இஸ்லாம்தளம்

திர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை

அபூஜமீலா

திர்மிதி ஹதீஸ் எண்: 1922

قَالَ رَسُولُ الله صَل الله عليه وسلم : مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيْحُ غَمَرٍ فَأصَابَهُ شَيْءٌ فَلاَ يَلُومَنَّ اِلاَّ نَفْسَهُ – رواه الترمذي

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

‘யாருடைய கையிலேனும் கொழுப்பு வாடை உள்ள நிலையில் உறங்கி இதனால் ஏதும் தீங்கு ஏற்பட்டால் தன்னைத் தவிர யாரையும் அவர் குறை கூற வேண்டாம்;’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்கள்: திர்மிதி – 1922, அபூதாவூத், இபுனுமாஜா)

நபி (ஸல்) அவர்கள் எல்லா சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற வழிமுறையை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்ல வந்த முதன்முதல் செய்தி ஈமான் எனும் நம்பிக்கையாக இருந்தாலும் அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும்.

அதனால் தான் மனிதவாழ்க்கையின் சில அம்சங்களில் அவர்களின் வழிகாட்டுதல்களை நம்மால் காண முடிகிறது.
மனித வாழ்வின் ஆரோக்கியம், பாதுகாப்பு இதுபோன்ற எல்லாவற்றிற்கும் தேவையான வழிகாட்டுதல்களை நபி (ஸல்) காட்டித் தந்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

‘யாருடைய கையிலேனும் கொழுப்பு வாடை உள்ள நிலையில் உறங்கி இதனால் ஏதும் தீங்கு ஏற்பட்டால் தன்னைத் தவிர யாரையும் அவர் குறை கூற வேண்டாம்;’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்கள்: திர்மிதி – 1922, அபூதாவூத், இபுனுமாஜா)

ஆட்டிறைச்சி போன்ற கொழுப்புப் பொருட்களை நாம் தொட வேண்டியது நேர்ந்தால் தூங்கச் செல்லு முன் நமது கைகளை கழுவ வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

கைகளில் கொழுப்பின் அடையாளங்கள் இல்லாமல் இருந்தும் கூட அதன் வாடை நீண்ட நேரம் தங்கி நிற்கும்.
இந்த வாடை மற்ற விலங்குகளையோ பூச்சிகளையோ கவர்ந்திழுக்க வாய்ப்புள்ளது. அவற்றில் சில நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.

நீங்கள் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள் என்று நேரடியாக கட்டளையிடாமல் நபி (ஸல்) அவர்கள் கைகளை கழுவாவிட்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விளக்கமாகச் சொல்லி அச்செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

சிறிய விலங்குகள் கையை கறித்துண்டு என்று நினைத்தோ அல்லது உணவு என்று நினைத்தோ கடித்து விடக்கூடும்.
நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் மிகவும் பாதுகாப்பான வீடுகளிலோ அல்லது குடியிருப்புக்களிலோ வாழக்கூடியவர்கள் வேண்டுமானால் இந்தப் பூச்சிகடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆனாலும் கூட பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இவர்கள் பூச்சிகடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிவதில்லை.

இருந்தாலும் கொழுப்புப் பொருட்களை கையால் தொட்டால் கையைக் கழுவுவது நல்ல பழக்கம். அது நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்த பழக்கமாகும்.

மற்றொரு ஹதீஸ் இன்னும் கூடுதல் விபரங்களைத் தருகிறது.

இந்த ஹதீஸ் கவனக்குறைவினால் எற்படும் தீங்குகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கூறுகின்றன.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

‘கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள், தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள், உணவுப்பாத்திரத்தை மூடி வையுங்கள், விளக்கை அணைத்து விடுங்கள். ஏனென்றால் ஷைத்தான் பூட்டிய கதவை திறக்க மாட்டான், முடிச்சை அவிழ்க்க மாட்டான், பாத்திரங்களை திறக்க மாட்டான். இருந்தாலும் எலிகள் வீட்டை கொளுத்தி விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புஹாரி – 5624, திர்மிதி – 1872)

மற்றொரு ஹதீஸில் அதே விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன, இந்த நபிமொழியையும் ஜாபிர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.

‘இரவில் தாமதமாகி வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள், இரவு என்பது நிசப்தமானது, உங்களைச் சுற்றி எந்த வகையான விலங்கை அல்லாஹ் அனுப்பியுள்ளான் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள், தண்ணீர் பாத்திரத்தை மூடி விடுங்கள், உணவுப்பாத்திரத்தை மூடுங்கள், விளக்கை அணைத்து விடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி – 6295,6296, புஹாரியின் அதபுல் முப்ரத்)

இந்த இரண்டு ஹதீஸ்களிலும் நமக்கு தேவையான மிக முக்கியமான போதனைகள் உள்ளன. அவை நம்மில் பெரும்பாலும் எல்லோருக்கும் பொருந்தக்கூடியதாகும்.

கதவை தாழிடுதல்:
முதன்முதல் அறிவுரை தூங்கச் செல்லு முன் கதவை தாழிட்டுக் கொள்வதாகும். இப்பொழுதெல்லாம் திருட்டு பல இடங்களில் சர்வசாதாரணமாகி விட்டது. அதனால் கதவை தாழிட்டுக் கொள்வதை சொல்லாமலேயே செய்து விடுவார்கள். திருட்டு பயம் இல்லாதிருந்தாலும் கதவை இரவில் தாழிட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.

உலகின் பல இடங்களில் திருட்டு பயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கக் கூடிய இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால் அவர்கள் சிறுசிறு குழுக்களாக இருக்கிறார்கள். ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள் அல்லது நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார்கள்.

மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் போது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகள் வீட்டுக்குள் நுழைந்து விடாமல் இருக்க கதவை தாழிடத்தான் வேண்டும்.

கதவை மூடி தாழிட்டுக் கொள்வது பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

தண்ணீர் பாத்திரத்தை மூடுதல்:

இப்பொழுதெல்லாம் பிரம்மாண்டமான மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குழாய்கள் வழியாக நமது வீடுவரை குடிநீர் வந்து சேர்கிறது. இந்த தண்ணீர் வெளிப்புற மாசுபடிதலிலிருந்து முற்றிலுமாக பாதுகாக்கப்பட்டு சுத்தமானதாக நமக்கு கிடைக்கிறது.

ஆனால் அந்த காலத்தில் குடிப்பதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் போதுமான தண்ணீர் கிடைக்காத காலம். போதுமான தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். குடிநீர் தண்ணீர் பைகளிலே சேகரித்து வைத்துக் கொள்வார்கள். தண்ணீர் பைகளாகட்டும் தண்ணீர் உள்ள பாத்திரமாகட்டும் தண்ணீர் பைகளின் வாய் கட்டப்படவும் தண்ணீர் பாத்திரங்கள் மூடிவைக்கப்படவும் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அப்போது தான் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களோ பூச்சிகளோ அதில் விழுந்து விடாமல் பாதுகாக்க முடியும்.

உணவுப் பாத்திரத்தை மூடுதல்:

இதே முறை மற்ற உணவுப் வைத்திருக்கும் பாத்திரத்திற்கும் குழம்பு வைத்திருக்கும் பாத்திரத்திற்கும் பொருந்தும்.

இப்பொழுதெல்லாம் நமது உணவுப் பொருளை குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்துக் கொள்கிறோம். சிலவேளை நம்மைச் சுற்றி நமது வீடுகளில் நம்மை அறியாமல் உணவுப் பொருட்கள் மூடப்படாமல் திறந்து கிடக்கின்றன.

இந்த ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய விஷயம் உணவுப் பொருட்கள் இரவு நேரங்களில் திறந்து வைக்கக் கூடாது என்பதாகும்.

மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிகள் அதற்குள் சென்று விடலாம். தூசியோ தீங்கு விளைவிக்கும் பொருளோ அதில் விழுந்து விடலாம். அது உடலுக்கு சக்தி கொடுக்கும் உணவாக இருப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் உணவாக மாறி விடலாம்.

விளக்கை அணைப்பது:

இரண்டு ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டிருக்கும் அடுத்த அம்சம் விளக்கை அணைப்பதாகும்.

இங்கே சொல்லப்பட்டிருப்பது அகல்விளக்கு அல்லது அது போன்று திறந்த நிலையில் எண்ணெய் ஊற்றி திரியின் மூலம் எரிக்கப்படும் விளக்காகும். இப்படிப்பட்ட விளக்குகள் காற்று கூறுதலாக வீசும் போது அதன் தீப்பிளம்பு கூடும், அல்லது பூனை போன்ற விலங்குகளால் தீ விபத்து ஏற்பட முடியும்.

நபி (ஸல்) அவர்கள் சொல்லும் போது, எலிகள் வீட்டைக் கொளுத்தி விடும் என்று கூறுகிறார்கள்.
தீப்பிளம்பு எலியை கவர்ந்து இழுக்கக் கூடியதாகும். எலி அதை இழுக்கும். விளக்கை தலைகீழாக கவிழ்த்தி விடும். அதன் எண்ணெய் கீழே சிந்துவதால் நெருப்பு பிடிப்பதற்கு ஏதுவாகும்.

அதனால் நபி (ஸல்) அவர்கள் இரவில் விளக்கை அணைக்காமல் விட்டு விடுவதையும் அல்லது எலிகள் அதை இழுத்துச் செல்லும் அளவிற்கு விட்டு விடுவதையும் திரும்பத்திரும்ப எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மற்றொரு ஹதீஸ் இப்படிப்பட்ட ஆபத்தை தெளிவாகச் சொல்கிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒருமுறை எலி விளக்குத் திரியை இழுக்க ஆரம்பித்தது. வேலைக்காரி அதை விரட்ட முயற்சித்தாள். நபி (ஸல்) அவர்கள் அந்த எலியை விட்டு விடுமாறு கூறினார்கள். அந்த எலி விளக்குத் திரியை அவர்கள் உட்கார்ந்திருந்த பாய் வரை இழுத்துக் கொண்டு சென்று அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டது. சிறு நாணயம் அளவிற்கு பாய் எரிந்து விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘படுக்கைக்கு செல்லுமுன் உங்களது விளக்கை அணைத்து விடுங்கள், ஷைத்தான் எலிகளின் கவனத்தை விளக்கின் பக்கம் ஈர்க்கிறான். அவை உங்களை எரித்து விடும்’ என்று சொன்னார்கள். (நூற்கள்: புஹாரியின் அதபுல் முஃப்ரத், அபூதாவூத்)

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு இரவில் நபி (ஸல்) அவர்கள் விழித்த போது, எலி ஒன்று எரியும் விளக்குத் திரியை இழுத்துக் கொண்டு கூரை வரை கொண்டு சென்றதைப் பார்த்தார்கள். அந்தக் கூறையில் நெருப்பு பற்றக் கூடிய அளவுக்கு மிக நெருக்கத்தில் திரியின் நெருப்பு இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை சபித்தார்கள். அதை கொல்லுங்கள், நீங்கள் இஹ்ராமில் இருந்தாலும் சரியே என்று கூறினார்கள். (புஹாரியின் அதபுல் முஃப்ரத்)

இந்த இடத்தில் ஒரு சட்டத்தை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

ஒருவர் இஹ்ராமில் இருந்தால் அவர் எந்த விலங்கையும் கொல்லக் கூடாது. அதே நேரம் மனிதனுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும் பாம்புகள், தேள்கள் வெறிபிடித்த நாய்கள் போன்றவற்றை இஹ்ராம் அணிந்திருந்தாலும் கொல்லலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

‘நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டில் உள்ள நெருப்பை அணைக்காமல் விட்டுவிடாதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புஹாரி – 6293, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி – 1873, இபுனுமாஜா)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

‘உங்கள் வீடுகளில் விளக்கை திறந்திருக்கும் நிலையில் விட்டு விடாதீர்கள், அது உங்களது பகைவனாகும்’ நபிமொழி. (நூல்: புஹாரியின் அதபுல் முஃப்ரத்)

அபூ மூஸா அல்அஸ்அரி (ரலி) அறிவிக்கிறார்கள்:

ஓர் இரவு மதீனா வீடு ஒன்றில் எல்லோரும் தூங்கும் போது நெருப்பு பற்றிக் கொண்டது. அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது. அப்போது, ‘உங்களது பகைவன் நெருப்பாகும், நீங்கள் தூங்கச் சென்றால் அதை அணைத்து விடுங்கள்’ என்று சொன்னார்கள். (நூற்கள்: புஹாரி – 6294, முஸ்லிம், இப்னுமாஜா)

முஸ்லிமல்லாத மக்களில் சிலர் தங்களது சில பண்டிகையின் போது அதிநவீன மின்சார விளக்குகள் இருந்தும் பெருவாரியான அகல்விளக்குகளை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கார்த்திகை தீபம் அன்று இவ்வாறு அகல்விளக்கை பயன்படுத்துகிறார்கள். அப்போது குறைந்தது விபத்துக்கள் ஏற்படும் போது அதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம். குறைந்தது தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் வைத்துக் கொள்வது அவசியம்.

16.07.2004 அன்று கும்பகோணம் பள்ளியில் நிகழ்ந்த கோர தீவிபத்தில் 94 சிறுவர்கள் கருகிப் போன தீவிபத்துக்கள் மீண்டும் நிகழாதவாறு பார்த்துக் கொள்வது எல்லோர் மீதும் கட்டாயக் கடமையாகும்.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: