இஸ்லாம்தளம்

பால்ய விவாகம்

‘நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.

அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்!

அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்’ (அல்குர்ஆன் 4:19)

இவ்வசனம் இல்லற வாழ்க்கையைத் தேர்வு செய்வதில் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையை சென்ற இதழில் கண்டோம். இவ்வசனம் பால்ய விவாகத்தையும் கூட மறுக்கும் வசனமாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை பால்ய வயதில் திருமணம் செய்துள்ளதால் இது குறித்து விரிவாக விளக்க வேண்டியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பருவமடையாத சிறுமியாக இருந்த போது திருமணம் செய்தார்கள் என்பது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு இஸ்லாத்தில் இன்றளவும் பால்ய வயதுத் திருமணம் அனுமதிக்கப் பட்டுள்ளதாகப் பலர் கருதுகின்றனர். முஸ்லிம் அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வாறு தான் கருதுகின்றனர். இவர்களின் முடிவு முற்றிலும் தவறானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை நபியென வாதிட்ட ஆரம்ப காலத்தில் – மக்கா வாழ்க்கையின் போது தான் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தனர். அதை நாமும் மன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமானால் இதன் பின்னர் அத்தகைய திருமணம் தடை செய்யப்படாமல் இருக்க வேண்டும். தடை செய்யப்பட்டு விட்டால் ஆரம்ப காலத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்தவைகளை விட்டு பின்னர் செய்தவைகளைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது முஸ்லிம் சமுதாயத்திலுள்ள அனைத்து அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இதை மனதில் இருத்திக் கொண்டு இப்பிரச்சனையை நாம் விரிவாக ஆராய்வோம்.

‘(உங்கள் மனைவியரான) பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளனர்’. (அல்குர்ஆன் 4:21)

கணவன் மனைவியரிடையே உள்ள உறவைக் குறித்து அல்லாஹ் கூறும் போது மனைவியர் கணவரிடம் உறுதிமொழி உடன்படிக்கை செய்துள்ளதாகக் கூறுகிறான்.

ஒரு உறுதி மொழியையோ உடன் படிக்கையையோ செய்ய வேண்டுமானால் அவ்வுடன்படிக்கையைச் செய்யக்கூடிய இருவரும் – இருதரப்பினரும் – எது குறித்து உடன்படிக்கை செய்கிறோம் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். புரிந்திருக்கா விட்டால் அது உடன்படிக்கையாக ஆகாது.

திருமணம் என்றால் என்ன? எதற்காக திருமணம் செய்யப்படுகிறது. கணவன் என்பவன் யார்? அவன் நமக்கு என்ன செய்ய வேண்டும்? நாம் அவனுக்கு என்ன செய்ய வேண்டும்? இவற்றுள் எதுவுமே விளங்காத பருவத்தில் உள்ள பருவமடையாச் சிறுமியைத் திருமணம் செய்தால் அங்கே அச்சிறுமி எந்த உடன் படிக்கையையும் எடுக்கவில்லை என்பது தான் பொருள்.

இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம், வாழ்க்கை ஒப்பந்தம் தான் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் பால்ய விவாகத்தில் இந்த ஒப்பந்தம் நிகழவில்லை.

இவ்வசனம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தம் எனக்கூறுவதாலும் ஒப்பந்தம் செய்பவர்கள் அது குறித்து அறிந்திருப்பது அவசியம் என்பதாலும் பால்ய விவாகம் கூடாது என்பதை சந்தேகமில்லாமல் அறிகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால்ய விவாகம் செய்த பின்னர் தான் இந்த வசனம் அருளப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் எனக் கேட்கலாம். ஆதாரம் இருக்கிறது.

‘பகரா அத்தியாயமும், அன்னிஸா அத்தியாயமும் நான் நபி (ஸல்) அவர்களுடன் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கும் போது தான் அருளப்பட்டன’ என ஆயிஷா (ரலி) அவர்களே அறிவித்துள்ளனர். (புகாரி – 4993)

நாம் எடுத்துக் காட்டிய வசனம் அன்னிஸா அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. அன்னிஸா அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகத் தொளிவாகவே அறிவித்து விட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்து பல ஆண்டுகள் கழித்தே இவ்வசனம் அருளப்பட்டது உறுதியாகின்றது.

எனவே ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு பால்ய விவாகத்தை அனுமதிக்கப்பட்டதாகக் கருதுவது முற்றிலும் தவறாகும்.

மேலும் சென்ற இதழில் நாம் எடுத்துக் காட்டிய 4:19 வசனமும் பெண்களின் சம்மதம் இன்றி மணக்கலாகாது என்பதை திட்ட வட்டமாக அறிவிக்கின்றது. அது ஹலால் இல்லை எனவும் கூறுகின்றது. சம்மதம் தெரிவிக்க இயலாத பருவத்தில் உள்ள சிறுமியை மணப்பது குற்றம் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தின் போது பெண்ணின் சம்மதத்தை எந்த அளவுக்கு வலியுறுத்தியுள்ளனர் என்பதை சென்ற இதழில் நாம் குறிப்பிட்டுள்ளோம். பால்ய விவாகம் அந்த நபிமொழிகள் அனைத்துக்கும் எதிரானதாகும்.

திருமணம் செய்வதன் காரணமாக ஆண்களுக்கு என்று சில கடமைகள் ஏற்பட்டு விடுகின்றன. அந்தக் கடமைகளைச் சுட்டிக் காட்டவே ‘பெண்கள் உங்களிடம் உறுதிமொழி எடுத்துள்ளார்கள்’ என்று இங்கே கூறிகிறான் என்று சிலர் வியாக்கியானம் அளித்துள்ளனர். பெரும்பாலான தப்ஸீர்களில் இந்த வியாக்கியானம் தான் கூறப்பட்டுள்ளது.

அதாவது பெண்கள் எந்த உடன்படிக்கையும் எடுக்கவோ உணரவோ தேவையில்லை. திருமணம் செய்வதன் காரணமாக ஆண்கள் மீது இஸ்லாம் சில கடமைகளைச் சுமத்தி விடுவதால் அது பெண்ணிடம் எடுத்த உடன்படிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

உடன்படிக்கை எடுத்தல் என்ற சொல் விபரமாகப் புரிந்து கொண்டு செய்யும் உடன்படிக்கையைத் தான் குறிக்கும்.

அதே அத்தியாயத்தில் 154 வது வசனத்தில், ‘சனிக்கிழமை வரம்பு மீறாதீர்கள் என அவர்களிடம் நாம் கூறினோம். மேலும் அவர்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்தோம்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

என்ன உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்பது அல்லாஹ்வுக்கும் தெரியும், யூதர்களுக்கும் தெரியும்.

இதுபோல் அஹ்ஸாப் அத்தியாயம் ஏழாவது வசனத்தில், ‘நபிமார்களிடமும் உம்மிடமும் நூஹிடமும், இப்ராஹீமிடமும், மூஸாவிடமும், மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் உடன் படிக்கை எடுத்தோம். மேலும் அவர்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்தோம்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதுபோன்ற வார்த்தைப் பிரயோகம் தான் இங்கும் இடம் பெற்றுள்ளது. எனவே பெண்கள் வயதுக்கு வந்து இல்லறம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட பருவத்தில் தான் திருமணம் செய்ய இயலும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பால்ய விவாகம் செய்யாதீர்கள் என்று கட்டளை இருக்கிறதா என்று சிலர் கேட்கிறார்கள். அப்படிக் கூறினால்தான் மாற்றப்பட்டது என்பதை ஒப்புக் கொள்வார்கள் போலும்! பால்ய விவாகம் கூடாது என்பதை மறைமுகமாக இவ்வசனமும் இதற்கு முன் எழுதிய வசனமும் நபிமொழிகளும் கூறுவதே போதுமானது தான்.

இதை அவர்கள் இன்னமும் ஏற்கத் தயங்குவார்களானால் அது நபிகள் நாயகத்திற்கு மட்டும் பிரத்தியேகமானது என்றாவது கூற வேண்டும்.

நபிகள் நாயகத்தின் செயல் ஒருவிதமாகவும், அவர்களது கட்டளை வேறு விதமாகவும் இருந்தால் கட்டளையைத் தான் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் கருத்து வேறுபாடில்லாத விதி.

எனவே மாற்றப்படவில்லை என்று இவர்கள் கருதினாலும் நமக்கு பால்ய விவாகம் கூடாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
4:19 வசனத்தின் இறுதியில் அவர்களுடன் நல்லமுறையில் இல்லறம் நடத்துங்கள் என்று அல்லாஹ் கூறுவதன் விளக்கத்தை அடுத்த இதழில் காண்போம். (இன்ஷா அல்லாஹ்)

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: