இஸ்லாம்தளம்

புஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்

அபூமுஹம்மத்

நூல்: புஹாரி 2318, அத்தியாயம்: வக்காலத்

அனஸ் (ரலி) கூறுகிறார்கள்:

அபூதல்ஹா (ரலி) மதீனாவில் முஸ்லிம்களின் மிகப்பெரும் செல்வந்தராக இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த ‘பீருஹா’ எனும் தோட்டம் அபூதல்ஹா(ரலி)வுக்குச் சொந்தமாக இருந்தது. அவரது சொத்துக்களில் அவருக்கு மிக விருப்பமானதாக அது இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள சுவையான தண்ணீரை அருந்தும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். நீங்கள் விரும்பக்கூடியதை செலவிடாத வரை நீங்கள் நன்மையை அடைய முடியாது என்ற (3:92) திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அபூதல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் சென்றார். ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பக் கூடியதை செலவிடாத வரை நன்மையை அடைய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான். என் சொத்துக்களில் எனக்கு மிகவும் விருப்பமானது பீருஹா எனும் இந்தத் தோட்டமாகும். இனிமேல் அது அல்லாஹ்வுக்காக அளித்தத் தர்மமாகும். இதன் நன்மையை அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பும் விதமாக இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நிறுத்து! அது இலாபம் தரும் செல்வமாயிற்றே! இலாபம் தரும் செல்வமாயிற்றே! நீ கூறியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அதை உனது நெருங்கிய உறவினர்களுக்கு நீ வழங்குவதையே நான் விரும்புகிறேன்’ எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே செய்கிறேன் என அவர் கூறி விட்டுத் தமது உறவினர்களுக்கும் தமது தந்தையின் உடன் பிறந்தார் மக்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

விளக்கம்:

மனிதனிடம் சொத்து சேர்க்கும் ஆசை எந்த அளவுக்கு உள்ளது என்பதை நாம் அறிவோம். மதிப்புமிக்க சொத்து – தான் குடியிருக்கும் வீட்டுக்கருகில் உள்ள சொத்து என்றால் எப்படியேனும் அதை அடைந்துவிட முயல்கிறான். ஆட்சியும் அதிகாரமும் ஒரு மனிதனிடம் குவிந்து விட்டால் நீதி நியாயங்களைப் பாராமல் ஊரையே வளைத்து உடமையாக்கிட முயல்கிறான். நகரத்தின் இதயம் போன்ற பகுதியில் யாருக்கேனும் மதிப்பு மிக்க சொத்து இருந்தால் அதை அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்காக ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமத்தையும் நாம் பார்த்து வருகிறோம். ஆட்சியாளர் மட்டுமின்றி ஆட்சியாளருக்கு உடன் பிறவா சகோதரிகள் யாரேனும் இருந்தால் அவர்கள் கூட அடித்து உதைத்து மிரட்டிப் பிறரது சொத்தை அபகரிக்க முயல்வதையும் உலகில் நாம் பார்த்து வருகிறோம்.

அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைக்கூட ஆட்சியாளர்கள் தமதாக்கிக் கொள்ளும் காலமிது. நபிகள் நாயகத்தின் இந்த வரலாற்றுக் குறிப்பில் ஆட்சியாளர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்! ஏராளம்!

மதீனா நகரம் அன்றைய முஸலிம் உலகின் ஒரே தலைநகரம். அங்கிருந்த நபிகள் நாயகத்தின் பள்ளிவாசல்தான் தலைமைச் செயலகம். அந்தப் பள்ளி வாசலை ஒட்டிய பகுதியில் குடிசைகள் போட்டு அதில்தான் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் தங்கியிருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது நான் குறுக்கு வாட்டமாகப் படுத்திருப்பேன். அவர்கள் தொழுகையில் ஸஜ்தா (தலையைத் தரையில் வைத்து வணங்குதல்) செய்யும் போது என் கால்களை மடக்கிக் கொள்வேன் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகத்தின் வீடு எவ்வளவு குறுகியதாக இருந்தது என்பதற்கு இது சான்று. அந்தக் குறுகிய வீட்டில் வசித்து வந்த நபி (ஸல்) அவர்களுக்கு விசாலமான வீடு தேவையாக இருந்தது. பள்ளிவாசலுக்கு எதிரிலேயே விசாலமான தோட்டம் அவர்களுக்குக் கிடைத்தால் அவர்களின் இட நெருக்கடி குறையும்.

மதிப்புமிக்க இடத்தில் விசாலமான ஒரு சொத்து – நபிகள் நாயகத்தின் வீட்டுக்கு எதிரிலேயே அமைந்த ஒரு சொத்து – நபிகள் நாயகத்துக்குத் தேவைப்படக் கூடிய ஒரு சொத்து – கிரயமாகக்கூட இன்றி இலவசமாகக் கிடைக்கின்றது. நீங்கள் விரும்பியவாறு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று செல்வந்தரான தோழர் வந்து கூறுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) சாதாரண – சராசரி மனிதராக இருந்தால் நானே எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருப்பார்கள். அல்லது இதை எனக்கு விற்றுவிட்டு அதன் கிரயத்தை தர்மம் செய் என்று சொல்லி இருப்பார்கள். அவர்களுக்கு இருந்த இடநெருக்கடி காரணமாக அந்த இடம் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்தப் பொருட்களிலெல்லாம் நாட்டம் இல்லை!

அடிக்கடி அந்தத் தோட்டத்திற்குச் சென்று சுவையான நீரருந்தும் வழக்கம் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்துள்ளது. பாலைவனத்தில் சுவையான நீர் என்பது பெரும் பாக்கியமாகும். அடிக்கடி அவர்கள் சென்று வந்ததால் அந்தத் தோட்டத்தின் மதிப்பையும் அதில் கிடைக்கும் அபரிமிதமான வருவாயைப் பற்றியும் நபி (ஸல்) அறிந்திருந்தார்கள். இலாபம் தரும் செல்வமாயிற்றே என்று அவர்கள் கூறியதிலிருந்து இதை அறியலாம்.

தேவையான நேரத்தில் – தேவையான இடத்தில் நல்ல இலாபம் தரும் சொத்து இலவசமாக கிடைத்தும் மறுத்த ஒரே தலைவர் மாமனிதர் முஹம்மது நபியவர்கள்தாம்!

தர்மம் செய்பவர்கள் முதலில் தம் உறவினர்களுக்குச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி மக்களுக்குப் போதித்து வந்தனர். தாம் சொல்லுகின்ற அனைத்தையும் செயல்படுத்தி வந்த மாமனிதர் இந்த அவசியமான நேரத்திலும் அதை மறக்க வில்லை. தமக்குச் சாதகம் என்றால் தனிச் சட்டம் கூறவில்லை. இலாபம் தரக்கூடிய இந்த உயர்ந்த செல்வத்தைப் பெறக்கூடிய முதல் தகுதி உமது உறவினருக்கே உண்டு என்று கூறி இருக்கிறார்கள். ஆட்சித்தலைவர் என்பதற்காகவோ அல்லாஹ்வின் தூதர் என்பதற்காகவோ தமது எந்தப் போதனையையும் அந்த மாமனிதர் வளைக்கவில்லை.

சொல்வது யாருக்கும் எளிதானதுதான். சொல்லியவாறு அனைத்தையும் செய்வது எளிதானதன்று. உலக வரலாற்றில் தாம் சொன்ன எந்த ஒரு விஷயத்திலும் முரண்படாது அனைத்தையும் அப்படியே நடைமுறைப்படுத்திய ஒரே தலைவர் முஹம்மத் என்ற இந்த மாமனிதர்தாம்!

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: