இஸ்லாம்தளம்

பிப்ரவரி15, 2009

சகோதரத்துவம் பேணுவோம்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

புகழ் அனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே! சாந்தியும் சமாதானமும் உத்தம  நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள், நல்லோர்கள் மீதும் உண்டாகட்டும். இப்பிரசுரத்தில் நடுநிலையோடு சிந்திக்க உங்களை அழைக்கின்றேன். சமுதாய மக்களே! இன்று நாம் நமக்குள் பல பிரிவுகளை நாம் வகுத்துக் கொண்டோம். இருப்பினும் நாம் ஒரே இறைவன், ஒரே நபி, ஒரே வேதம், ஒரே கிப்லா என்ற ஒற்றுமையில் உறுதியாக இருக்கிறோம். விசுவாசிகள் அனைவரும் சகோதரர்கள். என்று சூளுரைக்கிறோம். பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானது உலக முஸ்லிம்களுக்கு பொதுவானது என்று சட்டம் கூறுகிறோம்.

உலகிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் இறையில்லமான கஃபத்துல்லாஹ்வை அடிப்படையாகக் கொண்டதாகும். அதை கருப்பர், வெள்ளையர், அரபி, அஜமி என்று பலரும் ஹஜ் செய்கிறார்கள். அங்கு தொழுகிறார்கள். அது கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது. இன்றும் அங்கு மத்ஹபுகளைச் சார்ந்தவர்களும், சாராதவர்களூம் வந்து செல்கின்றனர். அல்லாஹ்வை மட்டும் வணங்க வருபவர்களுக்கு இன்றுவரை அது பொதுவாகவே உள்ளது. அப்படித்தான் இருக்கவும் வேண்டும். பள்ளிவாசல்களை பற்றி அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 2:114

நாம் சற்று நிதானமாக சிந்திப்போம். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசித்து இஸ்லாமை மார்க்கமாக ஏற்றுக்கொண்டவர்களையே முஸ்லிம் என்று சொல்கிறோம். இதையே குர்ஆன், நபிமொழியும் உறுதி செய்கிறது. ஆனால் இன்று நாம் நடைமுறையில் (தமிழகத்தில்) நான்கு மத்ஹபுகளை சாராதவர்கள் பள்ளிக்குள் நுழையக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளோம். இப்போது சில கேள்விகள் எழுகின்றன.

1.மத்ஹபுகளைச் சாராதவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று மத்ஹபுகளைச் எந்த ஆலிமாவது தீர்ப்பு வளங்கியுள்ளாரா?

2.மத்ஹபுகளைச் சாராதவர்களும் முஸ்லிம்கள்தான் என்றால் அவர்களை அல்லாஹ்வின் இல்லத்திலிருந்து தடுக்க நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

3.மத்ஹபுகளை நாம் மார்க்கத்தில் ஜாதிகளாக எடுத்துக்கொண்டோமா? இணை வைப்பர்வர்கள்தாம் தங்களை பல ஜாதிகளாக பிரித்துக்கொண்டு ஒரு ஜாதியினர் மற்ற ஜாதியினரின் கோயிலுக்கு செல்லாததையும், சென்றால் தடுக்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.

நாளை மத்ஹபுகளைச் சாராத முஸ்லிம்களுக்கு ஒரு துன்பம் வந்தால் நாம் உதவி செய்ய முன்வரமாட்டோமா? அவர்களது ஜனாஸாவில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதியுண்டா? அல்லது நமக்கு ஒரு பிரச்சனை என்று அவர்கள் உதவிக்கு வந்தால் ‘நீங்கள் மத்ஹபை பின்பற்றவில்லை’ என்று கூறி நாம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவோமா?

இன்று கஃபத்துல்லாஹ்வை முஸ்லிம்களில் ஒரு கொள்கையுடைய சாரார் நிர்வகித்து வருவதால் அந்த கொள்கையைச் சாராதவர் அங்கு வரக்கூடாது என்றால் நாம் அதை ஏற்றுக்கொள்வோமா? உண்மையில் மத்ஹபுகளைச் சாராதவர்கள் வழிகேட்டில் இருந்தால், நேர்வழியில் இருக்கும் நாம் அவர்களை பள்ளிக்குள் அனுமதித்தால்தானே நமது பண்பு குணங்கள் ஒற்றுமையைப் பார்த்து நமக்கு ஆதாரங்களையும் நல்லுபதேசங்களையும் கேட்டு அவர்கள் நேர்வழி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். பள்ளிக்குள் ஏகத்துவ கொள்கைக்கு முரண்பட்டு வணக்க வழிபாடுகள் செய்வதற்குத்தான் அனுமதியில்லை. அதைத்தவிர அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளிகள் உள்ளன.

நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18

நாம் அவர்களை தடுப்பதால் நேர்வழி பெருவதிலிருந்து தடுத்தவர்களாவோம். கருத்து வேற்றுமை யாரிடம்தான் இல்லை. நான்கு மத்ஹபுகள் ஒற்றுமையானதா? இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் இமாமுக்குபின் தொழுபவர், நிலையில் குர்ஆன் ஓதினால் அது ஹராமுக்கு நெருக்கமான குற்றம் என்றும், இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் ஓதுவது கட்டாயக்கடமை என்றும் கூறுகின்றனர். இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் கையை தூக்கவேண்டும். பிஸ்மில்லாஹ், ஆமீன் சப்தமிட்டு சொல்லவேண்டும் என்று சொல்ல, அதை இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் மறுக்கிறார்கள். இன்னும் ஃபர்ளு வாஜிபுகளிலேயே பல கருத்து வேற்றுமைகள் உள்ளன. அவ்வாறிருக்க இதைவிட முக்கியத்துவமற்ற விஷயங்களுக்காக நாம் பிறரை எப்படித்தடுக்க முடியும்?

தொப்பி அணிந்துதான் பள்ளிக்கு வரவேண்டும், அல்லது தொழவேண்டும் என்று சட்டமிடுவதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளோம். அப்படி நாம் பின்பற்றும் மத்ஹபுகளில் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? பள்ளியின் ஒழுக்கங்கள் அல்லது தொழுகையின் ஒழுக்கங்களில் ஒன்று தொப்பி அணிவது என மத்ஹபுகளின் எந்த ஆதாரப்பூர்வமான, தீர்ப்பளிக்க தகுந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது? அப்படி எங்கும் கூறப்படவில்லையே! அப்படி இருக்க நாம் அதை சட்டமாகவும், கட்டாயமாகவும் ஆக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

நபி(ஸல்) தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதற்கு சில ஆதாரங்களைச்  சொல்பவர்கள் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த ஆதாரங்களை பார்க்கும்போது தொப்பியைவிட தலைப்பாகை அணிவதைத்தான் கட்டாயமாக்க வேண்டும். ஆனால் தொப்பி அணியக்கூறும் எவரும் தலைப்பாகைக்கு ஏன் முக்கியத்துவம் அளிப்பதில்லை? தொப்பி அணிய வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் எங்கும் கூறவில்லை. ஆனால் தாடி நீளமாக வைக்கவேண்டும் என்று பல இடங்களில் வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள். எனவே தாடி வைக்காதவர்களையும் அல்லது தாடியை குறைப்பவர்களையும் பள்ளிக்குள் வரக்கூடாது என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா? இக்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆலிம்கள் தாடியை குறைப்பவர்களாகவும், பள்ளி நிர்வாகிகள் தாடியை சிரைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களை கண்டித்து புத்தகம் எழுதவோ, பள்ளிவாயிகளில் போர்டு போடவோ தைரியம் இருக்கிறதா?

மத்ஹபுகளை சார்ந்து ஒரு காரியத்தை செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று நாம் வாதிட்டால் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் சட்டப்படி விரலை ஆட்டவேண்டும். அதை ஏற்றுக்கொள்வோமா? இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் சட்டப்படி உடலில் கட்டாயமாக மறைக்க வேண்டியது முன்பின் இரு பகுதிகள் மட்டுமே. தொடை அவ்ரத் அல்ல. அப்படி மாலிக்(ரஹ்) அவர்களின் மத்ஹபைச் சேர்ந்தவர் வந்து தொழுதால் அனுமதிப்போமா? இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் சட்டப்படி காலணி சுத்தமாக இருக்கும்போது அணிந்துதான் தொழவேண்டும். இதை நாம் பள்ளிவாசல்களில் அங்கீகரிப்போமா?

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். அல்குர்ஆன் 3:103

ஆகவே ஒரே மார்க்கத்தில் இனைந்துவிட்ட நாம் ஏன் சில கருத்து வேற்றுமைக்காக மீண்டும் எதிரிகளாக்கிக் கொள்ளவேண்டும். இமாம்களை ஒரு கூட்டம் குறை கூறினால் அதன் தண்டனையை அவர்கள் மறுமையில் அனுபவித்துக் கொள்ளட்டும்.

நபி(ஸல்) அவர்களே தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஏசி துன்புறுத்திய முனாபிக்குகளைக் கூட பள்ளிக்குள் வரக்கூடாதென்று தடுத்ததில்லை. வஞ்சித்ததும் இல்லை. கஃபத்துல்லாஹ்வைவிட மதினாவின் பள்ளியைவிட நமது பள்ளிகள் உயர்வானதல்ல. எனவே நபி(ஸல்) அவர்களை நாம் பின்பற்றுவது உண்மையென்றால் கலிமா சொன்ன எவரையும் தடுப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. கலிமா சொன்ன நமக்கு பள்ளிவாசலில் என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கலிமா சொன்ன அனைவருக்கும் இருக்கிறது என்று எல்லோருக்கும் விளங்கவேண்டும். நபி(ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளாத ஷியா, போராக்கள் கூட இன்று கஃபத்துல்லாஹ் மற்றும் மஸ்ஜிது நபவிக்கு வருவதையும் அவர்கள் தடுக்கப்படாததையும் நாம் பார்க்கிறோம். இறுதியில் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியை நாம் நினைவில் நிறுத்துவோம்.

நீங்கள் உங்களுக்குள் துண்டித்து வாழாதீர்கள்; புறக்கணித்து வாழாதீர்கள்: கோபம், வெறுப்பு கொள்ளாதீர்கள்: பொறாமைப்படாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டபடி சகோதரர்களாக ஆகிவிடுங்கள். நூல்: முஸ்லிம்

ஆழ்ந்து சிந்தித்து இதுபோன்ற பிரிவினைகளையும் பினக்குகளையும் ஏற்படுத்தும் அறிவிப்புகளை பள்ளிவாசல்களிலிருந்து அகற்றுமாறு சங்கைமிகு இமாம்களையும், மதிப்புமிகு ஜமாஅத்தார்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது விஷயத்தில் உலமா சமுதாயம் மக்களுக்கு நடுநிலையுடன் சத்தியத்தை எடுத்துரைக்கக் கோருகிறோம்.

நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். அல்குர்ஆன் 8:46

இறை நம்பிக்கையாளர்களின் வழிமுறைகள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இறை நம்பிக்கையாளர்கள் யார் எனில் அவர்கள் குர்ஆனையும், சுன்னாவையும் தங்கள் வாழ்வினிலே முழுமையாகக் கடைபிடிப்பவர்களாவார்கள். அதாவது முஸ்லிமான ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் அவர்கள் குர்ஆனுக்கு அடுத்ததாக தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாக நபி(ஸல்) அவர்களது வழிமுறைகளான ஹதீஸ்களையும் பின்பற்றுவது என்பது இறைவனால் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஹதீஸுக்கு மாற்றமாக யார் நடந்தாலும் அவர்கள் பாவமான கரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதாகும்.

ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆனையும், சுன்னாவையும் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற இறைவனின் கட்டளையை மதிக்கின்றார்கள். அதனைத் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்த ஆர்வம் கொள்கின்றார்கள். ஆனால் இதற்கிடையே மத்ஹபுகள் வந்து குறுக்கிடும் போது, இறைக்கட்டளையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தில் தடையொன்று ஏற்படுகின்றது. மத்ஹபுகள் குறுக்கிடாத வரை அவர்களது நோக்கத்தில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் :

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் : 4:59)

மார்க்க விஷயத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டால், உடனே அவர் தன்னுடைய கவனத்தை ஹதீஸின் பக்கம் செலுத்த வேண்டும். அதிலிருந்து தனக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்யவேண்டும். ஒரே விதமான பிரச்னைக்கு பல்வேறு விதமான கருத்துக்களை இமாம்கள் வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், வாழ்வியல் நடைமுறைகளான நபி(ஸல்) அவர்களுடைய ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது? மத்ஹபுகளை அறிவித்த இமாம்களும், இன்றுள்ள உலமாப் பெருமக்களும் நம்மைப் போல, அறிந்தோ அறியாமலோ தவறுதலாக வெளியிட்டு விடக்கூடிய சாதாரண மனிதர்களேயாவார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் இறைவனால் பாதுகாக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவ்வளவு உண்மைகளைத் தெரிந்திருந்தும் ஒருவர் மீண்டும், தான் ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களைக் கொண்ட மத்ஹபுக் கொள்கைகளையும், அதன் இமாம்களையும், அதில் உள்ள உலமாக்களையும் தான் நான் பின்பற்றுவேன் எனச் சொன்னால், அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய நடைமுறைகளைக் கொண்ட ஹதீஸ்களை மதிக்கவில்லை என்றே நாம் கருத வேண்டியிருக்கின்றது.

முஸ்லிம் குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுக் கொண்டு, அவற்றின் உள்அர்த்தங்களை விளங்கிச் செயல்படுவது என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். மேலும், இவற்றிலிருந்து எவற்றைச் செய்யலாம், எவற்றைச் செய்யக் கூடாது என்பதையும் தெளிவாகக் கற்றுணர்ந்து செயல்பட வேண்டும். மேற்கண்டவற்றை ஒருவர் தன்னால் செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பாரேயானால், அவர் அவற்றை விளக்கிச் சொல்லக்கூடிய அறிஞரை அணுகி, அவற்றை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் உள்ள மனிதர் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே பின்பற்றி, அவரது கருத்துக்களுக்கு மட்டுமே மதிப்பளிப்பேன், செயல்படுத்துவேன் எனக்கூற இயலாது. இவ்வாறு செய்வதால் அந்த இமாமை நபிமார்களுக்கு சமமாகக் கருதிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.

முஸ்லிம்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டவர்கள் என்றில்லாமல், ஒரே வழிமுறையைப் பின்பற்றுபவர்கள் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சரியாகும். அல்லது இந்த மத்ஹபு சரியில்லை, அதனால் இதை விட்டு விட்டு வேறு மத்ஹபுக்கு மாற்றிக் கொள்வதோ அல்லது இன்னும் பல்வேறு பிரிவுகளை ஏற்றுக் கொள்வதோ அல்லது தங்களுடன் இணைத்துக் கொள்வதோ சரியான வழிமுறையல்ல. கண்மூடித்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள் ஏன்? எதற்கு? என்ற காரணங்களை அறியாமல், அறிவுக்கு வேலை கொடுக்காமல், சந்தேகத்திற்கிடமான வழிகளில் நகைப்புக்கிடமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இறைவன் கூறுகிறான்:

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (அல் குர்ஆன் 4:65)

இந்த மத்ஹபு அபிமானிகள் நபி முஹம்மது (ஸல்) அவர்களது தோழர்களை விட இமாம்களை மிகவும் மதிப்புமிக்கவர்களாகவும், கண்ணியமானவர்களாகவும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களது இமாம்களின் கூற்றுக்கு நெருக்கமாக ஒரு ஹதீஸ் கிடைக்கப் பெற்று விட்டால், அந்த ஹதீஸைக் காட்டி தங்களது இமாம்களின் கருத்துக்கு வலுச் சேர்க்கினறனர். அதே போல் ஒரு ஹதீஸ் இன்னுமொரு இமாமின் கருத்துக்கு மிக நெருக்கமாக இருக்குமேயானால், அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். எந்தவொரு ஹதீஸ் அவர்களது இமாம்களின் கருத்தை ஆதரிக்கவில்லையோ அந்த ஹதீஸை உதாசினம் செய்து விடுகின்றனர், தேவையற்றது என்று ஒதுக்கி விடுகின்றனர். ஆதரப்பூர்வமான அந்த ஹதீஸை ஏற்றுச் செயல்படுவதை விட்டுவிட்டு, தங்களது இமாம்களின் கூற்றுத்தான் சிறந்தது எனக் கூறி, அவர்களது இமாம்களுக்கு ஆதரவாக வாதாடவும் ஆரம்பித்து விடுகின்றனர்.

சில வேளைகளில் தங்களது இமாம்களின் கூற்றுக்கு ஆதரவாக ஹதீஸ்களின் அர்த்தங்களை மாற்றியும், இமாம்களின் கூற்றுக்கு ஏற்ப வளைக்கவும் முயற்சி செய்கின்றனர். அவ்வாறு செய்ய இயலவில்லை எனில், எந்த வித வாதபிரதி வாதங்களுக்கும் அந்த ஹதீஸை உட்படுத்தாமல், அவற்றை ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யாமல், அவற்றைத் தள்ளுபடி செய்வதற்குண்டான எந்த வித ஆதாரமும் இல்லாத நிலையிலேயே தள்ளுபடி செய்து விடுகின்றனர். கண்மூடித்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றும் இத்தகையவர்கள் தங்கள் இமாம்களுக்கெதிராக கூறப்படும் எந்தவித வித கருத்தையும் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றை சீர்தூக்கிப் பார்த்து, அவற்றை ஏற்றுக் கொள்ளவோ அல்லது அவற்றை நிராகரிக்கவோ சம்மதிப்பதில்லை. இந்த மத்ஹபுகளின் கருத்துக்கு எதிராக குர்ஆனில் இருந்தும், ஹதீஸ்களில் இருந்தும், மறுக்க முடியாத வகையில் அமைந்த தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தாலும், அந்த ஆதாரங்களை அவர்கள் ஏற்க மனமில்லாமல், தங்கள் மன இச்சைப்படி நடந்து கொள்கின்றனர்.

உண்மையிலேயே உண்மையைத் தேடுகின்ற முஸ்லிமானவன் செய்ய வேண்டியது என்னவென்றால், தவறிழைத்து விடக் கூடியவைகளிலிருந்தும், நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி விடக் கூடியவைகளிலிருந்தும் நாம் நம்மைத் தடுத்துக்கொள்ள வேண்டும். இமாம்களின் கருத்துக்களிலிருந்து நமக்கு எது சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையோ மற்றும் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மாற்றமாக இல்லாமல், இவற்றின் கொள்கைகளுக்கு மாறுபடாமல் இருக்கின்றதோ அவற்றைப் எடுத்துச் செயல்படுத்துவதும், இவற்றிற்கு மாறுபட்டவைகளைப் புறக்கணித்து விடுவதும் தான் உண்மையான முஸ்லிமிற்கும், சத்தியத்தைத் தேடக் கூடியவனுக்கும் உள்ள நல்ல அடையாளங்களாகும். குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மாற்றமான வகையில் எந்த அறிஞரோ அல்லது சூபியோ அல்லது நீதிபதியோ சொன்னாலும், அதை யார் சொன்னார்கள் எனப் பார்க்காமல், அது தவறானது என்று அறிந்து கொண்ட மாத்திரத்திலேயே அவற்றைப் புறக்கணித்து விடவேண்டும். யார் இந்த அளவு கோள்களை எல்லாம் புறக்கணித்து விடுகின்றார்களோ அவர்கள், மிகப் பெரியதொரு நஷ்டத்திலே இருக்கின்றார்கள்.

இஸ்லாமிய சட்ட முடிவுகளுக்கும் அதன் வரையறைகளையும் மீறக் கூடிய அளவில் இமாம்களின் கருத்துக்கள் இருந்தாலும். அவற்றை விட்டு நீங்காமல் ஒருவர் மீண்டும் அந்தத் தவறான கொள்கைகளின் வழியே தன்னுடைய அமல்களை செயல்படுத்தி வருவாரேயானால், அவரது அணுகு முறை முற்றிலும் தவறானதும், அவர் வழிகேட்டில் இருக்கின்றார் என்றும் கருதப்படும். அவர் இமாம்களைப் பின்பற்றுகின்றார் என்று கூறுவதை விட அவர் தன்னுடைய மன இச்சையின் பிரகாரம் தன்னுடைய அமல்களைச் செயல்படுத்திக் கொள்கின்றார் என்றே கருதப்படும். இவர்களின் இத்தகைய தவறான செயல்களுக்காக இமாம்கள் பொருப்பேற்கக் கூடியவர்களல்லர். அவர்கள், குர்ஆனையும், சுன்னாவையும், இரண்டுக்கும் முரண்படாத தெளிவான இஸ்லாமியச் சட்டங்களையும் தான் வழுவாது பின்பற்ற வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திக் கூறிச் சென்றுள்ளார்கள்.

எனவே, இவர்கள் தங்களையும் வழிகேட்டில் தள்ளிக் கொண்டு, பிறரையும் வழிகேட்டில் இட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.; இறைவனால் நமக்கு அனுப்பி வைக்ககப்பட்ட நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் பெறப்பட்டவைகள் மட்டும் தான் உண்மையும், சத்தியமும், நேர்வழியும் ஆகும். மேலும், குர்ஆனில் இருந்தும், ஹதீஸ்களில் இருந்தும் தெளிவான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்ற பின்பும், என்னுடைய இமாம் கூறிய கருத்தைத்தான் பின்பற்றுவேன் என்று கூறி ஒருவர் மத்ஹபையே பின்பற்றுவாரானால், அவர் தவறிழைக்கின்றார் என்பதை விட அவர் எந்த மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றாரோ அந்த மத்ஹபை விட்டு வெளியேறியவராகவும், எந்த இமாமைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றாரோ அந்த இமாமினுடைய கருத்திற்கு மாறு செய்தவராகவும் ஆகிவிடுகின்றார்.

இவருடைய நிலையில் இன்று இவர் பின்பற்றக் கூடிய இமாம் உயிருடன் இருக்கும் பட்சத்தில், அவர் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிடைத்த மாத்திரத்தில், அவருடைய கருத்தை மாற்றிக் கொண்டு, அந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையே பின்பற்றுவாரே ஒழிய, இவரைப் போல் கண்மூடித்தனமான குருட்டுத்தனமான வகையில் மத்ஹபு மாயையில் உழன்று கொண்டிருக்க மாட்டார். இத்தகைய நிலையில், உண்மையை அறிந்த பின்பும் ஒருவர், இஸ்லாத்திற்கு மாற்றமான வகையில் இருக்கும் மத்ஹபு மாயையில் தன்னை உட்படுத்திக் கொள்வாரேயானால், அவர் தன்னுடைய இறைவனுக்கும், அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கும் எதிராக போர் தொடுக்கின்றான் என்றே பொருளாகும்.

இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :

(நபியே!)எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (அல்குர்ஆன் 45:23)

மத்ஹபுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களும், அதன் அபிமானிகளும் தங்கள் சிந்தனைச் சக்தியைப் பயன்படுத்தாமல், அறிவு மழுங்கியவர்களாகவும், அறிவுக் குருடர்களாகவும், எது நேர்வழி என்பதை அவற்றை அவர்களுக்கு உணர்த்திய பின்பும், எது சிறந்த வழி, எது தவறான வழி என்பதை அறிந்த கொள்ள இயலாமல், அதற்கான முயற்சிகளைச் செய்யாமல் இருக்கக் கூடிய இவர்களது போக்கு, உண்மையிலேயே ஒளியை அகற்றி விட்டு இருளிலே நடக்கக் கூடியவர்களுக்கு ஒப்பாகத் தான் இருக்கின்றது

(தவறான வழியில் செல்வதில் இருந்தும் இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக! நாம் நேர்வழி பெறுவதற்கு இறைவன் வழிகாட்டுவானாக!) ஆமீன்!

தொடர்ந்து படிக்க…
இமாம்களும் குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்றச் சொல்கிறார்கள்

தஸ்பீஹ் மணி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

தஸ்பீஹ் மணி இதனை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, எல்லாம் வீடுகளிலும் இது இருக்கும். ஹஜ்ஜிற்கு செல்பவர்கள் ஜம் ஜம் தண்ணீருடன் தஸ்பீஹ் மணியையும் வாங்கி வந்து தங்கள் உறவினர் அன்பர்களுக்கு கொடுத்து மகிழ்வர். நம்மில் சிலர் தஸ்பீஹ் மணியை ஓதி எண்ணி முடித்தவுடன் கண்ணில் ஒற்றி முத்தமிடவும் செய்கிறார்கள். ஒரு சிலர் இதனை பேசிக்கொண்டே உருட்டிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் தஸ்பீஹ் மணிக்கு பதிலாக டிக் டிக்கென்று மிஷினை அழுத்தி கொண்டிருப்பார்கள். மேலும் ஒளு இல்லாமல் தஸ்பீஹ் மணியைத் தொடக்கூடாது என்ற பழக்கமும் உள்ளது. இந்துக்களின் உத்திராட்ச மாலை, கிறிஸ்தவர்களின் ஜபமாலை இருப்பது போன்று முஸ்லிம்களிடம் இந்த தஸ்பீஸ் மணி மிக கண்னியப்படுத்தப்படுகின்றது. முஸ்லிம்களும் இதை இஸ்லாமிய நடைமுறைதான் என்று எண்ணியிருக்கிறார்கள். இது நம் நடைமுறைதானா? நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த பழக்கமா என்பதை நம்மில் பலர் சிந்திப்பதில்லை.

இன்றைய தஸ்பீஹ் மணியுடைய இடத்தில் கற்களைக் குவித்து, ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு அன்றைய சில நபித்தோழர்கள் தஸ்பீஸ் செய்ததாக இரு ஹதீஸ்கள் உள்ளன. அவை மிக மிக பலஹீனமானவையாகும். ஆதாரப்பூர்வமான நபிமொழிப்படி இது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அநாச்சார (பித்அத்) செயலாகும். அதன் விளக்கத்தை பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தஸ்பீஹ் செய்யும்போது தங்களின் வலது கைவிரல்களால் எண்ணுவதை நான் கண்டிருக்கிறேன் என அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி, ஹாகிம், பைஹகீ

இதன் மூலம் நபி(ஸல்) தஸ்பீஹ் செய்ய தனது கை விரல்களையே உபயோகிப்பது தெளிவாகிறது. இதற்குக் காரணம் அல்லாஹ்வும், அவனது ரசூலும் நமக்கு தெளிவாக்குவது கவனிக்கத்தக்கது.

“அந்நாளில் அவர்களின் வாய்கள்மீது முத்திரையிட்டு விடுவோம். மேலும் அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; அவர்களின் கால்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப்பற்றி சாட்சி சொல்லும்”  (அல்குர்ஆன் 36:65)

மேற்படி குர்ஆன் வசனப்படி கைகளும் கால்களும் பேசுமென்றால் நாம் உபயோகிக்கும் தஸ்பீஹ் மணி மட்டும் பேசாதா? என குதர்க்கவாதம் செய்பவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

தஸ்பீஹ் செய்கையில் நீங்கள் விரல்களால் எண்ணுங்கள். ஏனெனில், அந்த விரல்களும் (அல்லாஹ¤வால்) விசாரிக்கப்பட்டு பேச வைக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: அபூதாவூது, ஹாகிம்

அடுத்து சிலர் தஸ்பீஹ் மணியை கண்ணியப்படுத்துவதற்காக கண்ணில் ஒற்றிக்கொள்வதும் ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில் மதிப்பிடுவதற்காக மிஷினை கையில் வைத்து எண்ணிகொள்வதும் நபி வழி அல்ல. மாற்று மதத்தவர்கள் தங்களது ஜபமாலைகளை கண்ணியப்படுத்துவதைக் கண்டு காப்பியடித்த வழக்கமாகும். இவர்கள் கண்ணியப்படுத்தும் தஸ்பீஹ் மணிகளை நமது நபிவழி சஹாபிகள் அவமதித்து இருப்பதை காணலாம்.

நபித்தோழர்களில் பேரறிஞராக கணிக்கப்படும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) ஒரே வழியில் இரு செய்கைகளை கண்ணுற்றார்கள். ஒரு பெண்மணி தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தாள். இதனைக் கண்ட அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) அவர்கள் அதனைப் பிடுங்கி அறுத்தெறிந்தார்கள்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஒருவர் சிறிய கற்களைக் குவித்து வைத்து அதன் மூலம் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார். அதனைத் தன் காலால் எட்டி உதைத்து விட்டு,

“நீங்கள் நபித்தோழர்களைவிட கல்வியில் மிஞ்சிவிட்டீர்களா? அவர்களைவிட முந்தி விட்டீர்களா? இல்லை! நீங்கள் அனாச்சாரம் (பித்அத்) என்ற வாகனத்திலேயே சவாரி செய்கிறீர்கள்” என வன்மையாகக் கண்டித்தார்கள். இந்த நிகழ்ச்சியை சல்து இப்னு பஹ்ராம்(ரழி) அறிவித்ததாக இமாம் குர்துபீ அவர்கள் தனது ‘பித்அத்துகள்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இப்பழக்கத்தை விட்டொழித்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வதே சிறந்ததாகும்.

அல்லாஹ் அல்லாதவைகளுக்கு நேர்ச்சை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

சிலர் கப்ருகளுக்கு விளக்கேற்றுகிறோம், பத்தி கொளுத்துகிறோம் என்றெல்லாம் நேர்ச்சை செய்து கொள்கிறார்கள். நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்குரிய வணக்கமாகும். அதை அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். நேர்ச்சையும் வணக்கமே என்பதற்கு பின்வரும் வசனம் சான்றளிக்கிறது.

وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُون 046.005

…..இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றி வைத்தனர். நீண்ட வேதனையுடைய நாளுக்கும் பயந்து கொண்டிருந்தனர். அன்றி, அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் ஆகாரமளித்தும் வந்தனர். (அல்குர்அன் 76:7,8)

وَمَا أَنْفَقْتُمْ مِنْ نَفَقَةٍ أَوْ نَذَرْتُمْ مِنْ نَذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَار 002.270ٍ

(நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும், அல்லது நீங்கள் என்ன நேர்த்திக் கடன் செய்தபோதிலும், நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிகிறான். அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் (ஒருவருமே) இல்லை. (அல்குர்அன் 2:270)

அல்லாஹ் அல்லாதவைகளுக்கு அறுத்துப் பலியிடுவது “ஷிர்க்” அகும்
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

108.002 فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

நீர் உமது இறைவனைத் தொழுது குர்பானி (செய்து) கொடுத்து வாரும். (அல்குர்அன் 108:2)

நபி அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் அல்லாதவைகளுக்கு அறுத்துப் பலியிடுபவனை அல்லாஹ் சபிக்கிறான்.” (ஸஹீஹ முஸ்லிம்)
இவ்வாறு பலியிடுவதில் இருவகையான குற்றம் உள்ளது.
1) அல்லாஹ் அல்லாதவைகளுக்காக அறுத்துப் பலியிடுவது.
2) அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரைக் கூறுவது.
இந்த இரண்டுமே ஹராமாகும்.

சிலர் ஒரு வீட்டையோ நிலத்தையோ வாங்கினால் அல்லது கிணறு தோண்டுவதாக இருந்தால் அங்குள்ள ஜின்(பேய், பிசாசு)களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புத் தேடுவதாக எண்ணி பிராணிகளை அறுத்துப் பலியிடுகிறார்கள். இதுவும் ஷிர்க்கான செயலாகும்.

அல்லாஹ் விலக்கியதை அகுமாக்குவது, அல்லாஹ் அகுமாக்கியதை விலக்கிக் கொள்வது “ஷிர்க்” அகும்
அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவது, அல்லாஹ் ஆகுமாக்கியதை விலக்கிக் கொள்வது அல்லது அல்லாஹ்வைத் தவிர பிறருக்கும் இவ்வுரிமை உண்டென நம்புவது அல்லது ஷரீஅத்தின் தீர்ப்பை விட்டுவிட்டு அது அல்லாத வேறு வகையான தீர்ப்புகளை (எவ்வித நிர்பந்தமுமின்றியே) தேடிச்செல்வதுடன் அதை அனுமதிக்கப்பட்டதாகவும் நம்புவது என இவையனைத்தும் சமுதாயத்தில் பரவி நிற்கும் ஷிர்க்கான காரியங்களாகும்.
இவையனைத்தும் ஷிர்க் என்பதற்கு பின்வரும் திருவசனம் சான்றாகும்.

اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ 009.031

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். (அல்குர்அன் 9:31)

அதீ ஆப்னு ஹாதிம் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி அவர்கள் இவ்வசனத்தை ஒதிக் காட்டியபோது “கிறிஸ்துவர்கள் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் வணங்கவில்லையே’ என்று நான் கேட்டேன். அதற்கு நபி அவர்கள் “ஆம்! எனினும் அல்லாஹ் விலக்கியதை பாதிரிகள் ஆகுமாக்கி வைக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள். அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள் விலக்கப்பட்டதாக எற்றுக் கொள்கிறார்கள். எனவே இதுதான் கிறிஸ்துவர்கள் தங்களது பாதிரிகளுக்கும் துறவிகளுக்கும் செய்த (இபாதத்) வணக்கமாகும்.” என்றும் கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)

உதவி தேடுதல்?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்று முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் இறந்துபோன அவுலியாக்களான இறைநேசர்களிடம் உதவி தேடலாம்; அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்ற தவறான நம்பிக்கையில் “தர்கா” என்ற பெயரால் படையெடுக்கின்றனர். இந்தப் பெரும்பாலான சமாதிகளுக்கு(தர்கா) சரியான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அந்த சமாதிகளில் போய் தங்கள் தேவைகளுக்காக உதவி தேடுவதை அவர்களும், அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முகல்லிது மவ்லவி புரோகிதர்களும் சரி கண்டு நியாயப்படுத்தி வருவது பெரும் வேதனை தரும் விஷயமாகும். காரணம் முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரும் கொண்ட மக்கள் இந்த வழிகேட்டின் காரணமாக நாளை மறுமையில் தங்களின் இருப்பிடத்தை நரகில் தேடிக்கொள்கின்றனர் என்று தெளிவாகக் கூறும் அல்குர்ஆன் அல்கஹ்ஃபு 18:102-106 இறைவாக்குகளை – எச்சரிக்கைகளைத் துணிவுடன் இவர்கள் நிராகரிக்கின்றனர் என்பதுதான்.

அதற்கு மேலும் வேதனை தரும் விஷயம் இந்த முகல்லிது மவ்லவிகள், கேவலம் அழிந்து போகும் இந்த அற்ப இவ்வுலக வாழ்க்கையில் தங்களின் ஒரு ஜான் வயிற்றை நிரப்ப, இவ்வளவு தரம் தாழ்ந்து அறிவுக்கே பொருந்தாத கற்பனை உதாரணங்களைக் கூறி அல்லாஹ் அல்குர்ஆன் லுக்மான் 31:6 -ல் எச்சரித்திருப்பதையும் கண்டு கொள்ளாமல் மனம் துணிந்து மக்களை ஏமாற்றி வருவதுதான்.

மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிசாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையயோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு. (31:6)

தர்கா, தரீக்கா முகல்லிது மவ்லவிகளின் இப்படிப்பட்ட அறிவீனமான வாதம் வருமாறு:

அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய ரப்பு; அவனே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து தருகிறவன் என்பதில் உங்களை விட எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. இந்த அவுலியாக்களின் மூலம் தருகிறான் என்றே கூறுகிறோம். நம்முடைய தேவைகளுக்காக அவுலியாக்களிடம் உதவி தேடிச் செல்வது தவறு என்றால், நமது மருத்துவ தேவைக்காக டாக்டர்களிடம் உதவி தேடிச் செல்வதும் தவறுதான்; வழக்கு சம்பந்தமாக வக்கீல்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; கட்டிட தேவைக்காக பொறியாளர்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; பணக்கஷ்டம் ஏற்பட்டால், நம்மைப் போன்ற மற்ற மனிதர்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; இப்படிப்பல தரப்பட்ட நம்முடைய தேவைகளுக்காக மற்றவர்களிடம் உதவி தேடாமல் அல்லாஹ்விடம் மட்டுமா உதவி தேடுகிறோம்? இங்கெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவதை சரி கண்டு ஏற்கும் இவர்கள், அவுலியாக்களிடம் உதவி தேடுவதை மட்டும் ஏன் மறுக்கிறார்கள்? அதை ஷிர்க்(இணை வைப்பு) என்கிறார்கள். நாங்கள் ஷிர்க் செய்கிறோமா? அல்லது அவர்களுக்குக் கிறுக்குப்பிடித்திருக்கிறதா? என்று கேட்டு தங்களை நம்பியுள்ளவர்களை ஏமாற்றி நரகில் தள்ளுகிறார்கள். அந்த அப்பாவி மக்களும் தங்களின் சிந்தனையை இந்த முகல்லிது மவ்லவிகளிடம் கடன் கொடுத்து விட்டு, அல்லாஹ் 31:6-ல் கூறியுள்ளது போல், அவர்களின் அறிவில்லாத வீணான பேச்சுக்களை இறைவாக்காக ஏற்று, அதன்படிச் செயல்பட்டு, நாளை மறுமையில் தங்களின் இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்கின்றனர்.

இந்த முகல்லிது புரோகித மவ்லவிகள் மனந்துணிந்து அறிந்த நிலையில் செய்யும் ஹிமாலயத்தவறு என்ன தெரியுமா? அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கக் கூடிய உதவியான “இஸ்திஆனத்” (பார்க்க அல்ஃபாத்திஹா 1:4) என்பதற்கும், மனிதர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் “தஆவுன்” (பார்க்க அல் மாயிதா 5:2) என்பதற்குமுள்ள ஹிமாலய வேறுபாட்டை தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிப்பதுதான். இதையும் அல்லாஹ் அல்குர்ஆன் அல்பகரா 2:75 -ல் “இவர்களில் ஒரு சாரார் இறைவாக்கைக் கேட்டு, அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்” என்றும், அல்குர்ஆன் பக்ரா 2:146 மற்றும் அன்ஆம் 6:20-ல் கூறுவதுபோல் சத்தியத்தை அறிவார்கள்; அறிந்த நிலைமையிலேயே அதை மறைப்பார்கள் என்றும் அப்பட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளான்.

எனவே எமது இந்த விளக்கங்கள் இந்தப் புரோகித மவ்லவிகளின் உள்ளங்களில், அவர்கள் புரோகிதத்தில் நிலைத்திருக்கும் வரை, அதாவது மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் வரை கடுகளவும் மாற்றத்தை ஏற்படுத்தாது, இதை அல்குர்ஆன் யாஸீன் 36:21 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. எனவே அவர்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்களே இந்த விளக்கங்களை நடு நிலையோடு படித்து சிந்தித்து விளங்கி நேர்வழி பெற முன் வரவேண்டும்.

சூரத்துல்ஃபாத்திஹா 1:4 -ல் காணப்படும் “இஸ்திஆனத்” என்ற உதவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவி அல்ல; மேலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் உதவி நினையாபுரத்திலிருந்து கிடைப்பதாகும். அதற்குரிய காரணகாரியத்தைத் துள்ளியமாக அறிய முடியாது. இந்த உதவியை அல்லாஹ் அல்லாத யாரிடமும் அவர்கள் இறந்து போன அவுலியாக்களாக இருந்தாலும், உயிரோடிருப்பவர்களாக இருந்தாலும் கேட்க முடியாது. அது ஷிர்க்காகும்; இணை வைப்பாகும். அதற்கு மாறாக “தஆவுன்” என்ற உதவி உயிரோடிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்வதாகும். 5:2 இறைவாக்கைப் படித்துப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும். இந்த உதவி காரண காரியங்களுடனேயே நிறைவேறும்.

உதாரணமாக ஒரு மருத்துவரிடம் சென்று நமது வியாதி பற்றி முறையிடுகிறோம். அவர் காது கொடுத்து கேட்கிறார். தனது சந்தேகங்களை வாய்திறந்து கேட்கிறார். பரிசோதனைக்கருவிகள் மூலம் பரிசோதித்து விளங்குகிறார். வியாதியை முடிவு செய்து மருந்து தருகிறார். அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்கிறார். அவர் கொடுத்த மருந்தை அல்லது கடையில் வாங்கி அதைச் சாப்பிடுகிறோம். இவை அனைத்தும் காரண காரியங்கள். இந்த மருத்துவரிடம் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சென்று அவரிடம் வியாதியைச் சொல்லி வைத்தியம் செய்து கொள்கிறோம். நோயாளிகளில் இருவர் கூட ஒரே நேரத்தில் அவர்களின் வியாதி பற்றி முறையிட்டால், அவரால் அதைக் கேட்கவும் முடியாது; முறையாக விளங்கி மருந்து தரவும் முடியாது. இந்த நிலையில் ஏக காலத்தில் பலர் முறையிட்டால் அவரது நிலை என்னவாகும்? அதுபோல் அந்த மருத்துவர் நனடறாகத் தூங்கிக்கொண்டிருக்கும் போதும், நோயாளியின் குறைபாட்டைக் கேட்டு அதற்கு மருத்துவம் செய்ய முடியாது.

இந்த பலகீனங்கள் மருத்துவர், வழக்குரைஞர், பொறியாளர் இதுபோல் உதவி செய்யும் அனைத்து மனிதர்களிடமும் காணப்படவே செய்யும். ‘தஆவுன்’ என்ற பரஸ்பர உதவி செய்தலின் நிலை இதுதான்.

இன்னும் ஓர் உதாரணம்:

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அவுலியாவை – இறைநேசரையே எடுத்துக் கொள்வோம். அவர் மக்களிடம் மிகமிக அதிகமாக அன்பு காட்டுகிறவர். தன்னிடம் வந்து யார் எந்த உதவி கேட்டாலும் மறுக்காமல் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுப்பவர். மக்களுக்கு உதவி செய்வதையே தனது கொள்கையாகக் கொண்டவர். அப்படிப்பட்ட உயர்ந்த இறைநேசர்; அவரிடம் போய் முறையிட்டு உதவி தேடுகிறவர்கள் ஒவ்வொருவராக, தனித்தனியாக மட்டும் சென்று தான் உதவி கேட்க வேண்டும். எல்லோரும் ஒரே நேரத்தில் உதவி கேட்டால், யாருடைய அழைப்பையும் அவரால் கேட்க முடியாது என்பதையும் இந்த மவ்லவிகள் மறுக்க முடியாது.

மேலும் அந்த அவுலியா – இறைநேசர் மரணிக்கவில்லை. சிறு மரணம் என்று சொல்லக்கூடிய கடுமையான உறக்கத்தில் இருக்கிறார். இந்த நிலையில் யாரும் கூட்டாக அல்ல தனியாக அவரது தலைமாட்டில் போய் நின்றுகொண்டு, தங்களுடைய கஷ்டங்களைக் கூறி உதவி கேட்கிறார்கள் கஷ்டங்களைக் கூறி உதவி கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த அவுலியாவால் அவர்களில் இந்த தனி மனிதரது அழைப்பையேனும் செவியேற்று அவருக்கு வேண்டிய உதவியைச் செய்ய முடியுமா? நிச்சயமாக தூக்கத்தில் அவரால் உதவி செய்ய முடியாது என்பதையும் இந்த புரோகித மவ்லவிகளால் மறுக்க முடியாது.

இந்த நிலையில் அந்த அவுலியா பெரிய மெளத் என்ற நிரந்தர மரணத்தை அடைந்து, அவருக்காக ஜனசா தொழுகை தொழுது, குழி தோண்டி மண்ணுக்குள் அடக்கம் செய்த பின்னர், அந்தப் புதைகுழியின் தலைமாட்டில் போய் நின்று கொண்டு உதவி தேடினால் அவரது சடலத்தால் உதவி செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது என்பதையும் மறுக்க முடியாது.

அப்படியானால் இந்த முகல்லிது மவ்லவி புரோகிதர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டு, மண்ணுக்கடியில் சென்றவர்களிடம் உதவி தேட முடியும் என்று கூறுவது எந்த அடிப்படையில்? தஆவுன் என்ற பரஸ்பர உதவி அடிப்படையிலா? அல்லது படைத்து, உணவளிதது, பாதுகாத்து வரும் எஜமானன் அல்லாஹ்விடம் மட்டும் கேட்கும் இஸ்திஆனத் என்ற காரண காரியங்கள் காண முடியாத உதவியா? ஆம்! இந்த மூட முகல்லிது மவ்லவி புரோகிதர்கள், அவுலியாக்களுக்கும் தெய்வீக சக்தி இருக்கிறது. அத்துவைதம் என்ற மனிதனும் இறைவனுடன் இரண்டறக் கலந்து ஒன்றாக முடியும் என்ற இறைவனுக்கு இணை வைக்கும் (வஹ்தத்துல்வுஜூது) மூட நம்பிக்கையின் அடிப்படையில், ‘இஸ்திஆனத்’ என்ற அல்லாஹ்விடம் மட்டும் கேட்கும் உதவியைத்தான் இறந்து அடக்கம் செய்யப்பட்ட அவுலியாக்களிடம் கேட்க மக்களைத் தூண்டிவருகின்றனர்.

அல்குர்அன் 18:102 -106 இறை எச்சரிக்கைகளின்படி இஸ்திஆனத் என்ற அல்லாஹ்விடம் மட்டும் கேட்க வெண்டிய உதவியை, அவுலியாக்களிடம் கேட்பதன் மூலம், இறந்து போன் அந்த அவுலியாக்களை தங்களின் பாதுகாவலர்களாக – உதவி செய்பவர்களாக நம்புவதன் மூலம் இறை நிராகரிப்பவர்களாகி – காஃபிர்களாகி நரகம் புகும் நிலைக்கு ஆளாகிறார்கள். அவர்களின் தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ், தான தர்மம் இவை அனைத்தும் ஏற்கப்படாது. அவற்றிற்கு எவ்வித மதிப்பும் இல்லை. அவை அனைத்தும் வீணாகி விடும். நரகில் எறியப்படுவார்கள். அவர்களுக்காக நரகத்தைத் தயார் செய்து வைத்திருப்பதாக அல்லாஹ் தெளிவாக நேரடியாகவே இந்த 18:102 -10 வசனங்களில் கூறி எச்சரிக்கிறான்.

இந்த 18:102-106 இறைவாக்குகளை படித்துக்காட்டி தர்கா சடங்குகள் எவ்வளவு பெரிய பாராதூரமான கொடிய இணைவைக்கும் குற்றம் என்று சொன்னவுடன் இந்த முகல்லிது புரோகித மவ்லவிகள் என்ன சொல்லி மக்களை ஏமாற்றவார்கள் தெரியுமா?

இந்த 18:102 இறைவாக்கு “நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா”? என்று ஆரம்பிப்பதைக் காட்டி, இது முஸ்லிம்களுக்கல்ல; காஃபிர்களுக்கு இறங்கிய ஆயத்து; முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி, வஞ்சித்து வயிறு வளர்த்து வருகின்றனர். சுய சிந்தனையற்ற முஸ்லிம்களும், இவர்களின் இந்த நயவஞ்சகக் கூற்றை அப்படியே நம்பி, கத்தம், ஃபாத்திஹா, கூடு, கொடி, கந்தூரி, மீலாது, மெளலூது, யாகுத்பா, ஸலாத்து நாரியா என்ற நெருப்பு(நரக) ஸலவாத் இத்தியாதி, இத்தியாதி என நரகிற்கு இட்டுச் செல்லும் வழிகேட்டு சடங்குகளை பக்தி சிரத்தையோடு செய்து வருகின்றனர்.

இந்த புரோகித முகல்லிது மவ்லவிகளின் கூற்றுப்படியே, அல்லாஹ் நிராகரிப்பவர்கள் – காஃபிர்கள், அல்லாஹ் நிராகரிப்பவர்கள் – காஃபிர்கள் என்று சுட்டிக்காட்டுவது யாரைத் தெரியுமா? இப்றாஹீம் (அலை) இஸ்மாயீல்(அலை) ஆகிய சிறப்புக்குரிய இரண்டு நபிமார்களின் நேரடி வாரிசுகளாகும். அவர்கள், எந்த இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தை நம்மைப் பின்பற்றும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அந்த நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகள். எங்கள் தந்தை இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும், முஸ்லிம்கள் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு தான் உண்மையான அவுலியாக்களை – இறைநேசர்களை (இவர்கள் அவுலியாக்களாக்கியுள்ள குடிகாரர்களையும், பயித்தியங்களையும், கஞ்சா மஸ்தான், பீடி மஸ்தான், பீங்காட்டப்பா போன்றவர்களையும், கழுதைகளையும், கட்டைகளையும் அல்ல) தங்களின் பாதுகாவலர்களாகக் கொண்டு அவர்களிடம் உதவி தேடி வந்தனர். இந்த உண்மையை 10:18, 39:3 இறைவாக்குகளைப் பொருள் அறிந்து படித்து விளங்குகிறவர்கள் மறுக்காமல் ஒப்புக் கொள்வார்கள்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டும். தங்களை முஸ்லிம்கள் என்றும், தங்களின் தந்தை இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்ட குறைஷ்களை அல்லாஹ் காஃபிர் – நிராகரிப்பாளர்கள் என்று ஏன் கூறுகிறான்?

அப்படி நாம் சிந்தித்து விளங்கினால் நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது தங்களை முஸ்லிம்கள் என்றும், இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, அல்லாஹ்வின் அடியாளர்களான அவுலியாக்களைத் தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இடையீட்டாளர்களாக (MEDIATOR) அவர்களிடம் உதவி கோரினால் அல்லது அவர்களின் பொருட்டால் கேட்டால், அவர்கள் நிராகரிப்பாளர்களாக – காஃபிர்களாக ஆகிறார்கள். நரகத்திற்குரியவர்களாக ஆகிறார்கள். இதையே அல்குர்ஆன் 18:102 -106 இறைவாக்குகள் கடுமையாக எச்சரிக்கின்றன.

தன்னை முஸ்லிம் என்றும் இஸ்லாம் என்ற நேரிய மார்க்கத்தை மட்டுமே பின்பற்றுகிறேன் என்று சொல்லிக் கொள்ளும் உண்மை முஸ்லிம் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் அவுலியாக்களை ஒருபோதும் கொண்டு புகுத்தமாட்டார். உங்கள் பிடரி நரம்பைவிட நான் உங்களுக்கு நெருக்கமானவனாக இருக்கிறேன்; என்னிடமே உதவி தேடுங்கள் ‘இஸ்திஆனத்’ (பார்க்க அல்குர்ஆன் 1:4, 50:16, 2:45,153) என்று அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளைப் புறக்கணிக்காமல், அவற்றை மதித்து தன்னுடைய எந்தத் தேவையாக இருந்தாலும் அதை அல்லாஹ்விடமே முறையிடுவார். உலகக் காரியங்களில் இடைத்தரகர்களைப் பிடித்து குறுக்கு வழிகளில் – தவறான வழிகளில் லஞ்சம் கொடுத்து காரியங்களைச் சாதித்துக் கொள்வது போல், அரசையும், அதிகாரிகளையும் ஏமாற்றுவது போல், அவுலியாக்களிடம் உதவி தேடி உண்டியலில் லஞ்சமாகக் காசை போட்டு குறுக்கு வழியில் படைத்த அல்லாஹ்வை ஏமாற்றி விட முடியும் என்று குருட்டுத்தனமாக நினைக்க மாட்டார்.

மனிதர்களுக்கிடையே இடம்பெறும் ‘தஆவுன்’ என்ற பரஸ்பர உதவிக்கும், அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கும் இஸ்திஆனத் என்ற உதவிக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல், அல்லது அல்லாஹ் 2:146, 6:20 இறைவாக்குகளில் கூறி இருப்பது போல் அவர்கள் பெற்ற குழந்தையை அறிவதுபோல் நன்கு அறிந்த நிலையில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும் இந்த முகல்லிது புரோகித மவ்லவிகள்.

நாங்கள்தான் அரபி கற்ற மேதைகள்; எங்களுக்குத்தான் குர்ஆன், ஹதீஸ் தெளிவாக விளங்கும் எனத் தம்பட்டம் அடிக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்ற மவ்லவி புரோகிதர்கள் ்இஸ்திஆனத்’ என்ற உதவிக்கும் ‘தஆவுன்’ என்ற உதவிக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் பிதற்றுகிறார்களா? அல்லது நன்கு அறிந்த நிலையில் மக்களை ஏமாற்றி வஞ்சித்து நரகில் தள்ளுகிறார்களா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஹிஜ்ரி 400 க்குப்பிறகே மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்டன; அதன்பின்னர் ஹிஜ்ரி 600 வாக்கில் தரீக்காக்கள் கற்பனை செய்யப்பட்டன. அதன்பின்னரே அதாவது ஹஜ்ரி 600க்குப் பிறகே இந்த தர்கா – சமாதிச் சடங்குகள் அனைத்தும் முஸ்லிம்களிடையே அரங்கேறின. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அதாவது ஹிஜ்ரி 11க்குப் பிறகு மார்க்கத்தில் ஓர் அணுவளவும் புதிதாகச் சேர்க்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாக நெற்றியடியாக 5:3, 7:3, 3:19,85, 33:21,36,66,67,68 இறை வாக்குகள் கூறிக்கொண்டிருக்க இத்தனை குர்ஆன் வசனங்களையும் நாளை மறுமையில் நபி(ஸல்) அவர்கள் முறையிடுவதாக 25:30-ல் உள்ளபடி அப்பட்டமாகப் புறக்கணித்துவிட்டு தங்கள் சொந்த யூகங்களையும், கற்பனைகளையும் கூறி (பார்க்க 31:6) மக்களை வழிகெடுக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு சுமார் 200 தலைமுறைகளுக்குப் பிறகே தோன்றிய தர்கா -சமாதி சடங்குகளை நியாயப்படுத்தி வருகிறார்கள் என்றால் இவர்களது முடிவும் இவர்களைப் பின்பற்றிச் செல்லும் பெருங்கொண்ட முஸ்லிம் மக்களின் நிலையும் அல்லாஹ் 2:159-162, 18:102-106,33:36,66,67,68 இறைவாக்குகளில் கூறி இருப்பது போல், அல்லாஹ்வின் வாக்குகள் நிறைவேறுமா? இல்லையா? என்பதை மக்களே முடிவு செய்யுங்கள்.