இஸ்லாம்தளம்

பிப்ரவரி6, 2009

இறைவனைப் பார்க்க முடியுமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)

”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.

Can Allah be seen and did Muhammad see his Lord? Yes [S. 53:1-18, 81:15-29], No [6:102-103, 42:51].

கேள்வி 2. அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா? முஹம்மது அல்லாஹ்வைப் பார்த்தாரா? ஆம் (53:1-18, 81:15-29) இல்லை (6:102-103, 42:51)

ஆன்மீகத்தின் உயர்வான நிலை இறைவனைக் காண்பது என்பார்கள். ஆன்மீகவாதிகள் சிலர் இறைவனைப் பார்த்ததாகச் சொல்வார்கள். ஆனால் இவ்வுலகில் இறைவனைப் பார்க்க முடியாது என இஸ்லாம் கூறுகிறது. இறைத்தூதர்கள் உள்பட எந்த மனிதனும் நேரில் இறைவனைப் பார்க்க முடியாது என்றே திருக்குர்ஆன் உறுதியாகக் கூறுகிறது.

”பார்வைகள் அவனை அடையாது, அவனோ பார்வைகளை அடைகிறான்” (திருக்குர்ஆன், 006:103)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ”நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘(அவனைச் சுற்றிலும்) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். நூல், முஸ்லிம் தமிழ் 291. ஆங்கிலம், 0341.

இந்த உலகில் எந்த மனிதரும் இறைவனைப் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன், 006:103வது வசனம் கூறுகிறது. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் – ”இறைவன் ஒளியாயிற்றே அவனை எப்படிப் பார்க்க முடியும்?” – இம்மையில் இறைவனைப் பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். இம்மையைப் பொருத்தவரை இறைவனைக் காண முடியாது என்று சொல்லும் இஸ்லாம், மறுமையில் இறைவனைப் பார்க்க முடியும் என்றும் கூறுகிறது.

”அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும், தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்” (075:022,023. இன்னும் பார்க்க: 002:046. 010:007,011.15,45. 018:105. 025:021. 032:010. 041:054. 083:015.)

நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக (மறுமையில்) உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!” என்று கூறிவிட்டு, ‘சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!” (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள். புகாரி, 554. (முஸ்லிம் தமிழ், 299. ஆங்கிலம் 0349.)

இனி… முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்று விளங்கும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

முஹம்மது அல்லாஹ்வைப் பார்த்தாரா? ஆம்: பார்த்தார்! என்பதற்கு திருக்குர்ஆன் 053, 081 ஆகிய அத்தியாயத்திலுள்ள வசனங்கள்…

(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.

அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.

(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.

அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.

(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.

ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?

அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.

ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே. (திருக்குர்ஆன், 053:006-14)

அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். (திருக்குர்ஆன், 081:23)

திருக்குர்ஆன் 053, மற்றும் 081 ஆகிய இரு அத்தியாயத்திலுள்ள வசனங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்கிறதே? என்று, இது 006: 103வது வசனத்திற்கு முரண்படுகிறது எனச் சொல்ல வருகிறார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனங்களுக்கு என்ன விளக்கம் தந்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு முன், மிகச் சாதாரணமாக நடுநிலையோடு இந்த வசனங்களை அணுகினால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்ததாக இந்த வசனங்கள் சொல்லவில்லை என்ற விளக்கத்தைத் தெளிவாகவே நாம் பெற முடியும்.

”அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்” (081:23) இந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில்…

”இது மரியாதைக்குரிய தூதரின் சொல்லாகும்” (19)

”(அவர்) வலிமை மிக்கவர், அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்” (20)

”வானவர்களின் தலைவர் அன்றியும் நம்பிக்கைக்குரியவர்” (21) இந்த மூன்று வசனங்களும் சந்தேகத்திற்கிடமின்றி வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றியேப் பேசுகிறது என்பது தெளிவு. ”அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்” (081:23) என்று சொல்வது இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ப்பிக்கும் வானவர் தூதரான ஜிப்ரீல் (அலை) அவர்களையே குறிப்பிடுகிறது.

”ஸிராத்துல் முன்தாஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்” (053:13,14) இந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில்…

”அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை” (3)

”அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை” (4)

”மிக்க வல்லமையுடையவர் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்” (5)

”(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் அடி வானத்தில் இருக்கும் நிலையில் தோன்றினார்” (6,7)

”பின்னர் இறங்கி நெருங்கினார்” (8)

அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு, அல்லது அதைவிட நெருக்கமாக இருந்தது” (9)

”தனது அடியாருக்கு அவன் அறிவித்ததை அறிவித்தார்” (10)

”அவர் பார்த்ததில் அவருடைய உள்ளம் பொய்யுரைக்கவில்லை” (11)

”அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?” (12) இந்த வசனங்களும் இறைவனுக்கும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குமிடையில் தூதராக இருந்து வானுலக இறைச் செய்திகளை இறைத்தூதருக்கு அறிவிப்பவராக இருந்த வானவர் ஜிப்ரீலைப் பற்றியே இங்கு சொல்லப்படுகிறது. அதாவது…

”அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்” (081:23) என்று இந்த வசனத்தில் யாரைக் குறிப்பிட்டு சொல்லப்படுகிறதோ, அவரையே மீண்டும் சந்தித்தாக – ”ஸிராத்துல் முன்தாஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்” (053:13,14) – இந்த வசனத்தில் சொல்லப்படுகிறது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு தடவை சந்தித்ததும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களைத்தான் என்பது இதன் முன் பின் வசனங்களிலிருந்து விளங்கலாம். மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்தது இறைவனை அல்ல என்பதை அவர்களே விளக்கியுள்ளார்கள்…

நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) ”அபூ ஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரிய இட்டுக் கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள். நான் ”அவை எவை”? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ”யார் முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்” என்று சொன்னார்கள். உடனே நான் சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ”இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசப்படாதீர்கள். வலிவும் மண்புமிக்க அல்லாஹ் ‘அவரைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்” (081:023) என்றும், ‘நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்’ (053:13) என்றும் கூறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின் வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அது (வானவர்) ஜிப்ரீலை (நான்) பார்த்ததையே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரண்டு தடவைகள் தவிர வேறேப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) ”அல்லாஹ் (பின் வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.

”கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது. அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும், நன்கறிந்தவனும் ஆவான்” (006:103)

அல்லது (பின் வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ”எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசியதில்லை. ஆயினும் வஹியின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை (வேதமாக) அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை, நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கோனும் ஆவான்” (042:051) முஸ்லிம் தமிழ், 287. ஆங்கிலம் 0337. இன்னும் பார்க்க: புகாரி, 3232, 3233, 3234, 3235.
திருக்குர்ஆனுக்கு விளக்கமாகவே வாழ்ந்து காட்டிய இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விளக்கமே மிகச் சரியானது! எல்லா நேரத்திலும் வானுலக இறைச் செய்திகளை கொண்டு வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ப்பித்தது வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களே என்றாலும், இறைவன் தன்னைப் படைத்த நிஜமான, அசல் தோற்றத்தில் ஜிப்ரீல் (அலை) இரண்டு தடவைகள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்திருக்கிறார் என்பதை விளக்கவதோடு, மற்ற நேரங்களில், ஜிப்ரீல் (அலை) தமது நிஜத் தோற்றத்தில் அல்லாமல் சாதாரண மனிதரைப் போலவே இறைத்தூதர் (ஸல்) அவர்களை சந்தித்து இறைவனின் வஹியை அருளியிருக்கிறார் என்றும் விளங்கலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு தடவை வானவர் ஜிப்ரீலை நிஜத் தோற்றத்தில் சந்தித்தது சர்ச்சையாக இருந்ததால் அது பற்றிய தர்க்கத்தையும் சந்தேகத்தையும் நீக்கிடவே ”அவர் பார்த்ததில் அவருடைய உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?” (053:11,12) என ஏக இறைவன் தனது தூதரை மெய்ப்பிக்கிறான்.

இம்மையில், இறைத்தூதர்கள் உள்பட மனிதர்கள் எவரும் இறைவனைப் பார்க்க முடியாது (006:103) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்ததாகக் குறிப்பிடுவது (081:23, 053:13,14) நிஜத் தோற்றத்தில் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களை என்பதால் இங்கு திருக்குர்ஆன் வசனங்களில் முரண்பாடு எதுவுமில்லை என்பது தெளிவு!

**************************************

கேள்வி:- 3

Were Warners Sent to All Mankind Before Muhammad? Allah had supposedly sent warners to every people [10:47, 16:35-36, 35:24], Abraham and Ishmael are specifically claimed to have visited Mecca and built the Kaaba [2:125-129]. Yet, Muhammad supposedly is sent to a people who never had a messenger before [28:46, 32:3, 34:44, 36:2-6]. This article also raises other issues: What about Hud and Salih who supposedly were sent to the Arabs? What about the Book that was supposedly given to Ishmael? Etc.

எச்சரிப்பவர்கள் முஹம்மதுக்கு முன் இருந்த மனிதர்களுக்கு அனுப்பப்பட்டார்களா? அல்லாஹ் எல்லா மக்களுக்கும் எச்சரிப்பவர்களை அனுப்பி உள்ளான் [10:47, 16:35-36, 35:24], ஆப்ரஹாமும் இஸ்மவேலும் மக்கா சென்று காஅபாவைக் கட்டியவர்கள் [2:125-129]. இருப்பினும் இதற்கு முன் ஒரு தூதரும் அனுப்பப்படவில்லை என்று நம்பப்படும் மக்களுக்கு முஹம்மது தூதராக அனுப்பப்பட்டார் [28:46, 32:3, 34:44, 36:2-6]. இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஹூத், ஸாலிஹ் என்று அரபுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்வது? இஸ்மவேலுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் என்னாயிற்று?
மேற்கண்ட கேள்விகளில் சுட்டியுள்ள முரண்பாடு!? பற்றி அடுத்தப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>

நபியின் எளிய வாழ்க்கை.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

தருமி அவர்களே, நீங்கள் அடிக்கடி எம்மை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள் நன்றி! உங்களின் மறுமொழியை அனுமதித்தேன். தொழில் நுட்பக் கோளாறோ என்னவோ தெரியவில்லை, மறுமொழி சம்பந்தப்பட்ட பதிவில் வெளி வரவில்லை. மீண்டும் அனுமதித்துப் பார்த்தேன் இது ஏற்கெனவே வந்து விட்டதென்று ஏற்க மறுத்து விட்டது. நீங்கள் கேள்வியாக வைத்திருப்பதால், விளக்கத்தைத் தனிப் பதிவில் சொல்லலாமே என்று இப்பதிவு!

உங்கள் மறுமொழி…

Dharumi has left a new comment on your post “இறைவன் மன்னிக்காத குற்றம்.”:

இன்னொரு சந்தேகம்; அதை இங்கே கேட்பதில் ஒரு வசதி. அதனால் இந்தப் பழைய பதிவுக்கே, தொடர்ச்சியாக இருக்கட்டுமே என்று வந்துள்ளேன்.

இஸ்லாமிய பதிவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்தவை: இறக்கும் போது நபி சொத்துக்கள் ஏதுமற்றவராக, எளியவராக, படுத்த வெறும் பாயின் அழுத்தங்கள் முதுகில் பதிந்தவராக இருந்தார்; கடனாளியாக இறக்கக் கூடாதென்பதற்காக கடைசியில் கையில் இருந்த சொற்ப காசை தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் திரும்பக் கொடுத்தார்.

சரியாகச் சொல்லியுள்ளேனா?

மேலும் அறிந்தவை: முஸ்லீம் ஒன்றுக்கு மேல் பெண்களை மணம் செய்யலாமென்றாலும் அவர் தான் மணக்கப் போகும் பெண்ணை / பெண்களை நல்லபடியாகக் காப்பாற்றும் அளவுக்கு வசதியோடு இருக்கவேண்டியது அவசியம்.

(கேள்வி: 1)அந்த அளவு தரித்திரத்தில் வாழ்ந்தவரென்றால் அவரால் எப்படி அத்தனை பெண்களை மனைவியாக்க முடிந்தது? அது தடை செய்யப்பட்டதல்லவா?

நபி இறந்த பிறகு அவருக்குப் பின் வந்தவர்கள் நபிக்கு வழித்தோன்றல்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. அதனால் அவரது சொத்தின் மேல் அவரது மனைவியர்களுக்கு எந்த வித பாத்தியதையும் கிடையாது என்று சொல்லிவிட்டதாகவும் வாசித்தேன்.

(கேள்வி: 2)இறந்தபிறகு தர்க்கம் வரும் அளவு சொத்தை விட்டு விட்டுச் சென்று விட்டதாகத் தெரிகிறதே? பரம ஏழையாயிருந்து இறந்ததாகச் சொல்லப்பட்டவரிடம் எப்படி dispute வரும் அளவு சொத்து?

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by Dharumi to விமர்சனம் – விளக்கம் at 1/23/2007 02:46:43 AM
——————————-

//இஸ்லாமிய பதிவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்தவை: இறக்கும் போது நபி சொத்துக்கள் ஏதுமற்றவராக, எளியவராக, படுத்த வெறும் பாயின் அழுத்தங்கள் முதுகில் பதிந்தவராக இருந்தார்; கடனாளியாக இறக்கக் கூடாதென்பதற்காக கடைசியில் கையில் இருந்த சொற்ப காசை தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் திரும்பக் கொடுத்தார்.

சரியாகச் சொல்லியுள்ளேனா?// – தருமி

ஒரு வல்லரிசின் அதிபராக இருந்த நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது, ”ஒரு யூதரிடம் தமது கவச ஆடையை ஈடாக வைத்து, முப்பது பக்கா கோதுமையைப் பெற்றிருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்” இதைச் சேர்த்துக் கொண்டால் நீங்கள் சொல்லியது சரிதான்!

இனி உங்கள் இரு கேள்விக்கும் பொதுவாகவே சொல்லி விடுகிறேன்.

மக்காவைத் துறந்து மதீனா வந்தடைந்த அன்றே தொழுகைக்கான பள்ளிவாசல் கட்டுவதற்காக இரு இளைஞர்களுக்குச் சொந்தமான நிலத்தை விலைக்குக் கேட்டார்கள். இலவசமாகத் தருவோம் விற்க மாட்டோம் என்று இளைஞர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இறுதியில், இலவசமாகப் பெறாமல் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதுதான் இன்றைய மஸ்ஜிதுந் நபவி என்று அழைப்படும் மதீனாவில் அமைந்தள்ள நபியின் பள்ளிவாசல்.

பள்ளிவாசல் கட்டுவதற்காக விலை கொடுத்து வாங்கிய நிலத்தில் சிறிது இடத்தை ஒதுக்கி, தமக்குத் தங்குவதற்கு மிகச் சிறிய அளவிலான வீடுகளை நபி (ஸல்) அவர்கள் அமைத்துக் கொண்டார்கள்.

ஆன்மீகம், ஆட்சி என இரு தலைமைப் பொறுப்புகள் நபி (ஸல்) அவர்களின் மீது சுமத்தப்பட்டிருந்தது. அதனால் தலைமைப் பொறுப்புகளை நிர்வாகம் செய்வதற்கே முழு நேரங்களும் சரியாக இருந்தது. மற்ற தொழில்கள் செய்வதற்கான அவகாசங்கள் இருக்கவில்லை. ஆயினும் சமுதாயப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டு, குடும்பத்திற்கான வருவாய்க்கும் வழி செய்திருந்தார்கள்.

நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்து, அதற்கொரு மேய்ப்பவரையும் அமர்த்திக் கொண்டார்கள். ஒரு ஆடு குட்டி போட்டால் பெரிய ஆடு ஒன்றைத் தமக்கென எடுத்துக் கொள்வார்கள். இப்படியே, ஆட்டுப் பண்ணை நூறு ஆடுகளுக்கும் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். மேலும் ஆடுகளிலிருந்து கிடைக்கும் பால், அதுவும் குடும்பத்திற்கு கிடைத்துக் கொண்டிருந்தது. பல மனைவியரைக் கொண்ட நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த வருவாய் பற்றாக் குறையாகவே இருந்திருக்கும்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் போரில் பங்கெடுத்துக் கொண்டார்கள். போரில் தோற்றவர்களின் உடமைகள் வெற்றிப் பெற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வழமை இருந்தது. தோற்றவர்களின் உடமைகள் வெற்றி பெற்ற அணியிலுள்ள போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்படும். நபி (ஸல்) அவர்களும் – குதிரையேற்றத்திலும், வாள் வீச்சிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் – போரில் கலந்து கொண்டதால் போர் வீரர்களுக்கு கிடைக்கும் பங்கு அவர்களுக்கும் கிடைத்தது. அப்பவும் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார்கள்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு கைபர், பதக் என்ற தோட்டங்கள் கிடைத்தன. அதிலிருந்து கிடைத்த வருமானம் நபியின் குடும்பத்தினருக்கும், ஏழைகளுக்கும் செலவிடப்பட்டு வந்தது. நபியவர்களின் மரணத்திற்கு முன்…

”என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (புகாரி)

நபி (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்து விட்டதால், நபியவர்களின் மரணத்திற்குப்பின் அந்த சொத்துக்கள் ஆட்சியாளர்களின் பொறுப்பில் ஏற்கப்பட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தில் நபியின் மனைவியருக்கு வாழ்க்கைச் செலவுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது. அவர்களின் மறைவுக்குப் பின் அதுவும் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல், ஊழியர்களின் செலவு போக, அனைத்தும் அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டு தர்மம் செய்யப்பட்டது.

இந்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரரசின் மன்னராகத் திகழ்ந்தார்கள். அரசு நிதியில் கோதுமைகள், பேரீச்சம் பழங்கள், ஆடுகள், மாடுகள், ஒட்டகங்களென குவிந்திருந்து அவற்றை அனுபவிக்கும் முழு அதிகாரம் இருந்தும் எளிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். பசியின் காரணமாக வயிற்றில் கல்லையும் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

ஒருமுறை ஒரு கிராமவாசி வந்து நபி (ஸல்) அவர்களின் மேலாடையை இழுத்தார், முரட்டுத் துணியாக இருந்ததால் நபியவர்களின் பிடரி சிவந்து விட்டது. கிராமவாசி துணியை இழுத்துக் கொண்டே ”முஹம்மதே எனது இரு ஒட்டகங்களின் நிறைய பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திலிருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்திலிருந்தோ நீர் தரப்போவதில்லை” என்று கூறுகிறார். ”இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களை தர மாட்டேன்” என்று நபியவர்கள் கூறிய பின்னும் ”நான் விட மாட்டேன்” என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறிய போதும், விட மாட்டேன் என்று மறுத்து ”இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழியின் கருத்து)

மன்னரிடமிருந்து, நாட்டின் குடி மக்கள் தமக்குச் சேர வேண்டியதை உரிமையுடன் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். ஆனாலும் ஸகாத் எனும் தர்மமாக வழங்கப்பட்ட செல்வங்களை தாமும், தம் குடும்பத்தாரும் உண்ணலாகாது என்று தடை விதித்துக் கொண்டார்கள். எளிய வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்ட நபி (ஸல்) அவர்களை மணம் செய்து கொண்ட பெண்களும் எளிமையை விரும்பியே ஏற்றுக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் சொத்துக்காக சச்சரவு நடந்தது உண்மைதான் –

”என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (புகாரி)

இதை அறிவித்த பின் சச்சரவில் நீடித்துக் கொண்டிருக்கவில்லை!

அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>

நபி சொத்து சேர்க்கவில்லை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இந்தியாவை விட அதிக நிலப்பரப்பை ஆளுகையாகக் கொண்டிருந்தார்கள். பெரும் நிலப்பரப்பின் மன்னராக நபி அவர்கள் திகழ்ந்தாலும் வெறும் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார்கள். ஆன்மீகம், ஆட்சி எனும் இரு தலைமைக்கு அவர்கள் பொறுப்பேற்றிருந்தாலும் தலைமையைப் பயன்படுத்தி சொத்து சேர்க்கவில்லை, சுகமாக வாழவுமில்லை என்பது வரலாறு.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் 63ம் வயதில் மரணிக்கும்போது அவர்களின் சொத்துக்களின் மதிப்பு என்னவென்பதை முன்பு எழுதியது மீள் பதிவு.

மரணிக்கும ்போது நபியின் சொத்துக்கள்

ஏகத்துவப் பிரச்சாரத்தை துவக்கிய ஆரம்பக் காலங்களில் அப்பிரச்சாரத்தைக் கைவிடும்படி அன்றைய மக்கா நகர அறிஞர்கள் செல்வந்தர்கள் அனைவரும் கோரினார்கள். அதற்கு பகரமாக பொன் – பொருட்களை நபி (ஸல்) அவர்களின் காலடியில் வைக்கவும் தயாரானார்கள் – பெண் தேவையுள்ளவராக இருந்தால் உலக அழகிகளையும் உமக்குத் தருகிறோம் – ஆட்சிதான் வேண்டுமென்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். என்றெல்லாம் வாக்குறுதி தந்து – ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை கைவிடும்படி வேண்டினார்கள்.

ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன் என்று அல்லாஹ்விடமிருந்து சத்தியத்தைப் பெற்று மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், பொன் – பொருள் – பதவியின் மீது ஆசை கொண்டிருந்தால் இவையெல்லாம் தம் காலடியில் மண்டியிடத் தாயாராக இருந்த போது அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கலாம். மாறாக இறைத்தூதர் பதவிக்கு முன் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக – துச்சமாக மதித்து அனைத்தையும் தூக்கியெறிந்தார்கள். இறுதியாக மக்கா நகர நிராகரிப்பாளர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்யத் திட்டங்களைத் தீட்டி நாளும் குறித்தார்கள்.

நிராகரிப்பாளர்களின் கொலை முயற்சி திட்டங்களை முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியாக இறைவன் அறிவிக்க நாடு துறந்து மதீனா சென்றார்கள். நாடு துறந்து சென்ற நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து மக்கத்து நிராகரிப்பாளர்கள் மேலும் வன்செயல்களைப் புரிந்து நபியையும், நபியைப் பின்பற்றிய முஸ்லிம்களையும் துன்புறுத்தினார்கள். இதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் – மதீனாலிருந்த நிராகிப்பாளர்களும் நயவஞ்கச் செயல்களின் மூலம் நபியின் – நபியைப் பின்பற்றிவர்களின் முதுகில் குத்தினார்கள்.

இத்துன்பங்களையும் – சோதனைகளையும் இறைவழியில் சகித்துப் புறக்கணித்து சத்தியமே பெரிதென வாழ்ந்து மதீனாவில் ஆட்சியை நிறுவினார்கள். சிறிது காலத்தில் எவ்வித சண்டையும் இல்லாமல் மக்காவும் நபி(ஸல்) அவர்களின் ஆளுமைக்கு வந்து முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார்கள். பெயரளவிற்குத்தான் மன்னரே தவிர நபி(ஸல்) அவர்களும், நபியைப் பின்பற்றியவர்களும் பட்டினிப் பட்டாளங்களாகத்தான் இருந்தார்கள். (முஹம்மது (ஸல்) அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்பிருந்த வசதிகளையும் – நபித்துவம் பெற்ற பின் இழந்தார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை)

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் சொத்து மதிப்பீடு.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்து – தலைமைப் பொறுப்பில் இருக்கும் போதே மரணித்தார்கள். மரணித்த மாமன்னரின் சொத்தின் மதிப்பைப் பாருங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 2739)

நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)

நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இதுதான். அதிலும் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை அய்லாவின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகத் தந்தது என்று ஆவணங்கள் கூறுகின்றன. உணவுக்காகக் கடன் வாங்கிய கோதுமைக்காக, நபி (ஸல்) அவர்களின் இரும்புக் கவசம், ஒரு யூதரிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. (புகாரி)

நபி (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற தோட்டம் பெரிய மதிப்புடைய சொத்தாக இல்லை. அன்றைய காலத்தில் நிலத்திற்கென்று எந்த மதிப்பும் இருக்கவில்லை. அவரவர் நிலத்திலுள்ள மேடு, பள்ளத்தை சமண் படுத்தி தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். நபித்தோழர் அபூ கதாதா (ரலி) அவர்கள் தமது கவசத்தை விற்று ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கியதாக அறிவிக்கிறார்கள் (புகாரி) ஒரு இரும்புக் கவசத்தின் மதிப்புத்தான், ஒரு விவசாயத் தோட்டத்திற்கான மதிப்பும். இதிலிருந்த அன்று, நிலத்தில் விளையும் உணவுப் பொருட்களுக்குத்தான் மதிப்பீடாக இருந்தது, நிலத்திற்கு மிகக் குறைந்த மதிப்பீடே இருந்திருக்கிறது என்பதை விளங்கலாம்

அன்றைய மதீனாவில் பெரும் செல்வந்தர்கள் குடிமக்களாக இருந்தார்கள். பிரஜைகளை ஆட்சி செய்யும் – ஆட்சித் தலைவர் மிகச் சாதாரணச் செல்வந்தராகக்கூட இருக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் நபியின் வீட்டில் அடுப்பெரியும் அளவிற்கும் வசதியைப் பெற்றிராத ஏழையாகவே வாழ்ந்தார் – அதே நிலையில் மரணிக்கவும் செய்தார் என்று இஸ்லாத்தின் ஆவணங்கள் எடுத்துரைக்கின்றன. அது மட்டுமல்ல நபிமார்களின் சொத்துக்களுக்கு எவரும் வாரிசாக முடியாது – நபிமார்கள் விட்டுச் சென்று சொத்துக்கள் அனைத்தும் தர்மமேயாகும்.

நபிமார்களின் சொத்துக்கு வாரிசில்லை, என்பதை அடுத்துப் பார்ப்போம்.

<!– tag script Begins

tag script end –>

முதல் முஸ்லிம் யார்?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)

”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.

கேள்வி:- 1. முதல் முஸ்லிம் யார்? – Who Was the First Muslim? Muhammad [6:14, 163], Moses [7:143], some Egyptians [26:51], or Abraham [2:127-133, 3:67] or Adam, the first man who also received inspiration from Allah [2:37]?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முதல் முஸ்லிம் யார்? முஹம்மது (6:14, 163) மோசஸ் (7:143) சில எகிப்தியர்கள் (26:51) ஆப்ரஹாம் (2:127-133, 3:67) அல்லது ஆதம் அல்லாஹ்வின் கட்டளை பெற்ற முதல் மனிதன் (2:37)?

விளக்கம்:- ஆண்களில், முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம்! பெண்களில், ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம்! என்பது முறையாக இஸ்லாத்தைப் படித்தவர்களின் சாதாரணப் பதிலாக இருக்கும். இதைப் புரியும்படி விளக்குவதற்கு முன், இவர்களிடையே இந்தக் கேள்விகள் எழுவதற்கு ”என்ன காரணம்?” என்பதையும் தெரிந்து கொள்வோம்!

முஹம்மது (ஸல்) அவர்கள்தாம் இஸ்லாத்தைப் போதித்தார்கள். அதனால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் இஸ்லாத்தின் நிறுவனர் என்ற தவறானக் கருத்து மேலைநாட்டவரிடம் நிலவுகிறது. மேற்கத்தியர்களின், அந்தத் தவறானக் கருத்தின் தாக்கம் மேற்கண்ட கேள்விகளிலும் பதிந்திருக்கிறது. இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்தது. தூதர்கள் அனைவருமே இறைச் செய்தியைத்தான் கொண்டு வந்தார்கள். இஸ்லாத்தின் நிறுவனராக எந்த இறைத்தூதரும் இருந்ததில்லை. எல்லாக் காலத்திலும் இறைத்தூதர்கள் மூலம் மனித குலத்துக்காக இறைவனால் அருளப்பட்ட நற்போதனைகள் இஸ்லாம். இதை அறியாததால், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முன்பு இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருக்கவில்லை, அதனால் முஸ்லிம் என்பவர்களும் இருந்ததில்லை எனப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அகிலங்கள் அனைத்திற்கும் ஒரே இறைவன்தான் இருக்கிறான் என்னும் ஓரிறைக் கொள்கை, மற்றும் மறுமை இருக்கிறது என்பது போன்ற கொள்கைகளே, முதல் நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் போதித்தார்கள் சில கிளை சட்டங்கள் மட்டுமே வித்தியாசமாக சிலருக்கு வழங்கப்பட்டன. மற்றபடி அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது…

(முஹம்மதே) ”உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.” (திருக்குர்ஆன், 041:043)

”என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, ‘இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, 3535.

அனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது. எல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதராணத்தை நபிமொழி கூறுகிறது. ஆதியிலிருந்து இறுதிவரை எல்லா நபிமார்களுக்கும் இறைவன் வழங்கிய மார்க்கம் இஸ்லாம். ஒவ்வொரு நபியும் கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்! எனவே முஸ்லிம் என்ற பெயர், இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தாருக்கு மட்டும் உள்ள பெயர் அல்ல. முந்தைய நபிமார்களின் உபதேசத்தை ஏற்றுப் பின்பற்றியவர்களும் இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களே!

இதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம் குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ”உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்…” என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது. ”இதற்கு முன்னரும் இதிலும் அவன்தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்…” என்று இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்கள் ”முஸ்லிம்கள்” எனப் பெயர் சூட்டப்பட்டார்கள் என்பதை விளங்கலாம். நபி நூஹ் (அலை) அவர்களும் முஸ்லிமாக இருந்தார். (010:072) இஸ்லாத்தின் எதிரி ஃபிர்அவ்னும் மரணிக்கும் நேரத்தில், தன்னை முஸ்லிம் எனச் சொல்லிக் கொண்டான். (010:090)

இன்னும் முந்தைய நபிமார்களையும் அவர்கள் கொண்டு வந்த வேத வசனங்களையும் நம்பிக்கைக் கொண்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என மறுமையில் சொல்லப்படும் என்பதை கீழ்வரும் வசனத்திலிருந்து…

”இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, முஸ்லிம்களாக இருந்தனர்.” (திருக்குர்ஆன், 043:069)

************************************

கேள்விக்கு வருவோம்:- முதல் முஸ்லிம் யார்?

முஹம்மதா?

”கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவானக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்!” (006:014)

”முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக!” (006:163)

மூஸாவா?

”நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” என்று (மூஸா) கூறினார். (007:143)

சில எகிப்தியர்களா?

”நம்பிக்கை கொண்டோரில் முதலாமானோராக நாங்கள் ஆனதற்காக…” (026:051)

ஆப்ரஹாம் என்ற இப்ராஹீமா?

”எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் சந்ததிகளை உனக்குக் கட்டப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக!” (002:128)

”அவரது இறைவன் ‘கட்டுப்படு’ என்று அவரிடம் கூறினான். ‘அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்’ என்று அவர் கூறினார்.” (002:131)

”என் மக்களே அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக்கூடாது.” என்று இப்ராஹீமும், யாகூப்பும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினார்கள். (002:132)

”…நாங்கள் அவனுக்கேக் கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினார்கள். (002:133)

”இப்ராஹீம்… அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார்…” (003:067)

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், திருக்குர்ஆன் வசனங்கள் சில ஒன்றுக்கொன்று முரண்படுகிறது என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் மனிதருக்கு அருளியதிலிருந்து தொடர்ந்து இறைவன் வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாமாகும். முதல் மனிதரிலிருந்து தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள்! என்பதற்கு விளக்கமாக திருக்குர்ஆன் வசனங்களை மேலே சொல்லியுள்ளோம்.

இனி…
”முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்று முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது அதற்கு முன் முஸ்லிம்களே இருந்திருக்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது! இந்த ஆண்டு படித்த மாணவர்களிலேயே முதல் மாணவனாகத் தேர்வுப் பெற்றது ஒரு மாணவன் என்பதால் அதற்கு முன் எந்த மாணவனும் முதலிடத்தைப் பெறவில்லை என்று பொருளாகி விடாது.

ஒரு குடும்பம் இஸ்லாத்தைத் தழுவியது என்றால், முதன் முதலில் முஸ்லிமானது நான்தான் என்று முதலில் இஸ்லாத்தை ஏற்ற அந்தக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சொன்னால், அதற்கு முன் முஸ்லிம்களே இல்லை என்று பொருள் கொள்ள மாட்டோம்!

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக எற்றுப் பின்பற்றும் இந்த முஸ்லிம் சமுதாயத்தில், முஹம்மது (ஸல்) அவர்களே முதல் முஸ்லிம் ஆவார்கள். இறைச் செய்தி அவர்களுக்குத்தான் முதலில் அறிவிக்கப்படுகிறது. தமக்கு அறிவிக்கப்பட்ட இறைக் கட்டளையை முதலில் நிறைவேற்றும், முதல் முஸ்லிமாக அவர்கள் இருந்தார்கள். ”உங்களையெல்லாம் விட நான் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். இறை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றியதிலும் இந்த சமுதாயத்தின் அனைத்து முஸ்லிம்களை விடவும் உயர்வான முதன்மை இடத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்படி இருக்க வேண்டுமென இறைவனால் கட்டளையிடப்பட்டிருந்தது…

”முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனக் கூறுவீராக. (039:012)

இறைத்தூதர்கள் அனைவருமே அந்தந்த சமூகத்தினர் பின்பற்றியொழுக வேண்டிய முன்னோடிகள் என்பதால், இறைத்தூதர்கள் யாவரும் அந்த சமுதாயத்தின் முதல் முஸ்லிமாக இருந்தார்கள். முஸ்லிம்களில் முதன்மையானவர்களாகவும் இருந்தார்கள். இது போல்…

”நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” என்று (மூஸா) கூறினார். (007:143)

இறைச் செய்திகள் முதலில் நபிமார்களுக்கே அறிவிக்கப்படுவதால், நம்பிக்கை கொள்வதிலும் நபிமார்களே முதலிடம் வகிப்பார்கள். இறைத்தூதரைப் பின்பற்றி இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் அதாவது, நபியை உண்மைப்படுத்திய சமூகத்தவரில் முதலாமவர்களாக இருக்க விரும்புபவர்களைப் பற்றியே கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் பேசுகிறது…

”நம்பிக்கை கொண்டோரில் முதலாமானோராக நாங்கள் ஆனதற்காக…” (026:051)

இன்னும், இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகை நேரத்தில் முந்தைய வேதம் வழங்கப்பட்டவர்கள் தங்களை ”முஸ்லிம்கள்” என்று சொல்லிக் கொண்டார்கள்…

”… இதற்கு முன்னரே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தோம்” என்று கூறுகின்றனர். (028:053)

*****************************************************************************
கேள்வி:- 2.

Can Allah be seen and did Muhammad see his Lord? Yes [S. 53:1-18, 81:15-29], No [6:102-103, 42:51].

இறைவனைப் பார்க்க முடியுமா? முஹம்மது இறைவனைப் பார்த்தாரா? ஆம் (53:1-18, 81:15-29) இல்லை (6:102-103, 42:51)

மேற்கண்ட கேள்வியில் சுட்டியுள்ள முரண்பாடு!? பற்றி அடுத்தப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>

இறைத்தூதரின் அறிமுகம்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று தாமே சொல்லிக் கொள்ளவில்லை என்றொரு தவறானக் கருத்து வைக்கப்படுகிறது. முஹம்மது நபியை, அல்லாஹ்வின் தூதர் என்று மக்களாக விரும்பி அழைத்துக் கொண்டனர் என்று இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்தும் பேசப்படுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சுய அறிமுகம் செய்து கொள்ளாமல், முஹம்மதை இறைத்தூதர் என்று மக்கள் எப்படித் தெரிந்து கொண்டிருப்பார்கள்? இது சாத்தியமா? என்று பார்ப்போம்.

அறிமுகமில்லாத எவரும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது உதாரணமாக:

ஒருவரைச் சந்திக்கும் பொழுது அவர் நானொரு பொறியாளர் என அறிமுகப்படுத்திய பின்னர் அவர் ஒரு பொறியாளர் என்பதைத் தெரிந்து கொள்வோம். இதை அவராகச் சொல்லாமல் அவரைத் தெரிந்து கொள்ள முடியாது. இன்னொரு வழி: அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் மூலமாகத் அறிந்து கொள்ள முடியும். அது, அவர் மற்றவருக்கு ஏற்கெனவே தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார் என்று பொருள்.

நபித்துவ வாழ்வுக்கு முன், நபி (ஸல்) அவர்களை முஹம்மத் என்ற பெயரில் மக்கா நகர் மக்கள் அறிந்திருந்தனர். முஹம்மத் உண்மையாளர், மிக நம்பிக்கையானவர் என்று நன்மதிப்பும் வைத்திருந்தனர். நபியவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால், இறைத்தூதுவராக நியமிக்கப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை, அதாவது அவர்கள் நபியாகத் தேர்ந்தெடுக்கும் வரை வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தார்கள்.

(நபியே) இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவராக நீர் இருக்கவில்லை. (திருக்குர்ஆன், 028:086)

இவ்வாறே நம் கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (நபியே) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. திருக்குர்ஆன்,(042:052)

நாற்பது வயதுக்கு முன் வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன? என்பது கூட நபியவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தாம் நபியாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் உணர்த்துகின்றன. நபியவர்களுக்கு முதன்முதல் இறைச் செய்தி வந்தபோது அதையும் அவர்களால் உறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள் என்பதை வரலாற்றில் படிக்கிறோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால் அவனது தூதுவராகத் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். இந்தத் தேர்வு இறைவனுக்கும், நபியவர்களுக்கும் மட்டுமுள்ள தொடர்பாக இருக்கிறது. அப்படியானால் இறைவன் நபியவர்களைத் தூதராகத் தேர்ந்தெடுத்தச் செய்தி மூன்றாமவருக்கு எப்படித் தெரிந்தது? என்ற விடையில்லாக் கேள்வி இங்கு எழுகிறது.

முஹம்மது நபி (ஸல்)அவர்கள் தாம் ஒரு இறைத்தூதர் என்று மக்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னரே இறைவனின் பக்கம் மக்களை அழைத்து, ஏகத்துவ இஸ்லாமியப் பிராச்சாரத்தைத் துவங்கினார்கள்.

நபியவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொண்ட மக்கள் ”அல்லாஹ்வின் தூதரே!” என்றும் அழைத்து வந்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதராக தாமாகச் சொல்லிக் கொண்டதில்லை என்பது சரியான வாதமல்ல! மாறாக, நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் தம்மை இறைத்தூதர் என சுய அறிமுகம் செய்து கொண்டார்கள் எனபதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

”மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.” (திருக்குர்ஆன், 007:158)

”நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம்” (திருக்குர்ஆன், 004:079 இன்னும் பார்க்க: 004:170. 033:040)

முஹம்மது நபியவர்கள் மனிதகுலம் அனைவருக்கும் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றே திருக்குர்ஆன் மக்களிடையே அறிமுகம் செய்கிறது. குர்ஆன் வசனங்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் வாய் வார்த்தைகள் வழியாகவே இறைவன் அருளினான். ”மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.” எனும் வசனத்தின் வாயிலாக தம்மை இறைத்தூதர் என மக்களிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும்படி திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டதில்லை என்ற வாதம் தவறானது என்பதை மேற்கண்ட வசனங்கள் மெய்பிக்கிறது.

மேலும், ”(நபியே) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக” (026:214) என்ற வசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று எச்சரித்தார்கள்.

”அல்லாஹ்வின் தூதர்” (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது” என்று எச்சரிக்கை செய்கிறார்கள். (புகாரி, 4771)

இங்கு தமது தந்தையுடன் பிறந்த சகோதரி, உறவு முறையில் அத்தையாகிய ஸஃபிய்யாவை நோக்கி ”அல்லாஹ்வின் தூதரின் அத்தையே” எனத் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையில், ”இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்” என்று உடன்படிக்கையில் எழுதும்படி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, 2732) (அவ்வாறு எழுத குறைஷியர் சார்பில் ஒப்பந்தம் செய்தவர் மறுத்து விட்டால் என்பது தனி விஷயம்)

இன்னும் அழைப்புப் பணியில், அரசர்களுக்கும், ஆளுனர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கடிதம் எழுத நாடியபோது அரசர்கள் முத்திரை இல்லாத கடிதங்களை படிக்க மாட்டார்கள் என்பதால் வெள்ளியிலான மோதிரத்தை தயார் செய்தார்கள். அதில் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்று பதித்தார்கள்.

அல்லாஹ்ரஸூல்முஹம்மது

என்று அதில் மூன்று வரிகளாக இருந்தது (புகாரி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் அஸ்ஹாம் என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது…

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவுக்கு எழுதுவது…

மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கடிதங்களிலெல்லாம் இறைத்தூதர் முஹம்மது எழுதிக்கொள்வது என்று தம்மை அல்லாஹ்வின் தூதர் என்றே அறிமுகம் செய்து கொண்டார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள், சொல்லாலும், எழுத்தாலும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என சுய அறிமுகப்படுத்திய பின்னரே அவர்கள் இறைத்தூதர் என மற்றவர்கள் அறிந்துகொண்டார். அறிந்து நபியவர்களைப் பின்பற்றியவர்கள் முஹம்மதை இறைத்தூதர் என ஒப்புக் கொண்டு, நபியை “அல்லாஹ்வின் தூதரே!” என்று அழைத்து வந்தார்கள்.

ஆகவே, முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்தியதில்லை என்பது தவறானக் கருத்து மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு முரண்படும் கருத்துமாகும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>