இஸ்லாம்தளம்

பிப்ரவரி13, 2009

கருணை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)

முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.

அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:

“நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)

இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். “குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே’ என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின்  அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல “குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”  முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.”  அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி


ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள்  முறை  கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.

(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் “எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது’ என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் “விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் “உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு” என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)

இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.

சமுதாய வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இறை நம்பிக்கையின்மை மனித வர்க்கத்தின் மீதும் சமுதாயங்கள் மீதும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மார்க்கத்திலிருந்து அகன்று அல்லது அதைப் புறக்கணித்து வாழும் சமுதாய மக்களிடையே அநீதியும், தன்னலமும், ஒருவரை ஒருவர் நம்பாத நிலையுமே நிறைந்து காணப்பெறும். இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களின் இயல்பும் இவ்விதமே காணப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மார்க்க நடைமுறைகளும் பண்புகளும் தாம் தனி மனிதர்களுடையவும் சமுதாயங்களுடையவும் ஒழுக்க மேம்பாட்டை உறுதி செய்யத்தக்கவை. இறைவன் மீதும் மறுமையிலும் நம்பிக்கையுடையவர்களே, அவர்கள் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே வாழ்வதால் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். இறைவனுக்குப் பயந்து மிக்கக் கவனத்துடன் தீயச் செயல்களைத் தவிர்த்துக் கொள்வார்கள்; இறைவன் விரும்பாத மனப்பான்மையையும் நடத்தையையும் விலக்கிக் கொள்வார்கள். இத்தகைய மக்களைக் கொண்ட சமுதாயம் பிரச்சினைகளுக்கு உள்ளாகாது.

ஆனால், இறை நம்பிக்கையற்றவன், தன்னுடைய செயல்களின் விளைவாக இறுதியில் நற்கூலி வழங்கப்படுவான் அல்லது தண்டிக்கப்படுவான் என்ற உணர்வின்றி, இறைவன் வகுத்தளித்த நியதிகளைப் பேணத் தவறி விடுகிறான். நீதிப் தீர்ப்பு நாளை நம்பாத அவன் தன்னுடைய தீயச் செயல்களிலிருந்து நீங்கும் எண்ணமே இல்லாமல் வாழ்ந்து வருகிறான். சமுதாயம் ஆதரிக்காத சில நடைமுறைகளைத் தவிர்க்கும் ஏராளமான மக்கள், நிர்ப்பந்ததிற்கு உள்ளாகும் போது, தூண்டப்படும்போது அல்லது வாய்ப்பு கிட்டும் போது மற்ற தீய நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்க மாட்டார்கள்.

இறை நம்பிக்கையின்மைக்கு இலக்கானவர்கள் இங்கே இவ்வுலகில் வாழ்ந்திருக்கும் போதே தொல்லைகளுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் தங்களுடைய இதயங்களில் மார்க்க (நற்)பண்புகளைப் பேணி நடக்க வேண்டும் என்ற உணர்வுடையவர்கள் இல்லாமல் இருக்கமுடியாது. ஒவ்வொரு மனிதனும் ‘மனச்சாட்சி’யுடனேயே படைக்கப்பட்டுள்ளான். இறை நம்பிக்கையாளர்களிடம் இந்த அமைப்பு மிகுந்த இணக்கத்துடன் இயங்குகிறது; மார்க்கப் பண்புகைளப் பேணாதவர்களிடம் இது நேராகச் சீராக இயங்குவதில்லை. இதை வேறு விதமாகக் கூறுவதானால், மனச்சாட்சிக்கு இசைந்து நடக்காதவர்கள் மார்க்கப் பண்புகளை விட்டு அகன்று ஆன்மீக அவலங்களுக்கு உள்ளாகிறார்கள் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் உண்மையில் அவனைப் படைத்த ஒருவன் உண்டு என்றும், அவனிடம் நாம் கணக்குக் கொடுத்தாக வேண்டும் என்றும் ஒழுக்கத்தில் மேம்பாடும் நிறைவும் உடையவர்களாக வாழ வேண்டும் என்றும் அறிந்தவர்கள் தாம். ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் அவனுடைய இவ்வுலக ஆசாபாசங்களோடு மோதுகின்றவையே.

இதனால் தான் தனி மனிதர்கள், ஒன்று முழுமையாக மார்க்கத்தை நிராகரித்து விடுவார்கள்; அல்லது, ?நான் நேர்மையானவன், நல்லவன், உண்மையாளன்? என்று கூறி குர்ஆனின் அறிவுரைக்கு உகந்து வாழாமல் இருப்பதற்குச் சாக்குப் போக்குச் சொல்வார்கள். ஆனாலும் இந்த இரு சாராருமே உண்மையில் உள்ளுக்குள் இறைவன் அங்கீகரிக்கும் முறையில் வாழ வேண்டும் என்பதை அறிவார்கள். மார்க்கப் பண்புகளை உதாசீனப்படுத்தி வாழும் சமுதாயங்களில் காணப்பெறும் மனவேதனைக்கும், உளவியல் ரீதியான மற்றும் ஆன்மீக அவலங்களுக்கும் எல்லாம் காரணம் இந்த ஆன்மீகத் தளர்வுதான். இதை ?மனச்சாட்சியின் வேதனை? என்கிறோம்.

இவ்வுலகில் வாழும்போதே இந்த அவலத்தை நுகர்பவர்களின் நிலையை குர்ஆன் இவ்வாறு வர்ணிக்கிறது:

அவர்கள், ?மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் நீங்கள் கூறுவது எப்போது நிறைவேறும்?? என்று கேட்கிறார்கள். இதற்கு நீர் கூறுவீராக ?நீங்கள் விரைவில் நிகழ வேண்டும் என்று நினைப்பவற்றில் சில இப்பொழுதே உங்களைப் பின் தொடரலாம். (27: 71,72)

“மனச்சாட்சியின் வேதனை” என்பது, இறை நம்பிக்கையற்றவர்கள் மறுமையில் நுகரவிருக்கும் தாங்க முடியாத ஆன்மீகத் துயரத்தில் ஒரு சிறிய பகுதியே ஆகும். மனிதன் இவ்வுலகில் துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், அவன், தான் படைக்கப்பட்ட நோக்கத்திற்கு நேர்மாறான மனப்பான்மையையும், கண்ணோட்டத்தையும், வாழ்க்கை நெறியையும் மேற்கொள்வதுதான். மார்க்கத்திற்கு முரணான மனப்பான்மையும் நடத்தையும் உடையவனாக விளங்கும் காலம் வரை மனிதன் இவ்வுலகில் ஆன்மீக அவலத்திற்கு உள்ளாகியே தீர்வான். இதனால் தான் அவன் தன் மனச்சாட்சியின் குரலை அடக்கி ஒடுக்க முயல்கின்றான்; அதன் மூலம் தன் வேதனையை நீக்க விழைகின்றான்.

உள்ளத்தாலும், உடலாலும் மனிதன் இயல்பாகவே மார்க்கப்பண்புகளையே நாடுகிறான். மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்குரிய நேரான வாழ்க்கை நெறியையும் வகுத்தளித்தான். எனவே, இறைவன் வகுத்தளித்தான். எனவே, இறைவன் வகுத்தளித்த வரையறையை மீறுவது தனி மனித அளவிலும் சமுதாய அளவிலும் குழப்பங்களையே விளைவிக்கும். இந்தக் குழப்பங்கள் எல்லாம் மனித வரலாற்றில் மானிடர் மீது எதிர்மறையான தாக்கத்தையே உருவாக்கின. இந்தக் குழப்பங்களை எல்லாம் நீக்குவதற்கு உரிய ஒரு வழி மார்க்கப் பண்புகளைப் பேணி நடப்பது தான். இந்த குழப்பங்கள் ஒவ்வொன்றிற்கும் யதார்த்தத்தில் நிவாரணம் அளிப்பது மார்க்கமே!

தலைவர்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103

குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியினையும் சமுதாய மக்கள் இன்று சிந்தித்து செயல்பட முன்வரவேண்டும். இன்றைய இஸ்லாமிய சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து பல தலைவர்களின் பின்னால் அணி அணியாக நிற்பதை காணமுடிகிறது. அந்த தலைவர்கள் எதைச் சொன்னாலும் அது சரி என முடிவெடுக்கின்ற நிலையில்தான் இருக்கின்றனர். அது சரியா? தவறா? என்றெல்லாம் சிந்தித்தும் பார்ப்பதில்லை.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நிச்சயமாக உங்களிடையே சில தலைவர்கள் தோன்றுவார்கள்; அவர்களிடம் நல்லவற்றையும் காண்பீர்கள், தீயவற்றையும் காண்பீர்கள். யார் அவர்களின் தவறுகளை கண்டிக்கிறாரோ, அவர் தமது பொறுப்பிலிருந்து நீங்கிவிட்டார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் பாதுகாப்பு பெற்றார். யார் அவர்களது தீய செயல்களைப் பொருந்தி துணை செய்கிறாரோ அவர் நாசமடைந்தார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடன் சஹாபாக்கள் அவர்களிடம் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் போர் செய்யலாமா? என்று கேட்கப்பட்டதற்கு “அதற்கு அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை போர் செய்யக்கூடாது” என்று கூறினார்கள். அறிவிப்பாவர்: உம்முஸமா(ரழி) நூல்: திர்மிதி, அஹ்மத்

வழி கெடுக்கும் தலைவர்களைப் பற்றியே என் சமுதாயம் குறித்து நான் அஞ்சுகிறேன். என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் தான் சத்தியத்தில் உறுதியுடன் இருப்பார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான்(ரழி) நூல்: திர்மிதி

நபி(ஸல்) அறிவிப்புப்படி “ஒரு கூட்டத்தினர் தான் சத்தியத்தில் உறுதியுடன் இருப்பார்கள் என அறிய முடிகிறது. அந்த சத்தியத்தை நாம் மக்களிடம் எடுத்து வைக்கவேண்டிய கடமை முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டு. ஆனால் அல்லாஹ் கூறியபடி, நபி(ஸல்) அவர்கள் அறிவித்த சத்தியத்தை எடுத்து வைப்பதில் ஒற்றுமையாகவோ, உறுதியாகவோ இருப்பதற்கு முன்வருவதும் இல்லை.

ஏன் இந்த நிலை என்பதை சிந்த்திக்கவேண்டும். நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் பிற சமுதாயத்தினர் நம்மை எளிதில் வென்றுவிட முடிகிறது.

நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். அல்குர்ஆன் 2:143

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிாிவை உண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்குர்ஆன் 3:105

இத்தைகைய வசனங்கள் பிரிவை ஏற்படுத்திக்கொள்ளாமல் ஒன்று பட்ட சமுதாயமாகவே இருக்க வேண்டும் என்பதையே தான் வலியுறுத்துகின்றன. ஆதலால்தான் அல்லாஹ் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. 3:103 என்று தனது திருமறையை பற்றிப்பிடிக்க கூறுகிறான். இங்கு அல்குர்ஆனை அல்லாஹ் கயிற்றுக்கு உவமானமாகக் கூறுவதின் நோக்கம் பல தனித்தனி நார்களாக இருந்ததைத்தான் ஒன்றினைத்து கயிறாக உருமாற்றுகிறோம் என்பதை நமக்கு எளிதான உரை நடையில் உணார்த்துகிறான்.

“ஜமாஅத்தை பற்றிக்கொள்ளுங்கள்; பிரிந்து செல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்; எவர் சொர்க்கத்தின் நறுமணத்தை நுகர விரும்புகிறாரோ அவர் ஜமாஅத்தை அவசியமாக்கிக்கொள்ளட்டும்” இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உமர்(ரழி) அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி

ஜமாஅத்தின் (கூட்டமைப்பின்) அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதை மேற்காணும் ஹதீஸ்கள் மூலம் அறியமுடிகிறது. மேலும் கூட்டமைப்புகள் செயல்படும் முறைக்கு உதாரணமாக பல ஊர்களில் ஜமாஅத் கட்டுப்பாடு என்று அமைத்து பல காரியங்களை ஒற்றுமையுடன் செயல்படுத்தி வருகிறார்கள். இதுபோ, நாடு முழுவதும் ஒரே ஜமாஅத்தை முன்னிலைப்படுத்தி ஒரே கருத்தான குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படுத்திட முன்வரலாம். பிரிந்து இருக்கும் பல அமைப்புகளை ஒன்றுபட அழைக்க முயற்சிக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் ஒரே அமைப்பாக செயல்பட முடியும், ஒரே அமீரின் கீழ் செயல்பட முடியும் என்று கூறுவது சரியல்ல.

ஒன்றுபட்டால் ஆட்சி அதிகாரம் நம்மைத்தேடி நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அல்லாஹ் நாடினால் நிச்சயம் நடக்கும். இதை விடுத்து பல குழுக்களாக செயல்படலாம் என முடிவெடுத்து செயல்பட நினைப்பவர்கள் திருமறையின் 3:103, 3:105 வசனங்களுக்கு அவர்களே பதில் கூறட்டும்!

ஒன்று சேர்க்கப்படும் நாள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இப்பிரபஞ்சத்தில் நம்மை அல்லாஹ் சிறந்த படைப்பாகப் படைத்து அதிலும் ஒப்பற்ற மார்க்கமான இஸ்லாத்தை நம் வாழ்க்கை நெறியாக பின்பற்றச் செய்தானே அது அவன் நமக்கு அளித்த மாபெரும் கிருபை. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நாம் சில அடிப்படை விஷயங்கள் மீது நம்பிக்கை கொள்கிறோம். அவை அல்லாஹ்வை நம்புதல், நெறிநூல்களை நம்புதல், வானவர்களை நம்புதல், விதியை நம்புதல் இறுதி நாள் (மறுமை) போன்றவற்றை உண்டென்று நம்பியிருந்தாலும் இறுதியாகச் சொல்லப்பட்ட மறுமை நாள் குறித்து நம்பிக்கை குறைவாகவோ அல்லது அறவே நம்பிக்கை இல்லாத நிலையில் பாராமுகமாகவே பலர் இருந்து வருகிறோம்.

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பாராமுகமாக இருக்கிறார்கள். அல்குர்ஆன் 21-1

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்குர்ஆன் 40-59

இறைவன் இவ்வசனத்தில் கூறுவதற்கு ஏற்ப மறுமை குறித்து நாம் அலட்சியமாகவும், பாராமுகமாகவும் இருக்கிறோம். எவ்வாறெனில் மறுமையை பயந்து அதற்காக தன்னுடைய நல்லறங்களை முற்படுத்தி அனுப்ப வேண்டியவன் எவ்வாறிருக்கிறான் என்றால், படைத்த இறைவனுக்கு இணை வைப்பவனாக, கொலை செய்பவனாக, பொய் பேசுபவனாக, நயவஞ்சகனாக புறம் பேசுபவனாக, பிறர் பொருளை அபகரிப்பவனாக, அமானித மோசடி செய்பவனாக, வரதட்சனை, வட்டி வாங்குபவனாக, விபச்சாரம் செய்பவனாக, பிறர் துன்பம் கண்டு இன்புறுபவனாக தொழுகையில்லாதவனாக, இன்னும் பிற பாவங்களைச் செய்பவனாகவும் இருந்து வருவதே இறைவனின் கூற்றுக்கு சான்றாக இருக்கிறது.

நம்மில் பெரும்பாலோர் அந்நாளில் இறைவனின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று கற்பனைக் கோட்டை கட்டுகின்றனர். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்.

(நபியே!) நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். அல்குர்ஆன் 18-47

இவ்வுலகில் நாம் வாழும் காலத்தில் சில காரியத்தை செய்ய நாடுகிறோம். உதாரணமாக நம்முடை திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றால் அதற்காக பல நாட்களுக்கு முன்பாகவே பல்வேறு திட்டங்கள் தீட்டி பொருளாதாரத்தை தண்ணீராய் இறைக்கிறோம். பல்வேறு சிரமங்களை தாங்கிக் கொண்டு முயன்று உழைக்கிறோமே நாளை நாமனைவரும் சந்திக்க இருக்கும் அந்த மறுமை நாளுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? என்ன முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம் என்ன முற்படுத்தி அனுப்பியிருக்கிறோம்?

இவ்வுலகில் வாழும் காலத்தில் இறைவன் அளித்த அருட்கொடைகளை அனுபவித்து விட்டு, மறுமைக்காக எதையும் செய்யாமல் அந்நாளை அடைந்த துர்பாக்கியசாலி நாளை மறுமையில் கைசேதப்படுவதை அல்குர்ஆன் தெளிவாகச் சொல்கிறது.

அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான். அல்குர்ஆன் 89-23,24

எவர் தன் இறைவனுக்கு பயந்து இறைவன் அளித்த கொடைகளுக்கு நன்றி செலுத்தி நன்மையை முற்படுத்தி அனுப்பியிருந்தாரோ அத்தகைய அடியார்களைப் பற்றி

27-89 (அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு – மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந்தீர்ந்து இருப்பார்கள்.

மேலும் அந்நாளைப்பற்றி அல்லாஹ்வின் வர்ணனையைப் பாருங்கள்.

81-1 சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது 81-2 நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- 81-3 மலைகள் பெயர்க்கப்படும் போது- 81-6 கடல்கள் தீ மூட்டப்படும்போது- 82-1 வானம் பிளந்து விடும்போது 82-3 கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, 82-4 கப்றுகள் திறக்கப்படும் போது, 84-3 இன்னும், பூமி விரிக்கப்பட்டு, 84-4 அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது- அல்குர்ஆன்

70-8 வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்- 70-9 இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)- 86-9 இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். அல்குர்ஆன்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் மறுமை நாளைக் காண விரும்பினால், அவன் (84) سُورَة الإنشِقَاق, (82) سُورَة الإنفِطَار (84) سُورَة الإنشِقَاق ஆகிய மூன்று அத்தியாயங்களை ஓதட்டும்! அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) நூல்: திர்மிதி

அநாளின் நிலமைகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் நம் மனக்கண் முன் கொண்டு வருகின்றனர்.

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் – அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள். 78:37

இவ்வுலக தேவைகளை பிறரிடம் உதவியை எதிர்பார்த்தோ யாசித்தோ காலம் தள்ளிக் கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் உடல் உறுப்புகளைக்கூட தானமாக பெற்று வாழ முயற்சிக்கிறோம். ஒருவனுக்கு இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டது. மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய கட்டாய சூழலில் அவனை பாசத்தை கொட்டி வளர்த்த தாய் தந்தை உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அரவணைத்த உறவினர்கள், உயிராய் பழகிய நண்பர்கள் என சுற்றமும் நட்பும் வரிந்து கட்டிக்கொண்டு அவனுக்கு சிறுநீரகத்தை தானமாய்த் தர முன்வருவர். ஆனால் அமளியான அந்த மறுமை நாளில் இந்த சுற்றத்தாரும் நட்பு வட்டமும் எவ்வாறு இருப்பர் என்பதை திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்.

80-33 ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது – 80-34 அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும் – 80-35 தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; 80-36 தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- 80-37 அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். அல்குர்ஆன்

மனிதனைப் படைத்து அவனுக்கு சுவையான உணவும் சுவையான பானங்களும் சுவாசிக்க காற்றையும், ரசிப்பதற்கு கண்களையும் கேட்பதற்கு செவிகளையும் அவனுக்கு அழகிய வடிவங்களையும் தந்து வாழ்வதற்கு இந்த பூமியை விசாலமாக்கி தந்த அந்த ரஹ்மானுடைய அருட்கொடைகளை மறந்து அவனுடைய வசனங்களை அலட்சியப்படுத்திய இறை மறுப்பாளர்களின் நிலையைப்பற்றி இறைவன்,

88-2 அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். 88-3 அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். 88-4 கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். 88-5 கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். 88-6 அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. 88-7 அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது. அல்குர்ஆன்

இவ்வுலகில் எந்த சரீர சுகத்திற்காக ஓடி ஓடி உழைத்தானோ அந்த உடல் உறுப்புகள் அந்நாளில் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்.

36-65 அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். அல்குர்ஆன்

69-26 “என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- 69-27 “(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? 69-28 “என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! 69-29 “என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அலறுவான்). அல்குர்ஆன்

பயங்கரங்கள் நிறைந்த அந்நாளில் படைத்தவனின் அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்தி அவனை முறைப்படி வணங்கி முறையாக தான தர்மங்கள் செய்து அவனை பயந்து பல நல்லறங்களை முற்படுத்தி அனுப்பியிருந்தானே அந்த நல்லடியார்களைப் பற்றி

80-38 அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். 80-39 சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். அல்குர்ஆன்

69-24 “சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என கூறப்படும்). அல்குர்ஆன்

27-89 (அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு – மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள். அல்குர்ஆன்

அந்நாளிலே வானவர்கள் கூறுவார்கள்

41-31 “நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள் மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது – அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். 41-32 “மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்). அல்குர்ஆன்

மேலும் நபி (ஸல்) அவர்கள் அந்நாளின் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.

எனது இறைவனே! உனது அடியார்களை (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில் உன்னுடைய வேதனையிலுருந்து என்னை காப்பாயாக! நூல்: திர்மிதி, அபூதாவூத்

அந்நாள் நமக்கு மிக இலேசான நாளாக அமைய நாம் நல்லறங்களை முற்படுத்தி அனுப்பத் தயாராவோம். யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து நல்லோர்களுடன் சேர்த்தருள்வாயாக! ஆமீன்.

மார்க்கம் வழங்கப்பட்டது ஏன்?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

படைக்கப்பட்ட கணம் முதல் ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒருவன் இருக்கிறான் எனும் உண்மையை, அவனது மனச்சான்று மற்றும் அறிவுமூலம் உணரும் ஆற்றல் அருளப்பட்டுள்ளான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும், மிகச் சிறிய நுட்பமான கூறு வரை இறைவனின் படைப்பே என்பது தெளிவு. இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு நம்மைச் சுற்றிக் காணப்பெறும் ஒவ்வொன்றும் உறுதியான சான்று ஆகும். வான வீதியில் பறக்கும் பறவை, ஆழ்கடலில் நீந்தும் மீன்கள், பாலைவனங்களில் திரியும் ஒட்டகைகள், தென்துருவத்தில் வசிக்கும் பறக்கவியலாத ஆனால் நீந்தக்கூடிய கடற்பறவைகள், பென்குயின்கள், மனித உடலில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நுண்கிருமிகள், பழங்கள், செடிகள், மேகங்கள், கோளங்கள், முழுமையாக நிறைவான நிலையில் சஞ்சரிக்கும் விண்மீன்கள், பால்மண்டலங்கள், ஆகிய யாவற்றையும் மிக நுண்ணிய அமைப்புகளோடும் மிகச் சிறந்த இயல்புகளோடும் இறைவன் படைத்தான்.

இதுபோலவே இந்தப் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு உறுதுணையாக அமைந்த எல்லா அமைப்புகளும் மிக நுணுக்கமான சமநிலை பேணும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இந்த சமநிலையில் மில்லிமீட்டர் அளவு மாற்றம் அல்லது பிறழ்வு ஏற்பட்டாலும் புவியில் வாழ்வது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். அந்தச் சமநிலை பற்றிச் சிறிது உற்று நோக்கினால் மிகச் சிறந்த முறையில் அவை கணிக்கப் பெற்றிருப்பதும் அவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப் பெற்றிருப்பதும் புலனாகும். எடுத்துக்காட்டாக பூமி சற்றே குறைந்த வேகத்தில் சூரியனைச் சுற்றி சுழன்றால் பகலுக்கும் இரவுக்கும் இடையில் மிக அதிகமான அளவில் வெட்பநிலை வேறுபாடு உண்டாகும்; வேகமாகச் சுழன்றால் சூறாவளியும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு புவி வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விடும்

இதுபோல, இந்தப் புவியை உயிர்வாழ்வதற்கு ஏற்ற ஒரு கோளாக அமைய உதவும் பல நுண்ணிய சமநிலை பேணும் படைப்பினங்கள் உள்ளன. இவையாவும் எதேச்சையாக எழுந்தவை என்று கூறவியலாது. இத்தகைய நேர்த்தியான திட்டங்களும் சமநிலைகளும் எல்லாம் குருட்டாம் போக்கில் உண்டானவை என்று எந்த அறிவுடைய மனிதனும் கூறமாட்டான். ஒரு காரோ, கேமராவே ? படம் பிடிக்கும் கருவியோ – அதை வடிவமைத்த விழிப்புடைய ஒருவரை நினைவூட்டுகிறது. இதுபோலவே, ஒன்றை ஒன்று சார்ந்துள்ள பல இணைப்பு முறைகள் நிறைந்த இந்தப் பிரபஞ்சம், தானாகவே உருவான தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்ளக் கூடிய ஒரு பருப்பொருள் என யாரும் முடிவு கட்ட முடியாது. இறைவன், இவையாவும் அவனால் படைக்கப்பட்டவை எனும் உண்மையை நமக்கு குர்ஆனில் அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டி ருக்கிறான்.

மேகத்திலிருந்து உங்களுக்கு மழையை பொழியச் செய்பவன் அவன் (இறைவன்)தான். அதிலிருந்து தான் நீங்கள் நீர் அருந்து கிறீர்கள்; நீங்கள் உங்கள் கால் நடைகளை மேய்க்கும் புற்பூண்டுகளுக்கு நீரும் அதிலிருந்தே பெறுகிறீர்கள். அதிலிருந்தே உங்க ளுக்காக பயிர்பச்சைகளையும், ஆலிவ் பழங்களையும் காய்க்கச் செய்கின்றான். சிந்தித்து அறியக் கூடிய மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சி உள்ளது. இரவையும் பகலையும் உங்களுக்குப் பயன்படும் வகையில் படைத்துள்ளான். சூரியனையும் சந்திரனையும் விண்மீன்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் இணங்கிச் செயல்படும்படி படைத்திருக்கிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சி இருக்கின்றது. மேலும் விதவிதமான வண்ணங்கள், அவன் உங்களுக்காக படைத்தவை யாவற்றையும் கவனிப் பவர்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது. (அந்நஹ்ல் 16:10-13)

இவையாவைற்றையும் படைத்தவன் படைக்கும் ஆற்றல் இல்லாதவனுக்கு ஒத்தவனாவானா? நீங்கள் இதைக் கவனிக்க வேண்டாமா? (அந்நஹ்ல் 16 :17)

மேலே கூறப்பட்டவற்றை ஆழ்ந்து சிந்தித்தால், மார்க்க(மத) அறிவு அறவே இல்லாதவரையும் கூட இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணரச் செய்து அவனுடைய வல்லமையையும் ஆற்றலையும் பாராட்டத்தூண்டும்; தன்னுடைய உடலைப் பற்றி சிந்தித்தால் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கும் மிகச் சிறந்த படைப்பை உணரத் தூண்டும்.

அகில உலகங்களையும் காத்தருளும் இறைவனே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் இயற்கையையும், மனிதனையும் படைத்தவன் ஆவான். உயிரினங்கள், மனிதன் உட்பட யாவற்றுடையவும் தேவைகளை நன்கறிந்தவனும் அவனே ஆவான். அதனால் தான் மனிதனுக்கு மிகவும் பொருத்தமான வாழ்க்கை முறையாக இறைவன் வழங்கிய மார்க்கம் விளங்குகிறது. இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிப் பிடித்தாலே மக்கள் அமைதியாக மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

இறைவன் வழங்கி அருளிய நெறி நூலைப் பற்றி அறியாத மனிதன் கூடத் தன்னைச் சூழ்ந்துள்ளவற்றை, உற்று நோக்கிச் சிந்தித்தால், இறைவனை உணர்ந்து கொள்ள முடியும். புரிந்துகொள்ள கூடிய மக்களுக்கு உலகில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ( 3:191,192)

வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன. இத்தகையோர் நின்ற நிலையிலும் அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும்போதும் அல்லாஹ்வை நினைந்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, ?எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன்; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக? என்று பிரார்த்திப்பார்கள். (3:191,192)

இந்தச் சந்தர்ப்பத்தில் மார்க்கத்தின் தேவை வெளிப்படுகிறது. இதற்குக் காரணம், படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்ந்த மனிதன் நிச்சயமாக அவனை நெருங்கவே விரும்புவான். அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைவான். அவனுடைய நேசத்தையும் கருணையையும் பெறுவதற்குரிய வழிகளைக் காண நாடுவான்; இதற்குரிய ஒரே வழி குர்ஆன் வலியுறுத்தும் பண்பாடுகளை நன்றாக அறிந்து கொள்வதுதான். குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு, மாற்றம் ஏதும் இல்லாதது; இஸ்லாமின் வழிகாட்டும் நூல்; இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம்.