இஸ்லாம்தளம்

பிப்ரவரி3, 2009

அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?

Filed under: வகைப்படுத்தப்படாதது — islamthalam @ 12.24

முஸ்லிம்களின் அடிப்படையான நம்பிக்கையில் ஒன்று, அல்லாஹ்வையும் அவனுடைய பண்புகளையும் தெரிந்து கொள்வதாகும். இதுவே ஈமானின் கடமைகளில் முதல் கடமையாகும். இதுபற்றி நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் பரவலாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கையை மட்டும் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அதாவது, அல்லாஹ் எங்கும் இருக்கின்றான். தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான் என்ற நம்பிக்கை தவறானதாகும். இப்படி ஒரு முஸ்லிம் நம்புவது, குர்ஆனுக்கும் நபிகளாரின் வழிமுறைக்கும் மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான் என்பதே சரியான கொள்கையாகும். பின்வரும் குர்ஆன் மற்றும் ஹதீதுகளும் அல்லாஹ் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹுவின் கூற்றுக்கள்:

1. அர்ரஹ்மான் அர்ஷின் மீது இருக்கின்றான். (அல்குர்ஆன் 20:5)

அதாவது, அல்லாஹ் உயர்வான இடத்தில் இருக்கின்றான் என்பதாக பல தாபிஈன்கள் இந்த ஆயத்திற்கு விளக்கமளிக்கின்றார்கள். இந்தச் செய்தி, புகாரியில் பதியப்பட்டிருக்கின்றது.

2. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும். (அல்குர்ஆன் 67: 16)

அதாவது, வானத்தில் இருப்பவன் என்பதின் கருத்து, அல்லாஹ் என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

3. அவர்கள் தங்களுடைய மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள். (அல்குர்ஆன் 16:50)

இங்கு, அவர்கள் என்று கூறப்பட்டிருப்பது மலக்குகளாகும். அவர்கள் அவர்களுக்கு மேலிருப்பவனை பயப்படுகிறார்கள் என்றால், அந்த அல்லாஹ்வைத் தான் குறிக்கின்றது. இந்த வசனத்திலிருந்து அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

4. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 :158)
அதாவது, வானத்திற்கு உயர்த்திவிட்டான். இந்த ஆயத்தும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

5. இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ் உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான். இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6: 3)

இமாம் இப்னு கஸீர்(ரஹ்) தமது நூலில் இந்த வசனத்திற்கான விளக்கத்தில் அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என “ஜஹ்மிய்யா” என்னும் வழிகெட்ட பிரிவினர் கூறுவது போல கூறமாட்டோம். மாறாக அல்லாஹ் அவர்கள் கூறுவதையெல்லாம் விட உயர்வான நிலையில் இருக்கிறான் என, குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவதாக குறிப்பிடுகின்றனர்.

ஆயினும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் (அல்லாஹ்) உங்களோடு உள்ளான். (அல்குர்ஆன் 57: 04) என்ற வசனத்தின் கருத்து என்னவெனில், நீங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவன் உங்களை கண்காணித்துக் கொண்டும் உங்களின் செயல்களை கவனித்துக் கொண்டும் இருக்கிறான். அனைத்துமே அவனது ஞானத்திற்கும் பார்வை மற்றும் செவிப்புலன்களுக்கும் உட்பட்டவைதாம் என்பதாகும். இதுபோன்று வரக்கூடிய மற்ற ஆயத்துகளின் கருத்துகளும் இதுவேயாகும்.

நபிமொழிகள்:

1. நபி(ஸல்) அவர்கள் இறைவனுடன் உரையாடுவதற்கு (மிஃராஜ்) விண்ணேற்றத்தின் போது வானத்திற்குச் சென்றார்கள். அப்போதுதான் ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. (புகாரி, முஸ்லிம்)

2. (மக்களே) என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா? நானோ வானத்திலிருப்பவ(னான இறைவ)னின் நம்பிக்கைக்கு உரியவனாவேன்! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3. பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

4. நபி(ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணிடத்தில் அல்லாஹ் எங்கே இருக்கிறான்? எனக் கேட்டபோது, அந்தப் பெண் வானில் இருக்கிறான் எனக் கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இந்தப் பெண்ணை விடுதலை செய்து விடுங்கள். இவள் முஃமினான பெண்தான் எனக்கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த நபிமொழியிலும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

5. அர்ஷ் நீரின் மீது உள்ளது. அல்லாஹ்வோ அர்ஷின் மீது உள்ளான். அவன் நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுக்கள்:

1. நபி(ஸல்) அவர்கள் மரணித்த நாளில் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள், ‘யார் அல்லாஹ்வை வணங்குகின்றீர்களோ, அவர்கள் அறிந்து கொள்ளுங்கள், அவன் வானில் இருக்கிறான், அவன் மரணிக்கமாட்டான். (தாரமி)

2. எங்களின் இரட்சகனை நாம் எப்படி தெரிந்து கொள்வது என அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கவர்கள், அவன் தனது படைப்பினங்களை விட்டும் தனித்து வானில் அர்ஷின் மீது உள்ளான் எனக்கூறினார்கள்.

இதனின் பொருள்: அல்லாஹ் அர்ஷின் மீது தன் படைப்பினங்களை விட்டும் தனித்திருக்கின்றான், அவன் படைப்பினங்களில் யாரும், அவனின் உயர்வுக்கு ஒப்பாக முடியாது.

3. நான்கு இமாம்களும் அல்லாஹ் அர்ஷுக்கு மேல் இருக்கிறான் என்ற விஷயத்தில் ஒற்ற கருத்தில் இருக்கின்றார்கள். படைப்பினங்களில் அவனுக்கு யாரும் ஒப்பாக முடியாது எனவும் கூறுகின்றார்கள்.

4. தொழுபவர்கள் ஸுஜூது செய்யும் போது (சுப்ஹான றப்பியல் அஃலா) ‘உயர்வான எனது இறைவன் தூய்மையானவன்’ என கூறுவதும், பிரார்த்தனை செய்பவர்களும் பிரார்த்தனை செய்யும் போது அவர்களின் இரு கரங்களையும் வானத்தின் பக்கம் உயர்த்துவதும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை காட்டுகின்றது.

5. தெளிவான சிந்தனையும் அல்லாஹ் வானில் இருக்கிறான் என்பதையே உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் எங்குமிருக்கின்றான் என்பது உண்மையானால், நபி(ஸல்) அவர்கள் அது பற்றி கூறியிருப்பார்கள். தமது தோழர்களுக்கும் அறிவித்திருப்பார்கள். அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்றால், உலகத்தில் அசுத்தமான இடங்களும் உண்டு, அந்த இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றானா? என்ற கேள்வியும் எழும்! அல்லாஹ் அப்படிப்பட்ட தன்மைகளை விட்டும் தூரமானவன்.

அல்லாஹ் நம்மோடு எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்ற கூற்று, அல்லாஹ் ஒன்றுக்கும் மேற்பட்டவன் என்பதை குறிக்கும். ஏன் என்றால் இடங்கள் எண்ணற்றவை, வித்தியாசமானவை. அல்லாஹ் ஒருவன்தான் எனும்போது, அவன் பலராக ஆகுவதற்கு சாத்தியமேயில்லை. எனவே அவன் எல்லா இடத்திலும் உள்ளான் என்றால் அவன் ஒருவன் என்ற கூற்று பொய்யாகிவிடும். ஆகவே, அல்லாஹ் வானில்தான் அர்ஷுக்கு மேல் இருக்கிறான். அதே நேரத்தில் எங்கும் வியாபித்திருக்கும் அவனது ஞானத்தின் மூலம் நாம் எங்கிருந்தாலும் நமது சப்தத்தை செவிமடுத்துக் கொண்டும் நம்மைப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றான் என்பதே சரியான முடிவாகும்.

மேலே கூறப்பட்ட குர்ஆனுடைய வசனங்கள், நபிமொழிகள், நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றின் மூலம் அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேல் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பது தெளிவான ஒன்றாகும். இதற்குப் பிறகு அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்ற கொள்கையிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்ளுங்கள். தவறான கொள்கைகளிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

<!– tag script Begins

tag script end –>

ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டால் உள்ள நன்மையும் அதில் ஓதப்படும் பிரார்த்தனைகளும்

Filed under: வகைப்படுத்தப்படாதது — islamthalam @ 12.24

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி on Saturday, November 15th, 2008

ஒரு மையித்துக்கு தொழுகை நடத்தப்படும் வரை யாராவது அந்த ஜனாஸாவில் கலந்துகொண்டால் அவருக்கு ஒரு கீராத்து நன்மையும், மையத்து அடக்கப்படும் வரை கலந்து கொண்டால் அவருக்கு இரு கீராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கீராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது, இரண்டு பெரும் மலையளவு என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

முதல் தக்பீரில் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும்.

இரண்டாம் தக்பீரில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறவேண்டும்.


اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اللَّهُمَّ َبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ. -البخاري

மூன்றாம் தக்பீரில் பின்வரும் துஆவை ஓதவேண்டும்.


اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزْلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَعَذَابِ النَّارِ
(مسلم)


اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اَللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ، اَللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهً وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ
(ابن ماجه، أحمد)

மையித்து சிறு குழந்தையாக இருந்தால்


اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا، وَسَلَفًا، وَأَجْرًا
(موقوف عن الحسن، أخرجه عبد الرزاق)

நான்காவது தக்பீரில்


اَللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ وَلاَ تَفْتِنَّا بَعْدَهُ وَاغْفِرْ لَنَا وَلَهُ

எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Filed under: வகைப்படுத்தப்படாதது — islamthalam @ 12.24

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி on Thursday, January 15th, 2009

அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள் நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும். ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். அல்லது ஒருவருக்கு இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கவும் செய்யும். இதை வைத்து அந்த நாளை நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ கூறிவிட முடியாது. இவ்வுலகம் சோதனைக் கூடமாகும். மரணிக்கும் வரை ஒவ்வொரு மனிதனும் பல விதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பான். சோதனைகள் வரும்போது அதை ஒரு முஸ்லிம் பொறுத்துக் கொள்ளவும் பொருந்திக் கொள்ளவும் வேண்டும். அது அவனுடைய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இப்படி ஈமான் கொள்வது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும்.

அல்லாஹ்வையும் வானவர்களையும் நபிமார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

ஆகவே நமக்கு நடக்கக்கூடிய நல்ல கெட்ட காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் நம்மீது விதித்த விதியின்படியே நடக்கின்றதென்று நம்ப வேண்டுமே தவிர, இன்று கெட்ட நாள், இதனால்தான் எனக்கு இந்த ஆபத்து நடந்ததென்று கூறுவது மூட நம்பிக்கையும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய ஒன்றாகும்.

சோதனையின்றி வாழ்வில்லை

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்) அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின் பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். ஆதாரம்: திர்மிதி

ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது

ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இது அல்லாஹ்வின் ஏற்பாட்டினால் தான் (களா கத்ரினால்தான்) ஏற்பட்டதென்றும், நான் பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இது எழுதப்பட்டு முடிந்து விட்டதென்றும் இது நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லையென்றும் நம்பாத வரை அவர்கள் உண்மையான முஃமினாக முடியாது.

இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இப்னு உமரின் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! களாகத்ரை (விதியை) ஈமான் கொள்ளாதவர், உஹது மலை அளவு தங்கத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் எனக்கூறி, இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை கூறினார்கள். அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

உபாதா பின் சாமித்(ரலி) அவர்கள் தன் மகனைப்பார்த்து, மகனே! உனக்கு ஏற்படுகிற துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உனக்கு வராமல் போய்விடாது என்ற உண்மையையும், உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் நீ அறிந்து கொள்ளாதவரை நிச்சயமாக நீ உண்மையான ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்ளமாட்டாய் எனக்கூறி, பின்வரும் ஹதீஸையும் எடுத்துக் கூறினார்கள்.

அல்லாஹ் எழுது கோலை முதலில் படைத்து நீ எழுது எனக் கட்டளையிட, எதை எழுத வேண்டும் என அது கேட்க, இறுதிநாள் வரைக்கும் எல்லாவற்றிற்கும் உண்டான விதிகளை எழுது என அல்லாஹ் கட்டளையிட்டான், என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் எனக் கூறி, மகனே! இவ்வாறு விதியை நம்பாது ஒருவர் மரணித்து விடுவாராயின் அவர் என்னை சார்ந்தவரல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவும் எடுத்துரைத்தார்கள். ஆதாரம்: அஹ்மத்

இப்னு அபூதைலமீ அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் உபை பின் கஃபை அணுகி, என் உள்ளத்தில் விதியைப்பற்றி சிறிது சந்தேகம் உள்ளது. அதை நீக்குவதற்கு ஏதாவது சொல்லித்தாருங்கள். அல்லாஹ் அந்த சந்தேகத்தை போக்கிவிடுவான் என்று கூறினேன். அதற்கு உபை பின் கஃபு(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். (இப்னு அபூ தைலமியே!) நிச்சயமாக உமக்கு ஏற்படும் துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உமக்கு வராமல் போகாது எண்ற உண்மையையும், உமக்கு எற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உமக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையம் அறிந்து, களா கத்ரைக் கொண்டு நீர் ஈமான் கொள்ளாதவரை உஹது மலை அளவு தங்கத்தை செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். இவ்வாறு நீர் களாகத்ரைக் கொண்டு ஈமான் கொள்ளாது மரணித்துவிட்டால் நீர் நரகவாசிகளில் ஒருவரே என்றார்கள். பின்பு நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களிடமும் ஹுஸைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்களிடமும் வந்தேன். இவர்கள் எல்லோரும் இது போலவே நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்

சோதனை வருவது அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் நேசத்தையே வெளிக்காட்டுகின்றது.

அல்லாஹ் தன் அடியாருக்கு நலவை நாடினால் இவ்வுலகிலேயே தண்டனை (சோதனை)யை வழங்குகின்றான். அல்லாஹ் தன் அடியாருக்கு கெடுதியை நாடினால் மறுமையில் தண்டனையை முழுமையாக வழங்குவதற்காக இவ்வுலகில் எவ்வித தண்டனையும் (சோதனையும்) வழங்குவதில்லை, அதிக சோதனையுடன்தான் அதிக கூலியும் கிடைக்கும், அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். அதை யார் பொருந்திக் கொள்கின்றார்களோ அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கின்றது, யார் அதை கோபிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் கோபம் கிடைக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி

ஸஃபர் மாதமும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதம்தான்

சோதனைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது என நம்ப வேண்டிய ஒரு முஸ்லிம், ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையயை களிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன் கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து இன்னும் இது போன்ற பல சடங்குகளையும் செய்து அந்தப்பீடையை போக்கவேண்டும் என்று எண்ணி பல சடங்கு சம்ரிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் நமது இஸ்லாமிய பல சகோதர சகோதரிகள் செய்கின்றார்கள். இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூட நம்பிக்கையுமாகும். இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கைகளை விட்டுவிட்டு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று நம்ப வேண்டும். ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறை வசனமோ நபி மொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதை தடுக்கும் நபிமொழியைத்தான் பார்க்க முடியும்.

இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது, ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

ஸஃபர் மாதத்தை பீடையுள்ள மாதம் என்பதற்கு, இந்த மூட நம்பிக்கையுள்ளவர்கள் கூறும் காரணம், நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்தது போல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையா? முன்பு கூறியது போன்று இது அல்லாஹ்வின் விதிப்படி நடந்ததென்று ஒரு முஸ்லிம் நம்ம வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள், ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள், இதை யாரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள், அந்த நாளை யாராவது பீடையுள்ள மாதம் என்று கூறுகின்றார்களா? அதை கொண்டாடும் நாளாக அல்லவா? எடுக்கின்றார்கள். நமக்குள் நாமே முரண்படுகின்றோம்.

ஆகவே ஸஃபர் மாதத்தையும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதமாக நினைத்து நமது அன்றாட காரியங்களை செய்ய வேண்டும். ஸஃபர் மாதத்தில் ஏதும் சோதனைகள் வந்தால்கூட அது ஸஃபர் மாத்தினால் ஏற்படவில்லை, அல்லாஹ்வின் ஏற்பாட்டினால்தான் வந்தது என்று நம்ப வேண்டும். இப்படிபட்ட உறுதியான ஈமானை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

<!– tag script Begins

tag script end –>