இஸ்லாம்தளம்

பிப்ரவரி16, 2009

மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு(தங்குமிடம்) ஆகும் எனக் குர்ஆன் அறிவுறுத்துகிறது

புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எதையுமே உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவன் மனிதன், எதிர்காலம், இவ்விதம் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவற்றுள் ஒன்று. அடுத்த சில வினாடிகளில் என்ன நேரும் என்று யாருமே அறிய முடியாது. இத்தகைய வரையறைக்குட்பட்ட புலனுணர்வுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் வருங்கால நிகழ்வுகள் பற்றி அறிய ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள்; குறிப்பாக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

மனிதர்கள் ஆர்வமுடன் அறிய விரும்புபவை ஆகிய இந்தப் பிரபஞ்சம், மானிட வர்க்கம், இறப்பு, நீதித் தீர்ப்பு நாள், நரகம், சுவர்க்கம், வருங்காலம் கடந்த காலம் மற்றும் மறுமை ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய அல்லாஹ் ஒருவனே அறிவிக்க வல்லவன். இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் அல்லாஹ் “ஒன்றுமில்லாமை”யிலிருந்தே படைத்தான்; இன்னும் ஒவ்வொரு கணமும் படைத்துக்கொண்டே இருக்கின்றான். இப்பிரபஞ்சத்தில் ஓர் அம்சமாக விளங்கும் காலத்தையும் அல்லாஹ்வே திட்டமிட்டு வகுத்துள்ளான். காலத்திற்கு எல்லா படைப்பினங்களும் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ்வோ காலத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லன். காலததிற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன் அல்லாஹ். காலத்தின் கட்டுப்பாடின்றியே அல்லாஹ் யாவற்றையும் பரிமாணத்தோடு படைத்தான். நாம் கடந்தவை என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை என்றும் கருதும் யாவற்றையும் முழுமையாக அறிந்த நிலையில் ஒரு நொடியில் படைத்தான்.

நம்முடைய புலனுக்கு எட்டாத பிற்காலம் உட்பட யாவுமே “மறையானவை” என்று குறிப்பிடப்படுகின்றன. “மறுமை”யும் கூட மனிதர்கள் இம்மையில் வாழும் காலம் வரை ‘மறைவான’வற்றில் ஒர் அம்சமாகவே விளங்கும். “மறுமையை” பற்றிக் குறிப்பிடும் குர்ஆன் அதைப் பற்றிய விவரங்களைத் தருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவ ஞானிகள் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படுகின்ற மூட நம்பிக்கைகளோடு இணைந்து, மறுமையைப் பற்றி பல அனுமானங்களைக் கூறுகின்றனர். இவ்வுலக வாழ்க்கையில் பற்றும் சொத்தும் செல்வமும் குவிப்பதில் ஆர்வமும், மக்களை உலகில் வசதி வாய்ப்புகளை அடையும் முயற்சியில் நின்றும் விடுபட விடுவதில்லை. தொல்லைகளும் இடர்ப்பாடுகளும் எதிர்படும் போது ஏமாற்றமடைந்து நம்பிக்கை இழப்பார்கள். இத்தகைய மன நிலையை குர்ஆன் கீழ் வருமாறு வர்ணிக்கிறது.

“நம்முடைய அருட்கொடையை மனிதன் நுகரச் செய்து அதன்பின் அதனை அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவன் நம்பிக்கை இழந்து நன்றி கெட்டவனாக ஆகிவிடுகின்றான். அவன் அனுபவித்த இடர்ப்பாடுகளை நீக்கி நம்முடைய அருட்கொடைகளை நுகரச் செய்தால் “என்னுடைய துன்பங்கள் நீங்கிவிட்டன” எனக் கூறி பெரும் மகிழ்ச்சியடைந்து பெருமை பாராட்டுகிறான். ( 11:9,10)

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அனைத்து நிகழ்வுகளையும் குர்ஆனின் நெறிமுறைக்கு உகந்து விளங்கி, இறையுணர்வு நீங்காமல் மறுமையின் நினைவு மாறாமல் மனிதனின் நிரந்தர வீடாகிய மறுமையை அடையும் நோக்கோடு இறை நம்பிக்கையாளன் நிலை தவறாமல் முயலுகின்றான். “இவ்வுலகில் ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு பிரயாணியைப் போல் வாழ்வீராக” எனும் நபி மொழி (அல்புகாரி)க்கு ஏற்ப இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரமானது என்றும் நம்பி வாழ்வான். எனவேதான் இறை நம்பிக்கையாளர்கள் ஏராளமான நன்மைகளும் பேறுகளும் கிட்டும்போது வழி பிறழுவதுமில்லை; அவற்றை இழக்க நேரும்போது ஊக்கம் இழந்து சோர்வடைவதும் இல்லை. பேறுகளும் நன்மைகளும் அவை போன்று இழப்புகளும் எல்லாம் சோதனையே எனும் உண்மையை உணர்ந்தவர்களாக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் விரும்பும் நேரும் நிகழ்வுகளை எல்லாம் கீழ்வரும் இறை வசனத்தை நினைவு கூர்ந்து ஏற்றுக் கொள்வார்கள்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மையும் தீமையும் அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாக்கி நாம் உங்களைச் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே மீள்வீர்கள். (21:35)

இதனை உணரும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான். குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது.

உண்மையான மார்க்கமே மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தற்காலிக நிலையையும், நிரந்தரமான மறுமை வாழ்க்கையையும் பற்றி அறிவிக்கிறது. மனிதனின் நற்செயல்களுக்கும் தீயச் செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் ஒரு நாளைப் பற்றிக் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணவேளை, நீதித் தீர்ப்பு நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய தகவல் தரும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரே மூலம் குர்ஆனே ஆகும். இறைவனின் இறுதி வெளிப்பாடாகிய குர்ஆன் பல வசனங்களில் மனிதனின் நிரந்தர வீடு மறுமையே என அறிவிக்கின்றது. அவற்றுள் ஒன்று:

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே ஆகும். இறையுணர்வுடையவர்களுக்கு மறுமை வாழ்க்கையே மிக மேலானது. அறிவாற்றல் உடையோர் இதனை உணர்ந்து கொள்ள வேண்டாமா? (6:32)

இந்த இறைவசனத்தில் இந்தச் சோதனை வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியாத உணர்வற்ற ஒரு மனிதனின் மனப்போக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இறை நம்பிக்கையாளர்கள் இளத்தகைய உணர்வற்ற மனப்போக்கைப் பற்றி எச்சரிக்கப்படுவதோடு, அவர்களின் இம்மை வாழ்க்கையின் யதார்த்த நோக்கத்தைக் குறித்துத் திரும்பத் திரும்ப நினைவூட்டப்படுகிறார்கள்.

அவர்களுள் சிலருக்கு அவர்கள் நுகரும் பொருட்டு நாம் அருளி இருப்பவற்றின் மீது நீங்கள் உங்கள் பார்வையைச் செலுத்தாதீர்கள். இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் பகட்டணிகலன்களே! இவை மூலம் அவர்களை நாம் சோதிக்கின்றோம். உங்கள் இறைவன் உங்களுக்கு அருளியுள்ளவை சிறந்தவை, நிலையானவை. (20:131)

ஆனாலும் இவ்வுண்மைகளை ஊன்றிக் கவனித்து உணர முடியாதவர்கள் இந்த உலக வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளில் மயங்கி விடுகின்றனர்.

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.

وَإِذْ قَالَ لُقْمَانُ لابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيم

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ”என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,”” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்அன் 31:13)

ஈமான் கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள் நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் நாடினால் ‘தவ்பா’ (பாவமீட்சி) இல்லாமலும் மன்னித்து விடலாம். ஆனால் “இணை வைத்தல்” என்ற பாவத்தை ‘தவ்பா’ இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:

إِنَّ اللَّهَ لا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا

நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்…… (அல்குர்அன் 4:48)

“ஷிர்க்’கில் ஈடுபடுபவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்தே வெளியேறியவராவார். அவர் பாவ மன்னிப்பு கோராமல் இறந்துவிட்டால் என்றென்றும் நரகில் தங்கிவிடுவார். முஸ்லிம்களிடையே இதுபோன்ற பல இணைவைப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம்.

கப்ருகளை வணங்குவது “ஷிர்க்” அகும்
இறந்துவிட்ட இறைநேசர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவார்கள், சிரமங்களைக் களைவார்கள் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோருவது, இரட்சிக்கத் தேடுவது போன்ற செயல்களனைத்தும் “ஷிர்க்’ ஆகும்.

ஏனெனில் இவ்வகையான செயல்கள் மார்க்கத்தில் வணக்கமாகக் கருதப்படுகிறது. அல்லாஹ் வணக்கங்களை தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென திருமறையின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகிறான்.

وَقَضَى رَبُّكَ أَلا تَعْبُدُوا إِلا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاهُمَا فَلا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلا كَرِيمًا

(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்அன் 17:23)

இறைத் தூதர்கள் அல்லது நல்லோர்களை சிபாரிசுக்காகவோ அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை பெறவோ அழைப்பதும் இணைவைப்பாகும் ஆகும்.

أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الأرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلا مَا تَذَكَّرُونَ

(துன்பத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டழைத்தால், அவர்களுக்கு பதில் கூறி, அவர்களுடைய துன்பங்களை நீக்கியவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதியாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா?… (அல்குர்அன் 27:62)

مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ

… அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக் கூடும்?… (அல்குர்அன் 2:255)

قُلْ لِلَّهِ الشَّفَاعَةُ جَمِيعًا لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالأرْضِ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُون

(நபியே! நீர் கூறுவீராக) சிபாரிசு அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அல்குர்அன் 39:44)

சிலர் உட்காரும்போதும், எழும்போதும், எதேனும் திடுக்கம் எற்பட்டாலும், துன்பத்திலும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக: “யா முஹ்ம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா ஜீலானி, யா ஷாதுலி, யா ரிபாயீ, யா முஹ்யித்தீன், (யா கெளஸ், யா காஜா, யா ஷாஹுல் ஹமீது, யா கரீப் நவாஸ்’) என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمَْْ

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!….. (அல்குர்அன் 7:194)

கப்ரை வணங்கும் சிலர் அதை வலம் வருகிறார்கள். அங்குள்ள தூண்களையும் சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள். அதன் மண்ணை எடுத்து பூசிக் கொள்கிறார்கள், ஸஜ்தா செய்கிறார்கள், பணிவுடன் நிற்கிறார்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றக் கோருகிறார்கள். சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பேற்றையும் கோருகிறார்கள். சிலர் யா ஸய்யிதீ! தூரமான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி விடாதீர்கள்! என்றெல்லாம் கூறுகிறார்கள்.

இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُون

மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது.  (அல்குர்அன் 46:5)

நபி அவர்கள் கூறுகிறார்கள்:
“யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில் மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்” (ஸஹீஹுல் புகாரி)

சிலர் கப்ருகளுக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்கள். சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்காக்களுக்குச் செல்கிறார்கள். மற்றும் சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு கொள்கிறார்கள். அவர்களால் நன்மை தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:

وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلا كَاشِفَ لَهُ إِلا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلا رَادَّ لِفَضْلِه ِ

அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது….(அல்குர்அன் 10:107)

இவை போன்ற இணைவைப்பதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக.

எது மெய்ஞானம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அறிவுலகில் கிரேக்க அறிஞர்களுக்கு தனி இடம் இருந்து வருகின்றது. சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப் பார்ப்போமேயேனால் முதலில் அறிவு, ஞானம் ஆகியவற்றின் நீரூற்று, கிரேக்கிலிருந்துதான் தொடங்கியது என்று பலர் நினைக்கின்றார்கள். இங்கே பிறந்த ‘சாக்ரடீஸ்’ (Socrates Athens in 469 BC) அறிவுலக தந்தை என்றும் ‘பிளாட்டோ’ (Plato)வை அறிவுலக மேதை என்றும் அழைக்கின்றார்கள்.

சாக்ரடீஸின் பார்வையில் மனிதன் தான் ஆராயவேண்டிய பொருளே தவிர இந்த வையகம் அல்ல. உன்னையே நீ அறிந்துகொள் என்ற கோட்பாட்டை சாக்ரடீஸ்தான் உலகத்திற்கு அறிமுகப்படுத்தினான். நாம் காணும் அல்லது அனுபவிக்கும் இந்த உலகம் உண்மையில் இல்லாத ஒன்றாகும், என்பது அவனுடைய தத்துவமாகும். நாம் காணும் உலகம் ஒரு கற்பனை உலகம் – இது நிஜமல்ல. உண்மையான ஒரு நிஜ உலகின் ஒரு நிழல் உலகமாகும். உணர்வு பூர்வமாக பெறப்படும் அறிவு நம்பத்தகுந்த அறிவே அல்ல. காதுகளை அடைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு நம் கற்பனை உலகில் மூழ்கிப் பெறப்படும் அறிவே உண்மையான அறிவாகும் என்பது சாக்ரடீஸின் கொள்கையாகும். இந்த தத்துவம் தான் இந்தியாவிற்குள் புகுந்து இந்து வேதங்களில் இடம்பெற்று ‘வேதாந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆக இந்து மதத்தின் கண்ணோட்டத்தில் நாம் வாழும் இந்த உலகம் (பிராக்கரதி) மாயையாகும். இது பிரம்மா காணும் கனவாகும். இது ஈஸ்வரனின் லீலையாகும். இங்கு நடைபெறும் எல்லாமே நாடகமாகும். எதுவுமே இங்கு உண்மையில்லை. மாறாக உண்மையின் மாதிரியாகும். இங்கு யாரும் ஆண்டானுமில்லை, அடிமையுமில்லை.  கடலும் இல்லை, மலையும் இல்லை. எல்லாமே அகப்பார்வையின் கோளாராகும். இந்தப்பார்வைதான் நம் நாட்டில் ஒருவித சோம்பேறித்தனம் நிலவுவதற்கு இந்தப் பார்வைதான் அடிப்படைக் காரணமாகும்.

உலகை வெறுத்தல் – இவ்வுலகத்தை துறத்தல் தான் உண்மையான தெய்வ பக்திக்கு அடையாளம் – போதிமதிகளும் – துரவிகளும் மனித குலத்தில் உயர்ந்தவர்கள் என்ற உணர்வு உண்டானதற்கு இந்த நம்பிக்கைதான் அடிப்படை காரணமாகும். இதே கருத்துதான் ‘ஈரானிய தஸவ்வுஃப்’ என்ற போர்வையில் நம் நாட்டு முஸ்லிம்களிடமும் புகுந்து தொற்றிக்கொண்டது. ஆன்மீக பாடல்கள் முனாஜாத் கீர்த்தனைகள் என்ற பெயரால் முஸ்லிம்களை எல்லாவிதத்திலும் வியாபித்துக்கொண்டது. ஆக உலகம் என்பது ஒரு அருவெறுக்கத்தக்க பொருள் என்ற எண்ணம் முஸ்லிம்களிடமும் பரவி விட்டது.

திருகுர்ஆன் இந்த உலகிற்கு அருளப்படுவதற்கு முன்புவரை உலகமே மாயம் – வாழ்வே மாயம் – எல்லாமே மாயம் – அனைத்தும் பொய் என்ற நம்பிக்கை எங்கும் வியாபித்திருந்தது.

திருகுர்ஆன் வந்தது – சாக்ரடீஸ், அரிஸ்டாட்டலின் (Aristotle 350 BC)இந்த வேதாந்தத்தை தவிடு பொடியாக்கியது. இந்த வலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த மனித குலத்திற்கு இந்த வசனத்தின் மூலம் அறைகூவல் விட்டது. அந்த வசனம் இதுதான்.

மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு. அல்குர்ஆன் 38:27

இந்த வசனத்தின் மூலம் இந்த அகிலத்தை இந்த உலகத்தை மாயை என்றும் வீணானது என்றும் எண்ணுபவர்களை திருகுர்ஆன் காபிர்கள் மறுப்பவர்கள் என்று பிரகடனம் செய்கிறது. மனிதனை தனிமைப்படுத்தும் மூலையில் முடங்கச் செய்யும் முடவராக்கும் சன்னிதானங்களின் மடங்களையும் அவர்களின் வேதியியல் நம்பிக்கைகளையும் தஸவ்வுஃபின் அஸ்திவாரங்களயும் இந்த ஒரு ஆயத்தின் மூலம் இறைவன் நிர்மூலமாக்கி விட்டான்.

இது ஒரு சாதாரண வசனமல்ல. இந்த உலகை மாயை என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட போர் பிரகடனமாகும். இதை உறுதிப்படுத்தும் வகையில் இறைவன் இன்னொரு வசனத்தில் மூலம் இந்த உண்மைக்கு மெருகூட்டுகின்றான்.

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் – நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 29:44

அல்லாஹ் இவ்வுலகை உண்மையைக் கொண்டே படைத்துள்ளான். கற்பனையைக் கொண்டல்ல. இந்த வையகம் போலியானதோ பொய்யானதோ அல்ல. அறிவுள்ள மக்களுக்கு இவ்வ்வசனத்தில் சிறந்த ஒரு அத்தாட்சியுள்ளதாக இறைவன் சுட்டிக்காட்டுகிறான். இவ்வுலகை உண்மை என்று நம்புவர்களை இறைவன் இவ்வசனத்தில் விசுவாசிகள் என்று அழைக்கிறான். இவ்வுலகை போலியானது – வீணானது என்பதை ஆணித்தரமாக மறுக்கும் வகையில் மேலும் ஒரு வசனத்தை அருளியுள்ளான். அந்த வசனம்:

மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். அல்குர்ஆன் 44:38,39

இந்த உலகை மாயை என்று நினைக்காமல் உண்மை என்று நம்பி அதில் உள்ள ஒவ்வொரு பொருளையும் ஆழமாக ஆராய இறைவன் கட்டளையிடுகின்றான். இனி வரும் வசனங்களில் இறைவன் அறிவிற்கும் ஆராய்சிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்று வலியுறுத்துகின்றான்.

வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உாியது. இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். அல்குர்ஆன் 3:189

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அல்குர்ஆன் 3:190

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ”எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”” (என்றும் பிரார்த்திப்பார்கள்) அல்குர்ஆன் 3:191

இப்பொழுது சொல்லுங்கள் சகோதரர்களே! உலகமே மாயம் என்று நம்பும் வேதாந்தத்தால் எப்படி இறைவனை அடைய முடியும். இப்படிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து அல்லாஹ் காப்பற்றுவனாக!

வணக்கமும்-உதவி தேடலும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

திருக்குர்ஆனின் போதனைப்படி இறைவனுக்குச் செய்யவேண்டிய வணக்கம் மூவகைப்படும். அவையாவன:-

(1) அவனுக்குரிய உயர்ந்த இலட்சணங்களைக் காட்டும் பெயர்களைக் கொண்டு நாவால் புகழ்தல்

(2) அவன் சன்னியதில் உள்ளச்சத்துடன் கைகட்டித் தலைகுனிந்து நெற்றியைப் பூமியில் வைத்து (ஸுஜுது செய்து) தன் சரீர உறுப்புகளைக் கொண்டு தன்னைத் தாழ்வுப்படுத்தி, அவனை மகத்துவப் படுத்துதல்.

(3) தன் உடலையும், பொருளையும் மற்றும் தான் நேசிக்கும் எல்லா வஸ்துக்களையும் அவனுக்காகத் தியாகம் செய்தல்.

இம்முன்றில் முதல் வகை வணக்கம் ஆண்டவனுடைய மகத்துவத்தையும், அவன் நமக்குக் கொடுத்திருக்கும் பாக்கியங்களையும் நினைத்து ரஹ்மான், ரஹீம், ரப்பில் ஆலமீன் என்ற அவனது திருநாமங்களை- அம்மொழிகளின் கருத்துகளை மனதில் கொண்டு மொழிவதால் நிறைவேறுகிறது.

தொழுகையின் மூலம் இரண்டாவது வகை வணக்கம் நிறைவேறுகிறது.

மூன்றாவது வகை வணக்கம், உடலைத் தியாகம் செய்யும் நோன்பின் மூலமாகவும், பொருளை தியாகம் செய்யும் ஜக்காத்தின் மூலமாயும், ஆண்டவனுக்காகப் போர்புரியும் ஜிஹாதின் மூலமாக நிறைவேறுகிறது. அம் மூவகை வணக்கங்களும் அவனுக்காகவே செய்யப்படுபவை. அதனை உத்தேசித்துதான், “உன்னையே நாங்கள் வணங்குகிறோம்” எனத் திட்டப்படுத்திக் கூறுமாறு நமக்கு இறைவன் கற்பிக்கிறான், அடியான் தான் மட்டும் தன் நன்மைக்காகச் செய்யும் வணக்கத்தை விட தன்னைப் போன்ற மற்றைய சகோதரர்களையும் அவ்வணக்கத்தில் சேர்த்துக் கொண்டு செய்வது விசேஷமென்பதைக் காட்டவே, நாங்கள் என்று பண்மையாகக் கூறும்படி சைகை காட்டியுள்ளான்.

‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம் மேலும் உன்னிடமே உதவி தேடுகிறோம்’

என்ற இவ்வாக்கியங்களின் மூலமாக இறைவன் தன்னையே வணங்கும் படியும், தன்னிடமே உதவ, வேண்டும்படியும் கற்பிக்கிறான். வணக்கத்திற்குத் தகுதியாவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லையென்பதும், இலாபத்தையோ, நஷ்டத்தையோ உண்டாக்கும் சக்தி அவனுக்கேயல்லாமல் வேறு யாருக்கும் இல்லையென்று நம்புவுதும் இஸ்லாத்தின் மூலக் கொள்கைகளாகும். இம்மூலக் கொள்கைகளுக்கு மாறாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானாவர் உண்டு என்று நம்புவதும் அவர்களுக்கு வணக்கம் செய்வதும், அவனைத்தவிர வேறு யாருக்கும் லாப நஷ்டத்தையோ உண்டாக்கும்

சக்தியுண்டென்று நம்புவதும் இஸ்லாத்தில் ஷிர்க் (இணை வைத்தல்) என்னும் மன்னிக்க முடியாத குற்றமாகும். நபியோ, ரசூலே, வலீயோ, யாருக்காயினும் லாப நஷ்டத்தையுண்டாக்கும் சக்தியுண்டென்று நம்புவதும், அவர்களிடம் உதவி தேடுவதும் பெரும் குற்றமே. இவைப் போலவே நட்சத்திரங்களுக்கோ லாப நஷ்டத்தை உண்டாக்கும் தன்மையுண்டென்று நம்புவதும் கடுமையான குற்றமாகும்.

ஒவ்வொருவரும் தமது முதல் பெருந்தேவைகள் வரை எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றும்படி அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக  நபி (ஸல்) அவாகள்.

“செருப்பின் வார் அறுந்து போனால் அதையும் அல்லாஹ்விடமே கேட்பாயாக” எனத் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்கள். (திர்மிதி)

அப்துல்லாஹ்வின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது ஒரு தினம் நான் நபி (ஸல்) அவாகளைப் பின் தொடாந்து சென்றேன். அப்பொழுது அவர்கள் (உன்னை நோக்கி) “சிறுவனே! அல்லாஹ்வின் கடமைகளைப் பேணிக் கொள்! அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ வேண்டுதல் புரிந்தால், இறைவனிடமே வேண்டுதல் புரிந்துகொள்! நீ உதவி கோருவதாக இருந்தாலும், இறைவனிடமே உதவி கோரிக்கொள். திட்டமாக (உலகில்) சகல கூட்டத்தினரும் உனக்கு ஒரு வஸ்துவின் மூலம் நன்மை செய்ய ஒன்று கூடினாலும் அல்லாஹ் விதித்த ஒன்றையன்றி வேறெதைக் கொண்டும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. இன்னும், உனக்குத் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்று கூடிக் கொண்டாலும், அல்லாஹ் உன் மீது விதித்த ஒன்றைக் கொண்டல்லாது எந்தத் தீங்கையும் அவர்கள் உனக்கு செயதுவிட முடியாது ” என்று கூறினார்கள். (அல்ஹதீது. நூல்: திர்மிதி. அறிவிப்பாளர்: அஹ்மத்)

வருங்காலத்தில் நடக்கக் கூடிய விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் தெரிந்து கொள்ள முடியாது. இது அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமாகியுள்ள இலட்சணம், ஜோஸியத்தின் மூலமோ, குறிகாரரின் மூலமாகவோ பின்னால் நடைபெறப் போகும் காரியங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புவது ஷிர்க்க்காகும். இதைக் குறித்தே நபி (ஸல்) அவர்கள்.

“(எதிர்காலத்தைப் பற்றி) குறிகாரன் சொல்வதை ஒருவன் நம்புவானேயானால் அவனுடைய நாற்பது இரவுத் தொழுகைகள் (இறைவனால்) அங்கிகரிக்கப்படமாட்டா.” என அருளியிருக்கிறார்கள்.

நாட்களாலும், நட்சத்திரங்களாலும் காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை நம்புவது பெரும் குற்றம் என்பதை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கையில்

“அல்லாஹ்வின் அருளால் மழை பெய்தது என்று சொன்னவன் விசுவாசியென்றும், இன்னன்ன நட்சத்திரங்களால் தான் மழை பொழிந்தது என்று சொன்னவன் ஆண்டவனுக்கு மாறு செய்தவன் (காபிர்)” என்றும் அருளியிருக்கிறார்கள். (சுருக்கம்: புகாரி,முஸ்லிம்)

அதனால் நாள் நட்சத்திரம் சகுனம் பார்ப்பதும் குறி கேட்பதும் இஸ்லாத்தில் கண்டிப்பாக விலக்கப்பட்டிருப்பதுடன் இந்த அத்தியாயத்தின் 4வது வாக்கியத்தின் இரண்டாவது பகுதிக்கு முற்ற முற்ற முரணானதுமாகும்.

உதவி தேடுதலின் உண்மைப் பொருள்:

சிலர் இறைவனின் சிருஷ்டிகளை அவன் வெளியாகும் துறையென்று நம்பி வணங்குகின்றனர். முஸ்லிம்களிற் சிலருங்கூட பெரிய மகான்களின் சின்னங்களென சிலவற்றை வைத்துக் கொண்டு செய்யத் தகாத சில செய்கைகளை அவற்றின் பெயரால் செய்கின்றனர்; முத்தமிடுகின்றனர். சிலர் அவாகள் சமாதி கொண்டிருக்கும் இடங்களில் வாசற்படிகளைத் தொட்டுத் தடவிக்கொள்வதுடன் கஃபாவை வலஞ்சுற்றுவது போன்று சமாதியைச் சுற்றி அதை ஒரு வணக்கமாகவும் கருதுகின்றனர்.

சமாதி கொண்டிருக்கும் மகான்களுக்கும் வலிமார்களுக்கும் இறைவனுக்கு இருந்து வருகிற சக்திகள் போன்று இருப்பதாக எண்ணிக்கொண்டு இறைவனிடம் கையேந்தி உதவியருள வேண்டுவது போல வேண்டுகின்றனர். இவை யாவும் சந்தேகமின்றி தவறானவையும் இணைவைக்கும் தன்மையில் சேர்ப்பனவாகவும் இருக்கின்றன. இது பற்ற ிநபி (ஸல்) அவர்கள் கண்டித்துக் கூறுகையில், “எனக்குப் பின்னர் தனது கப்ரை, (மண்ணரையை ) தொழும் இடமாக – ஸுஜுது செய்யும் இடமாக – ஆக்கிக் கொள்ளாதீர்கள்” (புகாரி, முஸ்லிம்) என்றுரைத்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாரையும் வணங்குவது ஹராம் என்னும் கொடிய குற்றமாகும். அவனைத் தவிர்த்து வேறெவருக்கும் ஸுஜுது செய்வதோ ருகூஉ செய்வதோ கூடாத செய்கைகளாகும். அவ்வாறு செய்தோர் இணவைக்கும் பெரும் குற்றத்தை செய்தவராவார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

ஒரு சமயம ்நபி (ஸல்) அவர்களிடம் அவர்களது தோழர்கள் “தங்களுக்கு நாங்கள் ஸுஜுது செய்ய விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள். இதனைப ்நபி (ஸல்) அவர்கள் மிகவும் கண்டிப்புடன் தடுத்து விட்டார்கள். (அல்ஹதீது. ஆதார நூல் : மிஷ்காத்)

இஸ்லாமிய சட்டங்கள்

இதுவுமின்றி அல்லாஹ்விற்கன்றி பிறரின் பெயரால் நோன்பு நோற்பது தர்மம் கொடுப்பதும் கூடாத செய்கைகளாகும். இறைவனின் திருவீடாக திரு கஃபாவைத் தவிர்த்து வேறு எதனையும் (தவாப்) சுற்றுவதும் தகாது ஹஜ்ஜு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட (இஹ்ராம்) உடை அணிவது போல் அணிந்து கொண்டு, அதை வணக்கமெனக் கருதிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லக்கூடாது. அல்லாஹ்வின் பெயரால் அல்லாமல் வேறு ஒருவரின் பெயர் கூறி உயிர் பிராணிகளைப் பலியிடுதலும் கூடாது. இவ்வாறே இறைவனைத் தவிர்த்து வேறு ஒருவரிடம் (துஆ) பிரார்த்தனை புரிவதும், அவரைச் சர்வ தேவைகளையும் நிறைவேற்றி சக துன்பங்களையும் அகற்றுபவர் என்று நினைப்பதும் கொடிய பாபங்களாகும் என இஸ்லாமிய சட்ட ஆதார நூல்கள் அறிவிக்கின்றன.

ஸஃபர் மாதம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஸஃபருல் முழஃப்பர் எனும் வெற்றி வாய்ந்த ஸஃபர் என்று சிறப்பித்தழைக்கப்படும் மாதம், “எம் மாதத்தால் எத்தீங்கும் நிகழ்வதில்லை” என்று நபி(ஸல்) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோ அத்தகைய ஸபர் மாதம் நம்மிடையே வந்திருக்கிறது.

அவர்கள் தமக்கு அல்லாஹ்வின் சொல்லையும், அவனது ரசூலின் வார்த்தைகளையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டியதிருக்க, தவறுகள் மலிந்து காணப்படும் அரபுத் தழிழ் கிதாபுகளை ஆதாரம் காட்டி பின்வருமாறு அதில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது வருடத்திற்கு 1,24,000 பலா முஸீபத்துகள் இறங்குவதாகவும், அவை ஒட்டு மொத்தமாக ஒடுக்கத்து புதனன்றுதான் இறங்குகின்றன என்றும், அதற்குப் பரிகாரமாக குர்ஆனில் குறிப்பிட்ட சில வசனங்களை ஒரு தட்டையில் எழுதி கரைத்துக் குடித்து விட்டால் அவை நம்மை வந்தணுகாது என்கிறார்கள்.

வேறு சிலரோ, அல்லாஹ் “ஆது” கூட்டத்தாரை புதன்கிழமை அன்று தான் பலமான காற்றை விட்டு அழித்து நாசப்படுத்தினான். அல்லாஹ் அதுபற்றி “அய்யாமின்னஹிஸாத்தின்” (பீடை நாட்களில்….) என்று குர்ஆனில் கூறியிருக்கிறான் என்றும், அதன் காரணமாகவே நாங்கள் இதைப் பீடை நாள் என்று கூறுகிறோம் என்கிறார்கள். வேறு சிலரோ, நமது நபி(ஸல்) அவர்களுக்கு இம்மாதத்தில் தான் சுகக்குறைவு ஏற்பட்டிருக்கிறது, அதனால்தான் இதைப் பீடை மாதமென்று கூறுகிறோம் என்று அனைவரும் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.

வல்ல அல்லாஹ் ஆது கூட்டத்தாரை ஷவ்வால் மாதத்தின் இறுதி வாரத்தின் புதன்கிழமை காலையிலிருந்து அடுத்த புதன் மாலை முடிய ஏழிரவும், எட்டுப் பகலும் தொடர்ந்து பலமான காற்றை அனுப்பி, அவர்கள் செய்த அநியாயம் அக்கிரமத்திற்குத் தண்டனையாக அழித்து, நாசமாக்கினான். ஆனால் அக்கூட்டத்தாரின் நபியாகிய “ஹுது”(அலை) அவர்களையும், அவர்களைப் பின்பற்றிய நன்மக்களையும் காப்பாற்றினான்.

அல்லாஹ் அவர்களை ஷவ்வால் மாதத்தின் இறுதிப் புதனில் அழித்து நாசமாக்கியதற்கும், அதன் பெயரால் இவர்கள் ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் இஸ்லாத்தைப் போட்டு நாசமாக்குவதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?

அவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு மாதத்தில் சுகக்குறைவு ஏற்பட்டதினால், அம்மாதம் பீடைமாதமென்று கூற முற்பட்டால், நபி(ஸல்) அவர்களுக்கு ஸஃபர் மாதத்தில் மாத்திரம் தானா சுகக்குறைவு ஏற்பட்டிருக்கிறது? அது அல்லாத எத்தனையோ மாதங்களிலும் சுகக்குறைவு ஏற்படத்தானே செய்திருக்கிறது? அதனால் வேறு பல மாதங்களையும் பீடை மாதங்கள் என சொல்ல வேண்டியதாகி விடுமே!

குறிப்பாக நபி(ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தையே பீடை பிடித்த மாதம் எனக் கூறும் நிலை ஏற்பட்டுவிடும். ஏனெனில் அம்மாதத்தில் தானே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகியுமிருக்கிறார்கள். எனவே காலம் பொதுவானது. அது நல்லது, தீயது என அவரவர் செயல்களைப் பொறுத்தே அமைகிறதே அன்றி, வெறுமனே ஒரு மாதம் ஒரு நாள் அனைவருக்கும் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைவது கிடையாது.

இதோ, இம்மாதம் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியதொரு ஹதீஸைக் காண்போம். அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் தொற்று நோய் என்று ஏதுவுமில்லை என்றும் அவ்வாறே ஆந்தையின் சப்தத்தால் ஆவப்போவதொன்றுமில்லை. எனவே (மற்றொரு அறிவிப்பில் பறவை, மான், பூனை முதலியவை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் குறுக்கே செல்வதால் நலமோ, இடரோ விளைவதில்லை) என்றும்,

அதுபோன்ற ஸஃபர் மாதத்தாலும் நடக்கப் போவதொன்றுமில்லை என்றும் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மானைப் போன்று (ஒரு வியாதி கூட ஏற்பட்டிருக்காத) ஓர் ஒட்டகை சொரி பிடித்த வேறொரு ஒட்டகையுடன் சிறிது காலம் சேர்ந்து பழகி விட்டால் அச்சொரி இதனையும் பற்றிக் கொள்கிறதே என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (விஷயம் அவ்வாறென்றால்) முதன் முதலாகச் சொரி ஏற்பட்ட அந்த ஒட்டகைக்குச் சொரியை ஒட்டி விட்டவர் யார்? என்று கேட்டார்கள் (புகாரி)

மேற்காணும் ஹதீஸில் , நபி(ஸல்) அவர்கள், அக்கால மக்களிடையே ஆழமாய்ப் பதிந்து கிடந்த மூன்று மூடநம்பிக்கைகளைக் களைந்துள்ளார்கள்; அவையாவன:

1) குறிப்பிட்ட சில வியாதிகளுக்குப் பிறரைத் தொற்றிக் கொள்ளும் சக்தியுண்டு.

2) ஒரு வீட்டில் ஆந்தை கத்தினால், அவ்வீட்டில் எவருக்கேனும் மரணம் சம்பவிக்கும்.

3) ஷஃபர் மாதம் வந்துவிட்டால் அதன் வருகையால் பொதுவாக மக்கள் அனைவருக்கும் கஷ்டம் ஏற்படும்.

ஆகவே நபி(ஸல்) அவர்கள், அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்ல அல்லாஹ்விடம், அனைத்து ஆதிக்கமும் இருக்கும் பொழுது, சுயமே அவனது நாட்டமின்றி, கேவலம் ஒரு மாதத்தின் வருகையோ, ஓர் ஆந்தையின் சப்தமோ, அடுத்தவனிடமுள்ள ஒரு நோயோ பிறரை எதுவும் செய்து விட முடியாது என்ற உண்மை நிலையை எடுத்துணர்த்தியுள்ளார்கள்.

பொதுவாக அல்லாஹ்வை அன்றி மற்றெவராலும், அவர்கள் மலக்குகளாகட்டும், நபிமார்களாகட்டும், வேறு இறைநேசச் செல்வர்களாகட்டும், இவ்வுலகத்தில் ஒரு துரும்பையேனும் ஆட்டவோ அல்லது ஆடும் ஒன்றை அமைதிப்படுத்தவோ, அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் முடியவே முடியாது. காரணத்தை இதோ திருமறை கூறுகிறது: “பியதிஹீ-மலக்கூத்து – குல்லி – ஸைஃ” அவனது கரத்திலேயே அனைத்துப் பொருட்களின் ஆதிக்கமுமிருக்கிறது.

ஆதிக்கமனைத்தும் இருக்க வேண்டியவனிடத்தில் ஒட்டுமொத்தமாக அமைந்திருக்கும் பொழுது, யாராலும், எதுவாலும், எதுவும் நடக்காது.

உண்மைநிலை இவ்வாறிருக்க, இவர்களாகவே ஒடுக்கத்து புதன் என்று ஒன்றை உண்டுபண்ணிக் கொண்டு, அதில் பலாமுஸீபத்துகள் இறங்குவதாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி இவர்களாவே கற்பனை செய்துகொண்டு, அவை தம்மை வந்தணுகாமலிருப்பதாக, நபருக்கிரண்டு மா இலைகளாம்! ஆயத்துகள் எழுதப்பட்டவைகளாம்! ருபாய்க்கு இரண்டாம், தலைக்கும் உடம்பிற்கும் தேய்த்துக் குளிக்க ஒன்றாம்! குளித்து விட்டு, கரைத்துக் குடிக்க ஒன்றாம்! அவ்வாறு செய்து விட்டால் அன்றைக்கிறங்கும் அனைத்து முஸீபத்துகளும் அடியோடு போய்விடுமாம்!  இப்படி கதையளக்கிறார்கள்.

அவர்களின் கூற்றுப்படி, அந்த பலாமுஸீபத்துகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்மையில் இறக்கி வைக்கப்படுமானால், இவ்வாறெல்லாம் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பதன் மூலம் அவை எதுவும் போய் விடாது, அப்படி மீறி அதனால் ஏதேனும் போவதென்று ஒன்றிருக்குமானால், மா இலைகளில் அவர்கள் எழுதும் அந்த மையானது, அரிசியை அடுப்பலிட்டுக் கரித்துத் தயார் செய்யப்படுவதால், இரண்டொரு விடுத்தம் கழிப்பறைக்குப் போவது ஒன்று தானிருக்குமே தவிர, மற்றபடி அதனால் போவது என்று வேறெதுவும் இருக்க முடியாது.

இவை அனைத்தும் வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக, சுய நலமிகளால், சமுதாயப் புல்லுருவிகளால் தோற்றுவிக்கப்பட்டவையே அன்றி, உண்மையில் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அவ்வாறெல்லாம் எதுவுமேயில்லை என்பதை உணர வேண்டும். இன்றைக்கு இவை போன்றவை அனைத்தும் மூடப்பழக்கங்கள் என்பதை அநேகர் உணர்ந்து கொண்டு, குர்ஆன் ஹதீஸ்களுக்குப் புறம்பாக கப்ஸா விடுவோர், கதைளயப்போரின் பக்கம், கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டதால், மேற்கூறிய மூடப்பழக்க வழக்கமெல்லாம் புறமுதுகு காட்டி ஓடிக் கொண்டிருக்கின்றன.

அநேக ஊர்களில் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிக்கும் பழக்கம் அடியோடு நின்று போய் விட்டது. எத்தனை காலம் தான் இந்த ஏமாற்று வித்தைக்காரர்களுக்கு மக்கள் பலியாகிக் கொண்டிருப்பார்கள். ஏமாறுவோர் இருந்தால் தானே ஏமாற்றுவோர் இருக்க முடியும்?  இன்றைக்கு ஓரளவேனும் குர்ஆன் ஹதீஸ்களை மக்கள் சிந்திக்கத் துவங்கியதன் பயனாக மூட நம்பிக்கை, தீய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹ்வின் பேரருளால் இந்நிலை நீடிக்கும் பொழுது, இம்மூட நம்பிக்கைகள் எல்லாம் ஓடி மறைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய மூடப் பழக்கங்கள் அனைத்தும் நமது சமுதாயத்தை விட்டும் அடியோடு ஒழிய, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.