இஸ்லாம்தளம்

பிப்ரவரி1, 2009

உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், உறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள், ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட 14 பெண்களில் இவர்களும் ஒருவர், போராளிகளுக்கு உணவு தயாரித்தல், நீர் விநியோகித்தல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டதாக இவர்களது மகன் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹுனைன் யுத்தத்தின்போது, இவர்கள் கற்பவதியாக இருந்தார்கள். அப்போதும் இடுப்பில் கத்தியை வைத்திருந்தார்கள். அபூதல்ஹா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் கத்தியை வைத்துள்ளார் என முறையிட்டபோது, உம்மு சுலைம்(ரலி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிக் எவனாவது என்னை நெருங்கினால், அவனது வயிற்றைக் கிழித்துவிடுவேன் என பதிலளித்தார்கள். சிந்தித்து பாருங்கள் சகோதரிகளே! இவர்கள் கற்பிணியாக இருந்தும் ஜிஹாதுக்கு புறப்பட்டுள்ளார்கள் என்றால்? நமது நிலை என்ன? இஸ்லாத்தை வளர்ப்பதற்க்கு நாம் செய்த தியாகம் என்ன? குறைந்தளவு இஸ்லாமிய வழிமுறைகளையாவது நமது வாழ்வில் எடுத்து நடக்கின்றோமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

அன்னையவர்கள், தமது கணவர் மாலிக் அவர்கள் ஊரில் இல்லாத போது இஸ்லாத்தை ஏற்றார்கள். கணவர் ஊர் திரும்பிய போது மனைவி மதம் மாறிவிட்டாள் எனக் கடுமையாக சினமுற்றார். நீ மதம் மாறிவிட்டாயா? எனக் கோபத்துடன் கேட்டபோது, இல்லை, நான் அல்லாஹ்வை விசுவாசித்திருக்கிறேன், எனப் பதிலளித்தார்கள். (அஃலாமுன்னுபலா)

கணவனின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் தனது குழந்தையை இஸ்லாமிய நிழலில் வளர்தெடுத்திட உறுதி பூண்டார்கள். தனது மகன் அனஸ்(ரலி) கலிமாவை கற்றுக் கொடுத்தார்கள். தனது மகனின் எதிர்காலம் வளமாக அமைய வேண்டுமென்பதற்க்காக, அவரை
நபி(ஸல்) அவர்களுக்கு பணியாளாக்கினார்கள். உழைத்துத்தர கணவனில்லை, எனவே இவர் பணிவிடை செய்து உழைத்து போட வேண்டும் என்ற எண்ணத்தில் அன்னையவர்கள் அப்படி செய்யவில்லை, நபி(ஸல்) அவர்களின் கண்காணிப்பில் தனது அன்பு மகன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கமே அவரை பணியாளராக்க தூண்டியது. அது நடந்தேறியது. நபியவர்களுக்கு பணியாளராக செயற்பட்டதன் மூலம் 2286 நபிமொழிகளை அறிவிக்கும் வாய்ப்பை அனஸ்(ரலி) அவர்கள் பெற்றார்கள். தனது தாய் செய்த இந்த நல்ல செயலை அனஸ்(ரலி) அவர்கள் அடிக்கடி நன்றியுடன் நினைவு கூறினார்கள்.

சகோதரிகளே! இதன்மூலம் நாம்பெறும் படிப்பினை என்ன? நாமும் நமது வீட்டை இஸ்லாமிய சூழலாக்க வேண்டும். நமது குழந்தைகளை இஸ்லாமிய சூழலில் வளர்த்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இம்மை, மறுமை இரண்டினதும் அமைதியை கெடுத்துவிடுவார்கள். பிள்ளைகளுக்கு சிறந்த உதாரணமாக தாய்மார்களே வாழ்ந்து காட்ட வேண்டும். உங்கள் பார்வை, பேச்சு, எண்ணம் அனைத்தையும் தூய்மையாக்கி வையுங்கள், இதன்மூலம் நல்லதொரு சந்ததியை உருவாக்கலாம், இன்ஷா அல்லாஹ்.

அன்னையவர்களின் கணவர் மரணித்த பின், இவரை மணக்க அபூதல்ஹா முன்வந்தார், எனினும் அப்போது அவர் முஷ்ரிக்காக இருந்தார். வாழ்க்கைத்துணை கிடைத்தால் போதும், அது யாராக இருந்தால் என்ன என்று அன்னையவர்கள் எண்ணவில்லை, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாஃவத் செய்தார்கள். அன்னையவர்கள் அவரை நோக்கி கூறுகிறார்கள். உங்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற சிலைகளை நீங்கள் வணங்குகிறீர்களே இது சரிதானா? உங்களுக்கு ஒரு தச்சன் மரப்பலகையால் ஒரு சிலையைப் படைத்து தருகிறான், அதற்குப் போய் நீங்கள் வழிபாடு செய்வது அறிவுக்குப் பொருத்தமானதா? என்று அடுக்கடுக்காக வினாக்களை தொடுத்தார்கள். இந்த கேள்விக்கனைகளால் தாக்கப்பட்ட அபூதல்ஹா உண்மையை உணர்ந்து இஸ்லாத்தில் இணைய சம்மதித்தார். இந்த மகிழ்ச்சியில் அன்னையவர்கள் நீங்கள் இஸ்லாத்தில் இணைந்ததையே எனக்கு மகராக ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார்கள்.

அன்னையவர்கள், அபூதல்ஹா(ரலி) அவர்களை மணந்து, அதன் மூலம் அபூஉமைர் என்றொரு ஆண்மகனைப் பெற்றார்கள். இவர் ஒரு முறை நோயுற்றார், அபூதல்ஹா ஊரில் இல்லாத போது மரணித்து விட்டார்கள். இந்த செய்தியை நானாகக் கூறும்வரை நீங்கள் யாரும் அபூதல்ஹாவிடம் கூறாதீர்கள். என தன் குடும்பத்தாருக்கு அறிவித்தார்கள், அபூதல்ஹா(ரலி) அவர்கள் இரவில் இல்லம் வந்து, மகனை விசாரித்தபோது முன்னதைவிட அமைதியாகவுள்ளார் என்று கூறினார்கள், பின்பு இரவு உணவு உண்ட பின்னர், இல்லறத்திலும் ஈடுபட்டதற்க்குப்பின், மகன் மரணித்த செய்தியை அறிவிக்கிறார்கள். குழந்தையின் மரணத்தை நினைத்து, ஒப்பாரி ஒலமின்றி இப்படி எடுத்துக்கூறிய இன்னொரு பெண்ணை உலக வரலாற்றில் காணமுடியாது சகோதரிகளே. இப்படிப்பட்ட பொறுமையுள்ளம் கொண்டவர்களாக வாழ்ந்து காட்ட அல்லாஹ் எம்மை ஆக்கியருள்வானாக! அன்னையவர்கள் விருந்தாளிகளை கௌரவிப்பதிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்து காட்டினார்கள்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்களின் சமூகத்துக்கு ஒரு புதிய விருந்தாளி வந்தார். இவரை அபூதல்ஹா(ரலி) அவர்கள் தனது வீட்டுக்கு விருந்தளிக்க அழைத்து வந்தார்கள். மனைவியிடம் ஏதேனும் உணவு உண்டா எனக்கேட்க, குழந்தைகளுக்கு மட்டும்தான் உணவுள்ளது, இருந்தாலும் விருந்தாளியை கெளரவிக்க வேண்டும் என்ற நோக்கில் நான் குழந்தைகளை எப்படியேனும் சமாளித்து தூங்க வைத்துவிடுகிறேன், விருந்தாளி மட்டும் உண்டு பசியாறட்டும் என்று ஆலோசனை கூறினார்கள். பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு இவர்கள் தமக்குள் செய்த இந்த இரகசிய தியாகம் பற்றி அல்குர்ஆன் வசனமொன்று அருளப்பட்டது.

தமக்கு தேவையிருந்த போதிலும் அவர்கள் தங்களைவிட பிறருக்கே முன்னுரிமை அளிப்பார்கள் (அல்குர்ஆன் 59:9)

இதுபோன்ற அழுத்தமான அறிவுரைகளுக்கேற்ப நபித்தோழர்கள் அனைவரும் எளியோர்க்கும் வழியோர்க்கும் விருந்திட்டு உபசரித்தார்கள். ஆனால் அபூதல்ஹா, உம்மு சுலைம்(ரலி) இருவரின் வாழ்வு இப்பண்பாட்டில் சிறந்த வியக்கத்தக்கதொரு முன்மாதிரியாய் திகழ்கிறது.

அன்னையின் சிறப்பை சிகரத்தில் ஏற்றும் நபியவர்களின் முன்னறிவிப்பொன்று உள்ளது, நான் சுவனத்துக்கு சென்றேன். அங்கே ஒரு காலடி ஓசை கேட்டது பார்த்தபோது உம்மு சுலைம்(ரலி) அங்கே இருந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்

இந்த நற்செய்தியை பல்வேறு தியாகங்களால் பெற்ற அன்னை உம்மு சுலைம்(ரலி) அவர்களது வாழ்வை நாம் நமக்கான சிறந்த படிப்பினையாக பெறுவோம்.

<!– tag script Begins

tag script end –>

உண்மையான தேசத் தலைவர்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”

உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

<!– tag script Begins

tag script end –>

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள். இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம்.

அதனால் குர்அனை தஜ்வீத் முறைப்படி பல தடவைகள் ஓதி முடித்தும் இருக்கின்றோம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவது கருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும். சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும். இவ்வாறுதான் குர்ஆனை நாம் அணுக வேண்டும். இவ்வாறில்லாமல் அவசர அவசரமாக கருத்துணராமல் அரபியில் மட்டும் அல்லது மொழியாக்கத்தை வேகம் வேகமாக படித்து முடிப்பதினால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கத்தை நாம் முழுமைப்படுத்த முடியாது. இதனால்தான் குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான். குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துணர்ந்து குர்ஆனை படிக்க வேண்டும் என்கிற வசனங்களையும், நபிமொழிகளையும் இனி தெரிந்து கொள்வோம்.

இறை வாக்குகள்

1. (நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம். (அல்குர்ஆன் 38:29)

குர்ஆனை ஓதுவதால் அதிக நன்மை இருக்கின்றது என்பதில் கொஞ்சம்கூட ஐயமில்லை, அப்படி இருந்தும் இப்புனிதமிக்க குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட அடிப்படை நோக்கம், சிந்திப்பதற்கேயன்றி வெறும் கருத்துணராமல் ஓதுவதற்கு மாத்திரமல்ல என்பதை மேலுள்ள திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது.

ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனின் சட்டதிட்டங்களை பாழ்படுத்திவிட்டு அதன் எழுத்துக்களை மாத்திரம் மனனம் செய்வது குர்ஆனை சிந்திப்பதாகாது. கருத்துணராமல் குர்ஆனை ஓதக்கூடியவர்களில் ஒருவர், நான் குர்ஆன் முழுக்க ஓதிவிட்டேன் எனக்கூறுகின்றார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் அதில் கூறப்படும் நல்லொழுக்கங்களோ, அமல்களோ காணப்படவில்லை!.

2. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: அல்லாஹ் தன் அடியார்களை இக்குர்ஆனை சிந்திக்கும்படியும் அதன் தீர்க்கமான கருத்துக்களையும் இலக்கிய வசன நடைகளையும் உணராமல் அதை புறக்கணிப்பதையும் அல்லாஹ் தடுக்கிறான். இது குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கும்படி ஏவப்பட்ட தெளிவான ஏவலாகும்.

3. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

4. நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் – அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121)

இந்த வசனத்திற்கு இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை குறிப்பிடுகின்றார்கள்: (என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக! குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி என்பது, அது ஹலாலாக்கியதை ஹலாலாக்குவதும், அது ஹராமாக்கியதை ஹராமாக்குவதும் அல்லாஹ் இறக்கிய முறைப்படி ஓதுவதுமாகும்.)

ஷஃகானி(ரஹ்) அவர்கள்: (அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள்) என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கும்போது, (அதில் உள்ளதைக் கொண்டு அமல் செய்வார்கள்) என்பதுதான் அதன் விளக்கமாகும். ஆகவே அமல் அறிவுக்குப் பிறகுதான் ஏற்படும். அறிவு சிந்திப்புக்கு பின்புதான் ஏற்படும் என்கிறார்கள்.

5. என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் 25:30)

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: குர்ஆனின் கருத்தை உணராமல் படிப்பது அதை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்குவதாகும்.

இப்னுல் கைய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குர்ஆனை புறக்கணிப்பது பல வகையாகும், அதில் நான்காவது வகை கருத்துணர்ந்து படிப்பதை விட்டுவிடுவதாகும்.

நபி மொழிகள்1. அல்லாஹ்வின் வீடுகளில் நின்றும் எந்த ஒரு வீட்டிலாவது ஒரு கூட்டத்தார் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை அவர்கள் (விளங்கி) படித்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் அமைதி இறங்குகின்றது, இன்னும் அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்கின்றது, இன்னும் அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்கின்றார்கள், அல்லாஹ் தன்னிடமுள்ள (மலக்குகளிடம்) அவர்களை (புகழ்ந்து) கூறுகின்றான். ஆதாரம்: முஸ்லிம் இந்த நபிமொழியில், குர்ஆனை, விளங்கி ஓதுபவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் கிடைப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாம் இந்த நபிமொழியின் ஒரு பகுதியைத்தான் செயல் படுத்துகின்றோம். (அதாவது குர்ஆனை அரபு மொழியில் மாத்திரம் ஓதுகின்றோம்) அதை கருத்துணர்ந்து படிப்பதில்லை. காரணம் கருத்துத் தெரிந்து ஓதுவதினால் அதிகமாக ஓத முடியாது என்பது பலரின் எண்ணம். ஆனால் இது முற்றிலும் தவறாகும். நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவு சூரத்துல் மாயிதாவின் 118 ஆம் வசனத்தை மட்டும் ஓதிக்கொண்டே அன்றைய இரவின் தொழுகை எல்லாம் தொழுது முடித்திருக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத்

இதோ நபி(ஸல்) அவர்கள் அதிகம் ஓதுவதை விட சிந்திப்பதற்கு முன்னுரிமை வழங்கி ஒரு வசனத்தை மட்டும் ஒரு இரவு முழுக்க ஓதியிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

2. நான் ஒரு நாள் இரவு நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். முதல் ரக்அத்தில் ”அல்பகரா” ஸுராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறு வசனங்கள் வந்ததும் ருகூவுக்கு செல்வார்கள் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். பின்னர் அவர்கள் தொடர்ந்து ஓதினார்கள். அந்த ஸுராவை ஓதி முடித்து ருகூவுக்குப் போவார்கள் என்று எனக்குள் கூறிக் கொண்டேன். பின்னர் ”அன்னிஸா” அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி, தெளிவாக ஓதினார்கள். ‘தஸ்பீஹ்’ உள்ள வசனத்தை ஓதும் பொழுது அவர்கள் தஸ்பீஹ் செய்வார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவதின் வசனத்தை ஓதும் பொழுது அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடும் வசனங்களை ஓதினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். அதில் ”ஸுப்ஹான ரப்பியல் அளீம்” எனக் கூறினார்கள். அவர்களது ருகூவு அவர்களது நிலையின் அளவைப் போன்றிருந்தது. பின்னர் ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு, ரப்பனா லகல் ஹம்து’ என்று கூறினார்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் சென்றார்கள். (ஸஜ்தாவில்) ”ஸுப்ஹான ரப்பியல் அஃலா” எனக் கூறினார்கள். அவர்களது ஸஜ்தா நிலையின் அளவுக்கு நெருக்கமாக இருந்தது.அபூ அப்தில்லாஹ் ஹுதைபா பின் யமான்(ரலி), ஆதாரம்: முஸ்லிம் மேற்கண்ட நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை நிறுத்தி, நிறுத்தி ஓதியது மட்டுமல்லாமல் அல்லாஹ்வை துதிக்கும் வசனத்தை ஓதும்போது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வார்கள். அல்லாஹ்விடம் கேட்கும் (சுவர்க்கம்) தொடர்புடைய வசனங்கள் வந்தால் அதை அல்லாஹ்விடம் கேட்பார்கள், நரகம் பற்றிய அல்லது அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட சமுதாயம் பற்றியுள்ள வசனம் வந்தால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். கருத்துணர்ந்து நபி(ஸல்) அவர்கள் ஓதவில்லையென்றால் எவ்வாறு இந்தப் பிரார்த்தனைகளைச் செய்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை கருத்துணர்ந்து ஓதியிருக்கின்றார்கள் என்பதற்கு இது பெரும் உதாரணமாகும். 3. மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதுபவர் அதை விளங்கமாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: திர்மிதி, தாரமிமேற்கண்ட நபிமொழியில் மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதி முடிக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். காரணம் அதைவிடவும் குறைந்த நாளில் ஓதினால் குர்ஆனை விளங்க முடியாது. இதிலிருந்து குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கம் அதை கருத்துணர்ந்து படித்து அதை பின்பற்ற வேண்டும் என்பது தெளிவாகி விட்டது. ஆகவே நாமும் திருமறை குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதி அதன் கருத்துக்களை உணர்ந்து அதன்படி நடந்து பிறருக்கும் எத்திவைத்து ஈருலக வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

<!– tag script Begins

tag script end –>