இஸ்லாம்தளம்

பிப்ரவரி11, 2009

நல்லடியார்களின் கப்ருகளின்மீது…

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ரஸூல் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின்மீது எதனையும் எழுப்படுவதையும் தடுத்துள்ளார்கள் என அவர்களின் அன்புத்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி)

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால், அல்லாஹ் சபித்துவிட்டான் என தன்னுடைய மரண தருவாயில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், என அவர்களின் அன்பு மனைவி அன்னை ஆயிஸா அவர்கள் அறிவித்துவிட்டு, “இவ்வாறு ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கா விட்டால் அவர்களின் கப்ரும் (தரைமட்டத்தைவிட)உயர்தப்பட்டிருக்கும் “என்று கூறினார்கள் .(புகாரி)

கப்ருகள் பூசப்படுவதையும் , அதன்மீது உட்கார்வதையும் ரஸூல் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஜாபிர் (ரலி) முஸ்லிம்

யூத, கிறிஸ்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும்போது அவனது கபுரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக்கொள்வார்கள், நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னை ஆயிஸா (ரலி) (புகாரி)

கப்ருகளுக்கு ஸஜ்தா செய்வாயா ?
நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.” அவ்வாறு நான்செய்யமாட்டேன் “என நான் பதில் கூறினேன் . அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு ஸஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள் . கைஸிம்னு சயீத் (ரலி) (அபூதாவூத்)

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை……
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை ரஸூல் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் .என அவர்களின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் . (இப்னுமாஜா) . .

தரை மட்டத்திற்குமேல் உயரமாகக் கட்டப்பட்ட எந்த கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டுவிடாதே! என்று நபி(ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள் அதே பணியைச் செய்து வர உன்னை நான் அனுப்பி வைக்கிறேன் என்று அபுல் ஹய்யாஜ் என்பவரை நோக்கி அலி (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்

யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அபூஹுரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்

பட்டதாரிகள் முதல் பாமரர்கள் வரை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மனிதரில் எவரும் தன்னை அறிவற்றவர் என்று ஒப்புக் கொள்வதில்லை. அறிவு வளர வளரத்தான் தன்னுள் எந்த அளவு அறியாமை குடி கொண்டுள்ளது என்பது புலப்படும். விண்ணையும் மண்ணையும் தன்னையும் படைத்து போஷித்துப் பரிபாலித்து வரும் இணை துணையற்ற ஒரே ஒரு இறைவன் இருக்கிறான் என்பதை பகுத்தறிய முடியாதவர்கள் தங்களை அறிவு ஜீவிகள் என்று அலட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதே போல் அந்த இறைவனை ஒப்புக்கொண்ட பின்னர் அவனது தனித்தன்மைகளை, தெய்வாம்சங்களை இறந்து போன மனிதப் புனிதர்களுக்கும் மற்றும் படைப்பினங்களுக்கும் கொடுத்து மரியாதை செய்பவர்களும் அறிவாளிகளாக இருக்க முடியாது.

இறைத்தன்மைகளை இறைவனது படைப்பினக்களுக்குக் கொடுத்து மரியாதை செய்வது, ஒரு மனைவி தனது கணவனது ஸ்தானத்தில் மற்றொரு ஆடவனை வைத்து மதித்து நடந்தால் அவளது கணவன் அவள் மீது எந்த அளவு ஆத்திரப்படுவானோ அவளை மன்னிக்க மாட்டானோ அதைப்போல் பல ஆயிரம் மடங்கு இறைவன் கோபப்படுகிறான். அப்படிப்பட்டவர்களை மன்னிக்கவே மாட்டான் என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்க முடியும். ஆனாலும் ஷைத்தானின் பிடியில் சிக்கி இப்படிப்பட்ட காரியங்களில் மூழ்கி இருப்பவர்களே இவ்வுலகில் பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். அவர்களே தங்களைப் பெரும் அறிவு ஜீவிகளாக எண்ணிக் கொள்கின்றனர்.

இந்த அறியாமை அறிவாளிகளிடமும் புறையோடிப் போயிருப்பதுதான் வேதனையான விஷயம். தெள்ளத் தெளிவான அல்குர்ஆனையும், இரவுப் பகலைப் போன்று வெளிச்சமுடைய நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் கொண்டுள்ள முஸ்லிம்களில் பெருந்தொகையினர் இறந்து போனவர்களை அடக்கம் செய்து கபுருகளைக் கட்டிக்கொண்டு ஊரெல்லாம் உண்டாக்கிக் கொண்டு 18:102 இறைவாக்கிற்கு முரணாக இறை அடியார்களை தங்கள் பாதுகாவலர்களாக்கி அவர்களிடம் போய் பரிந்துரைக்காக முறையிடும் அவலத்தைப் பார்க்கிறோம்.

அத்தியாயம் 18:102 லிருந்து 106 வரையிலுள்ள இறைவாக்குகளை உற்று நோட்டமிட்டால், அல்லாஹ் மன்னிக்காத மாபெரும் இணைவைக்கும் குற்றத்தை அவர்கள் செய்து வருவது புலப்படும். ஆயினும் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முல்லாக்களின் தவறான வழிகாட்டலில் இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு இறங்கியது என்று கூறுகிறார்கள். முஸ்லிம் என்று தன்னைக் கூறிக்கொண்ட நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான மக்கத்து குறைஷ்கள் இறைவனது அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக, அதாவது தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பவர்களாக (பார்க்க 10:18) அல்லாஹ்வை நெருங்கச் செய்பவர்களாக (பார்க்க 39:3) எடுத்துக்கொண்ட காரணத்தால் அவர்கள் ஒரு நபியுடைய சந்ததிகளாக இருந்தும் காஃபிர்களாக ஆனார்கள் என்ற உண்மையை அறியத் தவறி விடுகிறார்கள். இவர்களும் தங்களை அறிவு ஜீவிகள் என்றே இறுமாந்திருக்கிறார்கள்.

இந்த அறியாமையிலிருந்து விடுபட்டுள்ள முஸ்லிம்களில் பலர் மத்ஹபு மயக்கத்திலும் தரீக்கா மோகத்திலும் மூழ்கி இருக்கிறார்கள். இவையும் அல்லாஹ்வின் தனித்தன்மைக்கும் அவனது நேரடி கட்டளைக்கும் மாறு செய்வதே (பார்க்க 2:170, 7:3, 33:36,66,67,68) என்பதை உணர முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தங்களை அறிவு ஜீவிகள் என்றே கூறிக்கொள்கிறார்கள்.

இவற்றை விட்டு விடுபட்டவர்களில் பலர் குர்ஆன், ஹதீஸ் படி நடக்கிறோம் என்று பல பிரிவுகளாகவும் பல இயக்கங்களாகவும் பிரிந்து செயல்படுகிறார்கள். மேலும் பலர் குர்ஆன் ஹதீஸ் பார்த்து விளங்குகிறவர்கள் தவ்ஹீத் ஆலிம் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும், என்னதான் நாம் விளங்கினாலும் அரபி படித்த மவ்லவியை சார்ந்திருப்பதே மேலானது, சாலச் சிறந்தது என்ற மயக்கத்திலேயே இருக்கின்றனர் படித்த பட்டதாரிகளிலிருந்து பாமரகள் வரை.

இப்படி ஒவ்வொருவரும் தாங்கள் தான் அறிவாளிகள் என்ற மெலெண்ணத்தில் அறியாமையிலும், வழிகேட்டிலும் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஷைத்தானின் சூழ்ச்சிகள் அனைத்தையும் விட்டு விடுபட்டு தூய்மையான எண்ணத்தோடு சமுதாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்ற ஆர்வ துடிப்பு மிக்கவர்கள் சத்தியத்தை தெளிவாக உணர்ந்தாலும், அந்த சத்தியம் மக்கள் மன்றத்தில் எடுபடாத காரணத்தால் மனம் குன்றி எதிர் நீச்சல் போடுவதில் சோர்வடைந்து மக்கள் மனப்பான்மைக்கு ஏற்றவாறு சிறிதாவது வளைந்து கொடுத்தால் தான் பிரச்சார பணி புரிய முடியும் என்று எண்ணுகின்றனர்.

தன்னைப் படைத்த இறைவனைத் தனது எஜமானனாக ஏற்று அவனது கட்டளைகளை அப்படியே ஏற்று 33:36 இறைவாக்கில் சொல்லியிருப்பது போல் அதிலிருந்து அனுவத்தனையும் பிசகாது அப்படியே குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ் வழியொட்டி நடப்பவனே உண்மையான அறிவு ஜீவியாகும்

மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர்கள் உறுதியும் துணிவும் நிறைந்த பண்பு நலன்கள் பெற்றிருப்பர்!

அறியாமை நிறைந்த சமுதாயங்களில் மக்கள் உறுதி வாய்ந்தவர்களாகக் காணப்பட்டாலும் அவர்கள் குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டவர்கள் தாம். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களின் பலகீனத்தை எதிர்த்துச் செயல்பட முடியாது. மிகவும் கண்டிப்பான கொள்கைகளை கடைப்பிடிப்பவர் என அறியப்பட்டவரும் கூட தன்னுடைய நலன்கள் கேள்விக்குறிக்கு ஆளாகும் போது தன்னுடைய விதிகளை மீறி விடுவார். நிர்ப்பந்தம் ஏற்படும் போது, தொல்லைகள் எழும்போது, இடர்ப்பாடு அல்லது நோய்க்கு ஆளாகும் போது அல்லது கண்டிக்க அக்கம்பக்கத்தில் யாருமில்லை என்று உணரும் போது எந்த விதியையும் கடைப்பிடிப்பதில்லை. எந்த வரையரையையும் கையாளுவதில்லை. தங்கள் கொள்கைகளை மீறாமலிருக்கவோ அல்லது தங்களின் விருப்பங்களை விட்டுக் கொடுக்கவோ தகுந்த காரணம் இல்லாதப் போது கவர்ச்சி மிக்க பிரேரணைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனாலும் முன்னர் குறிப்பிட்டதுப் போல் ஒருவர் இதுப்போன்று ஒரு தவறை முன்பு இழைத்திருக்கிறாரா அல்லவா என்பது முக்கியமன்று. மார்க்க நெறிமுறைகளைக் கவனத்தில் கொள்ளாதவருக்கு தன்னுடைய தன்னல ஆர்வங்களுக்கு முன்னுரிமை வழங்குவதைத் தடுக்க தகுந்த காரணம் இல்லை என்பது தான் முக்கியம். இறையச்சம் இல்லாத போது, இத்தகைய மனிதனுக்கு தன்னுடைய மனதிட்பத்திற்கு உகந்து நடக்கும் திராணி இல்லாமல் போகும்.

இஸ்லாமிய ஒழக்க நெறிகளை உணர்ந்த அறியும் ஆற்றல் படைத்த ஒருவரின் நிலை வேறு விதமாக இருக்கும். தான் உண்மை என நம்புவதை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என்ற தீர்மானத்தை முறியடிக்க எதனாலும் முடியாது. இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணம் அவனுக்குள்ள ஆழ்ந்த இறையச்சமே. இறைவன் யாவற்றையும் காண்கிறான், செவியுறுகிறான், இதயத்தில் மறைந்துள்ள அனைத்தையும் அறிவான் எனும் உண்மையை உணர்ந்துள்ளான்; மேலும் தான் எப்போதும் இறைவனின் முன்னிலையிலேயே இறை நம்பிக்கை உடைய ஒருவனிடம் தனிமனிதச் சிறப்பியல்பும் மனதிட்பமும் காணப் பெறும்; இறைவன் விதித்துள்ள வரையறைகளைப் பேணி நடப்பான். இறைவனுக்கு அதிருப்தியளிக்கும் எதையும் எப்பொழுதும் செய்யவே மாட்டான். வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும் சரி, எப்பொழுதும் இறைவனின் நினைவு மாறாமல் இருக்கவே நாடுவான்; அதில் சோர்வடைய மாட்டான். இது குர்ஆனில் கீழ்வருமாறு கூறப்படுகிறது.

காலையிலும் மாலையிலும் அவனை(இறைவனை) துதி செய்துக் கொண்டும், வணிகப் பறிமாற்றத்தில் இறைவனை நினைவு கூர்வதிலும், தொழுகையை நிறைவேற்றுவதிலும், ஜகாத் வழங்குவதிலும் உறுதியாக நின்று, உள்ளங்களும் பார்வைகளும் நிலைகுலையும் நாளைப் பற்றிப் பயந்தவர்களாக அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றை விடச் சிறந்த கூலியை, இறைவன் தன் அருளால் அதிகமாகவே வழங்குவான் என்று நம்பி வாழும் பலர் இருக்கின்றனர். இறைவன் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குவான். (24:36, 37,38)

இஸ்லாமிய ஒழுக்க நெறி தன்னல வேட்கையை நீக்கும்

மார்க்கக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்காதவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலை கொள்வதில் வியப்பில்லை. அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் தத்துவங்கள் கோருபவற்றில் இதுவும் ஒன்று என்பது உண்மை. தியாகம் செய்ய முன் வருதல், இரக்கம், நல்லொழுக்கம் ஆகிய பண்புகள் எல்லாம் மார்க்கம் வலியுறுத்துபவை; மார்க்கமே அவற்றை நெஞ்சார விரும்பக் கோருகிறது. வாழ்ந்து மரணமடைந்த பின் மறுமையில் தங்களுடைய செயல்பாடுகளுக்குக் கணக்குக் கொடுத்தாக வேண்டும் என்று நம்பும் இறை நம்பிக்கையாளர் தாம் குர்ஆன் அறிவுறுத்தும் ஒழுக்க நெறிகளை முற்றிலும் நடைமுறைப்படுத்துவார்கள். இறை நம்பிக்கையற்றவர் இத்தகைய நற்பண்புகள் உடையவராகத் திகழ்வார் என எதிர்ப்பார்க்க வியலாது. மேலும் இறைநம்பிக்கையற்றவர் “தன்னலம் மிக்க இத்தகைய மக்கள் அங்கே காணப்படுகிறார்கள்; நான் நிச்சயமாக அவர்களில் ஒருவன் அல்லன்” என்று சொல்வது முற்றிலும் தவறாகும். மார்க்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்க்கு தன்னலம் பேணுவதைத் தவிர வேறு வழியில்லை. வேறு பல ஒழுக்கக் கேடுகளைத் தூண்டும் மனப்பான்மைக்கு எது காரணமோ அதுவே தான் இதற்கும் காரணம் ஆகும். அவற்றில் சில: மறுமையில் நம்பிக்கையின்மை; இவ்வுலகில் இழைக்கப்படும் ஒவ்வொரு தீய செயலும் மறுமையில் தண்டனை பெற்றுத்தரும் என்பதை நம்பாதது, இறையச்சம் இன்மை.

மார்க்கப் பண்புகளை பேணி வாழாதவர்கள் தன்னலம் ஒன்றிலே அக்கறைக் கொண்ட மற்றவர்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல் வாழ்வதற்கு இது தான் காரணம். இவர்களுடைய வாழ்க்கையின் முக்கிய நோக்கம், செல்வம் குவிப்பது, தொழில் அபிவிருத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, ஆகியவைத் தாம். உற்றார் உறவினரின் தேவைகளை நிறைவேற்ற உதவுவது, வறியவர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவுவது, சமுதாய நலனுக்காகத் தன்னால் இயன்றதை வழங்குவது ஆகியவை எல்லாம் பொதுவாக அவர்கள் மனதில் வெகு அபூர்வமாகவே உதிக்கும். இறை நம்பிக்கையற்றவரின் இப்புவி வாழ்க்கையை பற்றிய கணிப்பில், தியாகம் புரிவது அல்லது நல்ல செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணங்களெல்லாம் இடம் பெறாததே இதற்கு காரணம். அவர்களை சூழ வாழும் மக்களிடமும் இதற்கு மாற்றமான மனப்பான்மையையும் செயல்பாட்டையும் காணவியலாது. ஒட்டுமொத்த சமுதாயமே இந்த முறையில் தான் செயல்படுகிறது. சமுதாயத்தில் அனைவருமே இதே மனப்பான்மை உடையவராகத் திகழ்வது அவர்களின் மனசாட்சிக்கு ஊக்கம் அளிக்கிறது.

சுருக்கத்தில், மார்க்கக் கொள்கைகளும், நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படாத சமுதாயத்தில் தன்னல வேட்கை தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு வரும் எவ்வித விதிவிலக்குமின்றி தன்னலம் உடையவர்களாகவே திகழ்வார்கள்.

எதையும் உருவாக்க முடியாத, தான் எனும் அக நிலையில் (நஃப்ஸ்), இத்தகைய தன்னல வேட்கையை நுழைய செய்து இறைவன் மனிதனைச் சோதிக்கின்றான். மனிதனின் இந்த வேட்கையைப் பற்றி இறைவன் குர்ஆனில் கீழ் வருமாறு கூறுகிறான்:

ஒவ்வொரு மனிதனும் தன்னல வேட்கைக்கு ஆளாகி விடுகிறான். நீங்கள் நன்மை செய்து இறைவனுக்கு அஞ்சி நடந்தால் இறைவன் நீங்கள் செய்வதை தெரிந்துக் கொள்வான். (41:128)

தன்னலம் பாராட்டும் மக்கள் பொதுவாகத் தாங்கள் உறுதிக் கொண்டவற்றை, அவை அற்பமானவையாக இருப்பினும் சரியானவை என்றே வலியுறுத்துவார்கள். தன்னலமுடைய ஒருவன் களைத்திருக்கும் போதும் அமர்ந்து களைப்பாற நினைக்கும் போதும், பக்கத்தில் சோர்ந்து நிற்கும் ஒரு முதியவர் அல்லது நோயாளியைக் கண்டு கொள்வதே இல்லை. மற்றவர்களைப் பற்றிக் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல் ஒவ்வொன்றிலும் மிகச் சிறந்ததையே அடைய விரும்புவான். தன்னுடைய வசதிக்காக மற்றவர்க்குத் தொல்லை ஊட்டுவதால் எவ்விதச் சலனமும் அவன் மனதில் ஏற்படுவதில்லை. தான் அலுவலில் ஈடுபடும் போது அமைதியை நாடும் அவன், பிறர் பணிபுரியும் போது அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அவனுடைய தன்னல வெறி பல்வேறு வழிகளில் குடும்ப வாழ்க்கையிலும் அலுவலகத்திலும் வெளிப்படும்.

இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களில் கூட, நற்செயல்களுக்குப் பெயர் போன சிலர் காணப் பெறுவர். தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் தாராள மனப்பான்மையுடன் நடந்துக் கொள்வார்கள். இறைவனின் திருப்தியைப் பெறுவதில்லை. இதற்கு காரணம், பண்பாளர் என்று பிறரால் மதிக்கப்பட வேண்டும் என்பதே; இதன் நோக்கம் புகழ்பட வேண்டும், பாராட்டும் நற்பெயரும் மக்களிடமிருந்து பெற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இவர்கள் ஏழைகளுக்கு என ஒதுக்குவது அவர்களின் வருமானத்தோடு ஒப்பிடும் போது மிக அற்பமானதே.

இலட்சியவாதிகள் பொறுப்பேற்கவும் தலைமை தாங்கவும் விழைவார்கள். இதிலும் இவர்களின் நோக்கம் இறைவனின் திருப்தியைப் பெறுவதோ மக்களுக்கு சேவை புரிவதோ அன்று. செல்வாக்கும் புகழும் பெற்று சமதாயத்தில் தகைமை (அந்தஸ்து) மிக்கவர்களாக உயர வேண்டும் எனும் தங்களின் ஆசாபாசங்களை நிறைவேற்றவே உழைக்கிறார்கள். தங்களுடைய ஆர்வம் பாதிக்கப்படும் போது அவர்களின் உண்மை வடிவம் வெளிப்படும்.

மார்க்கப் பண்புகள் பின்பற்றப்படாத சமுதாயங்களில், தாராள மனப்பான்மையுடையவர்களாகக் கருதப்படுவார்கள், தியாகம் செய்யும் இறை நம்பிக்கையாளர்களோடு ஒப்பிடப்படும் போது தன்னல வாதிகளாகவே கணிக்கப் பெறுவர். இறை நம்பிக்கையாளர்கள் “தன்னலத் தியாகம்” எனும் தத்துவத்தை புரிந்துக் கொண்ட விதத்திற்கும் பாராதூரமான வேறுபாடு உள்ளது. உண்மையான இறை நம்பிக்கையாளர்கள், எப்பொழுதும் தங்களின் தேவையை விட மற்றவரின் தேவைக்கே முக்கியத்துவம் நல்குவார்கள். தங்களின் சகோதரர்களுக்கும் சகோதரரிகளுக்கும் தங்கள் மனப்பூர்வமாக நலனையே நாடுவார்கள். குர்ஆன் வலியுறுத்தும் ஒழுக்கத்தையே இது பிரதிவலிக்கிறது.

இறைவன் மீதுள்ள அன்பின் காரணமாக அவர்கள் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் சிறைவாசிகளுக்கும் உணவளிப்பார்கள். (76:8)

இத்தகைய ஒழுக்க உணர்வால், இறை நம்பிக்கையாளர்கள் ஒடுக்கப்படும் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்காக இறைவனுடையப் பாதையில் போராடுவார்கள். (4:75)

தங்களுடைய நலனையும் தேவைகளையும் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பேற்று பொது நன்மையை நாடுவார்கள்.

என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, ஒரு மணிதன் தான் தனக்காக விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை இறை நம்பிக்கைக் கொண்டவனாக மாட்டான். என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ, முஸ்லிம்)

மார்க்கப் பண்புகள் மேலோங்கி நிற்கும் போது, சமுதாய உறவுகள் தியாகத்தின் அடிப்படையில் அமையும். இதனால் பல பிரச்சனைகள் மறைந்து விடும்.

மூலம் : ஹாரூன் யஹ்யா

தமிழில் : H. அப்துஸ் ஸமது, இன்ஜினியர்.

இறைவனை நெருங்குவதற்குரிய வழி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَابْتَغُواْ إِلَيهِ الْوَسِيلَةَ மூமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் (வஸீலா) தேடிக்கொள்ளூங்கள், (அல்குர்ஆன் 5:35)

வஸீலா என்றால் அரபி அகராதியில் ஏணி, துணைச்சாதனம் என்ற அர்த்தத்தை கொண்டிருக்கிறது. வல்ல அல்லாஹ் நமக்கு மூன்று வகையான வஸீலாக்களை அனுமதித்துள்ளான்.

1, இறைவனின் அழகிய திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடுதல்.

2, நம்முடுடைய ஸாலிஹான நல்ல அமல்களைக்கொண்டு வஸீலா தேடுதல்

3, ஸாலிஹான செயல்களையுடைய அடியார்களிடம் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது நமக்காக துஆ செய்யச் சொல்லி வஸீலா தேடுதல்.

وَلِلّهِ الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُواْ الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَآئِهِ سَيُجْزَوْنَ مَا كَانُواْ يَعْمَلُونَ அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்.அவனுடய திரு நாமங்களில் தவறிழைப்போரை(புறக்கணித்து) விட்டு விடுங்கள். அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் தக்க கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7:180) மேற்சொன்ன வசனத்தின் வாயிலாக இறைவனது அழகிய திருநாமங்களைக் கூறி பிறார்த்தித்து “வஸீலா” தேடுவதற்கு அனுமதி இருப்பதை காணலாம்.

وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ நீங்கள் பொருமையைக்கொண்டும், தொழுகையைக்கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் 2:45) பனூ இஸ்ரவெல் காலத்தில் நடந்ந குகையில் அடைப்பட்ட மூன்று நபர்களின் சம்பவம் ஸாலிஹான நல் அமல்களைக் கொண்டு வஸீலா தேடுவதற்கு ஒரு சரியான எடுத்துக்கட்டாகும்.

கடுமையான மழையின் காரணமாக மூவர் ஒரு குகையினுள் ஒதுங்கிய போது, கடுங்காற்று அத்துடன் வீசியதால் பெரிய கல் ஒன்று உருண்டு வந்து குகை வாயிலை அடைத்துக்கொண்டது. அங்கிருந்த கல்லை நகற்ற முடியாத அம்மூவரும் அவரவர்களின் நல்அமல்களை இறைவனிடம் முறையிட்டு வழி திறக்க துஆ செய்தார்கள். இது நீண்ட சம்பவத்தின் சுருக்கம் (புஹாரி,முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் காணலாம்) மெற்கண்ட சம்பவத்தின் மூலம் நல் அமல்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதை அறிகிறோம்.

ஒரு நல்ல அடியார் உயிருடன் இருக்கும் பொழுது நம்முடைய தேவைகளுக்காக துஆ செய்யச் சொல்லி وَسِيلَةَ “வஸீலா” தேடுவதற்கு உமர்(ரழி) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவம் ஒரு சிறப்பான எடுதுக்காட்டாகும். உமர்(ரழி) காலத்தில் மழை இல்லாமல் கடுமையியான பஞ்ஞம் ஏற்பட்டது. அப்பொழுது உமர்(ரழி) அவர்கள் அன்றைய கால கட்டத்தில் நல்லடியாராகக் கருதப்பட்ட நபி (ஸல்) கொண்டு மழைக்காக பிரார்தனை செய்யச்சொல்லி, மழை வந்து செழிப்புற்று பஞ்சம் நீங்கியது. (புஹாரி)

வஸீலா தேடுவதற்குரிய வழிகளை இறைவனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இவ்வளவு தெளிவாக்கிய ஒரு விஷயத்தில் தவறான கருத்துக்களைப் புகுத்தி, மார்க்கதிற்க்கு முரணாக இறந்த நமது முன்னோர்களின் பொருட்டால் கேட்டு பலர் வழி தவறிக்கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது நாமும் உயிருடன் விழித்த நிலையில் இருக்கும் ஸாலிஹான நல்லடியார் ஒருவரை அழைத்து துஆ செய்யச் சொல்லலாம். நமது தேவையைக் கேட்டுப் பெறலாம். ஆனால் சிறிய மெளத்தாகிய தூக்கத்தில் இருக்கும் ஒரு நல்லடியாரிடம் நமது தேவைகளைக் கேட்டால் பதில் அளிக்கமாட்டார்; இந்நிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து அடக்கமாகி விட்டவர்களிடம் போய் கேட்டால் பதில் கிடைகுமா? கபுருகளுக்கு சென்று முறையிடும் நமது சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டாமா?

وَمَا يَسْتَوِى الاٌّحْيَآءُ وَلاَ الاٌّمْوَاتُ உயிருள்ளோரும், மரணித்தோரும் சமமாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 35:22) என்ற தெளிவான இவ்வசனத்தையும் கவனிக்க வேண்டாமா? இம்மாதிரி நல்லடியார்களிடம் முறையிடுவதை வல்ல அல்லாஹ் வண்மையாக கண்டிப்பதைப் பாருங்கள்.

أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاء إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا “இந்த காபிர்கள் அல்லாஹ்வாகிய நம்மை விட்டுவிட்டு நம்முடைய அடியார்களை தங்களுடைய அவுலியாக்களாக எடுத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறார்களா? நிச்சயமாக அப்படிப்பட்ட காபிர்களை உபசரிக்க நாம் நரகத்தை சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். (அல் குர்ஆன் 18:102) மேலும் இறைவன் இவர்களைப் பற்றி கூறுகிறான்.

قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا தங்களுடைய அமல்களில் பெரிய நஷ்டம் அடைந்தவர்களை நாம் அறிவித்து தரட்டுமா (நபியே!) நீர் கேளூம் (அல்குர்ஆன் 18:103)

الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا அவர்கள் பாவமான கருமங்களைச் செய்து கொண்டு, மெய்யாகவே நாங்கள் மிக நல்ல காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்வார்கள் .(அல்குர்ஆன் 18:104) இவ்வுளவு தெளிவாக உள்ள இவ்விஷயத்தை உலக ஆதாயம் தேட முனையும் சிலர் பின் வரும் வசனத்தை காட்டி மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் இதை உண்ர்ந்து கொள்ளமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)

இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ்வின் பாதையில் இறந்த நல்லடியார்கள் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறார்கள் என்று இறைவன் கூறுகிறான். எனவே அவர்களிடம் உதவி கேட்கலாம், சிபாரிசு செய்யச் சொல்லாம் என வாதிடுகின்றனர். இதே வசன இறுதியில் அவர்கள் எப்படி உயிருள்ளவர்கள் என்பதை நீங்கள் உணரமாட்டீர்கள் என்று இறைவன் தெளிவாகக் கூறுவதை இவர்கள் உணரவில்லை.

மேலும் இவ்வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். நல்லடியார்களின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் உடலில் புகுத்தப்பட்டு சுவர்க்கத்தில் உலவி கொண்டுயிருப்பார்கள்: அங்குள்ள கனிகளைப்புசித்து மகிழ்வார்கள். (நூல்: அபூதாவூத்)

எனவே நல்லடியார்கள் சுவர்கத்தில் உயிருடன் இருக்கிறார்கள், கபுருகளில் உயிருடன் இல்லை. அல்லாஹ் கூறுவது போல் நம்மால் உணர முடியாத ஒரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. எனவே கண்ணியமிக்க இஸ்லாமிய சமுதாயத்தவர்களே! இறைவன் அனுமதித்த வழியில் இறைவனை நெருங்குவதற்குரிய வழியைத்தேட முற்பட்டு இம்மையிலும், மருமையிலும் ஈடேற்றம் அடையுங்கள். வல்ல அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரையும் அவனது நேர் வழியில் நடத்தாட்டுவானாக!

கருத்து வேறு! தகவல் வேறு!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நாங்கள், எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் “முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது” என்று சொல்கிறீர்கள்! என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”

நம்மைப் பார்த்து அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. அறிவுடையோரைக் கூட தடுமாற வைக்கும் சாமார்த்தியம் நிறைந்த போலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்வி இது! சற்று விரிவாகவே இதை அணுக வேண்டும்.

மனிதனுக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. இப்புலன்களின் வழியாகவே பொருட்களை செய்திகளை, உணர அறிய முடிகின்றது, கண்ணால் ஒரு பொருளைக் காண்கிறோம். அதன் பெயரைச் செவி வழியாக அறிகிறோம். அதன் மனம் என்ன என்பதை உணர, மூக்குத்தான் உதவுகிறது. அதன் சுவையை நாவால் உணர்கின்றோம். அதன் மென்மையையும், வன்மையையும் கையால் தொட்டு உணர்கிறோம். இது புலன்களின் தனித்தனி பணி!

பிறவியிலேயே கண்பார்வையற்ற ஒருவன்; ஒரு பொருளின் நிறத்தையோ, உருவத்தையோ அறிய முடியாது. உதாரணமாக “கொக்கு வெண்மையான பறவை” என்று சொன்னால், அவனால் கொக்கையும், வெண்மையையும் உணர முடியாது. அது போல், காது கேட்கும் சக்தியற்ற ஒருவனிடம் ஒரு பொருளைக் காட்டி, அதை ஓசைப்படுத்தினால், அவன் அப்பொருளிலிருந்து வரும் ஓசை இன்னதென்று உணர மாட்டான். மூக்கு பழுதுபட்டு முகர்ந்தறியும் சக்தியற்ற ஒருவன், பொருளின் மனத்தை முகர முடியாது. அது போல் நாவின் நரம்புகள் பழுதுவிட்டு, நாவு மரத்துப் போன ஒருவன், இனிப்பு, கசப்பு போன்ற சுவைகளை உணர முடியாது.

ஆனால், ஒரு கருத்து சரியா? தவறா? என்பதைப் புலன்களால் மட்டும் முடிவெடுக்க இயலாது, ஐந்து புலன்களுக்கும் அப்பாற்பட்ட சிந்தனா சக்தியினால் மட்டுமே அதை முடிவு செய்ய முடியும். “உலகம் தட்டையானது என்று ஒருவன் சொன்னதாக” நம்பகமான ஒரு நபர் மூலம் செய்தி வரும்பொது, ” அந்த ஒருவன் இப்படிச் சொல்லி இருப்பான்” என்ற செய்தியை – தகவலை நம்புகிறோம் அந்த ஒருவன் சொன்ன கருத்து சரியா என்பதை ஆராய்கிறோம், பின்னர் அந்தக் கருத்து தவறு என்ற முடிவுக்கு வருகிறோம். (இங்கே தகவல் நம்பப்படுகிறது! அது நமக்குச் சொல்கின்ற கருத்து மறுக்கப்படுகிறது)

சிலவற்றை அறிவதற்குரிய ஒரே வழி அந்தந்தப் புலன்கள் மட்டுமே! வேறு வழியே இல்லை! நாவால் ஓசையைக் கேட்கவோ கையால் மணம் முகரவோ, கண்ணால் சுவை அறியவோ இயலாது அல்லது சிந்தனை செய்தும் முடிவெடுக்க முடியாது.

நமது காலத்திற்கு முன் நடந்தவற்றை அறிவதற்குரிய ஒரே வழி செவிப் புலன் தான், உதாரணத்திற்கு மன்னர் “அவ்ரங்கசேப்” என்பவர் ஷாஜஹான் சிறையில் அடைத்தார்” இது ஒரு செய்தி. இதை நம்புவதா? மறுப்பதா? என்ற பிரச்சனை வரும்போது என்ன செய்வது?

ஷாஜஹான் சிறையில் அடைக்கப்பட்டதைத் தற்போது நாம் கண்ணால் காண இயலுமா? அல்லது மூக்கால் முகர்ந்து “ஆமாம்! ஷாஜஹான் சிறையில் இருந்தார்” என்று அறிய முடியுமா? கையால் தடவிப் பார்த்தோ, நாவால் சுவைத்தோ இந்தச் செய்தியை அறிய முடியாது. அல்லது சிந்தனையை எல்லாம் செலுத்தி, உள்ளுணர்வால் இதை ஊகித்தும் உணர முடியாது. செவி வழியாகக் கேட்டுக் கேட்டுத்தான் நாம் இந்த தகவலை அறிந்து வைத்திருக்கிறோம். நாம் நேரடியாகப் பார்க்க இயலாத, முகர இயலாத சுவைக்கவும் முடியாத ஒன்றை, சிந்தனைக்கும் எட்டாத ஒன்றை நாம் அறிவது எப்படி? தகவல்களாக செவி வழியாகத்தான் அறியமுடியும்.

ஆக சிந்தனையைச் செலுத்தி முடிவெடுக்க இயன்ற இடங்களில் அதைப் பயன்படுத்துகிறோம். (சிந்தனை சக்தி இருப்பதால்) கேட்டு நம்ப வேண்டிய கடந்த கால நிகழ்ச்சிகளை அந்த அடிப்படைகளை நம்புகிறோம். அதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதால் அந்த செவிவழிச் செய்தி பலரால் ஒரே விதமாகச் சொல்லப்படும் போது, “அது உண்மைதான்” என்ற நமது நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது. ஆனால் கருத்துக்களைப் பொறுத்தவரை உலகமெல்லாம் சேர்ந்து கொண்டு வேறுவிதமாகச் சொன்னாலும் நாம் ஏற்க மாட்டோம்.

“கொக்கு கறுப்பு” எனறு உலகமே சேர்ந்து சொன்னாலும் “அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்” என்ற தகவலை மட்டுமே நாம் நம்புவோம். அந்தத் தகவல் நமக்குக் கூறுகின்ற கருத்து சரியானதல்ல என்ற முடிவுக்கு நாம் வருவோம். இவ்வாறே குர்ஆன் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் இறங்கிய ஒன்று. அதை நாம் செவிப்புலன் மூலமாகத் தவிர வேறு எந்த விதத்திலும் அறிய முடியாது. “இதுதான் குர்ஆன்” என்ற தகவலை முழு உலகமும் சேர்ந்து சொல்லும் போது அதில் நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது.

ஆனால் அவர்களது சொந்த அபிப்பிராயங்கள், கருத்துக்கள், அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டால், நாம் ஆராய்கிறோம் மறுக்கிறோம். முரண்படாதிருந்தால் ஏற்கிறோம்.

உதாரணமாக “ஒன்று முதல் ஆயிரம் வரை எண்களைக் கூட்டும் முறை இது என்று என் ஆசிரியர் சொன்னார்” என ஒருவர் நம்மிடம் சொல்கிறார். அவரது நேர்மையில் நம்பிக்கை வைத்து, “அவர் ஆசிரியர் அவருக்குக் கணித முறையைச் சொல்லிக் கொடுத்திருப்பார்” என்று நம்புகிறோம். நம்மிடம் இவ்வாறு சொன்ன அதே நபர் “ஏழும் மூன்றும் பதினொன்று” என்று சொன்னால், (அவர் எவ்வளவு நாணயமானவராக இருந்தாலும்) நாம் ஏற்க மாட்டோம்” உங்கள் ஆசிரியரால் சொல்லித் தரப்பட்ட கணித முறைக்கே உங்கள் கணக்கு முரண்படுகிறதே” என்று அவரிடம் நாம் சொல்வோம். இங்கே அவரது நாணயத்தில் நம்பிக்கை வைத்து அவர் சொன்ன தகவலை நம்பிய நாம், அவர் கூறிய கருத்தை ஏற்க மறுக்கிறோம். தகவல்களை நம்புவதற்கு நேர்மை, போதுமானதாக உள்ளது. கருத்துக்களை நம்புவதற்கு நேர்மை உதவுவதில்லை.

நமக்கு சிந்தனா சக்தி இருப்பதால், சிந்தித்து விளங்கக்கூடியவைகளை, சிந்தனையின் மூலமாக மட்டும் நம்புகிறோம். சிந்தனையால் விளங்க முடியாதவைகளை, அவற்றிற்குரிய புலன்களின் துணையால் அறிந்து நம்புகிறோம்.

தகவல்களை முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக நாங்கள் நம்புவதால், கருத்துக்களிலும் அவ்வாறே நம்புவோம். இரண்டுக்கும், செவிப்புலன் மட்டுமே எங்களுக்குப் போதும் என்று சிலர் கூறுகின்றனர். கருத்துக்களில் சிந்தனையைச் செலுத்த மாட்டோம் என்று கூறுவோர், “ஏழும், மூன்றும் ஒன்பது” என்று எவராவது சொன்னால் அதையும் நம்பட்டும்! “பூமி தட்டையானது” என்று கடந்த காலத்தில் சொல்லப்பட்டதையும் நம்பட்டும்! “பூமி மாட்டுக் கொம்பின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்ற பாட்டிகளின் கதையையும் நம்பட்டும்! “சந்திரனைப் பாம்பு விழுங்குவதால் கிரஹணம் ஏற்படுகின்றது” என்பதையும் நம்பட்டும்! ஏனெனில் அவர்களுக்குத்தான், செவியில் விழுந்து விட்டாலே பொதுமே! உடனே நம்பிவிட வேண்டுமே!

நம்மைப் பொருத்தவரை சிந்தனையைச் செலுத்தி விளங்க முடிகின்றவைகளை சிந்தனையால் விளங்குவோம். சிந்தனையால் முடிவெடுக்க இயலாத கடந்த கால நிகழ்ச்சிகளை செவிப்புலனின் துணை கொண்டு நம்புவோம்; அதைத் தவிர வேறு வழியில்லை என்பதால். எதை, எப்பொது பயன்படுத்த வேண்டுமோ அதை அப்போது பயன்படுத்துகிறோம். எல்லாவற்றுக்கும் என் செவி மட்டுமே போதும் என்போர், இப்படிப்பட்ட அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, சிந்தனையை மழுங்கச் செய்து கொள்ளட்டும்.

“இதுதான் குர்ஆன்” “இவை தான் ஹதீஸ்கள்” என்ற தகவல்கள் வெறும் செவிப்புலனால் மட்டுமே அறிந்து கொள்ள முடிகின்ற ஒன்று மற்ற புலன்களால் இதை உணர முடியாது. சிந்தனையாலும் ஊகித்து உணர முடியாது.

எனவே முன்னோர்கள் சொன்ன தகவல்களை அடிப்படையை வைத்து, அவர்கள் எதைக் குர்ஆன் என்று நம்மிடம் ஒருமித்து அறிமுகப்படுத்தினார்களோ, அதை நாமும் நம்புகிறோம். வெறும் நம்பிக்கையோடு நின்று விடாமல் நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சியும் செய்கிறோம்.

முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று நம்மிடம் காலம் காலமாகச் சொன்னார்களோ, அதில் முரண்பாடுகள் எதுவுமில்லாமலிருப்பதை நாம் காணுகிறோம். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்ட இன்றைய காலத்திலும் கூட அதில் எந்த ஒரு தவறையும் காண முடியவில்லை என்பதையும் நிதர்சனமாகக் காண்கிறோம். முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று சொன்னார்களோ, அதில் “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் இது போன்ற ஒன்றை இதிலுள்ள ஒரு அத்தியாயம் போன்றதையாவது இயற்றிக் காட்டுங்கள்!” என்று சவால் விடப்பட்டிருப்பதையும் காண்கிறோம். இன்று வரை எவராலும் அவ்வாறு செய்து காட்டி, குர்ஆனின் சவாலை ஏற்கமுடியவில்லை என்பதையும் பார்க்கின்றோம். இவற்றை எல்லாம் காரணமாக வைத்து இது தான் குர்ஆன்” நிச்சயமாக இது மனிதர்களால் இயற்றப்பட்டது அல்ல” என்ற திடமான முடிவு நமக்கு ஏற்பட்டு விடுகின்றது.

“குர்ஆன்” என்று சொல்லி வேறு எதையாவது நம்மிடம், நமது முன்னோர்கள் தந்திருந்தால் அதன் அமைப்பே, அதன் போலித்தன்மையை நமக்குத் தெளிவாக்கி இருக்கும்.

முன்னோர்கள் “இதுதான் குர்ஆன்” என்று நம்மிடம் எதை அறிமுகம் செய்தார்களோ அதை அவர்களின் கூற்றை நம்பி ஏற்றுக் கொண்டதோடு நின்று விடாமல், சிந்தித்துப் பார்க்க முடிகின்ற விதத்தில் சிந்தித்துப் பார்த்தும் உறுதி செய்து கொள்கிறோம்.

அது போல், முன்னோர்கள் “ஹதீஸ்கள்” என்று நம்மிடம் எதை அறிமுகம் செய்தார்களோ, அவற்றையும் செவி வழியாகவே நாம் கேள்வியுற்றோம். ஆனால் “ஹதீஸ்கள்” என்று சொல்லப்படும் அத்தனையையும் கண்ணை மூடிக்கொண்டு நாம் ஏற்பதில்லை ஹதீஸ்கள் என்று அறிவிக்கக் கூடியவர்களில் ஒருவர், அல்லது பலர், நம்பகமானவர்களில்லை, பொய் சொல்லக் கூடியவர், நினைவாற்றல் இல்லாதவர்” என்றெல்லாம் முன்னோர்களில் சிலர் அவர்களைச் சந்தேகித்திருக்கும் போது, நாமும் சந்தேகிக்கிறோம். அதே நேரத்தில் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எவரும் ஐயம் தெரிவிக்காமல், ஹதீஸ்கள் என்று சொல்லப்படுபவைகளை நாமும் உறுதியாக நம்புகிறோம்.

நாம் எவரையும் பின்பற்றக் கூடாது என்று சொல்வது கருத்துக்கள் பற்றியதே! தகவல்கள் பற்றியது அல்ல.

“காந்தி சுடப்பட்டார்” என்ற செய்தியை நம்முடைய பெற்றோர் வாயிலாகக் கேட்டு நம்புவது தக்லீத் ஆகாது. தகவல்களை அப்படித்தான் நம்ப வேண்டும். அதே பெற்றோர், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்று ஒரு கருத்தைச் சொல்லும் போது, நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதே தக்லீத் எனப்படும். அதுதான் கூடாது. அல்லாஹ் இந்த வேறுபாடுகளை உணர்ந்து உண்மையை விளங்கிக் கொள்ள அருள்செய்வானாக!