இஸ்லாம்தளம்

பிப்ரவரி17, 2009

இவ்வுலக வாழ்க்கை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும். மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. இந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும் அறிவிக்கின்றான். உங்கள் பொருள்களைக் கொண்டும் உங்கள் ஆத்மாவைக் கொண்டும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 3:186 இவ்வுலகின் உண்மையான இயல்பை வர்ணிக்கும் வசனங்கள் பல குர்ஆனில் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன: உங்களுடைய செல்வமும், சந்ததிகளும் உங்களுக்குச் சோதனையே. ஆனால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு உங்களுக்கு மகத்தான கூலி உள்ளது. அல்குர்ஆன் 64:15 பெண்களும்,ஆண் பிள்ளைகளும், தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல்களும், உயர்ரகக் குதிரைகளும், கால்நடைகளும், வளம் மிகுந்த விளை நிலங்களும் எல்லாம் மனிதர்களைக் கவரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள். அல்லாஹ்விடத்தில் அழகிய தங்குமிடம் உள்ளது. அல்குர்ஆன் 3:14 உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?” அல்குர்ஆன் 28:60 சமூக தலைமை (அந்தஸ்து) செல்வவளம், சந்ததிகள், உயர் தரமான வாழ்க்கையும் அவையல்லாமல் ஏழ்மையும் மிக வறிய வாழ்க்கை நிலையும் எல்லாமே மனிதனை இவ்வுலகில் சோதிப்பதற்காக உள்ளவையே. குர்ஆன் வசனம் ஒன்று கூறுகிறது. அவன் (அல்லாஹ்) தான் உங்களை இப்புவியின் வாரிசுகளாக ஆக்கினான். மேலும் உங்களில் சிலரை மற்றவர்களை விட தலைமையில் (அந்தஸ்தில்) உயர்த்தியும் உள்ளான். உங்களுக்கு அருளப்பட்டவை மூலம் உங்களைச் சோதிக்கின்றான். உங்கள் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். அவன் பிழை பொருப்பவனும் பேரருள் உடையவனும் ஆவான். அல்குர்ஆன் 6:165 வாழ்வும் மரணமும் மனிதனைச் சோதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே என்பதை கீழ்வரும் வசனம் கூறுகிறது. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 67:2 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35 மனிதனுக்கு வழங்கப்படும் நன்மைகளும் ஆதரவுகளும் அதனைப் போலவே அவனிடமிருந்து பறிக்கப்படுபவையும் மனிதனைச் சோதனைக்குள்ளாக்குபவற்றில் உட்படுபவையே. அவனைச் சோதனைக்குள்ளாக்கி அவனுக்கு அருள் புரிந்து அவனை இறைவன் மேம்படுத்தினால் மனிதன் என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தி விட்டான் என்று கூறுகிறான். ஆனால் அவனுடைய செல்வத்தைக் குறைத்து அவனைச் சோதித்ததால் என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 89: 15.16 மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு (தங்குமிடம்) ஆகும் எனக் குர்ஆன் அறிவுறுத்துகிறது. புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எதையுமே உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவன் மனிதன், எதிர்காலம், இவ்விதம் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவற்றுள் ஒன்று. அடுத்த சில வினாடிகளில் என்ன நேரும் என்று யாருமே அறிய முடியாது. இத்தகைய வரையறைக்குட்பட்ட புலனுணர்வுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் வருங்கால நிகழ்வுகள் பற்றி அறிய ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள்; குறிப்பாக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். மனிதர்கள் ஆர்வமுடன் அறிய விரும்புபவை ஆகிய இந்தப் பிரபஞ்சம், மானிட வர்க்கம், இறப்பு, நீதித் தீர்ப்பு நாள், நரகம், சுவர்க்கம், வருங்காலம் கடந்த காலம் மற்றும் மறுமை ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய அல்லாஹ் ஒருவனே அறிவிக்க வல்லவன். இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் அல்லாஹ் “ஒன்றுமில்லாமை”யிலிருந்தே படைத்தான்; இன்னும் ஒவ்வொரு கணமும் படைத்துக்கொண்டே இருக்கின்றான். இப்பிரபஞ்சத்தில் ஓர் அம்சமாக விளங்கும் காலத்தையும் அல்லாஹ்வே திட்டமிட்டு வகுத்துள்ளான். காலத்திற்கு எல்லா படைப்பினங்களும் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ்வோ காலத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லன். காலததிற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன் அல்லாஹ். காலத்தின் கட்டுப்பாடின்றியே அல்லாஹ் யாவற்றையும் பரிமாணத்தோடு படைத்தான். நாம் கடந்தவை என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை என்றும் கருதும் யாவற்றையும் முழுமையாக அறிந்த நிலையில் ஒரு நொடியில் படைத்தான். நம்முடைய புலனுக்கு எட்டாத பிற்காலம் உட்பட யாவுமே “மறையானவை” என்று குறிப்பிடப்படுகின்றன. “மறுமை”யும் கூட மனிதர்கள் இம்மையில் வாழும் காலம் வரை ‘மறைவான’வற்றில் ஒர் அம்சமாகவே விளங்கும். “மறுமையை” பற்றிக் குறிப்பிடும் குர்ஆன் அதைப் பற்றிய விவரங்களைத் தருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவ ஞானிகள் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படுகின்ற மூட நம்பிக்கைகளோடு இணைந்து, மறுமையைப் பற்றி பல அனுமானங்களைக் கூறுகின்றனர். இவ்வுலக வாழ்க்கையில் பற்றும் சொத்தும் செல்வமும் குவிப்பதில் ஆர்வமும், மக்களை உலகில் வசதி வாய்ப்புகளை அடையும் முயற்சியில் நின்றும் விடுபட விடுவதில்லை. தொல்லைகளும் இடர்ப்பாடுகளும் எதிர்படும் போது ஏமாற்றமடைந்து நம்பிக்கை இழப்பார்கள். இத்தகைய மன நிலையை குர்ஆன் கீழ் வருமாறு வர்ணிக்கிறது. “நம்முடைய அருட்கொடையை மனிதன் நுகரச் செய்து அதன்பின் அதனை அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவன் நம்பிக்கை இழந்து நன்றி கெட்டவனாக ஆகிவிடுகின்றான். அவன் அனுபவித்த இடர்ப்பாடுகளை நீக்கி நம்முடைய அருட்கொடைகளை நுகரச் செய்தால் “என்னுடைய துன்பங்கள் நீங்கிவிட்டன” எனக் கூறி பெரும் மகிழ்ச்சியடைந்து பெருமை பாராட்டுகிறான். அல்குர்ஆன் 11:9,10 எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அனைத்து நிகழ்வுகளையும் குர்ஆனின் நெறிமுறைக்கு உகந்து விளங்கி, இறையுணர்வு நீங்காமல் மறுமையின் நினைவு மாறாமல் மனிதனின் நிரந்தர வீடாகிய மறுமையை அடையும் நோக்கோடு இறை நம்பிக்கையாளன் நிலை தவறாமல் முயலுகின்றான். “இவ்வுலகில் ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு பிரயாணியைப் போல் வாழ்வீராக” எனும் நபி மொழி (அல்புகாரி)க்கு ஏற்ப இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரமானது என்றும் நம்பி வாழ்வான். எனவேதான் இறை நம்பிக்கையாளர்கள் ஏராளமான நன்மைகளும் பேறுகளும் கிட்டும் போது வழி பிறழுவதுமில்லை; அவற்றை இழக்க நேரும்போது ஊக்கம் இழந்து சோர்வடைவதும் இல்லை. பேறுகளும் நன்மைகளும் அவை போன்று இழப்புகளும் எல்லாம் சோதனையே எனும் உண்மையை உணர்ந்தவர்களாக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் விரும்பும் நேரும் நிகழ்வுகளை எல்லாம் கீழ்வரும் இறை வசனத்தை நினைவு கூர்ந்து ஏற்றுக் கொள்வார்கள். ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மையும் தீமையும் அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாக்கி நாம் உங்களைச் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே மீள்வீர்கள். அல்குர்ஆன் 21:35 இதனை உணரும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான். குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது. உண்மையான மார்க்கமே மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தற்காலிக நிலையையும், நிரந்தரமான மறுமை வாழ்க்கையையும் பற்றி அறிவிக்கிறது. மனிதனின் நற்செயல்களுக்கும் தீயச் செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் ஒரு நாளைப் பற்றிக் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணவேளை, நீதித் தீர்ப்பு நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய தகவல் தரும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரே மூலம் குர்ஆனே ஆகும். இறைவனின் இறுதி வெளிப்பாடாகிய குர்ஆன் பல வசனங்களில் மனிதனின் நிரந்தர வீடு மறுமையே என அறிவிக்கின்றது. அவற்றுள் ஒன்று: உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்குர்ஆன் 6:32 இந்த இறைவசனத்தில் இந்தச் சோதனை வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியாத உணர்வற்ற ஒரு மனிதனின் மனப்போக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்கள் இத்தகைய உணர்வற்ற மனப்போக்கைப் பற்றி எச்சரிக்கப்படுவதோடு, அவர்களின் இம்மை வாழ்க்கையின் யதார்த்த நோக்கத்தைக் குறித்துத் திரும்பத் திரும்ப நினைவூட்டப்படுகிறார்கள். அவர்களில் சிலருக்கு இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். அல்குர்ஆன் 20:131 ஆனாலும் இவ்வுண்மைகளை ஊன்றிக் கவனித்து உணர முடியாதவர்கள் இந்த உலக வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளில் மயங்கி விடுகின்றனர்.

பள்ளிவாசலுக்குள் வந்து சீட்டியடித்து கைதட்டி…..

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஒரு முறை ரமழானில் அந்த நகரத்தில் வகுப்புக் கலவரம் நடைபெற்றது. அந்த நகரைச் சார்ந்த ஒருவரை சந்தித்து என்ன நடந்தது என்று கேட்டேன். அவர் கூறினார்:– இரவு நேரம் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தராவீஹ் தொழுது கொண்டிருந்தனர். திடீரென சாலையில் கூச்சல் குழப்பம்…..! மற்றொரு வகுப்பாரின் ஊர்வலமும் மேளதாளத்துடன் வந்து கொண்டிருந்தது. மேளச் சத்தம் காதைப் பிளந்தது. ஊர்வலம் பள்ளிவாசலை நெருங்கியபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த முஸ்லிம்கள் ஊர்வலக்காரர்களை நோக்கி பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருக்கின்றது. ஆகவே பள்ளிவாசலுக்கு அருகில் மேளம் அடிக்காதீர்கள் என்றனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இரு தரப்பினருக்கும் பேச்சு வார்த்தை முற்றி கைகலப்பு தொடங்கியது. பிறகு அது கலவரமாக மாறிவிட்டது. நான் சொன்னேன்: இது உங்களுடைய வழிமுறை….! நபி அவர்களின் நடைமுறை என்ன தெரியுமா? நபி அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியைத் துவங்கிய ஆரம்ப காலத்தில் மக்கா நகரும் கஃபா இறை ஆலயமும் இணைவைப்பாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. அவர்கள் நபி அவர்களையும், நபித்தோழர்களையும் அவமானப்படுத்திக் கொண்டிருந்தனர். நபி அவர்களும் தோழர்களும் தொழுது கொண்டிருக்கும்போது எதிரிகள் கூச்சல் போடுவார்கள், விசில் அடிப்பார்கள், கைகளை தட்டுவார்கள் இதுதான் எங்கள் வணக்கமுறை என்று கூறுவார்கள். அவர்களுடைய செயல் குறித்து அல்குர்ஆன் கூறுகிறது: அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கைதட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்கு கூறப்படும்) நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள். அல்குர்ஆன் 8:35 இந்த குர்ஆன் வசனத்திற்கு விரிவுரையாளர்கள் என்ன விளக்கம் தந்துள்ளார்கள் என்பதை பார்ப்போம். அபுதுல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: மக்காவிலுள்ள இணைவைப்பாளர்கள் கஃபா ஆலயத்திற்குள் வந்து கை தட்டுவார்கள்; விசில் அடிப்பார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதின் நோக்கம் தொழுகையிலிருந்து நபி அவர்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும்; இடையூறு விளைவிக்க வேண்டும் என்பதே! இமாம் ஜுஹ்ரி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்கள் இப்படியெல்லாம் செய்வதன் நோக்கம் முஸ்லிம்களை கேலி செய்வதுதான்! (தப்ஸீர் இப்னு கதீர்) அவர்கள் (மக்கா காஃபிர்கள்) இறையில்லத்தை நிர்வாணமாக வலம் வருவார்கள்; தம் கைவிரல்களைக் கோர்த்த வண்ணம் விசில் அடிப்பார்கள்; கை தட்டுவார்கள்; நபி அவர்கள் குர்ஆன் ஓதும்போது இடையூறுகள் செய்வார்கள். (தஃப்ஸீரே நஸ்வி) அண்ணல் நபி அவர்கள் காஃபாவில் தொழும்போது இடது பக்கம் இரண்டு பேரும், வலது பக்கம் இரண்டு பேரும் நின்று கொண்டு கை தட்டி விசில் அடித்து தொழுகைக்கு இடையூறு செய்வார்கள். (தப்ஸீர் அல்மஸ்ஹரி) நபி அவர்கள் மக்கா நகரில் 13 ஆண்டுகள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்தக் காலகட்டம் நெடுகிலும் மக்காவாசிகள் அண்ணலாரிடம் இந்தப் போக்கைத்தான் கையாண்டனர். ஆனால் இறைத்தூதர் அவர்கள் அந்த மக்கா வாசிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்றைக்கு நபி அவர்களுக்காக சஹாபாக்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாரக இருந்தவர்கள் இறைத்தூதர் நினைத்திருந்தால் எதிர் நடவடிக்கை எடுத்திருக்கலாம் ஆனால் எடுக்கவில்லை. பொறுமையை கடைப்பிடித்தார்கள். இணை வைப்பாளர்களின் குறும்புத்தனமான செயல்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு இறை வழியில் மேலும் கடுமையாக உழைத்தார்கள். பிறகு ஒரு நேரம் வந்தது. அல்லாஹ் நிலைமையை முற்றிலும் மாற்றி விட்டான். ஏன் இணைவைப்பாளர்களே இல்லாமல் போய்விட்டனர். நபி அவர்கள் காலத்தில் வேண்டுமென்றே இறையில்லத்தில் நுழைந்து மக்கள் கூச்சலும் கூப்பாடும் போட்டனர். ஆயினும் நபி அவர்கள் எதிர் நடவடிக்கை எடுக்காமல் பொறுமை காத்தனர். ஆனால் இன்றோ பள்ளிவாசலுக்கு வெளியே சாலையில் செல்பவர்கள் மேளம் அடித்துக் கொண்டோ கூச்சல் போட்டுக் கொண்டோ போகிறார்கள் எனில் உடனே நாம் அவர்களுடன் மோதலுக்குத் தயாராகிரோம். நபி அவர்களுடைய நடமுறைதான் இஸ்லாம் என்றால், நம் நடமுறையை என்னவென்பது?

உங்களுக்கு முகமன் கூறப்பட்டால்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மாற்று மதத்தவர்கள் நமக்கு ஸலாம் கூறினால் பதில் ஸலாம் கூற பலர் தயங்குகின்றனர். ஏன் அவர்கள் தயங்குகின்றனர், பதில் ஸலாம் கூறுவதற்கு குர்ஆன், ஹதீஸில் ஏதும் தடை இருக்கிறதா என இனி பார்ப்போம். வேதமுடையோர் உங்களுக்கு சலாம் கூறினால் ‘வ அலைக்கும்’ என்று கூறுங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம்பெற்ற ஹதீஸாகும். இந்த ஹதீஸை வைத்து முஸ்லிமல்லாதர்வர்கள் ஸலாம் கூறினால் ‘அலைக்கும்’ என்று மட்டுமே கூறவேண்டும் என்கிறார்கள். உங்கள் மீது யூதர்கள் ஸலாம் கூறினால் அஸ்ஸாமு அலைக்கும் (உங்கள்மீது அழிவு ஏற்படட்டும்) என்றே கூறுகின்றனர். எனவே நீங்கள் ‘அலைக’ என்று கூறுங்கள்! என இப்னு உமர்(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு சலாம் சொல்லாதவரை பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது கூறப்படுகிறது) (24:27) யூதர்கள் ‘அஸ்ஸாமு அலைக’ (உன்மீது அழிவு ஏற்படட்டும்) என்று கூறுகின்றனர். அதனால் நீங்கள் ‘அலைக’ என்று கூறுங்கள் என என்று நபி(ஸல்) அவர்கள் அதன் காரணத்தை விளக்குகிறார்கள். யூதர்கள் முறையாக சலாம் சொல்லாததினால் தான் நபி(ஸல்) அவர்கள் ‘அலைக’ என்று கூறும்படி சொன்னார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று முறையாக கூறும்போது நாம் “அலைக” என்று கூற வேண்டியதில்லை. யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக’ என்றனர். (அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறாமல்) அவர்கள் கூறுவதை நான் விளங்கிக் கொண்டேன். “அலைக்குமுஸ்ஸாமு வல்லஃனது” (உங்களுக்கு அழிவும் சாபமும் ஏற்படட்டும்) என்று மறுமொழி கூறினேன். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘ஆயிஷாவே! சற்று பொறு! எல்லா விஷயங்களிலும் அல்லாஹ் பண்பாட்டை (நளினத்தை) விரும்புகின்றான் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “வ அலைக்கும்” (உங்ளுக்கும் அவ்வாறே) என்று கூறிவிட்டேனே என்றார்கள். ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது. யூதர்கள் அழிவு உண்டாகட்டும் என்று சொல்லியும் கூட அதேபோல் கூறாமல் நாகரீகமாக ‘வ அலைக்கும்’ (உங்களுக்கும்) என்று மட்டும் கூறச் சொல்கிறார்கள். وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا அல்லாஹ் தன் திருமறையில் “உங்களுக்கு முகமன் கூறப்பட்டால் அதைவிட அழகாக அல்லது அதற்கு சமமாக நீங்களும் மறுமுகமன் கூறுங்கள்” (4:86) எனவே, முஸ்லிமல்லாதவர்கள் அவர்கள் முறையாக அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறும் போது நாமும் முறையாக பதில் சொல்வதற்கு எந்தத் தடையும் கிடையாது.

அழிவுப் பாதையில் மனிதன்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன. அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான். ஒரு காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகம் போல் காட்சி அளித்தது. அன்று ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு, இதுபோல் பல ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியாதிருந்தது; அது ஒரு காலக்கட்டம். பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு ஊரிலிருப்பவர்களும் தங்கள் ஊரைப் போல் உலகில் வேறு பல ஊர்களும் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆயினும் ஓர் ஊரில் இடம் பெறும் சம்பவங்கள் பக்கத்து ஊருக்குத் தெரியாதிருந்த நிலை; காலகட்டம். பிராணிகளில் பிரயாணம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், பக்கத்து ஊர்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உடனடியாகத் தெரிய முடியாமல் இருந்தாலும், காலம் தாழ்ந்து அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி இன்றை விஞ்ஞான யுகத்தில், ஒரு காலத்தில் ஒரு சிற்றூரே உலகமாக இருந்த நிலைமாறி இன்று உலகமே ஒரு சிற்றூரின் நிலைக்கு,ஏன்? ஒரு கையடக்கத்தில் இருப்பது போல் முன்னேறிவிட்டது. ஆனால் இது மனிதனின் முன்னேற்றம் என்று கூறுவதுதான் அறிவீனமாகும். மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்கள் அனைத்திலும் பாடுபட்டான்; கடுமையாக உழைத்தான்; தனது மூளையைக் கசக்கினான். அதன் பலன் அவன் பாடுபட்ட அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான , ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைக் கண்டன. மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக மனிதன் நினைப்பது மடமையல்லவா? இப்போது அன்றிருந்த ஒரு பொருளின் நிலையோடு இன்றிருக்கும் அதே பொருளின் முன்னேற்றத்தை- வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது போல், அன்றிருந்த மனிதனோடு இன்றைய மனிதனின் முன்னேற்றத்தை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றிருந்த மனிதன் படிப்பறிவற்றவனாக, எழுத்தறிவு அற்றவனாக ஏன்? இன்றைய மனிதன் கூறும் நாகரீகம் அற்றவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக இருந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதனுக்குரிய மனிதப் பண்புகள் நிறைவாகவே அவனிடம் காணப்பட்டன. திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தான். அதிகமான நினைவாற்றலைப் பெற்றிருந்தான். கூர்மையான பார்வையுடையவனாக இருந்தான். களைப்பில்லாமல் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். நீண்ட வயதுடையவனாக இருந்தான். இன்று மனிதனைத் தாக்கும் பெருங்கொண்ட நோய்கள் அன்றிருந்ததாக வரலாறு இல்லை. ஆம்! அன்று மனிதன் பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான். மனிதன் தன்னில் பாடுபடுவதை மறந்து தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் பாடுபடுவதை பெரும் சாதனையாகக் கொண்டு அவற்றில் முனைந்ததால் அந்தப் பொருள்கள் அதிசயத்தக்க அளவில் முன்னேறின. மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான். இப்படி மனிதனின் கடும் உழைப்பின் காரணமாக மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சி மனிதனை பின்னடையச் செய்தனவே அல்லாமல், மனிதனை முன்னடையச் செய்யவில்லை. உதாரணமாக ஒரு தச்சன் காலையிலிருந்து மாலை வரை ஒரு மரத்தில் கடுமையாக உழைத்தால், அது அழகியதொரு மேசையாக உருவெடுத்து விடும். ஆனால் உழைத்த அந்த மனிதன் மாலையில் கடுமையான சோர்வுக்கு ஆளாகி விடுகிறான். இப்படி மனிதன் தனக்கு வெளியே எந்தப் பொருளில் பாடுபட்டாலும் அந்தப் பொருள் முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த உழைப்பைச் செலுத்திய மனிதன் அதனால் சோர்வடைகிறான், பின்னடைகிறான் என்பதிலும் ஐயமில்லை. இப்படி மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் கடுமையாக உழைத்து அவற்றை முன்னேறச் செய்துள்ளான். அவை மூலம் மனிதன் இவ்வுலகில் சில வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆயினும் அத்துடன் நில்லாது தன்னளவிலும் பாடுபட்டிருந்தால், அவனும் உண்மையிலேயே முன்னேறி இருக்கலாம். ஆனால் தன்மீது பாடுபடுவதை மனிதன் மறந்து விட்டான். மனிதன் வெளிப்பொருள்களில் பாடுபடுவது கொண்டு ஆகாயத்தில் பறப்பதைக் கற்றுக் கொண்டான். அதையும் தாண்டி விண்ணில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஏன்? நீரில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. இது அவனுடைய பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மறுக்க முடியாது. மனிதன் தன்னில் பாடுபட்டு அன்றிருந்த மனிதர்களைவிட குணத்தில், பண்பில், ஒழுக்கத்தில், மனித நேயத்தைப் போற்றிப்பேணி வளர்ப்பதில் முன்னேறி இருந்தால் மனிதனைப் பாராட்டலாம். அதற்கு மாறாக இன்றைய மனிதன் அன்றைய மனிதனை விட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பின்னடைந்துள்ளான். அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காமராஜ், கக்கன் போன்ற அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தொண்டு செய்யும் மனப்பான்மை , அரசியலில் சுய ஆதாயம் அடையும் நோக்கமின்மை, அதனால் வஞ்ச லாவண்யத்துக்கு அடிமையாகாமல் இருந்த நற்பண்பு இவற்றை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமாவது காட்ட முடியுமா? எளிதில் புரிந்து கொள்வதற்கு இதை சுட்டிக்காட்டியுள்ளோம். இன்று பகுத்தறிவு மனிதனிடம் மிகைத்துக் காணப்படுவது ஐயறிவு பிராணிகளிடம் கூட காணப்படாத கேடு கெட்ட நிலை. போதை, ஆட்டம், பாட்டம், களியாட்டம், சூது, மாது இவை தான் இன்றைய மனிதனின் கேடுகெட்ட நிலை. தான் பிறந்த நோக்கத்தையே மறந்த நிலை. தன் இனத்தையே அதிலும் அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று கூட பாராமல் வன்செயல்கள், குண்டுகள் மூலம் ஈவிரக்கம் சிறிதும் இல்லாமல் கொன்றொழிக்கும் மனிதனை மனிதன் என்பதா? மிருகங்களை விட கேடு கெட்ட மிருகம் என்பதா? இந்த கேடு கெட்ட மிருக நிலைக்கு அவர்களை வார்த்தெடுத்தது யார்? அகிலங்களிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து நிர்வகிக்கும் ஏகன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை அவதாரங்களாகவும், கடவுள் குமாரனாகவும், கடவுள் நேசர்களாகவும் (அவுலியா) கற்பனை செய்து, அந்தப் போலிக் கடவுள்களை காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒரு பக்கம்; இந்தப் புரோகிதர்களின் தயவில் ஆட்சியைக் கைப்பற்றி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் அரசியல் புரோகிதர்கள் மற்றொரு பக்கம், இந்தப் பொய்க் கடவுள்களையும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை ஏமாற்றி, சுரண்டிப் பிழைக்கும் எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் ஒழித்துக் கட்ட புறப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேயொரு, இணை துணை இல்லாத, தேவை எதுவும் இல்லாத இறைவனையும் ஓழித்துக் கட்ட முயலும் நாத்திகர்கள்; இந்த மூன்று சாராரும் தான் இன்றைய உலகின் இழி நிலைக்கு காரணமாகத் திகழ்கிறார்கள். இந்த மூன்று சாராரின் தவறான போதனை, வழிகாட்டல் காரணமாகத்தான் மனிதன் ஐயறிவு மிருகத்திலும் கேடுகெட்ட நிலைக்கு தாழ்ந்து கொண்டிருக்கிறான். அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான். உண்மையில் மனிதன் முன்னேற ஆசைப்படாமல், இவ்வுலகில் மனிதனாக, மனிதப் புனிதனாக, அமைதி, சுபீட்சம், சுகம் அனைத்துடன் இவ்வுலகில் வாழ்வதுடன், மகத்தான பேற்றை அடைய விரும்பினால், அவன் இந்த மூன்று சாரார்களிடமிருந்தும் விடுபட்டாக வேண்டும். மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதப்புரோகிதர்களிடமிருந்து விடபட வேண்டும். தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிக்கப் புறப்பட்டு, ஒரு உண்மைக் கடவுள்களையும் மறுக்கும் நாத்திகர்களின் பிடியிலிருந்தும் விடுபட வேண்டும். மனிதனே மனிதனுக்கு நேர்வழி காட்ட முடியும் என்பது திருடனே திருடனுக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒப்பாகும்; பரீட்சை எழுதும் மாணவனே கேள்வித்தாள் தயாரிப்பதற்கு ஒப்பாகும்; எனவே படைத்த ஓரே இறைவனை மட்டும் இறைவனாக ஏற்று அவனது இறுதி வழிகாட்டல் நூல் – நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்

நபிவழியே நம்வழி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ்வின்மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21) உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: ஹாகிம் நபி(ஸல்) அவர்கள் ஒரு நேரான கோடு கிழித்து இதுவே இறைவனின் நேரான ஒரே வழியாகும் என்றார்கள். பின்பு அக்கோட்டின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் பல கோடுகள் கிழித்துவிட்டு “இவை பல வழிகளாகும். இவ்வனைத்து வழிகளிலும் ஷைத்தான் (இருந்து கொண்டு மக்களைத்) தன்பால் அழைப்பான்” என்று கூறிவிட்டு “நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்” ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்துவிடும். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றி பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான் என்று கூறி (6:153) என்ற வசனத்தையும் ஓதினார்கள். ஒருவன் நெருப்பு மூட்டுகிறான். அது சுற்றுப் புறங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. ஈசல்களும் வண்டுகளும் அந்நெருப்பில் விழ முனைகின்றன. இவனோ அவற்றை (நெருப்பில் விழாமல்) தடுத்துக் கொண்டிருக்கின்றான். எனினும் அவை அவனையும் மீறி நெருப்பில் விழுகின்றன. இம்மனிதன் எனக்கு உவமையாவான். நான் உங்களின் மடியைப் பிடித்து உங்களை நரகிற்குச் செல்ல விடாமல் தடுக்கிறேன். எனினும் நீங்கள் (எனது கட்டளைகளை மீறி) அதன் பக்கம் விழப்பார்க்கிறீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி ஒரு நாள் நடுப்பகலில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது இரு நபர்கள் ஓர் இறைவசனத்தின் கருத்து வேறுபாடு பற்றி மிகவும் சப்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோபமுகத்தோடு வெளிப்பட்ட நபி(ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் இறைவேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டதனால் தான் அழிக்கப்பட்டார்கள்” என்றார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம் நபி(ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்து விட்டு அதைச் செய்யாமல் விட்டு விடவும் செய்யலாம் என அனுமதியும் அளித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அச்செயலை முழுமையாகவே விட்டு விட்டனர் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் பிரசங்கம் செய்யலானார்கள். அதில் இறைவனைப் புகழ்ந்து விட்டு “இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நிகழ்ந்து விட்டது! நான் செய்த செயலை விட்டும் முழுமையாகவே நீங்கி விட்டார்களே? அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களைவிட நானே இறைவனைப் பற்றி அதிகம் அறிந்தவனும் அவனுக்கு மிகவும் பயப்படுபவனுமாவேன்” என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம் அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது நிலத்தில் விழுந்த பெரும் மழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர். (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர். விவசாயம் செய்தனர். அந்த பெருமழை இன்னொரு வகை நிலத்தில் விழுந்தது. அது(ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகள் முளைக்கவிடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதரை ஏறிட்டுப் பார்க்காமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவருக்கும் உவமையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூமூஸா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம் நிச்சயமாக பேச்சுகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நோவழியில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழியாகும். நிச்சயமாக மார்க்க விஷயங்களில் தீமையானது அவற்றில் புதிது புதிதாக உண்டாக்கப்பட்ட நவீன அனுஷ்டானங்களாகும். ஒவ்வொரு நவீன அனுஷ்டானங்களும் “வழிகேடாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ

Older Posts »