கேள்வி : புகைத்தல் (Smoking) பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? சிகரெட் வியாபாரம் செய்வது கூடுமா?
ஃபத்வா: புகைத்தல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. பல வகையான தீங்குகளை அது தன்னகத்தே கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.
நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு நல்லவற்றை ஆகுமாக்கி தீங்கு விளைவிக்கக் கூடியவற்றைத் தடுத்துள்ளான்.
‘(நபியே! உண்பதற்கும் குடிப்பதற்கும்) எது தங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது? என்று உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். சுத்தமான நல்ல பொருட்கள் உங்களுக்கு ஹலால் ஆக்கப்பட்டுள்ளது என்று நீர் கூறுவீராக!’ (அல்குர்ஆன் அல்மாயிதா 5:04)
‘(நபி (ஸல்) எத்தகையவர் என்றால்) அவர் நன்மையைக் கொண்டு அவர்களை ஏவுவார், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி, கெட்டவற்றை அவர்கள் மீது தடுத்து விடுவார்…’ (அல்குர்ஆன், அல் அஃராப் 7:157)
புகைத்தலில் எதுவுமே நல்லது கிடையாது. அவையனைத்தும் கெட்டது தான். இவ்வாறே அனைத்துப் போதைப் பொருட்களும் கெட்டதாகும். எனவே, புகைத்தல் அதனை வியாபாரம் செய்தல் அனைத்தும் ஹராமாகும்.
யாரெல்லாம் புகை பிடிப்பவராகவும் அதனை வியாபாரம் செய்பவராகவும் இருக்கின்றாரோ அவர் உடனடியாக தவ்பாச் செய்து அல்லாஹ்விடம் மீள வேண்டும். ஏற்கனவே செய்த தவறுக்காக வருந்த வேண்டும். மேலும் இந்த மோசமான செயலை வாழ்க்கையில் செய்வதில்லை என உறுதி கொள்ள வேண்டும். யார் உண்மையான முறையில் தவ்பாச் செய்கிறாரோ, அவரது தவ்பாவை ஏற்றுக் கொள்ள அல்லாஹ் தயாராக இருக்கிறான்.
‘முஃமின்களே! நீங்கள் அனைவரும் தவ்பாச் செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள். வெற்றி பெறுவீர்கள்’. (அல்குர்ஆன், அந்நூர் 24:31)
‘எவர் தவ்பாச் செய்து ஈமான் கொண்டு நற்செயல் செய்து நேர்வழியின் மீது நிலைத்திருக்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பு வழங்கக் கூடியவனாக இருக்கிறேன்’. (அல்குர்ஆன், 20:82)
மறுமொழியொன்றை இடுங்கள்