இஸ்லாம்தளம்

பிப்ரவரி7, 2009

ஹிந்த்(ரலி)பற்றிய உண்மைச் செய்திகள்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஹிந்த் (ரலி) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய நிகழ்ச்சி திரிக்கப்பட்டிருந்தது. இது பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தோம். ஹிந்த் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி அவர் தனியொருவராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியல்ல. மாறாக, நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது மக்காவாசிகள் இஸ்லாம் மார்க்கமே உண்மை மார்க்கம் எனப் புரிந்து இஸ்லாத்தைத் தழுவினார்கள். அந்த செய்தியின் உண்மை நிலை இதுதான்…

அல்லாஹ் இஸ்லாமை ஓங்கச் செய்து, நபியும் முஸ்லிம்களும் மக்காவை வெற்றி கொள்ளும்படி செய்தான். இதைப் பார்த்த மக்காவாசிகள் இஸ்லாமே உண்மை மார்க்கம், வெற்றி பெற இஸ்லாமைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டனர். எனவே, இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்கு ஒன்று கூடினர்.

நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றுக்கு மேல் அமர்ந்து கொண்டு இதற்காக தயாரானார்கள். கீழே உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களிடமிருந்து இஸ்லாமிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். தங்களால் இயன்ற அளவு செவி மடுப்போம் கட்டுப்படுவோம் என மக்கள் ஓப்பந்தம் செய்தனர்.

‘அல்மதாரிக்’ என்ற நூலில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆண்களிடம் ஒப்பந்தம் பெற்ற பின்பு, பெண்களிடம் வாங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபாவின் மீதும், அதற்குக் கீழே உமர் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷயமாகக் கூற அதனை உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நேரத்தில் அபூ ஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் உஹத் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலை சின்னா பின்னமாக்கிய தனது செயலுக்கு நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார்.

நபி (ஸல்) அவர்கள் ”நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தர வேண்டும்” என்று கூற, உமர் (ரலி) அவர்கள் பெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, ”நீங்கள் திருடக் கூடாது என்றார்கள். அதற்கு ”அபூ ஸுஃப்யான் ஒரு கஞ்சன் நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?” என்று ஹிந்த் (ரலி) வினவினார். ”நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே” என்று அபூ ஸுஃப்யான் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் இவர்களின் உரையாடலைக் கேட்டு புன்னகை புரிந்து ”கண்டிப்பாக நீ ஹிந்த் தானே” என்றார்கள். அதற்கவர் ”ஆம்! நான் ஹிந்த் தான் சென்று போன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களைப் பொறுத்துக் கொள்வான்” என்று கூறினார்.

நபி (ஸல்): ”நீங்கள் விபச்சாரம் செய்யக்கூடாது”

ஹிந்த் (ரலி): ”ஒரு சுதந்திரமானவள் விபச்சாரம் செய்வாளா?”

நபி (ஸல்): ”உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொல்லக்கூடாது”

ஹிந்த் (ரலி): நாங்கள் எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்தோம், அவர்கள் பெரியவர்களானதும் நீங்கள் அவர்களைக் கொன்று குவித்தீர்களே! என்ன நடந்தது என்று உங்களுக்கும் அவர்களுக்கும் தான் தெரியும்”

உமர் (ரலி) அவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து மல்லாந்து விழுந்தார். அதைக்கண்டு நபி (ஸல்) அவர்களும் புன்னகைத்தார்கள். ஹிந்த் (ரலி) இவ்வாறுக் கூறக் காரணம்: பத்ரு படைக்களத்தில் அவருடைய மகன் ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யான் கொல்லப்பட்டிருந்தார். அடுத்து..

நபி (ஸல்): ”நீங்கள் அவதூறு கூறலாகாது”

ஹிந்த் (ரலி): ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவதூறு கூறுவது மிகக் கெட்ட பண்பாகும். நீங்கள் நல்லவற்றையும் நற்குணங்களையுமே எங்களுக்கு கூறுகிறீர்கள்”

நபி (ஸல்): ”நீங்கள் நல்ல விஷயங்களில் எனக்கு மாறு செய்யக் கூடாது”

ஹிந்த் (ரலி): ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களுக்கு மாறுபுரியும் எண்ணத்தில் நாங்கள் இங்கு அமர்ந்திருக்கவில்லை”

இந்நிகழ்ச்சிக்குப் பின் வீடு திரும்பிய ஹிந்த் (ரலி) வீட்டினுள் வைத்திருந்த சிலைகளைப் பார்த்து ”நாங்கள் இதுவரை உங்களால் ஏமாற்றப்பட்டிருந்தோம்” எனக் கூறியவாறு அவற்றை உடைத்தெறிந்தார். (மதாரிகுல் தன்ஜீல் என்ற நூலிலிருந்து, ரஹீக்)

(மேலான செய்தி, பத்ரு போர்க் களத்தில் ஹிந்த் (ரலி) அவர்களின் தந்தை உத்பாவும் கொல்லப்பட்டிருந்தார்)

மேற்கண்ட செய்தியைப் படிக்கும் எவருக்கும், ஹந்த் (ரலி) அவர்கள் பலவந்தமாக இஸ்லாத்தில் சேர்க்கப்பட்டார் என்பதற்கோ, வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தமாக இஸ்லாத்தைத் தழுவினார் என்பதற்கோ எள்ளளவும், எள் முனையளவும் சந்தேகம் ஏற்படாது, அறியாமை நிறைந்தவர்களைத் தவிர.

ஹிந்த் (ரலி) அவர்கள் கூறிய ஒவ்வொரு வாசகங்களும், இஸ்லாத்தை களங்கப்படுத்தி விடலாம் என தனது விமர்சனத்தில் கயமைத்தனத்தை மேற்கொள்பவர்களின் செவிட்டில் அறைந்தாற் போல் அமைந்தள்ளது. நபி (ஸல்) அவர்களிடம் உறுதி பெற்று தம்மை இஸ்லாத்தின் இணைத்துக் கொண்ட ஹிந்த் (ரலி) அவர்கள் வீடு சென்றதும் வீட்டிலிருந்த சிலைகளை உடைத்தெறிந்தது அவர் ஓரிறைக் கொள்கையை மனப்பூர்வமாகவே ஏற்று இஸ்லாத்தைத் தழுவினார் என்பதைப் பறைசாற்றுகிறது.

இந்த உண்மையான செய்தியை தனது கற்பனையையும், கயமைத்தனத்தையும் கலந்து, நேசகுமார் இப்படித் திரித்து எழுதியிருக்கிறார்…

//இதில், தமக்கு அங்கீகாரம் கிட்டவேண்டும் என்பதற்காக முந்தய நபிமார்களின் வழியில் தாம் வருவதாக தெரிவித்தார், அப்போதைய சிந்தனாவாதிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த சில கருத்துக்களை தாம் உள்வாங்கி அதை கடவுளின் கருத்தாக முன்வைத்தார், அங்கீகாரம் வேண்டி சமூக ஒழுங்கீணங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்தார். இதன் நல்ல உதாரணம் – ஹிந்தாவுடன் அவருக்கு நிகழ்ந்த உரையாடல். அபூ சு·பியானின் மனைவியான ஹிந்தா, மக்கா நகரை முஸ்லிம் படை கைப்பற்றியவுடன் வேறு வழியின்றி முஸ்லிமாக மாற நேர்ந்தது. அப்போது முஸ்லிமாவதற்கு இந்திந்த உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது சொல்வார். விபச்சாரம் செய்யக் கூடாது என்றவுடன் ஹிந்தா கேட்பார் – சுதந்திரமான எந்தப் பெண்ணாவது விபச்சாரம் செய்வாளா என்று. குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்றவுடன் – என் குழந்தைகளையெல்லாம்தான் நீங்கள் கொன்றுவிட்டீர்களே என்று முகமதுவிடம் வேதனையுடன் சொல்வார்(இப்படி அவர் சொல்லும்போது சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்).// –

– நடந்த சம்பவம், எப்படித் திரிப்பட்டிருக்கிறது என்பது வாசகர்கள் கவனத்திற்கு.
********************************

நபி (ஸல்) அவர்களை, இறைத்தூதர் என்ற அந்தஸ்தில் வைத்து, ஹிந்த் (ரலி) வழங்கி வந்த மேலானக் கண்ணியம் பற்றி கீழ்காணும் செய்தியில் விளங்கலாம்.

ஹிந்த் பின்த் உத்பா, (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட) பிறகு இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது’ என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (இந்த உன்னுடைய விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)” என்று பதிலளித்தார்கள். ஹிந்த் பின்த் உத்பா, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியான ஒருவர். எனவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள். (புகாரி, 3825)

அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>

இஸ்லாம் மார்க்கத்தின் இறைத்தூதர்கள்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் எனும் இறைமார்க்கம் ஆதி முதல் இறுதி வரை ஒரே இறைவனை வணங்கும் வழிபாட்டு முறையைத்தான் மக்களுக்கு போதித்து வந்தது. ஆதி (நபி) ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி (நபி) முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மக்களுக்குப் பிரச்சாரம் செய்தது, ”ஒரே இறைவனை வணங்குங்கள்” என்ற ஏகத்துப் பிரச்சாரத்தையே முன் வைத்தார்கள். இதில் எந்த இறைத்தூதரும் மாற்றம் செய்யவில்லை.

மனிதன் சுயமாக முயன்று இறைவனைப் பற்றியோ, இறைவழி பற்றியும் அறிந்து கொள்ள முடியாது என்பதால், அந்த மனிதர்களிலிருந்தே ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை இறைத்தூதராக நியமிக்கிறான் இறைவன்!

ஏக இறைவனை அறிந்து கொள்வதற்கும், அவனுக்குக் கீழ்படிந்து நடப்பதற்கும், இறைவனைப் பற்றிய உண்மைகள், மற்றும் அவனது தனித் தன்மைகள், அவனுக்கு விருப்பமான வழிமுறைகள், இவ்வுலக வாழ்க்கை – அதாவது பரீட்சை வாழ்க்கையின் வெகுமதியையும் அல்லது தண்டனையைப் பெறவிருக்கும் மறுமை வாழ்க்கையைப் பற்றியத் தெளிவான அறிவை – ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதை ஒவ்வொரு மனிதனும் சுயமாக முயற்சி செய்து இறைவனைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பது இயலாத காரியம். அப்படி இறைவனை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் மனிதர்கள் எவரும் ஒரேக் கருத்தில் இல்லை, மாறாக இறைவனைப் பற்றிய ஒவ்வொரு தனி மனிதனின் கருத்தும் வெவ்வேறாகவே இருக்கிறது என்பது கண்கூடு.

தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் வழியாக வேதவெளிப்பாட்டின் (வஹீ) மூலம் மக்களுக்கு இறைச் செய்தியை சமர்ப்பிக்கும்படி இறைத்தூதர்களுக்கு கட்டளையிட்டான். ஒவ்வொரு சமுதாயத்துக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இறைத்தூதர்களுக்கும் இது பொதுவாக இருந்தது. அதனால் உண்மையான இறைத்தூதர்களை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் பொதுமக்கள் மீது இருக்கிறது.

உண்மையான இறைத்தூதர்.
தன்னை இறைத்தூதர் என அறிமுகம் செய்து கொண்ட எவரும் உடனடியாக இவர் இறைத்தூதர்தான் என்று எற்றுக் கொள்ளப்படவில்லை. மாறாக இவர் உண்மையான இறைத்தூதர் தானா? எனச் சுண்டிப் பார்க்கப்பட்டார்கள், சோதிக்கப்பட்டார்கள், இதற்கான உரை கல்லாக முந்தைய வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என முந்தைய இறை வேதங்களோடு உரசிப்பார்த்தும் ஏற்றுக் கொண்டார்கள். மறுத்தவர்கள் காழ்ப்புணர்ச்சியாலும், பகைமையினாலும் மறுத்தார்கள் என்பதற்கான சான்றுளையும் வரலாற்றில் காண முடிகிறது.

இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த போது மக்காவின் அனைத்து சமூக மக்களும் அதை எதிர்த்தார்கள். எதிர்த்தார்களென்றால் மிகக் கடுமையான வன்முறைச் செயல்களால் எதிர்த்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என அறிமுகம் செய்வதற்கு முன்பு உண்மையாளர், நேர்மையாளர் என்று முஹம்மது (ஸல்) அவர்களைப் போற்றி புகழ்ந்த அதே மக்காவாசிகள், முஹம்மது (ஸல்) அவர்கள் 40ம் வயதில் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்து கொண்டபோது, இவர் பொய்யர், சூனியம் செய்யப்பட்டவர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் சொல்லி மக்கா வாழ் சமூகத் தலைவர்கள், மற்றும் முக்கியஸ்தர்களால் புறக்கணிக்கப்பட்டார்கள். ஊர் விலக்கும் செய்யப்பட்டிருந்தார்கள். இப்படி 13 ஆண்டுகள் தொடர்ந்து வன்முறைச் செயல்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

ஆனாலும் கொள்கையில் எந்த தளர்த்தலும் இல்லை. இதற்கிடையில் எதிரிகளால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விலை பேசப்பட்டார்கள் அப்போதும் கொண்ட கொள்கையில் எவ்வித
மாற்றமும் இல்லை என்று மறுத்து விட்டார்கள். மட்டுமல்ல இறைத்தூதர் (ஸல்) அவர்கள்…

பிறருக்கு என்ன போதித்தாரோ அதன்படி தாமும் வாழ்ந்து காட்டினார்!

தான் சொன்ன விஷயத்துக்கு மாறாக நடந்து கொண்டதாக சின்ன எடுத்துக் காட்டு கூட அவர் வாழ்வில் இல்லை!

அவரது சொல்லிலும் செயலிலும் எந்த விதமான மாறுதலும் இருந்ததில்லை!

அவர் மற்றவர்களின் நன்மைக்காகக் கஷ்டப்படுகிறார்!

தன் நலனுக்காக பிறரைக் கஷ்டப்படுத்தியதில்லை!

உண்மை, கண்ணியம், பரிசுத்த இயல்பு. உயர்வான சிந்தனை, மேலான மனிதத் தன்மை இவற்றின் முன்மாதிரியாக விளங்குகிறார்! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். துருவித் துருவி ஆராய்ந்தாலும் அவரின் வாழ்வில் சிறு களங்கமும் காணப்படுவதில்லை! இப்படி 23 ஆண்டுகள் முரண்பாடு இல்லாத மனித குலத்துக்கே முன்மாதிரியான வாழ்க்கை நெறியை சொல்லாலும், செயலாலும் தானும் பின்பற்றி வாழ்ந்து காட்டினார்.

தனது பிள்ளைகளை அறிவது போல்…
கேஜி வகுப்பில் படிக்கும் தன் மகன், அல்லது மகளை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரச் செல்லும் ஒரு தந்தை அங்கே எத்தனை லட்சம் குழந்தைகள் இருந்தாலும் சரியே! அந்தக் கூட்டத்தில் தன் பிள்ளையை அறிந்து கொள்வார். அதுபோல், கேஜி வகுப்பில் படிக்கும் தன் பிள்ளைக்கு உணவு கொண்டு செல்லும் ஒரு தாய், அங்கே எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் தன் பிள்ளையை சரியாக அடையாளம் கண்டு, தன் பிள்ளைக்கே உணவை ஊட்டிவிட்டுத் திரும்புவார். அதாவது எவ்வளவு கூட்டத்திலும் தம் பிள்ளைகளை அடையாளம் கண்டு கொள்வதில் எந்தப் பெற்றோருக்கும் எவ்வித சிரமும் இருக்காது.

பெற்றோர்கள் தன் பிள்ளைகளை அறிவது போன்றே முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்பதையும் அறிந்திருந்தார்கள். அவர்களை நோக்கி திருக்குர்ஆன் இப்படிப் பேசுகிறது…

”நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தம் பிள்ளைகளை அறிவதைப் போன்று இவரை அறிவார்கள். ஆயினும், அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்கள்”. (திருக்குர்ஆன், 002:146)

பெரும் மக்கள் வெள்ளத்திலும் தன் மகனைக் காணும் ஒருவர், அவன்தான் தன் மகன் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அறிந்து கொள்வார். அப்படி தனது பிள்ளைகளை அறிவது போன்று, முஹம்மது அவர்களையும் நபியென்று முந்தைய வேதக்காரர்கள் அறிவார்கள் என்று இங்கு சொல்லப்படுகிறது. முந்தைய வேதம் வழங்கப்பட்டவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள், இறைத்தூதர் என்பதை மிகச் சரியாக அறிந்து கொண்டார்கள் என்பதற்கான சான்றுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

…”அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்கள்

இது எந்த அளவுக்கு உண்மையான வார்த்தைகள் என்பதற்கு, முஹம்மது அவர்களை ஒரு இறைத்தூதர் என்று நன்கு அறிந்திருந்தும், ஒரு பிரிவினர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிரியாகக் கருதி பகைமைப் பாராட்டி வந்தார்கள் என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்று…

”நான் எனது தந்தைக்கும், தந்தையின் சகோதரருக்கும் பிரியமான பிள்ளையாக இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் அவர்கள் என்னையே தூக்கிக் கொஞ்சுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து குபாவில் அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கினார்கள். அப்போது அதிகாலையிலேயே எனது தந்தை ஹை இப்னு அக்தபும், தந்தையின் சகோதரர் அபூ யாஸிர் இப்னு அக்தபும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் வீடடிற்குத் திரும்பும் பொழுது முகம் வாடியவர்களாக, களைத்தவர்களாக, சோர்ந்தவர்களாக வந்தார்கள். எப்போதும் போல உற்சாகத்துடன் நான் அவர்களிடம் ஓடி வந்தேன், ஆனால் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையினால் அவர்களில் எவரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை.

சிறிய தந்தை: ”இவர் அவர்தானா?” (அதாவது நாம் இப்போது சந்தித்தவர் நமக்கு தவ்ராத்தில் இறுதித்தூதர் என்று அறிவிக்கப்பட்டவர்தானா?)

எனது தந்தை: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆம்!”

சிறிய தந்தை: ”அவரை உமக்கு நன்றாகத் தெரியுமா? உன்னால் அவர்தான் என்று உறுதியாகக் கூறமுடியுமா?”

எனது தந்தை: ”ஆம்!”

சிறிய தந்தை: ”அவரைப் பற்றி உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது?”

எனது தந்தை: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமைக் கொள்வேன்”

உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரலி) அவர்கள் யூதராக இருந்த தனது தந்தை ஹை இப்னு அக்தபின் மன நிலையைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்கள். (நூல், இப்னு ஹிஷாம்)

உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரலி) அவர்களின் தந்தையாகிய ஹை இப்னு அக்தபுக்கும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் ஏதாவது பங்காளித் தகராறு இருந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்சனையா? இது எதுவுமே இல்லாமல், முஹம்மது (ஸல்) அவர்களை இதற்கு முன்னால் பார்த்திருக்கக்கூட இல்லை. அன்றுதான் மதீனாவுக்கு வந்திருக்கிறார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனா வந்த அன்றே அவர்களை சந்தித்து பேசியதில் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிந்து கொள்கிறார்.

முஹம்மது (ஸல்) அவர்கள், ஒரு இறைத்தூதர் என்பதற்காக மட்டுமே ”நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமை கொள்வேன்” என்று ஹை இப்னு அக்தபு கூறுகிறார் என்றால் அவருடைய மன நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எவ்விதக் காரணமுமின்றி இது போன்ற பகைவர்கள் இன்னும், இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இனியும் இருக்கத்தான் செய்வார்கள்.

இறைத்தூதரை உண்மைப்படுத்தும் முந்தைய இறைத்தூதர்.

”இஸ்ராயீல் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பட்ட அல்லாஹ்வின் தூதர்! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹ்மத்’ என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்” என்று மர்யமின் குமாரர் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக.. (திருக்குர்ஆன், 061:006)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி முந்தைய இறைத்தூதர்களால், முந்தைய வேதங்களில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டு, அந்த முன்னறிவிப்பின் காரணமாக, முஹம்மது நபி அவர்களை ஏற்றுக் கொள்வதில் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்றைய தாயகமான எகிப்து, பாலஸ்தீன பகுதியிலிருந்து யூதர்கள், ”தய்யிபா என்ற மதீனா” நகரில் குடியேறினார்கள். அவ்வாறு குடியேறியவர்களின் வாரிசுகளில் பலர், முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா வந்தபோது அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டனர். சிலர் இறைத்தூதர் என அறிந்து கொண்டே முஹம்மது (ஸல்) அவர்களை மறுத்தனர்.

இறைத்தூதர் என எற்றுக் கொண்டவர்களும், முஹம்மது (ஸல்) அவர்களை ஒரு இறைத்தூதர் என்பதை உண்மைப்படுத்தினார்கள். ஒரு சாரார், இறைத்தூதர் என்பதை அறிந்து கொண்டதாலேயேயும் அவர்களைப் புறக்கணித்து, முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதை உண்மைப்படுத்தினார்கள். புறக்கணித்தவர்கள் தங்களை மேட்டுக் குடியினர் என்று சுயப் பிரகடனப்படுத்திக் கொண்டதால் அந்த உயர்குடியில்தான் தூதர்கள் வருவார்கள் என நம்பிய இறுமாப்பினால் அறிந்து கொண்டே மறுத்தனர்.

இன்றைய முஸ்லிம்கள்.
இன்றைய முஸ்லிம்கள், முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நம்புகிறார்கள் என்றால் அது நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல. மாறாக முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்துதூதர் என்பதற்கான வலுவான சான்றுகள் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் எந்த சான்றுகளும் ஒரு முஸ்லிமிற்கு அவசியமில்லை! முஹம்மது நபி இறுதி இறைத்தூதர் என்பதால் இதன் பிறகு எந்த நபியின் வருகையும் இல்லை என உறுதியாகி, இன்றைய முஸ்லிம்களுக்கு இனியொரு நபியை அடையாளம் காணும் அவசியமும் இல்லாமல் போய் விட்டது.

உலக முடிவு நாள் நெருக்கத்தின் அடையாளமாக ”தஜ்ஜால்” (கிறிஸ்தவ மதத்தினர் ”அந்தி கிறிஸ்து”) எனும் வழிகெடுப்பவன் தோன்றுவான் என்று அவனைப் பற்றி எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றன இதுவும், இது போன்ற இன்னும் பல அடையாளங்களையும் தெரிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை இஸ்லாம் அறிவிக்கின்றது. இவைகளே இன்றைய முஸ்லிம்களும், உலக முடிவு நாள்வரை வரவிருக்கும் முஸ்லிம்களும் மிக முக்கியமாக அறிந்து கொள்ள வேணடிய விஷயங்களாகும். இது தவிர, ஏற்கேனவே இறைத்தூதரை நம்பிக்கைக் கொண்டவர்களைப் பார்த்து, ”நீங்கள் இறைத்தூதரை எப்படி அறிந்து கொள்வீர்கள்?” என்று கேட்பது மிகவும் அபத்தமானது.

இதற்காக, ”நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.” என்று சொல்வதும் அறியாமை!

நன்றி!
அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>

இறுதித் தீர்ப்பு நாள் எப்போது?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், மறுமை நாள் – இறுதித் தீர்ப்பு நாள் என்ற அந்த நாள் நிச்சயமாக வரும் என நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்களில் மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருந்தார்கள். மறுமை வாழ்க்கையை அவர்களால் நம்ப முடியாமல் போனது, இந்த மண்ணுலக வாழ்க்கையைத் தவிர வேறு எந்த வாழ்க்கையும் இல்லை என்ற நம்பிக்கையும்தான் நபிமார்களையும் அவர்களின் போதனைகளையும் நிராகரிக்கும்படிச் செய்தது…

”இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்” என்று அவர்கள் கூறினார்கள். (திருக்குர்ஆன், 006:029)

”மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.” (திருக்குர்ஆன், 083:004 – 006)

இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் இறுதி நாளை மறுத்து வந்ததையும், அவர்கள் மறுப்புக்கு பதிலடியாக இறுதி நாள் நிச்சயமாக நிகழ இருக்கிறது என்று இறைவன் கூறியதையும் திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில் காணமுடியும். இறுதித் தீர்ப்பு நாள் எப்போது வரும் – எந்த நேரத்தில் சம்பவிக்கும் என்பது இறைத்தூதர்கள் உள்பட – மனிதர்கள் எவருக்கும் தெரியாது. அது பற்றிய ஞானம் இறைவனிடமே உள்ளது…

”நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன்.” (திருக்குர்ஆன், 020:015)

”அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது..” (திருக்குர்ஆன், 31:34)

இன்னும், மறுமை நாள் என்று சொல்லப்படும் அந்த இறுதி நாள் எப்போது வரும் என்பது இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதை ஆணித்தரமாக மேற்கண்ட இரு வசனங்களும், இன்னும் இது போன்ற பல இறை வசனங்களும் கூறிக் கொண்டிருக்கிறது. இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அந்த நாள் எப்போது வரும் என்று தெரியாது என்பதையும் சேர்த்தே இந்த வசனஙகள் உள்ளடக்கியுள்ளது. ஒரு முறை வானவர் ஜிப்ரீல் மனித உருவத்தில் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ”மறுமை நாள் எப்போது வரும்”? கேட்கிறார்…

…”மறுமை நாள் எப்போது?’ என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல், மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்” என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” (திருக்குர்ஆன் 31:34) புகாரி, 50 (இது ஒரு நீண்ட நபிமொழியின் சுருக்கம்)

”மறுமை நாள் எப்போது வரும்”? என்றக் கேள்விக்கு அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது என்று 031:034வது வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். மேலும் ”மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்”? என்பது பற்றி இறைவன் எனக்கும் அறிவித்துத் தரவில்லை என்று பொருள்படும் வகையில் ”அதைப் பற்றிக் கேள்வி கேட்பவரை விட நான் அறிந்தவரல்ல” என்று தமக்கு மறுமை நாள் எப்போது சம்பவிக்கும் என்பது தெரியாது என்று பதிலளிக்கிறார்கள்!

இறுதி நாள் எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவு இறைவனிடம் மட்டுமே உள்ளது என்றாலும் அந்த நாள் வருவதற்கு முன் நிகழவிருக்கும் சில சம்பவங்களை, அடையாளமாக, இறைவன் தனது தூதருக்கு அறிவித்திருக்கிறான். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் மனித சமுதாயத்திற்கு அதை அடையாளங்காட்டி முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்…

இறுதி நாள் வருவதற்கு, முன் அடையாளமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல அறிவிப்புகள் செய்துள்ளார்கள். அதில் மிக முக்கியமானதாக 10 அடையாளங்களை அறிவித்திருக்கிறார்கள்.

1. புகை மூட்டம்
2. தஜ்ஜால்
3. (அதிசயமானப்) பிராணி
4. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது.
5. ஈஸா (அலை) இறங்கி வருவது.
6. யாஃஜுஜ் மஃஜுஜ்
7,8,9. அரபு தீபகற்பத்தில் கிழக்கில் ஒன்று, மேற்கே ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது.
10. ஏமனிலிருந்து கிளம்பும் தீப்பிழம்பு மக்களை விரட்டி ஒன்று சேர்ப்பது.

”இந்த பத்து நிகழ்ச்சிகளையும் நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிட நேரத்தில் உலகெங்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கண்ட முன்னறிவிப்பு அடையாளங்களில் ஏதாவது ஒன்று எங்கு நடந்தாலும், நடந்து முடிந்தவுடன் அந்த செய்தி உடனடியாக உலகத்திற்கே செய்திகள் மூலம் தெரிந்துவிடும்.

மேலும், தஜ்ஜாலின் வருகை, நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவது, இவையெல்லாம் நிகழும் நேரத்தில் அந்த அதிசயங்கள் உலகெங்கும் அறிவிக்கப்படும். அதிலும் முக்கியமாக சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதை செய்திகள் இல்லாமலே ஒவ்வொருவரும் நேரில் காண முடியும். அதிசயப் பிராணி பற்றி திருக்குர்ஆன்…

”அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.” (திருக்குர்ஆன், 027:082)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிரினம், இறுதி நாளுக்கு முன்பு, இறுதி நாளின் அடையாளமாகத் தோன்றும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த அதிசயப் பிராணி தோன்றி மனிதர்களிடம் பேசினால் அதுவும் மிக அதிசயமாக உலகிற்கு அறிவிக்கப்படும்.

இங்கு நாம் அறிந்து கொள்வது:

இறுதி நாள் எப்போது? என்ற ஞானம் அல்லாஹ்வைத் தவிர, இறைத்தூதர்கள் உட்பட வேறு யாருக்கும் தெரியாது.

இறுதி நாள் ஏற்படும் முன் சில நிகழ்வுகள் சம்பவிக்கும். அந்த சம்பவங்கள் நிகழாமல் இறுதி நாள் ஏற்படாது!

”அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது, அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா”? (திருக்குர்ஆன், 012:107)

”வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது, அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.” (திருக்குர்ஆன், 016:077)

இவை அனைத்தும் இறைவனால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது. இறுதி நாள் பற்றிய, அந்த சம்பவம் எப்போது நிகழும்? என்ற ஞானம் தமக்கு இல்லை என்றே சத்திய நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுப் பணியைக் களங்கப்படுத்திட முயற்சிக்கும் நோக்கத்தில், ”இறுதி நாள் பற்றிய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டது” என்று சில நபிமொழிகள் வைக்கப்பட்டிருக்கிறது…

//muslim/Book 041, Number 7050:அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

Book 041, Number 7051:
அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”//

இது ஒரு சாதரண விஷயும். சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் மேற்கண்ட நபிமொழியின் முன்னறிவிப்பு பொய்ப்பித்து விட்டதாகத் தோன்றுகிறது. மேற்கண்ட நபிமொழிகளை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விளங்குவதற்காக கீழ்காணும் நபிமொழி…

”மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது.

இரண்டு பேர் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள், சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும்.

மேலும், ஒரு மனிதர் மடிகனத்த தமது ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போது தா)ன் பாலுடன் (வீடு) திரும்பியிருப்பார், இன்னும் அதைப் பருகி கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.

ஒருவர் தம் நீர் தொட்டியை (அப்போதுதான்) கல்வைத்துப் பூசியிருப்பார், இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.

உங்களில் ஒருவர் தம் உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார், அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி, 6506

உணவை வாயருகில் கொண்டு சென்றவர், அந்த ஒரு கவள உணவை உண்டிருக்க மாட்டார் அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் என்றால் அப்போ அன்றிலிருந்து இன்றுவரை யாருமே உணவு உண்ணாமல் இருந்தார்களா? அல்லது உங்களில் ஒருவர் உணவை வாயருகில் கொண்டு சென்றால் மறுமை சம்பவித்து விடும் என்று அர்த்தமா? இல்லை! பின் வேறென்ன பொருள் கொள்வது?…

அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது, அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.” (திருக்குர்ஆன், 016:077)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறி, தம் இரண்டு விரல்களையும் (-சுட்டுவிரல், நடுவிரல் இரண்டையும்) நீட்டியவாறு சைகை செய்தார்கள். புகாரி, 6503
இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்பு, எந்த நபிமார்களுக்குப் பின்னும் மறுமை நாள் ஏற்படாது. இறுதித்தூதர் வருகைக்குப் பிறகுதான் மறுமை சம்பவிக்கும். அதையே ”நானும் மறுமையும் மிக நெருக்கத்தில் இருக்கிறோம்” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள்.

சிறுவருக்கு முதுமை ஏற்படுமுன்..

”கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘மறுமை நாள் எப்போது?’ என்று கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி ”இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்” என்று கூறுவார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி, 6511 (இதே ஹதீஸ் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது)

”மறுமை நாள் எப்போது?” என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், அங்கே இருந்தவர்களிலேயே வயதில் சிறியவரைக் காட்டி ”இவர் முதுடையடையும் முன்பே உங்கள் மீது மறுமை சம்பவித்துவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது அந்தச் சிறுவர் உயிரோடு இருந்து, வளர்ந்து வாலிபமாகி, முதுமை வயதையடையும்போது, அங்கேயிருந்த அச்சிறுவரை விட வயது கூடியவர்கள் – முதியவர்கள் எவரும் உயிரோடு இருக்க மாட்டார்கள். அவர்கள் மீது மறுமை – இறுதிநாள் – Last Hour சம்பவித்து விடும்.

மனிதன் இறந்தவுடன், இறுதி நாள் என்ற மறுமை வாழ்வு துவங்கி விடுவதால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பும் மறுமை நாள்தான். மொத்தமாக உலகம், உலகத்திலுள்ளவைகளும் அழிந்து விடும் நேரத்தையும் மறுமைநாள் – இறுதிநாள் – Last Hour என்று சொன்னாலும் அந்த உலகம் அழியும் நாள் எப்போது என்று ”எனக்குத் தெரியாது” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது பற்றிய அறிவு அல்லாஹ்வைத் தவிர எவரிடத்திலும் இல்லை!

”அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள். நீர் கூறும், ‘அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது – அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும். திடுகூறாக அது உங்களிடம் வரும் அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள், அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.” (திருக்குர்ஆன், 007:187)

”நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான். இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளைய தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை. தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன் நுட்பம் மிக்கவன்.”(திருக்குர்ஆன், 031:034)

அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>

வேதமில்லாத சமுதாயம்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)

”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.

Were Warners Sent to All Mankind Before Muhammad? Allah had supposedly sent warners to every people [10:47, 16:35-36, 35:24], Abraham and Ishmael are specifically claimed to have visited Mecca and built the Kaaba [2:125-129]. Yet, Muhammad supposedly is sent to a people who never had a messenger before [28:46, 32:3, 34:44, 36:2-6]. This article also raises other issues: What about Hud and Salih who supposedly were sent to the Arabs? What about the Book that was supposedly given to Ishmael? Etc.

கேள்வி:- 3. எச்சரிப்பவர்கள் முஹம்மதுக்கு முன் இருந்த மனிதர்களுக்கு அனுப்பப்பட்டார்களா? அல்லாஹ் எல்லா மக்களுக்கும் எச்சரிப்பவர்களை அனுப்பி உள்ளான் [10:47, 16:35-36, 35:24], ஆப்ரஹாமும் இஸ்மவேலும் மக்கா சென்று காஅபாவைக் கட்டியவர்கள் [2:125-129]. இருப்பினும் இதற்கு முன் ஒரு தூதரும் அனுப்பப்படவில்லை என்று நம்பப்படும் மக்களுக்கு முஹம்மது தூதராக அனுப்பப்பட்டார் [28:46, 32:3, 34:44, 36:2-6]. இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஹூத், ஸாலிஹ் என்று அரபுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்வது? இஸ்மவேலுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் என்னாயிற்று?

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று திருக்குர்ஆன் 010:047வது வசனம் கூறுகிறது. இந்த விளக்கத்தின்படி அனைத்துச் சமுதாய மக்களுக்கும் இறைவன் தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறான். அது பற்றிய வசனங்கள்…

முதல் வகையான வசனங்கள்.

”ஒவ்வொரு சமூகத்தாருக்கும் தூதர் உண்டு. அவர்களுடைய தூதர் வந்ததும் அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும், அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.” (010:047)

”அல்லாஹ் வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.” (016:036)

”எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.” (035:024)

(இன்னும் ஒரு சமுதாயத்துக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளார்கள் பார்க்க: 010:075. 036:13,14.)

010:047. 016:036. 035:024 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள் எல்லா சமூகத்தினர்களுக்கு நபிமார்களை அனுப்பியதாகக் கூறி. அச்சமூட்டி எச்சரித்து இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே இல்லை என்றும் கூறுகிறது. இனி இதற்கு முரண்பாடாகக் கருதும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்…

இரண்டாம் வகையான வசனங்கள்.

”இதற்கு முன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத சமுதாயத்துக்கு நீர் எச்சரிக்கை செய்பவராகவும், அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் (இது கூறப்படுகிறது) (028:046)

”உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.” (032:003)

”அவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை.” (034:044)

”எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இவர்களை நீர் எச்சரிப்பதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.” (036:005,006)

முதல் வகையான (010:047. 016:036. 035:024) வசனங்கள், அறிவுரை கூறியும் எச்சரிக்கை செய்தும், நபிமார்கள் அனுப்பப்படாத சமுதாயங்கள் எதுவும் இல்லை என்று கூறுகிறது.

இரண்டாம் வகையான (028:046. 032:003. 034:044. 036:005,006) வசனங்கள், இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதுவரை தூதர் அனுப்பப்படாத சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டார்கள் என்றும் கூறுகிறது. இந்த இருவகையான வசனங்களிலும் முரண்பாடு இருப்பதாகக் கொள்ள முடியாது. ஏற்கெனவே எல்லா சமுதாயத்தினருக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது, இறுதியாக தூதர் அனுப்பப்படாமலிருந்த சமுதாயத்திற்கும் அச்சமூட்டி எச்சரித்துத் தூதரை அனுப்பி நிறைவு செய்யப்பட்டது.

முரண்படுவதாகச் சொல்பவர்களும் இந்த வசனங்களைச் சொல்லி முரண்படுவதாகச் சொல்லவில்லை. இந்த வசனங்களைச் சுட்டிக் காட்டி, இவற்றோடு வேறு வசனங்களையும் ஒப்பிட்டு அதனால் முரண்படுவதாகச் சொல்கிறார்கள். அவற்றையும் பார்ப்போம்.

(இதையும் எண்ணிப் பாருங்கள்; ”கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம். இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் ‘என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.

(இன்னும் நினைவு கூறுங்கள்) ”இறைவா! இந்த ஊரைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று இப்ராஹீம் கூறியபோது, ”(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன், பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன், வேருமிடத்தில் அது மிகவும் கெட்டது” என்று அவன் கூறினான்.

இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, ”எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினர்).

”எங்கள் இறைவனே! எங்களை உனக்கு முற்றிலும் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன்.
”எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
(002:125-129)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை முன் வைத்து ஏற்கெனவே நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர் மைந்தர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் மக்காவாசிகளுக்கு நபியாக அனுப்பப்பட்டவர்கள்தானே, இந்த இரு நபிகளின் மூலம் வேதங்களும் வழங்கப்பட்டவர்கள் தானே என்றும் கேட்டு, அரபியர்களுக்கு ஏற்கெனவே நபிகள் அனுப்பப்பட்டிருக்கிறது அதனால் இரண்டாவது வகையான (028:046. 032:003. 034:044. 036:005,006) வசனங்கள் முரண்படுகிறது என்று சொல்ல வருகிறார்கள்.

அதாவது மக்காவாசிகளுக்கு முன்பு தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறது ஆனால் ஏற்கெனவே தூதர்கள் அனுப்பப்பட்ட சமுதாயத்துக்கு மீண்டும் தூதராக முஹம்மது (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார் என்ற வாதத்தை வைத்து –

”அவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.” (034:044) – திருக்குர்ஆன் இந்த வசனத்தையும் இது போன்ற இரண்டாம் வகையான வசனங்களையும், 002:125-129 ஆகிய வசனங்களோடு ஒப்பிட்டு முரண்படுத்துகிறார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திற்கு, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை திருக்குர்ஆன் (002:125-129 ) வசனங்கள் விவரிக்கின்றது. இந்த 2500 ஆண்டுகளுக்கிடையில் அரபு நாட்டில் வேறெந்த இறைத்தூதரும் அனுப்பப்படவில்லை! இங்கே அரபிய சமுதாயங்கள் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்…

அரபிய சமுதாயங்கள்.

வரலாற்றாசிரியர்கள் அரபிய சமுதாயத்தை வம்சாவழி அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கின்றனர்.

1. அல் அரபுல் பாயிதா.
இவர்கள் பண்டையக் கால அரபியர்களான ஆது, ஸமுது, தஸ்மு, ஜதீஸ், இம்லாக், உமைம், ஜுர்ஹும், ஹழூர், வபார், அபீல், ஜாஸிம், ஹிழ்ர மவ்த் ஆகிய வம்சத்தினர் ஆவர். முதல் வகையைச் சேர்ந்த இவர்கள் காலப்போக்கில் அழிந்து விட்டதால் இவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.

2. அல் அரபுல் ஆரிபா.
இவர்கள் எஷ்ஜுப் இப்னு யாஃருப் இப்னு கஹ்தானின் சந்ததியினராவர். கஹ்தான் வம்ச அரபியர் என்றும் இவர்கள் அழைக்கப்படுவார்கள்.

3. அல் அரபுல் முஸ்தஃரிபா.
இவர்கள் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினராவர். இவர்களை அத்னான் வம்ச அரபிகள் என்றும் அழைக்கப்படும்.

இந்த வரலாற்று குறிப்புகளிலிருந்து ஆது, ஸமூது கூட்டத்தினர் அழிக்கப்பட்டார்கள் என்று அறிய முடிகிறது. இதையேத் திருக்குர்ஆனும் உறுதி செய்கிறது. ஆது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதையும், ஆது சமுதாயத்துக்குப் பின் வந்த ஸமூது கூட்டத்தினரும் அழிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் 007:072-078 வசனங்கள் கூறுகிறது.

மக்காவில் எவருமே குடியிருக்காத நிலையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி அன்னை ஹாஜராவையும் கைக்குழந்தையாக இருந்த தமது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் மக்காவில் குடியமர்த்தியதற்கு முன்பே இரண்டாம் ஜுர்ஹும் என்ற யமன் கோத்திரத்தினர் மக்கா வழியாக போக்குவரத்திலிருந்தனர். அன்னை ஹாஜரா, மகன் இஸ்மாயீல் (அலை) இவர்களின் பொருட்டு இறைவன் ஜம் ஜம் என்ற நீரூற்றை வெளிப்படுத்தினான் இந்த நீரூற்றின் காரணமாக ஜுர்ஹும் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அன்னை ஹாஜராவின் அனுமதியோடு மக்காவில் குடியேறினார்கள்.

ஜுர்ஹும் குலத்தார் மக்காவில் தங்கியதோடு, தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்பி அவர்களும் மக்காவில் குடியேறினார்கள். இதனால் ஜுர்ஹும் குலத்தார்களின் வீடுகள் மக்காவில் தோன்றின. குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்களும் வளர்ந்து வாலிபமானார். ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அரபு மொழியைக் கற்றுக் கொண்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் குலத்தாருக்கு மிகவும் பிரியமானவராகவம், விருப்பமானவராகவும் திகழ்ந்தார். இஸ்மாயீல் (அலை) பருவ வயதை அடைந்தபோது ஜுர்ஹும் குலத்தார் தம் குலத்திலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இந்தச் சம்பவங்களும் இன்னும் கூடுதலான விவரங்களையும் (புகாரி 3364 ) நபிவழிச் செய்தியிருந்து தெரிந்து கொள்ளலாம். நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வம்சா வழித் தோன்றல்கள் இங்கிருந்துத் துவங்குகிறது.

”இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவூட்டுவீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.” (019:054)

இஸ்மாயீல் (அலை) அவர்கள் இறைவனால் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார் என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது. ஆனால் அவருக்கு வழங்கிய வேதம், காலப்போக்கில் அழிந்து விட்டன என்றே விளங்க முடிகிறது. அதற்குப் பின் – முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன் – வந்த இறைத்தூதர்களுக்கு வழங்கிய வேதங்களே உருப்படியாக இல்லையெனும்போது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு வழங்கிய வேதத்தின் நிலைப்பற்றி சொல்லத் தேவையில்லை.

இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பின் – இறுதி இறைத்தூதருக்கு முன் – அரபு நாட்டில் எந்தத் தூதரும் தோன்றியிருக்கவில்லை. இந்த 2500 ஆண்டுகளாக எந்த வழிகாட்டியும் அனுப்படாத, வேதமென்று எதுமில்லாத ஒரு சமுதாயத்தின் தான்தோன்றித்தனமான ஆன்மீகம் எப்படியிருந்திருக்கும்? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள், ஆனால் இப்ராஹீம் நபியின் மார்க்கத்துக்கு எதிரான மூட நம்பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கிக் கிடந்தனர்!

திருக்குர்ஆன் ஒரு வசனத்திற்கு வேறு ஒரு வசனமே விளக்கமாகும் என்ற அடிப்படையில், அன்றைய சமுதாயங்களில் வேதம் வழங்கப்பப்படாத சமுதாயம் இருந்தது என்பதை கீழ்வரும் வசனத்திலிருந்து விளங்கலாம்…

”எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கே வேதம் அருளப்பட்டது. நாங்கள் அதைப் படிக்கத் தெரியாமல் இருந்தோம்” என்றும், ”எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால் அவர்களை விட நேர்வழி பெற்றிருப்போம்” என்றும் நீங்கள் கூறாதிருக்கவும் (இவ்வேதத்தை அருளினோம்) (006:156,157)

எங்களுக்கு வேதம் அருளப்படவில்லை என்ற நியாயமான கோரிக்கையை வைக்கும் சமுதாயம் ஒன்று அன்று இருந்தது.

மட்டுமல்ல, எங்களுக்கு வேதம் வழங்கப்படவில்லை அதனால் நாங்கள் நேர்வழி பெறவில்லை என, நாங்கள் நேர்வழி பெறாதது எங்கள் குற்றமில்லை என்ற நேர்மையானக் காரணத்தை சமர்ப்பிக்கும் நிலையிலும் அந்தச் சமுதாயம் இருந்தது.

எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கு வேதம் அருளப்பட்டது அதை நாங்கள் படிக்கத் தெரியாமல் இருந்தோம் என்பது அந்த சமுதாயத்திற்கு சமீப காலமாக அவர்களின் தாய்மொழியாகிய அரபி மொழியில் வேதம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது இதையே –

”அவர்கள் வாசிக்கக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.” (034:044) – என்று திருக்குர்ஆன் விளக்குகிறது.

”அவர்கள் வாசிக்கக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை எனும் போது, வேதம் வழங்கப்படாத சமுதாயத்துக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் தூதராக அனுப்பியிருக்கவில்லை என்பதே பொருள். அதாவது 2500 ஆண்டுகளுக்கிடையில் எந்தத் தூதரும் அனுப்பப்படாமல், வேதமும் வழங்கப்படாமலிருந்த அரபி சமுதாயத்துக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை நியமிக்கிறான் இறைவன். மேலும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையும் (002:129) இங்கு நிறைவேற்றப்படுகிறது.

அச்சமூட்டி எச்சரிக்க இறைத்தூதர் அனுப்பப்படாத சமுதாயத்துக்கு, முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்ற திருக்குர்ஆன் கூற்றில் எவ்வித முரண்பாடும் இல்லை! அதோடு, முழு மனித குலத்துக்கும் இறைத்தூராகவும், இறுதித்தூதராவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நியமிக்கப்பட்டு தூதுப்பணி நிறைவு செய்யப்பட்டது.

அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>