இஸ்லாம்தளம்

பிப்ரவரி18, 2009

இறை நம்பிக்கை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

படைத்தவன் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து பணத்தின் மீதும், பதவியின் மீதும், கல்வியின் மீதும், தம் அறிவின் மீதும், தாங்கள் செய்யும் வியாபாரத்தின் மீதும், சொத்துகளின் மீதும் நம்பிக்கை வைக்கிறான் மனிதன். தன் பிடரி நரம்பினும் அண்மையிலுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்தவனாக நன்றி கெட்டவனாக மனிதன் வாழ்வதில் இன்பம் காணுகிறான்.

தன்கையில் இலட்ச இலட்சமாக பணம் உள்ளவன் தன்னால் தான் விரும்பியதை செய்ய இயலும் என இறுமாப்புக் கொள்கிறான். மேலும் பணமில்லாத தன் உடன் பிறந்தவர்களையே ஏளனமாக நோக்குகிறான். அவனுடைய ஏழ்மையின் காரணமாக அவன் வாழும் நெறியான வாழ்க்கை மீதே வீண் பழி சுமத்தவும் அஞ்சுவதில்லை. காரணம் தன்னிடம் உள்ள பணம் தன்னைக் காப்பாற்றும் மிகப்பெரிய சக்தியாக அவன் எண்ணுவதுதான்.

அடுத்து பதவியின் மீது தான் கொண்ட அபரிமிதமான நம்பிக்கை தன்னுடைய பதவியை எதனையும் சாதிக்கக்கூடிய, நினைத்ததை முடிக்கக்கூடிய அதிகாரம் படைத்ததாகக் கருதி செயல்படுகிறான். மேலும் கல்வியின் மீது கொண்ட நம்பிக்கையானது கல்வி கற்காதவர்களையும் அறிவற்றவர்களாக தகுதியில்லாதவர்களாக எண்ணும் அளவுக்கு ‘அறிவின் ஆணவம்’ போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறாக வியாபரத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் மனிதனை இறை நம்பிக்கையற்றவனாக ஆக்குகின்றது. தன் வியாபாரம் எக்காலத்துக்கும் கைகொடுக்கும், மங்காத மறையாத செல்வம் அதன் மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கின்றான்.

சொத்துக்களின் மீதும் மனிதன் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தவனாக இருக்கின்றான். தம்முடைய இந்தச் சொத்து ஐந்தாறு தலைமுறைகளுக்குத் தேறும், எவரும் தன்னை அசைக்கக் கூட இயலாது என எண்ணுகிறான். இஸ்லாம் மனிதனுக்குள்ள பணத்தேவையையும், அதை ஈட்டுவதின் வழி முறைகளையும், கல்வியின் அவசியத்தையும், அறிவின் மூலம் ஏற்படுகின்ற சிந்தனை ஊற்றையும் கொடுக்கல் வாங்கல் முதலான வியாபரங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும், சொத்துக்களின் பங்கீடு முறை பற்றியும் தெளிவாக எடுத்து கூறுகின்றது.

இல்லறத்தின் மூலம் நல்லறங்களைச் செய்யவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. காவி உடை தரித்து கமண்டலம் ஏந்தி காட்டுக்குச் சென்று தவம் செய்து ஞானி எனப்பெயர் பெறுவதே சிறந்ததது என்று இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. எந்த காரியத்திலும், எந்தச் செயலிலும் இறை நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதையே இஸ்லாம் மானிட இனத்துக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் தன் திருமறையில்

நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64)

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8)

காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (104:1-9)

செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது – நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (102:1-2)

அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் பொருளைத் தேடுங்கள்; செலவழியுங்கள்; நெறி பிறழாமல் இன்பம் காணுங்கள்! ஆனால் இறை நம்பிக்கையுடன் செயல்படுங்கள்! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் மேலும் உங்கள் அறிவினை விரிவாக்கக் கூடிய கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் இறை நம்பிக்கையுடன் அறிவைப் பெற முயலுங்கள்.

வியாபாரம் செய்யுங்கள். மாட மாளிகைகள் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் எப்போதும் இறை நம்பிக்கையுள்ளவர்களாகத் திகழ்ந்து வாருங்கள். அல்லாஹ் நம்மனைவோர்க்கும் தனது பரந்து பட்ட அருளை இடைவிடாது அளிப்பானாக! (ஆமீன்)

அல்லாஹ்வின் வல்லமை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியார்களே! நான் நிச்சயமாக அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்களைத் தவிர. ஆகவே நேர்வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியர்வர்களைத் தவிர (மற்ற) அனைவரும் பசித்தர்வர்களே. ஆகவே அவர்களுக்கு உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உணவளிக்கிறேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவ காரியங்களைப் புரிகிறீர்கள்; நான் சகல பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.

என் அடியார்களே! எனக்கு நீங்கள் தீங்கிழைக்கவோ, நன்மை புரியவோ முடியாது. என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், உங்களுக்கு பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களூம், ஜின்களும், (அனைவரும்) உள்ளத் தூய்மைப் பெற்ற முத்தக்கீன்களாகி (இறையச்சமுடையவர்களாகி) விட்டாலும் அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே! உங்களுக்கு முன்னால் தோன்றியவர்களும், இனி தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும், (ஒன்று சேர்ந்து) மிகக் கெட்ட மனம் படைத்தவர்களாகி விட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது!

என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்றுகொண்டு என்னிடம் கேட்கட்டும் . அவர்கள் கேட்கின்ற அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அவ்வாறு கொடுப்பதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதி கடல் நீர் ஒட்டிக் கொள்வதால் எவ்வளவு கடல் நீர் குறையுமோ அந்த அளவுக்குக்கூட என்னிடமுள்ள அருட்கொடைகள் குறைந்து விடாது.

என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (மறுமையில்) இதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால், அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி காட்டுங்கள்; நல்லது அல்லாததை (தண்டனை) நீங்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான காரணம் நீங்கள்தாம்.

அறிவிப்பவர்: அபூதர் (ரழி) நூல்: முஸ்லிம்

ஹதீதுகளின் பாகுபாடுகள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்று இஸ்லாத்தின் பேரால் முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல ஹதீதுகள் பலவீனமானவை, இட்டுக் காட்டப்பட்டவை என்ற உண்மையை நாம் பலவீனமானவை, இட்டுக்கட்டபட்டவை என்ற உண்மையை நாம் வெளிப்படுத்தும்போது, நாங்களாக இன்று கற்பனை செய்து அவற்றை பலவீனமானவை, இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுவதாக மக்களுக்கு மத்தியில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே, அவற்றைப்பற்றிய விவரங்களை மக்களுக்கு விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

“நான் சொல்லாததை நான் சொன்னதாகச் சொல்பவர், தன்னுடைய இடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்” என்ற நபி(ஸல்) அவர்களின் அமுதவாக்கு, பொய்யான ஹதீதுகள் இட்டுக்கட்டப்படும் என்ற முன்னறிவிப்பைத் தருகின்றது. ஆகவே, ஹதீது என்று சொன்னவுடன் அதன் தரத்தைப் பற்றி ஆராய நாம் கடமைப்பட்டுள்ளோம். பொய்யான ஹதீதுகள், மறுமையை மறந்து, இவ்வுலக சுகபோகங்களை விரும்பியவர்களால், இட்டுக்கட்டப்பட்டவை என்பது தெளிவான ஒரு விஷயம்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு சில முனாபிக்கீன்கள் இஸ்லாத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், நல்லாட்சி நடத்திய 4 கலீபாக்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் பேராசையோடும் பொய்யான ஹதீதுகள் புனையப்பட்டு மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டன. அது உருமாறி, மார்க்கத்தை அற்ப உலக ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியவர்களால், பொய்யான ஹதீதுகள் புதுப்பொலிவைப் பெற்று மக்களிடையே சகஜமாக உலாவர ஆரம்பித்தன.

ஹிஜ்ரி 80 லிருந்து 241 வரை, 4 இமாம்களது கால கட்டத்தில் பொய்யான ஹதீதுகள் நடைமுறையில் இருந்து வந்தாலும், அவற்றின் விபரீதப்போக்கு உச்சத்தை அடையவில்லை. ஆகவே, இந்தக் காலகட்டத்தில் ஹதீதுகளைத் தரம் பிரிக்கும் முயற்சி நடைபெறவில்லை, அதற்கடுத்த காலகட்டத்தில் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் தங்கள் சுய ரூபத்தைக் காட்ட ஆரம்பித்தன. பலர் சுய வேட்கையோடு அவற்றை நெய்வார்த்து வளர்த்து வந்தனர். ஆகவே, ஹதீதுகளைத் தரம்பிரிக்கும் அவசியம் அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டது. இந்தக் கலைக்கு வித்திட்டவர் இமாம்களுள் ஒருவரான ஹிஜ்ரி 241 ல் மரணமடைந்த இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் என்று சொல்லலாம். அவரது மாணவரான இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் அது விஷயத்தில் முழுக் கவனம் செலுத்தி, அவர்கள் திரட்டிய பல இலட்சக்கணக்கான ஹதீதுகளை இரவு பகலென்று பாராமல் அலசி ஆராய்ந்து 7275 ஹதீஸ்களை மட்டுமே பதிவு செய்தனர். அதே போல் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், தாங்கள் திரட்டிய லட்சக்கணக்கான ஹதீஸ்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து, உண்மையான ஹதீஸ்கள் என்று கண்ட சில ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் மட்டும் பதிவு செய்தனர்.

இதற்குப் பின் தோன்றிய சில ஹதீஸ்களை வல்லுனர்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களையும் பதிவு செய்து, அந்த ஹதீஸ்கள் விஷயமாக, ராவிகள் விஷயமாக, இஸ்நாது விஷயமாகத் தங்களுக்குக் கிடைத்த விவரஙகளையும் தங்களது நூல்களிலேயே பதிவு செய்து வைத்தனர். அதன் பின் தோன்றிய சில ஹதீஸ்கலை வல்லுனர்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் அறிவிப்போடு பதிவு செய்தனரே அல்லாமல், அவர்களின் குறை நிறைகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவ்வாறு அவர்கள் குறிப்பிடாததற்கு “அஸ்மாவுர் – ரிஜால்” கலை வளர்ந்து ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களின் வரிசையில் வரக்கூடிய நபர்கள் அனைவரது சரித்திரங்களும் பெரும்பாலும் திரட்டப்பட்டு சேகரிக்கப்பட்டிருந்தன.

ஒரு ஹதீஸைப்பற்றிய ஐயம் ஏற்பட்டால், உடனடியாக அறிவிப்பாளர்களின் வரிசையையும், அவர்களின் குணாதிசயங்களையும் ஆராய்ந்து அந்த ஹதீஸின் தரத்தை நிர்ணயிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

மர்ஃபூஃ, முஸ்னது, முத்தஸில் போன்ற பிரிவு வாரியான அடிப்படையில் ஸஹீஹான ஹதீதுகளையும், முதல்லஸ், முர்ஸல், முன்கத்தஃ, மவ்கூஃப் போன்ற பிரிவுகளின் அடிப்படையில் லயீஃபான ஹதீதுகளையும், முன்கர் போன்ற அடிப்படையில் மவ்லூவான ஹதீதுகளையும் தரம்பிரித்து பாகுபடுத்தி நிர்ணயம் செய்து காட்டப்படுகின்றன.

ஆக, ஐந்தாம் நூற்றாண்டிலேயே, குர்ஆன் – ஹதீஸ்களுக்கு முரண்பட்ட தக்லீத், தஸவ்வுஃப் தத்துவங்கள் இஸ்லாத்தின் பேரால் நுழைக்கப்படுவதற்கு முன்பே, ஹதீஸ்கலை வல்லுனர்களாலும், ‘அஸ்மாவுர் ரிஜால்’ கலை வல்லுனர்களாலும் ஹதீஸ்கள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு தெள்ளத் தெளிவாக மேற்கூறியபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

மரியாதைக்குரிய 4 இமாம்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அவாகளின் வழிகாட்டுதலுக்கு விரோதமாக சில சுய நலமிகளால் மத்ஹபுகள், தரீகாக்கள் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் வாழ்ந்த இஸ்லாமியப் பெரியோர்களால், தெளிவாக ஆராயப்பட்டு, அவர்களது கிதாபுகளில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் நாங்கள் ஸஹீஹ், லயீஃப், மவ்லூஃ என்று சொல்லுகிறோமெயல்லாமல், எங்கள் இஷ்டத்திற்கு நாங்களாக கூட்டி குறைத்து எதையும் சொல்லவில்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக ஆராயப்பட்டு, வடித்தெடுக்கப்பட்டு லயீஃப் என்றும் மவ்லூஃ என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி பிரித்திறிவிக்கப்பட்டு அன்றைய கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தும், மீண்டும் எப்படி இந்த லயீஃபான, மவ்லூஃஆன ஹதீஸ்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்து ஆழவேருன்றிக் கொண்டன?

அதற்கு முன்னால் “பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஏன் செயல்படக்கூடாது?” என்று பலர் ஐயங்களைப் கிளப்புவதால் அது பற்றிய காரணத்தை முதலில் பார்ப்போம்.

அறிவிப்பாளர்களில் எவரேனும் நன்னடத்தை அற்றவராகவோ, நினைவாற்றல் குறைந்தவராகவோ இரண்டு அறிவிப்பாளர்களுக்கிடையில் சந்திப்பு இல்லாமலிருந்தாலோ அத்தகைய ஹதீஸ்களை பலவீனமான ஹதீஸ்கள் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் நிர்ணயித்துள்ளனர்.

அதாவது அந்த ஹதீஸில் குறிப்பிட்ட விஷயத்தை நபி(ஸல்) சொன்னதாக திட்டவட்டமாகத் தெரியும் போது அவசியம் அதற்குக் கட்டுப்பட வேண்டும்” என்பதில் எவருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்களா? என்ற சந்தேகம் தோன்றும்போது என்ன செய்வது? நாம் எப்படி நடந்து கொள்வது? அதற்கு திருக்குர்ஆன் நமக்குத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றது.

“உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத விஷயங்களை நீர் பின்பற்றக் கூடாது.” (அல்குர்ஆன் 17:36)

திட்டவட்டமாக நமக்கு ஒன்றைப் பற்றித் தெரியாதபோது அதனைப் பின்பற்றுவது கூடாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அல்லாஹ் கூறிவிடுகிறான். அவ்வாறு பின்பற்றுவதை தடை செய்கிறான். பலவீனமான ஹதீஸ்களைப் பொருத்தவரை திட்டவட்டமாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சொல்ல முடியாத நிலை, அதனால் பலவீனமான ஹதீஸ்கள் அடிப்படையில் செயல்படுவது கூடாது என்று தெரிகின்றோம்.

நபி(ஸல்) அவர்களும் இதுபற்றிக் குறிப்பிடும்போது “உனக்கு சந்தேகம் தருபவற்றை நீ விட்டுவிடு! சந்தேகமற்ற (உறுதியான) விஷயங்களின் பால் நீ சென்றுவிடு!” என்று கூறியுள்ளார்கள். இதனை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது புகாரி நூலில் “வியாபாரங்கள்” என்ற பாடத்திலும் இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் “கியாமத்” என்ற பாடத்திலும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) தனது முஸ்னத்திலும் அறிவிக்கின்றனர்.

இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும், சந்தேகத்திற்குரியவைகளைப் பின்பற்றுவதை தடைசெய்து விடுகின்றது. இந்தக் கருத்தைச் சொல்லக் கூடிய இன்னும் பல ஹதீஸ்களும் வந்துள்ளன.

எனவே எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸின் கருத்துடன் மோதாவிட்டாலும் அதில் சந்தேகம் இருக்கின்ற ஒரு காரணத்தினாலேயே அதனைப் பின்பற்றக்கூடாது என்பது தெளிவு.

அவ்வாறிருக்க பலவீனமான சில ஹதீஸ்களை திர்மிதி போன்ற இமாம்கள் ஏன் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்? என்ற ஒரு கேள்வியும் சிலரால் கிளப்பப்படுகிறது. அன்றைய காலத்தில் “பலவீனமான ஹதீஸ்கள்” ஆதாரப்பூர்வமானவை என்ற முத்திரையுடன் உலாவந்தன. அதனை அடையாளம் காட்டி அதன் உண்மை நிலையை உணாத்திடவே அந்த இமாம்கள் தங்கள் நூல்களில் பதிவு செய்து அடையாளம் காட்டுகின்றனர்.

உதாரணமாக “நஜாத்” தனது இதழ்களில் கதைகளின் பின்னணியில் என்று எழுதுகின்றது. அந்தக் கதைகள் ஏதோ ஆதாரமற்றவைபோல் மக்கள் மத்தியில் சித்தரிக்கப்படுகின்றன. அது சரியானாதல்ல என்று அடையாளம் காட்டுவதற்காக அந்தக் கதைகளை எழுதி நாம் விமர்ச்சிக்கவில்லையா? அது போல்தான் சில ஹதீஸ்களை இமாம்கள் பலவீனமானது என்று அடையாளம் காட்டுவதற்காக குறிப்பிடுகின்றனர்.

முன்கரான ஹதீதுகள்:-

அடுத்து முன்கரான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது குறித்து ஆராய்வோம்.

குர்ஆன் வசனங்களுக்கோ, உண்மையான ஹதீதுகளுக்கோ முரண்படுகின்ற ஹதீதுகள் “முன்கரான” – இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகள் என்று கணிக்கப்படுகின்றன. இந்த முன்கரான, மவ்லூஃஆன ஹதீதுகளை வைத்துச் செயல்படும் போது, குர்ஆன் வசனங்களையோ, உண்மை ஹதீதுகளையோ புறக்கணிக்கும் நிலை ஏற்படுகின்றது. இது அறிவுடையோர் செய்யும் செயல் அன்று.

உதாரணமாக, “ரமழான் இரவில் நபி(ஸல்) அவர்கள் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை” என்ற, ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு உண்மை ஹதீது, ‘ஸிஹாஹ்ஸித்தா’ முதல் 15 ஹதீது கிதாபுகளில் ரமழான் இரவுத் தொழுக பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜாபிர்(ரழி) அவர்களால் அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீது, நபி(ஸல்) ரமழான் இரவில் 11 ரக அத்துகள் தொழ வைத்தார்கள்”, என்று ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீதை ஊர்ஜிதம் செய்கின்றது. மேலும் உபை இப்னு கஃபு(ரழி) ரமழான் இரவில் பெண்களுக்கு 11 ரகஅத்துகள் தொழ வைத்து விட்டு, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அந்த சம்பவத்தை எடுத்துச் சொன்ன போது நபி(ஸல்) அவர்கள் அதை மெளனமாக அங்கீகரித்த இன்னொரு ஹதீது, ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத் அறிவிப்புக்கு இன்னும் அதிக வலுவைத் தருகின்றது. ஆக இந்த மூன்று உண்மை ஹதீதுகளும், நபி(ஸல்) அவர்களின் ரமலான் இரவுத் தொழுகை 11 ரக்அத்துகள் மட்டுமே என்பதைத் தெளிவாகச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

இந்த நிலையில் பைஹகி, தப்ரானி போன்ற நூல்களில் காணப்படும், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் ஒரு ஹதீதில் நபி(ஸல்) ரமழான் இரவில் 23 ரகஅத்துகள் தொழுததாகக் காணப்படுகின்றது. ஆக முன்னால் நாம் பார்த்த மூன்று ஹதீதுகளுக்கும் முரணாக இந்த ஹதீது காணப்படுகின்றது. அதனால் இந்த ஹதீதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம். அப்படி ஆராயும்போது ‘அஸ்மாவுர் ரிஜால்’ கலை வல்லுனர்கள், இந்த ஹதீதை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வரிசையில் வரும், அபூஷைபா இப்றாஹிம் இப்னு உதுமான், **ஹனம் இப்னு உதைபா கூபி** ஆகிய இருவரும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். பொய்யர்கள் என்று அறிவித்திருப்பது தெரிய வருகின்றது. அதனால் ஹதீதுக் கலை வல்லுனர்கள் இந்த ஹதீதை “முன்கரான ஹதீது’ என்று அறிவிக்கின்றனர்.

ஆக சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத் ஹதீதுக்கு எதிராக இந்த 23 ரகஅத் என்ற ஹதீது இருப்பதால், இந்த 23 ரகஅத் ஹதீதை ஹதீதுக் கலை வல்லுனர்கள் தங்களது ஆதாரப்பூர்வமானன நூல்களில் நிராகரித்துள்ளனர்.

முரண்பட்ட கருத்துக்கள்:-

அடுத்து உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி) தமீமுந்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், மக்களுக்கு 11 ரகஅத்துகள் தொழ வைக்கக் கட்டளையிட்ட, ஸாயிப் இப்னு யஸீதால்(ரழி) அறிவிக்கப்படும் ஒரு சம்பவம் முஅத்தா இமாம் மாலிக்கில் காணப்படுகின்றது. அதற்கு அடுத்து அதே முஅத்தா இமாம் மாலிக்கில், “உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரகஅத்துகள் தொழுது வந்தார்கள்” என்ற சம்பவம் யஸீதுப்னு ரூமானால் அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர்(ரழி) அவர்கள் 23 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டதாகவும், தொழுததாகவும் ஒரு சில கிதாபுகளில் பதிவாகி உள்ளன. ஆக உமர்(ரழி) அவர்களைத் தொட்டும் முரண்பட்ட இரு கருத்துக்கள் (11 ரகஅத், 23 ரகஅத்) காணப்படுகின்றன.

இவர்களை நிராகரித்தவர்கள்

* அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) யஹி இப்னு முயின் அபூஜர்ஆ, அபூ ஹாதம் ராஸி, தகபி.

** இப்னு ஜெளசி, அபூ ஹாதம் ராஸி, தகபி.

இப்போது இந்த முரண்பட்ட இரு கருத்துக்களை ஆராய்வோம். உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயத். நபி(ஸல்) 11 ரகஅத் தொழுதிருக்க, அதற்கு மாற்றமாக உமர்(ரழி) அவர்கள் மீது நாம் நல்லெண்ணமே கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்களுக்கு மாறு செய்யும் எண்ணத்தை உமர்(ரழி) அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று கனவில் கூட நாம் நினைக்க முடியாது. 23 ரகஅத் சம்பவத்தை ஆராயும் போது அறிவிப்பாளர்களில் பல பலவீனங்களைப் பாாக்க முடிகின்றது. உதாரணமாக, “உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரகஅத் தொழுதார்கள்” என்று அறிவிக்கும் யஜீதுப்னு ரூமான், உமர்(ரழி) அவர்களின் காலத்தில் பிறக்கவே இல்லை. பஸீதுப்னு ரூமானின் இறப்பு ஹிஜ்ரி 130 என்று அஸ்மாவுர்ரிஜால் கலை வல்லுனர் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

உமர்(ரழி) அவர்களின் மரணம் ஹிஜ்ரி 24. யஸீதுப்னு ரூமான் ஒரு நூற்றாண்டு வாழ்ந்திருந்தாலும், உமர்(ரழி) காலத்தில் பிறந்திருக்கவே முடியாது. ஆக தொடர்பு இல்லை. இப்படி உமர்(ரழி) 23 ரகஅத் தொழுதார்கள், தொழ வைக்கும்படி கட்டளையிட்டார்கள், உமர்(ரழி) காலத்தில் 23 ரகஅத் தொழப்பட்டது ஆகிய அனைத்து அறிவிப்புகளும் உண்மைச் சம்பவத்திற்கும், நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கும் மாற்றமாக அமைந்துள்ளன.

அப்படியே, ஒரு வாதத்திற்காக உமர்(ரழி) காலத்தில் மக்கள் 23 ரகஅத் தொழுதார்கள் என்று நாம் ஏற்றுக் கொண்டாலும், அதை நாம் மார்க்கமாகக் கொள்ள முடியாது. காரணம் உமர்(ரழி) காலத்தில் மக்கள் பல தவறான மார்க்க முரணான காரியங்களிலும் ஈடுபட்டிருந்திருப்பர், ஈடுபட்டிருந்திருக்கலாம். இதையெல்லாம் மார்க்கத்திற்குரிய ஆதாரங்கள் என்று எந்த அறிவாளியும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆனால் மக்கள் 23 ரக்அத் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமாகத் தொழுது வந்ததை மாற்றி, உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி), தமீமுந்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், மக்களுக்கு நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துப்படி 11 ரகஅத் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பார்கள், என்று நினைக்கப் போதிய ஆதாரம் இருக்கிறது. உமர்(ரழி) நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துப்படி நடந்தார்கள் என்று நல்லெண்ணம் கொள்ள வேண்டுமேயல்லாது, நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு விரோதமாக 23 ரக்அத் தொழத் துணை போனார்கள் என்று நாம் ஒரு போதும் எண்ண முடியாது.

நாம் செய்ய வேண்டியது என்ன?

இன்னும் ஒரு வாதத்திற்கு உமர்(ரழி) அவர்களே 23 ரகஅத்துகள் தொழுதார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்ய வேண்டும்?

நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 11 ரகஅத் தொழுதார்கள் என்று ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 23 ரகஅத் பற்றிய அறிவிப்பு அதற்கு முரணாகக் காணப்படுகின்றது. 23 ரகஅத்தை விட்டு 11 ரகஅத்தை எடுத்துக் கொள்பவர்கள் உமர்(ரழி) அவர்களை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டுபவர்கள், அதே அடிப்படையில் 11 ரகஅத்தை விட்டு 23 ரகஅத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நபி(ஸல்) அவர்களையே அவமதிக்கிறார்களே? இது நியாயம் தானா? நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதற்கே முதலில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது கலிமா “லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்பதே அல்லாமல் “லாயிலாஹ இல்லல்லாஹ், உமர் ரஸுலுல்லாஹ்” அன்று. நிச்சயமாக உமர்(ரழி) அல்லாஹ்வின் ரஸுல் அல்லர். நபி(ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தில் இப்படித்தான் நடந்தார்கள் என்பது தெளிவாக இருந்தால், அதை விட்டுவிட்டு நாம் வேறு யாரையும் பின்பற்ற மார்க்கம் நமக்கு அனுமதி தரவில்லை. நபி(ஸல்) அவர்கள் “எனது சுன்னத்தையும், எனது குலாபாயே ராஷித்தீன்களின் சுன்னத்தையும் பின்பற்றி நடங்கள்” என்று சொல்லியிருக்கிறார்களே, என்று யாராவது கேட்டால் அதற்குரிய பதிலாவது,

நபி(ஸல்) அவர்கள்”எனது சுன்னத்தையும், எனது குலாபாயே ராஷிதீன்களின் சுன்னத்தையும் பின்பற்றி நடங்கள்” என்று தனது சுன்னத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் சொல்லி இருக்கிறார்களே அல்லாமல், “எனது சுன்னத்தை விட்டுவிட்டு, எனது குலபாயே ராஸிதீன்களின் சுன்னத்தைப் பின்பற்றுங்கள்” என்றோ, “எனது சுன்னத்திற்கு மாற்றமாக எனது குலபாயே ராஷிதீன்களின் சுன்னத்தைப் பின்பற்றுங்கள்,” என்றோ சொல்லவில்லை. இப்படிச் சொல்லி இருந்தால் நபி(ஸல்) அவர்களின் 11 ரகஅத்தை விட்டு விட்டு உமர்(ரழி) அவர்களின் சுன்னத் (அப்படிச் சொல்லப்படுகிறது, உண்மை அல்ல) 23 ரகஅத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி நபி(ஸல்) அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லியுள்ளபடி நடப்பதாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் எத்தனை ரகஅத்துகள் தொழுதார்கள் என்பது தெளிவில்லாமல் இருந்தால் மட்டுமே, உமர்(ரழி) அவர்களின் சொல்லை ஆதாரமாகக் கொள்ள முடியும். அதாவது ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்ற விபரம் தெரியாமல் இருந்தால் மட்டுமே, குலபாயே ராஷிதீன்கள் சுன்னத்தை எடுத்துக் கொள்ள முடியும். ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள் என்பது தெளிவாக இருக்கும் போது, அந்த விஷயத்தில் குலபாயே ராஷித்தீன்களின் சுன்னத்திற்கு இடமே இல்லை. அதுவும் குலபாயே ராஷிதீன்களின் சுன்னத்து என்று சொல்வதிலிருந்து ஆட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், நிறைவு செய்யப்பட்ட மார்க்கத்தை அமுல்படுத்துவதில் காலத்திற்குக் காலம் ஏற்படும் சில சிக்கல்களைத் தீர்க்கும் விஷயங்களிலும், இது சாத்தியமே அல்லாமல், வணக்க வழிபாடு அடிப்படையில் அல்ல என்பது தெளிவாகும். காரணம் வணக்க வழிபாடுகளை விதிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். நபி(ஸல்) அவர்களுக்கும் இதில் அதிகாரம் இருந்திருக்கவில்லை. அல்லாஹ்வின் உத்தரவுப்படியே நபி(ஸல்) மார்க்க உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள் என்னும் உண்மையை, குர்ஆனின் பல வசனங்கள் தெளிவு படுத்துகின்றன. (3:20, 5:92, 5:99, 16:35, 16:82, 24:54, 29:18, 6:17, 69:44) நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வோடு வஹியின் தொடர்போடு இருந்ததனால் இது சாத்தியமாயிற்று.

குலபாயே ராஷிதீன்கள் வஹியின் தொடர்புடையவர்கள் அல்லர். ஆகவே குலபாயே ராஷிதீன்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் உட்பட்டே இருந்திருக்க வேண்டும். குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் மாற்றமான முடிவுகளை ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர்கள் செய்ய நேரிட்ட போது குர்ஆனைக் கொண்டும் ஹதீதைக் கொண்டும் அவர்கள் திருத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, நபி(ஸல்) அவர்கள் வபாத்தானபோது, அதை மறுத்த உமர்(ரழி) அவர்களின் கூற்று குர்ஆனின் வசனங்களைக் கொண்டு நிராகரிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மஹர் தொகையை மட்டுப்படுத்தி ஆணை பிறப்பித்த போது, ஒரு சாதாரண பெண்மணியால் குர்ஆன் வசனத்தைக் கொண்டு நிராகரிக்கப்பட்டது. இதுபோல் அவர்கள் செய்த தீர்ப்புக்களில் சில, உண்மையான ஹதீதுகள் கொண்டு நிராகரிக்கப்பட்டன. உதுமான்(ரழி), அலி(ரழி) இவர்களின் ஆட்சிக் காலத்திலும் இப்படிச்சில சம்பவங்கள் நடைபெற்று குர்ஆன், ஹதீதைக் கொண்டு நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. விரிவஞ்சி அவற்றின் விபரம் இங்கே தரப்படவில்லை.

தவறுவது மனித இயல்பு

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் குலபாயே ராஷிதீன்களோ, ஸஹாபாக்களோ, இமாம்களோ, மற்றும் பெரியார்களோ, குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக மார்க்கத்தில் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்ற மாபெரும் உண்மையை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இப்படி நாம் எழுதிய மாத்திரத்தில், முன் சென்ற பெரியார்களை நாம் அவமதிப்பதாகவும், எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். இமாம்களெல்லாம் தவறு செய்திருப்பார்களா? என்று ஆச்சரியத்தோடு கேட்கின்றனர். அப்படியானால் இமாம்களெல்லாம் தவறே செய்யாதவர்கள் என்று அவர்கள் நம்புகின்றனரா? இந்த நம்பிக்கை எவ்வளவு பெரிய குற்றம் என்று அவர்கள் சிந்திப்பதில்லை. தவறே செய்யாத தனித்தன்மையை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். அவனுக்குச் சொந்தமான தனித் தன்மையை இமாம்களுக்குக் கொடுப்பதன் மூலம், இமாம்களை அல்லாஹ்வாக்குகின்றனர். மரணிக்காதவன் என்ற, அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான தனித்தன்மையை உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சொந்தமாக்கியபோது, அபூபக்கர்(ரழி) அவர்கள் “யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ, அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அந்த முஹம்மது இறந்து விட்டார்” என்று அறிவித்ததன் மூலம், அல்லாஹ்வுக்குச் சொந்தமான தனித்தன்மையை மனிதர்களுக்குக் கொடுப்பதை வணக்கம் என்றே குற்றம் சாட்டுகிறார்கள். இந்த அடிப்படையில், இமாம்கள் தவறே செய்யதவர்கள் என்று நம்புகிறவர்கள் இமாம்களை வணங்குகிறார்கள் என்றே பொருள். காரணம் தவறே செய்யாத தனித் தன்மையை அல்லாஹ் நபிமார்களுக்கும் கொடுக்கவில்லை. அவர்களிலும் சில அசம்பாவிதங்களை இடம் பெறச் செய்து அவற்றை வஹி மூலம் திருத்துவது கொண்டு மக்களுக்கு நேர்வழி காட்டியதோடு, அந்தத் தவறே செய்யாத தனித்தன்மை தனக்கு மட்டுமே சொந்தம் என்பதை நிலை நாட்டியிருக்கிறான். நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் அப்படிச் சில சம்பவங்கள் இடம் பெற்று, அல்லாஹ் திருத்தியுள்ள வசனங்களை இன்று நாம் ஓதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலிருந்து நாம் படிப்பினை பெறுவதில்லை. “ஆதம்(அலை) தவறு செய்தார். ஆதமுடைய மக்களும் தவறு செய்பவர்களே. தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் தெளபா செய்பவர்கள்” என்ற நபி(ஸல்) அவர்களின் வாக்கும் இதைத் தெளிவுபடுத்துகின்றது. நபிமார்களுக்கே சொந்தப் படுத்தப்படாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அந்தத் தனித்தன்மையை குலபாயே ராஷிதீன்களுக்கோ, ஸஹாபாக்களுக்கோ, இமாம்களுக்கோ, நாம் சொந்தப்படுத்த முடியுமா என்பதைத் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்! ஒரு போதும் முடியாது. ஆகவே குர்ஆனுக்கோ, ஹதீதுகளுக்கோ மாற்றமாக யாருடைய சொல் இருந்தாலும், அதைவிட்டுவிட்டு குர்ஆன் ஹதீதைப் பின்பற்றுவதே நேர்வழி நடப்பதாகும். குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக நேர்வழி நடந்த யாரும் சொல்லி இருக்கமாட்டார்கள் என்றே நம்ப வேண்டும்.

இந்த அடிப்படையில், 23 ரகஅத் ரமலான் தொழுகை உமர்(ரழி) அவர்கள் தொழுதிருக்க மாட்டார்கள். தொழ வைக்கக் கட்டளையிட்டிருக்கமாட்டார்கள். அப்படியே உமர்(ரழி) செய்திருந்தால், நபி(ஸல்) அவர்களுக்கு மாற்றமாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்திருக்க மாட்டார்கள். மனித இயல்பின் காரணமாக நடந்த அசம்பாவிதமாக இருக்கும் என்று அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டு அதை விட்டு விட்டு நபி(ஸல்) அவர்களையே பின்பற்றி 11 ரகஅத் தொழுவதே சிறப்பாகும்.   – வளரும்.

பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பாலோர் அவைகளை மாாக்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? மக்கள் மனங்களில் அவை ஆழமாக வேரூன்றியது எதனால் என்பதை இந்த இதழில் காண்போம்.

பழமையை, நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதை விரும்பக் கூடியதாகவே மக்களின் மனப்பான்மை அமைந்தள்ளது. ஷைத்தான், உண்மைக்கு முரணாணதை மக்கள் மனங்களில் விதைத்துவிடுகிறான். மக்களும் அவற்றில் முழ்கிவிடுகிறார்கள். காலங்கள் சில கடந்தபின் “அவர்கள் செய்யும் காரியங்கள் எவ்வளவு தவறானவை” என்று எவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துக் காட்டினாலும், அந்தத் தவறான வழியிலிருந்து விடுபட்டு நல்வழியை நாட அவர்கள் விரும்புவதேயில்லை. தாங்கள் இவ்வளவு காலம் செய்ததே நேர் வழி என்று எண்ணி அதனைத் தொடர்ந்து செய்யவே விரும்புகின்றனர்.

கடந்த காலங்களில் இறைவனின் செய்தியை மக்களுக்கு அறிவித்த நபிமார்களைப் புறக்கணித்ததற்கும் இந்த மனப்பான்மையே காரணமாக அமைந்திருந்தது. இன்றும் குர்ஆன் ஹதீதுகளை எடுத்துச் சொல்லும்போது அதே மனப்பான்மைதான் அவர்களை, குர்ஆன் ஹதீஸ்களைப் புறக்கணிக்கச் செய்து கொண்டிருக்கின்றது. தங்கள் தவறிலேயே அவர்களை நிலைத்திருக்கச் செய்து விடுகின்றது.

உதாரணமாக “பராஅத்” இரவின் விசேஷ அமல்கள் பற்றிய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டதும், பலவீனமானதுமாகும்” என்று அன்றே ஹதீஸ் கலை வல்லுனர்கள் அடையாளம் காட்டி இருந்தும் அதனை அவர்கள் விடுவதற்குத் தயாராக இல்லை. தங்கள் செயலை எப்படியும் நியாயப்படுத்தியே தீருவது என்ற எண்ணத்தை அவர்கள் பெற்றிருப்பதை நாம் காண முடிகின்றது. இந்த மனப்பான்மை மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளதால், “பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் அடையாளம் காட்டப்பட்டிருந்தும் அவர்கள் இன்றளவும் அவற்றை நிராகரிக்க முன்வருவதில்லை.

மக்களின் இந்த மனப்பான்மையைப் புரிந்து கொண்ட மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக் கொண்ட போலி அறிஞர்கள் அந்த, மனப்பான்மையை மேலும் வளாத்தனர். ‘கோயபல்ஸ்’ தத்துவப்படி அந்தப் பொய்களையே மக்கள் மத்தியில் திரும்பத் திரும்ப சொல்லி அதை உண்மை என்று நம்ப வைத்தனர். வணக்கம் என்ற பெயரால் நன்மை தானே என்ற பெயரால், மறுமையில் நன்மையை மிக அதிகமாக அடைந்து கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில், பாமர மக்களிடையே இந்த பலவீனமான, இட்டக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. இஸ்லாத்திற்கு, குர்ஆன், ஹதீஸுக்கு முற்றிலும் முரணான சூபிஸ கொள்கையை, இஸ்லாத்தின் பெயரால் மக்கள் மத்தியில் நுழைத்ததால் பலவீனமான இட்டக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் நன்றாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திட, இதுவும் ஒரு காரணமாகிறது.

ஒருபுறம் அல்லாஹ்வுக்கு அஞ்சிய அறிஞர்கள் போலி ஹதீஸ்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் இந்த போலி அறிஞர்கள் அவைகளை மக்கள் மத்தியில் பரவச் செய்து கொண்டிருந்தனர். மக்கள் விருப்பத்தை நிறைவு செய்யும் விதமாக இந்தப் போலிகளின் போலி ஹதீஸ்கள் அமைந்திருந்ததால், உண்மை அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்கள் தான் மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற முடிந்தது. அன்றும், இன்றும் இதே நிலை தான்.

மக்கள் மனோ இச்சைப்படி நடந்தால் தான் அவர்களால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று எண்ணிய முஸ்லிம்(?) மன்னர்களும் இதற்கு ஒரு வகையில் காரணமானார்கள். மார்க்கத்தின் பெயரால் எவ்வளவு அனாச்சாரங்கள் நடந்தாலும், நபி(ஸல்) அவர்கள் பெயரால் எவ்வளவு பொய்கள் கூறப்பட்டாலும், அதனை அவர்கள் கண்டு கொள்ளாமலிருந்தனர். அதற்கு எதிரான முயற்சியை மேற்கொண்டால் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த போலி அறிஞர்களின் எதிர்ப்பையும், பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்தனர். உலக ஆதாயத்தையே நோக்கமாகக் கொண்ட போலி அறிஞர்களுக்கு உதவி, அதிகாரங்களை வழங்கினர். அந்த அதிகாரத்தின் துணைகொண்டு இந்தப் போலி அறிஞர்கள் நன்றாகவே இட்டுக்கட்டபட்டவைகளை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்தனர். தீமைகளில் ஒருவருக்கொருவர் துணை போனார்கள். இவையே பொய்கள் மக்கள் மனங்களில் மெய்யென தோன்றியதற்கான காரணங்களாகும்.

நல்லாட்சி நடத்திய நாற்பெரும் கலிபாக்களின் காலத்தில் இது போன்ற பொய்கள் காணப்பட்டபோது உடனுக்குடன் அவற்றுக்கு எதிரான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர். அனாச்சாரங்கள் தலை தூக்க அவர்கள் இடம் தரவே இல்லை.

நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் ஒரு மரத்தடியில் உறுதி மொழி வாங்கினார்கள். உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த மரம் புனிதமாகக் கருதப்பட்டு சடங்குகள் பல அங்கே நடப்பது உமர்(ரழி) அவர்களுக்குத் தெரிய வந்தபோது ஊடனே அந்த மரத்தை வெட்டி வீழ்த்த உத்தரவிட்டார்கள். அந்தத் தவறுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

அலி(ரழி) அவர்கள் காலத்தில் அலி(ரழி) பற்றி ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நுழைக்கப்பட்டபோது , உடனே அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததோடு, அவை அத்தனையும் பொய் என்று தெளிவு படுத்தினார்கள்.

குர்ஆனையும், உண்மையான ஹதீஸ்களையும் நிலை நாட்டப் பாடுபட்டார்கள். அநாச்சாரங்கள்,பொய்கள் தலைதூக்கவிடாமல் காத்தார்கள். தங்களிடமே ஒரு தவறு நிகழ்ந்து, சாதாரண குடிமகன் சுட்டிக் காட்டினாலும், உடனே தங்களைத் திருத்திக் கொண்டார்கள்.

இந்த நேர்மை மனப்பான்மை பிற்காலத்தில் ஆட்சி நடத்திய மன்னர்களிடம் காணப்படாததால், பொய்யான ஹதீஸ்கள் தனது ஆட்சியை நடத்தின. இன்றும் நடத்திக் கொண்டு இருக்கின்றன.

மக்கள் மனப்பான்மை, உலமாக்கள், சிலரின் சுயநலப் போக்கு மன்னர்களின் பதவி ஆசை, இவை தான் போலி ஹதீஸ்கள் இன்றளவும் மக்கள் மனங்களில் மகத்தான இடத்தைப் பெற்றிருப்பதற்கு காரணங்களாகும்.

பலவீனமான (லயீஃப்) இட்டுக் கட்டப்பட்ட (மவ்லுஃ) ஹதீதுகள் பற்றிய விளக்கங்கள், அவற்றைக் கொண்டு அமல்கள் செய்வதால் ஏற்படும் விபரீதங்கள், அவை தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தும், அவை இஸ்லாமிய சமுதாயத்தில் ஆழ வேரூன்றிய காரணங்கள், இவை அனைத்தையும் ஆராய்ந்தோம்.

ஹதீதுகளை நாங்களாக எங்கள் இஷ்டத்திற்கு லயீஃப் என்றும் கூறி வருகிறோம் என்று பரவலாக எங்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வந்தது. ஆகவே லயீஃப் மவ்லுஃ ஹதீதுகளின் நிலையையும் எங்களது உண்மையான நிலையையும் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவே இத்தொடரை ஆரம்பித்தோம்.

ஹதீதுகள் சம்பந்நதப்பட்ட முழு விவரங்களையும் தெளிவாக அறியத் தருமாறு வாசகர்கள் நேரிலும் கடிதங்கள் மூலமும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அடுத்த இதழில் ‘நபிமொழி வரலாறு’ என்ற தொடரில் மெளலவி S. கமாலுத்தீன் மதனி அவர்கள் அவற்றின் விவரங்களைத் தர இருக்கிறார்கள். ஆனவே நாம் இது வரை எழுதி வந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுக்குள் கொண்டு வந்து இந்தத் தொடரை முற்றுப் பெறச் செய்கிறோம்.

மீண்டும் பார்ப்போம்

1) பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகள் நிறைய இருக்கின்றன. அவையே சமுதாயத்தில் அதிகம் உலா வருகின்றன.

2) ஆயினும் அவை அறிஞர்களால் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு, 1000 வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு இனம் காட்டப்பட்டுள்ளன.

3) அவற்றைத் தெளிவாக அடையாளம் காட்டுவதற்காக அறிஞர்கள் அந்த பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைத் தங்கள் நூல்களில் இடம் பெறச் செய்தனர். ஆனால் உலக ஆதாயம் தேடுவோர் அவை தவறானவை என்பதை தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மக்களிடையே பரப்பி வந்தார்கள்.

4) பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளை வைத்துக் கண்டிப்பாக அமல்கள் செய்யக்கூடாது.

5) மார்க்கத்தில் கூட்டிக் குறைக்க உள்ள அதிகாரம், அல்லாஹ்(ஜல்)வுக்கு மட்டுமே சொந்தமான தனி அதிகாரம் ஆகும். நபிமார்களுக்கும் அதில் பங்கு கொடுக்கப்படவில்லை என்பதைக் குர்ஆனின் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன என்பதை எடுத்துக் காட்டி இருந்தோம்.

6) நாங்கள் பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் என்று எடுத்துக் காட்டுபவை அனைத்தும் 1000 வருடங்களுக்கு முன்பே அறிஞர் பெருமக்களால் தெளிவான ஆதாரங்களுடன் அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடுநிலைக் கண்ணோட்டத்தோடு பாாப்பவர்கள் அந்தக் கிதாபுகளை புரட்டிப் பார்த்து உண்மையை உணாந்து கொள்ளலாம். எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்(ஜல்) அவனால் வஹி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதையும் அதாவது அல்குர்ஆனையும், அவனால் அங்கீகரிக்கப்பட்டவைகளையும் (இது வஹியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும்), அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இம்மூன்றாலும் நிலைநாட்டப்பட்டவற்றையும் மட்டுமே மார்க்கமாக ஏற்றுக் செயல்படும் வெற்றி பெறும் கூட்டத்தில் நம்ைம சேர்த்து வைப்பானாக. ஆமீன். முற்றும்

அழிவுப் பாதையில் மனிதன்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன.

அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான்.

ஒரு காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகம் போல் காட்சி அளித்தது. அன்று ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு, இதுபோல் பல ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியாதிருந்தது; அது ஒரு காலக்கட்டம். பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு ஊரிலிருப்பவர்களும் தங்கள் ஊரைப் போல் உலகில் வேறு பல ஊர்களும் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆயினும் ஓர் ஊரில் இடம் பெறும் சம்பவங்கள் பக்கத்து ஊருக்குத் தெரியாதிருந்த நிலை; காலகட்டம்.

பிராணிகளில் பிரயாணம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், பக்கத்து ஊர்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உடனடியாகத் தெரிய முடியாமல் இருந்தாலும், காலம் தாழ்ந்து அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி இன்றை விஞ்ஞான யுகத்தில், ஒரு காலத்தில் ஒரு சிற்றூரே உலகமாக இருந்த நிலைமாறி இன்று உலகமே ஒரு சிற்றூரின் நிலைக்கு,ஏன்? ஒரு கையடக்கத்தில் இருப்பது போல் முன்னேறிவிட்டது.

ஆனால் இது மனிதனின் முன்னேற்றம் என்று கூறுவதுதான் அறிவீனமாகும். மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்கள் அனைத்திலும் பாடுபட்டான்; கடுமையாக உழைத்தான்; தனது மூளையைக் கசக்கினான். அதன் பலன் அவன் பாடுபட்ட அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான , ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைக் கண்டன. மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக மனிதன் நினைப்பது மடமையல்லவா?

இப்போது அன்றிருந்த ஒரு பொருளின் நிலையோடு இன்றிருக்கும் அதே பொருளின் முன்னேற்றத்தை- வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது போல், அன்றிருந்த மனிதனோடு இன்றைய மனிதனின் முன்னேற்றத்தை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றிருந்த மனிதன் படிப்பறிவற்றவனாக, எழுத்தறிவு அற்றவனாக ஏன்? இன்றைய மனிதன் கூறும் நாகரீகம் அற்றவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக இருந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதனுக்குரிய மனிதப் பண்புகள் நிறைவாகவே அவனிடம் காணப்பட்டன. திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தான். அதிகமான நினைவாற்றலைப் பெற்றிருந்தான். கூர்மையான பார்வையுடையவனாக இருந்தான். களைப்பில்லாமல் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். நீண்ட வயதுடையவனாக இருந்தான். இன்று மனிதனைத் தாக்கும் பெருங்கொண்ட நோய்கள் அன்றிருந்ததாக வரலாறு இல்லை.

ஆம்! அன்று மனிதன் பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான். மனிதன் தன்னில் பாடுபடுவதை மறந்து தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் பாடுபடுவதை பெரும் சாதனையாகக் கொண்டு அவற்றில் முனைந்ததால் அந்தப் பொருள்கள் அதிசயத்தக்க அளவில் முன்னேறின.

மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.

இப்படி மனிதனின் கடும் உழைப்பின் காரணமாக மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சி மனிதனை பின்னடையச் செய்தனவே அல்லாமல், மனிதனை முன்னடையச் செய்யவில்லை. உதாரணமாக ஒரு தச்சன் காலையிலிருந்து மாலை வரை ஒரு மரத்தில் கடுமையாக உழைத்தால், அது அழகியதொரு மேசையாக உருவெடுத்து விடும். ஆனால் உழைத்த அந்த மனிதன் மாலையில் கடுமையான சோர்வுக்கு ஆளாகி விடுகிறான். இப்படி மனிதன் தனக்கு வெளியே எந்தப் பொருளில் பாடுபட்டாலும் அந்தப் பொருள் முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த உழைப்பைச் செலுத்திய மனிதன் அதனால் சோர்வடைகிறான், பின்னடைகிறான் என்பதிலும் ஐயமில்லை.

இப்படி மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் கடுமையாக உழைத்து அவற்றை முன்னேறச் செய்துள்ளான். அவை மூலம் மனிதன் இவ்வுலகில் சில வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆயினும் அத்துடன் நில்லாது தன்னளவிலும் பாடுபட்டிருந்தால், அவனும் உண்மையிலேயே முன்னேறி இருக்கலாம். ஆனால் தன்மீது பாடுபடுவதை மனிதன் மறந்து விட்டான்.

மனிதன் வெளிப்பொருள்களில் பாடுபடுவது கொண்டு ஆகாயத்தில் பறப்பதைக் கற்றுக் கொண்டான். அதையும் தாண்டி விண்ணில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஏன்? நீரில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. இது அவனுடைய பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மறுக்க முடியாது. மனிதன் தன்னில் பாடுபட்டு அன்றிருந்த மனிதர்களைவிட குணத்தில், பண்பில், ஒழுக்கத்தில், மனித நேயத்தைப் போற்றிப்பேணி வளர்ப்பதில் முன்னேறி இருந்தால் மனிதனைப் பாராட்டலாம்.

அதற்கு மாறாக இன்றைய மனிதன் அன்றைய மனிதனை விட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பின்னடைந்துள்ளான். அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காமராஜ், கக்கன் போன்ற அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தொண்டு செய்யும் மனப்பான்மை , அரசியலில் சுய ஆதாயம் அடையும் நோக்கமின்மை, அதனால் வஞ்ச லாவண்யத்துக்கு அடிமையாகாமல் இருந்த நற்பண்பு இவற்றை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமாவது காட்ட முடியுமா? எளிதில் புரிந்து கொள்வதற்கு இதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

இன்று பகுத்தறிவு மனிதனிடம் மிகைத்துக் காணப்படுவது ஐயறிவு பிராணிகளிடம் கூட காணப்படாத கேடு கெட்ட நிலை. போதை, ஆட்டம், பாட்டம், களியாட்டம், சூது, மாது இவை தான் இன்றைய மனிதனின் கேடுகெட்ட நிலை. தான் பிறந்த நோக்கத்தையே மறந்த நிலை. தன் இனத்தையே அதிலும் அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று கூட பாராமல் வன்செயல்கள், குண்டுகள் மூலம் ஈவிரக்கம் சிறிதும் இல்லாமல் கொன்றொழிக்கும் மனிதனை மனிதன் என்பதா? மிருகங்களை விட கேடு கெட்ட மிருகம் என்பதா? இந்த கேடு கெட்ட மிருக நிலைக்கு அவர்களை வார்த்தெடுத்தது யார்?

அகிலங்களிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து நிர்வகிக்கும் ஏகன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை அவதாரங்களாகவும், கடவுள் குமாரனாகவும், கடவுள் நேசர்களாகவும் (அவுலியா) கற்பனை செய்து, அந்தப் போலிக் கடவுள்களை காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒரு பக்கம்; இந்தப் புரோகிதர்களின் தயவில் ஆட்சியைக் கைப்பற்றி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் அரசியல் புரோகிதர்கள் மற்றொரு பக்கம், இந்தப் பொய்க் கடவுள்களையும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை ஏமாற்றி, சுரண்டிப் பிழைக்கும் எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் ஒழித்துக் கட்ட புறப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேயொரு, இணை துணை இல்லாத, தேவை எதுவும் இல்லாத இறைவனையும் ஓழித்துக் கட்ட முயலும் நாத்திகர்கள்; இந்த மூன்று சாராரும் தான் இன்றைய உலகின் இழி நிலைக்கு காரணமாகத் திகழ்கிறார்கள்.

இந்த மூன்று சாராரின் தவறான போதனை, வழிகாட்டல் காரணமாகத்தான் மனிதன் ஐயறிவு மிருகத்திலும் கேடுகெட்ட நிலைக்கு தாழ்ந்து கொண்டிருக்கிறான். அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் மனிதன் முன்னேற ஆசைப்படாமல், இவ்வுலகில் மனிதனாக, மனிதப் புனிதனாக, அமைதி, சுபீட்சம், சுகம் அனைத்துடன் இவ்வுலகில் வாழ்வதுடன், மகத்தான பேற்றை அடைய விரும்பினால், அவன் இந்த மூன்று சாரார்களிடமிருந்தும் விடுபட்டாக வேண்டும்.

மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதப்புரோகிதர்களிடமிருந்து விடபட வேண்டும். தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிக்கப் புறப்பட்டு, ஒரு உண்மைக் கடவுள்களையும் மறுக்கும் நாத்திகர்களின் பிடியிலிருந்தும் விடுபட வேண்டும். மனிதனே மனிதனுக்கு நேர்வழி காட்ட முடியும் என்பது திருடனே திருடனுக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒப்பாகும்; பரீட்சை எழுதும் மாணவனே கேள்வித்தாள் தயாரிப்பதற்கு ஒப்பாகும்; எனவே படைத்த ஓரே இறைவனை மட்டும் இறைவனாக ஏற்று அவனது இறுதி வழிகாட்டல் நூல் – நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்

நபிவழியே நம்வழி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ்வின்மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21) உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: ஹாகிம் நபி(ஸல்) அவர்கள் ஒரு நேரான கோடு கிழித்து இதுவே இறைவனின் நேரான ஒரே வழியாகும் என்றார்கள். பின்பு அக்கோட்டின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் பல கோடுகள் கிழித்துவிட்டு “இவை பல வழிகளாகும். இவ்வனைத்து வழிகளிலும் ஷைத்தான் (இருந்து கொண்டு மக்களைத்) தன்பால் அழைப்பான்” என்று கூறிவிட்டு “நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்” ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்துவிடும். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றி பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான் என்று கூறி (6:153) என்ற வசனத்தையும் ஓதினார்கள். ஒருவன் நெருப்பு மூட்டுகிறான். அது சுற்றுப் புறங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. ஈசல்களும் வண்டுகளும் அந்நெருப்பில் விழ முனைகின்றன. இவனோ அவற்றை (நெருப்பில் விழாமல்) தடுத்துக் கொண்டிருக்கின்றான். எனினும் அவை அவனையும் மீறி நெருப்பில் விழுகின்றன. இம்மனிதன் எனக்கு உவமையாவான். நான் உங்களின் மடியைப் பிடித்து உங்களை நரகிற்குச் செல்ல விடாமல் தடுக்கிறேன். எனினும் நீங்கள் (எனது கட்டளைகளை மீறி) அதன் பக்கம் விழப்பார்க்கிறீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி ஒரு நாள் நடுப்பகலில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது இரு நபர்கள் ஓர் இறைவசனத்தின் கருத்து வேறுபாடு பற்றி மிகவும் சப்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோபமுகத்தோடு வெளிப்பட்ட நபி(ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் இறைவேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டதனால் தான் அழிக்கப்பட்டார்கள்” என்றார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம் நபி(ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்து விட்டு அதைச் செய்யாமல் விட்டு விடவும் செய்யலாம் என அனுமதியும் அளித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அச்செயலை முழுமையாகவே விட்டு விட்டனர் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் பிரசங்கம் செய்யலானார்கள். அதில் இறைவனைப் புகழ்ந்து விட்டு “இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நிகழ்ந்து விட்டது! நான் செய்த செயலை விட்டும் முழுமையாகவே நீங்கி விட்டார்களே? அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களைவிட நானே இறைவனைப் பற்றி அதிகம் அறிந்தவனும் அவனுக்கு மிகவும் பயப்படுபவனுமாவேன்” என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம் அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது நிலத்தில் விழுந்த பெரும் மழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர். (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர். விவசாயம் செய்தனர். அந்த பெருமழை இன்னொரு வகை நிலத்தில் விழுந்தது. அது(ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகள் முளைக்கவிடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதரை ஏறிட்டுப் பார்க்காமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவருக்கும் உவமையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூமூஸா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம் நிச்சயமாக பேச்சுகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நோவழியில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழியாகும். நிச்சயமாக மார்க்க விஷயங்களில் தீமையானது அவற்றில் புதிது புதிதாக உண்டாக்கப்பட்ட நவீன அனுஷ்டானங்களாகும். ஒவ்வொரு நவீன அனுஷ்டானங்களும் “வழிகேடாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ