இஸ்லாம்தளம்

கேள்வி பதில்-5

இஸ்லாத்தில் சகுனம் உண்டா?

5 கேள்வி : சகுனம் உண்டா? ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 5093 ஐக் கண்டேன். சகுனமும் இருப்பது போல் வருகிறது. (இணைய தளம் – ரஹ்மத்.நெட், தமிழில் புகாரி), அதாவது….அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில் தான் (இருக்க முடியும்). இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். – என்பதாக வருகிறது. அப்படி என்றால்…புது பெண் வரவால், புது வீடு வாங்கினால், குதிரை (மற்றும் கால்நடை) வாங்கினால் அபசகுனமும் வர வாய்ப்பு உள்ளதா? அவை சரிஇல்லை என்றால் பல கஸ்டங்களும் சோதனைகளும் சுகவீனமும் வருமா? கெட்டதும் நடக்குமா? யாரும் இறந்து போக வாய்ப்பும் உள்ளதா? அவைகள் நலமுடன் இருந்தால் எல்லாம் நலமுடன் அமையுமா? எல்லாம் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும். விரிவான விளக்கம் தாருங்கள். (ஹமீது ஹுஸைன் யாஹுமெயில் மூலமாக)

சகுனம் தொடர்பாக வல்ல அல்லாஹ் தனது திருமறையில் தெளிவாக இவ்விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொள்ளும்படி எச்சரிக்கிறான்.

சூரத்துல் மாயிதா 90 ஆவது வசனத்தில், ‘மது, சூது இவற்றுடன் அம்பு எறிந்து குறி (சகுனம்) பார்த்தலையும் ஷைத்தானின் வேலை என்று குறிப்பிட்டு, விசுவாசிகள் இவற்றிலிருந்து தவிர்ந்து தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறான்.

மேலும் ரஸுல் (ஸல்) அவர்கள் சகுனம் பார்ப்பதில் வேறொரு வகையான பறவை சகுனத்தை தடை செய்துள்ளார்கள். பறவை சகுனம் என்பது குறிப்பிட்ட ஒரு பறவையை காணும் பொழுதோ அதன் சப்தத்தை கேட்பதைக் கொண்டோ அது பறக்கும் திசையை வைத்தோ ஒரு காரியம் நல்லவிதமாக அல்லது தீங்காக அமையும் என தீர்மானிப்பது.

சகுனம் பார்ப்பது இணைவைப்பதாகும். நமக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் அதை இறைவன் தவக்குல் (எனும் உறுதியான நம்பிக்கை) மூலம் நீக்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 1663)

தவிர மேலும் ஒரு ஹதீஸில் ‘தொற்று நோயோ, சகுனமோ கிடையாது’ (திர்மிதி 1664) என்றும் கூறியுள்ளார்கள். எனவே இவற்றிலிருந்து சகுனம் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இனி தாங்கள் சுட்டிக்காட்டிய புஹாரி ஹதீஸ் எண் 5093 யிலும் கூட குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அபசகுனம் (ஒருவேளை) நேரிடலாம் என்ற செய்தி தான் இருக்கிறதே அல்லாமல் இதன் மூலம் சகுனம் பார்ப்பதை நியாயப்படுத்த முடியாது.

இமாம் மாலிக் மற்றும் சிலர் இந்த ஹதீஸுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்கும் முகமாக, ‘சிலவேளை ஒரு வீட்டில் குடியிருப்பதைக் கொண்டு, ஒரு பெண்ணை மணமுடிப்பது கொண்டு, ஒரு குதிரையை (வாகனத்தைக்) கொண்டு அல்லாஹ் தீமையை நாடியிருந்தால் இவை அபசகுனமாக அமையும்’ என்று குறிப்பிடுகின்றனர்.

சுனன் அபூதாவூதின் விளக்கவுரையான முஆலிமுன் சுனன் எனும் விரிவுரையின் ஆசிரியர் இமாம் கத்தாபி அவர்கள் சகுனம் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் வீடு, பெண், வாகனம், பணியாள் ஆகிய நான்கு விஷயங்களிலும் சகுனம் உண்டு எனக் குறிப்பிடுகின்றார்.

இமாம் இப்னு கைய்யூம் அவர்களோ, ‘(மேற்குறிப்பிட்ட மூன்றிலும் சகுனம் இருப்பதாக கொள்ள முடியாது. எனினும் அல்லாஹ் சில விஷயங்களில் அபிவிருத்தியையும், சில விஷயங்களில் தீங்கையும் நாடியிருக்கிறான். பிள்ளைகளும் நண்பர்களும் அமைவதைப் போல. சில விஷயங்கள் (அல்லாஹ்வின் நாட்டப்படி) நன்மையானதாகவோ, சில நேரங்களில் தீமையானதாகவோ அமைந்து விடுகின்றன’ எனக் குறிப்பிடுகின்றார்.

எனவே இவற்றின் மூலம் அல்லாஹ் நாடினால் தீங்கும் நடக்கலாம், அதாவது இவை நமக்கு துரதிஷ்டமாக அமையலாம் என விளங்க முடிகிறது.

இங்கு நாம் சகுனம் பற்றி சற்று விரிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக சகுனம் என்பது ஒரு சில காட்சிகளை வைத்து, தான் மேற்கொள்ளும் காரியத்தின் (செயலின்) முடிவை தீர்மானிக்கும் நடைமுறையாகும். அதாவது நாம் செல்லும் வழியில் பூனை குறுக்கிட்டால், அல்லது ஒரு விதவை எதிர்பட்டால், ஆந்தை அலறினால், நாய் நரி ஊளையிட்டால் இது போன்ற நிகழ்வுகளைக் கொண்டு தான் மேற்க் கொள்ளும் காரியத்தின் முடிவு மோசமானதாக இருக்குமென தீர்மானிப்பது. இதனால் மேற்குறிப்பிட்ட அல்லது இது போன்ற காட்சிகளை (நிகழ்வுகளை) அபசகுனமாக கருதுவது.

இது போல காகம் கரைந்தால், எங்கோ மணி ஓசை கேட்டால், நரி முகத்தில் கண் விழித்தால், கண்ணாடியில் கண் விழித்தால் மற்றும் இது போன்ற சில காட்சிகளையும் நிகழ்வுகளையும் கொண்டு தான் மேற்கொள்ளும் காரியத்தின் முடிவு நலவாக இருக்குமென தீர்மானிப்பது. இவற்றை சுபசகுனமாக கருதுவது. இதைப் போலவே அம்பெறிந்து குறிபார்ப்பதும் (திருவுள)சீட்டு குலுக்கி எடுப்பதும் பறவை பறக்கும் திசை பார்ப்பதும் ஆகும்.

ஆனால் இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள புஹாரி ஹதீஸ் எண் 5093 இல் அபசகுனம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேற்குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இம்மூன்று விஷயங்களும் (வேறொரு அறிவிப்பின்படி நான்கு விஷயங்களும்) அல்லாஹ்வின் நாட்டப்படி மோசமான முடிவுகளை சிரமங்களை தரக்கூடியதாக அமையலாம் என்ற கருத்தில் தான் ‘அபசகுனமாக’ என குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இவற்றிலிருந்து பாதுகாவல் பெற நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள முறை சரியான தீர்வாக அமையும்.

நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரேனும் மணம் புரிந்தாலும், அல்லது ஒரு பணியாளை வேலைக்கமர்த்தினால் (வேறொரு அறிவிப்பில் கழுதையை வாங்கினால் அதன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு என்றும் மேலதிகமாக வந்துள்ளது) இத்துஆவை ஓதிக் கொள்ளுங்கள்’ என கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரஹா வகைர மா ஜிபில்தஹா அலைஹ், வஅவூதுபிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஜிபில்தஹா அலைஹ்.

பொருள்: எங்களின் இறைவா! நிச்சயமாக நான் உன்னிடத்தில் இதிலுள்ள நன்மையையும் இயல்பாக இது எந்த நன்மையில் ஆக்கப்பட்டுள்ளதோ அதனையும் தரும்படி கோருகிறேன். மேலும் இதிலுள்ள தீமையையும் இயல்பாக இது எந்த தீங்கில் அமையப் பெற்றுள்ளதோ அதனையும் விட்டு உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா, ஹாக்கிம்)

எனவே இந்நான்கு விஷயங்களிலும் இத்துஆவை ஓதிக் கொள்வது நமக்கு நன்மை பயக்கும்.

மேலும் எந்த செயலை செய்ய நாடும் பொழுதும் அவற்றில் நலவை நாடி பிரார்த்தனை (இஸ்திகாரா) செய்யும் படியும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே இஸ்திகாரா மூலமும் நாம் நன்மையை அடையலாம். வல்ல அல்லாஹ் மிக அறிந்தவன்.

1 பின்னூட்டம் »

  1. Well done

    பின்னூட்டம் by Faizal — ஜனவரி14, 2011 @ 12.24


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: