இஸ்லாம்தளம்

பிப்ரவரி14, 2009

பாசமும், தேட்டமும்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

பாசமும், தேட்டமும்! என்ற வார்த்தையில் அன்பினால், பாசத்தால், தேட்டமும் கவலையும், துன்பமும், இன்பமும் உண்டு! ஆனால் நாம் யார் மீது பாசம் வைத்து உள்ளோமோ அவர்களைப் பிரியும் போது நம் உள்ளம் கடுமையாக பாதிக்கவும் படலாம் என்பதை மனிதர்களாகிய நாம் யதார்த்தத்தில் அறிந்தே வைத்துள்ளோம். இருந்தாலும் சில பாசங்கள் பிரிவால் – வேதனையையும், துன்பத்தையும், தருபவையாகவே உள்ளன!

பாசத்தில் எப்படி வேதனையும், கவலையும் உள்ளது என்பதை அல்லாஹு ரப்புல் ஆலமீனுடைய சத்திய நேர்வழிகாட்டல் நூல் மற்றும் – நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல் மூலமும் பார்ப்போம். முதலில் யூஸுஃப் அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாறு பற்றி சத்திய நெறிநூல் திருகுர்ஆன் வழியாக தனது அன்பு மகனைப் பிரிந்த யாகூப் அலைஹிவஸல்லம் பட்ட கவலைகள் பற்றி அறிவோம்; அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான்.

யூஸுஃபி(ன் சரித்திரத்தி)லும் அவருடைய சகோதரர்களி(ன் சரித்திரத்தி)லும் வினவுபவர்களுக்குப் (பல) படிப்பினைகள் திட்டமாக இருக்கின்றன. (அல்குர்ஆன்:12:7)

பலப்படிப்பினைகள் திட்டமாக இருக்கின்றன என்று அல்லாஹ் சொல்வதில் திருகுர்ஆனில் உள்ள இறைத்தூதர் யூஸுப் அலைஹிவஸல்லம் என்ற 12-ம் அத்தியாயத்தை படிப்பவர்கள் உணரலாம். இந்த அத்தியாயத்தில் பலப்படிப்பினைகள் இருந்தாலும் இங்கே நாம் பாசமும் தேட்டமும் பற்றிய தலைப்பில் எழுதுவதால் அதுப்பற்றி நமக்கு ஏற்படும் அனுபவப்பூர்வமான படிப்பினைகளையே குர்ஆன், நபிவழியில் “இன்ஷா அல்லாஹ்”  காணப்போகிறோம்.

இறைத்தூதர் நபி யாகூப் அலைஹிவஸல்லம் அவர்களின் இளைய புதல்வரான நபி யூஸுஃப் அலைஹிவஸல்லம் அவர்களின் தந்தை யாகூப் அவர்கள், தனது அன்பு மகனும் பேரழகுக்கு சொந்தக்காரருமான நபி யூஸுஃப் அலைஹிவஸல்லம் அவர்களின் பிரிவை தாங்கமுடியாமல் தனது அன்பு மகனை தேடித் தேடி, துக்கப்பட்டவர்களாக, கவலையினால் அழுதழுது ரொம்பவும் சங்கடப்பட்டதாக, அல்லாஹ்வின் சத்திய நேர்வழிகாட்டல் நூல் வழியாக அறியமுடிகிறது.

… (அவ்வாறே அவர்கள் தம் தந்தையிடம் வந்து கூறியபோது) “அவ்வாறல்ல! உங்களுடைய மனங்களே உங்களுக்கு ஒரு(தீய) காரியத்தை அழகாக்கிவிட்டன; (அதைச் செய்து முடித்து விட்டீர்கள் எனவே (என்னுடைய நிலை) அழகான பொருமை மேற்கொள்வதுதான்; அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வருவதற்கு அல்லாஹ் போதுமானவன். நிச்சயமாக அவன்தான் முற்றும் அறிந்தவன்; “ஞானமுள்ளவன்” என்று அவர் கூறினார்.

(பின்னர்) அவர்களை விட்டு விலகிச் சென்று, “யூஸுஃபின் மீது (ஏற்பட்டு)ள்ள என்னுடைய துக்கமே! என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார். கவலையினால் (அழுதழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்துவிட்டன. (எனினும்) அவர்(துக்கத்தை) மென்று விழுங்கிக் கொள்பவராக இருந்தார். (அல்குர்ஆன்: 12:83,84)

நபி யாகூப் அலைஹிவஸல்லம் அவர்கள், தங்களது அன்பு மகனான நபி யூஸுஃப் அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அதிகமான பாசம் உள்ளவர்களாக இருந்துள்ளதை திருகுர்ஆன் மூலம் அறிகிறோம், நமது பாசம் உள்ள ஆண், பெண், குழந்தைகள் – பாசம் உள்ள மனிதர்களுக்கு கண்குளிர்ச்சியாவார்கள்.

அந்த பாசம் உள்ள, நம் அன்பு குழந்தைகள் நமக்கு இன்பமாகவும் துன்பமாகவும் இருக்கிறார்கள் என்பது அல்லாஹ்வுடைய சத்திய வழிகாட்டல் நூல் மூலம் அறிகிறோம்; அது எப்படி இன்பமாகவும் துன்பமாகவும் இருக்கிறார்கள்? அந்த பாசம் உள்ள, வாசம் உள்ள நம்முடைய அன்பு குழந்கைள், நம்மோடு நம் பக்கத்திலேயே கொஞ்சி விளையாடும் போது அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் நமக்கு பெரும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது! ஆனால் நம்முடைய அன்பும், பாசமும் உள்ள, வாசம் உள்ள குழந்தைகள், நம்மைவிட்டு பிரியும் போதோ அல்லது அவர்களை விட்டு நாம் பிரியும் போதோ, நமக்கு உண்மையிலேயே துக்கமும், வேதனையும் வருகிறது. அன்பு உள்ளவர்கள் பாசம் கருணை உள்ளவர்கள் நிச்சயமாக இதை உணரவே செய்வார்கள்.  நபிமொழி செய்தி பேழைகளில் உள்ள  அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்லைப் பார்ப்போம்.

ஒருநாள் கிராமவாசி ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?  நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?”      (புகாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அவர்களின் வார்த்தையில் உண்மையான அன்பு, பாசம் இல்லாதவர்களுக்கு, கடுமையான சொற்கள் உள்ளதை மேல் காணும் நபி மொழி உணர்த்துகிறது என்பதை பாசம் உள்ளவர்களும், பாசம் இல்லாதவர்களும் புரிந்து கொள்ளவே செய்வார்கள். அல்லாஹு ரப்புல் ஆலமீனால் மனித சமுதாயத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட அன்பு, கருணை, பாசம் என்பது அல்லாஹ்வுடைய தூதர் இடத்தில் இரண்டறக் கலந்து அவர்களின் மனம் பாசத்தையும் அன்பையும் கருணையையும் பொழிந்தது என்பதை நபிமொழி செய்தி பேழைகளில் இருந்து அறிகிறோம்.

எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டால் ‘குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே’ என நினைத்து நபி அவர்கள் கருணையினாலும், பாசத்தினாலும் தொழுகையை சுருக்கி தொழுது இருக்கிறார்கள் என்பதை கீழ் உள்ள நபி மொழி உணர்த்துகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன். அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான்  குழந்தையின் அழுகையால் அதன் தாய்க்கு ஏற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.” (நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

மற்றொரு நபிமொழியில்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரரான ஹஸன்(ரழி) அவர்களை முத்தமிட்டார்கள்; அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிழ்(ரழி) “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார் அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார் என்று கூறினார்கள். (நூல் : புகாரி)

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவன் தன் சத்திய நேர்வழி காட்டி நூலில் அழகாக, அன்பாக கருணையாக கூறுகிறான்.

…. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப் பெரும் கருணை காட்டுபவன். நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன் : 2:143)

இந்த மனிதனை அழகான முறையில் படைத்து பரிபக்குவப்படுத்தி, தனது தூதர்கள் மூலம் வழிகாட்டி – இந்த மனித சமுதாயத்தின்மீது அன்பையும், அருளையும், கருணையையும் பொழிந்து, தனது இறுதித் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மூலம் அழகாக தெளிவாக வழிகாட்டினானே அந்த ரப்புல் ஆலமீன் நிச்சயமாக கருணையாளன்தான்; அல்லாஹ் தனது அன்பு, கருணை, பாசம் என்கின்ற அருளை இந்த மனித சமுதாயத்திற்கு அன்பளிப்பு செய்து தனது கருணையை பொழிந்ததின் காரணமாகவே, நாமும் அன்பும், கருணையும், பாசமும், நேசமும், தேட்டமும், கொள்பவர்களாக உள்ளோம்! அல்ஹம்துலில்லாஹ்,

இங்கே உமர்(ரழி) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வையும் எழுத விரும்புகிறோம். உமர்(ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிழ்(ரழி) அவர்கள் கூறியதுபோல ‘குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள். உடனே அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்டவில்லையானால் எப்படி மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்துகொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்கமாட்டேன் என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள் உமர்(ரழி) அவர்கள் அப்படி என்றால் எந்த அளவுக்கு அன்புக்கும், கருணைக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் உள்ளது என்பதையும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதை முஸ்லிம்களாகிய நாம் அன்போடும், பாசத்தோடும், கருணையோடும், தேட்டத்தோடும் நினைத்து நினைத்து வாழ வேண்டும்; அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள் செய்வானாக!

சத்திய வழிகாட்டல் நூல் மூலம் பாசம் என்பது எப்படி சோதனையாக வருகிறது என்பதை யாகூப்  அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கையின் மூலம் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது என்பதை அன்புள்ளவர்களும், பாசம் உள்ளவர்களும்,  பலப்படிப்பினைகளை நிச்சயம் அறிந்து கொள்வார்கள். மேலும் யூஸுஃப் நபி அவர்களின் தந்தையவர்கள், தனது அன்பும், பாசமும் உள்ள அன்பு மகனை தேடித் தேடி சங்கடப்பட்டுக் கொண்டிருந்த தந்தையைப் பார்த்து மற்ற மக்கள் எல்லாம்,

…(இதனைக் கண்ணுற்ற அவருடைய மக்கள் தந்தையே!)  “அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் (இளைத்துத் துரும்பாக) மெலிந்து போகும்வரை, அல்லது அழியக்கூடியவர்களில் உள்ளவராய் நீங்களாகும் வரை யூஸுஃபை நினைப்பவராகவே இருந்து கொண்டிருப்பீர்கள் (போலும்)” என்று அவர்கள் கூறினார்கள்.

அதற்கு “என்னுடைய துன்பத்தையும், கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். நீங்கள் அறியாததை(யெல்லாம்) அல்லாஹ்விடம் இருந்து நான் அறிவேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:85,86)

அடுத்து மூஸா அலைஹிவஸல்லாம் அவர்களின் தாயாருக்கும் தான் பெற்றெடுத்த அன்பு மகனை பிரியும் சூல்நிலைகளை அல்லாஹு ரப்புல் ஆலமீன் திருகுர்ஆன் அத்தியாயம் 28. அல்கஸஸ் (பார்வையிடவும்) தெளிவு படுத்தும்போது:

இன்னும் மூஸாவுடைய தாய்க்கு நாம் வஹி அறிவித்தோம்; “அதற்கு (உன்னுடைய அக்குழந்தைக்கு) நீ பாலூட்டுவாயாக; பிறகு அ(க்குழந்)தையைப் பற்றி நீ பயந்தால் அதனை ஆற்றில் நீ போட்டுவிடு; (தண்ணீரில் மூழ்கிவிடுமோ என்று) நீ பயப்பட வேண்டாம்; (அதைப்பிரிந்திருப்பது பற்றி) கவலைப்படவும் வேண்டாம்: நிச்சயமாக நாம் அவரை உன்பக்கமே திருப்புவோம்: இன்னும் அவரை, (நம்முடைய) தூதர்களில் ஒருவராக ஆக்குவோம். (அல்குர்ஆன் 28:7)

இந்த வசனத்தில் மூஸா நபி அவர்களின் தாயாருக்கு தன்னுடைய அன்பான, பாசமான, குழந்தையை அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆற்றில் விட்டு விட நேர்ந்தாலும், நிச்சயமாக அவரை உன்பக்கம் திருப்புவோம் என்றும் வாக்குறுதி அளிக்கிறான். இருந்தாலும் தன்னுடைய அன்பு மகனை நினைத்து பாசத்தால் தேட்டத்தால் மூஸா நபி அவர்களின் தாயாரின் உள்ளம் வெறுமையாகிவிட்டது என்று சத்திய நேர்வழிகாட்டல் நூல் வழியாக சொல்கிறான்.

(குழந்தையை ஆற்றில் போட்ட துயரத்தால்) மூஸாவுடைய தாயாரின் இதயம் வெறுமையாகிவிட்டது; அவர் நம்பிக்கையாளர்களில் உள்ளவளாவதற்காக – அவருடைய இதயத்தை நாம் கட்டுப்படுத்தி வைத்திராவிட்டால், நிச்சயமாக அதனை (அக்குழந்தையைத் தன்னுடையதென) வெளிப்படுத்த முனைந்திருப்பார். (அல்குர்ஆன்:28:10)

நீதி தவறாத வல்ல ரஹ்மான், மூஸா அலைஹிவஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் தாயாருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவு செய்து தான் பெற்றெடுத்த அன்பு மகனை பாசத்தினால், தேடாமல் இருப்பதற்கும், வெறுமையாகிவிட்ட உள்ளம் மகிழ்ச்சியாகவும், கண்குளிர்ச்சியோடு பார்ப்பதற்கும்-உம்மு மூஸாவின் கவலையையும், சோதனையையும் லேசாக்கி அன்பாளன் அல்லாஹ் அன்போடு மூஸா நபியின் தாயாருக்கு அருள் செய்துவிட்டான்; அன்புள்ள சகோதர, சகோதரிகளே, பெரியவர்களே, தாய்மார்களே தயவுசெய்து திருகுர்ஆன் 28:11,12,13 பார்வையிடவும். அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனது சத்திய நேர்வழிகாட்டல் நூல் வழியாக நூஹ் நபி அவர்களின் வரலாறு பற்றி அத்தியாயம் 11 வசனங்கள் 25, முதல் 49, வரை சொல்லும்போது (தயவுசெய்து குர்ஆனை பார்வை இடவும்) இங்கே இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாத்து – வஸ்ஸலாம் அவர்களின் பாசமுள்ள மகனைப் பார்த்து,

“என்னருமை மகனே! எங்களுடன் (கப்பலில்) நீயும் ஏறிக்கொள்; நீ நிராகரிப்பாளர்களுடன் ஆகிவிட வேண்டாம், என்று (உரக்க) அழைத்தார். (11:42) ஆனால் தன்னுடைய தந்தையின் அழைப்புக்கு செவிசாய்க்காத பாசமுள்ள அன்பு மகன் தன் முன்னாலேயே அல்லாஹ்வின் தண்டனையின் மூலம் “அவ்விருவருக்குமிடையில் ஓர் அலை(குறுக்கே) திரையிட்டது. உடனே அவன் (வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்பட்டவர்களில் உள்ளவனாகிவிட்டான்” (11:43)

தனது அன்பு மகன் தன் முன்னாலேயே வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடிக்கப்பட்டது பெரும் வேதனையையும், தேட்டத்தையும் நூஹ் நபி அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு இருந்ததையும் சத்திய நெறி நூல் மூலம் அறிய முடிகிறது.

நூஹ் தம்முடைய இறைவனை (பிரார்த்தித்து) அழைத்து, “என்னுடைய இறைவனே! நிச்சயமாக என்னுடைய மகன் என் குடும்பத்திலிருந்து உள்ளவன் தான். நிச்சயமாக (என் குடும்பத்தினரைக் காப்பாற்றுவதாக நீ கூறிய) உன்னுடைய வாக்கு உண்மையானதாகும்: நீ தீர்ப்பளிப்போர்களில் மேலான நீதிபதியாக இருக்கிறாய்” என்று கூறினார். (அல்குர்ஆன்: 11:45)

இங்கே இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் மகன் மீது ஏற்பட்ட பாசமும், தேட்டமும், சோதனையாக முடிந்துபோனது.

(அப்பொழுது) “நூஹே! நிச்சயமாக அவன் உம் குடும்பத்தில் உள்ளவனல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயலுடையோன் ஆவான்; எனவே, எதில் உமக்கு (தெளிவான) அறிவு இல்லையோ அதனை என்னிடம் நீர் கேட்க வேண்டாம். அறியாதவர்களில் உள்ளவராக நீர் ஆவதை விட்டும் உமக்கு நிச்சயமாக நான் உபதேசிக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறினான். (அல்குர்ஆன் : 11:46)

தனது அருமை மகன்மீது பாசத்தால் தேட்டத்தால் அன்பு இருந்தாலும், அல்லாஹு ரப்புல் ஆலமீனின் விருப்பத்திற்கு முன்னால், அந்த பாசமும், தேட்டமும், அல்லாஹு ரப்புல் ஆலமீனால் மறுக்கப்பட்டு விட்டது! யா அல்லாஹ்! எங்களின் பாசமுள்ள, தேட்டமுள்ள மக்களையும் – எல்லா முஸ்லிம்களையும் இது போன்ற இழிநிலையில் இருந்து பாதுகாப்பாயாக! எங்களின் பாசத்தையும் தேட்டத்தையும், அழகாக்கி வைப்பாயாக! எங்களின் பாசமுள்ள, தேட்டமுள்ள அன்பு குழந்தை செல்வத்திலிருந்து சோதனைகளையும், வேதனைகளையும் தந்துவிடாதே! அவர்களையும் எங்கள் எல்லோரையும் “இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தை பின்பற்றி நடக்கும் பெரும் பாக்கியத்தை தந்தருள் செய்வாயாக!” எங்களுடைய சந்ததிகளிலிருந்தும் கண்களுக்குக் குளிர்ச்சியை எங்களுக்கு வழங்குவாயாக! இன்னும், தூய்மையானவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!

உங்களுக்கு முகமன் கூறப்பட்டால்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மாற்று மதத்தவர்கள் நமக்கு ஸலாம் கூறினால் பதில் ஸலாம் கூற பலர் தயங்குகின்றனர். ஏன் அவர்கள் தயங்குகின்றனர், பதில் ஸலாம் கூறுவதற்கு குர்ஆன், ஹதீஸில் ஏதும் தடை இருக்கிறதா என இனி பார்ப்போம்.

வேதமுடையோர் உங்களுக்கு சலாம் கூறினால் ‘வ அலைக்கும்’ என்று கூறுங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம்பெற்ற ஹதீஸாகும்.  இந்த ஹதீஸை வைத்து முஸ்லிமல்லாதர்வர்கள் ஸலாம் கூறினால் ‘அலைக்கும்’ என்று மட்டுமே கூறவேண்டும் என்கிறார்கள்.

உங்கள் மீது யூதர்கள் ஸலாம் கூறினால் அஸ்ஸாமு அலைக்கும் (உங்கள்மீது அழிவு ஏற்படட்டும்) என்றே கூறுகின்றனர். எனவே நீங்கள் ‘அலைக’ என்று கூறுங்கள்! என இப்னு உமர்(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு சலாம் சொல்லாதவரை பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது கூறப்படுகிறது) (24:27)

யூதர்கள் ‘அஸ்ஸாமு அலைக’ (உன்மீது அழிவு ஏற்படட்டும்) என்று கூறுகின்றனர். அதனால் நீங்கள் ‘அலைக’ என்று கூறுங்கள் என என்று நபி(ஸல்) அவர்கள் அதன் காரணத்தை விளக்குகிறார்கள். யூதர்கள் முறையாக சலாம் சொல்லாததினால் தான் நபி(ஸல்) அவர்கள் ‘அலைக’ என்று கூறும்படி சொன்னார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று முறையாக கூறும்போது நாம் “அலைக” என்று கூற வேண்டியதில்லை.

யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக’ என்றனர். (அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறாமல்) அவர்கள் கூறுவதை நான் விளங்கிக் கொண்டேன். “அலைக்குமுஸ்ஸாமு வல்லஃனது” (உங்களுக்கு அழிவும் சாபமும் ஏற்படட்டும்) என்று மறுமொழி கூறினேன்.  இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘ஆயிஷாவே! சற்று பொறு! எல்லா விஷயங்களிலும் அல்லாஹ் பண்பாட்டை (நளினத்தை) விரும்புகின்றான் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “வ அலைக்கும்” (உங்ளுக்கும் அவ்வாறே) என்று கூறிவிட்டேனே என்றார்கள். ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

யூதர்கள் அழிவு உண்டாகட்டும் என்று சொல்லியும் கூட அதேபோல் கூறாமல் நாகரீகமாக ‘வ அலைக்கும்’  (உங்களுக்கும்) என்று மட்டும் கூறச் சொல்கிறார்கள்.

وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا அல்லாஹ் தன் திருமறையில் “உங்களுக்கு முகமன் கூறப்பட்டால் அதைவிட அழகாக அல்லது அதற்கு சமமாக நீங்களும் மறுமுகமன் கூறுங்கள்” (4:86)

எனவே, முஸ்லிமல்லாதவர்கள் அவர்கள் முறையாக அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறும் போது நாமும் முறையாக பதில் சொல்வதற்கு எந்தத் தடையும் கிடையாது.

இன்றைய உலகில் முஸ்லிம்களின் வாழ்வு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

مَنْ كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لاَ يُبْخَسُونَ
أُوْلَائِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الآخِرَةِ إِلاَّ النَّارُ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِل ٌ مَا كَانُوا
يَعْمَل
ُونَ

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)

ஒருவர் தனது சமீபத்திய சாதனைகளைப் பற்றி மிகைப்படுத்திக் கூறிக் கொண்டிருப்பார், இன்னும் ஒருவர் சமீபத்தில் வெளியான மிகப் பிரபலமான பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருப்பார், அடுத்து இன்னுமொருவர் புகைத்துக் கொண்டிருப்பார், அடுத்து ஒருவர் சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பார், இன்னும் ஒருவர் இன்னொருவரைத் திட்டிக் கொண்டிருப்பார், அடுத்து ஒருவர் பிறரை வஞ்சித்துக் கொண்டிருப்பார், இப்படி ஏகப்பட்ட அவலங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலைகளில் வாழக் கூடியவரும், இன்னும் பேசினால் புறமும், கோள் சொல்லுதலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டும், விளையாட்டு போட்டிகளின் முடிவுகள் எப்படி இருக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்று புலம்பிக் கொண்டு பந்தயங்களைக் கட்டிக் கொண்டிருக்கக் கூடிய மக்களின் கூட்டத்தில் வாழக் கூடிய ஒருவருக்கு எப்படி ஈமானின் வேகம் அதிகரிக்கும்.

இத்ததைகய சூழ்நிலையில் வாழக் கூடிய ஒருவருக்கு இந்த உலக வாழ்க்கையின் அம்சங்கள் தான் ஞாபகம் வருமே ஒழிய, இறை நம்பிக்கையும், இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளும் எவ்வாறு ஞாபகத்திற்கு வரும்?! இன்றைக்கு நாம் வாழக் கூடிய சூழ்நிலைகள் இவ்வாறு தான் இருந்து கொண்டிருக்கின்றன. இருவர் சந்தித்து விட்டால் வியாபாரம், வேலை, பணம், முதலீடு, வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சம்பள உயர்வு, சம்பள வெட்டு, பதவி உயர்வு, திட்டங்கள் போன்றவற்றைப் பற்றித்தான் அதிகம் பேசக் கூடியவர்களாகவும், அவர்களது சம்பாஷனைகள் யாவும் இதனைச் சுற்றியே தான் அமைந்திருக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.

இன்றைய முஸ்லிம்களின் வீடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்றால் ஷைத்தானிய சக்திகளின் பிடியில் தான் இன்றைய முஸ்லிம்களின் வீடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அசிங்கமான பாடல்கள் ஒலிக்கக் கூடிய இல்லங்களாகவும், இன்னும் வக்கிரமான சினிமாப் படங்கள், ஆணும் பெண்ணும் கலந்துறவாடும் காட்சிகளைக் கொண்ட படங்கள், பாடல்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் அகப்பட்டு விடக் கூடிய முஸ்லிம்களின் இல்லங்களில் எவ்வாறு இஸ்லாமியத் தாக்கம் இருக்கும். மாறாக, ஈமானை இழந்து விட்ட, ஷைத்தானின் பிடியில் சிக்கிச் சீரழியக் கூடிய, மனநோய் கொண்ட சமுதாயமாகத் தான் அது இருக்கும். இந்த உலகமே கதி என்று வாழக் கூடிய ஒருவனது இதயம், இந்த உலகத்திற்கும் இந்த உலகத்தின் ஆதாயங்களுக்கும் அடிமைப்பட்டதாகத் தான் இருக்கும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தீனாரின் அடிமைகள் மற்றும் திர்ஹத்தின் அடிமைகள், (இவர்களுக்கு) அவனுக்கு அழிவுதான். (புகாரி,).

இந்த உலக வாழ்க்கைக்கு குறைந்த அளவு வளங்களே போதுமானதாக இருப்பினும், இந்த மனிதன் இந்த உலக வாழ்வே கதி என்று எண்ணம் கொண்டதன் காரணமாக, அவன் எப்பொழுதும் ஷேர் மார்க்கெட், உற்பத்தி, வியாபாரம் என்று ஓடி ஓடித் திரிகின்ற அவலத்தை நாம் கண்டு வருகின்றோம். இது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்றை மெய்பிப்பதாக உள்ளது.

மனிதன் இறைவனை வணங்குவதற்காகவும் இன்னும் ஸகாத் வழங்குவதற்காகவும் தான் நாம் வளங்களை இறக்கி வைத்தோம், ஆனால் ஆதத்தினுடைய மகன் ஒரு சமவெளியைப் பெற்றிருந்தால், அவன் தனக்கு (இதைப் போல)இன்னொன்று இருக்கக் கூடாதா? என்று எண்ணுவான், இன்னும் அவனுக்கு இரண்டு சமவெளிகள் இருந்தால் மூன்றாவதாக ஒன்று நமக்கு இருக்கக் கூடாதா? என்று எண்ணுவான். ஆதத்தினுடைய மகனது வயிற்றில் மண் தான் நிறைந்திருக்கின்றது (அதாவது அவன் என்றைக்கும் திருப்தி அடையவே மாட்டான்), இன்னும் யார் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டார்களோ அவர்களது பாவத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். (அஹமது)

செல்வமும், மனைவி மக்களும்
”நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு”” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)

பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது இவை உலக வாழ்வின் சடப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. (3:14)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தில் வருகின்ற இந்த உலகத் தேவைகளான மனைவி மக்கள் செல்வங்கள் ஆகிய யாவும், இறைவனின் மீதுள்ள அன்பைக் காட்டிலும் மிகைத்து விடக்கூடிய அளவில் சென்று விடக்கூடாது. அவ்வாறு செல்லும் பொழுது தான் இறைவனுக்குக் கீழ்படியாமையை அது உருவாக்கி விடுகின்றது. அவ்வாறில்லாமல், இஸ்லாமியச் சட்டங்களின் வரையறைக்குள், இன்னும் இறைவனுக்குக் கீழ்படிகின்ற தன்மையிலிருந்து அவனை வழி தவறச் செய்யாத விதத்தில் அமைந்து விடுமானால், இத்தகைய செல்வங்களும், உறவுகளும் அவனுக்கு மிகப் பயன்தரக் கூடியதாக அமைந்து விடும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இந்த உலகத்தில் பெண்களும், நறுமணங்களும் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தும் கூட, இவை அனைத்தைக் காட்டிலும் தொழுகை தான் எனக்கு மிக மிக விருப்பமானதாக இருக்கின்றது என்றார்கள்.

அநேக ஆண்கள் தங்களது மனைவிமார்களின் விருப்பங்களைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாகவும், அந்த விருப்பங்கள் ஹராமான வழியில் இருந்தாலும் அவற்றைத் தடுக்க இயலாமலும், தங்களது குழந்தைகளை தொழுகை போன்ற இறைவணக்கங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வமூட்டாமல், அவர்களை பள்ளிவாசல் பக்கமே ஒதுங்கவியலாத அளவுக்கு வளர்க்கின்ற பழக்கத்தையும் நாம் கண்டு வருகின்றோம். இறைத்ததூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அச்சத்திற்கும், கபடத்திற்கும், ஏமாற்றத்திற்கும் இன்னும் கஞ்சத்தனத்திற்கும் காரணமாக உங்களது குழந்தைகள் உங்களை ஆளாக்கி விடுவார்கள். (தப்ராணி, அல் ஜாமீஈ ).

கஞ்சத்தனம் என்பது என்னவென்றால், இவன் அல்லாஹ்வினுடைய பாதையில் ஒரு பொருளைச் செலவு செய்ய எண்ணியிருப்பான். அப்பொழுது ஷைத்தான் குறுக்கிட்டு அல்லாஹ்வின் பாதையில் இந்தப் பொருளை நீ செலவழித்து விட்டால், உன்னுடைய குழந்தைகளின் கதி என்னாவது என்பதை நினைவூட்டுவதன் மூலம், அந்தப் பொருளை இறைவனுடைய பாதையில் செலவழிக்க இயலாதவானாக அந்த மனிதனை ஆக்கி விடுகின்றான்.

அறியாமை என்பது என்னவென்றால், இவன் அறிஞர்களின் உரைகள் மற்றும் கல்வியைத் தேடி அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக முயற்சி செய்யும் பொழுது, குழந்தைகள் குறுக்கிட்டு அறிவைத் தேடிச் செல்வதனின்றும் இவனைத் தடுக்கக் கூடியதாக இருந்து விட்டால், அதுவே அவனது அறியாமையைக் காரணமாகி விடும்.

கவலை என்பது என்னவென்றால், அவன் செல்லமாகப் போற்றி வளர்க்கக் கூடிய அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்டு விட்டால் அதற்காகக் கவலை கொள்ளக் கூடியவனாகவும், இன்னும் தன்னுடைய குழந்தை பிரியப்பட்டு ஒரு பொருளைக் கேட்கும் பொழுது அதனை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை என்றால், அதற்காகக் கவலைப்படக் கூடியவனாகவும் மனிதன் மாறி விடுகின்றான். இன்னும் தான் வளர்த்த அந்தக் குழந்தை பெரியவானாக ஆகி விட்டதும், தன்னைப் பராமரிக்காமல் விட்டு விட்டால், தான் கஷ்டப்பட்டு அவனை எவ்வாறெல்லாம் வளர்த்தோம், இந்த வயதான காலத்தில் நம்மை இப்படி வெறுமனே தவிக்க விட்டு விட்டுச் சென்று விட்டானே என்று புலம்பக் கூடிய நிலைக்கு விட்டு விடக் கூடியவனாகவும் அவன் மாறி விடுகின்றான்.

மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அம்சங்களைக் கருத்தில் கொண்டு, திருமணமே செய்து கொள்ளாமல், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளாமல் வாழ வேண்டும் என்பதல்ல, மாறாக, செல்வங்களும், மனைவி மக்களும் இறைவனது நினைவை விட்டும் ஒருவனை மாற்றி விடக் கூடிய விதத்தில் அமைந்து விடக் கூடாது என்பதும், மனைவி மக்கள் அந்த மனிதனை ஹராமான வழியில் அவர்களின் நலன்களுக்காக பொருளீட்டத் தூண்டுகோளாக அமைந்து விடக் கூடாது என்பதே இதன் கருத்தாகும்.

செல்வங்கள் மனிதனை எவ்வாறெல்லாம் நிலைமாறச் செய்யும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

ஒவ்வொரு உம்மத்திற்கும் ஒவ்வொரு ?பித்னாக்கள் (குழப்பங்கள், கோளாறுகள்) உண்டு. என்னுடைய உம்மத்தைப் பொறுத்தவரை செல்வம் தான் அந்த ?பித்னவாக இருக்கும். (திர்மிதி 2336)

செல்வத்தை அதிகம் சேகரிக்க வேண்டும் என்ற ஆசையானது, ஆட்டிற்கு பக்கத்தில் இருக்கக் கூடிய ஓநாய் எவ்வாறு ஆட்டை வெகு சீக்கிரத்தில் கபளீகரம் செய்து விடுமோ, அதைப் போல செல்வத்தின் மீதுள்ள ஆசை ஒருவனது மார்க்கத்தையே அழித்து விடும். இதைத்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டிருக்கின்ற ஒருவனது பொருளாசையானது, இரண்டு பசி கொண்ட ஓநாயிடம் அகப்பட்ட ஆட்டிற்கு நேரக் கூடிய பாதிப்பை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். (திர்மிதி)

எனவே தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களது தேவைகளுக்கு எவ்வளவு போதுமானதாக இருக்குமோ அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள், தேவைக்கு மிஞ்சக் கூடிவைகள் இறைவனது நினைவை விட்டும் உங்களை பராக்காக்கி விடும்.

தான தர்மம் செய்யாமல், பணத்தைச் சேகரித்து வைப்போரை இறைத்தூதர் (ஸல்) எச்சரித்திருக்கின்றார்கள்.
என்னுடைய செல்வம் இங்கிருக்கின்றது, இங்கிருக்கின்றது. இங்கிருக்கின்றது என்று கூறி, தனக்கு முன்னாலும், பின்னாலும், வலப்புறமும், இடப்புறமும் (தான தர்மங்களுக்காக) செல்வத்தை வாறி வழங்குகின்றாரே அத்தகையவரைத் தவிர, செல்வத்தைச் சேகரித்து வைக்கின்றார்களே அவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். (இப்னு மாஜா).


உலகமே கதி
இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். (15:03)

அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் உங்கள் மன இச்சையைப் பின்பற்றுவது குறித்து நான் பயப்படுகின்றேன் இன்னும் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையும், மன இச்சையைப் பின்பற்றுவதும் சத்தியத்தை மறக்கச் செய்துவிடும், இன்னும் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையானது மறுமையை மறக்கச் செய்துவிடும். (?பத்ஹுல் பாரி 11?236)

ஒருவரது ஈமானின் உறுதியை இழக்கக் செய்யக் கூடிய இன்னுமொரு அம்சம் என்னவென்றால், அதிகமாக உண்பது, இரவில் மிக நீண்ட நேரம் விழித்திருப்பது, அதிகமாகப் பேசுவது மற்றும் அதிகமான நேரங்களை மற்றவர்களுடன் கூடியிருந்து (அரட்டைகளில்) கழிப்பது. யார் அதிகமாக உண்கிறார்களோ அவர்களது உடம்பு பெருத்து விடும், இத்தகைய தன்மைகள் இறைவனை நினைவு கூர்வது மற்றும் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனத்தை உண்டாக்கி விடுவதோடு, இத்தகைய நபர்களைத் தன் வழிக்குக் கொண்டு வருவதில் ஷைத்தானுக்கு மிக எளிதாகவும் இருக்கும்.

எவரொருவர் அதிகமாக உண்கிறாரோ, குடிக்கின்றாரோ இன்னும் தூங்குகின்றாரோ அத்தகையவர்கள் இறைவனது வெகுமதியை இழந்து விடுகிறார்கள். அதிகமாகப் பேசுவது இதயத்தை இறுகச் செய்து விடுகின்றது, அதிகமான மக்களுடன் வீணாகத் தன்னுடைய நேரங்களைக் கழிப்பவர்களுக்கு தனியாக இருந்து தன்னுடைய நிலைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரம் கிடைக்காது.

அதிகமாகச் சிரிப்பது ஒருவனது இதயத்தின் வாழ்நாளையை பாழடித்து விடும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகமாகச் சிரிக்காதீர்கள், அதிகமாகச் சிரிப்பது இதயத்தை மரணிக்கச் செய்து விடும். (இப்னு மாஜா)

ஒருவனது நேரங்கள் வணக்க வழிபாட்டுடன் கூடியதாக இறைவனுடைய ஞாபகத்தை அதிமதிகம் நினைவு கூரத்தக்க விதத்தில் கழியவில்லை என்றால், அவன் குர்ஆனை உதறித் தள்ளி விட்டுச் செல்லக் கூடியவனாகவும், இன்னும் இறை நம்பிக்கையாளர்களின் அறிவுரைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவும் மாட்டான்.

ஈமானைப் பலவீனப்படுத்தக் கூடிய அம்சங்கள் ஏராளமாக இருந்தும், இங்கே நாம் அவற்றில் சிலவற்றைத் தான் குறிப்பிட்டிருக்கின்றோம். இங்கே குறிப்பிடப்படாத சில அம்சங்கள் உங்களது வாழ்க்கையில் உங்களை பாதித்திருக்கலாம், அதனை நீங்கள் கூர்ந்து கவனிப்பதன் மூலம் நீங்களே அறிந்து கொள்ளலாம். நமது இதயங்களை அல்லாஹ் சுத்தப்படுத்தி, கெட்ட செயல்பாடுகளிலிருந்து நம்மைக் காத்தருளப் பிரார்த்திப்போமாக! ஆமீன்!!

பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத – கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை – பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே – புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக – பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

உணரப்படாத தீமை “வட்டி”

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்றைய உலகில் பணம் அதிகமாக சேர்க்கவேண்டும் என்ற பேராசையால் பல தீமைகள் மனித வர்க்கத்தால் தீமை என்றே உணரப்படவில்லை. இவற்றில் சினிமா, வட்டி, வரதட்சனை போன்றவை முதலிடம் வகிக்கின்றன. இன்னும் சில தீமைகள் தீமை என்று தெளிவாக அறிந்தும் பணத்தின் மீதுள்ள பேராசையால் அரசாங்கமே அத்தீமைகளை அங்கீகாரம் செய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவை லாட்டரி, குதிரைப் பந்தயம், விபச்சாரம், குடி போன்றவையாகும். இத்தகைய அரசாங்கத்திற்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிகின்றது.

தனி மனிதன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அது குற்றம், ஆனால் அரசாங்கமே அதை லாட்டரி, குதிரைப் பந்தயம் என்ற பெயரில் செய்தால் அது குற்றமில்லை. இரட்டை வேடம் குளறுபடி ஆகியவற்றின் மொத்த உருவமே இன்றைய அரசாங்கம்.

அரசாங்கமும் தனிமனிதனும் வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப்பெரிய இழப்பாகும்.

இத்தகைய சமுதாயத் தீமையாகிய வட்டியை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் விலகாமல் இருப்பது மிகவும் வேதனைக்குறியதே. இதற்கு முக்கிய காரணம் பலர் இதை ஒரு பெரும் பாவமாகக் கருதவில்லை என்பதேயாகும். ஆனால் இறைமறையும், நபி மொழியும் இதை மிகப்பெரும் பாவமாகக் கருதி மனித குலத்தை எச்சரிப்பதை பாருங்கள்.

ஒட்டுமொத்தமாக எல்லா வட்டியும் ஹராம் என்று கூறும் வசனம்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130)

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி(வாங்கித்) தின்றார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழமாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைத் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)

فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதை வட்டி தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களா? உணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

மேலும் பலர் வட்டியும், வியாபரமும் ஒன்றுதான் என்றும் திருமறையில் வட்டியைப்பற்றி கூறிய வசனம் இக்காலத்திற்கு பொருந்தாது. அது அன்றைய நிலையில் உள்ள கொடும் வட்டியைத்தான் குறிக்கும். அதுவும் இரட்டிப்பு (கூட்டு) வட்டிதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பணத்தின் மீது கொண்ட பேராசையால் தாமாகவே தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி வாங்குவது தான் பாவம். கொடுப்பது பாவமில்லை என்றும் வட்டியை அடிப்படையாகக் கொண்ட வங்கியில் வேலை செய்வது கூடும் என்றெல்லாம் கருதுகின்றனர்.

வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்

இறைவன் நான்கு பேர்களை சுவர்க்கத்திற்கோ அல்லது அதனுடைய சுகத்தை அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்

1. குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.

2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.

3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.

4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: ஹாக்கிம்)

வட்டி என்றால் என்ன?

بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை (நபியே!) நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (16:44)

மேலே உள்ள இறைவசனத்தின் மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் அதைப்பற்றி கூறுவதை கீழே காண்போம். பலவித கொடுக்கல் வாங்கலில் நபி(ஸல்) அவர்கள் இவையெல்லாம் கூடும், இவையெல்லாம் வட்டி (ஹராம்) கூடாது என்று கூறியுள்ளதால் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் எல்லா ஹதீஸ்களையும் கருத்தில் கொண்டு அதைப்பற்றி அறிய முற்படவேண்டும்.

வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம்

தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக்கோதுமைக்கு பதிலாகவும், தொலிக்கோதுமையை தொலிக்கோதுமைக்கு பதிலாகவும், பேரிச்சம் பழத்தை பேரிச்சம் பழத்திற்கு பதிலாகவும், உப்பை உப்பிற்கு பதிலாகவும் சம எடையில், சம தரத்தில், கரத்திற்கு கரம் விற்றுக்கொள்ளுங்கள். இவ்வினங்கள் பேதப்படுமானால் கரத்திற்கு கரம் நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள். எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லது கூடுதலாக வாங்கவோ செய்த போதினும் அது வட்டியாகும். விற்பவரும் வாங்குபவரும் சமமானவரே. (உபாதாத்துப்னிஸ்ஸாமித் நூல்: முஸ்லிம், திர்மிதி)

நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரழி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் (உமது) பேரிச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூ ஸயீது நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதி, நஸயீ)

வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரழி). இப்னு அபீஹாத்திம் )

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரழி) புகாரி)

வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) ஆதாரம்:முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

இத்தகைய பெரும்பாவமான வட்டியிலுருந்து விலகி இன்றைய உலகில் நாம் வாழமுடியாது. அப்படி வாழமுற்பட்டால் நாமும் நமது சமுதாயமும் மிகப்பெரும் பொருளாதர வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரின் வாக்கும் எக்காலத்திலும் பொய்யாகாது.

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ அல்லாஹ் வட்டியை (எந்த பரகத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான். (2:276)

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக! (இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)

எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும், இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்க்கு மேல் அடைய முடியாது. அடையுமுன் யாரும் மரணிக்க முடியாது. ஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம். நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தே அடையும் என்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக.