இஸ்லாம்தளம்

நினைவுச் சின்னங்கள்

‘நிச்சயமாக ஸபா, மர்வா (எனும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாகும். யார் இந்த ஆலயத்தில் ஹஜ் அல்லது உம்ராச் செய்கிறாரோ அவர் அவ்விருமலைகளையும் சுற்றுவது தவறில்லை.’ (அல்குர்ஆன் 2:158)

ஸபா, மர்வா எனும் இரண்டு மலைகளை புனிதச் சின்னங்கள் என்று இறைவன் இங்கே குறிப்பிடுகிறான். இது போல் வேறு வசனங்களில் கஃபா ஆலயத்தையும், அதை ஒட்டி அமைந்துள்ள மகாமே இப்ராஹிமையும், அதைச் சுற்றியுள்ள மஸ்ஜிதுல் ஹராமையும் புனிதமானவையாக இறைவன் அறிவித்துள்ளான்.

ஹஜ்ஜுக்கு செல்லக் கூடியவர்களும் அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் அவற்றின் புனிதத்தை மதிக்கும் வகையில் இறைவனின் கட்டளைப் பிரகாரம் கஃபாவைத் தவாப் செய்கின்றனர். மகாமே இப்ராஹிம் எனுமிடத்தில் தொழுகின்றனர். ஸபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடுகின்றனர். இந்த வகையில் இந்த வசனத்தை இந்தச் சமுதாயம் சரியாகவே புரிந்து வைத்திருக்கின்றது. இது பற்றி மேலதிகமாக விளக்கம் எதுவும் தேவையில்லை.

இந்த வசனம் கூறக்கூடியது இதுதான் என்பதை அறிந்த பின்னரும் ஒரு சிலர் தங்களின் தவறான கொள்கைகளுக்கு இந்த வசனத்தைச் சான்றாக்கிட முயல்கின்றனர். அவர்களுக்காக நாம் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. முதலில் அவர்கள் கூறக்கூடியது என்ன என்பதைப் பார்ப்போம்.

இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப் பிரகாரம் தம் மனைவி ஹாஜராவையும், மழலை மைந்தன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டுச் சென்றனர். மழலை, தாகத்தால் தவித்தபோது ஸபா மலையிலும் மர்வா மலையிலும் ஏறி தண்ணீர் தென்படுகிறதா என்று ஹாஜரா அவர்கள் மாறி மாறி இருமலைகளுக்கிடையே ஓடலானார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வின் நல்லடியார்களான இப்ராஹிம் (அலை) இஸ்மாயீல் (அலை), ஹாஜரா அம்மையார் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களை இறைவன் புனிதப் படுத்தியுள்ளான். இதிலிருந்து நல்லடியார்களுடன் தொடர்புடைய இடங்கள் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை புனிதப் பொருட்களாகின்றன என்பது தெரிய வருகின்றது.

இதனடிப்படையில் பெரியார்கள் வாழ்ந்த இடங்கள், பிறந்த இடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களை நினைவு கூர்வதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள், கொடி மரங்கள், அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள், அந்த அடக்கத்தலங்கள் மீது போர்த்தப்பட்ட போர்வைகள் போன்றவை புனிதமிக்கதாக – பரக்கத் நிறைந்ததாக அமைந்து விடுகின்றன என்பது இவர்களின் வாதம்.

இவர்களின் வாதம் சரியானதுதானா? இவர்கள் புரிந்து கொண்டது போல் இதற்குப் பொருள் கொள்ள இடமிருக்கிறதா? இதைத்தான் நாம் விபரமாக விளக்கவேண்டியுள்ளது.

கஃபா ஆலயமும், ஸபா மர்வாவும், மகாமே இப்ராஹீமும் புனிதமானவை என்பதில் சந்தேகமில்லை. நல்லடியார்களுடன் தொடர்புடையது என்ற காரணத்தினால் அவை புனிதம் அடைந்தனவா? நிச்சயமாக இல்லை.

அப்படி இருக்குமானால் இப்ராஹிம் (அலை) அவர்கள் பிறந்த இடம், நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட பின்பும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அவர்களுடன் சம்பந்தப்பட்ட எத்தனையோ இடங்கள் உள்ளன. இவற்றுக்கு இத்தகைய புனிதம் எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களுடன் சம்பந்தப்பட்ட ஓரிரண்டு இடங்கள் மட்டுமே புனிதம் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு முன்பும், அவர்களுக்குப் பின்பும் எத்தனையோ நபிமார்கள் வந்துள்ளனர். அந்த நபிமார்களுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எத்தனையோ இருந்திருக்கும். அவற்றுக்கும் புனிதத்தன்மை ஏதும் வழங்கப்படவில்லை.

நல்லடியார்களுடன் தொடர்புடைய பொருட்கள் புனிதம் பெறும் என்பது கிடையாது. மாறாக, இறைவன் எவற்றுக்கு புனிதம் வழங்கியுள்ளானோ, இறைத்தூதர்கள் எவற்றுக்கு புனிதம் இருப்பதாக அறிவித்துள்ளார்களோ அவை மட்டுமே புனிதம் பெறும் என்பது இதிலிருந்து தெரியவருகின்றது.

ஒன்றைப் புனிதப்படுத்தவும், புனிதப்படுத்தாமலிருக்கவும் அதிகாரம் படைத்தவன் இறைவன். அவன் எவற்றுக்கு வேண்டுமானாலும் புனிதத்தை வழங்கலாம். அது அவனது தனியதிகாரத்தின் பாற்பட்டது. அவன் சில இடங்களைப் புனிதப்படுத்தியதால் நான் வேறு சில இடங்களைப் புனிதப்படுத்துவேன் என்று புறப்படுவது அவனுடன் போட்டியிடுவதாகும்.

இறைவன் சொன்னதைச் செய்வது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு. இறைவன் செய்ததைச் செய்வேன் என்பது கடவுள் தன்மையில் பங்கு கேட்பதன் வெளிப்பாடு என்பதை இவர்கள் உணரவில்லை. அதனால் தான் அல்லாஹ் சில இடங்களைப் புனிதப்படுத்தியதால் நான் வேறு சில இடங்களைப் புனிதப்படுத்தப் போகிறேன் என்பது போல் நடந்து கொள்கிறார்கள்.

‘அவன் செய்வது பற்றி அவனிடம் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் (செய்வது பற்றி அவர்கள்) தாம் கேள்வி கேட்கப்படுவார்கள்.’ (அல்குர்ஆன் 21:23)

தான் செய்வதை மற்றவர்கள் செய்ய முடியாது என்பதை இங்கே இறைவன் தெளிவுபடக் கூறுகிறான்.

இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள மற்றுமொரு நிகழ்ச்சியையும் நாம் நினைவு கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஹூதைபியா ஆண்டின் போது தம் தூதராக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவுக்குள் அனுப்பி வைத்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பி வரத் தாமதம் ஏற்பட்டதால் உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டு விட்டார்களோ என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது. தூதர்களைக் கொல்லக்கூடாது என்ற மரபை மீறி மக்கத்துக் காபிர்கள் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றிருந்தால் அதற்குப் பதிலடி தரவும் கடைசி வரை போரிடவும் நபி (ஸல்) அவர்கள் தம்முடன் வந்த தோழர்களிடம் பைஅத் (உறுதிமொழி) பெற்றார்கள். இந்த உடன்படிக்கையில் பங்கெடுத்தவர்களை இறைவன் பெரிதும் புகழ்ந்துரைக்கிறான். அவர்களைத் தான் பொருந்திக் கொண்டதாகவும் பிரகடனம் செய்கிறான். உஸ்மான் (ரலி) அவர்கள் உயிருடன் திரும்பி வந்ததால் போர் எதுவும் நிகழவில்லை என்பது தனி விஷயம்.

‘அந்த மரத்தடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்த மூமின்களை அல்லாஹ் நிச்சயமாக பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளத்தில் உள்ள (ஈமானிய உறுதியை) அவன் அறிந்து வைத்துள்ளான். அவர்கள் மீது அமைதியைப் பொழிந்தான். சமீபத்தில் (கிடைக்கும்) வெற்றியையும் அவர்களுக்குப் பரிசாக வழங்கினான்.’ (அல்குர்ஆன் 48:18)

நல்லடியார்களுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் புனிதமடைகின்றன என்பது உண்மையானால் இந்த மரத்தடி அதற்கு அதிக அருகதை பெற்றிருக்கிறது.

ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் அம்மரத்தினடியில் அமர்ந்துள்ளார்கள். தங்கள் உயிரையே அர்ப்பணித்ததாக தம் தோழர்களிடம் அம்மரத்தினடியில் உறுதிமொழி பெற்றார்கள். உறுதிமொழி எடுத்த அத்தனை தோழர்களின் உள்ளமும் பரிசுத்தமானதாக அமைந்திருந்தது. அந்த இடத்தில் வைத்து எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் காரணமாக அல்லாஹ்வின் திருப்தி அவர்களுக்குக் கிடைத்தது. இவ்வளவு சிறப்புக்குரிய அம்மரத்தடியை நபித்தோழர்கள் புனிதப்படுத்தினார்கள்? அதை ஓர் நினைவுச்சின்னமாகப் போற்றிப் பாதுகாத்தார்களா? அந்த இடத்தைப் பார்ப்பதாலோ, தொடுவதாலோ அங்கே வந்து தங்குவதாலோ பாக்கியம் பெறுவோம் என்று நம்பினார்களா? நிச்சயமாக இல்லை. அதை ஒரு மரமாகக் கருதினார்களேயன்றி அதற்கு எந்த மதிப்பையும் அந்த நல்லவர்கள் வழங்கவில்லை. அல்லாஹ்வோ அவனது தூதரோ அதன் புனிதம் பற்றி ஏதும் சொல்லாததால் அதைச் சாதாரணமான மரமாக மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது.

அந்த மரம் பற்றி நபித்தோழர்கள் கொண்டிருந்த அபிப்ராயம் எவ்வாறு இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்திகின்றது.

நான் ஹஜ்ஜுச் செய்வதற்காகப் புறப்பட்டேன். அப்போது ஓரிடத்தில் ஒரு கூட்டத்தினர் தொழுது கொண்டிருக்கக் கண்டேன். இது என்ன தொழுமிடம்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இந்த மரத்தினடியில் தான் நபி (ஸல்) அவர்கள் (பைஅதுர்ரிள்வான் எனும்) அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற உறுதிமொழியை எடுத்தனர் என்று கூறினார்கள். நான் ஸயீத் பின் முஸய்யப் அவர்களிடம் சென்று இந்தச் செய்தியைக் கூறினேன். அதற்கவர்கள் என் தந்தை (முஸய்யப்) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அந்த உறுதிமொழி எடுத்தவர்களில் ஒருவராவார். என் தந்தை இது பற்றிக் கூறியதாவது: அதற்கடுத்த வருடம் நாங்கள் புறப்பட்டு வந்தபோது அம்மரம் இருந்த இடத்தை நாங்கள் அறியவில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் எங்களுக்கு வழியில்லை என்றார்கள். இதை ஸயீத் பின் முஸய்யப் அவர்கள் கூறிவிட்டு நபித்தோழர்கள் அறியாததை நீங்கள் அறிந்து விட்டீர்களா? அவர்களை விட (இதுபற்றி) நீங்கள் அதிகம் அறிந்தவர்களா என்ன? என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் நூல்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் அந்த இடம் புனிதமானது என்று அறிவித்திருந்தால் அதைக் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு நபித்தோழர்கள் மறந்திருக்க இயலுமா? நபி (ஸல்) அவர்களும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதனால் நபித்தோழர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

நபித்தோழர்களில் சிலர் அறியாமை காரணமாக தங்களுக்கு என்று புனிதமான மரம் ஒன்று வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார்கள். அந்த விருப்பத்தை நபியவர்கள் கண்டித்தார்களே தவிர அவர்களின் கோரிக்கைப் பிரகாரம் எம்மரத்துக்கும் புனிதம் வழங்கவில்லை.

நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் சென்றார்கள். வழியில் ஒரு இலந்தை மரம் காபிர்களால் புனிதமாகக் கருதப்பட்டு வந்தது. அங்கே காபிர்கள் தங்குவார்கள். தங்கள் ஆயுதங்களை அங்கே தொங்கவிடுவார்கள். தாது அன்வாத் என்று அம்மரம் குறிப்பிடப்பட்டது. நாங்கள் பசுமையான ஒரு இலந்தை மரத்தை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் தாது அன்வாத் (எனும் புனித மரத்தை) ஏற்படுத்துங்களேன் என்று கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக மூஸா (அலை) அவர்கள் சமுதாயத்தினர் அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப்போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துங்கள் என்று கேட்டார்களே அதுபோல் நீங்கள் கேட்கிறீர்கள். உங்களுக்கு முன் சென்றவர்களின் வழிமுறையை ஒவ்வொன்றாக நீங்கள் பின்பற்ற முயல்கிறீர்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுவாகித் (ரலி) நூல்: அஹ்மத்

எப்பொருளும், எந்த இடமும் புனிதம் அடையாது. இறைவன் புனிதப்படுத்திய இடங்கள் மாத்திரமே புனிதமடையும் என்று நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பெற்றதன் காரணமாகவே வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மரத்தைக் கூட அவர்களால் மறக்க முடிந்தது.

‘தூர்’ மலையைப் பற்றி அறிவோம். அம்மலைக்கருகில் தான் மூஸா நபி வரவழைக்கப்பட்டு இறைவனுடன் உரையாடினார்கள். தவ்ராத் வேதத்தையும் அவ்விடத்திலேயே அவர்கள் பெற்றார்கள். இறைவனுடன் உரையாடிய இடம் எவ்வளவு புனிதமானதாக இருக்க வேண்டும். அதன் புனிதத் தன்மை பற்றி அல்லாஹ் அறிவிக்காததால் நபித்தோழர்களும் அதற்கு புனிதம் எதையும் வழங்கவில்லை.

பஸ்ரா பின் அபீபஸ்ரா அவர்களை நான் சந்தித்து எங்கிருந்து வருகிறீர் என்று கேட்டேன். அதற்கவர் தூர் மலையிலிருந்து என்றார். நீர் அங்கே புறப்படும் முன் உம்மை நான் சந்தித்திருந்தால் உம்மைப் போகவிட்டிருக்கமாட்டேன். ஏனெனில் மூன்று பள்ளிவாயில்கள் தவிர (வேறு இடங்களுக்குப் புனிதம் கருதி அதிக நன்மையை நாடி) பயணம் செல்லக்கூடாது என்று நபியவர்;கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று அபூஹுரைரா (ரலி) குறிப்பிடுகிறார்கள். (அஹ்மத்)

புனிதமானது என்று கருதிட அத்தனைத் தகுதிகளும் உள்ளதாக நமக்குத் தோன்றினால் கூட நபியவர்களிடம் பாடம் பெற்றவர்கள் அவ்வாறு கருதிடவில்லை. இறைவனோ இறைத்தூதரோ அறிவிக்காமல் எதுவும் புனிதமடையாது என்று அவர்கள் நம்பினார்கள்.

சமாதிகளையும், கொடிமரங்களையும், சந்தனக் கூடுகளையும், புனிதமானவையாகக் கருதுவோர் இதனைச் சிந்திக்க வேண்டும். மூஸா (அலை) அவர்களின் சமுதாயம் நடந்தது போல் நடந்திடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு அருள் புரியட்டும்.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: