حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيى النَّيْسَابُوْرِيُّ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا مَعْمَرٌ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَالِم ، عَنِ بْنِ عُمَرَ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (لاَ تَمْنَعُوْا إِمَاءَ اللهِ أَنْ يُصَلِّيْنَ فِي الْمَسْجِدِ) فَقَالَ بْنٌ لَهُ إِنَّا لَنَمْنَعُهُنَّ فَغَضِبَ غَضَبًا شَدِيْدًا ، وَقَالَ : أُحَدِّثُكَ عَنْ رَسُوْلِ اللهِ صَلى الله عليه وسلم وَتَقُوْلَ إِنَّا لَنَمْنَعُهُنَّ
‘பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுவதைத் தடுக்கக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) கூறினார்கள். அதைக் கேட்ட அவர்களின் (பிலால் என்ற) மகன் ‘நிச்சயமாக நாங்கள் பெண்களை தடுக்கத்தான் செய்வோம்’ என்றார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் கடும் கோபமுற்று, ‘அல்லாஹ்வின் தூதருடைய செய்தியை நான் உனக்குக் கூறுகிறேன். நாங்கள் தடுப்போம் என்கிறாயா?’ என மகனைக் கண்டித்தார்கள் என்று அவரது மகன் ஸாலிம் என்பார் அறிவிக்கிறார்.
(குறிப்பு: புஹாரி 858, முஸ்லிம் 442, தாரிமி 1279, அபூதாவூது 566, பைஹகீ 9908 முஅத்தா 465 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ‘பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுவதைத் தடுக்கக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் போன்ற வாசகங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது.)
நமது விளக்கம்:
பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதற்கு இஸ்லாத்தில் தடை இல்லை என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான சான்றாகும்.
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களுக்குள் இஸ்லாமிய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற முஸ்லிமல்லாதோரின் குற்றச்சாட்டுக்கு சரியான மறுப்பாகவும் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.
பெண்கள் பள்ளிக்கு வருவதை ஒருசிலர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தடுக்கிறார்கள். அதாவது, ‘தேவையற்ற குழப்பங்கள் பெண்களால் ஏற்படும்’ என்று கருதுகிறார்கள்.
இதே அடிப்படையில் அல்லது வேறு சில காரணங்களுக்காக இப்னு உமர் (ரலி) அவர்களின் மகன் பிலால், ‘பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுப்போம்’ என்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதை தடுக்கக் கூடாது என்று சொல்லி இருக்கும் போது மற்ற எந்த காரணங்களும் இரண்டாம் பட்சம் தான் என்பதை இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது மகனுக்கு உணர்த்துகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கூற்றும் இறைச்செய்தி தான் என்பதை மிகவும் அழுத்தமாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்