அதன் உணவையும் அதற்கேற்படும் சோதனைகளையும் பதிவு செய்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது(ரலி) நூல்: திர்மிதி

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.

கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி

அப்படியெனில் நாங்கள் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று எண்ணி செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று சஹாபாக்கள் நபி

அதற்கு நபி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். “நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொரு வரும் எதற்காக படைக்கப்பட்டுள்ளனரோ அவற்றை செய்ய வேண்டும். நூல்: புகாரி, திர்மிதி

விதிதான் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதே என்று கண்ணைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுவோம்! விதிப்படி நடக்கட்டும் என்று கூறிக்கொண்டு செயல்படலாகாது. அதற்குத்தான் நபி அவர்கள் கூறினார்கள், எதற்காக படைக்கப்பட்டுள்ளோமோ அவற்றையே செய்ய வேண்டும். நாம் படைக்கப்பட்டதின் நோக்கம் இறைவணை வணங்க வேண்டும். மற்றும் உள்ள அன்றாட வேலைகள் மனிதனுக்கு ஏவப்பட்டுள்ளதை நல்லவைகளை மட்டுமே செய்யவேண்டும்.

இதைவிட்டு விதிதான் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதே என்று தன் விருப்பத்திற்கு செயல்படுவதுதான் ஷைத்தானின் சூழ்ச்சியில் பின்னப்படுவதாகும். இறைவன் விதித்த விதி மரணத்தை தவிர மற்றவைகளை மாற்றுவதற்குறிய வழிமுறைகளை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2-186

(அவனை) நாடுபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். அல்குர்ஆன் 42-13

இவ்வாறு அல்லாஹ் தன் அடியார்களை பிரார்த்தனை மூலம் கேட்கச் சொல்கிறான்.
பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. என்று நபி
அவர்களிடத்தில் கேட்டார்கள். அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான்(ரலி) நூல்: திர்மிதி

பிரார்த்தனை எனும் பெயரில் வரம்பு மீறி கேட்டுவிட்டு எனது பிரார்த்தனைக்கு பயனில்லையே என்று மன வெறுப்பு அடைந்திடக்கூடாது. அல்லாஹ் “நான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துவேன் என்ற வசனத்தை மறந்துவிடக்கூடாது.

மேலும் ஒருவர் தமக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரே ஒரு முழம் மட்டுமே இருக்கும் அளவிற்கு நல்ல செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று கெட்ட செயல்களை செய்து முடிவில் நரகில் நுழைவர்.

இதேபோல் ஒருவர் நரகத்திற்கும், தனக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே உள்ள அளவிற்கு நரகவாசிகளின் செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களை செய்து சொர்க்கம் நுழைவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்: புகாரி, திர்மிதி

மேற்காணும் ஹதீஸின்படி இறைவன் சொர்க்கத்திற்குரியவர்களையும், நரகத்திற்குரியவர்களையும் நிர்ணயம் செய்து விட்ட போதிலும் நல்வழியின் மூலமாகவும், பிரார்த்தனையின் மூலமாகவும் நரகவாசி என்ற நிலையில் உள்ளவர் விதியை வென்று சொர்க்கவாசியாக மாறிவிடலாம். என்பதனை இந்த ஹதீஸ் மூலம் அறிய முடிகிறது. ஆயினும் இதுவும் அல்லாஹ்வின் அறிவுக்கு உட்பட்டதே என்பதை மறுக்க வேண்டாம்.

எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான். அல்குர்ஆன் 19-76

என்று அல்லாஹ் திறுமறையில் கூறுவதுடன்

(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் – அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது. அல்குர்ஆன் 13-39 என்று விளக்குகிறான்.

“எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன். அல்குர்ஆன் 20-82

என்று திருமறையில் இறைவன் கூறுவதிலிருந்தே நாம் உணர்லாம். ஒருவன் தவறான வழியில் சென்று, பிறகு மனம் திருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினால் அவனை அல்லாஹ் மன்னிப்பதாக கூறுகிறான். இருள் சூழ்ந்த உலகினில் வாழ்கின்றவர்களுக்கு ஒளியாக திகழ்வது திருமறையும், நபிவழி எனப்படும் ஹதீஸும்தான். இவற்றை பின்பற்றி நடந்தாலே நேர்வழி பெற்றவராக திகழ முடியும்.

ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றது. எனினும் அவர்களது பெற்றோர்களின் நிலையினால் அதைல் பின்னி பினைந்து விடுகின்றனர். அதனால்தான் எல்லா மக்களிடமும் குர்ஆன், ஹதீது போதனைகளை எடுத்துரைக்க வேண்டும். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நல்வழியில் செல்வதற்கு விதி அமைந்துவிடும். இவற்றைத்தான் நபி அவர்கள் கூறினார்கள்:

நரகவாசிகளின் செயல்களை செய்பவர்கள் விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயலை செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவர் என்றார்கள்.

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

ஒவ்வொரு செயலையும் செய்யும் பொழுது இறைவனுக்கு பயந்து “இறைவா நான் செய்யக்கூடிய செயல்கள் நேர்வழியாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களிலேயே செய்தால் அல்லாஹ் விதியை மாற்றி நேர்வழியாக தருவான் என்று தன் திருமறையிலேயே அல்குர்ஆன் 42:13ல் கூறுகிறான்.

ஏனெனில் இதுகூட பிரார்த்தனையே ஆகும். மதியைக் கொண்டு விதியை வென்று விடலாம் என்று கூறுபவர்களும் தனது அறிவால் உயர்ந்தேன் என்று பெருமை பேசுபவர்களும் திருமறையின் வசனங்களையும், நபி அவர்களின் பொன்மொழிகளையும் ஆராய்ந்து பார்க்கவும். அவர்களுக்கு தெளிவான விடை இதில் கிடைக்கும். விதி இறைவனின் முத்திரைதான் என்ற முடிவு கிடைக்கும்.

இறைத் தூதர்கள் மனிதர்களே!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர், ஆனால் அப்போது அவர்களோ, (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?” என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள், 64-6 நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள். 36-15 (நூஹ் (அலை) அவர்களின்) சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்; “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள். 23-24 அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும் இறுதி தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார். எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே! (என்று கூறினார்கள்.) 23-33,34 (ஸாலிஹ் (அலை) சமூகத்தவர்களின் கூற்று) நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்றனர்). 26-153 “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; 16-103 என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக. 17-93 (நபியே!) நீர் சொல்வீராக “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது. 18-110