இஸ்லாம்தளம்

பிப்ரவரி8, 2009

கணவன், மனைவியை அடிக்கலாமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

விரும்பியவர் நம்பட்டும், விரும்பியர் மறுக்கட்டும்” என்று திருக்குர்ஆன் (18:29) கூறுவதால், இஸ்லாத்தில் மனித அபிப்ராயத்துக்கு எள்ளளவும் எள் முனையளவும் இடமேயில்லை. இறைவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கற்பனையால் இறைவனைப் படைப்பவர்களுக்கு, இறை வேதங்களை தமக்கு தோதாக திரிப்பதும், நீக்குவதும், சேர்ப்பதும் சாத்தியம்.

அனைத்தையும் ஏக இறைவன் ஒருவனே படைத்து மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக வேதங்களை வழங்கினான் என நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இறை வேதங்களில் மனிதக் கருத்தைத் திணிப்பது துளியும் சாத்தியமில்லை.

ஐம்புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானதாகும், ”அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்” (2:3) என்பதால், மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது, வானவர்கள், சொர்க்கம், நரகம், தீர்ப்பு நாள் போன்ற – மறைவானவற்றை உலக வாழ்வில் கண்ணால் காணமுடியாது என்றாலும் – மறைவானவற்றை நம்புவதும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளில் ஓர் அம்சமாகும்.

இஸ்லாம் கூறும் மறைவானவைகளை இவ்வுலகின் ஆய்வுக் கூடத்தில், கண்ணாடி குடுவைகளைக் கொண்டு ஆய்வு செய்து சொர்க்கம், நரகத்தை உண்டு என்று நிரூபிக்க முடியாது. என்பது போல், அதே ஆய்வுகளைக் கொண்டு சொர்க்கம், நரகத்தை இல்லையென்றும் நிரூபிக்க முடியாது.

இந்த உலகமல்லாத இன்னொரு மறுமை வாழ்க்கை உண்டு, அல்லது இல்லை எனத் தீர்மானிப்பது மறுமையில் மட்டுமே சாத்தியம். சொர்க்கம், நரகம் போன்ற மறைவானவற்றை நீங்கள் மறுமையில்தான் அறிந்து கொள்வீர்கள் எனவும், அதை நம்பாதவர்களும் அங்கே கண்டு கொள்வார்கள் எனவும் இஸ்லாம் சொல்வதால், இவற்றை இவ்வுலக வாழ்க்கையில் நிரூபிக்க முயல்வது வீணே!

மறைவானவற்றைக் கண்ணால் பார்க்காமல் நம்புவது எப்படி ஆட்டுமந்தைத் தனமோ, அதுபோல் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் ஆட்டுப் புத்தியே. ”உனக்கு இரை இருக்கிறது வா” என்று எந்த ஆட்டையும் அழைத்தால் வராது. ஆனால் ஆடுகளின் பார்வையில் படும்படி கீரைகளையோ, புல்லுக் கட்டையோக் காட்டினால் ஆடுகள் ஓடோடிவரும், இதை ஆடுகள் உணருமா? கண்ணால் பார்க்காமல் ஒரு போதும் ஆடுகள் தன் இரையை உணராது.

நிற்க,
”மனைவியை அடியுங்கள்” என்று சொல்லும் 4:34வது வசனத்திற்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன விளக்கம் சொன்னார்கள் என்கிற நபிமொழிகளையும், சம்பந்தப்பட்டவர்கள் இங்கே பதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ் இந்தப் பதிவில் இது பற்றிப் பேசுவோம்.

//”எலும்பு முறியாதவரை பெண்களை அடிக்கலாம்”// என்று சொல்பவர்கள், இந்த வாசகம் இடம் பெற்ற நபிமொழியையும் – நபிமொழி மட்டுமிருந்தால் இங்கே அறியத்தரவும். – நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

கணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும். கணவன் தன் உடல் இச்சையைத் தணிப்பதற்காக மனைவியை அழைப்பது ஒரு சாதாரண விஷயம். இஸ்லாம் இதிலும் தலையிட்டு, ”கணவன் அழைத்தால் மனைவி மறுக்கக்கூடாது” என்று கூறுவதால் ”இஸ்லாம் ஓர் பெண்ணடிமை மதம்” என்று அவசர முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

ஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கவும் தூண்டி விடுகின்றது. எல்லா ஆண்களும் இப்படி இல்லையென்றாலும், கணிசமான ஆண்கள், அன்னியப் பெண்களிடம் வரம்பு மீறி கீழ்த்தரமாக நடந்து கொள்வது அன்றாடச் செய்திகளில் வாசிக்கிறோம்.

உடல் உணர்வுகள் கணவனுக்கும், மனைவிக்கும் சரிசமம் என்றாலும், கணவன் தயாராகாமல், மனைவிக்கு உணர்வுகள் ஏற்பட்டு எதுவும் நடந்து விடப்போவதில்லை. கணவனுக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டு, மனைவி தயார் இல்லாமல் இருந்தாலும் காரியம் நடந்துவிடும். அதற்காக கணவன், மனைவியை பலாத்காரம் செய்யலாம் என்று பொருளில்லை. பாலின உடற்கூறுகள், கணவன் தயாராகாமல் மனைவியுடன் உடலுறவு சாத்தியமில்லை.

விஷயத்துக்கு வருவோம்.

ஒரு பெண் அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவளாக இருந்தாலும், எந்த நாட்டில் அவனைப் பார்க்க நேர்ந்தாலும், அல்லது மனிதர்கள் வாழாத காட்டில் காண நேர்ந்தாலும், அவள் நம் மதத்தை சார்ந்தவளாக இருந்தாலும், அல்லது எந்த மதத்தையும் சேராதவளாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் அப்பெண்ணை எந்த சூழ்நிலையிலும், எந்த நிலையிலும் பலாத்காரம் செய்ய முடியாது – கூடாது. அப்பெண்ணின் நிலையும் அந்தஸ்தும் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவள் அச்செயலுக்கு உடந்தையாக இருந்தாலும், உடன் படாவிட்டாலும் சரியே –

”நீங்கள் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்” (திருக்குர்ஆன், 17:32) என்று – தவறான ரகசிய உறவுகள் அனைத்தும் அவனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

”விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்” இது முஸ்லிமான ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் இறைவனின் கட்டளையாகும். திருமண பந்தத்தை ஏற்படுத்தி, கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதைத் தவிர, மற்ற தவறான – ரகசிய உறவாக, விபச்சாரத்தின் மூலமாக உடல் இச்சையைத் தணிக்கும் அனைத்து வழிகளையும் இஸ்லாம் அடைத்து விட்டது. (இங்கு, முஸ்லிம்கள் விபச்சாரம் செய்வதில்லையா? என்று விமர்சிப்பது பொருத்தமாக இருக்காது. விபச்சாரத்தை இஸ்லாம் தடை செய்துள்ளது. முஸ்லிம்கள் செய்யும் தவறை, இஸ்லாத்தை நோக்கி திருப்ப வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்)

நபிமொழிகள்,
”ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 5193)

மேற்காணும் நபிமொழியைப் படிப்பவர்கள், மனைவி நோயாளியாக, அல்லது இயலாமல் இருந்தாலும் கணவன் அழைக்கும்போது உடலுறவுக்கு ஒத்துப்போக வேண்டுமா? இது எப்படி சாத்தியமாகும்? இது என்ன கொடுமை? என்றெல்லாம் தமக்குத் தோணுவதை கற்பனையால் விரிவுபடுத்தி, இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதம் என்று விமர்சிக்கின்றனர்.

தவறானக் கண்ணோட்டத்துடன் அணுகும் இவர்களின் கற்பனைக்கு எள்ளளவும் இந்த நபிமொழியில் சான்றுகள் இல்லை.

”எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை” என்ற இறைவாக்கிற்கு எதிராக – உடலுறவுக்கு சக்தியற்ற மனைவி மறுத்தால் – வானவர்கள் ஒரு போதும் சபிக்க மாட்டார்கள். கணவன் படுக்கைக்கு அழைக்கும்போது, உடலுறவுக்கு வலுவிருந்தும் மறுக்கும் மனைவியையே வானவர்கள் சபிக்கின்றனர் என்று விளங்கலாம்.

மனைவி உடல் நலமின்றி, இயலாமல் இருக்கும்பொழுது, மனிதாபிமானமுள்ள எந்தக் கணவனும் மனைவியுடன் உடலுறவு கொள்ள முயலமாட்டான். சுகமில்லாத மனைவிக்கு சிகிச்சையளித்து குணமடைய வேண்டியதைச் செய்வான்.

வெறுப்பு – கோபம்.
”ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் சபிக்கின்றனர்.” (புகாரி, 5194)

”ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.” (புகாரி, 3237)

கணவன் படுக்கைக்கு அழைக்கும்போது எவ்வித காரணமுமின்றி மனைவி அதை மறுத்து வெறுத்தால், கணவன் கோபமடைவது இயல்பு. தாம்பத்திய உறவுக்கு பெரும்பாலும் கணவனிடமிருந்தே முதல் முயற்சி தொடங்கும். கணவனுக்கு மனைவியின் மீது ஏற்படும் நியாயமான ஆசைகள், மனைவியால் மறுக்கப்பட்டால் பின் விளைவு, விபச்சாரம் – அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் என விபரீத விளைவுகளுக்குத் தூண்டும் அபாயம் ஏற்படும். எனவே தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் அதற்காக பழி தீர்க்க எண்ணி படுக்கையை வெறுப்பது கூடாது என்று இங்கு வலியுறுத்தப்படுகிறது. (இன்னும்… அடுத்த பகுதியில்)

அன்புடன்,
அபூ முஹை

கணவன், மனைவி உரிமைகள்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது. மாறாக மணவாழ்வு ஆன்மீகப் பாதைக்கு எதிரானது என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் நிறைவேறுவதற்கென்று சடங்கு சம்பிரதாயங்கள் எதையும் விதிக்கவில்லை. உறுதியான உடன்படிக்கை செய்துகொண்டு, மணமக்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவது இஸ்லாமியத் திருமணம்.

”…உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே.” (திருக்குர்ஆன், 4:21)

திருமணம் செய்து கொள்வதற்கு, இரண்டு காரணங்களையும் இஸ்லாம் குறிப்பிடுகிறது.

1. ”மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களை, பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.” (திருக்குர்ஆன், 4:1)

2. ”உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்திப் பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் (பிற பெண்களை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும், கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.” (நபிமொழி)

மனித இன மறு உற்பத்தியாகச் சந்ததிகளைப் பெற்றுக் கொள்வது. கற்பு நெறியுடன் ஒழுக்கமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. இதுவே மணமுடிக்கும் நோக்கத்தின் மிக அவசியமாக இங்கு சொல்லப்படுகிறது.

ஆண், பெண் இரு பாலாருக்கும் உடல் சுகம் மிகவும் அவசியமானது. இந்த சுகத்தை, கணவன், மனைவி என்ற உறவுடன் இணைந்து, இல்லற வாழ்வின் மூலம் முறையாகப் பெற்றுக் கொள்ளக் கண்டிப்புடன் எடுத்துச் சொல்கிறது இஸ்லாம்.

இல்லற சுகம் அனுபவிப்பதற்காகவே திருமணம் செய்கிறார்கள். தேவைப்படும்போது தக்கக் காரணமின்றி இல்லற சுகம் மறுக்கப்படால் திருமண வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். உடலுறவுத் தேவை கணவனுக்கு இருப்பது போல், மனைவிக்கும் பொதுவானது. மனைவியின் பால் கணவனுக்கு நாட்டம் இருப்பது போலவே, மனைவிக்கும் கணவன் பால் நாட்டம் இருக்கும். இருவருடைய உணர்வுகளும் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், மனைவி விரும்பினாலும், கணவன் விரும்பாமல் இல்லற சுகம் பெற முடியாது. இந்த உடற்கூறு வித்தியாசத்தையும் மறுக்க முடியாது. ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டுமே மனைவியை ”அவர்களைப் படுக்கையிலிருந்து (தற்காலிமாக) விலக்கி வையுங்கள்” (4:34) என்று சொல்லிவிட்டு –

”கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு” (திருக்குர்ஆன், 2:228)

– கணவன், மனைவி இருவருமே இல்லற சுகத்தை அனுபவிப்பதற்கு ஒருவர் மீது மற்றவர் உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பதை 2:228வது வசனத்திலிருந்து விளங்கலாம். கணவனின் தேவைக்காக மனைவியை அழைப்பது போல், மனைவியும் தன் தேவைக்காக கணவனை அழைக்கும் உரிமை பெற்றிருக்கிறார். கணவனின் தேவையை சரியானக் காரணமின்றி மனைவிப் புறக்கணிக்ககூடாது – மனைவியின் தேவையையும் தக்கக் காரணமின்றி கணவன் மறுக்கக்கூடாது. இதை ஆதிக்கம் என்று சொல்வதைவிட கணவன், மனைவி உரிமைகள் என்றே சொல்ல வேண்டும்.

நபிமொழிகள்.

நபி(ஸல்) அவர்கள் ஸல்மான்(ரலி), அபூ தர்தா(ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபூ தர்தாவின் மனைவி) உம்மு தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று அவரிடம் ஸல்மான் கேட்டதற்கு உம்மு தர்தா(ரலி), ‘உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை” என்று விடையளித்தார்.

(சற்று நேரத்தில்) அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபூ தர்தாவிடம், ‘உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, ‘நான் நோன்பு வைத்திருக்கிறேன்’ என்றார். ஸல்மான், ‘நீர் உண்ணாமல் உண்ணமாட்டேன். என்று கூறியதும் அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா(ரலி) நின்று வணங்கத் தாயரானார். அப்போது ஸல்மான்(ரலி), ‘உறங்குவீராக’ என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், ‘உறங்குவீராக’ என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான்(ரலி), ‘இப்போது எழுவீராக!’ என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபூ தர்தாவிடம் ஸல்மான்(ரலி), ‘நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக” என்று கூறினார்கள். பிறகு அபூ தர்தா(ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைத் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஸல்மான் உண்மையையே கூறினார்!” என்றார்கள். (புகாரி, 1968)

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்) நோன்பு வையும், (சில நாள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும், (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன், உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன, உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன், உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!… (புகாரி, 1974, 1975, 5199)

தன்னை முழுமையாக இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு, உலக வாழ்க்கையில் கடமைகளை மறந்த அல்லது புறக்கணித்தத் தமது தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.

மேற்காணும் நபிமொழிகளில், மனைவியின் தேவையைப் பூர்த்தி செய்வது கணவனுக்குக் கடமை என்று சொல்லப்பட்டுள்ளது. கணவனின் தேவையைப் பூர்த்தி செய்வதும் மனைவியின் கடமையென்று, இதிலிருந்து அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி அறிவு வேண்டுமென்பதில்லை. திருமண ஒப்பந்தம் என்ற அடிப்படையில் கணவன் அழைத்து மனைவி மறுத்தாலும் – மனைவி அழைத்து கணவன் மறுத்தாலும், உடலுறவுக்கான தகுதியும், திறனுமிருந்து வேறு காரணங்கள் இல்லாமல் மறுத்தால், இருவரையும் வானவர்கள் சபிப்பார்கள்.

அன்புடன்,
அபூ முஹை

மதங்கள் மனிதர்களுக்காகவா..?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மனிதனால் அறியப்பட்டு உலகுக்கு அறிமுகம் செய்யப்படும் நவீனங்கள் ஒவ்வொன்றிலும் கண்டுபிடித்து அறிமுகம் செய்பவரின் வழிகாட்டல் நிச்சயமாக இருக்கும். எப்படி உபயோகிப்பது? – எப்படி இயக்குவது? என்கிற குறிப்புகளடங்கிய குறிப்பேடு, அதில் சொல்லப்பட்டுள்ளபடியே உபயோகப் படுத்த வேண்டும் – இயக்க வேண்டும். அதற்கு மாற்றமாக உபயோப்படுத்தினாலும், மாற்றமாக இயக்கினாலும் விபரீதங்கள் ஏற்படும்.

மனிதனால் கண்டுபிடிக்கப்படும் ஒரு கருவியை இயக்க, அவருடைய வழிகாட்டல் அவசியம் எனும்போது, இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், நன்மை – தீமைகளை விளங்கி செயல்பட அவனுக்கு வழிகாட்டல் அவசியமாகிறது. குறைந்த அறிவே வழங்கப்பட்டுள்ள மனிதன், நன்மைகளைத் தேர்ந்தெடுப்பது போல, பல சந்தர்ப்பங்களில் நன்மையெனக் கருதித் தீமைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். இது தவிர்க்கப்பட வேண்டுமாயின் மனிதத்தின் மீது முழு அக்கறை கொண்ட ஒரு பேரறிவாளனின் வழிகாட்டல் வேண்டும்.

மதம்.
மதம் என்றால் வெறி, சம்மதம் என்ற அடிப்படையில் மனிதன் தானாகச் சம்மதித்து ஏற்றுக்கொண்ட ஒரு வழி என்றுதான் சொல்ல முடியும். மதம் மனிதனை மதங்கொள்ளச் செய்வது. இறைவனால் வழங்கப்பட்டதல்ல. இறைவனால் கொடுக்கப்பட்டது, மனிதன் சம்மதித்தாலும், சம்மதிக்கா விட்டாலும் – சரி கண்டாலும் சரி காண விட்டாலும் ஏற்று நடக்க வேண்டிய மார்க்கம் ஆகும். இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் மனிதச் சமுதாயம் சுபீட்சமாகவும், அமைதியாகவும் வாழும் வழியாகும். எனவே மனித சுபீட்சத்திற்கும் – அமைதிக்கும் எதிரான செயல்பாட்டிற்கு ஆதரவாக, இறை கொடுத்த மார்க்கம் – மதத்தில் அறவே வழிகாட்டல் இல்லை.

சண்டைகள், போராட்டங்கள், வன்முறைகள், பயங்கர வாதங்கள் என எத்தனையோ நடந்துள்ளதை வரலாற்று ஏடுகளில் நாம் பார்க்கிறோம். அவற்றுக் கெல்லாம் காரணம் மதங்களல்ல, மதவாதிகளே..! – நான் ஏற்கெனவே சொல்லி வருவதுதான் – மதவாதிகள் செய்யும் தவறுகளை மதங்களை நோக்கித் திருப்பக்கூடாது.

அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் தவறான நடவடிக்கைகளுக்காக சட்டத்தின் மீது பழி சுமத்த முடியாத போது – மதத்தைப் பின் பற்றுபவர்களின் தவறுகளையெல்லாம் மதத்தின் மீது சுமத்துவது சரியல்ல.

”மதவாதிகளின் தவறுகளுக்கு மதங்களின் மீது பழி சுமத்துவது தவறு!”

”மதவாதிகளின் ஒவ்வொரு செயலும் மதத்தின் இயற்கையான விளைவுகளே என முடிவு செய்வதும் தவறு!”

மதம் என்பது மனித முயற்சியின் வெளிப்பாடு என்று கருதினால் அதற்கு திட்டவட்டமான அளவுகோல் எதுவும் இருக்க முடியாது. இந்நிலையில் இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனும் தனித்தனியே வேறு பட்டு நிற்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ”நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல” என்தும் அது அவர் கண்ட மதம். மதவாதிகளின் செயல்பாடுகளை கவனித்து மதங்களே இப்படித்தானோ? என தவறானக் கருத்தோட்டத்தில் மதங்களை விட்டு ஒதுங்குவதாகக் கருதி தனியொரு மதத்தை உருவாக்குகிறார்.

இஸ்லாம்.
இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில், இறைநெறி – மார்க்கம் அல்லது மதம் என்பது மனித உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளல்ல. ‘உண்மையைத் தேடும் மனித முயற்சியே மதம்’ என்பதையும் இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, இறைவன் இறக்கியருளிய கட்டளைகளின் தொகுப்பே இறைநெறியாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இறைநெறி என்பது முற்றிலும் இறைக் கட்டளைகளாகும். சத்தியத்தையும், அசத்தியத்தியத்தையும் அந்த இறைநெறி வகுத்தத் தந்த துலாக்கோலில் தான் மதிப்பிட வேண்டும்.

இறைவன் அருளிய துலாக்கோலைப் புறக்கணித்து விட்டு, ஒரு முஸ்லிம் தன்னுடைய அறிவை மட்டுமே பயன்படுத்தி சத்தியத்தை அறிய முற்படுவானேயானால் நிச்சயமாக அதில் அவன் வெற்றி பெறவே முடியாது. மாறாக அவன் குழப்பத்தில் மூழ்கி வழிகெட்டுப் போய் விடுவான்.

மதத்திற்கு இறை வெளிப்பாடுதான் (வஹீ) மூல ஆதாரம் என்று ஏற்றுக் கொள்பவர்கள் வஹீயின் மூலம் கிடைக்கும் செய்திகள்தான் ஏதார்த்த உண்மைகள் என்று ஒப்புக்கொள்வார்கள். அந்த மூல அறிவுக்கு வெளியே மத உண்மைகள் இருப்பதாக நம்பமாட்டார்கள். அப்படி இருப்பது சாத்தியமுமல்ல.

ஒவ்வாரு மனிதனும் தனித்தனியாக ஏதார்த்த உண்மையைக் கண்டுபிடிக்கும் போது ஒவ்வொரு மனிதனிடமும் ஏதார்த்த உண்மையை பற்றிய கருத்தோட்டமும் வெவ்வேறாகவே இருக்கும். இப்படி வேறுபட்டக் கருத்துக்கள் ஒருபோதும் மனித சமுதாயத்தை நல்வழிபடுத்திட உதவாது. எனவே, பக்குவப்படுத்தவும், நேர்வழி காட்டவும் மனிதனுக்கு மதத்தின் தேவை மிகவும் அவசியம்.

அன்புடன்,
அபூ முஹை

நபிமார்களிடையே வேற்றுமை இல்லை.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் மார்க்கத்தை விமர்சிக்கப் புறப்பட்டவர் 15.09.2006 நாளில் திண்ணைக் கட்டுரையில் கீழ்கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார்.

//(இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது. உதாரணமாக இறுதித்தீர்ப்பு நாளில் எல்லா நபிகளையும் விட உயர்ந்த ஸ்தானம் முகமதுவுக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும். அவரே சிபாரிசு செய்யும் வல்லமை கொண்டவராகத் திகழ்வார். இந்த சிபாரிசின் மூலம் இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார். ஆனால், முகமதுவை ஏற்காதவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் முஸ்லிமாக இல்லாமல் போனதற்காக – முகமதுவின் மூலம் வெளிப்பட்ட ஏக இறைவனின் கட்டளைகளை ஏற்காது போனதற்காக நரகத்தீயில் வாட்டப்படுவர் – தவித்த வாய்க்கு தண்ணீர் கூட அங்கு தரப்படமாட்டாது- கொதிக்கும் எரிக்குழம்பே வாயில் ஊற்றப்படும் என்று தெரிவிக்கின்றது இஸ்லாம்).//

”இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது.” எப்படி இருக்கிறது பாருங்கள். இதைப் படித்து விட்டு நாலு கிறிஸ்தவர்கள் ”அப்படியா” என்று வரமாட்டார்களா என்ற தொனி தெரியவில்லையா? பின்னே நபிமார்களிடையே வேற்றுமை பாராட்டக்கூடாது என்று சொல்லியிருக்கும் இஸ்லாத்தின் மீது இப்படி ஒரு அவதூறைச் சுமத்துவதால் எதை எதிர்பார்க்கிறார் கட்டுரையாளர்..?

நபிமார்கள் அனைவரையும் நம்புவது நம்பிக்கையோடு தொடர்பு கொண்டதாக இஸ்லாம் கூறுகிறது.

2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

இங்கே, திருக்குர்ஆனை நம்புவதோடு மட்டும் நம்பிக்கை முடிந்து விடவில்லை. மாறாக திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் அருளப்பட்ட எல்லா வேதங்களையும் நம்ப வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது. முந்திய வேதங்களை நம்ப வேண்டும் என்ற கட்டளையில், முந்திய வேதங்கள் அருளப்பட்ட நபிமார்களையும் நம்ப வேண்டும் என்ற கட்டளையும் அடங்கி விடுகிறது.

நபிமார்களிடையே பாகுபாடுக் காட்டக்கூடாது, திருக்குர்ஆன் இப்படி சொல்கிறது…

2:136. (முஃமின்களே!)”நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம். இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.

2:285. (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார். (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர், இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ”நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம், (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

3:84. ”அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

நபிமார்களைப் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று எவ்வளவு அழுத்தமாகச் சொல்லித் தருகிறது மேற்கண்ட வசனங்கள். இறைத்தூதர்கள் என்ற பதவியில் அனைவரும் ஒரே தகுதியுடையவர்களே அதில் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட தூதுப் பணிகளை அவர்கள் எவ்வித குறைபாடுமின்றி நிறைவேற்றினார்கள். தூதுப் பணிக்காக மக்களிடம் எவ்விதக் கூலியும் பெறவில்லை, எவரிடமும் விலை போகவில்லை. என்று நபிமார்கள் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து, ஆழமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இறைத் தூதர்கள், குடும்பம், உறவினர்கள், தோழர்கள், ஊர் மக்கள் மட்டுமல்ல, தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதங்கள் இல்லாமல் இறைத் தூதுச் செய்திகளை எத்தி வைத்தார்கள். – (தூதுச் செய்தியை எத்தி வைக்கும் ஒரு பகுதிதான், அயல் நாட்டு மன்னர்களுக்கு இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைத்து எழுதிய கடிதங்களாகும். இது பற்றி வேறு பதிவுகளில்… இன்ஷா அல்லாஹ்) – பிற சமூகத்தவர்களுக்கும் இறைச் செய்தியை எடுத்துச் சொல்லி அழைப்பு விடுத்தார்கள். ஆகவே நபிமார்களிடையே எவ்வித பாகுபாடுமில்லை என்பதே இஸ்லாம் கற்றுத்தரும் நம்பிக்கை.

நபி (ஸல்) அவர்களும் ”எல்லா நபிமார்களையும் விட என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்” என்று இதைத்தான் முஸ்லிம்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.

நபிமொழிகள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்தத் தோழர்) யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘இவரை நீர் அடித்தீரா?’ என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, ‘இவர் கடைவீதியில், ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன்.

உடனே நான், ‘தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?’ என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். ‘மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு)விட்டதா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். (புகாரி, 2411, 2412, 3398, 3408, 3414)

”ஒருவர் மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனூஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது” (புகாரி, 3413, 3415, 4630.)
———————–
மேலும், இறைவன் நபிமார்களில் சிலரை, சிலரை விட மேன்மையாக்கியிருப்பதாவும் கூறுகிறான்.

17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

2:253. அத்தூதர்கள் – அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம், அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்.

இறைத்தூதர்களில் சிலரைவிட சிலருக்கு சிறப்பை வழங்கியிருப்பதாக இறைவன் சொல்வது, உதாரணமாக: நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பற்றியும் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கிய பாக்கியங்கள் பற்றியும் அல்லாஹ் சிறப்பித்து திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வுடன் பேசியிருக்கிறார்கள்.

ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றி பிறந்தார்கள், தொட்டிலில் பேசினார்கள், இன்றுவரை மரணிக்காமல் வாழ்கிறார்கள்.

நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கியது போன்ற ஆட்சியை யாருக்கும் வழங்கவில்லை என்றும் அல்லாஹ் கூறிகிறான்.

இது போன்ற நபிமார்களின் சிறப்புகளில் ஒன்றாக, இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மறுமையில் பரிந்துரை செய்யும் தகுதியை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

//இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார்.// – 15.09.2006 திண்ணைக் கட்டுரை.

இதையும் கோணலாகவே விளங்கி எழுதியிருக்கிறார். மறுமையில் முஸ்லிம்களுக்குத்தான் கேள்வி கணக்குக்காக துலாக்கோல் நிறுவப்படும். உலக வாழ்க்கையில் எப்படி வாழ்ந்தார், என்பதை கணக்கிட்டு இவர் சொர்க்கம் செல்லத் தகுதியானவரா? என்பது அங்கு பரிசீலிக்கப்படும்.

அவர் ஓரிறைக் கொள்கையை ஏற்றவராக இருந்தாலும் செய்த குற்றத்திற்காக நரகத்தில் தங்கும் தண்டனைப் பெற்று, தண்டனை முடிந்து பிறகு சொர்க்கத்தில் சேர்க்கப்படுவார். யாரும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் சொர்க்கத்தில் நுழைந்த விட முடியாது.

மேலும், எவ்வளவு கொடூரங்கள் இழைத்திருந்தாலும் முஸ்லிம்கள் தண்டனையின்றி மன்னிக்கப்படுவார்கள் என்றால் தொழுகை, உண்ணா நோன்பு, போன்ற வணக்க வழிபாடுகளை செய்வது தேவையற்றாகிவிடும். மற்றும் மனிதனுக்கு செய்யும் அநீதங்களையும் இஸ்லாம் கண்டிப்பாகத் தவிர்க்கச் சொல்வது அர்த்தமற்றதாகிவிடும் எனவே…

மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை பற்றியும், எவ்வளவு கொடூரங்கள் செய்திருந்தாலும் முஸ்லிம்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பது பற்றியும் தனிப் பதிவுகள் எழுத வேண்டும். – அந்த அளவுக்கு கட்டுரையாளரால் இவைகள் திரிக்கப்பட்டிருக்கிறது. – இன்ஷா அல்லாஹ் எழுதுவோம்.

ஒரு நபிமொழி
…பிறகு, ‘அறிந்துகொள்ளுங்கள், மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம்.

அறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக்கத்(திலுளள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், ‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு ‘இவர்கள் உங்க(ளுடைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, ‘நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!” என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டுதான் இருந்தார்கள்” என்று கூறப்படும். (புகாரி, 4625)

//இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார்.// – இப்படிச் சொன்னவர், மேற்கண்ட நபிமொழியிலிருந்து பாடம் பெறுவாரா..?

அன்புடன்,
அபூ முஹை

பிரிவு: விமர்சனம் விளக்கம் |

10 Responses to “நபிமார்களிடையே வேற்றுமை இல்லை.”
இப்னு பஷீர்
on 24 Sep 2006 at 3:21 pm
1தெளிவான விளக்கங்களுக்கு நன்றி அபூமுஹை அவர்களே!

//இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார்.// – இப்படிச் சொன்னவர், மேற்கண்ட நபிமொழியிலிருந்து பாடம் பெறுவாரா..?//

உங்கள் பதிவுகள் மூலம் இவர் பாடம் பெறுகிறாரோ இல்லையோ, என்னைப் போன்றவர்கள் மார்க்கம் குறித்து அறிந்திராத பல விளக்கங்களை அறிந்து கொள்கிறோம். உங்கள் விளக்கங்களை தொடருங்கள். நன்றி.

திருவடியான்
on 24 Sep 2006 at 3:45 pm
2இறைவன் (அல்லா என்றாலும் அதுதானே அர்த்தம்.) போட்டி போட்டுக் கொண்டு இங்கு திரிகிற அனைவருக்கும் எளிதில் வசப்படாதவன். இங்கு உள்ள அனைவருக்கும் அவர் காபிரானாவராயிருந்தாலும், ஈமானுடையவராய் இருந்தாலும், இறைவனின் பார்வையில் அனைவரும் ஒன்றே. தேவையில்லாமல் என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்ற சர்ச்சையும் ஒரு சாராரை மறு சாரார் அவமதித்துப் பேசுவதும், வேடிக்கையாக உள்ளது. ஒரு சுனாமி வந்தால் அதற்கு எந்த மதத்தைச் சார்ந்தவனையும் தெரிவதில்லை. ஒரு புலியைக் கொண்டு வந்து ஊருக்குள் விட்டால் கூட அதற்கு சாதி மதம் பார்த்து அடித்துத் தின்னத் தெரியாது. அது போல்தான் இறைவனுக்கும், எந்த மதம் எந்த சாதி என்று பார்க்கத் தெரியாத பரம்பொருள் அவன். இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

rs25
on 24 Sep 2006 at 8:59 pm
3உங்கள் விளக்கத்திற்கு நன்றி. எனக்கு சில விளக்கங்கள் தேவை. கஃபீர் என்று இஸ்லாம் யாரைக் குறிக்கிறது? ஏன் இஸ்லாமியர்களில் சிலர்(பலர்) மற்ற மார்க்கத்தை சேர்ந்தோரை அப்படிக் குறிப்பிடுகின்றனர்? அதற்கும் அவர்கள் மேற்கோள் காட்டுவது குரானைதானே. மிகவும் தெளிவானது என்று கொள்ளப்படும் மறை நூல் ஏன் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு விதமாக புரிந்துக்கொள்ளப்படுகிறது? ஒரு தீவிரவாதிகூட குரான் கூறியதாகக் கூறிதானே செயல்படுகிறான். அவன் வகையில் அவனே மிகச் சிறந்த இஸ்லாமியர் என்று எண்ணுகிறான். அதை ஆமோதிக்கிற பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள் தானே. ஏன் மற்ற மதத்தினர் மேல் குறிப்பாக யூதர்கள் மேல் இத்தகைய கழ்ப்பு. அப்படியானால் அவர்களது தேவ தூதர் இஸ்லாமில் மதிக்கப்படுவது இல்லையா?

அபூ முஹை
on 24 Sep 2006 at 9:59 pm
4திருவடியான், உங்கள் வருகைக்கு நன்றி!

நான் வெறும் எதிர் வினையாக மட்டுமே எழுதி வருகிறேன். நான் பின்பற்றும் மதத்தின் மீது அவதூறு சுமத்தப்படுகிறது. அந்த அவதூறுகளைத்தான் துடைத்து எழுதுகிறேன்.

நீங்கள் அறிவுரை சொல்வது போல் வேறு மதத்தை நான் தரக்குறைவாக எங்கும் எழுதியதில்லை.

உங்கள் அறிவுரைக்கு நன்றி! இதே அறிவுரையை சம்பந்தப்பட்டவர்களுக்கும் சொல்லி விட்டீர்களா..?

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை
on 25 Sep 2006 at 10:30 am
5rs25 உங்கள் வருகைக்கு நன்றி!
//கஃபீர் என்று இஸ்லாம் யாரைக் குறிக்கிறது?//

காஃபிர்கள் என்றால் யார் என்பதற்கான விளக்கம் நல்லடியார் அவர்களின் இந்தப் பதிவில் கிடைக்கும்.

மற்ற விஷயங்கள்…

திருக்குர்ஆன் மிகவும் தெளிவாகவே இருக்கிறது அதைத்தான் நம் பதிவில் விளக்கி வருகிறோம்.

தீவிரவாதி தனது வன்முறை செயலுக்கு திருக்குர்ஆன் கூறியதாகக் கூறினால், திருக்குர்ஆன் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறதா..? என்பதை நீங்கள் பரிசீலிக்கலாமே.

மற்ற மதத்தின் மேலும் குறிப்பாக யூதர்கள் மேல் நமக்கு எந்த காழ்ப்பும் இல்லை, நீங்கள் முகவரி மாறி வந்து விட்டீர்கள் எனக் கருதுகிறேன்.

”இஸ்லாம், யூத- கிறிஸ்தவ மதத்திலிருந்து நகலெடுக்கப்பட்டது” என்று ஒருவர் புலம்பியிருக்கிறார் அதற்கு விளக்கம் கொடுப்பதற்காக யூத-கிறிஸ்தவ மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது என்பதை இனிமேல் எழுத இருக்கிறேன்.நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை
on 25 Sep 2006 at 10:31 am
6இப்னு பஷீர் அவர்களே. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

asalamone
on 26 Sep 2006 at 1:54 am
7பல விளக்கம்கள் இனியும் எனக்கு தெரியாமல் இருக்கிறது. படித்து அறிந்துக்கொண்டேன். மாற்று
மத நண்பர்களுக்கும் பெரும் உதவிகரமாக உள்ளது. ரமதான் கரீம்.

உங்கள் பணி தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

அசலாம்

திருவடியான்
on 26 Sep 2006 at 5:20 am
8அபூமுஹை, நான் மதப்பாகுபாடு பார்த்து இதைச் சொல்லவில்லை. அனைவரையும் பார்த்துத்தான் சொல்கிறேன். எங்கும் சொல்வேன். தாங்கள் எதிர்க்கணைகளை பக்குவமாக எதிர்கொண்டு அழகாக விளக்கம் அளிப்பது நிறைவாக உள்ளது. தொடரட்டும் உமது பணி.

ஜயராமன்
on 26 Sep 2006 at 6:15 am
9அபூ,

நல்ல பதிவு. முகம்மது அவர்களின் தனித்தன்மை (!) மிகவும் வலமாக இருந்தது என்று எனக்கு தோன்றினாலும், எல்லா தூதர்களும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்வது மனதுக்கு நன்றாக இருக்கிறது. ஆனால், ஒரு இந்துவாக பார்க்கும் எனக்கு யேசு ஒன்று அன்பு பிரதிநிதியாகவும், மூசா, முகம்மது ஒரு ஆதிபத்திய பிரதிநிதிகளாகவும் புரிகிறார்கள். இது அடிப்படையிலா இல்லை ஒரு அரைகுரை அறிவின் பிம்பமா என்று புரியவில்லை. மேலும் இதில் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது என்று மட்டும் தெரிகிறது.

நன்றி

அபூ முஹை
on 26 Sep 2006 at 10:08 pm
10ஜெயராமன் உங்கள் வருகைக்கு நன்றி!

மூஸா, முஹம்மது இந்த இரு இறைத்தூதர்களும் ஆட்சித் தலைவர்களாக, அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.

ஏற்கெனவே பல இறைத்தூதர்கள் அனுப்பப்பட்ட – இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு – அந்தவரிசையில் ஏசு – ஈஸா (அலை) அவர்களும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.

இருக்கும் சட்டங்களை மாற்றுவதற்காக அல்ல, இருந்த சட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே ஏசு (அலை) அவர்களின் பிறப்பை அதிசயமாக்கி, அவரைத் தொட்டிலில் குழந்தையாகப் பருவமாக இருக்கும் போதே பேசும் அற்புதத்தையும் இறைவன் வழங்கினான்.

அன்புடன்,
அபூ முஹை